அரவிந்தன்
சமீப நாட்களாக மாலன் சிறு பத்திரிகைகளையும் அவற்றைச் சேர்ந்தவர்களயும் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருக்கிறார். இந்தியா டுடேயின் விருந்தினர் பக்கத்தில் எழுதி வரும் இவர் ‘வெகுஜன ரசனை ‘, ‘மக்கள் இலக்கியம் ‘ ஆகிய போர்வைகளுக்குள் புகுந்துகொண்டு சிறுபத்திரிகைக்காரர்களைத் திட்டிக் கொண்டிருக்கிறார் (அவருடைய வார்த்தைகளில் சொல்வதானால் ‘வைது களித்துக்கொண்டிருக்கிறார் ‘).
இலக்கியம் பற்றி மாலன் தெரிவிக்கும் அபிப்ராயங்களைப் பொருட்படுத்தி எதிர்வினை ஆற்றவேண்டும் என்ற அவசியத்தை அவர் இதுவரை அளித்ததில்லை. அந்த அளவுக்கு இலக்கிய விமர்சகராகவோ மதிப்புரையாளராகவோ அவர் உருப்பெறவில்லை. ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு ‘தொகுதிக்கு தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரை எழுத வாய்ப்புக் கிடைத்த போதும் அதைச் சில்லறை இலக்கிய அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தியவர் இவர். இப்போது இந்தியா டுடேயின் விருந்தினர் பக்கத்தில் அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் ( ?) கூட இலக்கியரீதியான அபிப்ராயங்கள் என்னும் அளவில் பொருட்படுத்தத் தக்கவை அல்ல. உதாரணமாக புதுமைப்பித்தன் பற்றி அவர் தெரிவித்த கருத்து. சுதந்திரப் போராட்ட காலத்தில் வாழ்ந்த புதுமைப்பித்தன் தன் எழுத்துக் களில் அதைப் பிரதிபலிக்கவே இல்லை என்ற விமர்சனத்தை அவர் முன்வைத்திருக்கிறார். கலைஞனின் கலை வெளிப்பாட்டுக்கான தேர்வு குறித்த குழந்தைத்தனமான இந்தக் கேள்விக்கு எத்தனையோ முறை பலர் பதில் சொல்லியிருக்கிறார்கள். கலைஞன், சமூக சீர்திருத்தவாதி, அரசியல்வாதி ஆகியோருக்கிடையே உள்ள வேற்றுமைகளின் அடிப் படையை அறிந்த ஒருவரால் இப்படிப்பட்ட கேள்வியை எழுப்ப முடியாது. ஒரு கலைஞன் கலைஞனாக இருப்பதோடு சமூக சீர்திருத்தவாதியாகவும் அரசியல்வாதியாகவும் இருக்க முடியும். அது போலவே ஒரு அரசியல்வாதியோ சமூக சீர்திருத்தவாதியோ கலைஞனாக இருந்து விடலாம். ஆனால் இந்த இரண்டு சாத்தியக்கூறுகளையுமே நிபந்தனைகளாக முன் வைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. புதுமைப்பித்தன் ஏன் சுதந்திரப் போராட்டத்தைப் பிரதிபலிக்கவில்லை என்ற கேள்வியைத் தர்க்கரீதியாக நீட்ட்டிக்கொண்டு போனால் இன்று எழுதும் ஒருவரை நீ ஏன் இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் பற்றிக் கதை எழுதவில்லை, நீ ஏன் குஜராத் பூகம்பம் பற்றி எழுதவில்லை, ஏன் ஆண்டிப்பட்டித் தேர்தலை வைத்து இலக்கியம் படைக்கவில்லை என்று கேட்டுக்கொண்டே போகலாம்.
எனில் இதைப் பற்றியெல்லாம் ஒரு கலைஞன் எழுதக் கூடாதா என்றால், எழுதலாம். ஆனால் அது முழுக்க முழுக்க அவனது சுதந்திரம். ஒரு கலைஞன் தன் அனுபவம் சார்ந்து, பார்வை சார்ந்து, தன் பாதிப்பு சார்ந்து செயல்படுபவன். அதில் அவன் எந்தப் புற நெருக்கடியும் இல்லாமல் தன் உள்ளுணர்வு சார்ந்து செயல்படுவதுதான் நேர்மையான காரியமாக இருக்க முடியும். ஒரு கலைஞனின் படைப்புகளில் வெளிப்படும் சமகால, சமூகப் பதிவுகள் பற்றி ஆராயலாம். அந்த ஆய்வின் அடிப்படையில் அந்தக் கலஞனின் எழுத்தில் வெளிப்படும் சமூக, சமகால பிரக்ஞை பற்றி சில முடிவுகளுக்கு வரலாம். ஆனால் அவனது கதைகளில் பதிவு பெற்ற / பெறாத அம்சங்களை மட்டும் வைத்து அவனது ஒட்டுமொத்த சமூகப் பிரக்ஞை பற்றி எந்த முடிவுக்கும் வந்து விட முடியாது. மேலும் சமூகப் பதிவு என்பது வெளிப்படையாக – பத்திரிகைகளின் தலைப்புச் செய்தி அல்லது வெகு ஜன இதழ்களின் நடுப்பக்க கவர்ச்சிப் படங்களோடு தரப்படும் துணுக்குச் செய்தி போல – இருக்கவேண்டும் என்பதல்ல. சிலரால் நுட்பமாகவும் தங்களது எதிர்வினையைத் தங்களது படைப்புகளில் வெளிப்படுத்த முடியும். அதைப் புரிந்துகொள்ள சிறிது மெனக்கெட வேண்டும்.
