யமுனா ராஜேந்திரன்.
சமீபத்திய இந்திய தமிழக கலாச்சார அரசியலைக் கவனித்த வருபவர்களுக்கு ( திண்ணை வாசகர்களுக்கு நாவல் பட்டியல்) இரண்டு விதமான பரிசு மற்றும் விருது விவகாரம் பிரச்சினைக்குரியதாக ஆகி வருவது தெரிய வரும். ஓன்று ஜெயமோகனால் முன்னெடுக்கப்பட்டு காலச்சுவடு மேற்கொண்டிருக்கும் புனித யுத்தம் (பார்க்க : காலச்சுவடு மார்ச் ஏப்ரல் 2000 இதழ் தலையங்கம் மற்றும் கட்டுரைகள்) போன்று தோற்றம் தரும் அரசியல். மற்றையது திருத்திமன் சாட்டர்ஐி போன்ற தேர்ந்த நடிகர்கள் கெளதம் கோஷ் பிரதீப் கிருஷ்ணன் போன்ற தீவிர சினிமா இயக்குனர்கள் இந்திய திரைப்பட விருது தொடர்பாகத் தொடங்கியிருக்கும் விவாதம். ஜெயமோகன் தி.க.சிக்கு சாகித்ய அகாதமி பரிசு வழங்கியது தொடர்பாக எழுப்பும் ஆட்சேபம் இரண்டு முகாந்தரங்கள் ( பார்க்க : ‘விண் நாயகன் ‘ இதழ் கட்டுரை – ‘திண்ணை ‘ கடிதம், மற்றும் ‘சொல்புதிது ‘ இதழ் அபிப்பிராயம்- ‘ஆறாம் திணை ‘ மறுபிரசுரம் ) கொண்டது. ஓன்று இந்திய சமூக கலாச்சார நிர்வாக அமைப்புக்களில் மார்க்ஸிஸ்ட்டுகள் ஊடுருவி விட்டதாகவும் அதனாலேயே திகசி போன்ற மார்க்சீய சார்பானவர்கள் பரிசு பெறுகிறார்கள் எனும் குற்றச்சாட்டு. பிறதொன்று, எம்.எஸ். போன்ற மார்க்சீய விமர்சகர்கள், சச்சிதானந்தன் போன்ற மார்க்சீய அழகியலாளர்கள், தோதாத்ரி போன்ற தமிழக மார்க்சீய விமர்சகர்கள் இருக்கும் சூழலில், ‘திகசியின் மார்க்சீய விமர்சனத் தகைமை என்ன ‘ எனும் கேள்வி.
திருத்திமன் சாட்டர்ஐி பிரதீப் கிருஷ்ணன் போன்றவர்களின் ஆட்சேபம் திரைப்பட விருதுத் தேர்வில் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. போன்ற அரசியல் அமைப்புக்களின் ஊடுருவல் தொடர்பானதும் பி.ஜே.பியின். அரசு நேரடியாகத் தேர்வுக் குழு நடவடிக்கைகளில் தலையிட்டது தொடர்பானதும் ஆகும். இந்திய சினிமாவின் வளர்ச்சி வீழ்ச்சிகளைக் கவனித்து வருபவர்களுக்கு இந்த விவகாரத்தின் பின்னிருக்கும் இன்னொரு அம்சத்தையும் புரிந்து கொள்ள முடியும். திருத்திமன் சாட்டர்ஜி பிரதீப் கிருஷ்ணன் போன்றவர்களும் இவர்களுக்கு ஆதரவாக தமக்குத் தரப்பட்ட பரிசை நிராகரித்திருக்கும் வங்க இயக்குனர் கெளதம் கோஷும் அற்புதமான வங்க நடிகர் சவுமித்ர சட்டர்ஜியும் இந்தியாவின் தீவிர சினிமாவைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். இந்திய சந்தைச் சினிமாவுக்கு எதிராக மாற்றுச்சினிமாவை முன்வைத்து தமது படைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறவர்கள் இவர்கள்.. திரைப்பட விருது தொடர்பான விவகாரத்தை மிகவும் ஆரோக்கியமான விவாத திசைக்கு இவர்கள் திருப்பியிருக்கிறார்கள். தென்னிந்தியாவைச் சேர்ந்த ஆந்திரத்து இயக்குனர் கோதண்டராமிரெட்டியும் தமிழக திரைப்படத் தயாரிப்பாளர் கேயாரும் இந்தப் பிரச்சினையை தென்னிந்திய-வட இந்திய விரோதப் பிரச்சினையாக உருவாக்கப் பார்க்கிறார்கள். இருவருமே தென்னிந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டபோது-குறிப்பாக சேரனின் வெற்றிக் கொடிகட்டு பாடற்காட்சி-பிரதீப் கிருஷ்ணன் போன்றவர்களும் திருத்திமன் சட்டர்ஜியும் திரையின் முன்பு நடனமாடி விசிலடித்து தென்னிந்தியப் படங்களை நக்கலடித்தார்கள் என்கிற விஷமத்தனமான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள் ( பார்க்க : ‘ஆறாம் திணை ‘ மற்றும் ‘இந்து ‘ பத்திரிகைப்பேட்டிகள் -இந்து வலைத்தளம் ) திருத்திமன் சாட்டர்ஜி இருவருக்குமான தனது பதில் கடிதத்தில் தனக்கு விசிலடிக்கவும் நடனமாடவும் தெரியாது எனவும் தான் அதைத் தெரிந்திருந்தால் செய்திருப்பேன் என்று சொல்லியிருப்பதோடு விருதுக்குழுவிலிருந்து ராஐினாமா செய்திருக்கும் கலகக்காரக் கலைஞர்களுக்குத் தனது தார்மீக ஆதரவையும் தெரிவித்திருக்கிறார்.
