முள்பாதை 31

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

கிளப்பின் ஆண்டுவிழா அன்று மாலையில்தான் நடக்கப் போகிறது. முதல்நாள் இரவு அம்மா வீட்டுக்கு வரும்போதே இரவு ஒரு மணி ஆகிவிட்டது. காலையில் எப்போ எழுந்து கொண்டாளோ தெரியாது. காலையில் நான் கண் விழிக்கும் போதே கிளப்புக்குப் புறப்பட்டு போய்விட்டாள். அம்மாவிடம் ஒரு ஸ்பெஷாலிடி இருந்தது. எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் கடைசி வரையில் எல்லாம் சரியாக, நேரத்திற்குள் முடிக்கும் விதமாக முன்கூட்டியே திட்டமிடுவாள். இந்த வருடத்திண் ஆண்டுவிழாவை சிறப்பாக நடத்த வேண்டுமென்று திட்டம் போட்டிருந்தாள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அம்மா இந்த வருடத்துடன் கிளப்பின் பிரசிடெண்ட் பதவியிலிருந்து விலக முடிவு செய்திருந்தாள். இரண்டாவது காரணம் விழாவுக்கு வரப்போகும் பிரமுகர்களுக்கு சாரதியை அறிமுகப்படுத்தி வைக்கப் போகிறாள். இதனால் எல்லாக் காரியங்களும் சிறப்பாக நடக்க வேண்டும் என்று அம்மா கடினமாக உழைத்துக் கொண்டிருந்தாள். இதுபோன்ற சமயங்களில் அம்மாவின் திறமையை, சுறுசுறுப்பைப் பாராட்டத்தான் வேண்டும்.
அம்மா முதல்நாள் இரவே என்னிடம் சொல்லியிருந்தாள். இன்று மதியம் சாரதி டில்லியிலிருந்து ப்ளயிட்டில் வரப் போகிறான். நான் காரை எடுத்துக் கொண்டு ஏர்போர்ட்டுக்கு போக வேண்டும். சாரதியை ரிஸீவ் செய்து கொண்டு வீட்டுக்கு அழைத்து வரவேண்டும். நான் எங்கே மறந்து போய் விடுவேனோ என்று மதியம் பன்னிரெண்டு மணிக்கு போன் செய்து நினைவுப் படுத்தினாள். அப்படியே நான் அணிந்து கொள்ள வேண்டிய புடவை, பிளவுஸ் மற்றும் நகைகளைப் பற்றி மளமளவென்று ஒப்புவித்தாள்.
“மம்மீ! நான் என்ன சின்ன குழந்தையா? என் உடைகளை செலக்ட் செய்ய எனக்குத் தெரியாதா?” சலித்தக் கொண்டேன்.
“வாயை மூடிக் கொண்டு சொன்னதைச் செய். உன் செலக்ஷனைப் பற்றி எனக்குத் தெரியாதா? நான் சொன்னபடி அணிந்துகொண்டு ஏர்போர்ட்டுக்கு போ.” எரிந்து விழுவது போல் சொல்லிவிட்டுப் பட்டென்று போனை வைத்து விட்டாள்.
என் விழிகளில் நீர் சுழன்றது. ‘நான் ஒரு அடிமை. அம்மாவின் ஆணைகளுக்குக் கீழ்படிய வேண்டியவள்’ என்று குரலெடுத்து கத்த வேண்டும் போல் இருந்தது.
அதற்குள் போன் மறுபடியும் ஒலித்தது. ரிசீவரை எடுத்தேன். அம்மாதான் பேசினாள்.
“ஏர்போர்ட்டுன்னுப் போகும்முன் இங்கே வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போகணும். புரிந்ததா?”
“சரி மம்மீ.”
“சீக்கிரமாக ரெடியாகணும். நீ கிளம்பிப் போவதற்குள் வந்த ப்ளேன் மறுபடியும் கிளம்பிப் போய் விடப் போகிறது. மசமசவென்று இருக்காமல் முன்னாடியே கிளம்பு”
“அப்படியே செய்கிறேன் மம்மீ.” பற்களை கடித்துக் கொண்டே சொன்னேன்.
