இறந்தவன் குறிப்புகள் – 3

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

தாஜ்


மஹாகுருதான் எத்தனை பெரிய ஆளுமை கொண்டவர்! அவர் தகவல் வரும் பொழுதெல்லாம், என் பல்லக்கு அவர் வாசலுக்கு வரவேண்டும். ஆசியைப் பெற காலம் தாழ்த்தவும் கூடாது. அது முடியவும் முடியாது. நான் தட்டியதே இல்லை. என் இரகசியங்களை எல்லாம் மோப்பம் பிடித்திருக்கிறவர். அதைக்கொண்டே என்னை அலைக்கழித்தவர். வயதுகூடிய அவரது ஆர்வம் மனதில் ஒட்டவில்லை. சரிவர எழுதாத எழுதுகோலால் எத்தனை முறைதான் எழுதுவதாம்! மீறவும் மார்க்கமில்லை.அது அவருக்கு புரிபடுவதாகவும் இல்லை. முயற்சிகளை மட்டும் தங்க வைத்துக்கொண்டேன். என் மீதான அவரது அதீதமே திறவுகோலாகத் தெரிந்தது. அது ஒன்று தான் என் முயற்சிக்குக் கிட்டிய கன்னி. திண்ணம் அது. அதன் வழியாகத்தான் நான் நுழையவேண்டும். நுழையவும் நுழைந்தேன்.

எனக்கு தொடர்ந்து ஆசி வழங்க, தலைவன் ஒரு தடையென குரு எண்ணினார். வடதுருவ ஆக்கிரமிப்பை, இதன் பொருட்டே திட்டமிட்டார். அங்கே போகின்றவர்களில் யாருமே திரும்ப மாட்டார்களென அவர் உறுதியாக சத்தியம் செய்தபோதுதான் என் கன்னியின் இன்னொரு இன்னொரு முனைகளும் திறந்தன. என் அரசியல் சித்துக்கு இறக்கைகள் முளைத்தது. அதை அவர் அறியவில்லை. அவருக்கு நான் வெறும் சர்க்கரைக்கட்டி, அவ்வளவுதான். இப்பொழுது எதுவும் அறிய வாய்ப்பேயில்லை. கடைசியாக அவர் அறிந்தது கூட, சிஷ்யனின் குரு துரோகத்தைத்தான்.

இறக்கை முளைத்த என் அரசியல் சித்து இன்றைக்கு நாலாப் பக்கங்களிருந்தும் நான் நினைத்த வெற்றிகளைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. கீமின் மிகப் பெரிய சக்தி இன்றைக்கு நான்தான். களஞ்சியங்களில் குவிக்கப்பட்டிருக்கிற செல்வம் அனைத்தும் இனி எனக்கானது. விதூர் என்னுடையவன். அவன் பெயரை உச்சரிக்கின்றபோதே சிலிர்ப்பாக இருக்கின்றது. என் வாழ்நாள் பூராவுக்குமான இனிமை கூடிவருகிறது. இனி எனக்கு மழலைகள் உண்டு. தலைவனிடம் கிட்டாத அந்த வரம் தட்டாது. நினைவே எத்தனை இனிக்கிறது. விதூர் அருகே வந்தான். தலைவியின் கன்னத்தில் முத்தமிட்டான். அவள் விழிகளைத் திறந்து அவனைப் பார்த்து கண்சிமிட்டினாள்.

‘ஆனதா?’
‘ஆனது’
‘எனக்கு ஆசி வழங்க ஆயத்தமாக இருந்தானா அந்த மடையன்?’
‘தலைவி எங்கே தலைவி எங்கே என்ற துடிப்போடு’
‘ஆசி வழங்கத்தான் அவனுக்கு எத்தனை ஆர்வம்! இப்படி ஒரு கிறுக்கனை, இந்த கீம் முழுவதும் தேடினாலும் கிடைக்காது! என்ன சொன்னாய்?’
‘இன்றைக்கு தலைவியைப் பார்க்க முடியாது என்றேன்’
‘அவனது பதில் வேடிக்கையாக இருந்திருக்குமே!’
‘ஆமாம். தலைவி பார்க்க வராவிட்டால் என்ன..! என் கண்களால் நிமிஷமும் பார்க்கத்தானே செய்கிறேன் என்றான்’
‘பிறகு?’