அறிவுத்துறைகளில் நடந்துவரும் இந்தச் சர்ச்சைகள் தற்போது மிகவும் வேகம் பெற்று வருவதை கடந்த பத்தாண்டுகால இந்திய கலாச்சார அரசியலை அவதானித்து வருகிறவர்கள் உணர்ந்து கொள்ளமுடியும். புாப்ரி மஐீத் எனும் கலாச்சாரச் சின்னம் உடைக்கப்பட்டது. மலை மக்கள் என்று சொல்லப்படகிற பூர்வகுடி மக்களின் தெய்வ வழிபாடு நொருக்கப்பட்டது. இந்திய வரலாற்றுக் கழகத்திலிருந்து ரொமீலா தாப்பர் ,இர்பான் ஹபீப் போன்றவர்கள்மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. வுரலாற்றுக் கழகமும் கல்வித்தறை சார் நிர்வாக அமைப்புக்களும் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் அரசுபூர்வமாக நிரப்பப்பட்டது. இடதுசாரி வரலாற்றாசிரியர்களின் நுால்கள் அச்சிடுவதின்று தடுத்துநிறுத்தப்பட்டது.
கலை நடவடிக்கைகளையும் சரி இலக்கிய நடவடிக்கைகளையும் சரி எவரும் நேரடியாக அரசியலுடன் தொடர்புபடுத்த முடியாது. ஏனெனில் கலை நடவடிக்கை தனிநபரின் உளவியல் நடவடிக்கையாகும்.. ஆனால் எப்போது அது சமூகத்தின் நுகர்வுக்காக முன்வைக்கப்படுகிறதோ எப்போது அந்தப் படைப்பை நிலைநாட்ட அதன் சார்பாக படைப்பாளியால் விவாதங்கள் முன்வைக்கப்படுகிறதோ அப்போதே அந்தக் கலை நடவடிக்கை சமூக நடவடிக்கையாகவும் அரசியல் பரிமாணம் கொண்டதாகவும் ஆகிறது. இந்தச் சுழலில் இருந்து எப்பேர்ப்பட்ட மேதையும் தப்ப முடியாது. கலையின் சமூகப் பயன்பாட்டையும் அது சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவையும் குறித்து எப்போதுமே மார்க்சிஸ்ட்டுகள் அக்கறைப்பட்டு வந்திருக்கிறார்கள். அதிகாரவர்க்க சோசலிசத்தின் வீழ்ச்சியால் விளைந்த சேதத்தை நிஜத்தில் வலதுசாரிகள் தமக்குச் சாதகமாக மிகச் சாதுர்யமாகக் கையாண்டு வருகிறார்கள். அரசியல் சித்தாந்த அணுகுமுறை என்பது இன்றைய தினம் மிகவும் கலங்கடிக்கப்பட்டிருக்கிறது. வடிவமைக்கப்பட்ட அல்லது நிர்ணயிக்கப்பட்ட கருத்தியல் அளவு கோல்களைக் கொண்டு இன்று படைப்பை அணுகுவது சிக்கலாகி வருகிறது. சோசலிசத்தின் வீழ்ச்சியும் மார்க்சியத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியும் இதற்கு பிரதான காரணங்களாக அமைகின்றன. ஆனால் கலையை கருத்தியலாகப் புரிந்து கொள்வதில் நிறைய ஆதாரமான தன்மைகள் பொதிந்து கிடக்கிறது. பாக்தினின் தாஸ்தயாவ்ஸ்க்கி பற்றிய அணுகுமுறை இன்றைய படைப்பாளிகளின் கருத்தியலைப் புரிந்த கொள்ள நமக்குப் பயன்படும். படைப்பாளி தன்னளவில் தனக்குத் தானே அமையும் ஆற்றின் கரை எல்லைகள் போல் ஒரு கருத்தியலைக் கொண்டுதான் யங்குகிறான். அவனது முன்னைய வாழ்பனுபவங்கள். அவனது அரசியல் முற்சாய்வுகள அவனது லெளகீக ஆன்மிக நம்பிக்கைகள் போன்றன