அம்மா சொன்னபடியே ஆரஞ்சு நிறத்தில் சிந்தடிக் புடவையும், அதற்கு மேட்ச் ஆக ஸ்லீவ்லெஸ் பிளவுஸ¤ம் அணிந்து கொண்டேன். கழுத்திற்கு பவழமும், முத்தும் கலந்த நெக்லேஸ¤ம், அதற்கு மேட்சாக ஜிமிக்கியும் அணிந்துகொண்டேன். அம்மா ஏற்கனவே டென்ஷனில் இருக்கிறாள். வேளைக்கு சாப்பாடு தூக்கம் இல்லாமல் பிசியாக இருக்கிறாள். தான் நினைத்ததில் சின்ன மாற்றம் ஏற்பட்டாலும் சள்ளென்று எரிந்து விழுவாள். கிளப்பில் பத்து பேருக்கு முன்னால் திட்டு வாங்கி அவமானப்பட வேண்டியிருக்கும் என்ற பயத்தில் அம்மா சொன்னது போலவே தயாரானேன்.
காரை எடுத்துக் கொண்டு அம்மாவைப் பார்க்கப் பேனேன். நான் கிளப்புக்குப் போய்ச் சேர்ந்தபோது அம்மா நாடகத்தின் ஒத்திகையை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். நாற்காலியில் கால்மீது கால் போட்டுக் கொண்டு மற்றவர்களுக்கு ஆணையிட்டுக் கொண்டிருந்தாள்.
பூனையைப் போல் ஓசைப்படுத்தாமல் உள்ளே நுழைந்த என்னைப் பார்த்துவிட்டு “இங்கே வா” என்றாள். அருகில் சென்றேன். பக்கத்திலேயே ஸ்டூல் மீது வைத்திருந்த பேக்கை எடுத்து அதிலிருந்து லைட் கலர் லிப்ஸ்டிக்கை எடுத்து “கொஞ்சம் குனிந்துகொள்” என்றாள். குனிந்தேன். இடது கையால் என் முகவாயைப் பிடித்துக் கொண்டு லிப்ஸ்டிக்கை என் இதழ்களில் தீற்றினாள்.
பக்கத்திலேயே இருந்த பெண்மணியிடம் பின்னை வாங்கிக் கொண்டு புடவைத் தலைப்பின் மடிப்புகளை சரிசெய்து என் தோற்றம் அழகாக, எடுப்பாக தெரியும்படி தோள் அருகில் பின்னை குத்திவிட்டாள். மற்றொரு தடவை என்னை முழுவதுமாக பரிசீலித்துவிட்டு திருப்தி அடைந்தவள் போல் தலையை ஆட்டிவிட்டு “ஓ.கே. இனி நீ கிளம்பு” என்றாள்.
நான் போகும்போது மறுபடியும் அழைத்து “நகத்தைக் கடிக்காதே. சாரதிக்குப் பிடிக்காதாம்” என்றாள்.
என் இதயத்தில் தீ கொழுந்து விட்டு எரிவதுபோல் இருந்தது. சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு “சாரதிக்கு என்னவெல்லாம் பிடிக்காதோ இப்பொழுதே சொல்லிவிடு மம்மீ. மனப்பாடம் செய்து வைத்துக் கொள்கிறேன்” என்றேன்.
என் கண்களில் எட்டிப் பார்த்த கோபத்தைப் பார்த்துவிட்டு அம்மா பக்கென்று சிரித்துவிட்டாள். “எனக்கு என்ன தெரியும்? நீதான் நேரில் சந்திக்கப் போகிறாயே? அவனிடமே கேட்டுக்கொள்” என்றாள்.
