ரஸ் கான் – ஒரு கிருஷ்ண பக்தர் சூஃபி

This entry is part [part not set] of 26 in the series 20020421_Issue

யோகீந்தர் சிகந்த்


அவுட்லுக் இந்தியா வாரப்பத்திரிக்கையிலிருந்து.

இந்திய சூஃபி இயக்கத்தில் மிகவும் முக்கியமானதும், நமது பரந்துபட்ட சமயக்கலாச்சாரத்தின் கிரீடம் இருப்பது முஸ்லீம் சூஃபிகளால் உருவாக்கப்பட்ட கிருஷ்ணபக்தி இயக்கம். இந்த சூஃபிகள் இயற்றிய கவிதைகள் இன்றும் வட இந்தியாவின் கிராமப்புறங்களில் வெகுவாகப்பாடப்படுகின்றன. இந்த கவிதைகளில் கிருஷ்ணனுக்கும் கோபிகைகளுக்கும் இருந்த தெய்வீக உறவு அடிப்படைப் படிமமாக அமைந்து, சூஃபிக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவின் பரிசுத்தமான படிமமாகக் காணக் கிடைக்கிறது.

கிருஷ்ண படிமங்களை உபயோகப்படுத்திக்கொள்வதில் சூஃபிகளுக்கு இரண்டு நோக்கங்கள் உண்டு . முதலாவது, அவர்களின் கருத்துக்கள் பொதுமக்களை எளிமையாக அடைகின்றன. இரண்டாவது இந்துக்களையும் முஸ்லீம்களையும் அருகே கொண்டுவந்து, இருவரும் பேசும் ஒரே மையக் கருத்தை இருசாராருக்கும் உணரவைக்கவும் முடிகிறது.

கிருஷ்ணபக்தி இயக்கத்தில் முக்கியமான சூஃபி 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஸ் கான் என்பவர். இவரது வாழ்க்கை பற்றிய பல விஷயங்கள் புராணிகமாகவும், செவி வழிக்கதைகளிலும் மறைந்து கிடக்கின்றன. இவரது உண்மையான பெயர் இப்ராஹிம் கான் என்றும் சொல்லப்படுகிறது. இவர பினானி கிராமத்தில், ஹர்தோய் மாவட்டத்தில் உத்தர பிரதேசத்தில் பிறந்தார். இவர் கிருஷ்ண பக்தி இயக்கத்தில் எப்படி ஈடுபாடு காட்டத் தொடங்கினார் என்பது குறித்து பல கருத்து வேறுபாடுகள் உள்ளன.

பகத கல்பதருமா என்ற மத்தியகால புத்தகத்தில்காணப்படும் ஒரு கதையின் படி, இவர் தன்னுடைய சுபி குருவுடன் பிருந்தாவனத்துக்குச் சென்றார். அங்கு பிரக்ஞை அற்று விழுந்தார். அப்போது கிருஷ்ணர் உருவம் பிரக்ஞையில் தோன்றியது. அதன் பின்னர், அவர் பிருந்தாவனத்தில் தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்தார்.

பாவப் பிரகாஷ் என்ற ஒரு 17-ம் நூற்றாண்டு கதையில் ஹரி ராய் என்ற வைஷ்ணவப் பெரியார் கூற்றுப் படி இப்ராகிம் கான் தில்லியில் வாழ்ந்து வந்தார். ஒரு இந்து வியாபாரின் பையனுடன் காதல் கொண்டார். இரவெளம் பகலும் அவனையே கண்காணித்து வந்தார். அவன் தின்று மீந்ததைக் கூடச் சாப்பிடத் தயங்கவில்லை.அவருடைய முஸ்லிம் நண்பர்கள் அவரைத் திட்டினார்கள். மத நம்பிக்கை இல்லாதவர் என்று தூற்றினார்கள் . ஆனால் அவர் கவலைப் படவில்லை. ‘ நான் இப்படித் தான் இருப்பேன் ‘ என்றார்.