அவனது படைப்பை நிர்ணயிப்பதில் மிக முக்கியமான பாத்திரம் வகிக்கின்றன். அவனது படைப்பின் மெளன இடைவெளிகளில் அவனது சனாதனக் கருத்தியல் உறைந்திருக்கிறது. படைப்பை நிலைநாட்ட அவன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அவனது சமூக அரசியல் பொதிந்திருக்கிறது. அவனது சமூகக் கலாச்சார அபிப்ராயங்களில் அவனது மெளனத்திற்கும் அவனது ஸப்தத்திற்கும் ஒரு நுட்பமான அர்த்தம் ருக்கிறது. படைப்பாளியை முழுக்கவும் ஒரு கட்சி அரசியல் சித்ததாந் தம் சார்ந்தவனாக இன்று புரிந்து கொள்வதில் நிறையச் சிரமங்கள் ருக்கிறது. அதே வேளை அவனது அபிப்ராயங்கள் சுத்த சுயம்புவான ஊறிவுத்துறைப் புனிதச் செயல்பாடு என்று காட்ட நினைப்பது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையாகும். இத்தகைய நிலைபாட்டுக்குள் பிரபஞ்சன் பொன்னீலன் போன்ற இடதுசாரிப்படைப்பாளிகள் மட்டுமல்ல, சுந்தரராமசாமி ெஐயமோகன் போன்ற அரசியல்சாராப் படைப்பாளிகள் என்று கோர்க கொள்கிறவர்கள் மட்டுமல்ல இன்குலாப் செயப்பிரகாசம் போன்ற கடப்பாடுடைய இடதுசாரிப் படைப்பாளிகளும் அடங்குவர்.
இந்திய வரலாற்றுக் கழக விவகாரம் பற்றிய ஜெயமோகனதும் காலச்சுவட்டினதும் மெளனம் பாரதீய ஜனதா ஆர்எஸ்எஸ் பற்றிய ஜெயமோகனின் மெளனம் சும்மா நிராகரிக்கத்ததக்கதல்ல. அதே போழ்தில் தி.கே.சி மீதான தாக்குதலை ஒரு யக்கமாக மேற்கொள்வதும் சுத்தச் சுயம்புவான இலக்கிய நடவடிக்கையும் அல்ல. அவரது விஷ்ணுபுரம் குறிப்பிடத்தக்க நாவல் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. இது ஹிட்லரின் பிரச்சாரத் திரைப்பட இயக்குனரான லெனி ரீப்சிந்தாலின் படங்களை மிகத்திறன் வாய்ந்த திரைப்படப்பிரதி என்று ஒப்புக் கொள்வது போலுமான நிஜம். ஆரிய இனவாதியான வுாக்னரின் இசையில் மனம் பறிகொடுப்பது போன்றும் ஆகும். ஆயினும் விஷ்ணுபரம் உரத்துப் பேசும் இடங்களும் சுருதி குறைந்து பேசும் தருணங்களும் ஓரிரு இடங்களிலேயே சித்தரிக்கப்படும் இஸ்லாம் பற்றிய கறுப்புமக்கள் குறிப்பீடுகளும் அரசியல் தன்மை கொண்டவையாகும். நிச்சயமாக ஆர்.எஸ்.எஸ்..பி.ேஐ.பி.யின். அறிவுத்துறைச் செயல்பாட்டின் ஊற்றுக்களை அதில் காணமுடியும். தன் அர்த்தம் அவரையும் விஷ்ணுபரத்தையும் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ்.பிரதிநிதிகள் என்று சொல்கிறேன் என்று அல்ல.. அவரது ஆர்.எஸ்.எஸ்.கடநத காலமும் ( ஆர்.எஸ். எஸ. ஒரு கட்டுக் கோப்பான வலதுசாரிக் கலாச்சார இயக்கம் என்பத்ில் சந்தேகமில்லை) அவரது நம்பிக்கைகளும் அவரது தனிநபர் கருத்தியலும் அவரது நாவலிலும் அவரது திகசி தொடர்பான விவாதங்களிலும் இடம்பெறுகிறது என்று சொல்கிறேன்.