தனது மூடியிருந்த இடது உள்ளங்கையை தலைவிக்கு அவன் திறந்துக் காட்ட, ஆர்வமாகப் பார்த்தாள். அதில் இரண்டு விழிகள் இருந்தன. தரையில் உந்தி, விதூரின் உதடுகளில் முத்தமிட்டாள். அவள் ஆசிரமத்தை விட்டு வெளிவரும் போதே பல்லக்கு தயார் நிலையில் இருந்தது. அதில் ஏறி அமர்ந்தாள். விதூர், அங்கே கூடியிருந்த மக்களைச் சந்தித்தான். ‘நமது மாட்சிமைப் பொருந்திய மஹா குரு தனது உயிரை மாய்த்துக் கொண்டதில் மனம் உடைந்துப்போன அவரது சிஷ்சியப் பெருந்தகை, தன் குருவின் வழியிலேயே தனது உயிரையும் மாய்த்துக் கொண்டுவிட்டார்’ என துயரச் செய்தியாக சொன்னான். மக்களிடம் சோகமும் குழப்பமும் கூடியது.

பல்லக்கிலிருந்து மீண்டும் இறங்கிய தலைவி, மக்களைப் பார்த்து தலை தாழ்த்தி, ‘நாம் பெரும் துயரில் இருக்கிறேம். நம்
தலைவனையும், நமது பெரும் படையினையும் இழந்தது மட்டுமல்லாமல், நமது உயிருக்கு நிகரான மஹாகுருவையும்,அவர் தம் சிஷ்யனையும் இழந்து நிற்கிறேம். இனி நாம் இழப்பதற்கு எதுவுமில்லை, இந்த நாட்டினைத் தவிர. ஆகவே இந் நாட்டின் நலன் கருதியும், அதன் தலைமை கருதியும், இந்த விதூரை, உங்களின் தலைவனாக ஏற்கிறேன். வீரமும், தீரமும் பொருந்திய இந்த ஆண்மகனை நீங்களும் ஏற்பீர்கள் என்கிற நம்பிக்கையுண்டு. நமது பூஜைக்குரிய மஹாகுரு எனக்கு இட்ட கடைசிக் கட்டளைப்படிதான் இந்த தலைமை விதூருக்கு அளிக்கப்படுகிறது. இந்த தகவலை அனுப்பிய பிறகே அவர் தனதுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அவர் ஆன்மா சாந்தியடைய அவரது கட்டளையை ஏற்கிறேன்’ என்றாள். மக்களின் வரவேற்பும், ஆராவாரமும் சாதாரணமாக இருந்தது. தலைவி அதனை கணக்கில் கொள்ளத்தவறவில்லை.

மூன்று நாட்கள் கழிந்து விட்டது. கீமின் துயரம் வடியவில்லை. தலைவிரித்தாடும் பெண்களோ, புலம்பும் பெற்றோர்களோ யாரும் இன்னும் தங்களின் துயரிலிருந்து மீள்வதாய் இல்லை. ஓர் அடிமை தங்களின் தலைவனாகிப் போனதில் வேறு அவர்களின் துயரம் கூடிக் கொண்டது. புதிய குருவாக, இன்னொரு இளம்வயது அடிமையினை தலைவி நியமித்ததும்,அவனின் ‘மொழு மொழு’ உடல் வாகும் மக்களின் விவாதப் பொருளாகிப் போனது. தலைவியின் பசலை நோய் அவளை ரொம்பவும் படுத்துவதாக நகரில் முதியவர்கள் சிலர் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.

அடுத்த நாள் பகல், சந்தைப் பேட்டை நோக்கி தலைவனின் குதிரைப் படை சென்றது. மிகப் பெரிய அந்த வியாபாரஸ்தலம், பர பரப்பிற்கிடையே ஸ்தம்பித்தது. அதிகாரி ஒருவன் தனது குதிரையை அந்த சந்தைப் பேட்டையின் மையத்திற்கு செலுத்தி, அதை இழுத்துப் பிடித்தபடி நிறுத்தி, புதிய தலைமையின் ஆணையை கையில் எடுத்து வாசித்தான்.

