முள்பாதை 9

This entry is part [part not set] of 31 in the series 20091211_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்



email id tkgowri@gmail.com

குளியல் முடிந்த பிறகு நானும் ராஜேஸ்வரியும் கட்டில் மீது அமர்ந்து கொண்டு ஊர்கதைகளை பேசிக் கொண்டிருந்தோம். “தட்டு போட்டு விட்டேன். சாப்பிட வாங்க” என்று அத்தை குரல் கொடுத்ததும் எழுந்து உள்ளே போனேன்.
சமையலறையில் குழந்தைகள் எல்லோரும் வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். விருந்தாளி என்பதாலோ என்னவோ எனக்கு முதலிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வெள்ளிப்பூக்கள் பதித்த பலகையைப் பேட்டு ஸ்டீல் தட்டு வைத்திருந்தார்கள். பலகையின் மீது உட்காரப் போனவள் தட்டில் பரிமாறிய சாதத்தைப் பார்த்துவிட்டு “அம்மாடியோவ்! இவ்வளவு சாதமா?” என்றேன். இரண்டு ஆட்கள் சாப்பிடக் கூடிய அளவுக்கு சாதம் இருந்தது.
“நேற்று இரவு எப்போ சாப்பிட்டாயோ என்னவோ?” என்றாள் அத்தை.
“ஒரு வேளை சாப்பிடவில்லை என்றால் அதை ஈடு கட்டுவதற்கு அடுத்த வேளை சேர்த்து சாப்பிட என்னால் முடியாது அத்தை” என்று சொல்ல நினைத்தேன். ஆனால் பெரியவர்களுடன், அதிலும் அதிகம் பழக்கம் இல்லாதவர்களுடன் பரிகாசம் செய்வது போல் பேசக்கூடாது என்று அப்பா பலமுறை சொல்லியிருக்கிறார்.
“தேவைப்பட்டால் கூச்சப்படாமல் கேட்கிறேன். பாதியை எடுத்து விடுங்கள்” என்றேன். அத்தை பாதி சாதத்தை எடுத்துவிட்டாள்.
சமையல் அறையும், சாப்பிடும் இடமும் ஒன்றாக இருப்பதால் உணவு பாத்திரங்கள் எல்லாம் அங்கேயே இருந்தன. எனக்கு நினைவு தெரிந்த பிறகு நான் ஒரு நாளும் இப்படி தரையில் அமர்ந்து சாப்பிட்டதே இல்லை. சின்ன வயதிலேயே அம்மா எனக்கு உணவு மேஜையின் முன்னால் அமர்ந்துகொண்டு கீழே சிந்தாமல் சாப்பிடவதற்கு பயிற்சி தந்திருக்கிறாள்.
எரிந்து கொண்டிருக்கும் விறகு அடுப்பு. அதன் மீது பெரிய பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பார், அடுப்பிற்குப் பக்கத்தில் பெரிய வெங்கலப் பானையில் எங்கள் வீட்டில் நான்கு நாட்களுக்கு தாராளமாக வரும் அளவுக்கு சாதம், பெரிய தட்டில் பொறித்த அப்பளங்கள். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே சாப்பிடத் தொடங்கினேன். அத்தை உணவு பரிமாறிக்கொண்டே நடுநடுவில் எங்கள் வீட்டு விஷயங்களை கேட்டுக் கொண்டிருந்தாள்.
சூடான சாதம், உருக்கின நெய், பருப்புப்பொடி சேர்ந்தால் இவ்வளவு ருசியாக இருக்கும் என்று எனக்கு இதுநாள் வரையிலும் தெரியாது. பக்கத்தில் அம்மா இல்லாததால் விருப்பம் போல் சாப்பிடலாம் என்று நினைத்திருந்த எனக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. பழக்கம் இல்லாததால் அளவுக்கு மீறி சாப்பிட முடியவில்லை. ஆனால் மற்றவர்கள் மறுபடியும் சாதம் கேட்டு போட்டுக் கொண்டதைப் பார்த்தபோது எனக்கு தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. இவர்கள் மட்டும் பட்டணத்திற்கு வந்தால் ஒரு மாதத்திற்கு வரவேண்டிய மளிகைச் சாமான் ஒரு வாரத்தில் தீர்ந்துவிடுவது நிச்சயம். தயிர் சாதம் சாப்பிடாமல் வெறும் தயிரை கிண்ணத்தில் வைத்துக் கொண்டு ஸ்பூனால் நான் சாப்பிடுவது அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.