அம்மாவின் பேச்சு காதில் விழாததுபோல் வெளியே வந்து விட்டேன். வாசல் அருகில் மிஸெஸ் ராமன் எதிர்பட்டாள். என்னைப் பார்த்ததும் சட்டென்று நின்று “மீனா! வாட் எ லவ்லி சாரி!” என்றாள். பதிலுக்கு முறுவலித்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். மனதில் கசப்பான உணர்வு பரவியிருந்தது. மிஸெஸ் ராமன் கண்களை விரித்து பிரமிப்புடன் புடவையைப் பாராட்டியது நினைவுக்கு வந்தது. என் புடவையை, நகைகளை பார்த்து எல்லோரும் பராட்ட வேண்டியதுதான். பளபளக்கும் புடவை, நகைகளுக்கு நடுவில் நான் ஒருத்தி இருப்பதே யார் கண்ணிலும் படாது. அம்மாவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவிதமாக உருவாக்கப்பட்ட பதுமை நான். என்னைப் பார்த்ததுமே நான் அணிந்திருக்கும் புடவையை, நகைகளை பாராட்டுவார்களே தவிர என்னுடன் மனம் விட்டு பேசவோ, என் எண்ணங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ யாரும் முயற்சி செய்ய மாட்டார்கள்.
அம்மா சில சமயம் என்னைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டே கடவுளுக்கு நன்றியைச் சொல்லுவாள். “தாங்க் காட்! மீனா உயரத்தில் அப்பாவைக் கொண்டிருக்கிறாள். குள்ளமாகவும் பரமனாகவும் இருந்தால் பார்க்க சகிக்காது” என்று சொல்லிக் கொண்டிருப்பாள். அதைக் கேட்ட போதெல்லாம் நான் குள்ளமாக, கறுப்பாக, அசிங்கமாக பிறந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தொன்றும்.
ஏர்போர்ட்டில் காரை பார்க் செய்துவிட்டு உள்ளே போகும் போது விமானம் அரைமணி நேரம் தாமதமாக வரப்போகிறது என்ற அறிவிப்பு கேட்டது. அரைமணி நேரம் காத்திருக்கணும் என்று நினைக்கும்போதே எரிச்சலாக இருந்தது. இறுக்கமாக பின் குத்திய இந்தப் புடவையில் சுதந்திரமாக நடமாடவும் முடியாது. பொம்மையைப் போல் உட்கார்ந்திருக்க வேண்டியதுது¡ன். எல்லோரும் என்னையே பார்ப்பது போல் கூச்சமாக இருந்தது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. ஷோகேஸ் பதுமையை போல் அலங்கரித்துக் கொண்டு வந்தால் பார்க்காமல் என்ன செய்வாகள்?
புக்ஸ்டால் அருகில் சென்று புதிதாக வந்த ·பிலிம்·பேர் பத்திரிகையை வாங்கிக் கொண்டு வெயிட்டிங் ஹாலில் ஒரு சோபாவில் அமர்ந்துகொண்டேன். என் முகம் யாருக்கும் தெரியாதபடி புத்தகத்தால் மறைத்துக் கொண்டு அதில் இருந்த படங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். கோபமும், ஆத்திரமும் என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.
என் மனதில் கொஞ்சம்கூட எட்டிப் பார்க்காத நபருக்காக நான் ஏன் இப்படி அலங்கரித்துக் கொள்ளணும்? எதற்காக காத்திருக்கணும்? நான் இப்படி சிங்காரித்துக் கொள்ளவில்லை என்றால் அவன் என்னை திரும்பிப் பார்க்க மாட்டானா? அவன் கண்ணில் நான் படமாட்டேனா?
நகத்தைக் கடிக்காதே என்று அம்மா எச்சரித்தது நினைவுக்கு வந்தது. உடனே நகத்தைக் கடிக்க தொடங்கினேன். சாரதி ஊருக்கு திரும்பிப் போகும் வரையில் நகத்தைக் கடித்துக் கொண்டே இருக்கணும் என்று மனதிலேயே கங்கணம் கட்டிக் கொண்டேன்.
அவனுக்கு இன்னும் எந்த விஷயங்கள் பிடிக்காதோ தெரிந்தால் நன்றாக இருக்கும். அம்மா எதிரில் இல்லாதபோது அவற்றைச் செய்து அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்.
“மீனா!” திடீரென்று யாரோ என் எதிரில் நின்றுகொண்டு வியப்புடன் அழைத்தார்கள்.