கதைகளில் பதிவு பெறும் அம்சங்களை வைத்து ஒரு படைப்பாளியின் சமூகப் பிரக்ஞையை மதிப்பிடுவதில் வேறொரு அபாயமும் இருக்கிறது. தனது உள்ளுணர்வு சார்ந்த தேர்வின் அடிப்படையில் நேர்மையாக செயல்படும் கலைஞன் இந்த மதிப்பீட்டில் எளிதாக ‘மாட்டிக்கொண்டு ‘ விடுவான். சமூக அங்கீகாரத்திற்கான அளவுகோல்களை மனத்தில் கொண்டு திட்டமிட்டு காய் நகர்த்தும் ஒரு ‘சாமர்த்தியமான ‘ எழுத்தாளன் சமூகப் பிரக்ஞை கொண்ட எழுத்தாளனாக வலம் வருவான். மேலோட்டமான போலியான பதிவுகளுக்கும் மெய்யான அக்கறையும் நுட்பமும் ஆழமும் கொண்ட பதிவுகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் இலக்கிய மதிப்பீட்டிற்குப் பயன்படுத்தும் அளவுலோல்களையே மாலனும் பயன்படுத்துகிறார். புதுமைப்பித்தனின் படைப்புகளை ஆழமாக்ப் பார்க்கும் சிரமத்தை அவர் எடுத்துக்கொண்டார் என்றால் நாசகாரக் கும்பல் போன்ற பல கதைகளில் புதுமைப்பித்தனின் சமகால, சமூகப் பிரக்ஞையின் வீரியத்தை உணர முடியும். மேலெந்தவாரியாகப் பார்க்கும்போது நகைச்சுவக் கதையாகத் தோற்றம் தரும் வேதாளம் சொல்லும் கதை, எப்போதும் முடிவிலே இன்பம் ஆகிய கதைகளிலும் கூரிய சமூக விமர்சனம் உள்ளார்ந்து நிறபதை உணர முடியும்.
என்றாலும் பு.பி. பற்றிய மாலனின் இந்த விமர்சனத்தை நான் வரவேற்கிறேன். காரணம், அவர் பு.பி. பற்றிய தனது பார்வையை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் முன்வத்திருக்கிறார். ஆனால் சிறு பத்திரிகைகள் மீதும் சிறு பத்திரிகையாளர்கள் மீதும் அவர் முன்வத்துள்ள விமர்சனங்களில் – சரியாக சொல்வதானால் அவதூறுகளில் – இந்த நேர்மையைக் காணவில்லை. இருட்டில் ஒளிந்துகொண்டு சிறு பத்திரிகைகள் மீதும் அவற்றில் எழுதுபவர்கள் மீதும் புழுதிவாரித் தூற்றும் அவர் தனது கருத்துகளுக்கு பதில் சொல்லும் பொறுப்பை வற்புறுத்தக் கூடிய அம்சங்களைத் தந்திரமாகத் தவிர்த்துவிடுகிறார். யார், எங்கே, எப்போது, எந்தப் பின்னணியில் சொன்னார் என்ற எந்தத் தகவலும் இல்லாமல் பிறரது சில வாக்கியங்களைத் தன் வசதிக்கேற்ப எடுத்துப் போட்டுக்கொண்டு அந்தக் குறிப்பிட்ட நபரை மோசமான வார்த்தைகளால் திட்டுகிறார். உதாரணமாக,
வெகுஜன ரசனையை நாங்கள் அங்கீகரிக்காவிட்டால் என்ன கெட்டுப் போச்சு என்று தினமணியில் இலக்கிய மகாசன்னிதானம் ஒருவர் திருவாய்மலர்ந்தருளியிருக்கிறார்கள் என்று மாலன் எழுதுகிறார். அவர் குறிப்பிடுவது சுந்தர ராமசாமியை என்பது தினமணி கட்டுரையைப் படித்த எல்லோருக்கும் புரியும். ஒரு வேளை புரிந்துவிடாமல் போனால் என்ன செய்வது என்பதற்காக அவரே கட்டுரை வெளிவந்த இடம், கட்டுரயின் பொருள் ஆகியவை பற்றி செய்தியும் குறிப்புக்களும் தருகிறார். ஆனால் வெளிப்படையாக அவர் பெயரைச் சொல்வதை மட்டும் தவிர்க்கிறார். நேர்மையற்ற விமர்சனம் என்பதற்கான பொருத்தமான உதாரணம் இது. சுராவை விமர்சிக்க மாலனுக்கு எல்லா உரிமையும் உண்டு. அது பற்றி எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் இங்கு அவர் செய்வது விமர்சனம் அல்ல. வசைபாடல். தனது விமர்சனத்திற்கு அல்லது வசவிற்கு ஆளாகும் ஒருவரைப் பெயர் சொல்லிக் குறிப்பிடும் தைரியமும் நேர்மையும் மாலனுக்கு ஏன் இல்லை ?