சாப்பாடு முடிந்த பிறகு ராஜேஸ்வரி பற்றுப் பத்திரங்களை எடுத்துப் போய் தேய்க்கத் தொடங்கினாள். நானும் பக்கத்தில் நின்றிருந்தேன். வாதாம் மரத்தடியில் பாத்திரங்களை தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தாள் ராஜேஸ்வரி. “நான் கழுவித் தரட்டுமா?” என்றேன். வேண்டாம் என்பது போல் தலையை அசைத்தாள். அமைதியான சுபாவம் கொண்டவளாக தென்பட்டாள். அவள் வேலை செய்யும் போது ஒரு விதமாக சுறுசுறுப்பு இருப்பதை கவனித்தேன். இப்படி குறைவாகப் பேசி நன்றாக வேலை செய்பவர்களைக் கண்டால் அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.
புதியவர்களை என்றாலே கூச்சப்பட்டுக் கொண்டு விலகிப் போய்விடும் நான் இவ்வளவு குறைவான நேரத்தில் இவர்களுடன் எப்படி கலந்து போய்விட்டேன்? நான் அவர்களுடன் கலந்து போய் விட்டேன் என்பதைவிட அவர்கள்தான் என்னை தங்களில் ஒருத்தியாக சேர்த்துக் கொண்டு விட்டார்கள் என்றால் சரியாக இருக்கும்.
நட்பு கலந்த ராஜேஸ்வரியின் பேச்சு, அன்பும் ஆதரவும் கலந்த அத்தையின் பார்வை, வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதை போல் என்னைப் பார்க்கும் குழந்தைகள்… இவையெல்லாம் சேர்ந்து என்னிடம் இருக்கும் தயக்கத்தை, கூச்ச சுபாவத்தை எனக்குத் தெரியாமலேயே விரட்டியடித்து விட்டன. என்றைக்குமே வராதவள் இன்று நம் வீட்டுக்கு வந்திருக்கிறாள் என்று இவர்கள் எந்த விதமான ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை. நான் அடிக்கடி லீவுக்கோ, பண்டிகைக்கோ இங்கே வந்து போய்க் கொண்டிருப்பவள் போல் சகஜமாக நடந்து கொண்டார்கள். படாடோபம் இல்லாத அவர்களுடைய சுபாவம், நடத்தையில் இருந்த எளிமை என்னைக் கவர்ந்து விட்டன. மனதில் இருக்கும் அன்பு கண்களில் பிரதிபலிக்குமே தவிர வார்த்தைகளில் வெளிப்படுத்த இவர்களுக்குத் தெரியாது.
ராஜேஸ்வரி எனக்கு வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள். சமையலறை வாசற்படியிலிருந்து கிணற்றடி வரையில் சிமெண்ட் தரை போடப் பட்டிருந்தது. பிரதான வாசல் கதவு ரொம்ப பெரியதாக இருந்தது. கொல்லைப் புறத்தில் ரோஜாச் செடிகளும், நந்தியாவட்டை செடிகளும் இருந்தன. வலது பக்கம் பெரிய பவழமல்லி மரம் இருந்தது. வாசல் வராண்டாவில் இரண்டு பெஞ்சுகள் போடப் பட்டிருந்தன. ஆண்கள் யாராவது வந்தால் அங்கேயே உட்கார்ந்து கொண்டு பேசிவிட்டுப் போவார்கள். பெண்களாக இருந்தால் நேராக உள்ளே வந்து அத்தையிடம் பேசுவார்கள். ராஜேஸ்வரிக்கு சிநேகிதிகளே இல்லையாம். எப்போதும் அத்தையின் பின்னாலேயே சுற்றிக் கொண்டு வீட்டு வேலைகள் அனைத்தையும் ஒண்டியாளாக செய்து முடிக்கும் ராஜோஸ்வரிக்கு சிநேகிதிகளுடன் பேசி பொழுதைப் போக்குவதற்கு நேரம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
முதல்நாள் இரவு முழுவதும் சரியாக தூங்காதது, இங்கே வந்த பிறகு பச்சைத் தண்ணீரில் குளித்தது, சுடச்சுட சாப்பிட்டது… எல்லாம் சேர்ந்து கண்களை சழற்றிக் கொண்டு வரத் தொடங்கியது.