தூக்கிவாரி போட்டாற்போல் இருந்தது எனக்கு. நிமிர்ந்து பார்த்தேன். என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. நான் பார்த்துக் கொண்டிருந்தது கனவா இல்லை நினைவா என்று புரியவில்லை.
எதிரே கிருஷ்ணன் நின்று கொண்டிருந்தான். “நீயா! நீ… இங்கே?” வாயிலிருந்து அதற்கு மேல் வார்த்தை வெளிவரவில்லை. நாக்கு உலர்ந்து விட்டதுபோல் இருந்தது.
“நீ… இங்கே?” அவனும் பாதியில் நிறுத்தி விட்டான்.
“நீ எப்போ சென்னைக்கு வந்தாய்?” இன்னும் நம்ப முடியாதவள் போல் பார்த்துக் கொண்டே கேட்டேன்.
“நேற்று.”
“நேற்றே வந்துவிட்டாயா?”
“ஆமாம்.”
அவன் கண்கள் என் புடவையை, கையில்லாத ரவிக்கையை, நகை அலங்கராத்தைக் கூச்சமின்றி கவனித்துக் கொண்டிருந்தன. எப்போதும் இல்லாத விதமாக அவன் பார்வை என்னைத் தழுவி கிச்சுகிச்சு மூட்டுவதுபோல் உணர்ந்தேன்.
என்னை பரிசீலித்துக் கொண்டே மேலும் சொன்னான். “சற்று முன் புக்ஸ்டாலை விட்டு நீ வெளியே வரும்போது தொலைவிலிருந்து பார்த்தேன். இந்தப் பெண் யாரோ மீனாவைப் போல் இருக்கிறாள் என்று நினைத்தேனே ஒழிய உண்மையில் நீதான் என்று அடையாளம் தெரியவில்லை. வெளியே போனபோது மாமாவின் கார் பார்க் செய்திருப்பதை பார்த்தேன். அதைப் பார்த்ததும் எனக்கு சந்தேகம் வந்தது. மறுபடியும் உள்ளே வந்தேன். நீயானால் முகம் தெரியாதப் புத்தகத்தை குறுக்கே வைத்துக் கொண்டிருந்தாய். பக்கவாட்டில் வந்து பார்த்தேன். நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாய். என் சந்தேகம் தீர்ந்துவிட்டது.”
“ரொம்பத்தான் கிண்டல் செய்யாதே. அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டேனா என்ன?” பொய்யாக கோபம் காட்டியபடி கேட்டேன்.
“உண்மையைத்தான் சொல்கிறேன். மெலட்டூருக்கு வந்த மீனாவுக்கும், இப்போ பார்த்துக் கொண்டிருக்கும் மீனாவுக்கும் கொஞ்சம்கூட ஒற்றுமையே இல்லை.” அவன் பார்வை மற்றொரு தடவை என் அலங்காரத்தை மின்னல் வேகத்தில் பரிசீலித்தது. பாராட்டுவது போல் பார்த்துக்கொண்டே “உண்மையைச் சொல்லட்டுமா? எந்த இளவரசனுக்காகவோ காத்திருக்கும் இளவரசியை போல் இருக்கிறாய்” என்றான் முறுவலுடன்.
“அதுதான் நீ வந்த விட்டாயே. அந்த இளவரசன் நீதானோ என்னவோ.” என்னையும் அறியாமல் சொல்லிவிட்டேன்.
“நானா?” திகைத்துப் போனாற்போல் சொன்னான். அவன் முகம் திடீரென்று கன்றிவிட்டது. உடனே பேச்சை மாற்றியபடி “மாமி, மாமா யாரும் வரவில்லையா?” என்றான்.
இல்லை என்பதுபோல் உதட்டைப் பிதுக்கினேன்.
“நின்றுகொண்டே இருக்கிறாயே? உட்கார்ந்துகொள்.” ஏற்கனவே நாலைந்துபேர் எங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டுச் சொன்னான்.
நான் உட்கார்ந்துகொண்டேன். அவனும் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்துகொண்டே “தனியாக வந்திருக்கிறாயே? என்ன விசேஷம்?” என்று கேட்டான்.
