தமிழ்மகன்
வானத்தில் இருந்து தேவதூதன் யாரும் காட்சி தரவில்லை. வழக்கமான விடியல்தான். எப்போதும்போல ஐந்து நிமிட தாமதம் அதைச் சரிகட்ட ஓட்டம். ஓடும்போது டிபன் பாக்ஸ் திறந்து கொண்டு சாப்பாடு கூடையில் கொட்டிக் கொண்டது. இதுவும்கூட வழக்கமான ஒன்றுதான். இது எல்லாமே முருகனுக்கான வழக்கம் பற்றியது. அவன் அலுவலகத்தில் கெடுபிடி அதிகம். ஒரு ஜெர்மன் நிறுவனத்துடன் முருகன் வேலை பார்க்கும் அலுவலகம் ஒப்பந்தத்தில் இருந்தது. அதற்காக அதனுடைய வேலை நேரம் முதற் கொண்டு எல்லாமே சராசரி இந்த அலுவல் நேரங்களுக்கு மாறுபட்டிருந்தது. காலை ஏழு இருபத்தெட்டுக்கு அவனுக்கான அலுவல் நேரம் தொடங்கும். நான்கு முப்பத்திரண்டுக்கு வெளியே அனுப்புவார்கள். ஒவ்வொரு விநாடியும் முக்கியம் என்று பணியாளர்களுக்குச் சுட்டிக் காட்டத்தான் இந்த ஏற்பாடு.
“உச்சி வெயில்ல எங்கடா கிளம்பிட்டே?’, “விளக்கு வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்’.. என நேரத்தைக் குத்து மதிப்பாகச் சொல்கிற குடும்பச் சுழலில் அவன் இந்த ஏழு இருபத்தெட்டு விஷயத்தை காலைல ஏழரை மணிக்கு ஆபீஸ் என்றுதான் சொல்ல முடிந்தது. அவர்களும் அதை எட்டு மணிக்குள் என்று புரிந்து வைத்துக் கொண்டு சாப்பாடு தயார் செய்வதையோ, முருகனை தயார் செய்வதையோ செய்து வந்தனர். வீட்டுக்கு நிலைமையை விளக்குவது சிரமம் என்று முருகனுக்குத் தெரியும். அதனால் ஆபிஸில் புரிந்து கொள்வார்கள் என்று அவனாக எதிர்பார்த்தான். அதாவது அவன் ஐந்து- பத்து நிமிடங்கள் தாமதமாக வருவது காலப் போக்கில் அவர்களுக்குக் குற்றமாகத் தெரியாமல் போய் பரிதாபத்துக்குரியவனாக எண்ணுவார்கள் என்று நினைத்தான். ஆனால் அவனைப் பொருட்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஒரு மின்னணு எந்திரத்திடம் இருந்தது. அவனுடைய கட்டைவிரல் ரேகையின் மூலம் அவனுடைய வருகைப் பதிவேற்றம் நிகழ்த்தப்பட்டது. விநாடி சுத்தமாக இருந்தது அந்தப் பதிவு. நான்கு தாமதங்களுக்கு ஒரு முறை அவனுக்கு ஒரு நாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்தது அது. இப்படியாக அவனுக்கு மாதத்துக்கு இரண்டு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டபோது அம்மட்டில் பிரச்சினைகள் ஓய்ந்தது என்று சந்தோஷம்தான்பட்டான். வீட்டில் சம்பளமே அவ்வளவுதான் என்று சொல்லிக் கொள்வதில் அவனுக்குப் பிரச்னை இருக்கவில்லை. வீட்டில் இருப்பவர்களைப் பொறுத்தவரை முருகனுக்கு அவ்வளவுதான் சம்பளம் தரமுடியும் என்று நம்பினார்கள். அலுவலகத்திலும்தான்.
அன்றும் முருகன் தன் இடது கட்டை விரலைப் பதித்தபோது இரண்டு நிமிடம் தாமதம்தான். நாளையில் இருந்து ஆறே கால் மணிக்கு வரும் பேருந்தைப் பிடித்தால்தான் சரி பட்டு வரும் என்பதையும் வழக்கம்போல நினைத்துக் கொண்டான்.
