விரியும் வலை

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

அதிரை தங்க செல்வராஜன்


அம்மாவை பிரிவது போல், மொழியை பிரிவதும் கஷ்டம்தான்.

தொன்னூறுகளின் இறுதியில், நவஜீவன் எக்ஸ்பிரஸில் அறிமுகமாகி
பரோடாவில் இறங்கியபோது தஞ்சவூரும், தமிழும்தான் என்னையும்
கல்யாணையும் நெருங்க வைத்தது.

களிமண்ணில் பதிந்திருந்த மாட்டு குளம்புகளில் மழை நீர்
தேங்கியிருந்தது. பைஜாமாவில் ஆண்களும், பாவாடை ஜாக்கெட்டில்
தலையை மட்டும் துப்பட்டாவால் மூடிய பெண்களும் தம்பாக்குவை
கையில் கசக்கியும், வாயில் அடக்கியும், துப்பிக்கொண்டும் நகர்ந்து
கொண்டிருந்தனர். மழையில் நனைந்த இட்டோலா கிராமத்தில் மொழி,
மக்கள், வேலை, சாப்பாடு எல்லாம் புதிதாய் இருந்தது.

மாஜீ இதர் தேகோனா,

மதராஸி கோ நீம் கிலோ ப்யார் சாஹியே.

மொத்த குடும்பமும் எட்டி பார்த்து கேலியாய் ஏதேதோ சொல்லிச்
சிரித்தது. கடையிலிருந்த பெண் வீட்டிற்குள் நகர, அம்மா,
திகாவோ, திகாவோ என கூறும்போது நான் வெங்காயம் உள்ள
இடத்தை காட்ட ஹரே இன்கோ ப்யாஜ் சாஹியே ஜி. இப்போதெல்லாம் என்னை கடையில் ப்யார் பாய் என கூப்பிடுவது சகஜமாகிவிட்டது.

நிஜானந் சொஸைட்டி, மேலிருந்து பார்த்தால் செஸ் போர்ட் போல்
ஸ்கொயர் ஸ்கொயராய் சிறிய சிறிய வீடுகள். ஒரு சிறிய ஹால்,
மிகச்சிறிய சமையலறை, வெளிவாசலில் அக, புற தூய்மையகம்.
பேச்சிலருக்கு வசதியான இதில் குடும்பங்கள் சந்தோசமாய் வாழ்வது
விழி விரிய வைத்தது.

சார் மதராஸியா, பெண் குரல்.

குஜராத்தில் தமிழ் குரல், ஆச்சர்யத்தில் நீங்க தமிழா என்றோம்.

இல்லே, கேரளா. பட்ஷ தமிழ் அறியும்.

வசந்தா சேச்சியும் பிந்துமோளும் அறிமுகமானதில் மனசு சந்தோஷ
ஓலமிட்டது.

காந்தி பிறந்த குஜராத்தில்தான் பெண்கள் பயமின்றி இரவு எந்நேரமும்
தனியாக வெளியில் சென்று வரமுடிகிறது, என அறிமுக உரையில்
ஜி எம் கூறியபோது நானும் கல்யாணும் சிரித்தோம்.

ஆனால், மறுநாள் இரவு ஆள் இல்லா இரயில் நிலையத்தில் பிந்துவும்
தோழிகளும் ஐஸ்க்ரீமுடன் அரட்டையிலிருந்தது, எங்களை சந்தேகம்
கலந்த ஆச்சர்யத்துக்குள் தள்ளியது.

மறுநாள் சேச்சியிடம் தயங்கி தயங்கி கேட்ட போது விழுந்து, விழுந்து
சிரித்தார்கள். இங்கே நம்ம ஊர் மாதிரி பயப்பட வேண்டியதில்லை.
எந்துன பேடிக்கினு, இவ்விட யாரும் கடிச்சு திங்கில்லே.

ஆம்பிளெ இல்லாத வீடு, அநாவசியமா அடிக்கடி போய் அவங்களுக்கு
கெட்ட பேர் உண்டாக்க வேண்டாமென கல்யாண் ஒதுங்க அவங்களே
தப்பா நெனைக்கலே, சொல்லலே அப்புறம் நம்ம எதுக்கு ஒதுங்கனுமென என்
நட்பு நெருக்கமானது.

அம்மா இல்லாத நிலையில் சித்தியிடமோ, அத்தையிடமோ ஒட்டிக்
கொள்ளும் குழந்தை போல, தமிழ் இல்லாத நிலையில் மலையாளத்துடன்
நெருங்க வைத்தது.

இரயிலில் ஒரு பெண், குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டே,
தம்பாக்குவை கசக்கி உதட்டை பிரித்து உள்ளே வைத்தாள். கண்
சொக்கினாள், இரயிலின் ஆட்டத்தில் பிள்ளையின் வாய் மார்பிலிருந்து
விலகியது. மார்பு தெரிய, பிள்ளை கத்த, அவள் கண் சொருகியிருந்தாள்.இதத்தான் பெண் சுதந்திரம்னு சொல்றாங்களோ என்னமோ. கருமம் கருமம்னு தலையில அடிச்சுகிட்டாலும் ஓரக்கண்ணுல இறங்கிற வரைக்கும் பாத்துகிட்டுதான் இருந்தோம்.

