அறிவியல் புனைகதை-9: நித்யகன்னி ரூபவாஹினி

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


தோற்றுவாய்:

நீலக்கரைசலாகத் தளும்பிக்கொண்டிருந்த கடலுக்குக் கிழக்கில், வெண்மேகத்தை இழுத்துப்போர்த்தியபடி விட்டத்தைப் பார்த்துக்கொண்டு கால்நீட்டிப் படுத்திருப்பதுபோல தொடர்ச்சியாய் ஒருமலை, தலைமாட்டிலொன்று கால்மாட்டிலொன்றாய் கால்ஷீட்டிற்காய்க் காத்திருக்கும் தொ¡ப்பைபோட்ட தயாரிப்பாளர்களைப்போன்று குட்டிமலைகள், கரைத்ததுபோக மிச்சமிருந்த தூள் உப்பைக் கொட்டி நிரவியதுபோல கடற்கரை மணல்வெளி. மேற்கில் பொங்குவதும் பின் அடங்கிப்போவதுமாக இருக்கிற நுரைபூசிய அலைகள். வெது வெதுப்பான தளிர்வெயில். ஈரம்படிந்த காற்று. இவனுடைய பாதி மார்பில் அவள்- தலைவைத்து படுத்திருந்தாள். உலராத தலைமயிர் விலாவிலும் அதற்கும் கீழாகவும் விழுந்து இவனை அலைக்கழித்தது. சுவிம்சூட் மிச்சம் வைத்திருந்த இடங்களில், ஹேர் ரிமூவருக்கு தப்பிய பூனை மயிர்களில் நீர்த் திமிலைகள், முன் தலையில் ஹேர்-பேண்ட்போல ரேபான். மும்பை பெண்களுக்கேயுரிய அலட்சிய முகம், புருவம் திருத்திய இமைகள். ஒளிக்கு அஞ்சுவதுபோல பாவலா செய்யும் மூடிய கண்கள். உருகிய வெள்ளியென படர்ந்திருந்த சூரிய ஒளியில் அவள் தேகம் பழுத்த மாம்பழத்தை நினைவுபடுத்துகிறது. சில நேரங்களில் பற்களைத் தவறிப் போய் உபயோகித்துவிடுகிறான், சட்டென்று அவள் கண்களில் நீர்கோர்த்துவிடுகிறது. அவள் ஊடுவதை இரக்கமின்றி ரசித்திருக்கிறான். சுந்தரத்துக்கு அவளுடைய ஊடலுக்கான ஆயுள் எத்தனை நொடிகளுக்கானதென்று தெரியும். பாலை நிலத்தில் மழைத் தூறல் விழுந்து கலக்கிற நேரந்தான். பிறகு மீண்டும் நெருங்கிவந்து கட்டிக்கொள்கிறாள். ஒன்றிரண்டு கடற்காகங்கள்கூடப் பறக்கின்றன. கரையில் தென்னைகளுக்கிடையில் தாழ்வாகக் கட்டப்படிருந்த கயிற்றுவலை தூளியில் முழங்கையைத் தலைக்குக்கொடுத்து பிக்னி உடையிலிருக்கும் நீக்ரோ பெண்கூட அசைவின்றிக் கிடக்கிறாள். மனிதர் அரவமற்ற தீவு. பிரபல தென்னிந்திய தொழிலதிபரும் இவனது நண்பருமான அல்லாடி செல்லையாவுக்குச் சொந்தமான ஹாரிஸன் யாட் என்ற சொகுசுப்படகில் தலைவனும் தலைவியும்.

தலைவன்:

சுந்தரம் தமிழ்த்திரையுலகத்திற்கு ஆந்திரதேசத்தின் கொடை. சுந்தரத்தின் நைனா மயிர் ஜகன்னாத ரெட்டி தெலுங்கு தேசத்தில் கோதாவரிவரை பிரசித்தம். திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்களின் தலைமுடி காணிக்கையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து நைஜீரியா, கமரூன் எத்தியோப்பியாவென்று தலையில் மயிர்குறைந்த மனிதர்களைத் தேடி ஏற்றுமதி செய்து நிறைய சம்பாதித்தார். நன்றிக்கடனாக ஏடுகொண்டலுவின் உண்டியலுக்கென்று ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹாத்யம், மா இண்ட்டி மகாலட்சுமி, சீதாராம கல்யாணம். மிச்சமிருந்த பணத்திற்கு செலவு வேண்டியிருந்தது பிள்ளையை கோடம்பாக்கம் அனுப்பிவைத்தார். சுந்தரம் நேராய் நின்றால் ஐந்தடி பதினோறு அங்குலம். திராவிடர் நிறம். வயது 40. எடை 70கிலோ. கடைசியாக வெளிவந்த படங்களிரண்டும் பி.சி. ஏரியாக்களில் வசூலில்லை என்றார்கள். கட்சி ஆரம்பித்திருக்கலாம். வீட்டுவாசலில் கேட்டருகே இப்போதெல்லாம் பஸ்கள் நிற்பதில்லை, தலைவா! என்ற குரல்களில்லை. சிக்னலில் நிற்போகிறபோது கூட ஒரு சிலர் கண்டும் காணாததுபோல போகிறார்கள். ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். முலைப்பால் மறந்த சூட்டோடு சினிமாவுக்குள் நுழைந்த பையன்கள் •பீல்டில் நிறையபேர் இருக்கிறார்கள்.

தலைவி:

ரூபவாஹினி. நான்கு மாதங்களுக்கு முன்புவரை ரூபவாஹினி கருப்பா சிவப்பா என்று கூட தெரியாது. இயக்குனர் விசுவநாதனை அழைத்து ஒரு படம் பண்ணினால் மார்க்கெட் நிமிர்ந்துவிடுமென்றார்கள். ரேஸ் கிளப்பில் சந்தித்தார்கள். விஸ்கி குடித்த இடைவெளியில், கன்னடத்தில் வெள்ளிவிழா கொண்டாடிய படத்தை தமிழுக்கேத்தமாதிரி உல்ட்டா பண்ணி வச்சிருக்கேன், நான் தாண்டா தமிழனென்று ஒரு ஓப்பனிங் சாங் கொடுத்திடலாம். மியூசிக்குக்கு, லாஸ் ஏன்ஜெஸிலிருந்து கால்டுவெலை வரவழைக்கலாம். இப்பல்லாம் குத்துப்பாட்டுக்கு அவர்தான் சரி. ஒரு டூயட்டை நிலவிலே வச்சிடலாம். நடிகை சோனா வேண்டாம், மும்பையிலிருந்து ஒரு புதுமுகத்தை இறக்கிடலாம். தயாரிப்பாளர் சேத்திலால்கூட தமக்கு ஒரு படம் பண்ணவேணுமென்று சொல்லிக்கொண்டிருக்கிறார், அவருடைய தயாரிப்பிலேயே கொண்டுவந்திடலாம். அதற்கப்புறம் பாருங்க மறுபடியும் நீங்க ஒரு ரவுண்டுவர நான் உத்தரவாதமென்று சத்தியம் செய்தார். இரண்டுவாரம் கழித்து இயக்குனர் விசுவநாதன் அனுப்பினாரென்று வீடுதேடிவந்த உதவி இயக்குனன் ஒருவன், நான்கைந்து ஸ்டில்களை காட்டி இந்தப் பெண்தான் உங்களோட நடிக்கிறாங்க, பெயர் ரூபவாஹினி. நம்மபடந்தான் முதல்படம் என்றான்.

தகையணங்குறுத்தல்:

படத்தின் பூஜையன்று, ரூபவாஹினி பாவாடைதாவணியில், ரிப்பன் வைத்து பின்னிய சடைகளை மடித்துக்கட்டி, கன்னங்களில் ரூஜ் சிவக்க, உதடுகளை அவ்வப்போது மடித்து உதட்டுச்சாயத்தின் ஈரம் உலராமல், பெரியகண்களும் படபடக்கும் இமைகளுமாக வீசிய பார்வையில், ஏதோ காயகல்பம் கலந்திருக்கவேண்டும் உற்சாகம் பிறந்தது. திரும்பவும் பார்த்தான். ஒன்பதே காலுக்கு முதமைச்சரின் மனைவி வந்தார். ரூபவாஹினி மாலைபோட்டு, காலைத் தொட்டு வணங்க குனிந்தபோது, மேலே அம்சமாகத்தான் இருந்தாள். காத்திருந்த குருக்கள் தேங்காய் உடைத்து சூடம் கொளுத்தி பூஜையை முடிக்க, எடுத்த முதற்காட்சியில் “வாங்க மாமா, எங்க கிராமத்துக்கு நீங்க வந்த நேரம், தூறல் போடுது. இனிமே எங்களுக்கு எந்த குறையுமில்லே”, என்று தடுமாறாமல் வசனம் பேசினாள். கூட்டம் மொத்தமும் வியந்தது. கைத்தட்டினார்கள். அதற்கடுத்தவாரம் பிறந்த நாளென்று ஸ்டார் ஓட்டலில் வைத்த விருந்திற்கு அழைக்கப்பட்டவர்களில் இவனும் ஒருவன். கேமராமேன் கொஞ்சம் குடித்துவிட்டு ரூபவாஹினியை அங்கே இங்கேயென்று தொடப்போக, இவனுக்கென்னவந்ததென்று இருந்திருக்கலாம், கேமராமேனின் கன்னத்தில் அறைந்திருக்கிறான். ஒரு நாள் நள்ளிரவு “அம்மா இல்லை, ஓட்டலில் தனியாக இருக்கிறேன், கொஞ்சம் வரமுடியுமா?” என்று அழைத்திருந்தாள். சுந்தரும் போயிருந்தான்.

அலர் அறிவுறுத்தல்:

அந்தவாரம் அல்லியில் அழகு நடிகரும், நோட்டு நடிகையும் நட்சத்திர ஓட்டலில் உல்லாசமென்று கிசுகிசு எழுதினார்கள். அதற்கடுத்தமாதம் பேசும் பொ¡ம்மையில் ரூபவாஹினி மருத்துவமனையில் அனுமதி, உண்மையில் என்ன நடந்தது? என்று முனைவர் கா.வெ. திருக்காமு ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தார்.

சோனா அன்றிரவு போனில் பிடித்தாள்.

– ‘என்ன சுந்தரம், ரூபவாஹினி மருத்துவமனையில் அனுமதின்னு செய்தி வந்ததே.

– ‘உனக்குத்தான் நம்ம பத்திரிகைக்காரர்களைப் பற்றி தெரியுமே’ அது உண்மையில்லை.

– அதைத்தான் சொல்லவந்தேன். மற்றவங்க நம்பினாலும் நான் நம்பமாட்டேன். அதற்கு சான்ஸே இல்லைண்ணு எனக்கு நல்லாத் தெரியும்.

– சோனா போனை வை.

– ஆனா அடுத்த படத்துலே என்னை மறந்திடாத, என்றவள் போனை வைத்துவிட்டாள்.

சோனா ஒருவகையில் மிரட்டுகிறாள் என்பது புரிந்தது. தமிழ்நாடன்றி, நார்வே, இலண்டன், பாரீஸென்று கடந்த 30 ஆண்டுகளாக அவனுடைய ரசிகர்களிடத்திலும் ரசிகைகளிடத்திலும் ஏற்படுத்தியிருந்த ஒரு மாயபிம்பத்தை உடைக்கப்போகிறேன் என்கிறாள். இணைய தளங்களில் சூடாக விவாதங்கள் நடந்தன. நார்வேயிலிருந்து ஒரு ரசிகை, “என் இதய நாயகனுக்கென ஆரம்பித்து, இதுவரை ஐம்பது மின்னஞ்சலுக்குமேல் அனுப்பியிருப்பேன். உங்களையும் ரூபவாஹினியையும். இணைத்து செய்தி வந்திருக்கிறது. அது உண்மையல்ல வதந்தியென்று நீங்கள் உடனே மறுக்கவேண்டும். இல்லையெனில், நான் தற்கொலை செய்துகொள்வேன். உடனே பதில். இப்படிக்கு உங்கள் அன்பு பிலோமினா” என எழுதியிருந்தாள். நேற்று, மணிகண்டன் குருக்கள் சுவிஸ்ஸில் டாக்டராக இருக்கும் தம் மகளுடன் வந்தார். ஒருமுறை படப்பிடிப்பிற்கு வந்திருந்தபோது அப்பாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு, இவன் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளி ஆட்டோகிரா•ப் கேட்ட ஞாபகம். “ரூபாவாஹினி உங்களைவிட வயது மூத்தவள்”, என்றாள். இதைச் சொல்லவா இவ்வளவுதூரம் வந்தீங்க, சிரித்துக்கொண்டே அனுப்பிவைத்தான்.