காலச்சுவடு அபிப்பிராயக்காரர்கள் அநேகமாக கிளிப்பிள்ளைபோல ெஐயமோகன் சொன்னதையே திரும்பவும் புதிய புதிய பட்டியல்களோடு வாந்தி எடுத்திருக்கிறார்கள். அவர்களது கேள்வி இதுதான் : ‘திகசியின் விமர்சனப்பங்களிப்பு- அவரது முக்கியமான கட்டுரைகள் – புத்தகங்கள் என்ன ? ‘ இந்த விவகாரத்துக்கு ஆதாரமாக சச்சிதானந்தன் தோதாத்ரியை ெஐயமோகன் நிறுத்துவது போல, ராஐகெளதமன் நாவா.அ.மார்க்ஸ். என்று காலச்சுவடு அபிப்ராயக்காரர்கள் முன்னிறுத்துகிறார்கள். நல்லது. திகசியின் முக்கியத்துவத்தை உணர்கிறவர்கள் அல்லது அவரது பங்களிப்பை அங்கீகரிக்கிறவர்கள் இத்தகைய காரணங்களுக்காக மட்டும் அவரைப் போற்றுபவர்கள் அல்ல. திகசி காலத் தாமரையும் அவரது ஆசிரியர் ஸ்தானமும் தமிழக இலக்கிய வரலாற்றில் ஓர் இயக்கமாக முக்கியமான படைப்புக் காலகட்டமாக இருந்தது என்பதுதான் அவரது முக்கியத்துவம். இன்று தமிழின் மிக முக்கிமான படைப்பாளிகளாக விமர்சகர்களாக மொழிபெயர்ப்பாளர்களாக அறியப்பட்டவர்களான பிரபஞ்சன், பொன்னீலன், புவியரசு, வண்ணநிலவன், வண்ணதாசன், கோ.ராஜாராம், தமிழவன் போன்றவர்கள் அவர் காலத்தில் தாமரை மூலம் அவரது உந்துதலின் மூலம் தமிழ் படைப்பிலக்கிய உலகத்துள் பிரவேசித்தவர்கள் தான். திகசியின் வலிமை வெற்றுப் பிரச்சாரகர்களுக்கு மாற்றாக இடதுசாரிப்படைப்பிலக்கிவாதிகளை முன்னுணர்கிற மனம் கொண்டிருந்ததுதான். நுா.வா. மார்க்ஸிய விமர்சனத்திற்கும் ஆய்வுக்கும் செய்ததை திகசி படைப்பிலக்கியத்திற்குச் செய்தார். இந்தக் காரணங்களுக்காகவே தமிழகத்தின் பல படைப்பாளிகள் அவரது முக்கியத்துவத்தைப் பாராட்டுகிறார்கள்.
அவரது எழுத்தின் தகைமை தொடர்பான கேள்விகளுக்கு வருவோம். திகசியோடு ஒப்பிட்டுக் கேள்வி எழுப்பப்படுபவர்கள் பெரும்பாலுமானவர்கள் நடவடிக்கையாளர்கள் கல்வித்துறை சார்ந்தவர்கள். தொடர்ந்து பல்வேறு கோட்பாட்டு எழுத்து முயற்சிகளை படைப்பிலக்கிய முயற்சிகளை மேற்கொண்டிருப்பவர்கள்.. திகசியின் எழுத்துக்களை இவர்களின் எழுத்து முறைமையோடு ஒப்பிடமுடியாது. கல்வித்துறை சார் ஆய்வு நெறிமுறைகளோடு ஆய்வுக் கணணோட்டத்தோடு எழுதப்பட்டவை அல்ல. திகசியின் அபிப்ராயங்கள் அவரது எழுத்துக்களை பத்திரிக்கைப் பத்தி அபிப்ராயங்கள் என்பதற்கும் மேலாகச் சொலலமுடியாது. தனது அர்த்தம் பத்திரிக்கை பத்தி எழுத்துக்களில் தீர்க்கமான சில விஷயங்களைச் சொல்லமுடியாது என்பது அல்ல. கோட்பாட்டுரீதியில் ஆழமாகச் சொல்ல முடியாது; ஆனால், சாதாரண இலக்கிய வாசகனுக்கு சில முன் அனுமானங்களை உருவாக்கமுடியும் சில பரிந்துரைகளை உருவாக்க முடியும். அவ்வகையில் தரமான எழுத்துக்கள் குறித்த சில பரிந்துரைகளை மேற்கொள்ள முடியும். திகசியின் முக்கியத்துவம் என்பது அவர்காலத்தில் அவர் மேற்கோண்ட செயல்களின் தன்மைக்கானதேயொழிய அவரது எழுத்துக்கள் ஆழமான கோட்பாட்டு வகையைச் சார்ந்தது என்பதற்காக அல்ல. சாக்ித்ய அகாதமி பரிசுகள் இதுவரைக்கும் ஆழமான எழுத்துக்களுக்காகத்தான் வழங்கப்பட்டிருக்கிறதா அல்லது அரசியல் காரணங்களுக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்கிற விவாதங்களையும் நாம் சேர்த்துப்பார்த்துக் கொள்வது இந்தச் சந்தர்ப்பத்தில் உதவும். ெஐயமோகனது ஆட்சேபம் அரசியல் ரீதியானது அதே வேளை தகைமை தொடர்பானது. இது தகைமை தொடர்பான கேள்விகளை எழுப்புவதற்கான ெஐயமோகனது தகைமைதான் இங்கு நமது அக்கறைக்குரியது. ஜெயமோகன் நிர்த்தாட்சண்யமான மார்க்சீய எதிர்ப்பாளர். அவரது மார்க்சீயத்தின் தகைமை அல்லது படிப்பு என்பது அவரது விடலைப்பிள்ளைத் தொழிற்சங்க மார்க்சீயம் தவிர பிறிதில்லை. ஞானியின் சில தமிழ் நுால்கள் ரெஜி சிறிவர்த்தனாவின் ‘சோவியத் யூனியனின் உடைவு ‘ புத்தகத்தின் சில தகவல்கள், ஞானக்கூத்தன் பரவசப்பட ( ‘கசடதபற நாட்கள் பற்றிய நினைவுகள் ‘ ) ரஷ்யப் பெருந்தேசியவாதி சோல்செனிட்ஷனின் சில புத்தகக் குறிப்புகள் கொஞ்சமாக அறவியல் கேள்விகள். இது தான் மார்க்சியம் குறித்த அவரது தகைமை. ஜெயமோகனின் கேள்விகள் இன்னொரு முகாந்தரத்தையும் கொண்டிருப்பது கண்கூடு. ரஷ்யக் கம்யூனிசத்தினதும் கிழக்கு ஜரோப்பிய கம்யூனிஸத்தினதும் பிரதான வீழ்ச்சிக்கான காரணம் அங்கு அமைந்த அதிகாரவர்க்க ஆட்சியும் நிறுவனங்களைத் துஷ்பிரயோகம் செய்து அதிகாரத்திற்குப் பயன்படுத்தியதும் ஆகும். பின் தொடரும் நிழல்களின் குரல்களை எழுதிய ெஐயமோகன் இந்த கற்பித நிழல் புனித யுத்தத்தைத் தமிழகத்தில் தொடுக்க அரசியலற்ற அறிவுஐீவிகள் அந்தத் துர்ப்பதாகையை ஏந்தியிருக்கிறார்கள்.
இந்திய நிலைமைகள் முற்றிலும் வேறானவை. இந்திய மார்க்ஸிஸ்ட்டுகள் இன்னும் ஸ்டாலினியம் பற்றிய கேள்விகளை அதிகாரவர்க்க சோசலிஷம் பற்றிய கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்களா என்பது பிறிதொருவிஷயமாக இருக்கிறது. நிற்க. இந்தியாவில் இன்று பிரதான பிரச்சினையாக இருப்பது மதவழி பாசிசம். அதன் பொருட்டு அதிகாரவர்க்க கலாச்சார நிறுவனங்களை அது அபகரித்து வருகிறது. தலித் மக்கள் பூர்வகுடி மலை மக்கள் மீதான கலாச்சாரப் பாசிசம்அதிகரித்து வருகிறது. மார்க்கிஸ்ட்டுகளின் அதிகாரம் என்பதோ அவர்களது அதிகாரவர்க்க நடைமுறை என்பதோ பிரதான பிரச்சினை இல்லை. மாறாக அதிகார வர்க்க நிலைகளிலிருந்து மதவழி பாசிசத்தைக் கட்டமைப்பவர்களாக இந்து மத அடிப்படைவாதிகளே உருவாகி வருகிறார்கள். இச்சூழலில் பிரதான விவாதங்களை திசை திருப்பும் முகமாகச் செய்யப்படும் ஒரு வகை கலாச்சார அரசியல் நடவடிக்கைதான் ஜெயமோகன் திட்டமிட்டு மேற்கொண்டிருக்கும் இந்நடவடிக்கை. அவரது கலாச்சாரக் கடந்த காலமும் ஆழ்மன மதிப்பீடுகளும் த்தகைய அவரது நடவடிக்கைக்குப் பிரதான காரணமாகிறது. திகசிக்கு விருது வழங்கப்பட்டது