நான் உடனே பதில் சொல்லவில்லை.
“டில்லியிலிருந்து யாராவது வருகிறாகளா?” சந்தேகமாக கேட்டான்.
“ஆமாம். சாரதி வருகிறான்.”
“ஓஹோ!” புரிந்துவிட்டாற்போல் பார்த்தான். சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டு வேறு எங்கேயோ பார்ப்பது போல் அமர்ந்திருந்த அவன் கண்களில் லேசாக பொறாமை தென்பட்டதை நான் கவனிக்காமல் இல்லை.
முறுவலுடன் குறும்பாக பார்த்துக் கொண்டே சொன்னேன். “நீ வரப்போவது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் உனக்காகவும் ஸ்டேஷனுக்கு வந்திருப்பேன்.”
சரேலென்று தலையைத் திருப்பி என்னைப் பார்த்தான். என் வார்த்தைகள் அவன் சுய அபிமானத்தை காயப்படுத்தி இருக்க வேண்டும். “தாங்க்ஸ்! எனக்கு பகல் கனவு காணும் பழக்கம் இல்லை.” கம்பீரமாக சொன்னான்.
“இதில் பகல் கனவு என்ன இருக்கு?”
“இயல்புக்கு மாறானது, நடக்காதவற்றை விரும்புவது… இதெல்லாம் பகல்கனவு இல்லாமல் வேறு என்ன?”
அவன் குரலில் இருந்த கம்பீரமோ இல்லை அந்த வார்த்தைகளுக்கு பின்னால் இருந்த கூர்மையோ என் வாயை ஒரு நிமிடம் அடைத்து விட்டன.
“நீ யாருக்காக வந்தாய்? டில்லியிலிருந்து யாராவது வரப் போகிறார்களா?” என்று கேட்டேன்.
“ஊஹ¤ம். பிரண்ட் ஒருத்தன் பெங்களூருக்குப் போகிறான். அவனை வழியனுப்ப வந்தேன். சொல்லப் போனால் நான் வந்த வேலை நேற்று இரவே முடிந்து விட்டது. பொழுது போகவில்லை என்று அவனுடன் வந்தேன். இங்கே உன்னை பார்ப்பேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை.”
ஏனோ தெரியவில்லை. சற்றுமுன் என்னைப் பார்த்ததும் அவனிடம் ஏற்பட்ட மகிழ்ச்சியும், பிரமிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.
“என்ன வேலையாக வந்தாய்?” என்று கேட்டேன்.
“ஒருத்தரைச் சந்திப்பதற்காக வந்தேன்.”
“யாரை?”
“உன்னை மட்டும் இல்லை.” அவன் குரலில் குறும்பு கலந்திருந்தது.
“அந்த விஷயம் எனக்கும் தெரியும். நீ ஒன்றும் சொல்ல வெண்டியதில்லை. எத்தனை நாட்கள் இருக்கப் போகிறாய்?”
“இன்று இரவே புறப்படுகிறேன்.”
“எவ்வளவு கல்நெஞ்சு உனக்கு? இந்த ஊருக்கு வந்து என்னை சந்திக்காமலேயே கிளம்பி விடலாம் என்று நினைத்தாய் இல்லையா?”
அநியாயமாக பழிச்சொல்லுக்கு ஆளானவன் போல் பார்த்தான். “அதான் இப்போ பார்த்து விட்டேனே. காபி குடிக்கிறாயா? வரவழைக்கட்டுமா?” பேச்சை மாற்றப் போனான்.
“வேண்டாம். தேவையில்லை. அத்தையும் மற்றவர்களும் சௌக்கியம்தானே?”
“சௌக்கியம்தான்.”
“ராஜி எனக்கு செய்தி எதுவும் சொல்லி அனுப்பவில்லையா?”
“உன்னை சந்திக்க மாட்டேன் என்று கச்சிதமாக சொல்லிவிட்டேன். இல்லாவிட்டால் ஏதாவது சொல்லிவிட்டிருப்பாள். என் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வந்தாள்.”
