நைட் ட்யூட்டி

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

தி.சு.பா.


“அப்பா….”
“அப்பா…”
“அப்பாஆஆ…”
என்று மூன்று முறை விவேக் எழுப்பியபின் கண்விழித்து பார்க்க முயற்சித்தார் பாலு. அந்த இருட்டறையில் தூக்கக் கலக்கத்தில் அவருக்கு தலைகால் புரியவில்லை. தூக்கம் மீண்டும் மீண்டும் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. சோம்பல், அசதி இவ்விரண்டும் ஒருசேர கொடுக்கும் ஒருவித மயக்கம்! விவேக் அறை விளக்கைப் போடாமல் இருந்திருந்தால் அவர் மீண்டும் கண் அசந்திருப்பார். தன்னையறியாமல் தன் வலது கையைக் கொண்டு வலது தொடையை சொரிந்து கொண்டார்.

தலையை இடதுபுறம் லேசாக திருப்பி அங்கே நின்றிருந்த தன் மகன் விவேக்கைப் பார்த்தார். அவன் தன் இரு கைகளையும் இடுப்பின் இருபுறங்களிலும் வைத்துக் கொண்டு, அப்பாவைப் பரிதாபமாக பார்த்தான். பாலு இமைகளை மேல்புறம் சில முறை தூக்கித் தூக்கத்தை வலுகட்டாயமாகக் கலைத்துக் கொண்டிருந்தார். பிறகு விவேக்கையே அமைதியாக ஒரு நிமிடம் வரை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த பார்வையினூடே பெருத்த சோகம்! முன் வழுக்கைத் தலையும், ‘டொக்’ விழுந்த கன்னமும், மூப்புத் தரும் முதிர்ச்சியும் சோகத்தைக் கூட்டி காண்பித்தன. பாலுவைப் பார்த்தால் ’75வயது முதியவர்’ என்று ஊர்ஜிதமாகச் சொல்லலாம். ஆனால் 68வயது தான் நடக்கிறது.

“அப்பா, எழுந்திருக்கிறீங்களா? மணி 8.30 ஆகுது….டைம் ஆயிடுச்சு…..” என்று கடிகாரத்தையும், தன் அப்பாவையும் திரும்ப திரும்ப பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தான் விவேக்.

‘வர்றேன்…’ என்றவிதமாக மண்டையை மிக மெதுவாக மேலும் கீழும் ஆட்டினார் பாலு. அறை விளக்கை அணைக்காமல் அறையை விட்டு வெளியேறினான் விவேக்.

அதன்பின் ஒருசில நிமிடங்கள் கழித்து பாலு மெதுவாக வெளியே வந்தார். அறையைவிட்டு வெளியே வரும் தன் கணவரை வாடிய முகத்துடன் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தார் ராஜம். ராஜம் பாலுவுக்கு 40வருடமாக ‘தலைஆட்டும் பொம்மை’. பாலு தன் மனம் குமுறும் போதெல்லாம் ராஜத்திடம் வந்துதான் ‘வாள், வாள்’ என்று கத்துவார், சில சமயம் அழக்கூடச் செய்வார். அதைப் பார்த்து ராஜமும் அழுவார். தினமும் தன் மகனை அர்ச்சனை செய்யவில்லை என்றால் பாலுவுக்குத் தூக்கம் வராது. விவேக் தூங்கிவிட்டானா என்று பார்த்துவிட்டு நள்ளிரவு 12.30மணிக்கு மேல் ராஜத்திடம் அவனைப் பொரிந்து தள்ளுவார். மகனுக்கு பரிந்து பேசினால் பாலுவுக்கு கோபம் மும்மடங்கு ஆகிவிடும். கணவருக்கு பரிந்து பேசினால் மகனை உண்டு இல்லை என்று பண்ணி, திட்டி விடுவார். அதனால் அவர் எப்பொழுது கோபப்பட்டு பேசினாலும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார் ராஜம்.

அறையை விட்டு வெளியே வந்த பாலு ராஜத்திடம், “என் வாட்ச்சையும், பர்சையும் எடுத்து வை…” என்று வேண்டாவெறுப்பாகச் சொல்லிவிட்டு குளியலறைக்குச் சென்றார். ஐந்து நிமிடத்திற்கு பிறகு குளியறையிலிருந்து பளிச்சென்று வந்தார். அவர் முகம்தான் பளிச்சென்று இருந்தது. மனது ரொம்பவும் வாடியிருந்தது. அதை அவர் உடல்மொழி காட்டிக் கொடுத்தது. ஏதோ செய்யக்கூடாததை செய்து கொண்டிருப்பதாக அவர் கண்கள் எடுத்துரைத்தன. மாநிறம் தானென்றாலும் முன்பெல்லாம் ‘கஷ்க் முஷ்க்’ கென்று இருப்பார். 59வயதிலிருந்து சர்க்கரையும், இரத்தக் கொதிப்பும் சேர்ந்து வந்ததால் சாப்பாட்டை ரொம்பவும் குறைத்துவிட்டார். சற்று தள்ளாமையும் வந்துவிட்டது.