தொடர்பான நிறுவனத் தேர்வு நடைமுறை தொடர்பாக எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதிலிறுக்க வேண்டிய கடமை நிச்சயமாகவே வல்லிக்கண்ணனுக்கும் குழந்தைசாமிக்கும் இருக்கிறது என்பதையும் நாம் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். ஏனெனில் அதிகாரவர்க்க சோசலிஷம் விளைவித்த ஐனநாயக விரோத சேதங்கள் பற்றிய விமர்சனங்களை இந்திய மார்க்சியர்கள் பெறவேண்டும் என்பதாலேயே இத்தகைய அணுகு முறையை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
திரைப்பட விருதுகளில் நிகழ்ந்து வரும் வடக்கு தெற்கு பிரச்சினை அப்பட்டமான கடந்த கால திராவிட அரசியலின் விஷமத்தனம் கொண்டதாகும். இந்திய சினமாவிற்கு வளமான பங்களிப்பை வழங்கியிருப்பவை வங்க கேரள சினிமாக்கள்தான். தமிழ்ச்சி னிமாவில் சந்தைதான் ஆதிக்கம் செய்கிறது. தமிழ் சினிமாப் பாடல்களை விசிலடித்து நக்கல் செய்வதில் நிச்சயமாக நியாயம் ருக்கிறது. வெற்றிக் கொடி கட்டு படத்துக்கு விருது கொடுப்பது அபத்தம் என்பதிலும் சந்தேகமில்லை. அதனோடு ஒப்பிட அலைபாயுதே குறைந்த பட்ச சமகாலத் தன்மை கொண்ட கலைநேர்த்தி கொண்ட படமாகும். ஆட்சேபக்குரல் எழுப்பிய பிரதீப் கிருஷ்ணன் எலக்டிரிக் மூன் எனும் படத்தின் இயக்குனர் நாவலாசிரியர் அருந்ததி ராயின் கணவர் திருத்திமன் சாட்டர்ஜி தீவிர சினிமா நடிகர். கெளதம் கோஷ் பத்மா நதி படகோட்டி போன்ற அமர சிருஷ்டிகளைத் தந்தவர். சுவுமித்ர சாட்டர்ஜி சத்தியஜித்ரேயின் ஆஸ்தான நடிகர். இவர்களில் எவரையும் மார்க்சிஸ்ட்டுகள் என்று முத்திரை குத்திவிடமுடியாது. சிறந்த நடிகை விருது தபுவுக்கு மாற்றாக பாரதீய ஜனதாவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த ரவீணா டாண்டனுக்குப் போயிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.பத்திரிக்கையின் ஆசிரியர் தேர்வுக்குழு உறுப்பினர் இன்னொரு தேர்வுக்குழுவினரான குடும்பத்தலைவி தகவல் அமைச்சரின் உறவினர். விருதுக்குத் தகுதியில்லாத படங்களில் நடித்த ஆர்.எஸ்.எஸ். ஆதரவு நடிகர் நடிகைகள்.தேர்வு பெற்றிருக்கிறார்கள். படத்தெரிவில் பி.ஜே.பி.யின. அரசியல் செயல்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு. அதற்கான ஆதாரங்களை படங்களுக்கான விருதுகளிலிருந்தும் நடிகர் நடிகையர் தேர்விலிருந்தும் கலகக்காரர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அவர்களின் குற்றச்சாட்டுக்களும் கலகமும் சந்தைச் சினிமா அல்லது சீரழிவுச் சினிமா அங்கீகரிக்கப்படுவதற்கெதிரான தீவிர சினிமா சார்ந்தவர்கள் கலகக்குரல். தேர்வுக்குழுவில் பி.ஜே.பி. அரசின் அதிகாரவர்க்கத் தலையிட்டுக்கு எதிரான தார்மீகக் குரல். இந்திய சமூக மாற்றத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் ஆதரித்து நிற்க வேண்டிய குரல்கள் இவை.