மூன்றாவது மாடியில் அவனுக்காக ஒதுக்கப்பட்ட டிபன் பாக்ஸ் ஸ்டேண்டில் சாப்பாட்டை ஒழுக ஒழுக வைத்துவிட்டு, சில்லென்று தண்ணீர் பிடித்துக் குடித்தான். அவனுக்கான பிரத்யேக ஆடையை எடுத்து அணிந்து கொண்டான். மஞ்சள் நிற பருத்தித் துணியில் எல்லார் மேசை, நாற்காலி, கணினிகளைத் துடைக்க வேண்டும். எட்டு மணிக்கு இவன் துடைத்து வைத்தவற்றை அழுக்காக்குபவர்கள் வருவார்கள். அதனால் மேஜையைத் துடைக்கும்போது அதற்கான நாற்காலியில் அமர்ந்து கொள்வது, அப்படியே கிர்ர் என ஒரு சுற்று சுற்றுவது எல்லாம் செய்வான். அறையில் கேமிரா பொருத்தியிருப்பதைச் சொன்ன பிறகு அப்படி செய்வதில்லை. கேமிரா எதிரில் வரும்போது சட்டென அடக்கமான- ஒழுக்கமான- பரிதாபமான முகத்தை எதேச்சையாக காட்டுவதுபோல காட்டுவான். யாரோ உயர் அதிகாரியின் பார்வையில் பட்டு தன் அடக்கத்துக்கும் பரிதாபகரமான தோற்றத்துக்கும் இரக்கம் சுரந்து அது சம்பள உயர்வாக மாறும் என்பது அவன் ஐந்தாண்டு கனவு. தன் விசுவாசம் கேட்பாரற்றுக் கிடப்பதாக அவனுக்கு வருத்தம் இருந்தது. மேஜையைத் துடைக்கும் போது அதிலிருந்த துண்டுக் காகிதங்களைத் தன் பிரத்யேக ஆடையில் பிரத்யேகமாகத் தைக்கப்பட்ட பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். பேப்பர்களைப் பச்சைக் கூடையிலும் பிளாஸ்டிக் உறைகளை மஞ்சள் கூடையிலும் போட வேண்டும்.
அடுத்து என்ன செய்வது என்று கிழக்கு பக்க ஜன்னலோரத்தில் நின்று யோசித்தான். அங்குதான் பெரிய மனிதர்கள் நடமாட்டம் இருக்காது. கொஞ்ச நேரம் நின்றாலும் தெரியாது. ஜன்னலை ஒட்டிய தெருவில் ஒரு பையன் இரண்டு கையையும் மேலே தூக்கியபடி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். கைகளை தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு ஓட்டுவதைவிட சைக்கிளின் கைப்பிடியைப் பிடித்து ஓட்டுவதுதான் சுலபமாக இருக்கும் என்று தோன்றியது. அவன் கஷ்டப்பட்டு அப்படி செய்வது யாருக்கும் பலனின்றி போவதோடு மற்றவர்களுக்கு உபத்திரவமாகவும் போய்விடும் போலவும் இருந்தது. அதாவது அவன் யார் மீதாவது இடித்துவிடக் கூடும். போன வாரத்தில் ஒருநாள் அந்தப் பையன் இதே போல வந்தான். அவனைத் திடுக்கிட வைத்து அனுப்பினான் முருகன். திடுக்கிட வைத்த பின்பு அந்தப் பையன் சைக்கிளை ஒழுங்காக ஓட்டிச் செல்ல ஆரமம்பித்தான். அந்தப் பையன் தெருமுனை வரை சென்று மீண்டும் திரும்பி வந்தான். முருகன் போன வாரம் போலவே சட்டென அவனைசலனப்படுத்த ஆசைப்பட்டான். பாக்கெட்டில் துழாவிய கையில் கிடைத்த பேப்பரைச் சுருட்டி பையனை நோக்கி எறிந்தான். அது பையன் தலைமீது விழுந்ததா என்று எட்டிப் பார்த்தான். பையன் காகிதம் வந்து விழுந்த திசையை திடுக்கிடலோடு பார்த்துவிட்டு வேகமாகச் சென்று மறைந்தான். முருகனுக்கு தன் பொருட்டு உலகில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் மகிழ்ச்சி பொங்கியது. அப்படி இருந்தவனை இப்படி ஆக்கிய சந்தோஷம். கீழே வந்து அந்தந்த அறைக்கான டேபிள் டாப் தண்ணீர் குடுவைகளைக் கொண்டு போய் வைக்கத் தொடங்கினான்.
நாள் வழக்கம் போல நகர்ந்து கொண்டிருந்தது.
பதினோரு மணி வாக்கில் அவனுடைய ஹவுஸ் கீப்பிங் துறை கண்காணிப்பாளர் அழைத்தார். இடுக்கான ஒரு அறை. வெளிச்சம் குறைவு. அங்கிருந்த பீரோவுக்கு சில ஃபைல்களும் ஏராளமான டாய்லட் கிளினிங் அமில பாட்டில்களும் வாசனை தரும் பொருள்களும் பாட்டில்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அறைமுழுதும் அவற்றின் கலவையான மணம் சூழ்ந்திருந்தது. பெரும்பாலும் அந்த அறையிலேயே இருப்பதால் அவர் மீதும் அந்த வாடை பரவியிருந்தது.
“எத்தனை மணிக்கு வந்தாய்?” என்றார்.
முருகன் தலையைச் சொறிந்தான். சரியான நேரத்துக்கு வரவில்லை என்பதை அப்படித் தெரியப்படுத்தினான். கண்காணிப்பாளர், கடுமையான முகத்தோடு இருந்தார்.
“வந்ததும் என்ன செய்தாய்?”
“எல்லா அறை மேஜை, நாற்காலியையும் துடைத்தேன்”
“அப்புறம்?”
“தண்ணீர் குடுவைகளை…”
“அதற்கப்புறம்?”
எந்த மேஜையாவது சுத்தமாக இல்லை என்று புகார் வந்திருக்கக் கூடுமோ? கணினி விசைப்பலகையின் கீழே எங்காவது தூசு தப்பித்திருந்திருக்கக் கூடும்.
“உங்கள் வீடு எங்கிருக்கிறது?”
சொன்னான். முழு முகவரியையும் எழுதிக் கொண்டார்.
“போன் நம்பர் இருக்கிறதா?”
“இல்லை. தம்பியிடம் இன்னொரு செல் போன் இருக்கிறது”
அந்த நம்பரை முகவரிக்குக் கீழே குறித்துக் கொண்டார்.
“எல்லாத்தையும் சுத்தமாகத்தான் துடைத்தேன்” முருகன் சொன்னதைக் கவனித்தில் கொள்ளாது, “”நீ வேலை எதுவும் செய்ய வேண்டாம். ஓய்வறையில் இரு” என்ற கண்காணிப்பாளரின் குரலில் அவனுடைய ஓய்வு முக்கியமானதாகத் தெரியவில்லை.
டாய்லட்டுகளுக்கு பெனாயில் உற்ற வேண்டிய நேரத்தில் எப்படி ஓய்வெடுப்பது என்று முருகனுக்கு பெருங்குழப்பமாக இருந்தது.
ஓய்வறை என்பது பணியாளர்கள் திடீர் சுகவீனம் அடைந்தால் சற்றே படுத்திருக்க சில மரப் பலகைகள் அடிக்கப்பட்ட கூடம். அங்கே கிடந்த பழைய தினத்தாளை மரப் பலகை மீது விரித்துப் படுத்தான். ஒரே ஓரு மின் விசிறி தலைக்கு மேல் இருப்பதை வெகு நேரம் கழித்தே கவனித்தான். அதைப் பயன்படுத்தலாம் என முடிவெடுத்த கணத்தில் ஒரு பணியாள் வந்து மனிதவள அதிகாரி அழைப்பதாகச் சொன்னான். அவர் இருப்பது இரண்டாவது மாடி. அந்த அறையைத்தான் தாம் சரியாகச் சுத்தம் செய்யவில்லை என்று தீர்மானித்து போனதும் மன்னிப்பு கேட்கத் தயாராக அவர் அறைக்குள் நுழைந்தான்.
“காலையில் வந்ததும் என்ன செய்தாய்?’
“இனிமே சுத்தமா துடைச்சுவிட்டிர்றேங்க”
“கேட்டதுக்கு பதில் சொல்”
கண்காணிப்பாளரிடம் சொன்ன தகவலை மறுபடி சொன்னான். கண்காணிப்பாளர் போலவே இவரும் திரும்பத் திரும்பக் கேட்டார். அவர்கள் தாம் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ அதைத் தெளிவுபடுத்தினால் அந்தச் சரியான வாக்கியத்தைச் சொல்லிவிட்டு வேறு வேலையைப் பார்க்கலாம் என்பதுதான் முருகனின் சிந்தனையாக இருந்தது.
“உன் தம்பிக்கு நீதான் செல் போன் வாங்கித் தந்தாயா?”