ராஜேஸ்வரி என் நிலைமையைப் புரிந்து கொண்டவள் போல் “கொஞ்ச நேரம் தூங்குகிறாயா?” என்று கேட்டாள்.
“தூக்கம் வரவில்லை. ஆனால் சற்று நேரம் படுத்தால் தேவலை என்று தோன்கிறது” என்றேன். உண்மையைச் சொல்லப் போனால் உடல்நலம் சரியாக இல்லாவிட்டாலோ, இல்லை ரொம்ப களைப்பாக இருந்தாலோ தவிர பகல் தூக்கம் எனக்கு பழக்கமில்லை.
ராஜேஸ்வரி என்னை அழைத்துக் கொண்டு ஹாலை ஒட்டியிருந்த அறையின் கதவைத் திறந்து விட்டாள். “உள்ளே போய் படுத்துக்கொள். தூக்கம் தானே வரும். எந்த சத்தமும் கேட்காது” என்றாள்.
அந்த வீட்டில் அறை என்று ஒன்று இருப்பது அது ஒன்றுதான் போலும். சிறியதாக இருந்தாலும் காற்றும், வெளிச்சமும் தாராளமாக இருந்தன. ஜன்னல் வழியாக தொலைவில் ஆலய கோபுரம் தென்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு பக்கமாக கட்டிலும், அதன்மீது போர்வையும் விரிக்கப்பட்டிருந்தது.
“நீ படுத்துக்கொள். நான் அப்புறமாக வருகிறேன்.” ராஜேஸ்வரி போய் விட்டாள்.
கட்டில் மீது அமர்ந்துகொண்டே அறை முழுவதும் பார்வையிட்டேன். எதிரே இருந்த சுவரில் அத்தையின் இளமை காலத்தில் நடுத்தர வயது ஒருத்தருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ இருந்தது. அவர்தான் ராஜேஸ்வரியின் தந்தையாக இருக்க வேண்டும். கட்டிலை ஒட்டினாற்போல் இருந்த அலமாரியில் புத்தகங்கள வரிசையாக இருந்தன. அவற்றைப் பார்த்ததும் என்னுள் ஆர்வம் ஏற்பட்டது. இந்த உலகததில் பொம்மைகளுக்கு அடுத்தபடியாக நான் விரும்புவது புத்தகங்களைத்தான். ஒரு மனிதன் தேர்வு செய்யும் புத்தகங்களை பொறுத்து அவன் தனித்தன்மையைப் புரிந்து கொள்ள முடியும்.
இதுவரையில் நான் பார்த்தும் இராத, அப்பா என்னிடம் சொல்ல விட்டுப்போன ராஜேஸ்வரியின் அண்ணனைப் பற்றித் தெரிந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது.
எழுந்து போய் ஒவ்வொரு புத்தகமாக புரட்டிப் பார்த்தேன். மேல் வரிசையில் இருந்தவை எல்லாமே ஹோமியோபதிக்குச் சம்பந்தப்பட்ட புத்தகங்கள். கீழ் வரிசையில் தோட்டக்கலை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் இருந்தன. எந்தச் செடிக்கு எந்த விதமான நோய் வந்தால் என்ன மருந்துகள் பயன்படுத்த வேண்டுமோ தெரியப்படுத்தும் புத்தகங்கள். ஆக மொத்தம் எல்லாமே நோய்களைப் பற்றியும், அவற்றை நீக்கும் முறைகளைப் பற்றியும் சொல்லும் புத்தகங்கள். நெற்றியைச் சுளித்துக் கொண்டே வந்து கட்டில் மீது உட்கார்ந்து கொண்டேன்.
எனக்கு ஒரு விஷயம் புரிந்து விட்டது. ராஜேஸ்வரியின் அண்ணன் மக்களுக்கும், மரங்களுக்கும் வைத்தியம் பார்க்கும் ஆசாமி. பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு, பின் தலையில் குடுமியும், கழுத்தில் ருத்ராட்சமாலையும் அணிந்து கொண்டிருப்பானாய் இருக்கும். அதனால்தான் அப்பா அவனைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை. அறிமுகப்படுத்தும் அளவுக்கு தனித்தன்மை எதுவும் அவனிடம் இல்லையோ என்னவோ.
கட்டில் மீது படுத்துக் கொண்டதும் எனக்கு தூக்கம் வந்து விட்டது. அரைமணி நேரம் தூங்கினேனோ இல்லை ஒரு மணி நேரம் தூங்கியிருப்பேனோ என்னவோ. மறுபடியும் எனக்கு விழிப்பு வந்து கண்களைத் திறந்து பார்த்தபோது ராஜேஸ்வரி ஏதோ காரியமாக உள்ளே வந்து ஓசை படுத்தாமல் திரும்பிப் போய்க்கொண்டிருந்தாள்.
“ராஜீ!” பின்னாலிருந்து அழைத்தேன்.
ராஜேஸ்வரி திரும்பிப் பார்த்தாள். “விழித்துக் கொண்டு விட்டாயா? இரண்டு முறை வந்து பார்த்துவிட்டுப் போனேன். நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாய். கொஞ்சம் இரு. அண்ணாவுக்கு பாக்கைக் கொடுத்துவிட்டு வருகிறேன்” என்று போகப் போனாள்.
“அண்ணாவுக்கா? ஓஹோ… அந்த கிராமத்து வைத்தியரா?” என்றேன்.
“கிராமத்து வைத்தியரா?” ராஜேஸ்வரி வியப்புடன் பார்த்தாள்.
“உங்கள அண்ணன் மனிதர்களுக்கும், மரங்களுக்கும் வைத்தியம் பார்ப்பார் இல்லையா?”
“ஆமாம். உனக்கு எப்படி தெரியும்?” மேலும் ஆச்சரியமடைந்தவளாகக் கேட்டாள்.
“இதோ … இவற்றைப் பார்த்தாலே தெரிகிறது” என்றேன் புத்தக அலமாரியைப் பார்த்துக் கொண்டே.
ராஜேஸ்வரி சிரித்துவிட்டு வெளியேறினாள்.
“சீக்கிரமாக வா. உன்னிடம் ஒரு வேடிக்கையான விஷயம் சொல்லணும்” என்றேன்.
“ஒரே நிமிடத்தில் வந்து விடுகிறேன்.” ராஜேஸ்வரி போய் விட்டாள்.
குழந்தைகள் வெளியே போய் விட்டார்கள் போலும். வீடு முழுவதும் நிசப்தமாக இருந்தது. தொலைவில் சமையல் அறையிலிருந்து பேச்சு குரல் கேட்டது.
“அம்மா! உன் மருமாளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.” ஆண் குரல் கேட்டது.
“அவளுக்கு உன்னை எப்படி தெரியும்? முன்னே பின்னே பார்த்தது இல்லையே?” அத்தை சொல்லிக் கொண்டிருந்தாள்.
“தெரியவில்லை என்றால் போகட்டும். குறைந்த பட்சம் நீங்க யார் என்றாவது கேட்டிருக்கலாம் இல்லையா? எப்படி இருப்பாளோ என்று நினைத்தேன். ஆனால் இந்த மீனாட்சிக்கு மாமாவின் குணத்தில் ஒன்றுகூட இருப்பதாகத் தெரியவில்லை. கிருஷ்ணவேணியம்மாளை அப்படியே உரித்து வைத்திருப்பாள் போலும்.”
என்னது? சட்டென்று எழுந்து உட்கார்ந்துகொண்டேன். இத்தனை வருட வாழ்க்கையில் முதல் முறையாக, அதிலும் முன்னே பின்னே தெரியாத அன்னியன் வாயிலிருந்து நான் அப்படியே அம்மாவைக் கொண்டிருக்கிறேன் என்ற வார்த்தையைக் கேட்க நேர்ந்தது. யாரந்த தைரியசாலி? ஒரு தடவை பார்த்து விடுவோம் என்று எழுந்து வந்தேன். வரும்போது மறுபடியும் அந்தக் குரல் கேட்டது.
“அம்மா! நீயும் குழந்தைகளும் பிடிவாதம் பிடித்ததால் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டேன். ஆனால் அந்தப் பெண் நம் வீட்டுக்கு வருவதில் எனக்குக் கொஞ்சம்கூட விருப்பம் இல்லை. ஓரிரண்டு நாட்களில் கிளம்புகிறேன் என்று சொன்னால் இருந்துதான் ஆகணும் என்று வற்புறுத்தாதே.”
என் கன்னங்களில் சூடாக ரத்தம் பரவியது. நடையின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்குள் சமையலறையின் வாசலுக்கு வந்து விட்டேன்.
நான் அப்படியே அம்மாவை உரித்து வைத்திருக்கிறேன் என்று சொன்ன அந்த தைரியசாலி, என்னை இங்கிருந்து சீக்கிரமாக அனுப்பி வைக்கச் சொல்லி அத்தையை எச்சரித்துக் கொண்டிருந்த அந்த வீராதி வீரன் அப்பொழுதுதான் சாப்பாடு முடிந்தது போல் தோளில் கிடந்த டவலில் கையைத் துடைத்துக் கொண்டே பலகையை விட்டு எழுந்து கொண்டிருந்தான்.
ராஜேஸ்வரி பாக்கு டப்பாவைக் கொடுத்துவிட்டு அவன் சாப்பிட்ட தட்டை எடுத்துக் கொண்டிருந்தாள். அத்தையின் சாப்பாடு இன்னும் முடியவில்லை. மோர் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
நான் சமையலறை வாசலில் வந்து நின்று கொண்டதும், இந்தப் பக்கம் வரப் போனவன் அப்படியே நின்றுவிட்டான். ஒரு நிமிடம் இருவரின் பார்வையும் சந்தித்துக் கொண்டன. அவன் இதழ்கள் முறுவலிக்க முயன்று பாதியிலேயே நின்றுவிட்டன. நான் திகைத்துப் போனேன். அவன் வேறு யாரோ இல்லை. வில்லன் கிருஷ்ணன்தான். எனக்கு வாயிலிருந்து வார்த்தையே வரவில்லை. சட்டென்று திரும்பி அறைக்குள் வந்துவிட்டேன்.
பத்து நிமிடங்கள் கழித்து ராஜேஸ்வரி வந்தாள். நான் சட்டென்று அவள் கையைப் பற்றிக்கொண்டு “உங்க அண்ணன் இவன்தானா? வில்லன் கிருஷ்ணன்தான் உன்னுடைய அண்ணனா?” என்று கேட்டேன்.
“எங்க அண்ணனேதான். ஆனால் வில்லன் கிருஷ்ணனாவது?” என்றாள் புரியாதவள் போல்.
“இப்படி வா. நடந்ததைச் சொல்கிறேன்.” ராஜேஸ்வரியின் கையைப் பிடித்து கட்டில் மீது உட்கார வைத்து நடந்ததையெல்லாம் சுருக்கமாக, கதை சொல்வது போல் சொன்னேன்.
ராஜேஸ்வரி புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கத் தொடங்கினாள். நானும் அவளுடன் சேர்ந்துகொண்டேன்.
” தான் யாரென்று எனக்கு எப்படித் தெரியும்? கிருஷ்ணன் என்று ஒரு ஆசாமி இந்த வீட்டில் இருப்பது எனக்குத் தெரிந்தால்தானே? எனக்காக வந்தவன் தான் இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் என்னவாம்? கௌரவம் குறைந்து விடுமா என்ன?” என்றேன்.
“அண்ணன் ஒருநாளும் அப்படிச் செய்யமாட்டானே? சும்மா உன்னை அழ வைப்பதற்காக அப்படித் தெரியாததுபோல் இருந்து விட்டானோ என்னவோ?” என்றாள் ராஜேஸ்வரி.
“சும்மா இருந்தவன் அப்படியே இருக்காமல் அத்தையிடம் புகார் செய்வானேன்? மேலும் என்னை இங்கிருந்து சீக்கிரமாக அனுப்பச் சொல்லி உங்க அம்மாவுக்கு அறிவுரை வழங்குவானேன்?” சிரிப்பதை நிறுத்திவிட்டு சீரியஸாக கேட்டேன்.
ராஜேஸ்வரி முகத்தில் மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது. பதில் சொல்ல முடியாதவள்போல் ஒரு நிமிடம் இயலாமையுடன் பார்த்தாள்.
மேலும் நானே சொன்னேன். “பரவாயில்லை. நான் ஒன்றும் தவறாக நினைக்கவில்லை. இது எங்க அத்தையின் வீடு. என் விருப்பம்போல் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்குவேன். இரு என்று சொல்வதற்கும், போ என்று விரட்டுவதற்கும் அவன் யாரு நடுவில்?” கடைசி வரிகளை வேண்டுமென்றே சத்தமாக சொன்னேன்.
ராஜேஸ்ரி பயந்துகொண்டே வாசல் பக்கம் பார்த்தாள்.
“நான் வந்தது வில்லன் கிருஷ்ணன் வீட்டுக்கு இல்லை என்றும், எங்க அப்பாவின் தங்கையின் வீட்டுக்கு … அதாவது என்னுடைய அத்தையின் வீட்டுக்கு என்றும் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்.” குரலை மேலும் உயர்த்தி§ன்.
ராஜேஸ்வரி சிவந்த முகத்துடன் என் வாயைப் பொத்திவிட்டு “அண்ணீ! அண்ணன் தமாஷ¤க்காக அப்படிச் சொல்லியிருப்பான். நீ எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதே” என்றாள்.
“உண்மையாகவே சொல்லியிருந்தாலும் நான் லட்சியப்படுத்தப் போவதில்லை. சரிதானே” என்றேன் அலட்சிய தோரணையில். ராஜேஸ்வரியின் முகத்தில் வேதனையைப் பார்க்கும்போது எனக்கு இரக்கமாக இருந்தது. “சும்மாதான் சொன்னேன். நீ கவலைப் படாதே.” ஆறுதல் சொன்னேன்.
ராஜேஸ்வரியின் முகம் பிரசன்னமாயிற்று.
அவளைச் சமாதானப்படுத்துவதற்காக அப்படிச் சொன்னேனே தவிர என்னால் அந்த வார்த்தைகளை மறக்கத்தான் முடியுமா? கிருஷ்ணன் உண்மையிலேயே வில்லன் பேர்வழிதான். இல்லாவிட்டால் நான் அப்படியே அம்மாவைக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லுவானா? என்னைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும்? தான் யாரென்று சொல்லாமல், உரிமை எடுத்துக் கொண்டு என்னை திண்டாட வைத்து வேடிக்கை பார்ப்பதாவது? “மிஸ்டர் கிருஷ்ணன்! தகுந்த பாடம் கற்பிக்காமல் உன்னை விடப் போவதில்லை.” மனதிலேயே கறுவிக்கொண்டேன்.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்