காப்பி போட்டு ரெடியாக வைத்திருந்தாள் விவேக்கின் மனைவி பாரதி. பெயர்தான் பாரதி! சமையல்கட்டு, காப்பி, சாம்பார், குழந்தைகள், கணவன், இப்பொழுது மாமானார், மாமியார் – இதுதான் அவள் உலகம். அருமையான இந்திய மனைவிக்கு உதாரணம்! அமெரிக்கவாசத்தால் மாறிவிடாத திருச்சி மலைக்கோட்டைப் பெண்!

பாலு கையில் காப்பியைக் கொடுத்தாள். ஒரு +2 மாணவியைப் போல முடிவுக்குக் காத்திருந்தாள். மாமனார் முகபாவத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. மடக் மடக் கென்று குடித்து முடித்தார். அப்படியென்றால் காப்பி அருமை தானே! பாரதிக்கு ஒருவித பெருமிதம்.

பாலுவை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் முன்னதாகவே வீட்டை விட்டு வெளியேறி, அவருக்காக காரில் காத்திருந்தான் விவேக். 35 வயது வாட்டசாட்ட இளைஞன் தான். ஆனால், அவன் முகம் வாடியிருந்தது. உள்ளத்தில் ஒருவித குமுறல். குற்ற உணர்ச்சி! போலீஸ்காரர் ஒருவரிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட திருடனைப் போல!

இரண்டு மூன்று முறை வெளியே வந்து விட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்று மறந்த பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தார் பாலு. காரில் பின்பக்கமாக ஏறியவர் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தார். விவேக்கும் எதுவும் பேசாமல் மௌனம் காத்தான். கார் 2மைல் நகருக்குள் பயணித்து விட்டு I-75 என்ற அமெரிக்காவின் நெடுஞ்சாலையில் பறக்க ஆரம்பித்தது. அட்லாண்டா டவுண்டவுனுக்குச் செல்ல குறைந்தது 20நிமிடமாவது ஆகும்.

விவேக் மனதுக்குள் ஒரு பெரிய போராட்டம். சுமார் 15வருடங்களுக்கு முன்பு அவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது பாலுவுக்கு உயிரைக் கொல்லும் அளவுக்கு தலைவலி வந்தது. மருத்துவரிடம் காண்பித்த பொழுது 30வருடங்களுக்கு மேல் ஃபாக்டரியில் ‘நைட் ட்யூட்டி’ பார்த்ததால் தலையில் ஏதோ நரம்பு வலுவிழந்து விட்டதாகக் கூறினார். அவருக்கு நல்ல ஓய்வு தேவை என்றும், அவர் இனிமேல் ‘நைட் ட்யூட்டி’ பார்க்கக் கூடாது என்றும் எச்சரித்தார். அப்புறம் அவனை இவனை பிடித்து மந்திரி வரைப் போய், ஜெனரல் ஷிஃப்டில் கொஞ்ச வருடம் வேலை பார்த்துவிட்டு ஓய்வு பெற்றார்.

அப்பா சுகமில்லாமல் இருந்த அந்த சமயத்தில், “அப்பா, அடுத்த வருஷம் எனக்கு படிப்பு முடிஞ்சுடும். அதுக்கு அப்புறம் வேலை ஒடனே கெடச்சடும்..ஒடனே நீங்க வி.ஆர்.எஸ். கொடுத்துறீங்க….நான் பாத்துக்கறேன்பா அப்புறம்…” என்று வீராவேசமாக வசனம் பேசினான். அந்த வசனம் இப்பொழுது அவன் மனக்கண் முன் வந்து தாண்டவமாடியது. இதுநாள் வரை பாலுவை அப்படித்தான் காப்பாற்றினான். ஆனால் இப்பொழுது போறாத காலம்! 2009ல் அமெரிக்காவில் நடந்த பொருளாதார நெருக்கடியில் வேலை போய்விட்டது. ப்ராஜக்ட் மேனேஜராக ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் அட்லாண்டாவில் வேலை பார்த்தான். அவன் சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு 110 அமெரிக்க டாலர். அவனும் கடந்த 6மாதமாக வேலை தேடுகிறான். சரிவர அமையவில்லை. 6பேர் கொண்ட பெரிய குடும்பம். தாக்குப்பிடிக்க முடியவில்லை.

