நீர்வளையத்தின் நீள் பயணம் -2

This entry is part [part not set] of 36 in the series 20090129_Issue

த.அரவிந்தன்


‘நடுக்குளத்தில் வட்டமிட்டு தூரம்தூரமாய் ஏழெட்டு பேர் நீந்தியபடியே நிற்போம். சா… பூ…த்ரி போட்டு தோற்றவன் வட்டத்தின் நடுவில் நிற்பான். விளையாட்டுத் தொடங்குவதற்கு முன்பு ‘கோட்டான்… கோட்டான்… ஏன் கோட்டான்’ என்பது போல ஒரு பாட்டு பாடுவோம். இப்போது அந்தப் பாட்டு ஞாபகம் இல்லை. ‘ஜூட்’ என்று கத்தியதும் நடுவில் இருப்பவன் பிடிக்க வருவான். வட்டம் அப்படியே கலையும். நான் மட்டும் “கொட்டமிடும் கெலுத்தி… நொட்டம் சொல்லிப் போச்சு… கெட்டப் பையன் யாரு… கிட்ட வந்து கூறு…’ என்று கிண்டலாய்ப் பாடுவேன். எல்லோரும் மூழ்கியபடியே குளத்தின் நாலு மூலைகளுக்கும் போவோம். மேல் மட்டத்திலேயே நீந்துகிறபோது வேகமாக நீந்துகிறவர்கள் விரைந்து வந்து பிடித்துவிடுவார்கள். விரட்டி வருகிறபோது சிலபேர் பிடிப்பட போகிற சமயத்தில் கரையேறிவிடுவார்கள். அப்படி ஏறினால் தோற்றதாக அர்த்தம். கரையேறியவன் மற்றவர்களைப் பிடிக்க வேண்டும். பெரும்பாலும் கரையேறுகிறவன் அப்படியே வீட்டிற்குதான் ஓடியிருக்கிறான். மூழ்கியவர்கள் மறுகரை பகுதியில் அடர்ந்திருக்கிற வெங்காயத் தாமரை காட்டுக்குள் மறைந்துகொள்வார்கள். சிலர் வலப்பக்கக் கரையோரம் உள்ள தாமரைக்காட்டுக்குள் மூழ்கிக்கொள்வார்கள். வேகமாக மூழ்கிப்போகக்கூடிய சிலர் இங்கு அங்குமாக நீந்திப் போய்க்கொண்டே திறமை காட்டுவார்கள். எப்போதும் நான் படித்துறையை ஒட்டிய இடப்பக்கக் கரையில் விதைநெல் மூட்டைகள் ஊற வைக்கிற பகுதியில்தான் பதுங்குவேன். அன்றும் விதை மூட்டை பக்கம்போக எண்ணி மூழ்கிக்கொண்டே போனேன். எப்படித் திசை திரும்பியது என்றே தெரியவில்லை. படித்துறையில் குளித்துக்கொண்டிருந்த கீதா காலுக்கிடையே புகுந்திருக்கிறேன். எழுந்திருக்க முற்பட பாவாடையில் தலை சிக்கித் தடுமாறுகிறேன். சுளீர்சுளீரெனப் முதுகில் அடிக்கிறாள். நழுவி… வலியோடு அப்படியே மூழ்கி நடுக் குளத்தில் எழுந்திருக்கிறேன். பிடிப்பட்டு நான் கண்டுபிடிக்க வேண்டியவனாகிறேன். “நாய..நாய… நாய்க்குப் பிறந்த நாய… பொம்பள குளிக்கிறது தெரியல…’ என்று திட்டிக்கொண்டே கரையேறிப் போகிறாள் கீதா. இப்போதும் சொல்வேன். திட்டமிடலோடு நான் அவள் காலுக்கிடையில் புகவே இல்லை.

உணர்ந்து என் உலகத்தில் மூழ்கத் தொடங்கிய காலம். என் உலகம் என்றுகூட சொல்லக் கூடாது. ஆக்கிரமித்து தனிச் சொத்தாக்கிக் கொள்வதுபோல் இருக்கிறது. வயலை விட்டால் ஊர் மக்களுக்கு ஒரே போக்கு குளம். தெருவுக்குள் நுழையும்போதும், தெருவுக்கு வெளியில் போகும்போதும் படித்துறையில் இறங்கி கால்களை நனைக்காமல் ஒருவரும் போனதாகத் தெரியவில்லை. எல்லோருக்குமான உலகமாகத்தான் அது இருந்தது. அதில் நான் சேற்றிலேயே கிடக்கிற கெளுத்தி மீன்போல அமிழ்ந்து மேய்ந்தேன் என்பதுதான் நியாயம்.

இடப்பக்க நடுக் கரையில் சிறிய வேப்பமரம் இருக்கும். அதற்கு நேரான சரிவில் இறங்கி காலில் அலைபட உட்கார்ந்து கொள்வேன். பொரி உருண்டையோ, நைஸ் ரொட்டியையோ வாங்கி வந்து பிய்த்துப் போடுவேன். காசில்லாத நேரத்தில் எனக்குத் தூக்கிப் போடப்படும் பழைய சாதம். கெண்டைக்குஞ்சுக்கூட்டம் கொசுகொசு என்று அதை மேயும். இடைவிடாமல் தொடர்ந்து போட்டுக்கொண்டே போனால் பாதிக் குளத்தை குஞ்சுகளே ஆக்கிரமித்திருப்பதுபோல தெரியும். அதைப் பார்த்து என்னுடைய நெஞ்சுப்பகுதி எங்கும் கொசகொசவென ஏதோவொரு உருவில் சந்தோஷம் மேய்வதுபோல தாங்கமுடியாத போதையில் தத்தளிப்பேன். இதைப் பார்த்து ஊரே என்னைக் கெண்டைக்குஞ்சு மேய்ப்பவன் என்று சொல்லும். தொட்டியில் சீன வாஸ்து மீன் வளர்க்கும் ஜாய் எனக்குப் புழு போடத் தெரியவில்லை என்று கோபப்படுகிறார்கள்? இங்கிருப்பதெல்லாம் ஒரு மீனா? மினுக்கிக்கிட்டு மேயுது.’

தேசாந்திரிகள் எங்கோ மடகாஸ்கர் தீவுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள்.

‘ஏப்ரல் இறுதியில் குளிக்க முடியாதளவு குளம் வற்ற குத்தகைக்காரர் முடிந்தவரை மீன்கள் எல்லாவற்றையும் பிடித்து விற்றுவிடுவார். ஊர் கூட்டம் போட்டு மிச்ச மீன்களைப் பிடிக்க ஒரு நாள் குறிப்பார்கள். பெயர் வைக்கப்படாத ஒரு பண்டிகை நாள்போல் அன்று ஊர் அல்லோகலப்படும். இடுப்பில் துணிப் பையைச் சொருகிக்கொண்டு ஊரே குளத்தை உழப்பும். சேறாகவே மாறிவிடும் கால் முட்டியளவு தண்ணீர். யார் அழைப்புக் கொடுப்பார்களோ தெரியாது. வெளிநாட்டு பிரதம பறவைகள் எல்லாம் உள் நாட்டு பறவைகளோடு சேர்ந்து குளத்துக்கு மேலே வட்டமிட்டுக்கொண்டே இருக்கும். அசந்தர்ப்பத்தில் மீன்களைக் கொத்திப் போகும்.

மூங்கில் சிம்புகளால் கட்டப்பட்ட ஊத்தாவை கீழே அழுத்தும் சத்தம் தண்ணீரில் “சல்க்..சல்க்’ என்று அங்கங்கே கேட்டுக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் ஆண்கள்தான் ஊத்தா போடுவார்கள். ஒரு கலையாக அவர்கள் அதைக் கையாண்டு பிடிப்பார்கள். “நல்லா கவனமா அழுத்திப் போடு… நழுவிப் போயிடப்போது… ‘ என்று மகன்களை அதட்டிக் கொண்டே வேறொரு பக்கம் ‘சல்க்..சல்க்’ என்று சொருகிப் போவார்கள். ஊத்தாவைச் சொருகிய பிறகு பிரிமனை போன்ற மேல்பகுதி வழியாக கையை உள்ளே நுழைப்பார்கள். கவனத்தின் மூலம் கண்களைக் கைகளுக்குக் கொண்டு வந்து தேடுவார்கள். மீன் இருந்தால் கைபட்ட உடனே என்ன மீன் என்று பழகியவர்களுக்குத் தெரிந்துவிடும். கெண்டையோ , கொரவையோ இருந்தால் சாதாரணமாகப் பிடித்து பைக்குள் போட்டுக் கொள்வார்கள். கெளுத்தியாக இருந்தால் கொட்டிவிடும். கடுக்கும். கெளுத்தியைவிட பயங்கரமானது தேளி. இது கொட்டினால் விஷக்கொட்டாய்க் கடுக்கும். அப்படிக் கொட்டிக் கடுத்தாலும்கூட கையை உதறிஉதறிக் கொண்டே மீன்பிடித்துவிட்டுத்தான் கரையேறுவார்கள் சிலர். சேற்றோடு கலந்துதான் கிடக்கும் கெளுத்தி. அதைக் கவனமாக வால் பக்கமாகப் பிடித்துப் போட்டுக்கொள்வார்கள். அப்படிப் போடுவதற்குள் பெரும் போராட்டமாக இருக்கும். பயங்கரமாகத் துள்ளும். நழுவி ஊத்தாக்குள்ளேயும் விழும். வெளியிலும் விழும். வெளியில் விழுந்தால் விட்டவெறியில் வேகவேகமாக அங்கேயும் இங்கேயுமாக ஓடிஓடி சொருகித் தேடிப் பார்ப்பார்கள். கெளுத்தியைப் போலவே ஆரா. இது சேற்றைவிட்டு வரவே வராது. இருப்பது தெரிந்துவிட்டால், இடுப்பில் ஓர் உலுக்கி வைத்திருப்பார்கள். தீட்டிய குடைக் கம்பிதான் உலுக்கி. அதை எடுத்து மீன் மீது சொருகி பைக்குள் போட்டுக் கொள்ளுவார்கள். வெயிலில் பை காய்ந்துகொண்டே இருக்கும். அவ்வப்போது சேற்றுத்தண்ணீரை எடுத்து ஊற்றி நனைத்துக் கொண்டே இருப்பார்கள். இடுப்பிலிருந்து பை உருவி விழுந்து சில நேரங்களில் மீன்கள் தப்பியும் போகும். சில பேர் சின்ன வலைகளைக் கொண்டும் பிடிப்பார்கள். அந்த இடங்களில் ஊத்தா போட மாட்டார்கள். அம்மா, பொண்ணு… அக்கா, தங்கைகள் என்று பெண்கள் சேர்ந்து புடவைகளை எடுத்து வந்து தண்ணீரில் அமிழ்த்தித் தூக்கிப் பிடிப்பார்கள். மீன் பிடிக்கிற எல்லோரின் கண்களும் விறாலைத் தேடிச் சப்புக்கொட்டிக்கொண்டே மற்ற மீன்களைப் பிடிக்கும். கிடைத்தவர்கள் ஒவ்வொருவராய் கூப்பிட்டுச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். நண்டு, இறால் மீது யாரும் பெரிதாய் கவனம் செலுத்துவதில்லை. தொழுவா என்று ஒரு மீன் இருக்கிறது. அந்த மீன் பிடித்தால் அதை அப்படியே விட்டுவிடுவார்கள். அதைச் சாப்பிடுவதில்லை. இரண்டு மூன்று மணிநேரத்தில் எல்லாப் பக்கமும் விழுந்துவிழுந்து பிடித்து கரை ஏறி சேறாய் வீடு வருகிறபோது எல்லோரின் கையிலும் ஒரு பையோ இரண்டு பையோ மீன் இருக்கும். அதைக் கொண்டு வந்து வீட்டு வாசலில் போட்டு சாம்பலை மீன் மேல் கொட்டி பெண்கள் அரிவாள்மனையால் ஆய்வார்கள். உயிரோடு இருக்கிற மீன்கள் சாம்பலோடு நழுவுவதும் பிடிபடுவதுமாய் இருக்கும். சிறுபிள்ளைகள் ஈர்க் குச்சியை எடுத்து நழுவுகிற மீன்களை எடுத்துக் குத்திப் பார்ப்பார்கள். விருந்துண்ண போகிற மகிழ்ச்சியில் ஆண்கள் பக்கத்தூருக்கு கள் குடிக்கப் போய் வருவார்கள். அதற்குள் சட்டியில் மீன் குழம்புகள் கொதிக்க ஆரம்பிக்கும். ஊர் முழுவதும் மீன் குழம்பின் வாசம் வீசிக் கொண்டிருக்க அன்று ஒரு நாள் மட்டும் நான் மீன் சாப்பிடுவதில்லை. யானை பெரிசு மீன்களை எல்லாம் வாங்கி இங்கே சமைக்கிறார்கள். சட்டி கொழும்புக்கும் கெண்டைக்குஞ்சு சுவைக்கும் ஈடாகுமா? சட்டிக்குழம்பைப் பற்றிச் சொன்னால் நம்மையைச் “சட்டி…சட்டி’ என்று பேத்திகள் அழைக்கிறார்கள்.’

