சுவர்க்கம்

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்



அந்தப் போட்டோவை வம்சீ மற்றொரு முறை பார்த்தான். பின்னாமல் அப்படியே விட்டுவிட்ட அடர்ததியான கூந்தல், விசாலமான கண்கள், செதுக்கினாற் போன்ற மூக்கு, அழகான இதழ்கள். சரியாய் மேலுதட்டுக்கு மேல் இடதுபக்கமாக சிறிய மச்சம். அவளுடைய அழகிற்கு திருஷ்டி பட்டுவிடாமல் இருக்கட்டும் என்று அந்த பிரம்மனே திருஷ்டிப் பொட்டை வைத்திருப்பானோ? போட்டோவில் பார்க்கும் போது அந்தப் பெண் அப்பொழுதுதான் மலர்ந்த ரோஜாப் பூவைப் போல் இருந்தாள்.
“பெண் ரொம்ப அழகாக இருக்கிறாள் இல்லையா?” அம்மா தன்னுடைய அபிப்பிராயத்தை சொல்லிக்கொண்டே கேள்வியைக் கேட்டாள்.
லேசாக தலையை அசைத்தான்.
” நம்ம வம்சீக்கு என்ன குறைச்சல்? லட்சணமாக இருக்கிறான். படிப்பில் கெட்டிக்காரன். சாப்ட்வேர் இன்ஜினியர். அமெரிக்காவில் வேலை பார்க்கிறான். கை நிறைய சம்பளம்.” அக்காவின் குரலில் பெருமை கலந்திருந்தது.
“அதனால்தானே எங்கள் தங்கைக்காக செலக்ட் செய்தோம். என் சித்தியின் மகளும் இன்ஜினியரிங் முடித்துவிட்டாள். அமெரிக்காவில் எம்.எஸ். படிக்கலாம் என்று இருக்கிறாள்.” பக்கத்திலேயே இருந்த அத்தான் உடனே சொன்னார்.
மணமகள் அத்தானுக்கு தங்கை உறவாக வேண்டும் என்று அம்மா முதல்நாள் இரவே சொல்லியிருந்தாள். பெண்பார்க்கப் போவது ஒரு பேச்சுக்காகத்தான். ஏறக்குறைய சம்பந்தம் நிச்சயமாகி விட்டாற்போல்தான். ஆனால் வம்சீ சங்கடத்தில் ஆழ்ந்திருந்தான். கையிலிருந்த போட்டோவை டீபாயின் மீது வைத்துவிட்டான். வீட்டு மாப்பிள்ளை என்ற தோரணையில் அத்தான் செய்யும் ஆர்பாட்டத்தைக் கவனித்தான்..
“நம் குடும்பத்திற்கு சின்ன கார் போறாது. பெரிய காரையே எடுத்துக் கொண்டு வரச் சொல்லி ட்ராவல்ஸ்க்கு போன் செய்கிறேன்.” கையில் மொபைல் போனை எடுத்துக் கொண்டே சொன்னார் அத்தான்.
“ஒரு நிமிஷம் அத்தான். நான் உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டும்.” ஒரு முடிவுக்கு வந்துவிட்டவன் போல் வம்சி சொன்னான்.
“இப்போ என்ன பேச்சு? ஒரு பக்கம் நேரமாகிக் கொண்டிருக்கும் போது.” அம்மா ஆட்சேபணை சொல்லப் போனாள்.
‘ஏற்கனவே தாமதமாகிவிட்டது’ மனதில் நினைத்துக் கொண்டான்.
“என்ன விஷயம் வம்சீ?” அப்பா கேட்டார்.
“எனக்கு ஹைடெக் சிட்டீயில் வேலை கிடைத்திருக்கிறது. நாளைக்கு சேரப் போகிறேன்.”
எல்லோரும் அவனை வியப்புடன் பார்த்தார்கள். தாம் சரியாக காதில் வாங்கிக் கொள்ளவில்லையோ என்ற சந்தேகம்!