1. இன்று முதல் கீம் அழகின் நகராக அறிவிக்கப்படுகிறது. உல்லாசமும், சந்தோசமும்தான் இனி இந்நகரின் ஒரே கொள்கை.

2. அழைக்கப்படும் இளம் வயது யுவன்களும் யுவதிகளும் அந்தப்புர பணிவிடைக்கு கட்டாயம் வரவேண்டும்.

3. சாவு, துயரம், அழிவு என எதற்கும் இனி யாரும் அழக்கூடாது. பெண்கள் தங்களது தலை முடியை அவிழ்த்துபோட்டபடி ஆடி துயர் பாட்டு இசைப்பது அறவே கூடாது. மீறுவோர்களின் முடிகள் துண்டாடப்படும்.

4. தலைவனையும், தலைவியையும் விமர்சிப்பவர்கள் தேசத்துரோகிகள். அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை.

5. நமது பெருமைக்குரிய தலைவி, முதல் முதலாக கர்ப்பம் தரித்திருக்கிறார். எல்லோரும் துயரங்களையும் மறந்து மகிழ்ச்சி ஆனந்தத்தில் திளைக்க தலைமை உங்களைப் பணிக்கிறது.

அந்த ஆணையை திரும்பவும் இருமுறை உரக்க மணி மணியாக வாசித்தான். தலைமையின் ஆணையை எப்பொழுதும் கை தட்டி வரவேற்கும் மக்கள், இந்த முறை மாறாக மெளனமாய் நின்றனர். சுற்றி வளைத்து நின்ற குதிரைப்படை வீரர்களின் ஆக்ரோஷப் பார்வையை கண்டநாழிக்கு கைதட்டினர். அது சுரமற்றதாக இருந்தது.

மறுநாள், நகரில் ஆங்காங்கே தலைமைக்கு எதிர்ப்பாக சிலர் கோஷங்கள் எழுப்பினர். சில இடங்களில் பெண்களின் தலைவிரிகோல அழுகை இன்னும் நின்றதாக இல்லை. அடிமைகளை தலைவனாகவும், குருவாகவும் ஏற்க சிலர் ஒப்பவில்லை. தலைவிமீது கோபமும் கொண்டனர். விசுவாசிகள் சிலர், தலைவியின் கர்ப்பத்தைக் கொண்டாடும் பொருட்டு பரிசுப் பொருட்களோடு அந்தப்புர வாசலில் வரிசைக் கட்டி நின்றனர்.

தலைமையின் குதிரைப் படை வீரர்கள் நகரின் பல இடங்களுக்கும் விரைந்தனர். எதிர்ப்பாளர்களை பலம் கொண்ட மட்டும் தாக்கினர். சிலரை சங்கிலியால் பிணைத்து கைது செய்தனர். தலைவிரிகோலமாக ஆடிய பெண்களின் தலைமுடி வெட்டி வீசப்பட்டது. கூக்குரலிட்ட பெண்களும், சிறுமிகளும் ஆங்காங்கே சிதைக்கப்பட்டனர். உடலில் எந்த தரிப்பும் மற்று, அவர்கள் நகர் வீதிகளில் நிர்வாணமாக ஓடிய காட்சி பரபரப்பைக் கூட்டியது. கீம் முழுவதும் கூச்சலும், குழப்பமுமாகவே இருந்தது. தொடர்ந்து பலர் குடும்பம் குடும்பமாக கீமை விட்டுப் புறப்பட்டனர். குழந்தைகளை முதுகில் சுமந்தபடியும்,சிறு பிள்ளைகளின் கரங்களைப் பற்றிய படியும், தங்களது கால்நடைச் செல்வங்களை ஓட்டிக்கொண்டும் ருஷ்யாவின் மத்திய பீட பூமியை நோக்கி அவர்கள் சாரிசாரியாக விரைந்த விரைவு பரிதாபத்திற்குறியது.

அடுத்த நாள் விடியலில், துஷ்ட விலங்குகளால் குதறிப் போடப்பட்ட சிறு கன்றானது அந்நகரம்.

