ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை

This entry is part [part not set] of 44 in the series 20090813_Issue

கோ.புண்ணியவான்


அன்றைக்கு நிஷாவுக்கு(அவள் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டபோது சகுந்தலா என்ற அவளின் இயற்பெயரை நிஷா என்று மாற்றியவர் இயக்குனர் குருதேவ்.சகுந்தலா என்ற பெயரை அவளே மறந்து போயிருந்தாள்.அவளின் உறவினரோ, பால்ய தோழிகளோ அவளைத் தெருவில் பார்த்து “ஏய் சகுந்தலா,” என்று எதேச்சையாக அழைக்கும் பட்சத்திலும் அவர் யாரையோ கூப்பிடுகிறார்கள் போலும் என்று தன் போக்கில் நடையை தொடர்ந்தவளாய் இருப்பாள்.சினிமாவுக்குள் நுழைந்துவிட்ட காலந்தொட்டு அவள் நிஷா)பார்வதி வேஷம்.வசனம் ஏதுமில்லை.ஒரு மணி நேரத்தில் சூட்டிங் முடிந்துவிடும்.ஐம்பது ரூபாய் தருவதாக துணை நடிகை ஏஜண்டு ஆசைக்காட்டி அழைத்து வந்துவிட்டான்.ஒரு மணி நேரம் என்பது ஒரு பேச்சுக்காகச் சொன்னது. இரண்டு மணி நேரமகலாம்.ஏன் அதிக பட்சம் மூன்று மணி நேரமாகலாம் என்று தான் அவள் கணித்திருந்தாள்.ஆனால் ஐந்து மணி நேரத்தைக்கடந்தும் படப்பிடிப்பு முடியவில்லை.வசனம் இல்லை சும்மா சிவனின் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கவேண்டியதுதான்.புதிதாய் அறிமுகமாகும் ஒரு சுவை பானத்திற்கான விளம்பரப்படம்தான் என்று ஆசைகாட்டி அழைத்து வந்துவிட்டான்.ஐம்பது ரூபாய் அவள் ஆசையைக்கிளப்பிவிட்டிருந்தது.ஆனால் ஐந்து மணி நேரத்துக்கு மேலான உழைப்புக்கு ஐம்பது ரூபாய் ஊதியம் என்பது சுரண்டல்தான்.என்ன செய்வது நிஷா வாய்ப்பைப் புறக்கணித்தால் இன்னொரு உஷாவோ, சைலாவோ பயன்படுத்திக்கொள்வர்.அந்த ஐம்பதும் கைக்கு இன்னும் வந்து சேரவில்லை.படப்பிடிப்பு முடிந்து கொஞ்சம் கூட்டிக்கொடு என்று கேட்டால் தப்பாய்ப்புரிந்துகொண்டு அதற்கு உடனே சம்மதம் கொடுத்துவிடுவான்.அதில் அவனுக்கான வருமானம் அதீதம்.நகத்தில் அழுக்குப்படாமல் பைக்குள் துட்டை நிரப்பும் லாவகம் தெரிந்தவன்.சூடு சொரணையா? அப்படின்னா?
நிஷாவுக்கு வலது தொடையில் வலி பிடுங்கியது.
கையில் குளிர்பானத்தோடு போலிஸ்காரர்கள் விரட்ட ஓடித் தப்பித்து வந்து பார்வதி தொடையில் வந்து விழவேண்டும்.விழுந்த கையோடு, “பார்வதியம்மா மடியிலயே எடங் கொடுத்திட்டாங்க,அம்மாவோட அனுக்கிரகத்தால இனி எவனும் என்ன நெருங்கமுடியாது” என்ற வசனம் பேசி காட்சியை முடிக்கவேண்டும். அவன் ஒடி வந்த வேகத்தில் அவள் தொடையில் விழுவது இது முதல் முறைதான்..அவளை உட்கார்த்திவைத்தபோது இதுதான் நடக்கப்போகிறது என்று அவள் எள்ளவும்கூட எதிர்பார்க்கவில்லை.முதல் முறை அவன் வந்து விழுந்தபோதே அவன் உடற்சுமையைத்தாங்கமுடியாமல் கதறிவிட்டாள்.விழுந்தவன் பிரபல வில்லன் நடிகன் தண்ணிமலை என்று அப்போதுதான் கவனித்தாள். நிஷாவை அவனில் மூன்றில் ஒரு பங்குதான். அஜானுபாகுவான உடல் வாகு. டைரெக்டர் கட் என்று கத்தினார்.இரண்டாவது முறை படம் பிடிப்பதற்கு முன்னால் இயக்குனர் அவளை எச்சரித்தார். “பொறுத்துக்க சரியா அமஞ்சிட்டா சீக்கிரம் முடிச்சிடலாம்”.வலையில் வந்து சிக்கியாயிற்று; தப்பிப்பது தம்பிரான் புண்ணியம்.”என்னால் முடியாது வேற ஆள பாத்துக்குங்க”, என்று எழுந்து போனால் அவர்களின் ஜன்ம சாபத்துக்கு ஆளாகக்கூடும்.”இவள யான்யா கூப்பிட்டு வந்த?”என்று சபிப்பார்கள். அதற்கப்புறம் இந்த இயக்குனர் எடுக்கும் எந்தப் படத்துக்கும் வாய்ப்பு வராது. ஏஜண்டுக்கு அது வேத வாக்கு.
பொறுத்துகொள்ளதான் வேண்டும்.ஐம்பது ரூபாய்.இரண்டு மூன்று நாட்களுக்கு வயிறு காயாது.
இரண்டாவது முறை டேக் சோல்லப்போவதற்கு முன்னாலேயே மனதை ஒருநிலைப்படுத்தி வலியைக்கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும். ஒரு நொடிப்பொழுது வேதனைதான்.சமாளித்துக்கொள்ளவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டாள்.அவளுக்கு மனம் சொல்வதை உடல் கேட்கும்.சினிமாத்துறையில் எத்தனை ஆண்டு அனுபவம்! கூட்டத்தில் ஒருத்தியாய், அம்மாவாய், பாட்டியாய், பரத்தையாய், படியில் உருண்டு விழுவதில் நாயகிக்கு டூப்பாய், (சிராய்ப்புக்களையும் வலியையும் தாங்கிக்கொண்டு) ஏன் அவர்களுக்குத் தொப்புளை, முத்தத்துக்குக்கன்னத்தைக்கூட இரவலாய் காட்டவேண்டியிருந்தது.
டைரெக்டர் டேக்சொல்வதற்கு அரைமணி நேரம் ஆகிவிட்டது. வெயிலில் உட்கார்ந்திருந்த சிவனுக்கு மேக்கப் கலைந்துவிட்டிருந்தது. டச்சப் செய்யவேண்டியிருந்தது. அடுத்து இவளின் முகத்திலும் மேலும் ஒப்பனை ரசாயனங்கள் பூசப்பட்டன. தன் முகத்தைக்கண்ணாடியில் பார்த்தபோது பார்வதியாக நடிப்பது நிஷாதான் என்று ரசிகர்கள் அடையாளம் காண்பதில் சிரமமிருக்காது.அவளுக்கு அதில் சற்று திருப்தி.டச்சப் முடித்துக்கொண்டு வரிசையில் எல்லாரையும் அமர வைத்தபோது இயக்குனர் கேட்டார் “எல்லாம் ரெடியாப்பா?
“ரெடி சார்”
“கெமரா மேன்”
“ரெடி சார்”
டைரெக்டர் எல்லாவற்றையும் உன்னிப்பாக நோட்டமிட்டார்.எல்லாம் சரியாய் இருந்தது.
“ ஒக். ரெடி டேக்”
“டேக் டு” கிலேப் “அக்ஷன்”
நிஷா தன்னை நிஷாவாக நினைக்காமல் பார்வதியாக அவதாரம் பூண்டாள்.அப்படி அவதரித்தால் வலி தெரியாது என்பது அவள் யூகம். அவள் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தாள்.பார்வதியாயிற்றே!
தண்ணிமலை பாராதூரியான உடம்போடு ஓடிவருகிறான்.போலிஸ் கூட்டம் அவனைத்துரத்திப்பிடிப்பதாக ஒரு பிம்மத்தை ஏற்படுத்தியவாறு,திரும்பிப்பார்த்தவாறு ஓடி வந்து பார்வதியின் தொடையில் திமுக்கென்று பாரங்கல்லாய் விழுகிறான்.பார்வதி கண்ணை மூடியவள் கட்டுப்படுத்திக்கொண்டு தியானத்திலேயே இருந்து வலியை சமாளித்துக்கொண்டாள்.
“கட்” கத்தினார் டைரெக்டர்,”என்னையா சொதப்பிட்டே! பார்வதியம்மா எடங்கொடுத்திட்டாங்க இனி எவனும் நெருங்கனா சீவிடுவேன், இல்லையா.அம்மாவோட அனுக்கிரகத்தால, இனி எவனும் என்ன நெருங்க முடியாதுய்யா!”
“சோரி சார் இன்னோரு டேக் போலாம்” கூட்டமாய் நடிக்கும்போது எங்காவது பிசகிவிடும்.மீண்டும் டேக் போகவேண்டியிருக்கும்.
பார்வதியின் வலது தொடையில் பயங்கர வலி அழுத்தியது. தண்ணிமலை ஓடிவந்த வேகத்தில் உட்காரும்போது அந்த திடீர் அழுத்தத்தில் தொடை நசுங்கி எலும்புவரை வலித்தது. எழுந்திருப்பது சிரமமென தோன்றியது.யாராவது கைகொடுத்து தூக்கி விடவேண்டும். இந்தக்காட்சியை ஏன் பார்வதியை மையமிட்டு எடுக்கிறார்கள். சிவன் உலகுக்கெல்லாம் தலைவனாயிற்றே. முழுமுதற் கடவுளாயிற்றே! சிவனுக்கு அடுத்துதானே சக்தி. அவரை மையப்புள்ளியாக வைத்து படம் பண்ணியிருக்கலாமே. மலைபோல் உடல்வாகு கொண்ட தண்ணிமலையைத் தாங்கிக்கொள்ளமுடிந்த அஜானுபாகுவான தேகமாயிற்றே. அவரை விட்டுவிட்டு என்னை ஏன் கொடுமைப்படுத்தவேண்டும்.
பெண்களைத்தானே முகாமயாகவைத்து விளம்பரங்கப்படங்கள் எடுக்கிறார்கள். தேனீர் விளம்பரத்திலிருந்து டொயாட்டா விளம்பரம் வரை எல்லாம் பெண்கள்மயம்தான். மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்குப் பெண்களின் முகமும் உடல்வாகும் விளம்பரங்களின் மூலதனம். அதனால்தான் பார்வதியைத்தேர்வு செய்திருக்கிறார்கள் போலும்.அம்மையப்பன் என்றுதானே சொல்கிறார்கள்.அதுதான் போலும்.
“சார் ரிரெக்கார்டிங்ல சரிபண்ணிக்கலாம் சார்” தண்ணிமலை சொன்னான்.அவனுக்கு வேறு ஏதோ ஒரு படத்துக்கு கால்சீட் இருக்கிறது போலும்.
“ரிரெக்காடிங்கில சரி பண்ணிக்கிறதுக்கு, இது சினிமா இல்ல. மக்கள் மறு தடவ பாக்க மாட்டாங்க. இது டிவி விளம்பரம். ஒரு நாளைக்கு அஞ்சாறு தடவ போகும். வாயசைப்புல மக்கள் பிடிச்சுடுவாங்க. நம்ம தப்பு பண்ணுனது நல்லா தெரியும். விளம்பரம் எடுபடாது. பொருள் விக்காது.விளம்பரத்த எவனும் வாங்கிப்போடமாட்டான். இன்னொரு டேக் போலாம்.”
பார்வதியின் வேதனையை யாரும் உணர்ந்த்ததாய்த்தெரியவில்லை. குறைந்தபட்சம் ஏதாவது தைலமாவது கொடுத்து தேய்க்கச்சொல்லியிருக்கலாம். யுனிட்டில் பெண் டெக்னிஷியன்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் சொல்லியாவது தேய்த்துவிடச்சொல்லியிருக்கலாம். அப்படியொருத்தி வலியில் துடிக்கிறாள் என்பதை யாரும் பொருட்படுத்தியதாய்தெரியவில்லை. இத்தனைக்கும் வேதனையில் துடிப்பது சாட் சாட் பார்வதியாக்கும்.
மூன்றாவது முறை டேக் சரியாகிவிடும்.தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். தண்ணிமலை எத்தனைபடங்களில் நடித்தவன்.இந்த முறை சரியாக வசனத்தை ஒப்பிவித்துவிடுவான். வசனத்துக்கு ஏற்ற முகபாவத்தைக்காட்டிவிடுவான்.அனுபவம் கைகொடுக்கும்.இது விளம்பரப்படம் வேறு. பார்வதியின், இல்லை இல்லை நிஷாவின் தொடையில்தான் தண்ணிமலை விழுகிறான்.எத்தனை முறை இந்த நிஷா தொலைக்காட்சி விளம்பரத்தில் வரப்போகிறாள். இன்னும் பிரபலம் ஆகப்போகிறாள். ஒரு நாளைக்கு ஐந்தாறு முறை என்றால், ஆறு மாதம் போகிறது என்று வைத்துக்கொள்வோம். சில நொடி விளம்பரமானாலும் ஆறு மாதத்துக்கு எத்தனை முறை! தான் மேலும் பிரபலமடையலாம்.
படப்பிடிப்பு முடிந்தவுடன் கையில் ஐம்பது ரூபாய். முழுதாய் கொடுப்பானா, இல்லை தனக்கான கமிசன் ஒன்றிரண்டை கழித்துக்கொள்வானா? கொடுத்துவிடுவான். ஒரு மணி நேரம் என்று அவன்தானே சொன்னான். நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறதே, பத்து இருபது கூட்டியும் கொடுக்கலாம்.
ஆம் மூன்றாவது முறை டேக் சரியாக வந்துவிடும்.
வெயில் உக்கிரமாயிருந்தது. ஒரு முறை டேக் எடுப்பதற்குள் ஒப்பனைகள் கலைந்து விடுகிறது.சிவா குடும்பம்.சிவன் பார்வதி,வினாயகன், முருகன்.பாதுகாவலர்கள்.பக்திக்கூட்டம், இத்தனை பேருக்கும் ஒப்பனை கலையக்கலைய மேல்பூச்சு வைத்துக்கொண்டே இருக்கவேண்டும். எல்லார் கையிலும் இருக்கவேண்டிய ப்ரோப்ஸ் வேறு மிஸ்ஸாகக்கூடாது.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு டேக் நிறைவேறாத பட்சத்தில், யுனிட் ரெடியாக குறைந்தது முக்கால் மணி நேரம் ஆகிவிடுகிறது.டச்சப், கேமரா, நடிகர்கள் இருக்கவேண்டிய இடம், ப்ரோப்ஸ், போதுமான வெளிச்சம் என எல்லாவற்றையும் சரி செய்த பின்னரே அடுத்த டேக்குக்குப் போகமுடியும்., எங்காவது சின்ன தவறு நேர்ந்துவிடும்போது அத்தனை ஏற்பாடுகளும் கலைந்து மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது.
டைரெக்டர் மூன்றாவது முறை டேக்குக்கு ஆயத்தமாக கட்டளை பிரப்பித்தார்.
“டேக் திரி” (கிலேப்.)”அக்ஷன்”

தண்ணிமலை சுவைபான புட்டியோடு ஓடிவருகிறான்.பதற்றத்தோடும், போலிஸில் பிடிபடாத லாவகத்தோடும், திரும்பிப்பார்த்துக்கொண்டே ஓடி வருகிறான்.பார்வதி ஏதும் தவறு நடந்துவிடக்கூடாது என்ற முழு பிரக்ஞையில் வலியைப்பொறுத்துக்கொள்ளும் வைரக்கியத்தில், மனதை ஒருநிலைப்படுத்தி முகபாவனையில் கவனம் செலுத்துகிறாள். இருந்தாலும், முன்னர் தண்ணிமலை வந்து விழுந்த இடம் அவள் தியானத்தையும் மீறி வலிக்கிறது.முழுவதுமாய் மனத்தை ஒருமுகப்படுத்தமுடியவில்லை.
தண்ணிமலையின் உருவம் அருகில் வந்துவிட்ட சாயல் விழுகிறது. மூடியிருக்கும் அவள் இமைகளுக்குள்ளும் அவன் நிழல் துரிதகதியில் படிகிறது. தண்ணிமலை வந்து விழுகிறான். வேதனையில் முகம் கோணிவிடுகிறது. பட்ட இடத்திலே படும்…………தொடை சப்பையானது போன்ற வேதனை.கண்களிலிருந்து கண்ணீர் தன்னிச்சையாய் சொட்டியது.
மீண்டும் கட்.
டைரெட்டர் துணைக் இயக்குனரை கூப்பிடுகிறார்.”என்னையா இது?
அவளுக்கிட்ட சூட்டிங் வெவரமெல்லாம் சொன்னியாயா?”
“இல்ல சார், சொன்னா ஒத்துக்லிட்டிருக்க மாட்டா. உண்மைய சொன்னா ஆள் கெடைக்க கஷ்டம்”.சன்னமான குரலில் காதருகே ஓதினார்.
“வருவாளுங்கய்யா, இவள வச்சுக்குட்டு லோல் படவேண்டிருக்கு. சாவ் கிராக்கி.”
“சார், அடுத்த டேக் சரியாயிடும். முடிச்சிடலாம் சார்.”
வலி எலும்புவரை பாய்கிறது. வேதனையில் கத்த முடியவில்லை. சுற்றி நிறைய பேர்
பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.நடிப்பு என்று வந்துவிட்டால், பல சமயங்களில் வேதனையை வெளியில் காட்டாமல் இருப்பதுவும்தான்.
மூன்று முறை நிஷாவுக்கு வரன் வந்தது. முதல் முறை ஐம்பதைத்தாண்டியவன் குடிகாரன்.நடிகையை மணந்துகொள்ளவேண்டும் என்ற தனது கனவை ஏந்திநின்றவன்.துணை நடிகைதானே என்ற சிறுமைதான் கிழவன் பெண்கேட்கக்காரணம். இவள்தான் நிராகரித்தாள். இரண்டாவது முறையும், மூன்றாவது முறையும் நடிகை வேண்டாம் என்று வரனின் பெற்றோர் நிராகரித்ததனர். அவள் எதிர்பார்த்ததுதான். நிஜ வாழ்க்கை என்று வந்துவிட்டால் நடிகை என்ற பிம்பம் சிம்மசொப்பனம் ஆகிவிடுகிறது. அவளுக்கு இன்னும் உள்மன ஆசை இருக்கிறது. எவனுக்காவது கழுத்தை நீட்டி வாழ்க்கைப்பட்டுவிட்டாள் இந்த இம்சையிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்குமென்று. காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. வயது இந்த ஆகஸ்டில் முப்பத்தாறு முடிகிறது. முப்பத்தாறுக்குள் முடியவில்லையெண்றால் கல்யாணக்கனவு முளைக்கும்போதெல்லாம் அதனை விரக்தியோடு விரட்டியடிக்கக்கற்றுக்கொள்ளவேண்டும்.
இடையில் ஒருவனை மனதாரக் காதலித்தாள். இவளை அனுபவித்துவிட்டு வேறொருத்தியை மணந்துகொண்டான்.அவளை விட்டுச்செல்லும்போது கேவலம் நீ ஒரு நடிகைதான் என்று அவன் பேசியதுதான் அவளின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத வசனம்.
“யோவ், சொல்லுயா இந்த டேக் சரியா அமைஞ்சிடனும். சின்ன சீன எவ்ளோ நேரம்யா எடுக்கிறது?”
“செஞ்சிரலாம் சார், முடிச்சிடலாம் சார்”

மதிய உணவு வேலை கடந்துவிட்டிருந்தது.உணவு பரிமாறப்படவில்லை. இரண்டு மூன்று மணி நேரத்தில் ஷாட் ரெடியாகிவிடுமென்றுதான் உணவுக்குச்சொல்லவில்லை என்று அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு பரவிக்கொண்டிருந்தது.
டைரக்டர் யுனிட்டை ஷாட்டுக்குத் தயாராகும்படி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். எல்லாருக்குமே கலைப்பு. தகிக்கும் வெயில். இருந்தாலும் புதிய தெம்போடு தயாராகிவிட்டனர்.
நிஷாவுக்கு தொடையின் வலி உக்கிரமாகிக்கொண்டிருந்தது.இந்த ஷாட் கண்டிப்பாய் கோணலாகிவிடக்கூடாது அவள்(பார்வதி) வேண்டிக்கொண்டாள்.
முடிந்ததும் ஐம்பது ரூபாய் கைக்கு வந்துவிடும்.
டைரெக்டர், ஒலிபெருக்கியை எடுத்து யுனிட்டை உஷார் படுத்தினார்.
“டேக் போர்” (கிலேப்)”அக்ஷன்”
சிவா குடும்பமும் ஏனைய பரிவாரங்களும் தயார் நிலையில்.பார்வதி எலும்புவரை பாய்ந்துவிட்ட வலியோடு,முகபாவனையில் கவனம் செலுத்தி தயாராகிவிட்டாள்.எந்த நேரத்திலும் தண்ணிமலை தொடையில் விழுந்துவிடக்கூடும். அதை நினைக்கும்போதுதான் அவளின் உடல் ஒரு முறை நடுங்கி நின்றது. நொடிப்பொழுது நடிப்பானாலும் நன்றாக அமையவேண்டுமென்பதில் தண்ணிமலைக்கும் ஆசை. இதில் துணை நடிகையின் துயரமாவது வெங்காயமாவது!
தண்ணிமலை வந்து விழுந்தான். வசனத்தைச் பிசகாமல் ஒப்புவித்தான். நல்ல ஏற்ற இறக்கத்தோடு முக்கிய வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்திருந்தான்.
இந்த முறை டைரெக்டர் கட் சொல்லவில்லை.
யுனிட் முழுதும் கைதட்டி பாராட்டியது.எல்லார் முகத்திலும் புன்னகை.பார்வதி நீங்கலாக!
விளம்பரம் ஒரு மாதத்தில் தொலைகாட்சியில் வந்துவிடும் என்று நிர்வாகி சொல்லியிருந்தார்.
நிஷா தொலைகாட்சியைத் தவறாமல் பார்க்கத்தொடங்கினாள்.தன் சக நடிக தோழிகளிடமும் பெருமையாய் சொல்லிவைத்திருந்தாள்.பார்த்தால் சொல்லுங்கள் என்றாள்.
தொடை வலி நீங்க டாக்டருக்கே நூறு ரூபாய்க்கு மேல் செலவாயிற்று.ஒரு வாரம் நடக்கவே முடியவில்லை.ஏஜண்ட் கொண்டு வந்த மற்ற சினிமா வாய்ப்பெல்லாம் பறிபோயிற்று.
ஒரு நாள் ஒரு சீரியலின் இடைவேளையில் விளம்பரம் வந்தது. இருபது விநாடிக்கும் குறைவான நேரம்தான். நிஷா அதிர்ச்சியுற்றாள்.தண்ணிமலை வந்து விழுந்து தன் வசனத்தை பேசும்போது ‘பார்வதி’யின் முகத்தை தன் பூதம்போன்ற உடம்பால் முற்றாய் மறைத்திருந்தான்.

Ko.punniavan@gmail.com

Series Navigation

கோ.புண்ணியவான்

கோ.புண்ணியவான்