‘வெயிலில் தண்ணீர் காய்ந்ததற்குப் பிறகான பத்து நாட்கள் குளம் குழந்தைகளுக்கான உலகம் மாறும். ஈரமான களிமண்ணை எடுத்து பதமாகத் தட்டி கார், பேருந்து என ஏகப்பட்ட வாகனங்கள் செய்துகொடுப்பார் பேருந்து அதிபர் ரமேஷ். எல்லோருக்கும் தயாரித்துக் கொடுப்பார் என்றும் சொல்ல முடியாது. மிகக் குறைந்தபட்சம் உமா பெயரைச் சம்பந்தமே இல்லாவிட்டாலும் அவரோடு பேசுகிறபோது அடிக்கடிச் சொல்ல வேண்டும். மயிலாடுதுறையில் தாங்கள் கேட்ட விதவிதமான ஒலிகளை எழுப்பிக்கொண்டு பேருந்தாய் ஓடும் பிள்ளைகள். செல்லத்தைப் பொறுத்து ஐந்து பைசா, பத்து பைசா கட்டணத்தை வசூலித்துக் கொண்டு அம்மாக்களை ஏற்றிப் போவார்கள். விபத்தில்லாத போக்குவரத்தை எதிர்பார்க்க முடியாது. மிக அதிகபட்சம் பெண்கள் மீதே பேருந்து மோதும்.’

‘மே மாத நடுப் பகுதியில் குளத்திலேயே கீற்றுக் கொட்டகையில் மேடை போட்டு இரவில் அரிச்சந்திரன் நாடகம் நடக்கும். சேத்தூர், மருதாந்தூர், கீழ மருதாந்தூர் எனப் பல கிராமங்களில் இருந்தும் டயரைக் கொளுத்திக் கொண்டு வயல்களின் குறுக்கே பாய் தலையணையோடு நடந்து வந்திருப்பார்கள். எட்டு மணிக்கு ஆரம்பிக்கிறேன் என்று ஒன்பது பத்து மணிவரை இழுத்துவிடுவார்கள். அதுவரை சீட்டாட்டம் அமர்க்களப்படும். வந்தது எல்லாம் தூங்கி தூங்கி விழ ஆரம்பிக்கும். பத்தரை மணி அளவில் ஆர்மோனியமும், தபேலாவும் அலறத் தொடங்கும்.

‘வந்தனம்…வந்தனம்… வந்தனம்; வந்த சனங்கெல்லாம் குந்தணும்; பாக்கெட்டல கை வுடணும்; பச்ச நோட்ட நீட்டணும்’
நாலு வரியோடு பாட்டை நிறுத்தி, “இல்லாட்டி பக்கத்துல இருக்கிறவர் பாக்கெட்டல எடுத்தாவது நீட்டணும்’ என்று பப்புன் அனுக்குரகம் கோமாளிச் சேஷ்டையோடு சொல்வார். தூக்கம் களைந்து எழுந்து உட்காரும் கூட்டம். அடுத்த பாட்டு. சந்தோஷ மெட்டில் உள்ளூரின் ஏக்கப் பாட்டு.

‘பொம்மானூரு ரோட்டுல காரு போனாத் தேவல; மாயவரம் மராந்தூரு போயி வந்தா தேவல; அத்தை மகப் பேருல ; நான்; அனுக்குரகம் எழுதுல ; அதனாலதான்; இன்னும் காரு கீரு போகல. தர்ராபுர்ரா அண்ணாச்சி தம்பி கதை என்னாச்சி’

ரகளையாக இருக்கும் பப்புன் வரும் பதினைந்து நிமிடங்கள். நாடகம் தொடங்கிய பிறகு இளமைக்கு அங்கு என்ன வேலை? வயதானவர்கள் மட்டும் உள்ளூர் நடிகர்களின் நடிப்புக் குறைகளைச் சொல்லிக் கொண்டே பார்ப்பார்கள். லோகிதாசியனைப் புதைப்பதற்கு பணமும், துணியும் , வாய்க்கரிசியும் கேட்டு சந்திரமதியை அரிச்சந்திரன் மிரட்டும் கட்டத்தில் சில பெண்கள் அழுவார்கள். நாடகம் பார்க்கிறபோதெல்லாம் சந்திரமதிக்காக அழுதுகொண்டே இருக்க முடியுமா? பீடியைப் பிடித்து தூங்குகிறவன் வாயில் வைப்பேன். கைலியைத் தூக்கி ரப்பர் பாம்புகளை உள்ளே போடுவேன். சம்பந்தம் சம்பந்தமே இல்லாமல் ஆண் காலோடு பெண் காலை சணலால் பிணைத்து கட்டிவைப்பேன். கிழவி கால்களில் கட்டப்பட்டவன் பாடுதான் படு திண்டாட்டம். சாபத்தோடு கண்டதையும் குடிக்கச் சொல்லித் திட்டும் கிழவிகள். ஆமாம்… இப்போதுதான் ஞாபகம் வருகிறது. என்னைக்கூட ஒருத்தன் ஏமாற்றியிருக்கிறான். மேலானூரில் நடந்த நாடகத்திற்குப் போனதும் தூங்கிவிட்டேன். காலையில் எழுந்து வீட்டுக்கு வந்து பார்க்கிறேன். சட்டைப் பையில் ஒரு கடிதம். “வேட்டைக்கு அரிச்சந்திரன் செல்லும் நேரம் பேங்க்புள்ள பம்புசெட்டு பக்கம் வரவும். காத்திருப்பேன் – புவனா’. பெரிய வாய்ப்பை இழந்துவிட்டதைப் போன்று கொஞ்சம் நாள்கள் நிம்மதியில்லாமல் அலைந்திருக்கிறேன். ஏமாற்றுவதற்காக நண்பர்கள் செய்த ஏற்பாடாகத்தான் இருக்கவேண்டும். ஏனோ இதுவரையிலும் என் உள்மனம் அதை ஏற்றுக்கொள்ளவே மறுக்கிறது. ஒருவேளை புவனா கூப்பிட்டிருந்தால் என்பதாகத்தான் தோன்றுகிறது. அங்கேயே இருந்திருந்தால் அரிச்சந்திரனாக நடித்தாலும் நடித்திருப்பேன். நாடகங்கள் எல்லாம் இப்போது நடக்கின்றனவோ என்னவோ?’

“அழுதது போதும் … இந்தியாவில் தாஜ்மஹால் பார்க்கப் போறோம். தமிழ்நாட்டுல உங்க ஊரு எதுன்னு சொல்லுங்க… முதல்ல அதைப் பார்ப்போம்…”

“மயிலாடுதுறை, ஆனந்ததாண்டவபுரம்னு… அடி”

மேல் கோணத்தில் ரயில் நிலையம் வந்தது. அறுபது வருடங்களுக்குப் பிறகு தண்டவாளத்தைக் கடக்கிறபோது சந்தோஷத்தில் கால்கள் வியர்த்தது. நகர்கிற பாதையில் தெரிகிற மாற்றங்களைக்கூட பார்க்கமுடியாமல் ஆனந்த வெட்கம் அவரை முடக்கியது. பேருந்து போக்குவரத்து இருப்பது போலத் தெரிந்து, “அனுக்குரகம் அவர் அத்தை மக பேருல எழுதிட்டாருப் போல… அதான் காரு கீரு போகுதோ…’ என்று யோசனையில் சிரித்துக்கொண்டார்.