“உண்மையிலேயே நீ ரொம்ப கல்மனம் படைத்தவன்தான்.” நிஷ்டூரமாக சொன்னேன்.
கிருஷ்ணன் உடனே பதில் சொல்லவில்லை. என் கையிலிருந்த ·பிலிம்·பேரை வாங்கி புரட்டிக்கொண்டே “மனதை கல்லாக்கிக் கொள்ளவில்லை என்றால் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சமாளிப்பது ரொம்ப கஷ்டம் மீனா” என்றான்.
தன்னையும் அறியாமல் மீனா என்று அவன் அழைத்த அழைப்பு என் இதயத்தில் எழுப்பிய சலனத்தை அவனால் உணர்ந்திருக்க முடியாது.
“ராஜியின் திருமண விஷயம் என்னவாயிற்று?”
“தாம்பூலம் மாற்றிக் கொண்டாகிவிட்டது. அடுத்த இருபதாம் தேதி திருமணம்.”
வானம் இடிந்து தலையில் விழுந்ததுபோல் பார்த்தேன். “தாம்பூலம் மாற்றிக் கொண்டாகிவிட்டதா? அந்த வரன் முடிவாகிவிட்டதா? எப்போ?”
“நான் இங்கே வருவதற்கு முதல்நாள் மாற்றிக் கொண்டோம்.” கிருஷ்ணன் சொன்னான்.
அதற்குள் மைக்கில் அறிவிப்பு கேட்டது, டில்லியிலிருந்து வரப் போகும் விமானம் ஐந்து நிமிடங்களில் தரையில் இறங்கப் போவதாக.
கிருஷ்ணன் கையிலிருந்த புத்தகத்தை என்னிடம் தந்து கொண்டே “அதோ அறிவிப்பு! உன் இளவரசன் வந்து கொண்டே இருக்கிறான்” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டான்.
நானும் எழுந்துகொண்டேன்.
“வரட்டுமா?” விடைபெற்றுக் கொள்வதுபோல் சொன்னான்.
“கொஞ்சம் இரு. நான் உன்னிடம் பேச வேண்டும்.” பதற்றத்துடன் சொன்னேன்.
“நேரமாகிவிட்டதே?”
எனக்கு ஏனோ பதற்றமாகவும், குழப்பமாகவும் இருந்தது. ராஜேஸ்வரிக்கு அந்த வரன் நிச்சயமாகி விட்டதென்று இடிபோன்ற செய்தியை என் காதில் போட்டு விட்டு கிருஷ்ணன் பாட்டுக்கு கிளம்பிப் போகிறேன் என்கிறான். இந்த விஷயத்தில் நான் கேள்வி கேட்கவோ, தான் பதில் சொல்லவோ எதுவும் இல்லை என்பது போல் இருந்தது அவன் தோரணை.
“உன்னிடம் கட்டாயம் பேச வேண்டும்.”
“சீக்கிரம் சொல்லு. இன்னும் மூன்று நிமிடங்கள் இருக்கு.” கையிலிருந்த கடியாரத்தை பார்த்துக் கொண்டே சொன்னான்.
“இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது.”
“பின்னே எங்கே? எப்போ?”
“நாளைக்கு பேசிக் கொள்வோம்.”
“இன்று இரவே நான் கிளம்பிப் போகிறேன்.” நினைவுப்படுத்துவது போல் சொன்னான். “ஊஹ¤ம். நீ போகக் கூடாது. நீ கிளம்பிப் போய்விட்டாய் என்றால் நான் மெலட்டூருக்கு வர வேண்டியிருக்கும். ஜாக்கிரதை!”
அவன் முகம் சீரியஸாக மாறியது.
“அதான் நீ இன்று போக வேண்டாம்னு சொல்லுகிறேன். நாளைக்கு எங்கே சந்திக்க முடியுமோ நீ சொல்லு.”
“நீயே சொல்லு.”
வேகமாக யோசித்தேன். எங்கே சந்திப்பது? எங்கள் வீட்டில் சாத்தியமில்லை. மாமியின் வீடு கிருஷ்ணனுக்குத் தெரியாது. “நீ எங்கே தங்கியிருக்கிறாய்?” அவன் தங்கியிருக்கும் இடத்தில் தோது படுமா என்பதுபோல் கேட்டேன்.