கீமின் அவலம் பற்றிய முதல் தகவல் கிடைத்தபோது, தலைவி தனது விடியற்காலை கலவியை முடித்து, விதூருடனான சல்லாபத்தில் இருந்தாள். படுக்கையில் சிந்தி உறைந்து கிடந்த விந்துகளின் மெழுகெரிந்த வாடை அவளுக்கு பிடித்தமானது. அந்த சுகந்தத்தில் மனதைப் பறிகொடுத்தப்படி தொடர்ந்தாள். மீண்டும், அவலத்தின் அடுத்தடுத்த தகவல்கள் வந்தன. அநாயாசமாக அவள் சொன்னாள் : ‘அவர்கள் எங்கு ஓடியென்ன,! அவர்களின் கடவுளர்கள் இந்த கீமின் கினோறா சிகரத்தில்தான் இருக்கிறார்கள்!

மத்திய ஐரோப்பாவில் இருந்து இங்கே வந்தபோது, தங்களது கடவுள்களையும் கையோடு கொண்டு வந்திருந்தனர். எல்லாம் சின்னச் சின்ன சிற்பங்கள். வெண்கலத்தாலும், சுட்ட மண்ணாலும் ஆனது. மழுங்கிய முகம், திரட்சியற்ற கை கால்களுடன் கூடிய தெளிவில்லாத வடிவம். கினோறா சிகரத்தின் பொந்துகளில் சயனித்திருக்கிற அந்த கடவுள்கள் இன்னும் அங்கே போற்றுதலுடன் பத்திரமாகவே இருக்கிறது. ஜார் மன்னர்களின் காலத்தில், அவர்களின் அனுசரணை வேண்டி சிலரும், நெருக்கடிகளினால் சிலரும், சமூக அந்தஸ்து மரியாதை வேண்டிச் சிலருமாக அந்த மொத்த சமூகத்தில் பெருவாரியானவர்கள் கிருஸ்த்துவத்திற்கு மாறி விட்டார்கள். இப்படி மாறி பல தலைமுறைகள் ஆகிவிட்டது என்றாலும், அவர்கள் தங்களது பூர்வீகக் குலத்தையோ, அதன் தெய்வத்தையோ மறந்தாரில்லை என்கிறார் ஜான் கஸிமோவ். சோவியத் யூனியனில் ஆங்காங்கே வழும் இந்த சமூகத்தார்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தே கினோறாவின் திக்கைநோக்கி, கைகளைபின்னே வைத்து விரல்களோடு விரல்களை கோர்த்தபடி தலையை உயத்தியும் தாழ்த்தியும் வழிபடுவார்களாக இருந்தார்கள். அவர்களின் அந்த வழிபாட்டைக் காணும் பிற சமூ கத்தார்கள், அவர்கள் வானை வழிபடுவபவர்கள் என்றே கருதுவார்கள்.

அந்த மலையின் சிகரங்களைக் குடைந்து கடவுளர்களை நிறுவிய அன்றைய ஆளும் வர்க்கத்தின் சுவடுகளைத்தான் இன்றைக்கு அங்கே காணோம்! மங்கோலியாவின் சில மலையடிவாரங்களில் வாழும் வழிப்பறிக் கொள்ளைக் கும்பல்கள் ஒன்று சமீபத்தில் அகப்பட்டபோது, அவர்களிடம் மங்கோலியன் முகச்சாடை இல்லை. தீர விசாரித்ததில், அவர்கள் தங்களை கீமின் பழங்குடி மக்கள் என்று கூறிக்கொண்டார்களாம். என் யூகம் சரியாக இருக்குமென்றால், அவர்கள்தான் அன்றைய ஆளும் வர்க்க சந்ததிகளின் ஒரு பிரிவினராக இருக்கக்கூடும் என்று கஸிமோவ் தகவல் செய்திருக்கிறார்.

வருடத்தில் சிலமாதங்கள்,அந்த சிற்பங்கள் பனியால் மூடப்பட்டு மறைந்துவிடும். அப்பொழுது இவர்களால் அந்த பனிப்பறைகள் மீது ஏறவும் இயலாது. பனி விலகி கடவுளர்கள் காட்சித்தரும் இளவேனிற்பருவத்தில் அந்த மொத்த சமூகமும் கீமில் வந்து கூடி விடும். ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், பருவ வயதுகொண்ட சுந்தரர்கள், சுந்தரிகள், குழந்தைகள் என்று கூட்டம் கூட்டமாய் வர ஜனத்திரளில் கீம் திக்குமுக்காடிவிடும்.

வோட்காவும், ஒயினும் பீப்பாய் பீப்பாயாக வந்து இறங்கியபடி இருக்கும். இளவேனிற் பருவத்தின் மூல நட்சத்திரத் தொடக்க தினத்தில்தான் பனிப் பாறைகள் உருகத் தொடங்கும். நாளின் அந்த தொடக்கத்தை எல்லோரும் எதிர்பார்த்தபடியே இருப்பார்கள். சூரியன் இலேசாய் முகம் காட்டி, தனது மெல்லிய சிரிப்பை தவழவிடுவான். கொஞ்சம்போல உஷ்ணம் எல்லோரையும் உசுப்பி இதமாய் தைக்க, பனிப் பாறைகள் கசிந்து உருகிச் சரியும். சிலகாலம் உறைந்து கிடந்த அருகாண்மை நதியில்கூட நீர் சலன மிக்கத்துவங்கும். புதிய இரைகளுக்காக பறவைகள் அங்கே அதிகத்திற்கு அதிகமாக வட்டமிட, அந்த தருணத்திற்காகவே காத்திருந்ததுபோல் நகரில் ஆங்காங்கே பறையின் கொட்டு முழங்கத் துவங்கிவிடும். விழா முடியும் நாள் வரை அந்த கொட்டுச் சப்தம் ஓயாது.

பறையின் சப்த அதிர்வுகள் கேட்கத் துவங்கியதும், வாங்கி தயாரில் வைத்திருக்கும் காட்டெருமைகளை தள்ளி இழுத்து அழைத்தபடி குழுக்குழுவாக பலிபீட மைதானத்திற்குப் போய், அவைகளை வெட்டி , பலிகொடுக்க துவங்கிவிடுவார்கள். பலி தருகிற போது, வினோத சப்தம் எழும்படியான ஒருவித குரல் இசைப்பு செய்வார்கள். காட்டெருமைகளின் கதறலும், இவர்களது இசைப்பும் நகரில் ஆங்காங்கே விட்டு விட்டுக் கேட்டப்படியே இருக்கும். பலி , கடவுளர்களுக்கு இஷ்டமானது.

சில குழுக்கள் தனியாக, ஒதுக்குப் புறமான ஆதி பலிபீட ஸ்தலத்திற்குப் போய், தங்களது பச்சிளம் பெண்சிசுக்களை மனமுவந்தும், மனத்திடத்துடனும் நரபலி கொடுப்பார்கள். தாமே முன்வந்து தரும் இந்த நரபலியின் போது அவர்கள் உச்சரிக்கும் மந்திர வாக்கியங்களின் சப்த ஓங்காரம், அங்கே பலியிடப்படும் அந்த பச்சிளம் பெண் சிசுவின் தாய் கதறும் கதறலையும் விஞ்சும். நரபலிதான் உண்மையான சடங்கு. மெய்யான பக்தியின் அடையாளம். கடவுளர்களுக்கும் அதுதான் நிஜமான மகிழ்ச்சியைத் தரவல்லதென்பது அவர்களின் ஐதீகம். இதில் பெண் சிசுக்களை மட்டும் பலி தருவது அவர்களின் ஆதித் தொட்ட பூர்வீக வழக்கம். இத்தகைய பலிகளுக்கு அவர்களின் புராணங்களில் குறிப்புகள் இருக்கின்றது. ஆண் கடவுளர்களின் யதார்த்திற்குட்பட்ட அனுசரிப்புகளை உதாசீனம் செய்து, அவர்களுடன் தாமும் சரிசமமென்று நின்ற, அல்லது உயர்வு பாராட்டிய, ராட்சஷிகளின் கதைகளும் அந்த புராணங்களில் இருக்கின்றது. ராட்சஷி என்பது பெண்பால் என்று காஸிமோவ் குறிப்பிடும்போது நாம் சிரிக்காமல் இருக்க முடியாது.

சூரியன் மறைந்ததும் எருமைக் கொழுப்பிலான தீப்பந்தங்கள் ஊரின் விசேஷ திடல் முழுவதும் நட்சத்திரங்களாகப் பூக்கும்.
தோலுரிக்கப்பட்ட எருமைகளின் கால்கள் கட்டப்பட்டு கவையில் ஏறும். கீழே தீமூட்டப்பட, மாமிசம் பெசுங்கிய நாற்றமும்,அதன் வீச்சம் கொண்ட நெடியும் ஊர் முழுக்க பரவிக் கவிழ்ந்து கிடக்கும். வோட்கா பீப்பாய்கள் மடமடவென்று திறக்கப்படும்.

தங்களது அன்பான கணவர்களுக்கு மனைவிகளும், மனைவிகளுக்கு கணவர்களும், காதலர்களுக்குக் காதலிகளும், காதலிகளுக்கு காதலர்களும், குழந்தைகளுக்குப் பெற்றோர்களும் சிறிய சீனத்துக்கோப்பைகளில் வோட்காவை நிரப்பி பறிமாறிக் கொள்வார்கள். வயதானப் பெண்கள்ஒயின் மட்டுமே விரும்புவார்கள். உயர் ரக ஒயின் இவர்களுக்கு இஷ்டமானது. பூர்ஷ்வாக்களான பழைய ஜமீன் பெண்கள் தவறாமல் உபயோகிக்கும் தரம் கூடிய ஒயினுக்கு நிகரானது அது. சுமார் நூறு வருஷத்திற்கும் கூடிய பழமை வாய்ந்ததெனக் கருதப்படும் ஒயினே உயர் ரகமாக கருதுவார்கள். இந்த ரக ஒயின்கள் இங்கே இந்த இரவில் அவர்களின் கோப்பைகளில் வழியும். வெந்து பொசுங்கி தீய்ந்த மாட்டிறைச்சிகளை கவையில் இருந்து, வேண்டும் மட்டும் அவரவர்கள் பிய்த்து உண்டபடி இருப்பார்கள். இடைவிடாமல் மகிழ்ச்சி அங்கே கரைபுரள குழுக் குழுவாய் ஆனந்தத்தில் திளைப்பார்கள்.

உணவு முடிந்ததும், அவர்களின் ஆட்டம் துவங்கிவிடும். போதையின் உச்சத்தில் ஆடும்போதும்கூட அவர்களின் ஆட்ட ஒழுங்கு தப்பாது. ஜிப்ஸி வகையை ஒத்த நடனமது என்றாலும், அவர்களின் பாத அசைவுகள் முத்திரை சங்கதிகளாகவே இருக்கும். வாத்தியக் கருவிகளை தங்களது கைகளில் வைத்துக்கொண்டும் உடம்பில் கட்டிக்கொண்டும், அவைகளை இசைத்தபடி ஆடுவார்கள். ஆட்டத்தில் பாடல்கள் என்பது பெரும்பாலும் இருக்காது. கூடி உட்கார்ந்து கண்டுகளிக்கும் மக்கள், தங்களது சந்தோசப் பெருக்கால் எழுப்பும் சப்த அலைகள் அந்த நடன அசைவுகளுக்கு ஒப்பவே இருக்கும்.

முதல் சுற்று, இரண்டாம் சுற்று. மூன்றாம் சுற்று என நடுநிசிவரை வோட்காவும், மாட்டிறைச்சியும், ஆட்டமும் அமளிதுமளிப்படும். நேரம் கழிய கழிய ஆண்களும் பெண்களும் இஷ்டமானவர்களுடன் கைகோர்த்தபடியும் மார்பில் அணைத்துக் கொண்டபடியும் மனம்போன திக்குகளுக்குப் போய், ஆங்காங்கே பாறைத்திட்டுகளிலும்,புல்வெளிகளிலும், சலையின் ஓரங்களிலும் விசேசங்களிலும் விசேசமான அந்த மீத இரவைச் சுவைப்பார்கள். உறவு முறைத் தடைகள், காரணக் காரிய குறுக்கீடுகள் இந்த இரவில் செல்லுபடி ஆகாது. இந்த இரவு விதிவிலக்கான இரவு. கடவுளுக்கு இஷ்டமான இரவு. சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் தவிர எவரும் எது குறித்தும் பேதம் பாராட்டக்கூடாத இரவு. இடையைப் பற்றி அணைப்பவரிடம் புன்முறுவலைத் தாண்டி சொல்ல இந்த பெண்கள் முயற்சிப்பதும் பாவம். தானங்களிலேயே உயர்வானது உடல்தானம்தான் என்பதும், தடைகளற்ற பரிசுத்த நிர்வாணத்தால் மட்டுமே கடவுளை நெருங்க முடியும் அவர்களது ஐதீகம்.