“பின்னே அமெரிக்காவுக்கு?” முதலில் தேறிக் கொண்ட அத்தை கேள்வியைப் பாதியில் நிறுத்தினாள்.
“நான் போகப் போவதில்லை.” வெடிகுண்டு வெடித்துவிட்டது.
‘ஏன்? என்ன ஆச்சு?’ எல்லோர் மனதிலும் ஒரே கேள்வி.
“என்னப்பா இது?” அம்மாவின் குழப்பம்.
“அவ்வளவு பெரிய வேலை, கை நிறைய சம்பளம், ஹோதா” அக்காவின் திகைப்பு.
“ப்ளீஸ். நான் இங்கேயே இருக்கிறேன். என்னைப் புரிந்துகொள்ளுங்கள்.” இதுதான் தன்னுடைய முடிவு என்பது போல் கச்சிதமாக சொல்லிவிட்டான்.
அதற்கு மேல் யாருக்கும் எதுவும் பேசுவதற்கு குரல் எழும்பவில்லை.
“மாமா! நீ அமெரிக்காவுக்குப் போகவில்லை என்றால் எங்களுக்கு பொம்மைகளும், சாக்லேட்டும் யார் வாங்கிக் கொண்டு வருவார்கள்?” அக்காவின் ஐந்து வயது மகள் மின்னி அப்பாவியாய் கேட்டாள், கவலை தோய்ந்த குரலில்.
“இங்கே வா” என்று தூக்கிக் கொண்டான்.” அதெல்லாம் இங்கேயும் கடைகளில் கிடைக்கிறது கண்ணம்மா.”
அத்தான் நாற்காலியைத் தள்ளிவிட்டு வேகமாக அங்கிருந்து போய்விட்டார்.
அதுவரையிலும் கல்யாணவீடு போல் கலகலவென்று இருந்த வீடு ஒ§திரியாய் வெறிச்சோடி விட்டது.
வேலையிருப்பதாகச் சொல்லி அப்பா வெளியே சென்றார். பின்னாலேயே அத்தையின் கணவரும்.
அம்மா சமையலறைக்குள் சென்றாள். அத்தையும் பின்தொடர்ந்தாள்.
“ப்ராக்கை மாற்றிக்கொள்.” அக்கா மின்னியை அழைத்துக் கொண்டு உள்ளே போய்விட்டாள்.
ஹாலில் வம்சி தனியாக எஞ்சியிருந்தான். டீபாய் மீது போட்டோவில் இருந்த பெண் மட்டும் இன்னும் சிரித்துக் கொண்டிருந்தாள்.
*****************************************************************************

வம்சி எடுத்த முடிவில் எல்லோரும் தங்ளுடைய எதிர்ப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் காட்டத் தொடங்கினார்கள்.
அன்று மா¨ல் டி.வி.யின் முன்னால் தனியாக உட்கார்ந்துகொண்டு ரிமோட்டில் சானல்களை மாற்றிக் கொண்டிருந்தான்.
ஏதோ ஒரு சானலில் ரஜனிகாந்தின் பாட்டு வந்தது. ரிமோட்டை சோபாமீது போட்டு விட்டு பாட்டுக்கேற்றாற்போல் ஸ்டெப்ஸ் போட்டுக் கொண்டிருந்தான். மின்னியும் ஓடி வந்து மாமாவுடன் சேர்ந்து ஆடத் தொடங்கினாள். எல்லோரும் வீட்டில்தான் இருந்தார்கள். யாரும் அவர்களுடைய டான்ஸை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இதற்கு முன் ரஜனியின் பாட்டுக்கு அவன் டான்ஸ் செய்தால் எல்லோரும் வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டு சூழ்ந்துகொண்டு ரசிப்பார்கள்.
திடீரென்று பாட்டு நின்று விட்டது. வம்சீ டான்ஸை நிறுத்திவிட்டு டி.வி. பக்கம் பார்த்தான்.
“கரெண்டு போய்விட்டது தம்பீ! இங்கே இப்படித்தான். அமெரிக்கா மாதிரி இல்லை.” அத்தையின் கணவர் சொன்னார்.
வம்சி முறுவலித்தான். தான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் இங்கேதானே. தனக்குத் தெரியாதா என்ன? வாக்மேனை காதில் மாட்டிக் கொண்டு பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தான். இசை அவனை தன்மயக்கத்தில் ஆழ்த்திவிட்டது.
திடீரென்று மண்வாசனை அவன் நாசியைத் தொட்டது. எத்தனை நாட்களாகி விட்டன? சட்டென்று வாசல் பக்கம் ஓடினான். கோடை மழையின் தொடக்கம்
“அடடா! கொல்லையின் துணிகளை உலர்த்தியிருக்கிறேன். பாழாய்ப் போன மழை. கரெண்ட் போன போதே நினைத்தேன், மழை வந்து கழுத்தை அறுக்குமே என்று. இந்த ஊரில் இதுதானே வழக்கம்.” அத்தை முணுமுணுத்துக் கொண்டே துணிமணியை எடுத்து வருவதற்காக போனாள். நெஞ்சு முழுவதும் மண் வாசனையை நிரப்பிக் கொண்டிருந்தவன் அதை காதில் வாங்கவிரும்பவில்லை. மறுபடியும் இசை வெள்ளத்தில் மூழ்கப் போனவனை “மாமா!” என்று கையைப் பிடித்து இழுத்தாள் மின்னி.
“என்னம்மா?”
“அமெரிக்காவில் பனிமழை பெய்யுமாமே. உண்மைதானா?”
உண்மைதான். பனிமழை பெய்யும். அதை கண்ணாடிவழியாய் பார்க்கும் போது அழகாக இருக்கும். சினிமாவில் பார்க்கும் போது இன்னும் அழகாகத் தெரியும்.
ஆனால் பனிமழை பெய்யும் இடத்தில் குடியிருப்பது எவ்வளவு நரகம்? அந்த பனி லேசில் கரையாது. அதை சுரண்டி வாரி வாரி கொட்டணும். பனி கரையும் போது எலும்புகளையும் நடுங்கச் செய்வது போல் குளிர் வாட்டியெடுக்கும். மலை மலையாய் குவிந்த பனி. சாலையில் போகும் வாகனங்களின் புகையால் கறுப்பாக, பார்க்க எவ்வளவு அருவெறுப்பாக இருக்கும் என்று எப்படிச் சொல்வது?
குளிர் காற்று, பனிப்புயல்கள், மைனஸ் ஜீரோ டிக்ரியில் சுற்றுச் சூழல், இயற்கையின் விபரீதங்கள். எல்லாமே அதிகம்தான். நாட் கணக்காய் வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்க வேண்டும். நினைக்கும் போதே குளிரால் உடல் விறைத்துவிட்டாற்போல் இருந்தது.
எழுந்துபோய் தண்ணியைக் குடிக்கும் போது மின்னி சொன்னாள். “மாமா! அது காய்ச்சிய தண்ணி இல்லை.”
“பரவாயில்லை. உங்க மாமா இங்கேதான் இருக்கப் போகிறான். எல்லாம் நம்மைப் போல் பழகிக் கொள்வான்.” அக்காவின் குரலில் சலிப்பு.
அவனுக்குப் புரியாமல் இல்லை. விட்டில் எல்லோருக்கும் தன்னிடம் ஏற்பட்ட கசப்பு, மறைமுகப் போர், எதிர்ப்பு. யாரும் தன்னைப் பொருட்படுத்துவதில்லை. விருந்தாளியைப் போல் தனிகவனம் செலுத்துவதில்லை. ரொம்ப காஷ¤வலாக இருந்து வருகிறார்கள். அவனுக்கு வேண்டியதும் அதுதான்.
ஆனால் சின்ன வித்தியாசம். அவ்வளவுதான். எல்லோரும் தன்னை ஒரு பைத்தியம்போல் பார்க்கிறார்கள். பூலோக சுவர்க்கத்தை விட்டுவிட்டு வருகிறானே என்று இரக்கம், ஆறுதல் காட்டுகிறார்கள்.
உண்மைதான். அமெரிக்கா பூலோக சுவர்க்கம்தான். அங்கே எத்தனையோ வாய்ப்புகள். உழைப்புக்கும், திறமைக்கும் மதிப்பு தரும் பண்பாடு எல்லாம் தனக்கும் பிடித்துதான் இருந்தன. ஆனால் அவற்றுக்காக தனக்கு உயிர் கொடுத்த பெற்றோர்களையும், தாய்நாட்டையும் துறக்க வேண்டுமா என்ன?
“மழை வந்தால் போதும். சாலைகள் முழுவதும் ஒரே தண்ணிதான். டிராபிக்ஜாம்.” வெளியிலிருந்து வந்த அத்தான் சலித்துக் கொண்டார். இதெல்லாம் தன்னை மறைமுகமாக எச்சரிப்பதுதான். வம்சிக்கு சிரிப்புதான் வந்தது.
அத்தையின் குடும்பமும், அக்காவின் குடும்பமும் கிளம்பிப் போய்விட்டார்கள். அம்மா, அப்பாவும் அவனும் வீட்டில் இருந்தார்கள்.
அம்மாவின் முகத்தில் ஏதோ வருத்தம். நேருன்னு நேர் பார்க்கவும் முடியவில்லை அவனால்.
தான் மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்குப் போகும் நாளன்று ஏர்போர்டில் அழுதுவிட்டாள். இன்று தான் இங்கேயே இருப்பதாகச் சொன்னால் வருத்தப் படுவானேன்? ஏதோ கூடாத காரியம் செய்வது போல் தலைகுனிவாக நினைப்பானேன்?
“பெண்வீட்டார் வேண்டாமென்று சொல்லிவிட்டார்கள்.” குரலை தாழ்த்திக் கொண்டு சொன்னாள்.
“தட்ஸ் ஓகே.” சிரித்தான்.
“அது இல்லை. திருமணமாகும் வரையிலாவது அமெரிக்காவில் இருந்தாய் என்றால்…”
” ஏன்?” புரியாமல் கேட்டான்.
“அதுதான். கல்யாணம் ஆன பிறகு ஒரு வருடமோ இரண்டு வருடங்களோ இருந்துவிட்டு வந்து விடலாம்.” வேண்டுகோள் விடுப்பதுபோல் சொன்னாள்.
எவ்வளவு துர்பாக்கியம் வந்துவிட்டது? அமெரிக்காவில் இருக்கும் பையன்களுக்குத்தான் அழகான, படித்த, பணக்காரவீட்டுப் பெண்களைத் தருவார்களா? பையன் இந்தியாவில் வேலை பார்த்தால் திருமணம் ஆகாதா? அம்மா சொன்னது போல் அமெரிக்காவில் இருந்துகொண்டு, கல்யாணமானதும் மனைவியை அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்குப் போய்விட்டு, சில மாதங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்துவிடுவதா? நடைமுறையில் இது சாத்தியமில்லை. இருந்தாலும் இது தவறு இல்லையா. வாழ்க்கை என்றால் அந்தப் பெண்ணுக்கும் சில ஆசைகள், எண்ணங்கள் இருக்கும் இல்லையா? தன் காரணமாக அவளுக்கு ஏமாற்றம் ஏற்படாதா?
தன்னைப் போலவே யோசிக்கும் பெண் எங்கோ ஒரு இடத்தில் பிறந்து தனக்காக காத்துக்கொண்டு இருப்பாள் இல்லையா.