“பிரண்ட் வீட்டில் தங்கியிருக்கிறேன். ஆனால் நீ அங்கே வருவது…” பாதியில் நிறுத்திவிட்டான். “ப்ளேன் லாண்ட் ஆகிவிட்டது போலிருக்கு. நீ கிளம்பு.” எச்சரித்தான்.
“நாம் எங்கே சந்திப்பது? ஓ.கே. காசினோ தியேட்டருக்கு பதினோரு மணிக்கு வந்துவிடு. அங்கே மார்னிங்க் ஷோ இருக்கும். நானும் வந்து விடுகிறேன்.”
“சினிமா தியேட்டருக்கா?” கிருஷ்ணன் முகத்தில் வியப்பு தென்ட்டது.
“ஆமாம். அதைவிட இப்போ என் மூளைக்கு எதுவும் எட்டவில்லை. அங்கே வந்த பிறகு முடிவு செய்வோம்.”
“ஆனால் … மீனா!”
“நீ எதுவும் சொல்லாதே. தயவு செய்து இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் சொன்னதைக் கேள். வாழ்நாள் முழுவதம் உனக்கு நன்றிக் கடன் பட்டிருப்பேன்.”
சங்கடத்தில் மாட்டிக் கொண்டவன்போல் கிருஷ்ணன் பார்த்துக் கொண்டிருந்தான்.
நான் ஓட்டமும் நடையுமாகப் போய்க் கொண்டே பின்னால் திரும்பி “நாளைக்கு பதினோரு மணிக்கு காசினோவில் உனக்காகக் காத்திருப்பேன், மறந்துவிட மாட்டாயே?” என்றேன்.
“மறந்து போக மாட்டேன். உனக்குத்தான் நினைவு இருக்கணும். பயணிகள் வெளியே வர ஆரம்பித்து விட்டார்கள்.” கிருஷ்ணன் எச்சரித்தான்.
சாரதி வெளியே வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்தததும் முறுவலித்தேன். அரைமணி நேரத்திற்கு முன்னால் எரிச்சலும், கோபமுமாக இருந்தவள் நான்தானா என்று வியப்பாக இருந்தது. கிருஷ்ணனின் வருகை என்னுள் புத்துயிர் ஊட்டியது போல் இருந்தது.
சாரதியிண் கண்கள் எனக்குப் பின்னால் யாரையோ தேடிக் கொண்டிருந்தன.
“மம்மீ வரவில்லை” என்றேன் அவன் பார்வைக்கு அர்த்தம் புரிந்ததுபோல்.
“ஓஹோ!” அவன் கண்களில் வெளிப்படையாக தென்பட்ட ஏமாற்றம் என் சுவாபிமானத்தை ஈட்டியால் தாக்கியது போல் இருந்தது.
“தனியாக வந்தாயா?” வியப்புடன் கேட்டான்.
ஆமாம் என்பதுபோல் பார்த்தேன். இருவரும் வெளியே வந்தோம். “லக்கேஜ் எதுவும் இல்லை. கிளம்புவோமா?” என்றான் சாரதி.
வெளியே வரும்போது என் கண்கள் கிருஷ்ணனுக்காக தேடின. ஆனால் அவன் தென்படவில்லை. காரை பார்க் செய்த இடத்திற்கு வரும்போது ஒரு தடவைக்கு இரண்டுதடவை பின்னால் திரும்பிப் பார்த்தேன்.
“யாராவது வரணுமா?” சாரதி தானும் திரும்பிப் பார்த்துக் கொண்டே கேட்டான்.
“ஊஹ¤ம்.” மறுப்பதுபோல் சொல்லிக் கொண்டே காரில் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.
வீட்டுக்கு வரும்போது வழியில் நாங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவன் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளியை மரியாதையுடன் அழைத்துவரும் டிரைவர் இடத்தில் நான் இருப்பதுபோல் உணர்ந்தேன்

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்