கீமில் உதயம் கீற்றாய் விழுந்து இதமாய் எழுந்தது. சூரியன் தலைதூக்கி மேலே போகிறபோது, எல்லோரும் சாரிசாரியாக வட்ட வடிவான மலைப் பாதையில் உயரே ஏறி, கடவுளுக்கு முன்னால் எரியூட்டப் பட்டிருக்கும் தீக்குண்டத்தில் காட்டெருமை கொழுப்பிலிருந்து காய்ச்சி வடித்த எண்ணையை ஊற்றி, தீ ஜுவாலை விடுவதைப் பார்த்தப் படி நின்றுவிட்டு, அதை ஒட்டிய பாவமன்னிப்பு பாறையில் தங்களது தலையினை வைத்து மூன்று தரம் மோதிக் கொள்வார்கள். சிலர் மணிக் கணக்கில் தொடர்ந்து மோதிக் கொள்வதும் உண்டு. மண்டை பிளந்து ரத்தம் தாரை தாரையாக வழிந்தோடும் நிலையிலும் மோதிக் கொள்வதை நிறுத்திக் கொள் ளமாட்டார்கள். அவர்கள் அப்படி என்னதான் பாவம் பண்ணியிருப்பார்கள்? என்றே யோசிக்கத் தோன்றும் என்கிறார் காஸிமோவ்.

விழாக்காலக் கொண்டாட்ட இரவுகளும், பாறைகளில் மோதிப் பாவமன்னிப்பு கேட்கும் பகலுமாக வாரக்கணக்கில் விழா நீளும். இந்த விழா மூன்று வாரம் தொட்டு, அதிகம் போனால் நான்கு வாரம் வரை நீடிக்கும். கினோறா மலைச் சிகரங்களில் மீண்டும் பனிப் படலத்தின் ஆதிக்கம் தொடங்கும். தீக்குண்டம் அணைந்து போகும். கடவுளர்கள் பனித்திரைக்குள் மீண்டும் பத்திரமாக உறைவார்கள். அந்த பருவ நேரத்தில் குளிர் காற்று, ஒருவித விசில் சப்தத்தை ஒத்த ஊதலுடன் வீசத் தொடங்கும். விழாகாலத்தில் படிந்தும், குவிந்தும் போன கழிவுகளையும், கீமின் துர்நாற்றத்தையும் விரட்டிக் கொண்டிருக்கும். இத்தனை நாளும் அங்கே கூடிக் களித்து குதூகலித்த மக்கள், கூட்டம் கூட்டமாய், குடும்பம் குடும்பமாய் கிடைத்த வாகனங்களில் தத்தம் நகரங்களுக்குப் புறப்பட்டு விடுவார்கள்.

கீமை மீண்டும் இப்படிக் காண, இன்னும் ஒரு வருட காலம் அவர்கள் காத்திருக்க வேண்டும். வாஞ்சையுடன் நகரை திரும்பத் திரும்பத், திரும்பிப் பார்த்தப்படியே செல்வார்கள். அப்பொழுது அவர்களிடையே இனம் புரியாத மெளனம் நிலவும். கீமின் இரவையும் பகலையும் மனம் புரட்டிப் பார்க்கும். யாரிடமும் எந்த கேள்வியும் இருக்காது. அவர்களின் செய்கைகளில் வித்தியாசம் தெரியும். எல்லோரிடமும் அன்னியோன்யம் கூடுதலாக இருக்கும்.மனநிறைவோடு மீண்டும்மீண்டும் கீமின் நினைவுகளை அசைப் போட்டபடியே சென்று கொண்டிருப்பார்கள்.