இது ஒரு புறம் இருக்க, தினமணியில் எழுதப்படும் கட்டுரைகளுக்கு எதிர்வினை ஆற்றும் வாய்ப்பை தினமணி அளிக்கிறது. ஆனால் தினமணியில் வந்த சு.ராவின் கட்டுரைக்கு தினமணியில் பதில் எழுதாமல், பதிலளிக்க வாய்ப்புத் தரும் பழக்கம் இல்லாத இந்தியா டுடேயில் மாலன் ஏன் சு.ராவுக்கு பதில் எழுதுகிறார் ? அது போலவே செல்லப்பா பற்றிய கட்டுரையில் செல்லப்பாவைப் போற்றும் சாக்கில் சு.ராவைத் தூற்றுகிறார். இங்கும் பெயரைக் குறிப்பிடாமல் ஒளிந்துகொள்கிறார். ஆனால் அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பது எல்லோருக்கும் புரியும் விதத்தில் குறிப்புகள் தருகிறார். வெகுஜனப் பத்திரிகைகளின் கிசு கிசு கலாச்சாரத்தில் ஊறித் திளைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியப்படும் திறமை இது. தன் கருத்துக்கள் மீதும் அவற்றுக்கு ஆதாரமான பார்வை மீதும் அவருக்கு நம்பிக்கை இருக்குமானால் சினிமா கிசு கிசு பாணியைத் துறந்துவிட்டு வெளிப்படையாகப் பெயர்களைக் குறிப்பிட்டு அவர் தனது விமர்சனங்களையோ அறிவுரைகளையோ முன்வைக்க வேண்டும். அதுதான் ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும். அதை விட்டுவிட்டு ஒளிந்து கொண்டு சீண்டி இலக்கிய ஆளுமைகளைக் காயப்படுத்தும் முயற்சியில் அல்ப திருப்திக்கு மேல் அவருக்கு என்ன கிடக்கும் என்று தெரியவில்லை.
கிசுகிசுக்கள் மூலம் மாலன் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பதில் சொல்ல அருகதை அற்றவை. காரணம் அவை முன்வைக்கப்படும் முறை. வெளிப்படையாக, பெயரைச் சொல்லி, பின்னணியைச் சொல்லி முறையான மேற்கோள்களைத் தந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அல்லது விமர்சனங்கள்தான் பதில் சொல்லத் தகுதியானவை. என்றாலும் அவர் திரும்பத் திரும்ப வெகுஜன ரசனை, சிறுபத்திரிகைகளின் அகந்தை, சிறு பத்திரிகை யாளர்களின் வைதீக மனப்பான்மை என்றெல்லாம் எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. எனவே அவரது அவதூறுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. வெகுஜன ரசனையை நாங்கள் அங்கீகரிக்காவிட்டால் என்ன கெட்டுப் போச்சு என்று சு.ரா தன் தினமணி கட்டுரையில் கூறுவதாக மாலன் சொல்வது பொய். சிவாஜி கணேசனை ஒரு சிறந்த கலைஞனாக சிறுபத்திரிகை வட்டார அறிவுஜீவிகள் கருதுவதில்லை; இதனால் அவருக்கு தேசிய அளவில் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டது என்ற ரீதியில் எழுதப்பட்ட கட்டுரைக்கான எதிர்வினைதான் சுராவின் கட்டுரை. மேற்படி கட்டுரையை முறையாகக் குறிப்பிட்டு வெளிப்படையாக முன் வைக்கப்பட்ட எதிர்வினை. சிறுபத்திரிகைக்காரர்களின் வாசகப் பரப்பு சில ஆயிரங்களுக்கு மேல் இல்லை. சிவாஜியின் வீச்சோ கோடிக்கணக்கான மக்களை எட்டக்கூடியது. இந்நிலையில் இவர்களது சிறுபத்திரிகை வட்டார அறிவுஜீவிகளின் விமர்சனத்தால சிவாஜி புறக்கணிக்கப்பட்டார் என்று எப்படிச் சொல்ல முடியும் என்பதுதான் சு.ராவின் வாதம். இதில் மகாசன்னிதானத்தனம் எங்கே வந்தது ?