“நேரா போய்க்கிட்டே இருங்க”

“சொந்தவூர் தைரியத்தில் சத்தமா பேசாத தாத்தா”

வெட்டாறு தாண்டும்போது அவருக்கு உணர்ச்சி கரைபுரண்டது. படித்துறையில் மோதுகிற அலைச் சத்தமாய், “எவ்வளவு காலம் கழித்து வர்றேன்.. எவ்வளவு காலம் கழித்து வர்றேன்’ என்று சொல்லிக்கொண்டார். தென்னாப்பிரிக்கா மண்டேலா பகுதித் தெருக்களில் போன சந்தோஷத்தைப் பேத்திகள் முகத்தில் இங்கு பார்க்க முடியவில்லை. பெரிய வளைவு ஒன்று தெரிகிறது. பொன்வாசநல்லூர் வரவேற்பு வளைவாக இருக்க வேண்டும். வளைவு நெருங்கியதும் அவருக்குள் ஒருவித நடுக்கம் ஏற்பட்டது. புழுக்களை மீன்கள் கூடிக் கடித்துத் தின்பதுபோல வெட்கம் அவரைப் பிடுங்கித் தின்றது. பேத்திகளைத் திரும்பச் சொல்லலாமா? என்று யோசித்தார்.

‘வேறு வழி தெரியல.. வேறு வழி தெரியல…மன்னிக்கவும்’ என்ற அந்தக் கடிதத்தின் சாராம்ச வரிகள் தண்ணீர் குறைவாக இருக்கிறபோது பல்டி அடித்து மண்டை உடைய காரணமாயிருந்த கற்கள்போல ஞாபகத்துக்கு வந்து குத்துகின்றன. தூக்கிப் போட்ட இதே இடத்தில்தான் கடிதம் கிடந்திருக்குமா? “போதும் பொண்ணு’ கடிதத்தைத் திரும்ப எடுத்துச் சென்று அவளிடமே கொடுத்திருப்பாளா?

‘எவ்வளவு பெரிய அவமானம்? சுடுகாட்டிற்கு மாடு மேய்க்கப் போன பொண்ணு மறுகரை பக்கம் ஏன் போனான்னு கூட்டாளிகக்கூட எனக்காகக் கேட்கலையே? அப்ப நானே கூட கேட்கலதானே? தைரியமே இல்லாமதான் நின்னிருந்தேன். காட்டாமணிச்செடி கம்பு மாதிரி நான் இருந்துகிட்டு அந்தக் குண்டச்சிய அவ்வளவு தூரம் தூக்கிட்டு வந்து கெடுக்கப் போனேனாம். பொங்கலுக்கு வீட்டுக் கதவைக் கழுவறதுக்காக அதைக் கழற்றிக் கொண்டு வந்து படகுல போகுறதுபோல குளத்துல போனப்போதுதான் அந்த யோசனை வந்தது. அவளிடமும் சொன்னேன் . எதிர்பார்த்தது போல் சரி என்று சொன்னாள். மனித நடமாட்டமே இல்லாததுபோல் வயல்வெளி, காடுன்னு ஊர் முழுவதும் இருந்தாலும் நகரம்போல எங்கேயாவது ஒதுங்கி நின்னு பேசமுடியுமா? எத்தனையோ முறை குளத்தில் இறங்கி வெங்காயத் தாமரைக் காட்டுக்குள்ளேயே பதுங்கி நீந்திப் பேசியிருக்கிறோம். அதிகம் கண்கள் சிவக்கக் கூடாது என்பதற்காக கீழே மூழ்காமல் கழுத்துவரை மூழ்கியபடியே கிடப்போம். நீந்திக்கிட்டே ஒரு பொண்ணைக் கெடுக்க முடியுமான்னு தெரியில. முத்தம் கொடுத்திருக்கோம். “கோட்டான் கோட்டான்’ விளையாட்டின்போது என் காலுக்கடியில் புகுந்தியே வேணும்னும்தானே அது’ என்று அன்றைக்குக் கேட்டாள். அது ஏதோ இப்போது புகுந்து வா பார்க்கலாம் என்பதுபோன்ற கிளுகிளுப்பானக் குரலில் இருந்தது. ‘நுழைஞ்சிப் போக முடியாதுன்னு நினைச்சிட்டியா’ என்று மூழ்கப் போவதுபோல பாவனை காட்டிக் கொண்டிருந்தபோது, “தே…., ….., …., …., ….,’ ஒரு கேடுகெட்ட வார்த்தையையும் மிச்சம் வைக்காமல், வைதபடியே வெறியோடு நாலைந்து கருங்கற்களை விட்டெறிந்து அடிக்கிறான் கீதாவின் தம்பி பாண்டி. மிரட்சியோடு மூழ்கிமூழ்கித் தப்பிக்கிறோம். நாலைந்து பேர் ஓடிவந்து அவனைப் பிடித்துக் கொள்கிறார்கள். அப்படியே மூழ்கிப் போய்விடுமாறு கீதா எனக்குச் சைகை செய்துகொண்டே இருக்கிறாள். நான் போகவில்லை. “மேல ஏறிவாங்க.. இறங்குனேன் தொலைஞ்சிங்க…’ கீதா சொந்தக்காரன் மாணிக்கம் மிரட்டுகிறார். நாலைந்து பேர் குளத்துக்குள் இறங்க வந்தார்கள். இதற்கு மேல இருந்தால் கூட்டம் கூடிக்கொண்டேதான் இருக்கும் என்று மேல ஏறினோம். கரையில் காலை வைத்த உடனே இரண்டு பேருக்கும் உதையும் அடியுமா மாறிமாறி விழுது. எப்படியோ கீதா அப்பாவுக்குத் தகவல் கிடைச்சு ஓடிவந்து அவ வயித்திலேயே ஏறி மிதிக்கிறார். அவள் அலறும்போதுகூட எனக்குப் பாவமாக இருந்தது. ஓடிப்போய் பாண்டி வெட்டருவா எடுத்து வந்து என்னை வெட்டத் துள்ளுறான். நாலைந்து பேர் அவனை மடக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள். கப்பிக் கற்கள் ரோட்டில் சைக்கிளில் போய்க்கிட்டிருந்த நாட்டாமைக்காரர் கூச்சலைப் பார்த்து இறங்கி ஓடிவந்து விசாரிக்கத் தொடங்குறதுக்குள், “”என் பொண்ணைக் கெடுக்கப் பாத்தான் நாட்டாமை… என் பொண்ணைக் கெடுக்கப் பாத்தான் நாட்டாமை” என்று கதறினார் கீதாவின் அப்பா. சோற்றைத் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்த என் நாலாங்கால் சொந்தம் வெங்கடேசன் ஓடிவந்து, என் முகத்திலேயே காறித் துப்பி, “மானத்தை வாங்கிட்டியேடா… வீட்டுக்குள்ள கால வைச்ச…. செத்துடுவே.. அநாதை நாய ஊர விட்டு ஓடிப்போயிடு” என்று கத்தினார். கீதாவிடம் பேசிவிட்டு வந்து நாட்டாமைக்காரர் “மாடு மேய்ச்சுக்கிட்டிருந்த பொண்ணைத் தூக்கிட்டு வந்திருக்கான்யா… இதுக்குத்தான் இந்தக் குளத்திலேயே கிடக்குறான்போல… பழகுனதுக்காக உன்ன உயிரோடு விடுறேன்… ஊர விட்டு ஓடிப்போயிடு… இல்ல வெட்டிப் புதைச்சுடுவேன். கேட்குறதுக்கு நாதி கிடையாது….’ என்று சரமாரியாக அறைவிட்டார். எனக்கு அப்போது வேறு வழியே இல்லை.’