முதன்முறையாக ரூபவாஹினி திருணத்தைப் பற்றி பேச்செடுத்தபோது, தமக்குள்ள பிரச்சினைகளை சொல்லிவிடலாமா என்றுகூட நினைத்தான். தைரியமில்லை. அவளுடைய பெரிய கண்களைப் பார்க்கிறபோது எல்லாம் மறந்துபோகிறது. அவளுடைய விருப்பப்படி திருப்பதியில் ரகசியமாக திருமணத்தை முடித்துக்கொண்டார்கள். பசிபிக் பெருங்கடலில் மிதக்கும் இந்தத் தீவிற்கு நேற்றுமாலைதான் வந்திருந்தார்கள். மார்பிலிருந்து சுந்தரம் மெல்ல அவளை தூக்கித் திருப்பினான்.

– எனக்குப் பசிக்கிறது காட்டேஜுக்குத் திரும்பலாமா? என்றான்.

– ம் என்றாள்.

படகை காட்டேஜ் இருந்த திசைக்காய் செலுத்தி, சிப்பந்தி உதவியுடன் இறங்கிக்கொண்டார்கள். வயிறு கபகபவென்று என்று எரிந்தது. டைனிங் ஹாலில் இன்றைய மெனுவென்று அச்சாகியிருந்த, எலுமிச்சை சாறிலும் தேங்காய்பாலிலுமாக ஊறிய முழு மீனையும், இனானோவையும் எடுத்துக்கொண்டு மேசைக்குத் திரும்பினார்கள். இனானோவை மாத்திரம் குடித்தவன், மீனை ஒதுக்கிவிட்டு இந்திய உணவு கிடைக்குமா என்றான். இல்லையென்று பதில் வந்தது. இருவரும் எழுந்துகொண்டார்கள். கொரிடார் பிடித்து மீண்டும் காட்டேஜுக்குள் நுழைந்தபோது தொலைபேசி ஒலித்தது, எல்.சி.டி பிரசிவித்த எண்கள் மறுமுனையில் தயாரிப்பாளர் சேத்திலால் என்று அறிவித்தன.

– சுந்தரம்ஜீ, என்ன சார் நம்மகிட்டே கூட சொல்லாமல் கல்யானம் பண்ணிகிட்டீங்க.

– மன்னிச்சுக்குங்க எப்படியோ தவறிட்டுது. இத்தனைக்கும் எனது உதவியாளர்கிட்டே உங்களுக்கு அவசியம் சொல்லவேண்டும் என்றிருந்தேன்.

– பார்சி பொண்ணுசார், உங்களுக்காகத் தேடிப்பிடிச்சு புக்பண்ணினேன். நாங்கூட தொட்டுப்பார்க்கலை. அவ வயசு தெரியுமா?

– சார் இப்போ அவ என் பொண்டாட்டி.

– எத்தனை நாளைக்கு?

– ப்ரொடுயூசர் சார் விஷயத்துக்கு வாங்க, எதுக்காக இப்ப போன்.

– வேற எதுக்குசார். இரண்டுபேருக்கும் டப்பிங் செஷன் இருக்குது முடிச்சு கொடுத்தீங்கன்னா, படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணிடலாம். அதுவரை உங்க திருமணச் செய்தி இப்போதைக்கு வெளியில் வரவேண்டாம். விஷயம் வெளியில் வந்தா டிஸ்ட்டி•ப்யூட்டர்கள் என்னைக் கடிச்சிக் குதறிடுவாங்க.

குறிப்பு அறிவுறுத்தல்:’

நான் சென்ஸ்’ என்று தொலைபேசியைத் தூக்கி எறிந்தான். கட்டிலில் தொப்பென்று விழுந்தவனை, பிரெஞ்சு பர்ப்யூமும் ரூபவாஹினியுமாக அணைத்துக்கொண்டார்கள். மடமடவென்று அவனது ஆடைகளை அகற்றினாள். காதுமடல்கள், புறக்கழுத்து, கன்னமென்று வலம்வந்து கடைசியில் அவன் வாயில் உதடுகளைப் பொருத்தியபோது, ஒதுக்கினான்.

– இல்லை ரூபா எனக்கு மூடில்லை.