ஒரு நாள் சிக்னலில் நின்று கொண்டிருந்த பொழுதுதான் இந்த யோசனை உதயமானது. அட்லாண்டா டவுண்டவுனில் மூன்று நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பாளர் வேலை காலி இருந்தது பற்றி படித்தான். அப்பாவை வற்புறுத்தாதக் குறையாக அந்த வேலைக்கு மனு போட வைத்தான். உடனே கிடைத்துவிட்டது! நாளைக்கு 80 அமெரிக்க டாலர் சம்பளம். கடந்த மூன்று மாதமாக பாலு அந்த ஹோட்டலுக்கு வேலைக்குப் போகிறார். பாலுவுக்குத் துளிகூட விருப்பமில்லை. மீண்டும் அந்த ‘கட்டாலவைக்க நைட் ஷிஃப்ட்’ வந்துவிட்டதே என்று பயம். மரண பயம்! 35வயது இளைஞனுக்கு அதுவும் ஃப்ராஜக்ட் மேனேஜராக வேலைப் பார்த்தவனுக்கு இந்த வேலையைப் பார்ப்பது என்பது கனவிலும் நடக்காத காரியம். மானப் பிரச்சினை!

மாலை 6மணிக்கு இரவு உணவை முடித்து விட்டு, 8.30-9 மணிவரை நன்றாக தூங்கிவிடுவார் பாலு. அப்பொழுதுதான் இரவில் கொஞ்சம் தாக்குபிடிக்க முடியும். தொடர்ச்சியாக இரவு முழுவதும் வேலை இருக்காது என்றாலும் கண் அசராலாம் என்றால் அப்பொழுது தான் தொலைபேசி அழைக்கும், இல்லை வெளியே சென்றவர் சிலர் 1மணிக்கும், 2மணிக்கும் ஹோட்டலுக்கு வந்து கழுத்தை அறுப்பர். அப்புறம் “லிஃப்ட் ஏன் கீழ போகல? தண்ணி ஏன் வரலை?” போன்ற எரிச்சல்கள் வேறு. வெள்ளி, சனி என்றால் கேட்க வேண்டாம். அதிகாலை 4மணி வரை ஆள் நடமாட்டம் இருக்கும். நள்ளிரவு 12மணிக்கு மேல் ஹோட்டல் கதவை சாத்திவிடுவர். பக்கவாட்டில் ஒரு சிறிய கதவு இருக்கும். அது வழியாகத் தான் எல்லாரும் வரவேண்டும். அதைத் திறந்தால் அபாய மணி சில வினாடி வரை அடிக்கும். இந்த மாதிரி பாலுவால் நிம்மதியாக கண் அசர முடியாது. இரவு 10மணி முதல் காலை 6மணி வரை வேலை. சரியாக 9மணிக்கும், பிறகு காலை 6.30 மணிக்கும் அவரை காரில் அழைத்துச் செல்வான் விவேக்.

கார் 90மைல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. 5-10நிமிடம் கழித்து மௌனம் கலைத்தான் விவேக்.

“அப்பா! ஒங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குனு புரியுது….” என்று சொல்லிவிட்டு, அப்பா ஏதாவது சொல்வாரா என்று பார்த்தான்.

பாலுவிடமிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. இவனால் ஓட்டுனர் கண்ணாடியில் கூட அவர் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை. தைரியமில்லை! விவேக் தொடர்ந்தான்.

“தப்பா எடுத்துக்காதீங்கப்பா….இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள எப்படியும் கண்டிப்பா வேல கெடச்சுடும். ஆஆஆங்ங்….அப்படி இல்லைன்னா நீங்க எல்லாரும் இந்தியா போய்டுங்க. நான் வேலை ஒன்னு வாங்கிட்டு ஒங்களுக்கு சொல்லி வுடறேன். இதுக்கு மேல ஒங்களையும் கஷ்டபடுத்த விரும்பல. நேத்து அம்மாட்ட இதபத்தி சொல்லிட்டு தான் இருந்தேன். பாரதிட்ட கூட போனவாரமே சொல்லிட்டேன். அவளும், அம்மாவும் சரின்னு தான் சொன்னாங்க….”

மீண்டும் ஒரு நீண்ட இடைவெளி விட்டான். பாலுவிடமிருந்து எந்த பதிலோ, யோசனையோ வரவில்லை.

அவனே தொடர்ந்தான்.

“ஏன்னா….. கொழந்தங்க படிப்பு ஸ்பாயில் ஆயிடக் கூடாதேன்னு பார்க்கறேன்…”

‘அப்போ அப்பா உடம்பு ஸ்பாயில் ஆனா பரவால்லயா?’ என்று அவன் மனது கேட்டது. வெலவெலத்துப் போனவன், பிதற்ற ஆரம்பித்தான்.

“…நீங்க….நேத்து பக்கத்து வீட்டு பெரியவரிடம் பேசினப்போ….நான் அப்படி சொல்ல வரலை……நான் சொல்றது ஒங்களுக்குப் புரியதா?”

பிறகு சுதாரித்துக் கொண்டான்.

“மேக்ஸிமம் ரெண்டு மாசம் தான்….கண்டிப்பா கிடச்சுடும்…அதுக்கு அப்புறம் நீங்க….”

விவேக்கின் இதயம் சற்று வேகமாக துடித்தது. பாலுவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. 8வயதிலேயே சைக்கிள் வேண்டுமென்று அடம்பிடித்தான். 10-12 வயது ஆகட்டும்டா என்று சொல்லி பார்த்தார். அதெல்லாம் முடியாது என்று ஒற்றைக் காலில் நின்று சைக்கிளை வாங்கினான். டி.வி., டெக், ஆளுயர ஸ்பீக்கர், அப்புறம் வளர்ந்த பிறகு பைக் என்று அடம்பிடித்து வாங்கித்தர சொன்னான் விவேக். எப்பொழுதும் வயதுக்கு மீறிய பொருளைத் தான் கேட்பான். பாலு எல்லாவற்றையும் வாங்கி கொடுப்பார், கொடுத்தார். இப்பொழுதும் அதே அடம், அதே மீறல்! தந்தைக்கு 30வயதானால் என்ன 60வயதானால் என்ன, தந்தையின் கடமை மகனின் மகளின் ஆசைகளை, தேவைகளைப் பூர்த்தி செய்வது தானே!

ஹோட்டல் வாசலில் கார் வந்த நின்றபொழுது மணி 9.30ஐத் தாண்டியிருந்தது. அவனுக்கு, ‘ஏன் அப்பா பதிலே பேசவில்லை?’ என்றிருந்தது. அவன் மனதில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றி மறைந்தன. அப்பா ஏதும் பேசாமலே இருந்தார். அவனுக்கு லேசாக அடிவயிற்றைக் கலக்கியது. காரை அணைத்துவிட்டு ஓட்டுனர் கண்ணாடி வழியே அப்பாவைப் பார்த்தான். காருக்குள் இருக்கும் எல்லா விளக்குகளையும் போட்டான். அப்பா வாய் திறந்திருந்தது. கண் மூடியிருந்தது.

“அப்பா…..”

“அப்பா……”

“அப்பாஆஆஆ…..”

அப்பா அசையவில்லை. கிடுகிடுவென கரைவிட்டு இறங்கி அப்பா அமர்ந்திருக்கும் பின் இருக்கையின் கதவைத் திறந்து, அப்பாவை உலுக்கினான்.

“ம்…..ம்….ம்….”

“அப்பா, ஹோட்டலுக்கு வந்தாச்சு….”

‘அப்பா எப்போ தூங்கினாரு?’

கொஞ்ச நேரம் பாலுவுக்கு எதுவும் புரியவில்லை.

“போர்வை இருக்கா? ரொம்ப குளுருது!” என்று கார் இருக்கையில் கலைத் தூக்கிவைத்து, இரண்டு கையையும் தொடைக்கு இடுக்கில் வைத்துத் தற்காலிகமாக குளிர்காய ஆரம்பித்தார்.

“அப்பா…..ச்……இங்க பாருங்க…..ச்….அப்பா”

“ம்….ம்….ம்”

‘என்ன 9.30க்கே இப்படித் தூங்கறாரு!!??’

“அப்பா…” என்று அவர் தோளில் தன் வலது கையை அழுத்தி வேகமாக உலுக்கினான்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, விவேக்கைப் பார்த்தார். வாயின் ஓரம் வழிந்தோடும் எச்சிலை ‘உர்’ ரென்று உறிந்தார். இடது கையைக் கொண்டு இடுப்பை சொரிந்தார். எதிரே ஹோட்டலைப் பார்த்து விட்டு, மீண்டும் விவேக்கைப் பார்த்தார். விவேக்கிற்கு என்னமோ போல் இருந்தது. விவேக்கிடம் எதுவும் பேசாமல் மெதுவாக காரை விட்டு இறங்கி ஹோட்டலை நோக்கி நடந்தார். விவேக் அவர் செல்வதை நின்று பார்த்துவிட்டு, இரண்டு மூன்று நிமிடம் கழித்து காரை கிளப்பினான்.

முற்றும்.

Series Navigation

தி.சு.பா

தி.சு.பா