பரோடா சென்று வரும்போதெல்லாம் சின்ன வெங்காயம், நேந்திரம்பழம்,
பலாப்பழ சிப்ஸ¤டன் சேச்சி வீட்டிற்கு செல்ல, ஏந்தான் இப்படி
“மணியடிக்கிறீங்களோ” என்று கல்யாண் முனகியது இன்னும் ஞாபகம்
உள்ளது.

என்னாச்சு, ரெண்டு பேரும் பொழுதென்னைக்கும் நிஜானந்
சொஸைட்டிலதான் டியூட்டி பார்க்கிறீங்களாம் என்ற ஸீனியரின்
கேள்விக்கு வழிசலாய் சிரிக்க மட்டுமே முடிந்தது.

ஏன் இவர் மட்டும் ஒழுங்கா? என கல்யாண் கேட்டபோது எனக்கு
ஒன்றும் புரியவில்லை.

பனை ஓலையிலே மூத்திரம் பேயிர மாதிரி லொட லொடன்னு பேச
மட்டும்தான் எனக்கு தெரியுது.

கல்யாண் சொன்ன விசயம் எனக்கு கோபத்தை கொடுத்ததோட உள்ளுக்குள்ளே வெலவெலன்னும் ஆயிடுச்சு.

நெஜமா, நெஜமாங்கிற குழப்பத்தில சாப்பாடும், தூக்கமும் போச்சு.
இந்த சில மாதங்களில் சேச்சி அத்தினி நெருக்கம். எதுவும் பேசலாம்
கேட்கலாம்.

மறுநாள் மாலை அவசர அவசரமா சேச்சி வீட்டிற்கு போன போது, பிந்து
வீட்டில் இல்லை. எப்படி ஆரம்பிப்பது?

எந்தாதிது, கொறைய சமயமாயில்லோ, சம்ஸாரிக்காது…. ஆவி பறக்கும்
டீயுடன் சேச்சி வர.

நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே?

எந்தா பறையு

கருணாகரனைத் தெரியுமா சேச்சி.

சேச்சி வாசலுக்குச் சென்று யாருமில்லாததை உறுதி செய்து கொண்டு வாசல் கதவை ஒருக்களித்து வைத்து விட்டு வந்தார்.

ஆயாலு ஏதும் பறைஞ்சோ?

என் பதிலுக்கு காத்திருக்கவில்லை.

பத்து வருஷமுன்னே கருணா சேட்டன் இவ்விடே எத்தி.

பிந்துட அச்சன் வயசாலி, ஜோலி கழிஞ்சு வந்தா குடி.

சேச்சி தமிழ் ப்ளீஸ்..

பேசக்கூட ஆள் இல்லே. அடி, உதை, சந்தேகம்னு, இங்கிருந்து
தப்பிச்சா போதும்னு இருந்துச்சு.

என்ன பன்றது உடம்பு படுத்தின பாட்டுலே, புருஷங்கிறவன் நல்ல
ஆம்பிள்ளையா இருந்தா போதும்னு தோனுச்சு. அடிச்சாலும்
உதைச்சாலும் அந்த நேரத்திலே அந்தாளுக்கிட்டேதான் போய்
நிக்கனும்கறது என் தலையெழுத்து.

அதுவும் இல்லென்னப்பதான் புத்தி அலைய ஆரம்பிச்சுது.

அப்பதான் கருணாவும் இங்கே தோஸ்தா வந்தது, ஆனா
கொஞ்சநாள்ல, வாழ்ந்தா அது கூடத்தாங்கிற அளவுக்கு
நெருக்கமாயிடுச்சு.

ஓடிப்போய் எங்காவது வாழலாம்னு சொன்ன சொல்ல கேட்டு
இரயில்வேஸ்டேஷன்ல காத்திட்டிருந்ததுதான் மிச்சம். வரவேயில்லை.
எல்லா ஆம்பிளைகளும் இப்படித்தான்.

பிந்துவிற்கு புரியாத வயசு, வீட்டுக்கு வந்தப்போ, ஐயோ இவளை
விட்டுட்டு போ பார்த்தோமேன்னு அழுதேன். அழுதது அதுக்காக
மட்டுமான்னு தெரியலே.

சேச்சிக்கு என்ன வயசு? பெண்ணிடம் கேக்க கூடாத கேள்வி.

என்னாச்சு திடீர்னு வயச கேக்குற, குறைவுன்னா கல்யாணம் கட்டுமோ.

அம்மா தாயே ஆள வுடுங்கப்பா.

சேச்சியின் பார்வை புதிதாய் தெரிந்தது. பேச்சின் போக்கை மாற்றினால்
தேவலாம் போலிருந்தது.

பிந்துவோட அப்பா எப்படி…

பிந்துட அச்சன் விஸ்கில வெஷம் கலந்து குடிச்சுட்டு மரிச்சு.

எல்லாம் நாந்தான் கொன்னேன்னாங்க.

பிந்துகூட ஒரு தடவ கேட்டா.

என்னன்னு?

நீ அவளுக்கு மாமாவா, சித்தப்பாவான்னு?

*
ts23071965@yahoo.co.in

Series Navigation

அதிரை தங்க செல்வராஜன்

அதிரை தங்க செல்வராஜன்