– சுந்தர் இங்கே நமக்கு எந்த தொந்தரவுமில்லை. “முதலில் பாலை நீங்கள் குடியுங்கள்” என்ற வசனமில்லை. நம்மைச் சுற்றி லைட்பாய்கள் இல்லை, •போக்கஸ் லைட்டுகள் இல்லை, ட்ராலி இல்லை, காமிரா இல்லை, இயக்குனரில்லை, உதவி இயக்குனர்களில்லை, மேக்கப் உதவியாளர்கள் இல்லை, •பிளாஸ்கும் கையுமாக சுற்றிவருகிற அம்மாகூட இல்லை.

– உண்மையைச் சொல்லணுமென்றால், எனக்கு அதுதான் பிரச்சினை ரூபா. ஒரு எல்லைக்குமேலே நான் போனதில்லை ஏன் தெரியுமா?

– தெரியும் சோனா சொன்னா. உனக்கு ஏதோ காம்ப்ளக்ஸ் இருக்குது, அந்த விஷயத்துலே ரொம்பவே வீக்குன்னு சொன்னா. நல்ல சைக்கியாட்றிஸ்ட்ட பார்த்தா பிரச்சினை முடிந்தது. சித்தே முன்னே படகுலே ரி•பிளெக்டரும், காமெராவும் வச்சிகிட்டா காதல் பண்ண.

– அப்புறம் ப்ரொட்யூசர் சேத்திலால் போன்பண்ணினான். உனக்கும் எனக்குமான வயசு இடைவெளியைக் குத்திக் காட்டறான். பத்திரிகைகள் எழுதினப்ப சீரியஸா எடுத்துக்கலை.

– நீ நினைக்கிற அந்த இரண்டொரு வயதுக்கு கூடுதல்னு சொன்னா அதிர்ச்சியாக இருக்குமா, உண்மை தெரியுமா?

– என்ன?

– ‘தொட்டால் பூ மலரும்’ கதாநாயகியை ஞாபகமிருக்கா?

– 90ல் வெளிவந்தது, சந்திரசேகரன் சார் நடிச்சப்படம். திருப்பதியிலே பார்த்திருக்கேன். அப்போ எனக்குப் பத்துவயது.

– அந்தப்படத்திலே கதாநாயகியா வந்த சங்கரிதான் இன்றைக்கு ரூபவாஹினி.

– அய்யய்யோ

– சென்னைக்கு இப்பல்லாம் சுவிஸ் டாக்டர் ஒருத்தர் வாரத்திற்கு ஒரு முறை வரார். நீங்க கூட இருபது வயசு பையனா திரும்பலாம். இரண்டு கட்ட சிகிச்சை. உயிரணுக்கள் சேதாரத்தை தவிர்ப்பதற்கு நம்ம உடம்பிலே நடக்கிற Oxidationஐ மட்டுப்படுத்தணும். A,C,E போன்ற உயிர்ச்சத்துள்ள உணவுப்பொருட்களை நாம நிறைய சாப்பிடணுமென்கிறார். அடுத்து நம்ம உடலிருந்து Stem Cell பிரித்தெடுத்து பாதுகாத்து, இன்சுலின் சுரக்கும் பக்குவத்தை அடைஞ்சதும் பாதிக்கபட்ட சேதாரமடைஞ்ச செல்கள் இடத்துலே இன்ஜெக்ஷன் மூலம், புதிய செல்களை செலுத்தறார். பாதிக்கபட்ட ஹார்மோன்களையும் மாத்தறார். மூன்று மாதத்திற்கொருமுறை தவறாமல் அவர் கிளினிக்குக்கு போயுட்டுவரணும் என்பதைத் தவிர என்னிடத்திலே வேற குறைகளில்லை. உயிரணுக்களை புத்தம் புதுசா, ஆரோக்கியம் கெடாம சுறுசுறுப்பா இயங்கவைத்தா நூறுவயதிலும் நீங்ககூட அலுக்காமல் காதல் பண்ணலாம், ரேஷன்கடைகளில் தகராறுபண்ணலாம், சண்டைபோடலாம்.

ஊடல் உவகை:

– உண்மையில் உனக்கு என்னதான் வயசு.

– வேண்டாம், அது ரகசியம். எல்லாத்தையும் இளமையா வச்சிருக்கேன். நித்ய கன்னியென்று சந்திரசேகரன் சார் ஒரு முறை வர்ணிச்சதா ஞாபகம். இப்பவும் அப்படித்தான் இருக்கேன். போதாதா?

——————-

nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா