சந்திரமுகி வீடியோ கடை

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

கே.பாலமுருகன்



மழைப் பெய்து விட்டிருந்தது. யாரோ வந்து சொருகிவிட்டுச் சென்றதைப் போல சாலை எங்கும் பேரமைதி. மோட்டாரில் இப்படி மழைவிட்டக் கனங்களில் பயணிக்கும்போது அசாத்தியமான கவனம் தேவை. எங்கள் ஊர் சாலையை நம்பி கொஞ்சம் அலட்சியமாக இருந்துவிட்டாலும், எங்கிருந்துதான் வந்து தொலையுமோ வாய் பிளந்து காத்திருக்கும் குழிகள். டமாரென்று மோட்டாரின் சக்கரம் அதில் முக்கி எழுந்திருக்கும்போது இதயம் இடம் மாறியிருக்கும்.
“அடச்சீ!” “மாரியாத்தா உண்டியல்ல போட” “செத்தாண்டா” இப்படி ஏதாவது அவசர வார்த்தைகள் வந்து வாயிலிருந்து முட்டி திணறி வெளியாகிவிடும். இப்பொழுதுதான் புதியதாகப் போட்ட சக்கரமாக இருந்தால், அடிவயிற்றில் காஞ்சனா அக்காள் மாவு பிசைந்து கொண்டிருப்பது போல ஒலி கேட்கும்.
“நல்ல சிவாஜி படமா எடுத்துக்கிட்டு வா! சும்மா புதுப்படம் புதுப்படம்னுகிட்டு. . கர்மம்”
“அண்ணெ! ஒழுங்கா புதுசா வந்த ராமன் தேடிய சீதை, இல்லனா தாம் தூம், ஓகேவா? அப்பாகிட்ட சொல்ல வேணாம்”
சிவாஜியா அல்லது தாம் தூமா? டமாரம் டுமாரம் என்று அலறியடித்துக் கொண்டிருந்தது மனம். வீடியோ கடை நகரத்திலிருந்து 10 நிமிடம்தான். அதற்க்குள்ளாக முடிவெடுத்துவிட வேண்டும். கையிலிருப்பது என்னவோ 3 ரிங்கிட்தான். அண்ணனிடம் ஒரு படம் எடுத்தாலும் காசு கட்டிவிட்டுத்தான் எடுக்க முடியும். கடன் சொல்லிவிட்டால் அவர் புராணம் பாடத் துவங்கிவிடுவார்.
“தம்பி! படம்லாம் போய் கடனுக்கு வாங்கிப் பார்க்கக்கூடாது! புரியுதா? அதே ஒரு மாதிரி டைம் பாஸ்ஸிங் மேட்டர், அதுலே போய் கடனா? மனுசன் இன்னும் டாய்லேட் போக மட்டும்தான் கடன் சொல்லல போல”
வீடியோ கடை அண்ணன் பெயர் சுதாகர். வீடியோ கடையின் பெயர் “சந்திரமுகி வீடியோ கடை”. அண்ணன் அடிக்கடி வீடியோ கடையின் பெயரை மாற்றிக் கொண்டே இருப்பாராம். அனேகமாக அடுத்த பெயர், “தசாவதாரம் வீடீயோ கடை” என்பதாகத்தான் இருக்கும் போல. அண்ணன் பிரசித்திப் பெற்ற “திருட்டு” வீசிடி மன்னன். அண்மைய படங்கள் தியேட்டருக்கு வருவதற்கு முன் இவர் கடையின் கருப்பு அட்டைப் பெட்டியில் ரிலிசாகிக் கொண்டிருக்கும். அண்ணன் புருவம் உயர்த்தி, மிகவும் சாமர்த்தியமாக, அதே சமயம் குரலைத் தாழ்த்தி, “புதுப்படம் இருக்கு வேணுமா? என்று இலேசாகச் சிரிப்பார். தெரிந்து கொள்ள வேண்டியதுதான், ஏதோ ஒரு புதுப்படம் அண்ணன் கடையில் ரிலிசாகிவிட்டது என்று.
“தியேட்டருக்கே இன்னும் வரலேப்பா!”
அவர் அப்படிச் சொல்லிவிட்டார் என்றால் மறு வசனமே கிடையாது. காசு கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். நான் அப்படியெல்லாம் வாங்கியது கிடையாது. ஒர்ஜினல் இருந்தால் மட்டுமே வாடகைக்கு எடுத்துக் கொண்டு போவேன். என் வீட்டு வீசிடி திருட்டுமுறையில் எடுக்கப்பட்ட படத்தையெல்லாம் உள்ளே அனுமதிக்காது. வாய்ப் பிளந்து வெளியே துப்பித் தள்ளிவிடும்.