இந்தக் கேள்விக்கு “எப்படித் தெரியும் என்பதா?, ஆமாம் என்பதா’ என்பதில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டது முருகனுக்கு. அந்த முகக் குறிப்பு மனித வள அதிகாரிக்கும் புரிந்தது.
“சரி. என்ன விலை” அடுத்தக் கேள்விக்குத் தாவினார்.
அதிகாரிகள் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது நம் கடமை என்று கருதுபவன்தான் முருகன். ஆனால் அதிகாரிகளுக்கு இப்படியெல்லாம் கேட்பதற்கு அதிகாரம் இருக்கிறதா என்று தத்தளித்தான். எதற்கு இதையெல்லாம் கேட்கிறீர்கள் என கேட்பதற்கு அவனுக்கு நா எழவில்லை. அதனால் அதிகாரி கோபமடைந்துவிடக்கூடும் என்பது அவன் யூகம்.
அந்த யூகத்தினூடே அதிகாரிக்குக் கட்டுப்படவில்லையாயின் அது நம் வேலையைப் பாதிக்குமா என்பதையும் யோசித்தபடியே விலையைச் சொன்னான்.
“உன் சம்பளத்துக்கு இந்த விலை கட்டுபடியாகுமா? வீட்டில் வேறு யார் சம்பாதிக்கிறார்கள்?”
“நானும் இந்த மாதத்திலிருந்து தம்பியும்”
“அப்படியானால் போன மாதம் வரை நீ மட்டும்தான்” }இப்படித் தெளிவாகக் கேட்பதின் அர்த்தம் புரிந்து கொள்ள முடியவில்லை. நாமும் அதைத்தானே சொன்னோம், நாம் சொன்னதை அவர்கள் கண்டுபிடித்ததுமாதிரி ஏன் திரும்பச் சொல்கிறார்கள் என்பதும் முருகனுக்குப் புரியவில்லை.
“பைக் வாங்கியிருக்கிறாயா?”
“மாதத் தவணை… அம்மா வளையலை வைத்து… தம்பிதான்… ” அதிகாரி அனைத்தையும் குறித்துக் கொள்வதைப் பார்த்து ஓர் அசட்டு தைரியத்தில் “எதுக்கய்யா கேட்கிறீங்க?” என்றான் மெதுவாக. அது அதிகாரியின் காதில் விழாமல் இருந்தால் நல்லது போல இருந்தது அந்தக் குரலின் வலிமை. அதிகாரியும் அவன் கேட்டதைக் கண்டு கொள்ளாமல் இருந்தது நிம்மதியாக இருந்தது முருகனுக்கு. ஏசி அறை அதிக குளிர்ச்சியுடன் இருந்தது. அதிகாரியிடம் அதிகப் பிரசிங்கித்தனமாகக் கேட்டுவிட்டது சரியா, தவறா என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
இரண்டு மணிக்கு மேல் பொது மேலாளரைப் பார்க்கும்படி கூறிவிட்டு வெளியே செல்லச் சொன்னார். பொதுமேலாளரைப் பார்க்கும்வரை வேலை செய்யலாமா கூடாதா என்று யாரும் கட்டளையிடவில்லை. என்ன நடக்கிறது, எல்லா பணியாளரையும் இப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை விசாரிப்பது வழக்கம் என்று பதில் சொல்வார்களா? நம் வேலையில் ஏதாவது குற்றம் கண்டார்களா? … அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் தம்மால் யோசிக்க முடியாது என்பது தெரிந்திருந்தாலும் நாம் நினைப்பதில் ஏதாவது ஒன்று சரியாக இருக்கும் போல தோன்றியது அவனுக்கு. சாப்பாட்டுக்கூடையில் கொட்டிய நிலையிலேயே இருந்த சாப்பாட்டைப் பக்குவமாக வெளியே எடுத்து சாப்பிட்டான். டிபன் பாக்ûஸக் கழுவி பைக்குள் திணித்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்தால், இன்னும் இரண்டு மணி ஆவதற்கு இரண்டு மணி நேரம் இருந்தது. இவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டிருக்க வேண்டாமோ?.. ஆனால் அதைத் தவிர்த்து வேறு என்ன செய்வது என்பது தெரியாமல்தான் பசியே எடுக்காத நிலையிலும் அவன் சாப்பிட்டான். காத்திருக்கும் நேரம் விரைவாகவும் கடிகார ஓட்டம் மெதுவாகவும் இருந்தது. ஜன்னல் வழியே தெருவைப் பார்த்தான். சாலை மரங்களின் இடைவெளியில் வெயில் இருந்தது. ஆள் நட மாட்டம் இல்லை. திரும்பி பணியாளர் ஓய்வறையில் சென்று அமர்ந்தான். பல மணி நேரங்களுக்குப் பிறகே இரண்டு மணி நேரம் கடந்தது.