கதை இப்படிப் போகிறது : ஒருநாள் ஒரு வைஷ்ணவர் இன்னொருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ‘இப்ராகிம் கான் வியாபாரியின் பையனை நேசிக்கிற அளவு தீவிரமாய் கடவுளை நாம் நேசிக்க வேண்டும். மற்றவர்கள் எப்படித் தூற்றுவார்கள் என்று கவலை இல்லாமல் எப்படி பின்னால் சுற்றுகிறான் பார். ‘ கேட்டுக் கொண்டிருந்த ஆள் வெறுப்பைக் கக்குவதை இப்ராகிம் கான் பார்த்துவிட்டான். உடனே கத்தியை உருவிக்கொண்டு பாய்ந்தான். நடுநடுங்கிக் கொண்டு , கை கூப்பிய வைஷ்ணவன் ‘ நீ அதே போல் கடவுளை நேசிக்கத் தொடங்கினால் உனக்கு முக்தி கிடைக்கும். ‘ இப்ராகிமிற்கு ஆர்வம் பிறந்தது. வைஷ்ணவருடன் ஆன்மிக விஷயங்கள் பேசத் தலைப்பட்டான். வைஷ்ணவர் பிருந்தாவனம் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். அங்கு சென்றால், முஸ்லீமான் இப்ராகிமுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கோவிலின் அருகில் குளக்கரையில் மூன்று நாட்கள் பட்டினியாய் இப்ராகிம் கான் அமர்ந்திருந்த போது, கிருஷ்ணர் தரிசனம் அளித்து , இப்ராகிமை, ரஸ் கான் என்று அழைத்தார் என்று ஐதீகம். ‘அழகியல் சுவையின் ஆதாரம் ‘ என்று இதற்குப் பொருள். அன்றிலிருந்து ரஸ் கான் பிருந்தாவனத்தில் தங்கி பாடல் இயக்கத் தொடங்கினார் ரஸ் கான்.

ரஸ் கானின் பாடல்கள் அடிப்படையில் கிருஷ்ணனுக்கும், கோபிகையர்களுக்கும் இடையில் உண்டாகும் சரசம் பற்றியவை. ஆனால் ரஸ் கான் குறிப்பிடும் கிருஷ்ணர், விக்கிரக ஆராதனைக்கான கிருஷ்ணர் அல்ல. மாறாக, அருவமான உன்னத சக்தி. அதாவது கிருஷ்ண பக்தியை உள்ளடக்கிய சூஃபி வழி.

விரஜ பாஷையில் ரஸ் கான் இயற்றியவை அனேகம். பிரேம வாடிகா, தனலீலா, அஸ்தாயாம என்ற தலைப்பிலும் மேலும் குறள் வடிவிலும் அவர் படைப்புகளை இயற்றினார். இவற்றில் பிரேம வாடிகா புகழ் பெற்றது.

பிரேமவாடிகா-வில் மொத்தம் 53 பாடல்கள். ஆன்மிக நேசம் பற்றியவை இவை. ராதா-கிருஷ்ண நேசத்தை அடிப்படையாய்க் கொண்டவை.

காதலின் இருப்பிடமே ராதிகா

நந்தனின் புத்திரனே காதலின் நிறம்.

‘காதல் காதல் என்று கூவுவர் எல்லாம்

காதல் ஏதென அறிந்திலர்.

காதலை ஒருவன் அறிந்த போதில்

அழுகைக்கு இங்கே ஏது இடம் ?

காதல் கடல் போல்.

அளவிலாதது, அறிய முடியாதது, இணை சொல்ல முடியாதது.

அதன் கரை சேர்ந்தபின்னர்

திரும்புதல் சாத்தியமில்லை.

வருணன், நீரின் கடவுள் ஆனது எப்படி ?

காதலின் அமுது பருகியதால் தான்.

காதலின் நஞ்சை உண்டதால் தான்

மலைக்கடவுள் (சிவன்) தொழுகைக்கு ஆளானான்.

உண்மை நேசத்தை அறிந்தவன், வெளிச்சடங்குகளிலிருந்து விடுபடுகிறான். பந்தங்கள் அர்த்தமற்றுப் போகின்றன என்கிறார் ரஸ் கான்.

காதலை மேற்கொண்டால்

வேதமும் விடலாம்.

வெட்கமும் விடலாம்

வேலையும் தேவையில்லை.

ஐயமும் தேவையில்லை.

சட்டதிட்டம் எல்லாம் காதல் முன்னே பொருட்டே இல்லை. ‘

மேலும் சொல்கிறார்;

‘சுருதியும், புராணமும், ஆகமங்களும், ஸ்மிருதிகள்

எல்லாவற்றின் சாரமும் நேசமே.

காதலின்றி ஆனந்தம் இல்லை.

அறிவும், சடங்கும் ,தொழுகையும் கர்வம் கொள்ளத் தான் உதவும்.

சாஸ்திரம் படித்து பண்டிதன் ஆனாய்,

குரான் ஓதி மெளல்வி ஆனாய்

இதில் எல்லாம் நேசம் காணவில்லை என்றால்

நீ ஓதித்தான் என்ன பயன் ? ‘

‘அரக்க உலகத்தின் கவர்ச்சியைக் கழற்றிவிட்டு

பிரேமதேவனின் அழகைக் கண்டே

நான் ரஸ் கான் ஆனேன். ‘

Series Navigation

யோகீந்தர் சிகந்த்

யோகீந்தர் சிகந்த்