“தம்பி! நம்பாளுங்ககிட்ட என்னா காசு மழையா பொழியுது? வெளியாவறெ எல்லாம் படத்தையும் போய் ஒர்ஜினல் வாங்கிப் பாத்தா, என்னா ஆகும் நெலம? எல்லாம் நம்ப மனசுதான் காரணம்பா. . தப்பில்ல. . வாங்கிக்க. . தரமா இருக்கும் படம்லாம். . எந்தக் கோளாறும் இல்ல”
அவர் கடையின் வாசலிலும் உள்ளே நுழைந்தவுடன் தலைக்கு மேல் எரிந்து கொண்டிருக்கும் மஞ்சள் விளக்கும் வெள்ளை விளக்கும் அங்கு வெகுநேரம் நிற்பவருக்கு ஒருவகையான போதையைக் கொடுத்துவிடும். அண்ணன் வியாபார காந்தமாக வளர்ந்து அந்த அறைக்குள்ளாகவே தலை நீண்டு வாய் அகன்று வீசிடிகளை கக்கும் அசுரனாகத் தெரிவார். அப்படியே அதில் சொக்கிப் போய் கைகள் தானாக புதுப்படக் காப்பிகளை(வீசிடி/டீவிடி) வாங்கிக் கொண்டு ஓடும்.
அண்ணனின் வீடியோ கடையின் அமைப்பைப் பற்றிப் பேசினாலே தடுமாற்றம் தென்படும். கடையின் வாசலில் வலதுபுறத்தில் ரம்பா மேலே பறக்கும் சிவப்புப் பாவாடையைக் கட்டுப்படுத்திக் கொண்டு பரவசமாக நின்று கொண்டிருப்பாள். அந்தப் படத்திற்குக் கீழ் கார்த்திக்கும் பிரபுவும் மோதிக் கொள்ளத் தயாராவது போல எதிரெதிரே நின்றிருப்பார்கள். அந்தப் படத்தில்பிரபுவின் முகம் பாதி மறந்து, அந்தப் பாதியில் விஜயகாந்த் கருப்புக் குடையைப் பிடித்துக் கொண்டு வானத்தைப் பார்த்தாவாறு நின்றிருப்பார். மேலே “சின்ன கவுண்டர்” என்று பெரிய எழுத்தில் போட்டிருக்கும். கடையின் வாசலில் இடதுபுறம் ஆர்யா துப்பாக்கிகளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பான். அந்தப் படம் வித்தியாசமானமுறையில், அதன் பிம்பம் மையத்தின் புள்ளியிலிருந்து நீண்டு விரிவதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
உள்ளே நுழைந்ததும் சந்திரமுகி ஜோதிகா கண்களை விரித்து உருட்டிக் கொண்டு வரவேற்பாள். அந்தப் படங்களுக்கு நடுவே அண்ணன் எப்பொழுதும் நிற்கும் இடத்திற்கு மேலே பாக்யராஜ் தனது கண்ணாடியைச் சரிசெய்தவாறு புன்னகைத்துக் கொண்டே இருப்பார். இத்தனைக்கும் மத்தியில் அண்ணனுடைய முகம் வழக்கமான பிரகாசத்தைப் பெற்று வாடிகையாளர்களிடம் சாமர்த்தியமாகப் பேசும் பாவனையோடு நிலைத்திருக்கும்.
“வாங்க தம்பி! லகலகலகலகலக! உம்மா. . என்னா படம் வேணும்பா?”
அண்ணனைப் பார்த்தாலே சிரிப்பு வந்து தொலையும். நாக்கை வெளியே நீட்டி சந்திரமுகியைப் போல கண்களைச் சிமிட்டி நகைச்சுவையாகச் செய்து காட்டுவார்.
சிலசமயங்களில் சுதாகர் அண்ணன் மிகவும் பவ்வியமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர் அப்படி நடந்து கொண்டார் என்றால், அன்று முழுவதும் திருட்டு வீசிடி பற்றிப் பேசவே மாட்டார் என்று அர்த்தம். ஒன்று பக்கத்துக் கடையிலிருந்து தகவல் வந்திருக்கும், “ஹரி இனி அடா ஓப்பராசிலோ” என்று. சீனக் கிழவி வந்து தட்டுத்தடுமாறி போலிஸ் ரோந்தைப் பற்றிச் சொல்லிவிட்டுப் போவாள். மற்றொன்று திருட்டு வீசிடி எல்லாம் விற்று முடிந்திருக்கும்.