செல்லப்பாவைப் பற்றிய கட்டுரையில் செல்லப்பா தனது பத்திரிகையில் தனக்கு விருது கொடுக்கவேண்டும் என்று எழுதிக்கொண்டதில்லை என்றும் இன்றைய குருபீடங்கள் செல்லப்பாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் என்றும் மாலன் போதிக்கிறார். காலச்சுவடு இதழ் சாகித்ய அகாடமி பரிசை யாருக்குக் கொடுக்கலாம் என்று கருதுகிறீர்கள் என்று சில எழுத்தாளர்கள், விமர்சகர்களிடம் கேட்டது. அதையொட்டிப் பலரும் தங்களது அபிப்ராயங்களைத் தெரிவித்தார்கள் (கா.சு. இதழ் 38, நவம்பர்-டிசம்பர், 2001). அதில் ராஜ மார்த்தாண்டன், ராஜ் கெளதமன், பிரபஞ்சன், பாவண்ணன் ஆகியோர் விருது கொடுக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் சுராவின் பெயரையும் வண்ணநிலவன் பெயரையும் தங்கள் பட்டியலில் சேர்த்திருந்தார்கள். தமிழில் சாகித்ய அசாடமி விருது அளிக்கப்படாத, ஆனால் அளிக்கப்படவேண்டியவர்கள் பட்டியல் ஒன்றைப் போட்டால் அதில் சுராவின் பெயரை சேர்க்காமல் இருக்க முடியாது என்பதே பெரும்பாலான விமர்சகர்களின் கருத்து என்பதுதான் இதற்கு அர்த்தம். தனக்கு விருது அளிக்க வேண்டும் என்று பிறரை விட்டு தன் பத்திரிகையில் எழுதச் சொல்ல வெண்டிய அளவுக்கு சு.ராவின் படைப்புக்கள் பலவீனமானவையல்ல. 2000ஆவது ஆண்டில் குமுதம் வெளியிட்ட தீபாவளி மலரில் இலக்கிய மலரும் இடம் பெற்றிருந்தது. அதில் ஞானபீடப் பரிசு அளிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலை பிரபஞ்சன் முன்வைத்திருந்தார். அதில் சு.ராவின் பெயர் இடம் பெற்றிருந்தது. அதே இதழில் தமிழின் சிறந்த 10 நாவல்கள் பட்டியலைத் த்ரும்படி மோகன், சா. கந்தசாமி உள்பட பல விமர்சகர்களும் எழுத்தாளர்களும் கேட்டுக்கொள்ளப் பட்டிருந்தார்கள். அதில் பெரும்பாலானவர்கள் அளித்த பட்டியலில் சு.ராவின் ஒரு புளிய மரத்தின் கதையும் ஜே.ஜே. சில குறிப்புகளும் இடம் பெற்றிருந்தன. ஆக, தனக்கு விருது அளிக்க வேண்டும் என்று யரையும் விட்டு எழுத வைக்க வேண்டிய அவசியம் சு.ராவுக்கு இல்லை. தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் என்ற அங்கீகாரம் அவருக்கு எப்போதோ கிடைத்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை தமிழில் சாகித்ய அகாடமியின் தேர்வு முறையையும் அதன் பெரும்பாலான தேர்வுகளையும் பார்க்கும் போது அந்த விருது சு.ராவுக்கு அளிக்கப்படாமல் இருப்பதே அவருக்கு கெளரவம்.
தவிர, சு.ரா எழுத வைக்கிறார் என்றால் அவர் பெயரைப் பரிந்துரைத்தவர்கள் அனைவரும் அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டு எழுதியிருக்கிறார்கள் என்று அர்த்தம். இது அவர்கள் அனைவரையும் சிறுமைப்படுத்தும், கொச்சைப்படுத்தும் தந்திரம். அவர்களில் யாரும் ஏன் மாலனுக்கு இன்னும் மறுப்பு எழுதவில்லை என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை ஒளிந்துகொண்டு பேசுபவர்களுக்குப் பதில் சொல்லவேண்டாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அல்லது பதில் சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு மாலனின் கருத்துக்கள் மீது மதிப்பில்லாமல் இருக்கலாம்.
இருட்டில் ஒளிந்துகொண்டு சு.ராவை ‘வைது களிக்கும் ‘ மாலன் அதோடு நில்லாமல் சிறு பத்திரிகைகள் மீதும் கண்ணை மூடிக்கொண்டு மண்ணை வாரித் தூற்றுகிறார். சேரிக் கலாச்சாரத்தைப் பார்த்து முகம் சுளிக்கும் வைதீக மனப்பான்மையைத்தான் சிறு பத்திரிகை கள் வெகு ஜன ரசனையின் பால் வெளிப்படுத்துகின்றன என்கிறார். சிவாஜியின் நடிப்பு, எம்.ஜி.ஆரின் அரசியல், சித்தியின் வெற்றி, ரஜினியின் பாவனைகள், வைரமுத்துவின் பாடல்கள் போன்றவற்றை சிறு பத்திரிகைக்காரர்கள் எள்ளி நகையாடுகிறார்கள் என்று வருத்தப்பட்டுக்கொள்கிறார். இந்தப் பட்டியலில் அவர் ஜெயலலிதாவின் அரசியலை ஏன் சேர்க்கவில்லை என்று தெரியவில்லை. அதுவும் வெகுஜன அங்கீகாரம் பெற்றதுதானே. அதைச் சேர்ப்பதில் மாலனுக்கு என்ன தயக்கம் ? பிறகு மும்தாஜின் குலுக்கல்களை ஏன் விட்டுவிட்டார் ? அதுவும் வெகுஜன அங்கீகாரம் பெற்ற்துதானே ? இவற்றை யெல்லாம் தன் வெகு ஜன ஆதரவுப் பட்டியலில் சேர்க்காமல் விட்டதன் மூலம் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. வெகுஜன ரசனையைப் பாசம் பொங்க அணைத்துக் கொள்ளும் மாலனும் அதில் எல்லாவற்றையும் ஒன்று போலக் கொஞ்சவில்லை. அதிலும் அவருக்குத் தேர்வு இருக்கிறது. அந்தத் தேர்வுக்கு சில காரணங்களும் கண்டிப்பாக இருக்கும். அதே போல சிறு பத்திரிகைக்காரர்களுக்கு அவர்கள் பார்வை சார்ந்து தேர்வு இருக்கக்கூடாதா ? சிவாஜி காட்சி ஊடகத்தைப் புரிந்துகொண்டதற்கான தடயங்கள் அவர் நடிப்பில் காணக்கிடைக்கவில்லை என்று எழுதும் சு.ரா, சஹஸ்ரநாமம் போன்ற சிலருக்கு இருந்தது என்றும் கூறுகிறார். சஹஸ்ரநாமமும் வெகு ஜன அங்கீகாரம் பெற்றவர்தான். அது போலவே சிவஜியின் நடிப்பைக் குறைகூறுபவர்கள் சில சிறு பத்திரிகக்காரர்கள் மட்டுமல்ல. பாமர ரசிகர்களும் கூடத்தான். இது பற்றி சமீபத்திய காலச்சுவடு இதழ் ஒன்றில் அம்ஷன் குமார் விரிவாக எழுதியிருக்கிறார். தரமான பிற மொழிப் படங்களை யெல்லாம் பார்த்து ரசனையைக் கூர் தீட்டிக்கொண்ட சிறு பத்திரிகைக்காரர்கள் மட்டுமல்ல; இதெல்லாம் தெரியாத எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கூட சிவாஜியின் நடிப்பை ஓவர் ஆக்டிங் என்று விமர்சித்தார்கள் என்று அவர் அதில் கூறுகிறார். கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலுமே சிவஜியை சிறந்த நடிகர் என்று பாராட்டும் கட்சியும் ஓவர் ஆக்டிங் என்று சொல்லி நிராகரிக்கும் கட்சியும் இருக்கின்றன. ஆக சிவாஜியை விமர்சிப்பதற்காக சிறு பத்திரிகைக்காரர்களை மட்டும் குறை சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. அது போலவே இவர் பட்டியலில் உள்ள மற்ற விஷயங்களும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் வெகு ஜன ஆதரவைப் பெற்றவையும் அல்ல; அவற்றை விமர்சிப்பவர்கள் சிறு பதிரிகைக்காரர்கள் மட்டும் அல்ல.
இவை அனைத்தும் சிறந்தவை என்றோ தமிழுக்கு இதைவிட மேலானவை வாய்க்காது என்றோ அவர் சொல்ல வரவில்லையாம். இவை ‘மோசமானதாகவே ‘ இருக்கலாமாம். ஆனால் இவை வெகு ஜன ஆதரவைப் பெற்றதற்கு சில சரித்திர, சமூகக் காரணங்கள் இருப்பதாகவும் அவற்றைக் களைய இந்த சிறுபத்திரிகைக்காரர்கள் எதுவும் செய்யவில்லை என்றும் மாலன் அங்கலாய்க்கிறார். தரமான எழுத்துக்கள் பிரசுரம் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதும் பரிசோதனை முயற்சிகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்து ஊக்கப்படுத்துவதும் உலகமெங்கிலும் அறிவுத் துறைகளிலும் இலக்கியத்திலும் ஏற்படும் முக்கியமான சலனங்களைப் பதிவுசெய்வதும் கலாச்சாரம், வாழ்க்கை, பொருளாதாரம், அரசியல் ஆகியவை பற்றிய விரிவான, ஆழமான கட்டுரைகள், விவாதங்களைப் பதிவு செய்வதும் மாலன் சொல்லும் சரித்திர சமூகக் காரணங்களைக் கண்டறிந்து களையும் முயற்சியின் முக்கியமான கூறுகள். தமிழில் சிறு பத்திரிகைகள் இவற்றைப் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இடையறாமல் செய்துகொண்டிருக்கின்றன. தரமான விஷயங்களை உருவாக்குவதற்கான தீவிரமான முயற்சிதான் தரமற்ற விஷயங்களைக் களைவதற்கான ஆக்கபூர்வமான வழிமுறை.யாக அமையும். சிறு பத்திரிகைகள் இதைத் தொடர்ந்து தீவிரமாக செய்து வருகின்றன. சிறு பத்திரிகைகளில் நடக்கும் இலக்கிய அரசியல் சர்ச்சைகளைப் பரபரப்பான சரக்காகக் கருதி சேலத்தில் ஆட்டுத் தலையுடன் ஒரு குழந்தை பிறந்தது என்ற செய்தியைப் போல அவற்றை வெகு ஜன ஊடகங்களில் கொச்சைப்படுத்தி மறு பிரசுரம் செய்வதற்காக மட்டும் சிறுபத்திரிகைகளை மேலோட்டமாக வாசிப்பவர்களுக்கு இதெல்லாம் கண்ணில் பட நியாயமில்லை.