இப்போது பொது மேலாளரின் கேள்வி நேரம்.
முதல் இரண்டு பேர் கேட்ட கடுகடுப்பும் இல்லாத தொனியில் ஆனால் கூர்மையான பார்வையோடு அவர் கேட்டார். அவருடைய கேள்வி மிக இயல்பான விசாரிப்பாக இருந்தது. அவருக்குத் தமிழும் தெரிகிறதே என்ற ஆச்ச்ர்யம் முருகனுக்கு. அவர் அறையில் இருந்து யாருடனாவது பேசியபடியே வெளியே வரும்போதும், யாருடனோ லிப்ட்டுக்காகக் காத்திருக்கும்போதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவதைப் பார்த்திருக்கிறான். சாயங்காலம் வீட்டுக்குப் போகும்போது மேனேஜருக்கு நன்றாகத் தமிழ் பேசத் தெரிவதை பழனியிடம் சொல்ல வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டான். பழனியைக் காலையிலிருந்தே பார்க்க முடியவில்லை. காலையில் இருந்தே யாரையும் பார்க்க முடியவில்லை. யாரையும் பார்க்காமல் இப்படி அரை நாளை எப்படிக் கழிக்க முடிந்தது? ஏன் யாரும் தம்மைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை?
“திடீர் என்று உங்களிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது?” மேலாளரின் கேள்வி வெளியே அலைந்து கொண்டிருந்த முருகனை இறுக்கிப் பிடித்தது.
இரண்டு நாளுக்கு முன் சம்பளம் வாங்கியதால்.. என்ற பதில் மேலாளருக்கு முருகனின் தெனாவட்டு போல இருந்திருக்க வேண்டும். ஏறிட்டுப் பார்த்துவிட்டு குனிந்தார்.
“ஏன் அடிக்கடி ஜன்னல் பக்கம் போனாய் என்ற காரணத்தை மட்டும் உண்மையாக ஒப்புக் கொண்டால் உன்னை விட்டுவிடுவோம்” என்றார்.
முருகன் உறைந்த நிலையில் இருந்தான். “விட்டுவிடுவதென்றால் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தமா?’
“எதற்கு?” என்ற வார்த்தை அவனுடைய பயம் காரணமாக உரக்க வெளியானது.
தன் மேஜை அறையில் இருந்து ஒரு கசங்கிய தாளை வெளியே எடுத்தார். அதை மேஜை மீது வைத்து நீவிவிட்டுக் கொண்டே முருகனின் முகத்தைப் பார்த்தார். அந்தக் கசங்கிய தாள் அவருடைய அறையின் மதிப்பைக் குறைத்து விட்டதாகத் தோன்றியது. மேலாளரின் கோட்டுக்கும் தங்க பிரேம் போட்ட கண்ணாடிக்கும் பளபளக்கும் கிரானைட் மேஜை மேற்பரப்புக்கும் அது பொருத்தமில்லாமல் இருந்தது. அந்தக் காகிதத்தை அவன் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் அவருடைய பார்வையில் தெரிந்த காரணத்தால் சுய காரணம் இல்லாமல் பார்த்தான்.
இருவரின் பார்வையும் சந்தித்துக் கொண்ட வினாடியில் “இது என்ன தெரிகிறதா?” என்றார்.
அவன் அப்போதும் உண்மையைச் சொன்னான். “தெரியவில்லை”
“இதைக் காலையில் நீ தெருவில் எறிந்திருக்கிறாய்”
“ஓ.. அதுவா சார்..?”
“நீதானே எறிந்தாய்?”
“எப்பவுமே பச்சைக் குப்பைக் கூடையில்தான் போடுவேன். இது வந்து ஒரு பையனை…”
“எத்தனை முறை இப்படி எறிந்தாய்?”
“இரண்டு.. மூன்று தடவை… ”
“உண்மையைச் சொல்.. எத்தனை வருடமாக இது நடக்கிறது?”
மேலாளரின் குரல் மாறிவிட்டது. “போலீஸோடு போய் காலையில் உங்கள் வீட்டில் தேடிப் பார்த்தோம்… வேறு எங்கு பதுக்கி வைத்திருக்கிறாய்?”
