“18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்கள் தேசத்தின் துரோகி”

This entry is part [part not set] of 28 in the series 20080918_Issue

கே.பாலமுருகன்



நூற்றாண்டின் கதையைப் பற்றி சில வரிகள்
நூற்றாண்டின் கடைசி கட்டத்தில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அடிமை தேசங்களை வீழ்த்தி நாசப்படுத்தியப் பின் நாடு திரும்பிக் கொண்டிருந்த அரசன் அந்தச் செய்தியைக் கேட்டதும் எல்லையைலேயே மயங்கி வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொண்டான். அவனுடைய கழுத்தை அறுத்து நதியில் சொட்ட சொட்ட வடிய விட்டு, போர் வீரர்கள் மொத்தமாக நதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்கள். நதியின் ஓட்டத்தில் சிக்கிக் கழுத்துத் துண்டிக்க, உடல் சிதற குருதி வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் நுழைந்தது. ஊர் மக்கள் ஒவ்வொருவராக இறந்து மடிய ஊரில் இறந்தவர்களின் தேகம் மிதக்கத் தொடங்கின. அடிமை தேசங்களிலிருந்து தப்பித்து வந்த கழுகுகள் அந்தத் தேகங்களைக் கொத்தி தின்றன. 18 ஆம் நூற்றாண்டின் அழிவின் உச்சம் அந்த ஊரின் அழிவோடு முற்றுப் பெற்றது.