வெகு ஜன தளங்களைத் தங்கள் வசம் எடுத்துக்கொண்டு அவற்றில் தரமான விஷயங்களை அறிமுகப்படுத்தி அவற்றுக்கு மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார்களா என்று கேட்கிறார் மாலன். வெகு ஜன ஊடகங்களில் நேரடியாகப் பங்கு பெற்று அவற்றை மேம்படுத்துவதில் தவறேதும் இல்லை. மிகவும் அவசியமான பணிதான் அது. ஆனால் தமிழ்ப் பின்னணியை மறந்துவிட்டு இந்த அருள் வாக்கை வழங்குவது மிகவும் சுலபம். ஜே. கிருஷ்ணமூர்த்தி இறந்த போது மலையாள வெகு ஜன இதழான கலா கெளமுதி அவரது படத்தை அட்டையில் போட்டு உள்ளே அவரது வாழ்வு, தத்துவம் பற்றியெல்லாம் விரிவான கட்டுரைகள் – தமிழ் வெகு ஜன இதழ்களின் பாஷையில் கவர் ஸ்டோரி – வெளியிட்டிருந்தது. தமிழ் ஊடகங்களில் இது சாத்தியப்பட்டதா ? ஜே.கேவைத் தமிழ்நாட்டில் யாருக்கும் தெரியாதா ? வைக்கம் முகம்மது பஷீர் இறந்த போது இந்தியா டுடே மலையாள இதழ் உள்பட பல மலையாள வெகு ஜன இதழ்களும் அவரைப் பற்றி அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டன. பஷீருக்கு இணையான ஆளுமைகள் தமிழில் உண்டு. ஆனால் அவர்கள் இருக்கும் போதோ இறக்கும் போதோ தமிழ் ஊடகங்கள் அவர்களுக்கு இது போன்ற மரியாதையை அளித்ததுண்டா ? சமீபத்தில் தொ.மு.சி. ரகுநாதன் இறந்த போது தமிழின் முன்னணி நாளிதழ்களில் தினமணி தவிர வேறு எதிலும் அது பற்றிய செய்தி கூட வரவில்லை என்பது வெகு ஜன ரசனையின் வக்கீல் மாலனின் கவனத்தில் உறைத்ததா ?. உண்மையில் தீவிர எழுத்தாளர்களை வெகு ஜன ஊடகங்கள்தான் ஒதுக்கி வைத்திருக்கின்றன. ஜெயகாந்தன், அசோகமித்திரன், கி. ராஜ நாராயணன் போன்ற சில விதிவிலக்குகளை விட்டுவிட்டால் தரமான எழுத்தாளர்களுக்கு வெகு ஜன ஊடகங்கள் உரிய இடமும் மதிப்பும் அளித்ததில்லை என்பதுதான் உண்மை. ஒரு எழுத்தாளன் சிறு பத்திரிகைகளின் மூலமாக வளர்ந்த பிறகு, அவனைப் பயன்படுத்திக் கொள்ளும் முனைப்புதான் வெகு ஜன ஊடகங்களிடம் காணப்படுகிறது. அதுவும் அவனிடத்தில் வெகு ஜன தளத்தில் விலை போகக்கூடிய சரக்கு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்தே அவனுக்குக் கிடைக்கும் இடமும் மதிப்பும் அமையும். இந்தப் போக்கு ஒருபுறமும் தொடுவதற்கே கூசக் கூடிய வணிகச் சரக்குகள் மறுபுறமும் வெகு ஜன ஊடகங்களை ஆக்கிரமித்திருப்பதன் எதிர்வினையாகத்தான் எழுத்தைத் தீவிரமான செயல்பாடாகக் கருதும் எழுத்தாளர்கள் ஒதுங்கி நிற்க வேண்டியிருக்கிறது என்பதுதான் யதார்த்தம். பங்கு பெறவே முடியாது என்கிற போது தம் வசம் எடுத்துக்கொள்வது எப்படி சாத்தியம் ?
இவ்வளவு தடைகள் இருந்தும் வாய்ப்புக் கிடக்கும்போதெல்லாம் சிறு பத்திரிகைக்காரர்கள் வெகு ஜன ஊடகங்களில் தங்கள் பங்களிப்பைச் செலுத்தி வருகிறார்கள். மாலனின் எதிர்பார்ப்பின்படி, தாங்கள் தரமானவை என்று கருதும் விஷயங்களை அறிமுகப்படுத்தியும் அவை பற்றி எழுதியும் வருகிறார்கள். வெகு ஜன ஊடகங்களைக் கடுமையாக விமர்சித்து வந்த க.நா. சுப்ரமணியம் பிற்காலத்தில் வெகு ஜன ஊடகங்கள் பற்றிய தனது விமர்சனங்களை தினமணி, துக்ளக் போன்ற வெகு ஜன ஊடகங்களிலேயே வெளிப்படுத்திவந்தார். சு.ரா. தினமணியிலும் இந்தியா டுடேயிலும் இன்று வரையிலும் தனது பங்களிப்பைத் தொடர்ந்து செலுத்தி வருகிறார். வண்ணநிலவன் துக்ளக்கில் எழுதிவந்திருக்கிறார். கடந்த ஆண்டின் குமுதம் தீபாவளி மலரில் நவீன ஓவியம் பற்றிய தனது கருத்துக்களை சி. மோகன் முன்வைத்திருக்கிறார். ஜெயமோகன் இப்போது ஆனந்த விகடனில் ஒரு தொடர் எழுதி வருகிறார். ரவிக்குமார் தொடர்ந்து இந்தியா டுடே, பி.பி.சி. உள்பட சில வெகு ஜன ஊடகங்களில் பங்களித்து வருகிறார். சுப மங்களா என்ற வெகு ஜன இதழ் கோமல் சுவாமிநாதனின் ஆசிரியத்துவத்தில் மிகுதியும் கலை-இலக்கியம் சார்ந்த இடை நிலை இதழாக வெளிவர ஆரம்பித்ததும் அதில் பல சிறு பத்திரிகைக்கரர்கள் மனமுவந்து தங்கள் பங்களிப்பைச் செலுத்தினார்கள். இப்படி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சிறு பத்திரிகைக்காரர்கள் பரந்த வாசகப் பரப்பிற்குத் தாங்கள் தரமானவை என்று நம்பும் விஷயங்களை எடுத்துச் செல்லத் தயங்கியதில்லை. எனவே விலகி நிற்பதன் விலாசங்களாக சிறு பத்திரிகைகள் இருக்கின்றன என்று அடுக்கு மொழி பேசிப் பொத்தாம் பொதுவாகப் புலம்புவதை விட்டுவிட்டு நிலைமையைத் துல்லியமாகவும் யதார்த்தமாகவும் உண்மையான தகவல்களின் அடிப்படையிலும் கணிக்க மாலன் முயல வேண்டும்.
வெகு ஜன ஊடகங்களில் பங்குபெற்று வெகு ஜன – சிறு பத்திரிகை ஆகிய ‘இரு வேறு உலகங்களை இணைக்க இயக்க உணர்வோடு சிலர் உழைத்ததால் ‘ ஏற்பட்ட சாதகமான விளைவுகள் பற்றியும் மாலன் பேசுகிறார் [இதை செயல்படுத்த முடியாத நிலையில் இருக்கும் சிறு பத்திரிகைக்காரர்களுக்கு புத்திமதி சொல்வதை விட்டுவிட்டு மாலன் இதை செயல்படுத்துவது நல்லது]. சிறு பத்திரிகையைச் சேர்ந்த சிலரும் சிறு பத்திரிகைகளிலிருந்து தரம் சார்ந்த பிரக்ஞையைப் பெற்ற சிலரும் 90களில் வெகு ஜன ஊடகங்களில் பணிபுரிய ஆரம்பித்ததன் விளைவாக வெகு ஜன ஊடகங்களில் சிறிதளவேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதிலும் தரமான எழுத்தின்பால் வெகு ஜன ரசனையின் கவனம் கூடியிருக்கிறது என்பதிலும் சந்தேகமில்லை. (இந்த சிலரின் பட்டியலில் மாலனின் பெயரையும் சேர்க்கலாம்), ஆனால் இதற்காக அவர்கள் செய்துகொண்ட சமரசங்கள் என்ன என்பது பற்றி அவர்கள் வெளிப்படையாகப் பேசினால் இந்த அம்சத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் விவாதிக்கவும் உதவிகரமாக இருக்கும். சினிமா நடிகைகளின் மார்புக் கச்சைக்கும் இடுப்புத் துணிக்கும் இடைப்பட்ட வெளியில் அரசியல் தொனி கொண்ட கவர்ச்சித் துணுக்குகள் எத்தனை எழுத வேண்டியிருந்தது என்பதையும் ஒரு தரமான எழுத்தாளரை இடம்பெறச் செய்ய எவ்வளவு தரங்கெட்ட எழுத்துக்கு மேடை போட்டுக்கொடுக்க வெண்டியிருந்தது என்பதையும் பற்றி அவர்கள் பேசலாம். இவ்வளவுக்குப் பிறகும் சுமாரான தரம் கொண்ட எழுத்தை எப்போதாவது ஒரு முறை மட்டுமே இடம் பெறச்செய்ய முடிந்தது குறித்த வருத்தத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். அதோடு, சிறு பத்திரிகை சமாச்சாரங்களோடு பரிச்சயம் உள்ளவர்கள் அதிகம் இல்லாத வெகு ஜன ஊடகங்களில் விதிவிலக்காக இருப்பதால் கிடைக்கும் சாதகங்கள் பற்றியும் சொன்னால் நன்றாக இருக்கும்.