நாவல் பட்டியல் குறித்து_பேசவரும் கோ.ராஐாராம் ஜெயமோகனின் தன்னடக்கம் குறித்தததான தனது நக்கலினின்று துவங்குகிறார்.. எமது சமூகங்களிலும் அரசியல் கட்சிகளிலும் ஒரு வழக்கம் உண்டு. தான் எதையோ ஒன்றைச் செய்து கொண்டு போவான் ஒருவன். புிற்பாடு ஒருத்தன் வந்து அதற்கு ஆதாரமான வாதங்களை முன்வைத்து முன்னவனின் உளறல்கள் அனைத்தும் தத்துவம் என்று நிலைநாட்டிவிட்டுப் போவான். அப்புறம் கிராமத்து ரசிக மகாஜனங்கள் எல்லாம் மந்தைமாதிரி உளறுவாயன் பின்பு போவார்கள். இதற்கு கருத்தியல் பாஷையில் மூளைச் சலவை என்பார்கள். அதைப் போலவே அரசியல் இயக்கங்கள் சில எல்லாக் கொலைகளையும் செய்து முடிக்கும். பிற்பாடு பிரச்சாரப்பிரிவைச் சேர்ந்த ஒருத்தர் நிறைய சமகாலச் சர்ச்சைகள் மேற்கோள் உதாரணங்களோடு அந்தக் கொலைகளை நியாயப்படுத்தவார். அப்புறம் ரசிக மகா ஐனங்கள். மனித குலத்தின் வரலாறே கொலைகளின் வரலாறு என்று நம்பத் தொடங்கிவிடும். இதைப் போன்றதுதான் தனது நாவல்களை மிகச்சிறந்ததாக முன்னிறுத்தம் ஜெயமோகனின் தந்திரமும். கோட்பாட்டப்படிப்பும் உலக இலக்கியப்படிப்பும் தேடிப்படிக்கும் ஆற்றலுமற்ற ஒரு கூட்டம் ஜெயமோகனை உலகப் படைப்பாளி என்று கூச்சல் போட்டாலும் ஆச்சர்யமில்லை. நாவல் பற்றிய கோட்பாடு போட்டாயிற்று ‘நாவல் ‘ விமர்சன நூலில் . அப்பறம் முதல் பத்து நாவல்களில் முதலிரண்டு நாவல்களும் போட்டு அதற்கான விவாதங்களும் வைத்தாயிற்று. இனி ரசிக மகாஜனங்கள் அவர்பின்பு கொஞ்ச நாளைக்குப் போனாலும் ஆச்சர்யமில்லை. ( எனது மொழிப்பிரயோகம் கொஞ்சம் கடுமையாக இருப்பதாகத் தோன்றலாம் : அதற்குக் காரணம் இருக்கிறது. தயவு செய்து ஜெயமோகனின் விண் நாயகன் கட்டுரை மற்றும் சொல்புதிது மொழிப் பிரயோகங்களைப் பாருங்கள். அதற்கு எதிர்வினையாக இத்தகைய மொழிப்பிரயோகம் தகும் )
மனித குலத்தின் வரலாறு ஓர் இந்துக் கோயிலின் இடிபாட்டில் .தொடங்கி சோவியத் யூனியனின் அதிகாரவர்க்க சோசலிஷத்தின் வீழ்ச்சியில் முடிகிறது ஜெயமோகனைப் பொறுத்து. ஒரு வகையில் இந்திய அறிவுஐீவிகளுக்கு இன்று இதுதான் பிரச்சினை என்று அவர் நிலைநாட்டவும் தொடங்கிவிட்டார். ஒன்று மதப்பிரச்சினை- விஷ்ணுபுரம் நாவல் அதைப்பற்றிப் பேசுவதனால்தான் அது இன்று இந்த அளவு முக்கியத்தவம் பெறுகிறது. இரண்டாவது பிரச்சினை : சோவியத் வீழ்ச்சி. இன்று இந்திய சித்தாந்த மோதல் மார்க்சியத்திற்கும் இந்தத்துவத்திற்கும் இடையிலானதாக உக்கிரம் பெற்றிருக்கிறது. இந்தக் காரணத்துக்காகத்தான் ெஐயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல் நாவல் பேசப்படுகிறது. ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூச்சக்கரை என்பார்கள். சோசலிசத்தின் வீழ்ச்சி குறித்தும் மார்க்சியத்தின் மறு எழுச்சி குறித்தததுமான படிப்பு வறுமை ஒருபுறமெனில், பின் புரட்சி சமூகங்கள் கிழக்கு ஐரோப்பிய எழுத்து குறித்த அறிமுகமின்மை இதற்கு இன்னொரு காரணம். மிகத்தீவிரமான அனுபவம் கொண்ட இந்திய தமிழக மார்க்சியர்கள் இந்த நெருக்கடிகளை இந்திய தமிழ் வாழ்வின் அனுபவங்களோடு ஒப்பிட்டுப் படைப்பு முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. பொன்னீலனின் புதிய தரிசனங்கள் மட்டுமே விதிவிலக்கு. இச்சூழலில் தம்பி ஜெயமோகன் சண்டப்பிரசண்டம் பண்ணுவதில் ஆச்சர்யமேதுமில்லை.. ஜெயமோகன் போன்றவர்களின் அதிகப்பிரசங்கத்தனம் முக்கியத்துவம் பெறுவதற்கான அரசியல் காரணம் இன்று இந்திய சமூகத்தில் உலக அளவில் இந்திய மேலாண்மையை வேண்டும் ஒரு மத்தியதரவர்க்கம் உருவாகிவிட்டது. அந்த மத்தியதர வர்க்கம் மதவழியியலான ஒரு இந்திய அடையாளத்தை முன்நிறுத்தி உலகமயமாதல் தகவல் தொழில்நுட்பச் சூழலில் தனது மேலான்மையை நிலைநாட்ட விழைகிறது. அதனது மதவழி இரங்கல் தன்மை கொண்ட கலாச்சாரக் குரல்தான் ஜெயமோகனின் குரல். தமிழகத்தில் பி.ஜே.பி.யின் மதவழி அரசியலுக்கு திராவிட இயக்கங்கள் ஆட்பட்டிருப்பதைப் புரிந்த கொள்ள ஒருவரால் முடியுமானால் கலாச்சார வெளியில் ஜெயமோகனின் இலக்கிய அபிப்ராயங்கள் பெறும் முக்கியத்தவத்தையும் புரிந்து கொள்ள முடியும்
கோபால் ராஜாராம் குறிப்பிடுவது போல காம்யூ காப்கா போன்றவர்களின் படைப்புலகம் மட்டுமல்ல சார்த்தரின் படைப்புலகம் கூட ஜெயமோகனின் அக்கறைக்குள் இல்லை. ஏன் சமகாலத்தின் மிக முக்கியமான படைப்பாளியான ஸல்மான் ருஸ்டி கூட ஜெயமோகனது அக்கறை இல்லை.செவ்வியல் இலக்கியத்தின் கன்ஸர்வேடிவ் கூறுகளை இன்றைய கலக எழுத்தாளர்கள் மறுகட்டமைப்புச் செய்கிறார்கள் தொன்மங்களின் அதிகாரங்களை உடைப்பத்றகாக தொன்மங்கள் பற்றி விசாரணை செய்கிறார்கள். குந்தர் கிராஸ் இவான் கிளிமா- ஸரமாகோ- காவோ- ஸீமஸ் ஹூனி- பென் ஓக்ரி ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுததாளர்கள் பல்வேறு மத்தியகிழக்கு நாடுகளின் எழுத்தாளர்கள் புரட்சிக்குப் பிந்திய நிகரகுவா கியூப எரித்ரிய அல்ஐீரிய எழுத்தாளர்களின் படைப்புக்கள் தமிழ் வெளிக்குள் அறியவரும் போது ஜெயமோகன் போன்றவர்கள் முன்னிறுத்துகிற தனது நாவல்கள்தான் உச்சபட்ச நாவல்கள் என்கிற பிரமைகள் அழிந்து போகும். ஜெயமோகனது பட்டியல்களுக்கும் கோபால் ராஜாராமின் பட்டியல்களுக்கும் இருக்கும் வித்தியாசம் ராஜாராமின் சமூக விமர்சனச் சார்புநிலைதான். ஜெயமோகன் தனது தானெனும் அறிதலை – தத்துவ பாஷையில் அகந்தையை- உச்ச பட்ச படைப்புச் சாதனை என்று முன்வைக்கிறார். படைப்பாளியின் அழிவு இங்கிருந்துதான் தொடங்குகிறது என நினைக்கிறேன்.
.
- குறைப் பிறவி
- மனப்பான்மைகள்
- தலைப்பிரசவம்…
- புதிய நந்தன்களும் பழைய பார்வைகளும் : கே ஏ குணசேகரனின் கருத்துகள் மீது ஒரு பார்வை
- இந்த வாரம் இப்படி – ஏப்ரல் 7 2001
- விருதுகள் பரிசுகள், பட்டியல்களின் அரசியல் : எதிர்வினை
- நாளை
- எங்கள் வீதி
- பூக்களின் மொழி
- அறிவியல் துளிகள்
- முட்டை மசாலா
- மீன் கபாப்
- விருதுகள் பரிசுகள், பட்டியல்களின் அரசியல் : எதிர்வினை