19 ஆம் நூற்றாண்டு- சம்பவம் 1
புதுக் கவிஞர்கள் வளரத் தொடங்கியிருந்த காலக்கட்டம். அதிகமான சர்ச்சைகளும் விவாதங்களும் ஆரோக்கியமான சூழலை புறகணித்துவிட்டு தனிமனித அவதூறுகள் உச்சத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தது. யார் கவிஞர்? யார் எழுதுவது தரமான கவிதை? எது கவிதை? என்று மூன்று பக்கமும் ஒரு சிறுகூட்டம் சர்ச்சையைக் கிளப்புவதற்கென்று இயங்கிக் கொண்டிருந்ததால் நடுநிலை கவிஞர்களுக்குத் தலைச் சுற்றியது.
“வணக்கம்! நம்ப எல்லாம் இன்னிக்கு இங்க கூடியிருக்கறதுக்கு முதல் காரணம் சித்தார்த் எனும் கவிஞனின் கவிதைகள் குறித்த சர்ச்சையைப் பற்றிப் பேசுவதற்குத்தான்”
பல்முனை மோதல்களையும் கடந்து இப்படியொரு இலக்கியக் கூட்டம் நடப்பது அபூர்வம்தான். அதைத் தொடக்கி வைத்து முன்னால் கவிஞர் இராமலிங்கம் பேசிக் கொண்டிருந்தார். அவரது குரலில் பழைய நூற்றாண்டின் தளர்வும் குற்ற உணர்ச்சியும் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தன.
“நான் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் பிறந்தேன். அப்பொழுதெல்லாம் கவிதை ஒருசிலரின் சுயப் புரட்சிக்கும் சுயநலத்திற்கும்தான் பயன்பட்டுக் கொண்டிருந்தன. சொல்லப் போனால் நான் பிறக்கும் முன்பெல்லாம் யார் அரசருக்கு நெருங்கிய நண்பராகவோ சொந்தமாகவோ இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் கவிதை எழுதவோ பாடவோ உரிமை இருக்கிறது. இப்படித்தான் சாமான்ய கவிஞர்களின் ஆளுமைகள் ஒடுக்கப்பட்டன. இதில் எத்தனைப் பேருக்கு இது பற்றி தெரியும்? யாருக்கு அக்கறை உண்டு? ஒரு கவிஞன் இருந்தால் என்ன? வாழ்ந்தால் என்ன? இறந்தால் என்ன? அலட்சியம்! நவீன கவிஞர்களுக்கு இதிலெல்லாம் ஈடுபாடு இல்லையாம். என்ன வேடிக்கை”
“யேன் சார்! 18 ஆம் நூற்றாண்டுலெ எங்க சார் அரசர் எல்லாம் இருந்தாங்க? என்னா கதை உடுறிங்களா?”
கூட்டத்திலிருந்த யாரோ ஒரு குழந்தை கவிஞர் சத்தமாக முனகினார்.
“நீங்க அப்பெ இல்லை. வரலாறு சொல்றத அப்படியே ஒப்புவிச்சி பேசறிங்க. எங்களுக்குத் தெரியும்! நாங்கத்தான் எங்களோட நூற்றாண்டின் சாட்சி. எங்க நூற்றாண்டுல எங்க தேசத்துல அரசர் இருந்தார், அரண்மனை இருந்தது, போர் நடந்தது, நதியில் இரத்த வெள்ளம் ஓடியது. இது வரலாற்றுல இல்லை. அதற்காகப் பொய்யாயிடுமா? இப்பொழுது அது அல்ல பிரச்சனை. சித்தார்த் எனும் கவிஞர் வாழ்ந்த அந்தத் தேசம் நாசமாகப் போனதற்கு எது காரணம்? அதை ஆராய்ந்தால் எல்லாவற்றுக்கும் விடை கிடைத்துவிடும்”
சித்தார்த் அவர்களின் ஒரு கவிதையை வாசித்துக் காட்டிவிட்டு இராமலிங்கம் தடுமாறிக் கொண்டே அமர்ந்தார். தளர்வின் உச்சம் அவருடைய எல்லாம் அசைவிலும் வெளிப்படையாகத் தெரிந்தது.
“கைகளை விட்டுத்
அந்தக் கர்ப்பப்பை
சுமந்து கொண்டிருப்பது
உன் வாரிசையா என்று
சோதித்துப் பார்”
அந்தக் கவிதையை வாசித்ததும் கூட்டத்தில் பலமான சலசலப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மற்றொரு கவிஞர் எழுந்து நின்று மேலுமொரு கவிதையை வாசிக்கத் தொடங்கினார்.
“உன் வீட்டு
வாசலில்
முள் கிரிடங்களை
குத்தி வை
படித் தாண்டுபவளின்
கால்கள் அறுந்து
வீதியில் தொங்கட்டும்”
கூட்டத்திலிருந்து ஒரு வாட்டசாட்டமான கவிஞர் எழுந்து நின்று அவருடைய நெஞ்சை நிமிர்த்திக் காட்டினார். கைகள் தடிப்பாக பலசாலியைப் போல நின்று கொண்டு முன் அமர்ந்திருப்பவர்களின் முகங்களைப் பார்த்தார்.
“இதுலாம் கவிதையா? எப்படி சார் வாய் கூசாம இந்தக் கவிதையை வாசிச்சி காட்டறீங்க? கேவலாம இல்ல உங்களுக்கு? நீங்கலாம் பழைய கவிஞர்களா? வெட்கமா இருக்கு நினைக்கவே”
“நாங்க யாரும் இந்தக் கவிதைகளை ஆதரிக்கரும்னு சொல்லலையே! கவிதையை வாசித்துதான் காட்டினோம். . அவரு எழுதன கவிதைகள் இதைவிட மோசமானதுலாம் இருக்கு. . சபை நாகரிகம் காக்க, அதையெல்லாம் வாசிப்பதிலிருந்து தவிர்த்துவிட்டோம். நாங்க பழைய கவிஞர்களா இல்லையானு வாதம் நடத்த வேண்டாம். அதற்கான களம் இதுவல்ல. புதிய கவிஞர்களுக்கு நாவடக்கம் வேணும்னு நினைக்கறேன்”
சபையில் மீண்டும் சலசலப்பு. நடுவில் பிரபல சினிமா கவிஞர் ஒருவர் சபையில் நுழைந்தார். அவரைப் பார்த்ததும் பலருக்குப் பரவசம். சலசலப்பு மண்டபத்தின் நான்கு திசைகளிலும் எதிரொலித்தது. அவரை முன் வரிசையின் இருக்கையில் அமர்த்தினார்கள். 2 கவிஞர்கள் அவருடைய கால்களுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, அவருடைய செருப்பை தலையில் வைத்துக் கொண்டு கீழேயே அமர்ந்திருந்தார்கள்.
மற்றுமொரு புதிய கவிஞர் எழுந்து நின்று மண்டபமே அதிரக் கத்திப் பேசினார்.
“இந்தக் கதைலாம் இங்க வேணாம். எங்களுக்கும் மரியாதை தெரியும். என்னா அதை யேன் உங்களுக்காகச் செலவாக்கனும்னுதான் பார்க்கறோம். நாங்கலாம் விடுதலை கவிஞர்கள். சமூகத்தின் முன்னேற்றத்திற்காகத்தான் எழுதுவோம். . எழுத்தைக் கொண்டு சமூகத்தை நாசமாக்க மாட்டோம், சித்தார்த் போன்ற இழிவான மனிதர் போல” மண்டபமே அமைதியில் உறைந்திருந்தது.