மற்றபடி இயக்க உணர்வு என்பதெல்லாம் சுத்த பம்மாத்து வேலை. ஏதோ இவர்கள் தீவிர இலக்கிய உலகிற்கும் வெகு ஜன ஊடகங்களுக்கும் இடையே பாலம் அமைப்பதற்காகவே அங்கு போனது போலப் பேசுவதெல்லாம் – வெகு ஜன ஊடகங்கள் வளர்த்தெடுத்துள்ள தமிழில் சொல்வதானால் – உட்டாலக்கடி. பிழைப்பு நிர்பந்தத்திற்கும் ரசனைக்கும் இடையே முளைவிடும் முரண்பாடுகளுக்கு பாதகமான விளைவுகள் இருப்பதைப் போலவே சாதகமான சில விளைவுகளும் இருக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் வெகு ஜன ஊடகங்களில் இடம் பெறும் தரமான அம்சங்களும்.
சிறு பத்திரிகைகளை அகந்தை, அந்நியத்தன்மை, வைதீக பார்ப்பன மனப்பான்மை என்றெல்லாம் கூச்சமில்லாமல் திட்டும் மாலன் தமிழுக்கு சிறு பத்திரிகைகளின் பங்களிப்பு பற்றியும் கொஞ்சம் யோசித்துப் பார்ப்பது நல்லது. புதுக்கவிதையிலிருந்து பின் நவீனத்துவம் வரையிலும் பல விஷயங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தி நிலைபெறச் செய்தது சிறு பத்திரிகைகள்தான். சிறு பத்திரிகைகள் இல்லாவிட்டால் ஆல்பர் காம்யு, ஃப்ரன்ஸ் காஃப்கா, கேப்ரியல் கார்ஷியா மார்க்வஸ் போன்ற பெயர்களெல்லாம் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமாகியிருந்திருக்காது. காட் ஒப்பந்தம், டங்கல் திட்டம் போன்ற மக்களோடு நேரடியாக சம்பந்தப்பட்ட பொருளாதாரப் பிரச்னைகள் பற்றியும் வெகு ஜன ஊடகங்களில் வந்த கட்டுரைகளை விட பல மடங்கு அதிகமான கட்டுரைகள் ‘அந்நியப்பட்டு நின்ற ‘ சிறு பத்திரிகைகளில்தான் வந்தன. இன்றைக்கும் ஆழமும் விரிவும் கொண்ட கட்டுரைகள் சிறு பத்திரிகைகளில் மட்டுமே வர முடியும் என்ற சூழ்நிலைதான் இருக்கிறது.
இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு மாலன் தன் பார்வைகளை மறு பரிசீலனை செய்யலாம். தன் பார்வையையும் விமர்சனங்களையும் வெளிப்படையாகவும் உரிய ஆதாரங்களோடும் நேர்மையான முறையில் முன்வைத்து ஆரோக்கியமான விவாதங்கள் எழ வழி வகுக்கலாம். அல்லது விருந்துக்கு அழைத்த இடத்தில் தெருவில் போகிறவர்கள் மீது எச்சில் இலையைத் தொடர்ந்து எறிந்துகொண்டிருக்கலாம்.
தேர்வு அவருடையது.
- மாற்றம்
- தேவகோட்டை – சிவகங்கை
- சீரணி அரங்கத்தில் பேரணி
- பயணம்
- மெளனம்
- இந்திய இளவரசர்களே!
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- Mahakavi’s Puthirathoru Veedu and Ionesco’s The Chairs to be plays at Manaveli’s Ninth Festival
- எனக்குப்பிடித்த கதைகள் – 4 – ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ ஆசை என்னும் வேர்
- கோயிலுக்கு
- அமெரிக்க ஆக்க மேதை – தாமஸ் ஆல்வா எடிசன்
- நான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது ?
- எதிர்காலத்துப் பணம் உண்மையிலேயே பேசலாம்
- நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்
- ஈழத்தில் சமாதானம்
- இழந்த யோகம்
- சின்னப் பூக்கள்
- தீ தித்திப்பதில்லை…
- காவல்
- குழந்தை யேசு
- தலைப்பாரம்…..
- உதிரும் சிறகு
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- விருந்துக்கு வந்த இடத்தில்
- என் தந்தையார் பற்றி சிறு விளக்கம்
- மதக்கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது
- ஞாநிக்கு மீண்டும்
- இந்த வாரம் இப்படி – மார்ச் 3 2002. (எரியும் குஜராத், தன்னார்வக் குழுக்களின் கொடூர முகம், குருமூர்த்தியும் சிவகாசியும்)
- என் அக்கா
- பால்யகாலத்து நண்பன்!