“நாளைக்கு வாங்க தம்பி! கொஞ்ச நேரம் வேலதான். . உங்களுக்கு இல்லாத படமா? வந்து அள்ளிக்கிட்டுப் போங்கயா”
அவரிடம் சிக்காத புதுப்படங்கள் இல்லை. வாரத் தொடக்கத்திலேயே எங்கேயோ சென்று புதுப்படங்களின் திருட்டுக் காப்பிகளை எடுத்துக் கொண்டு வந்துவிடுவார். பிறகு 2 நாட்களுக்கு அவரது அறையில் திருட்டு அச்சு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் என்று கேள்விப்பட்டதுண்டு. நான்குமுறை அண்ணனின் கடையில் ரெய்டு நடத்தி 360 திருட்டு வீசிடிகளைக் போலிஸ்க்காரர்கள் கைப்பற்றியுள்ளார்கள். அண்ணன் மட்டும் எப்படியாவது தப்பித்துக் கொண்டு 3 நாட்களிலேயே மீண்டும் கடையில் அமர்ந்திருப்பார் புதுப்படத்தின் பெயர்களுடன்.
முடிந்தவரை புதுப்படமே எடுத்துக் கொள்ளலாம். அப்பா நான் போவதற்குள் நாற்காலியில் அமர்ந்து கொண்டே சிவாஜி கர்ணன் படத்தில் உச்சஸ்த்தாயில் கர்ஜிப்பாரே, அந்த அளவிற்கு உறக்கத்தில் கர்ஜித்துக் கொண்டிருப்பார். பலமுறை பக்கத்து வீட்டு அங்கிள் “இது என்னாடா முரட்டு அலாறம் மாதிரி கேக்குது” என்று எழுந்து வந்து அப்பாவின் குரட்டையை நிறுத்தும்படி மன்றாடியுள்ளார்.
“அண்ணே! வேணாம் குரட்டை விடறவங்களே நக்கலா பேசனா அது நமக்கும் ஒட்டிக்கும், இது வேத வாக்கு மாதிரி”
“அட போடா. . குர்ர்ர்ர்ர்ர். . கிர்ர்ர்ர்ர்ர். . அர்ர்ர்ர்ர்ர்ர்கிர்ர்ர்ர்ர்ர்ர். . என்னா ஓகேவா? நல்ல நக்கல் பண்ணிட்டேன்”
ஒருவாரம்கூட ஆகவில்லை. பக்கத்துவீட்டு அண்ணனும் அப்பா part 2-ஆக ஆகிவிட்டார். என்ன ஒரு வித்தியாசம், அவர் வெறும் லாரி மட்டும்தான் ஓட்டினார். அப்பா பல காலமாக உலகின் அதிநவீன இயந்திரத்தையெல்லாம் அவ்வப்போது வீட்டிற்குள் இறக்குமதி செய்துவிடுவார்.
வீடியோ கடையை நெருங்கியதும், இலேசான இருள் அந்த இடத்தைக் கவ்வியிருப்பதை உணர முடிந்தது. அருகில் போனதும் அண்ணனின் வீடியோ கடை அடைத்திருந்தது. அங்கு நிலைத்திருந்த அமைதியும் இருளும் பார்ப்பதற்கு ஒவ்வவில்லை. எப்பொழுதும் 10லிருந்து 12 பேர் வரை சூழ்ந்திருக்கும் கடையின் முன் வாசலில் ஒரு சீனக் கிழவி மட்டும் படுத்திருந்தாள். அவளும் திருட்டு வீசீடி விற்றவள்தான்.
என்னைப் பார்த்ததும் எழுந்து அமர்ந்து கொண்டாள்.
“இனி கெடாய் புன்யா ஓராங் போலிஸ் தங்காப்லா. . டியா டப்பாட் எனாம் தவூன் ஜெயில்லா. . யூ தக் தாவுக்கா?”
பகிரென்றிருந்தது. இந்தமுறை பிடிப்பட்டு ஆறாண்டு காலம் சிறைத்தண்டனை என அந்த சீனக் கிழவி சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. வானம் கருத்திருந்தது. அங்கேயும் மழைப் பெய்து இப்பொழுதுதான் விட்டிருக்க வேண்டும் போல. சந்திரமுகி வீடியோ கடை அமைதியாக, “லகலகலகலகலகலக” என்று சோகத்தை வெளியே நீட்டிப் படுத்திருந்தது.
முடிவு
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்