19ஆம் நூற்றாண்டு – சம்பவம் 2

சித்தார்த்தின் கவிதையை எதிர்த்து எழுதப்பட்ட ஒரு கதை

வீதியில் நின்றவாறு ஒரு பைத்தியக்காரி சுவரில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தால். அவள் புத்திசுவாதினம் இல்லாதவள் என்பதால் பலமுறை சாலை சந்துக்களில் வைத்துக் கற்பழிக்கப் பட்டிருக்கிறாள். யாரெல்லாம் அவளைக் கற்பித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டால், சமூகமே அதிர்ச்சியடையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 17 வயது இளைஞன் முதல் சாலைகளைக் கூட்டிச் சுத்தம் பண்ணும் நபர்வரை, இருளில் காமத்தை விழுங்கியிருக்கிறார்கள்.
அவளுடைய தோற்றம் எப்படியிருக்கும் என்றால், பாவாடை பின்பக்கம் கிழிந்து பிட்டத்தின் பாதி பகுதி தெரியும்படியாகவும், தொடையில் விழுந்திருக்கும் தடிப்பான காயங்களிலிருந்து சீழ் வடிந்தபடியும், சாலையில் கால்களை அகலப் பரப்பி அமர்ந்திருப்பாள். வாயிலிருந்து வானீர் ஒழுகி, அவளைத் தூரத்திலிருந்து பார்த்துவிட்டாலே துர்நாற்றம் வீசத் தொடங்கிவிடும். அண்மையில்தான் ஒரு மழைக் காலத்தில் லோரியில் அடிப்பட்டு அவள் இறந்து போனாள். எல்லோரும் அவளைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள்? “சாலையிலே திரிஞ்சிகிட்டு இருந்த இந்தத் தேசத்தோட கடைசி தேவடியாள்”
அவள் சுவரில் கிறுக்கி வைத்திருந்த வாசகங்களைப் படிக்க நேர்ந்தது. அந்த வாசகங்கள் கவிதைகள் போலவே தெரிந்தது.
“மீதம் ஒட்டிக் கொண்டிருக்கிறது
அந்த வரிகள்
சித்தார்த் எனும் மூடனின்
வரிகளில் சிதைந்து
நாசமாகிவிட்டன தேசங்களின்
உயிர்கள்”

சித்தார்த் என்பவனின் சுயசரிதை

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்களில் சித்தார்த்தான் தனித்த அடையாளமாக நவீன பாணியைக் கடைப்பிடித்தவன். அவன் கவிதை வரிகள் நகரத்தில் உறங்கிக் கொண்டிருந்த விளிம்பு ஆண்களை விழிக்கச் செய்தது. கஞ்சா அடிக்கும் ஆண்களெல்லாம் அவன் வரிகளை நகரத்தில் வைத்து உரக்கக் கத்தத் தொடங்கினார்கள். எல்லோரும் பைத்தியம் போல சித்தார்த்தின் கவிதையில் மயங்கிப் போய், பிறழ்வு நிலையில் அலையத் தொடங்கினார்கள்.
“ஆண்களே!
உங்கள் உடலில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
மாற்றான் வீட்டுத்
தூசுகளை உதறித் தள்ளுங்கள்!
அதில் பணக்கார வீட்டுப்
பெண்களின் தீராத
காமம் கலந்திருக்கும்!”
பல காலம் வேசியைத் தேடி அலைந்த ஆண்களெல்லாம் சுய இன்பத்திற்குத் திரும்பினார்கள் சித்தார்த்தின் கவிதைகளைப் படித்து. ஒருசில ஆண்கள் கூட்டத்திற்கு அவன் கடவுளானான். ஆண்கள் தேசம் ஆக்கிரமிப்பை முதலில் சித்தார்த் கவிதையிலிருந்துதான் தொடங்கியது. அவன் கவிதை வரிகள் ஆத்திரத்துடன் ஆண்களை உயர்த்தி மற்றதையெல்லாம் பிளந்து எடுத்தது.
“ஆண் மகனே!
நீ மட்டும்தான்
கடவுளின்
பக்கத்தில் அமர்ந்திருக்கக்கூடிய
தகுதியைப் பெறுகிறாய்!
உன்னைச் சார்ந்த
உலகம்
இனி விழிக்கத் தொடங்குகிறது!
எழுந்து நில்!
ஆட்சி கொள்!”
அந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்களெல்லாம் சித்தார்த்தாக மாறத் தொடங்கினார்கள். ஆட்சியிலிருந்த அரசாங்கமும் ஆண் சமூகத்தை உயர்த்திய சித்தார்த்தை தாங்கிப் பிடித்து, தங்க தட்டில் வைத்து அலங்கரித்தது.
சித்தார்த்தின் திடீர் மறைவிற்குப் பிறகு தேசம் அழிந்த சோகம் இன்றும் ஒரு சோம்பலான மழைப் பொழுதில் நினைவுக் கொள்ள முடிகிறது. எல்லாம் முடிந்துவிட்டது. புதிய நூற்றாண்டு தொடக்கத்தில் நல்ல வெயில் நேரமாகப் பார்த்து ஒரு பெண் நகரத்தில் நுழைந்து துண்டு பிரசுரத்தை எல்லோரிடமும் விற்றுக் கொண்டிருந்தாள்.
“நாளை நூற்றாண்டு காணாத பெண் கவிஞர்கள் கூட்டம்! தவறாமல் வாருங்கள்! பெண்ணியம் பேசலாம்! பெண் சமூகத்தை கட்டியெழுப்ப கவிதைகள் படைக்கலாம்.”
அந்தத் துண்டு பிரசுரத்தின் கீழே தடிப்பான எழுத்தில் ஒரு கவிதை இருந்தது.
“சித்தார்த் பிறப்பின்
அவமானம்!
அவன்
தற்கொலை செய்து கொண்டவன்!
ஆண் மகனின்
கடைசி பிம்பத்தையும்
அவமானப்படுத்தியவன்!
ஆண் பாதி பெண் பாதியாக
வாழ்ந்து மடிந்த
ஆண்கள் தேசத்தின்
துரோகி அவன்!”
-முடிவு-


bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்