“என்ன சார் சொல்றீங்க?” ரொம்ப தாமதமாக இந்தக் கேள்வியைக் கேட்டான்.
மேலாளர் பதில் சொல்லவில்லை. காலால் ஏதோ பட்டனை அழுத்தினார். இரண்டு போலீஸ் அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். எப்படி சொல்லி வைத்த மாதிரி நடக்கிறது என்று ஆச்சர்யமாக இருந்தது.
முருகனை ஏற இறங்க பார்த்துவிட்டு அமர்ந்தனர்.
“இவன்தானா?” போலீஸ் அதிகாரி தீர்மானமாகக் கேட்டார்.
போலீஸ் அதிகாரிகளுக்கு மேலாளர் ஆங்கிலத்தில் விளக்க ஆரம்பித்தார். முருகனுக்கு ஆங்கிலம் புரியாது. அதிலும் மேலாளரின் ஆங்கிலம் மிகுந்த வேகம் கொண்டது. பின் தொடர முடியாதது. ஓரிரு வார்த்தையாவது புரியுமா என்று கவனித்தான். தன்னைப் பற்றி தவறாக எதையோ புரிந்து கொண்டு அதை உறுதியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது.
இந்த நாள் தன் வழக்கமான நாளாக இல்லாமல் போனதற்காக முருகன் வருந்திக் கொண்டிருந்த வேளையில் மேலாளர் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தது இதைத்தான்… “எங்களின் எல்லா அறையும் கண்காணிக்கப்படுகின்றன. தேவைப்பட்டால் நாங்கள் உடன்படிக்கைப் போட்டிருக்கும் ஜெர்மன் நிறுவனத்துக்கும் அந்த பதிவுகளை அனுப்புகிறோம். அப்படி ஒப்பந்தத்திலேயே இருக்கிறது. அவர்கள்தான் இவனின் நடவடிக்கையை எங்களுக்குச் சுட்டிக் காட்டினார்கள். சில டெண்டர்கள் எங்களுடைய போட்டியாளர்களுக்கு எப்படிக் கிடைக்கிறது என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. இவனுடைய சில ஆயிரம் ரூபாய் பேராசைக்காக நாங்கள் பல கோடிகளை இழந்திருக்கிறோம். எப்படி விசாரிப்பீர்களோ, ஆனால் எவ்வளவு ஆவணங்கள் கடத்தப்பட்டுள்ளன, யார் யாருக்கெல்லாம் போயிருக்கிறது என்பது தெரியவேண்டும். இப்போது இவனை விசாரிப்புக்குக் கூட்டிச் செல்லலாம்”
போலீஸ் அதிகாரிகள் விடைபெறும்போது முருகனை நோக்கி “சரி, வா” என்றனர்.
மேலாளரின் மேஜை கடிகாரத்தைப் பார்த்தான் சரியாக நான்கு முப்பத்திரண்டு.
நன்றி வார்த்தை மே மாத இதழ்
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 4 (காபா ஆலயத்தின் தூண்கள் மற்றும் கறுப்புக் கல்)
- வாழ்க ஜனநாயகம் !
- நவீன தமிழ் இலக்கிய கருத்தரங்கம்
- நர்கிஸ் – மல்லாரி சிறுகதை/ கவிதை போட்டி
- விரைவில் வெளிவரவிருக்கும் கூர் 2009
- நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்
- கடிதம்
- விமர்சனக் கடிதம் – 2
- மெட்ரோ பட்டாம்பூச்சி கே ஆர் மணி கவிதைகள் – முன்னுரை
- சங்கச் சுரங்கம் – 17: குருதிப் பூ
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பூமியின் காந்தத் துருவங்கள் திசை மாறுமா ?(கட்டுரை: 59)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10 பாகம் -2
- ஆதமி
- பனித்துளி புகட்டிடும் பாடம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -39 உன் விழிகள் என் கொடி உயர்த்தும்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தெட்டு
- செத்தும் கிழித்த கமலா சுரையா
- நினைவுகளின் தடத்தில் – (32)
- விளம்பர இடைவேளைகள்
- வார்த்தை ஜூன் 2009 இதழில்
- சத்தமின்றிப் பூக்கும் பூ
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஆறாவது அத்தியாயம்
- மூன்றாவது நாற்காலியின் வெற்றிடம்
- தகவல்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -5
- அப்பா
- முட்டர்பாஸ் Mutterpass