“இன்னும் எவ்வளவு தூரம் போகணும்… போரடிக்குது தாத்தா”

“பக்கத்துலதான்… எந்தத் தெருவுன்னுதான் தெரியல…இங்க நான் இருந்தப்ப இருபது வயசு. ஒரு தெருவுதான் இருந்தது… இந்தத் தெருவுல….போ… இல்ல… இது இல்ல … கிழக்குத் தெரு பக்கமாகப் போ…. வேணா…வேணா ம்… மேற்குத் தெரு…. இதுவும் இல்லை…. நேராப் போ…. அந்தத் தெருவுலத் திரும்பு… போ… அதிலேயே… போ….. திரும்பு… அதுக்கிட்டப் போ… நிறுத்து… திரும்பு… அங்கேயே போ…. நிறுத்து…நிறுத்து…”

ஊர்ந்து போய்க்கொண்டிருந்த நத்தை மேல் சிறுவர்கள் கல்லைப்போட செத்துத் தெறிக்கும் தண்ணீர்போல, திடீரென அடுக்ககம் அதிர சத்தம்போட்டு மாடஷ் உடலெங்கும் நடுங்கக் கதறினார். அணை உடைந்ததுபோல வேகவேகமாய் வெந்நீர் வடித்தார். என்ன ஆனதென்றே தெரியாமல் மாடஷோடு சேர்ந்து பேத்திகளும் கதறுகிறார்கள்.

‘அதே…அதே… இடம்தான். ஊரைவிட்டு வெளியேறுவதற்காக படித்துறை அருகில் வருகிறேன். என் பொண்ணையாட கெடுக்கப் பாத்த என்று எங்கேயோ போயிருந்த கீதாவின் அம்மா ஓடி வந்து செருப்பைக் கழற்றி என்னைச் சரமாரியாக அடிக்கிறாள். செருப்பில் ஊக்கைக் குத்தி போட்டிருப்பாள் போல. இடப்பக்க கீழ்புற இமைத் தோல் கிழிந்து இரத்தம் கொட்டுகிறது. உயிர்போவது போல தரையில் விழுந்து எழுந்து துடிக்கிறேன். தெருவே நின்று வேடிக்கை பார்க்கிறது.’

அதைவிட கனமான வலியை அங்கு எழுந்திருந்த பிரம்மாண்டக் கட்டடம் அவருக்குக் கொடுக்க, கதறிக்கொண்டே இருந்தார்.
நன்றி: வார்த்தை

Series Navigation

த.அரவிந்தன்

த.அரவிந்தன்

நீர்வளையத்தின் நீள் பயணம்-1

This entry is part [part not set] of 36 in the series 20090129_Issue

த.அரவிந்தன்



வெந்நீராய்க் கலங்கின மாடஷின் கண்கள். முறையாகக் கலங்கியது குளம் என்று சொல்வதுதான் சரி. சதுரக் கரைகளுக்குள் அதன் இருப்பிற்காக அலையும் குளம், உடலுக்குள் பாய்ந்து அமிழ்ந்து அலைகிறது என்பது அவருக்குள் வெட்டிக்கொண்டது.

முன்பெல்லாம் குளத்தில் குளிக்க இறங்குகையில் சூடாய்க் கரையும் உச்சிச்சூரியன் மீது படித்துறையில் பாசி வழுக்கித் தடுமாறியது போன்று வருத்தம் எழுந்ததுண்டு. குளத்தின் ஆவியை வாங்குது என்று முனகியதாகவும் ஞாபகம்.

மாடசாமி மூழ்குவான். மேற்மட்ட மஞ்சள் வெந்நீர் வெளியைக் கண்கள் திறந்து பார்ப்பான். இன்னும் அமிழ்வான். அடியாழ இருள்நீர் வெளி சூழும். மணற்தரை காலைத் தட்டும். ஆழ் நீரின் குளிர் அவன் முதுகை அழுத்திவிடும். அப்படியே மூச்சடக்கி இருபது காலடித் தூரத்துக்கு அடியாழத்திலேயே நீந்துவான். கொழகொழவென்று களிமண் சேறு காலில் கையில் படத்தொடங்கும். மூச்சு முட்டை மேலெழும்பும் வேகத்தில் உடனே மேலே வருவான். திருகாணியோடு மூக்குத்தியும் விழுந்ததுபோல எங்கோ கழன்று விழுந்திருக்கும் வருத்தம்.

வெந்நீரைக் கட்டுப்படுத்துவதற்கு மாடஷ் எடுத்த ஆயத்தங்கள் அனைத்தும் தண்டு அறுந்து மிதக்கும் தாமரை இலைபோல பயன் இல்லாமலே போயின. ஏறுவெயிலாய் ஏறிக்கொண்டே இருக்கிறது அவர் உடற்குளத்தின் வெப்பம். அடியாழத்தையும் குமிழ்களின் மேல் குமிழ்களாய்க் கொதிக்க வைத்துக்கொண்டிருந்தார்கள் அவரின் பேத்திகள்.