“அது இல்லைடா வம்சீ! உனக்குத்தான் வீசா இன்னும் மூன்று வருடங்கள் இருக்கு இல்லையா. அதுநாள் வரையில் அங்கே இருந்தால்..”
அப்பா விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்த போது கண்ணிமைக்காமல் அவரையே பார்த்தான்.
தன்னுடைய பார்வையில் அப்பா ஒரு ஹீரோ! ரோல் மாடல்! சிறு வயதில் எவ்வளவு பெருமையுடன் அப்பாவை வழிபட்டு வந்தான்? அப்பாவைப் போலவே இருக்க வேண்டும், அப்பாவைப் போல் நேர்த்தியாக உடுக்க வேண்டும், அப்பாவைப் போல் ஸ்கூட்டர் ஓட்ட வேண்டும், அப்பாவைப் போல் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும், அப்பாவைப் போல் …….
ஆனால் பெரியவன் ஆனபிறகு இப்பொழுது புரிகிறது, அப்பாவைப் போல் இருக்கணும் என்று இல்லை. அப்பா எப்படி இருக்கணும் என்று நினைத்தாரோ அப்படி இருக்க வேண்டும் என்று.
தன்னுடைய சின்ன வயதில் அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டு இருப்பார், என்றாவது தங்களுடைய சொந்த ஊர் தலைஞாயிறுக்குப் போக வேண்டும் என்றும், அங்கேயே வீடு கட்டிக் கொண்டு வாழவேண்டும் என்றும்.
ஆனால் எங்கே? குழந்தைகளில் படிப்பு, அக்காவின் திருமணம், அப்பாவுக்கு பிரமோஷன், தன்னுடைய அமெரிக்கா படிப்பு. ஊரில் பாட்டியும் தாத்தாவும் அப்பாவின் வருகைக்காக வழி மேல் விழி வைத்தபடி காத்துக் கொண்டு… பிறந்த ஊரின் பெயரைக் கேட்டதும் அப்பாவின் கண்களில் தெரியும் அந்த ஒளி! ஊருக்குப் போகணும் என்று நினைக்கும் போதே உள்ளத்தில் பொங்கும் உவக்கை!
நெருங்கியவர்களுக்கெல்லாம் தூரமாக, எங்கேயோ வெளிநாட்டில் டாலர் நோட்டுகளை எண்ணிக்கொண்டு……
வேண்டவே வேண்டாம். வயதான காலத்தில் பெற்றோர்களுக்குத் துணையாக, உடன் பிறந்தவர்களுக்குப் பக்கபலமாக, பால்ய சிநேகிதர்களுக்கும், உயிர் நண்பர்கக்கும் கூப்பிடும் தூரத்தில் இங்கேயே இருப்பான்.
ஏதோ ஒரு சமயத்தில் அமெரிக்காவிலிருந்து வந்து விடவேண்டும். இதுதான் சரியான சமயம் என்று தான் நினைத்தான். வந்துவிட்டான்.
அமெரிக்காவிலேயே இருந்தால் வேலையில் முன்னேற்றம், மனைவி மக்கள், அவர்களுடைய படிப்பு, டாலர்கள், சொந்த வீடு … எல்லாம் நன்றாகத்தான் இருக்கும். அது ஒரு வளையம்.
தாய் தந்தையுன் நெட் ·போனில் பேசிக் கொண்டும், வெப் கேமிராவில் பார்த்துக் கொணடும், தேவைபட்ட சமயத்தில், தன்னுடைய அருகாமை தேவைபட்ட நேரங்களில் கண்காணாத இடத்தில் எங்கேயோ இருப்பதாவது? நோ..நெவர்.
உள்ளூர அப்பாவும் அம்மாவும் சந்தோஷப்பட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.
ஆமாம், தன்னை விட அவர்களுக்கு வேறு எதுவும் உசத்தி இல்லை. தனக்கும் அப்படித்தான்.

முற்றும்

தெலுங்கில் B.நாககுமாரி
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்