“நேராக நில்! கைகளைப் பக்கவாட்டில் வை”

This entry is part [part not set] of 31 in the series 20080828_Issue

கே.பாலமுருகன்



நான் பழம்பெரும் கதைச் சொல்லியின் தலைமுறையிலிருந்து வந்தவன் என்பதால் எப்பொழுதும் என்னைப் பற்றிக் கூறும்போது இப்படித்தான் தொடங்குவேன்.
முன்பொரு காலத்தில்

பேருந்தெல்லாம் புகைக் கக்கும் ஒரு புனிதமான நகரத்தில் பாலன் என்கிற ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் நான்தான். அவன் வாழ்க்கையில் பெற்ற தண்டனையிலேயே மிகக் கொடுமையானது என்னவென்றால் ஒரு நாள் ஆசிரியர் மூர்த்தி பெருமாள் “மூக்கு” என்று எழுதச் சொன்னதற்கு “முக்கு” என்று ஓசைத் தவறி எழுதிவிட்டதால், அவர் அவனை அந்தப் பாடம் முடியும்வரை வகுப்பின் முன் நிற்க வைத்து முக்கச் சொல்லியிருக்கிறார். அவனும் அரை மணி நேரமாக முக்கி, கண்களெல்லாம் சிவந்து போய்விட்டன. எவ்வளவு முக்கியும் எதுவும் வரவில்லை என்பதால் அன்று ஏற்பட்ட விரக்தியால் ஆசிரியர் மூர்த்தி பெருமாள் அவனை எங்குப் பார்த்தாலும், “மனுச ஜென்மமாடா நீ?” என்று கேட்டு வைப்பார்.
ஆரம்பப்பள்ளி காலத்தில் இப்படித்தான் பாலன் என்கிற நாகரிகம் பற்றிய சுயசிந்தனை எழாத சிறுவன் மிகவும் வேதனைக்கும் சாடலுக்கும் ஆளாகி ஆசிரியர்கள் மத்தியில் “நல்ல” பெயர் பெற்று வாழ்ந்து வந்தான். அந்தப் பள்ளிக்கூடத்தில் அவனுக்குப் பிடிக்காத முதல் விஷயம் சபைக் கூடுதலின் போது பாடப்படும் நாட்டுப் பாடலின்போது ஏற்படும் சூழல்தான்.
பழைய கதைச் சொல்லல் மரபு இத்துடன் இறந்து போகிறது. இப்பொழுது நாகரிக சராவெடி
சபை கூடுதலுக்கான ஆய்த்த நிலையை உறுதிபடுத்தும் வகையில் அடிக்கப்படும் பள்ளி மணியின் ஓசை காதில் விழுந்தவுடன் எனக்கு அந்த “நாட்டுப் பாடல்”தான் ஞாபகத்திற்கு வரும். வரிசையில் கைகளை நேர்ப்படுத்தி எனக்கு முன்னால் இருக்கும் நண்பனின் முதுகை அளவுகோளாக வைத்துக் கொண்டு (முதுகு கொடுப்பான் தோழான்) வரிசையில் எனது இருப்பை ஒழுங்குப்படுத்த வேண்டும். நீட்டிய என் கை அவன் முதுகைத் தொடாதவரை நான் ஒழுங்கான சூழலில் நிற்கிறேன் என்று அர்த்தம். இல்லையென்றால், படாரென்று விழும் நடுமுதுகில். மறுநாள் ஆர்த்தி ஆசிரியையின் அழகான ஐந்து விரல்களையும் முதுகில் ஏந்திக் கொண்டு பெருமையாகச் சுற்றிக் கொண்டிருப்பேன். (நடிகை குஷ்பு படத்தை நாளிதழிலிருந்து வெட்டி புத்தகத்தில் ஒளி வைத்துக் கொள்ளும் மகிழ்ச்சிக்கு நிகராகவே நினைத்துக் கொள்ளலாம்.)
வரிசை நேர்ப்படுத்தவே ஐந்து நிமிடமாகிவிடும் சூழலில், கனகரெட்டி சார் வந்து குரலை உறுமி(சிங்கம்லே) தயார்ப்படுத்திப் பேசவே மேலும் 2 நிமிடம் கூடிவிடும். பிறகு அவருடைய கராரான குரலில் ஹிட்லரின் மறு உருவகமாக அந்த வசனத்தை ஒப்புவிப்பார்.
“நேராக நில்! கைகளைப் பக்கவாட்டில் வை!”
அந்த வசனத்தைக் கேட்டவுடனே மனம் இறுகிவிடும். பயம் ஏற்படத் துவங்கிவிடும். “கால்களெ வலைச்சி வெச்சி ஒருகளிச்சி நின்னா, கனகரெட்டி சாரோட பார்வை என்மேல பட்டுருமோ” என்று உள்ளுக்குள் அலறியப்படியே கால்கள் நடுங்க நிற்கத் தொடங்கியிருப்பேன். மீண்டும் உறுமியப் பிறகு அவரே தொடர்வார்.
“ தேசியக் கீதம்! ஒன்று இரண்டு மூன்று. . “
எல்லோரும் இறுக்கத்தின் உச்சக்கட்டத்தில் தன்னைச் சுயக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தியவாறு தேசியப் பாடலைப் பாடிக் கொண்டிருப்பார்கள். சிறு அசைவும் பெரிய குற்றம். முடிந்தால் சிலையாகிவிடுவதே தர்மம். கனகரெட்டி சார், ஆர்த்தி ஆசிரியை, முருகவேல் சார், மூர்த்தி பெருமாள் சார் எல்லோரும் கண்களாலே எங்களின் பாடல் வரிகளையும் அசையாத எங்களின் உடலையும் அவதானித்தவாறே நின்று கொண்டிருப்பார்கள். பாடல் முடிந்தவுடன் கச்சேறி தொடங்கிவிடும்.
“டே! நீ வாடா வெளியே. . நாட்டுப் பாட்டுனு ஏதாவது மரியாதை இருக்கா? பின்னாலே யேன்டா திரும்பிப் பார்த்த? செத்தடா நீ”
“ நீ யேன்டா பக்கத்துலே கண் காட்டி ஏதோ ஜாடையிலே பேசனே? மரியாதை தெரியாதா? நேரா நிக்கமும்னு எத்தன தடவெ சொல்லிக் கொடுக்கறது?”
“ டே. . உனக்கு என்னா திமீர் இருந்தா இடுப்புலே கை வெச்சிக்கிட்டு நாட்டுப் பாடலே பாடியிருப்பெ? எவன்டா சொல்லிக் கொடுத்தது இப்படிப் பாடெ? மவனே உன் இடிப்பெ ஒடைச்சி மங்காத்தா வீட்டு வாசல்லே தொங்கவிட்டுருவேன்டா? புரிதா?”
இப்படிப்பட்ட பயங்கரமான ஏச்சும் பேச்சும் வாங்குவதில் நான்தான் முதன்மை. ஒருநாள் விட்டு ஒரு தடவையாவது எந்த ஆசிரியரிடமாவது நாட்டுப் பாடல் முடிந்தவுடன் நான் திட்டு வாங்கிவிடுவேன். மூர்த்தி பெருமாள் சாருக்கு நாட்டுப் பாடலின் போது தேசப்பற்று வருகிறதோ இல்லையோ பாடல் முடிந்தவுடன் என்னை வெளுக்க வேண்டும் என்ற ஆர்வம் பெருகிக் கொண்டு வரும். பாடல் தீர்ந்தவுடன் அங்கிருந்து கண்களை உருட்டிக் கொண்டு என் வரிசைக்குள் நுழைவார். தடபுடலான கச்சேறி மற்ற மாணவர்களுக்கு விருந்தாக நிகழ்ந்து கொண்டிருக்கும். ஆக மொத்தத்தில் நாட்டுப் பாடல் பாடி நான் பெற்றது என்னவோ அடியும் உதையும் மட்டும்தான்.
நாகரிக சராவெடி 1
“நேராக நில்! கைகளைப் பக்கவாட்டில் வை!”
இந்த வசனத்தை சபைக் கூடுதலில் அறிமுகப்படுத்தியது யாராக இருக்கும்? அதைவிட நாட்டுப் பாடலுக்கு முன் இந்த தார்மீக வசனத்தைச் சொல்லி மாணவர்களைப் பயமுறுத்த ஆரம்பித்தது யாராக இருந்திருக்கும்?
“நேராக நில்!” என்றதுமே உடல் தளர்ந்துவிடுகிறது. கால்கள் அடம் செய்யத் தொடங்கிவிடுகின்றன. இந்த நேர்த்தியின் கொடுமை தாங்க முடியாமல் கால்கள் தானாக வலியையும் அசெளகரிகத்தையும் ஏற்படுத்திக் கொள்கின்றன. நெஞ்சை வழக்கத்திற்கு மாறாக நிமிர்த்தி வைத்துக் கொண்டு பிட்டத்தை வெளியே தள்ளி நிறுத்திக் கொண்டு மூச்சை உள்ளுக்குள்ளிருந்து இழுத்து முகமெல்லாம் சிவக்க நாட்டுப் பாடலைப் பாடத் துவங்க வேண்டும். (நான் என்ன போருக்கா போகப் போகிறேன்? இத்தனை இறுக்கம்)
“ஒன்று இரண்டு மூன்று” என்றதுமே ஓட்டப்பந்தயம்தான் ஞாபகம் வருகிறது. அது ஏன் சபைக் கூடுதலில் பெரும் அதிகாரத்துவக் குரலைப் பெற்றிருக்க வேண்டும். கனகரெட்டி சார் “ஒன்று இரண்டு மூன்று” சொல்லியதும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓட வேண்டும் என்கிற மனநிலை அப்பொழுது உண்டாகும். ஆதலால் நாட்டுப் பாடல் என்றதும் என் பிட்டம் தானாக பின்னுக்குத் தள்ளிக் கொள்ளும், கால்கள் சிரமப்பட்டு நேராக நின்று திமிறும், நெஞ்சு விம்மிக் கொண்டு நிமிர்ந்து நிற்கும். நான் சிலையாக மாற்றப்பட்டு, பின்னனியில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்.
நாகரிக சராவெடி 2
நாகரிக சராவெடி 2-ல் நான் இரகசியமாகச் சொல்லிக் கொள்வது என்னவென்றால் பலமுறை நாட்டுப் பாடலின்போது, இறுக்கம் தாங்க முடியாமல், சத்தமில்லாமல் 15 முறையும் இலேசான சத்தத்துடன் 13 முறையும் அதிகப்படியான சத்தத்துடன் 8 முறையும் குசு விட்டிருக்கிறேன். இது என் உடல் தரும் கோளாறா அல்லது அந்த “நேராக நில்! கைகளைப் பக்கவாட்டில் வை” தரும் உடல் மாற்றமா என்பதிலேயே பலநாள் கழிந்தது. பக்கத்தில் இருக்கும் நண்பன் உட்பட பலருக்கு நான் பாடலின் போது குசு விடுவதைப் பற்றித் தெரியும். பல நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு அவர்களும் அதைப் பழகிக் கொண்டார்கள். (என்ன கொடுமை இது?”)
சுப்புரத்தின சார் பலமுறை நாட்டுப் பாடலின் போது மாணவர்கள் முகத்தில் ஏற்படும் திடீர் இரசாயன மாற்றத்தைக் குறித்துப் பெருமையடித்துப் பேசிக் கொண்டிருப்பார்.
“நான் பாத்தென்டா. . அங்குட்டு நிக்கறானுங்களே அந்தப் பயனுங்களாம் அப்படித்தான் பாடுறானுங்க போ நாட்டுப் பாடலே. . அவனுங்க முகத்துலே அந்த ஒளியெ பாத்தேன்டா.. முகத்தெ இறுக்கி, சுளிச்சி, உச்சஸ்தாயில் பாடுனானுங்கடா”
சுப்புரத்தினம் சார் அனேகமாக என்னைத்தான் புகழ்ந்திருக்க வேண்டும். மாணவர்களின் முகச் சுழிப்பிற்குக் காரணம் நான் “விட்ட” வழிதானே.
நாகரிக சராவெடி 3
அந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேறியப் பிறகு என்னுடைய 15 ஆவது வயதில் இடைநிலைப்பள்ளியில் பயிலும்போது இப்படித்தான் நாட்டுப் பாடலின் போது, எனக்கு முன் நின்றிருந்த நண்பனின் சட்டையில் அமர்ந்திருந்த பாப்பாத்தியைத் தற்செயலாக விரட்டப் போய், எல்லோர் முன்னிலையில் வைத்து காது திருவப்பட்டேன். இரண்டாவது முறையாக முன்னுக்கு நின்றிருந்த நண்பனின் கால்க¨ளை விளையாட்டாகத் தடுக்கிவிடப் போய் எல்லோர் முன்னிலையிலும் முட்டிப் போட்டு 10 அடி நகர்ந்து காட்டினேன்.
அதன் பிறகு 16ஆவது வயதில்தான் என் சபைக்கூடுதல் சரித்திரத்தில் பெருத்த மாற்றம் ஏற்படத் துவங்கியிருந்தது. அதற்குக் காரணம் என் பக்கத்து வரிசையில் நின்று கொண்டிருந்த கவிதாதான். அழகான பெண். சபைக்கூடுதலிலும் நாட்டுப் பாடல் சூழலிலும் எனக்கிருக்கும் சலிப்பை மறக்க வைத்ததே அவளுடைய அழகான பார்வைதான். கண் சிமிட்டாமல் இருவரும் சபையையும் மலாய்-சீன-இந்திய ஆசிரியர்களின் திடீர் மூர்க்கமான(அதுவும் சபைக்கூடுதலில் அதிகப்படியாக இருக்கும்)முகத்தையும் மறந்து நின்று கொண்டிருப்போம். அவள் என்னைப் பார்த்த விதத்தில் நான் தேவைக்கு அதிகமாகவே சொக்கிப்போயிருந்தேன். இதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன?
5 முறை நாட்டுப் பாடலுக்குப் பிறகு ஆசிரியர்களிடம் பிடிப்பட்டு 3 முறை கட்டொழுங்கு பிரச்சனையில் என் பெயர் பதிவுச் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டேன். 2 முறை 4 பிரம்படியும், ஒருமுறை மன்னிக்கப்பட்டு விடப்பட்டேன். கடைசி முறையாக என்னை மாட்டிவிட்டதே அந்தப் பெண்தான். அதன் பிறகு ஏனோ எந்தப் பாடலையும் என்னால் கேட்க முடியவில்லை. இந்திரா ஆசிரியை என்னை வகுப்பிற்கு முன் நிற்க வைத்து அடித்திருந்தாலும் மறந்திருப்பேன், அவர் கேட்ட கேள்விகள்தான் இன்னமும் துயரப் பாடலின் வரியைப் போல கேட்டுக் கொண்டெ இருக்கின்றன.
“சோறுதானே சாப்டறே? மரியாதையெ வீட்டுலே சொல்லித் தரலே? என்னா இந்த வயசுலே பொண்ணு கேக்குதா? அதுவும் எல்லாம் டீச்சரும் சாரும் இருக்கற எஸ்ஸம்பளிலே உனக்கு. . .”
நாகரிக சராவெடி 4
சில வருடங்களுக்குப் பிறகு அலுவலகத்தில் வேலையாக இருந்த போது, வானொலியில் திடீரென்று “நாட்டுப் பாடல்” ஒலிக்கத் துவங்கியதும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க நாற்காலியிலிருந்து படக்கென்று எழுந்து நேராக நின்று முகத்தை நிமிர்த்திக் கொண்டு நெஞ்சையும் பிட்டத்தையும் உடலின் நேர்க்கோட்டிலிருந்து சற்று வெளியே தள்ளினேன். எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். என் இடுப்பு உடைந்து மங்காத்தா வீட்டு வாசலில் தொங்கிக் கொண்டிருப்பது போல திடீர் பிரமை.


ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்