மூத்த பேத்தி ஜாய்ஃபுல் அவள் கல்லூரித் தோழி ஸீ பேர்ட்டிடம் அலைப்பேசியில் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். முடித்ததும் சத்தம்போட்டு தரை அதிரக் குதித்து, இளைய பேத்தி ப்ளு ஸ்கையையும் தாத்தா மாடஷையும் கணினி அறைக்குத் தொந்தரவால் இழுத்து வந்தாள். இரு பக்கத்திலும் அவர்களை உட்கார வைத்து கணினியை இயக்கி இணையத்தில் கூகுளுக்குள் நுழைந்தாள். தேடல் கட்டத்தில் www.wikimapia.org என்ற முகவரியைப் பதித்து நுழைவு பொத்தானை அழுத்தினாள். நீலம், பச்சை, வெள்ளை நிறங்களில் உலக வரைபடம் வந்தது.

“கடைகளில் வாங்கும் காகித வரைபடம் போல் இல்லை இது. பூமி உருண்டையில் எதையும் மிச்சம் வைக்காமல் காட்டும். மிரளாமல் பாருங்க.” என்று சத்தத்தால் ஜாய் சிரித்தாள் . ப்ளு ஸ்கை சிறகோசை எழுப்பினாள். மாடஷ் உள்ளத்துள் எழுந்த சிரிப்பு உதட்டுக்கரையில் மெலிதாய் மோதித் திரும்பியது. அந்தத் தளத்திலொரு தேடல் கட்டம் இருந்தது. அதில் “இங்கிலாந்து ஈஸ்ட் ஹாம் ரயில் நிலையம்’ என்று பதித்தாள். சிவப்பு நிறத்தில் ஒரு சக்கரம் சுழன்று முடிந்து, வரைபடத்தின் கிழக்கோரப் பகுதியில் ஒரு வெள்ளைத்திரையின் மேல் இங்கிலாந்தின் சில இடங்கள் கி.மீட்டர் விவரங்களுடன் வந்தன. அதில் ஈஸ்ட் ஹாம் ரயில் நிலையம் என்றும் இருந்தது. அதை அழுத்தி வரைபடத்தைப் பெரிதாக்கினாள். மேல் கோணத்தில் ரயில் நிலையம் தெரிந்தது. அதன் மேலும் கட்டம் கட்டி பெயர் குறிக்கப்பட்டிருந்தது. கொய்யாக்காயின் மீது தன் கால்களை வைத்து ஓர் எலி நகர்த்திக் கொண்டுபோவதுபோல எலி விசையைப் பயன்படுத்தத் துவங்கினாள் ஜாய். ‘லண்டன் ஐ’ இராட்சத இராட்டினத்தின் உச்சிப்பெட்டியிலிருந்து கீழே பார்ப்பதுபோல மிரட்சியின் கிச்சுக்கிச்சு மூட்டலில் இருந்தன மூவரின் வயிறுகள்.

நிலையத்துக்கு வெளியில் வந்தாள். அகலமான ஈஸ்ட் ஹாம் கடைவீதியில் திரும்பினாள். வீதித் தொடக்கத்திலேயே சாம்பார் மணம் மூக்கின் நரைமுடிகளைக் கடந்து மாடஷுக்குள் காற்றாய் நுழையத் தொடங்கியது. கட்டடப் பிரம்மாண்டங்களின் மேல் நகர்ந்துகொண்டே வந்தாள். பொம்மைப்பெண் கும்பிட்டு வரவேற்கும் ஈழத் தமிழர் துணிக் கடை வந்தது. சுரிதார் எடுத்துப்போட்ட அடலரசுவின் ஓரப்பார்வையைத் திருடி வந்ததை நினைத்து சிரிப்பை முழுங்கிக் கொண்டாள் ப்ளு ஸ்கை. நகைக் கடை, மளிகைக்கடை, சில அடுக்கக வீடுகளைத் தாண்டிப் போனார்கள். தெருவிலிருந்து விலகி நிற்கிற மகாலட்சுமி அம்மன் கோயில் வந்தது. “தொலைந்துபோன என் செருப்பு கிடைக்குமா தாத்தா?” என்று கோயில் வாசல் பக்கம் சிரித்தபடியே ஜாய்ஃபுல் போய்…போய் வந்தாள். ஒலிப்பேழை கடை, புத்தகக் கடை, சரவணபவன் ஓட்டல், சென்னை தோசா ஓட்டல், லண்டன் அலுவலர்களுக்கு மதிய உணவு அளிக்கும் விடுதிகளைக் கடந்ததும் இராட்டினப் பெட்டி கீழிறங்கியதுபோல பெரும் சந்தோஷச் சத்தம் எழுப்பினார்கள் பேத்திகள். “இதுக்குள்ள…இதுக்குள்ளதான் நாம இருக்கோம்” என்று ஸ்கை கத்தினாள். மென்மையாய் மெய்சிலிர்த்துக்கொண்டு “அப்படியே நம்ம அடுக்ககம்.” என்று மாடஷ் உற்றுப் பார்த்துச் சொல்லிக்கொண்டார். மாயசால நிமிடங்கள் ‘வீட்டிற்குள் உட்கார்ந்திருக்கோமா? இணைய வீட்டிற்குள் உட்கார்ந்திருக்கிறோமா?’ என்கிற மயங்கிய பொழுதாய் இருந்தது.

வீட்டின் மேல் எலி விசை மூலம் ஒரு பெரிய கட்டம் கட்டி, அப்பா “டேங்க்’, அம்மா “மல்லிகா’ பெயர்களுடன் அவர்கள் மூவர் பெயரையும் ஜாய் குறித்தாள். அந்த வீதியிலேயே கடைசியாய்ப் பெயர் குறிக்கிறோம் என்பதில் அவளுக்கு மிகப்பெரிய வருத்தம்.

‘கொஞ்சக் காலத்திற்குள் உயிர்கள் உட்பட அசையும் சொத்துக்களையும் காட்டத் தொடங்கிவிடுவார்கள். வீட்டிற்குள்ளும் இயல்பாய் இருக்கமுடியாது. ஒவ்வொருவரின் அந்தரங்கம் என்னாகும்?’ ஸ்கை யோசித்து முடிப்பதற்குள், ‘இங்கிலாந்து தேம்ஸ்’ என்று தேடல் கட்டத்தில் ஜாய் பதித்து நதிக்கு வந்தாள்.

எம்பாங்க்மென்ட் படித்துறையிலிருந்து புறப்பட்ட படகில் ஓடிவந்து கடைசியாய்த் தொத்துவதுபோல சேர்ந்துகொண்டாள் ஸ்கை. நதி போக்கில் ஜாய் போனாள். ஆடைகள் நனைந்ததுபோன்று சிலீரிட்டது. வழக்கப் பழக்கத்தில் பிக்பென் கடிகாரம் பார்த்தார்கள். கிழிப்பட்ட நீர்ப்பாதையில் வேகம் கூடியது. கரையிலிருந்த நாடாளுமன்றக் கட்டடம், லண்டன் ஐ இராட்சத இராட்டினம், நீள மூக்கு தூண் எல்லாம் பின்னால் கரைந்தோடின. செயின்ட் பால் தேவாலயம் அருகே வந்ததும் நதி மேலேயே மூவரும் நின்றனர். அங்கு படகு ஒன்று தனித்துக் கிடந்தது. அதன் மேல் கட்டம் கட்டி, ‘ஜாய்ஃபுல்’ என்று குறித்தாள். தன்னுடைய பெயரையும் அதில் சேர்க்கச் சொல்லி ஸ்கை சண்டை போட்டாள். அதில் கவனம் கொள்ளாமல் மாடஷ் அவருக்குள் ஊறிய ஆசையின் ஊற்றுக்கண்களில் தொய்ந்தார்.

‘பொன்வாசநல்லூர் சின்னக் குளமும் இதுபோல் தெரியுமா? அதன் படித்துறை தெரியுமா? சத்தமான மூச்சுக் காற்றில் விலகுகிற அலைகளுடன் பசுக்கள் தண்ணீர் குடிப்பது தெரியுமா? மையக் குளத்தில் மாடஷ் என்று குறிக்க வேண்டும். வேண்டாம். மாடசாமி என்றே… ஒரு காலத்தில் அந்தக் குளத்தில் குளிக்கிறபோதே உயிர் போகவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்…’

வேறொரு படகில் பெயர் வைக்கிற சமாதான உடன்படலோடு ஜாய் நதி நகர்த்திப்போனாள். டவர் பாலம் அருகில் எச்.எம்.எஸ்.பெல்ஃபாஸ்ட் என்ற இரண்டாம் உலகப் போர்க் கப்பல் அதன் முதுமையைக் கழித்துக் கொண்டிருந்தது. அந்தக் கப்பலுக்குள் சுற்றிப் பார்க்க அப்பாவோடு நுழைந்த போது முன்னால் போனவரின் கால் தட்டி விழுந்த நினைவில் ஜாய் விழுந்தாள். அந்தக் கப்பலிலாவது தன்னுடைய பெயரைக் குறிக்குமாறு ஸ்கை எலிவிசையைப் பிடுங்கப் போனாள். ‘போர்க் கப்பலில் வேண்டாம். வேறு எதிலாவது வைக்கிறேன்’ என்று நதியை விட்டு தனித்து டவர் பாலத்திலேறி ஜாய் போகத் தொடங்கினாள்.

“சின்னக்குளம்” } சிறிதாய்த் தலை தூக்கி நீந்திப் போகிற தண்ணீர் பாம்புபோல மெல்ல தன் விருப்பத்தைத் தெரிவித்தார் மாடஷ்.
“பொறு தாத்தா. பக்கிங்ஹாம் அரண்மனையைப் பார்த்துட்டு வர்றோம்”
“குளம்”
“கோவண்ட் தோட்டம் போறோம்”
“….”
“பிக்கடில் போய் பர்லிங்டன் ஆர்க்கேட்டில் சிற்பம் வாங்கப் போறேன்”
“குளம்”
“பிரான்ஸ் ஈபிள் டவர் மேல ஏறணும்”
நண்டு வளை பெரிதாகி கசிவு அதிகமானது. இருக்கையை மாடஷ் பின்னால் எடுத்துப் போட்டுக்கொண்டார். துண்டால் கசிவைக் கட்டுப்படுத்தினார். கால்களை இறக்கி, தொப்பை முன் தள்ள இருக்கையில் சரிந்துகொண்டு கண்களை மூடினார். உள்ளுக்குள் நீந்தியபடியே மாடசாமி பேசத் தொடங்கினான்.

‘சொல்லிக்கொள்ளாமல் சூரியன் திரும்பிக்கொண்டிருக்கிறது.கடைசி ஈரமாயிருந்த தாத்தாவையும் சுடுகாட்டில் வைத்து எரித்துவிட்டு வந்தவர்கள் ஒவ்வொருவராய் மஞ்சள் மணம் வரும் சின்னக் குளத்தில் இறங்குகிறார்கள். படித்துறை வலப்பக்க சறுக்குச்சுவரில் ஏறி வேகமாய் ஓடிவந்து தொபுக்கடீரெனப் பல்டி அடித்து மூழ்குகிறான் ஐந்தாம் வகுப்பு கருப்பன். நாலாப்பக்கமும் தண்ணீர் தெறித்து சத்தம் எழுந்து நிசப்த்தமாகிறது. மூழ்கியவன் அதே இடத்தில் இருப்பதற்கான குறியீட்டு நீர்வளையம் எதுவும் அங்கு தெரியவில்லை. சலனமற்ற ஐந்து நிமிடங்கள் முடிவுக்கு வந்து நடுக்குளத்தில் எழுந்து “மாடசாமி’ என்று கத்துகிறான் கருப்பன். இரண்டாம் வகுப்புக்குரிய உடலைக் கடைசிப்படியில் குப்புறக் கிடத்திக்கொண்டு கால்களைத் தண்ணீரில் நீட்டித் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறேன். கத்தியழைத்த நேரம் மீன் ஒன்று கால் சிரங்கில் கடிக்கிறது. வலி பொறுக்காமல் பதறி உடலோடு விழுந்து மூழ்கி தண்ணீர் குடித்து மூச்சடைத்து தத்தளிக்கிறேன். இறுதி மூச்சு மூழ்கப்போகிற சமயம் தலையின் கொத்து முடி பிடியில் பிழைத்துக்கொள்கிறேன். முடி பிடியின் சொந்தக்காரர் யாரென்று பல வருடங்களாய் யோசித்துப் பார்த்துவிட்டேன். இந்த எண்பதிலா வரப்போகிறது. இப்போது உயிரோடு இருப்பானா கருப்பன்?’

“ஓ…ஓ…ஓ…. தாத்தா இங்க பாரு. சுவிட்சர்லாந்து சுவிஸ் பேங்க். இதுல பணம் கிணம் போட்டு வைச்சுட்டு சொல்லாமக் கொள்ளாமச் செத்துப் போயிடப் போற… ” பின்னால் திரும்பி மாடஷை உலுக்கிச் சிரித்தாள் ஜாய். தவளைக் குஞ்சுகளைப் பிடித்துவிட்டு கெண்டைக் குஞ்சுகளைப் பிடித்ததாய்த் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் குழந்தைகளைப் போன்று சிரிக்க வைத்துவிட்டதாய்ப் பேத்திகள் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மாடஷ் உதடுகளை விரித்தார். பேத்திகளுக்கு அவர் சிரித்தாரா என்பதைக்கூட பார்க்க முடியாத உலக அவசரம்.

‘மொட்டப்புள்ள, மாக்கான், விடிஞ்சான் சனியன், நான். நான்கு பேரும் சேர்ந்து தாமரை பறிக்க வலப்பக்கக் கரையில் நடந்தோம்.வயலுக்குத் தண்ணீர் பாய்கிற வடிகுழாய்க்கு அருகில் நெருங்கினோம். “அங்க பாரு… வானம்’ என்று நீர்க்குமிழ்களைக் காட்டி ‘ஒண்ணு…. ரெண்டு … மூணு’ என்று எண்ணினான் மாக்கான். “உடையாத வானத்தை யாரு அதிகமா எண்ணுறாங்களோ… அவுங்கதான் ஜெயிச்சவங்க… ஆனா நான் எண்ணுற பக்கம் எண்ணக்கூடாது. அந்தப் பக்கம் எண்ணுங்க…’ என்று வேறு சொன்னான். “என்ன விளையாட்டு இது. யாரு கண்டுபிடிச்ச விளையாட்டு. விதியெல்லாம் யார் வகுத்தது’ என்று கேட்பதற்குள் மொட்டப்புள்ள வேறு பக்க வானங்களை எண்ணுகிறான். விடிஞ்சான் சனியன் சுற்றிச்சுற்றிப் பார்த்தான். கருவை மரத்துக்கு அடியில் ஒரு சவுக்காரம் கிடந்தது. சவுக்காரங்கிற வார்த்தையை எவ்வளவு நாளைக்குப் பிறகு நினைக்கிறேன். அதை எடுத்து தண்ணீரில் கரைச்சான். ஏகப்பட்ட வானங்கள். ‘என்னுடையதை யாராவது எண்ணினால் அவ்வளவுதான் …’ என்று மிரட்டினான். எனக்குப் பயங்கரக் கோபம். வானத்தைப் பிரதிபலிக்கும் நீர்க்குமிழ்களைத்தான் எண்ணுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவே எனக்கு அதிகம் நேரமாகிவிட்டது. என்ன செய்வது என்று யோசித்தேன்… என்ன செய்தேன் தெரியுமா? ஆ…ஆ…ஆ…ஆ…’

“எப்ப சொன்ன ஜோக்குக்கு எப்ப சிரிக்கிறாரு பாரு தாத்தா… ஜிஸô பிரமிடு எப்படித் தெரியுது பாரேன்… ”

‘ ‘சொய்ங்’ன்னு இப்படியும் அப்படியுமா மூணு பேரோட குமிழ்கள் மேலயும் சிறுநீர் விட்டு, “ஒரு வானம், இரண்டு வானம்’ என்று எண்ணத் தொடங்கினேன். கோபம் பொத்துக்கிட்டு மூணுபேரும் துரத்துகிறார்கள். ‘அவுனுங்க’ என்று சொல்வதா? அவர்கள் என்று சொல்வதா? களிமண் காய்ந்து சின்னச்சின்னக் கட்டிகளாக கிடக்கிற கரையில் வேகமாக ஓடமுடியாது. அப்படியும் ஓடுறேன். சரிவோரப் பகுதியில் கால் வைத்திருப்பேன்போல். சறுக்கிவிட்டது. குளத்தில் விழுவதற்குள் ஓரத்தில் இருந்த தென்னம்பிள்ளையைப் பிடித்து மேலே வந்தேன். கால் முட்டி தோல், கை முட்டி தோல் தேய்ந்து இரத்தம் கசியுது. மூணு பேரும் பயந்துவிட்டார்கள். “சின்ன வாத்தியார்ட்ட சொல்லிடாதடா’ என்று கெஞ்சுகிறார்கள். நான் சொல்லமுடியுமா? சிறுநீர் விட்டதற்கு என்னைத்தான் வாத்தியார் அடிப்பார் என்று தெரியும். அதை அவன்களிடம் சொல்லவில்லை. செத்துக்கல் விளையாட வாங்க என்று அழைத்தேன். எப்போதும் கால்சட்டைப் பையில் மெலிதான சல்லி ஓடுகளைத் தயாராய் வைத்திருப்பேன். அங்க இங்க ஓடி மட்டி, ஓடு எடுத்து வந்தார்கள். மாக்கான் மட்டும் வரவில்லை. ஆடு ஓட்டப்போகணும் என்று போய்விட்டான். கீழே விழுவதுபோல சாய்ந்துகொண்டு மட்டியை வீசினான் மொட்டப்புள்ள. காத்து பலமாக இருந்தது. குளத்திலேயே விழவில்லை. விடாது சிரித்தோம். ஓட்டை எடுத்து ஓரளவு சாய்ந்து நின்று வீசினான் சனியன். மீன் கொத்த வந்த குருவியின் கால் பட்டு போவதுபோல செத்துக்கல் ஒன்று, இரண்டு, மூன்று இடங்களில் பட்டுப்போனது. ராஜாதி ராஜ, ராஜக் கம்பீர, ராஜக்குல திலக, ராஜ மார்த்தாண்ட, ராஜக் குலோத்துங்க, ராஜப் பராக்கிரம, தண்ணீர் பிரதேச மகாராஜா பராக்..பராக் பாவனையோடு வந்து எறிகிறேன். ‘டொடங்..டொடங்…டொடங்..டொடங்… நாலு’. மொட்டப்புள்ள ஓட ஆரம்பித்துவிட்டான். பிடித்துவந்து பாதி தூரம் அவனையும், பாதி தூரம் சனியனையும் உப்புமூட்டை தூக்க வைத்தேன். தூக்க முடியாமல் கீழே போட்டுவிட்டு சமாளிப்பதற்காக வறுத்து ஊறவைத்த புளியங்கொட்டையைக் கால்சட்டை பையில் இருந்து எடுத்துச் சாப்பிடக் கொடுத்தான். எவ்வளவு புளியங்கொட்டை சாப்பிட்டிருக்கேன்? இதுவரை ‘டொடங்’- ஐந்து வரை விட்டிருக்கேன். திரும்பத் திரும்ப ‘டொடங்…டொடங்’ என்று சொல்லவேண்டும் போல் ஆசையாய் இருக்கிறது. ஆறாவது ‘டொடங்’ விட்டால் எப்படி இருக்கும்? ஓடெடுத்துச் சும்மா இப்படி விடணும்?’

“ம்கும்.. எழுந்திருக்கவே மாட்டேன்… தள்ளாத தாத்தா… ஆல்ப்ஸ் மலைத் தொடர்ச்சி மேல நடக்கப் போறோம்…”

இருக்கையை இன்னும் பின்னால் எடுத்துப் போட்டுக்கொண்டார் மாடஷ். கதை கேட்க இறால்கூட்டமும் வந்துவிடட்டும் என்பதுபோல சிறிது நேரம் மாடசாமி அமிழ்ந்து கிடந்தான்.

Series Navigation

த.அரவிந்தன்

த.அரவிந்தன்