இந்த மக்களை, ஒட்டு மொத்த மதிப்பீட்டின் கணிப்பில் ‘இப்படிஆனவர்கள்’யென ஒரே தரத்திலிட்டுப் பார்த்துவிடவும் முடியாது. விதிவிலக்கானவர்கள் உண்டு. அத்தகையவர்கள் குடும்பம்குடும்பமாக சோவியத் முழுவதும் பலநூறுகளில் வசிக்கின்றனர். வாடிகனில் உள்ள மரியாதைக்குரிய போப்பாண்டவர் கடிதங்களின் மூலம் செய்திகளை பறிமாறிக்கொள்ள விரும்பும் அளவிலான புத்தி ஜீவிகள், தர்க்க ஞானிகள், வானசாஸ்திர வல்லுனர்கள், விஞ்ஞானிகள், இலக்கியக் கர்த்தாக்களும், தங்களது தெய்வீக அர்ப்பணிப்பால் சர்வதேச புகழ் கொண்ட பல பாதிரிகளும், சமூக சேவைகளில் தங்களது வாழ்நாள் முழுவதையும் தந்து நின்ற கன்னிகா ஸ்திரீகளும் அந்த சமூகத்தில் உண்டு.

சோவியத் யூனியனை ஆளும் கம்யூனிஸ்ட்கட்சியின் செனட்டில் அங்கம் வகிக்கும் மூத்த காம்ரேட்டுகளில் குறிப்பிடத்தகுந்த முக் கியஸ்தர்கள் அவர்கள்தான். உலக நாடுகள் பலவற்றில் சோவியத்தின் ராஜாங்க தூதரக அதிகாரிகளாக பணியாற்றும் பலர் இவர்களில் உண்டு. இன்னொருபுறம், கம்யூனிஸ ஆட்சிமுறையில் சலிப்புற்று ஜனநாயக நடைமுறைக்குத் திரும்ப வேண்டுமென நினைக்கும் மக்களின் சிந்தனை ஓட்டமாக செயல்படும் முக்கியமானவர்களில் இவர்களும் உண்டு.

மக்கள் தொடர்பு செய்தி ஸ்தாபனங்களான பத்திரிக்கைகள், வானொலி, சினிமா, மாடலிங் போன்ற துறைகளிலும் விளையாட்டுத் துறைகளிலும் முன்னணி வகிப்பவர்கள் இவர்கள்தான். ஒலிம்பிக் போட்டியில் ஒவ்வொரு முறையும் ‘ஜிம்னாஸ்டிக்’ விளையாட்டில் வென்று அறிவிக்கப்படும் குழந்தைகள் இவர்களது செல்வங்கள்தான். புத்திபூர்வ விளையாட்டான ‘செஸ்’கேமில் இவர்களது ஆதிக்கம் அதிகம். சோவியத்தின் தேசிய நடனமான ‘பாலே’ ஆட்டத்தில் இந்த இன ஆண்களும், பெண்களும் அதிகத்திற்கு அதிகமாக ஈடுபாடு காட்டுகின்றார்கள். உலக நாடுகளில் இவர்களது நடனம் பிரசித்தம். ராமாயணக்கதையினை பாலே நடனத்தில் புகுத்தியது இவர்களது சமீபத்திய சாதனை என்று நிஜமாகவே பெருமிதம் கொள்கின்றார் கஸிமோவ்.

தங்களது சமூகத்தில் பெரும்பகுதியினர் ஏய்த்துப் பிழைப்பு நடத்துவதையும், பிச்சை எடுப்பதையும் காண முகம் சுழிப்பவர்களாகவே இவர்கள் இருக்கின்றார்கள். தங்களை அவர்களிடமிருந்து பிரித்துக் காட்டும் முகமாக தங்களை இஸ்ரேலின் பெத்லக்ஹேம் பூர்வ வம்சாவளிகள் என்று கூறிக்கொள்வார்கள். இவர்களிடம் கீமை குறித்து கேட்டால் உடனே பதில் வராது. ஆனால், கீமின் ஒவ்வொரு வீதியும், சந்து பொந்துகளும்கூட இவர்களுக்கு அத்துப்படியானதுதான். கீமின் விசேஷ கால இரவுகளும் பகல்களும்
இவர்கள் இல்லாமல் இல்லை. அதன் மகிமையில் திளைப்பவர்கள்தான். கினோறா மலைமீது இவர்களது கால்கள் ஏறாது இருந்திருக்க முடியாது. கடவுள் குறித்த பயம் மனிதனின் அடிப்படையான சங்கதி என்கிறார். அவர்கள் பதில் சொல்லாததையொட்டி மீண்டும் அதுகுறித்தே கேட்போமேயானால், கீமா?அது எங்கே இருக்கிறது?என்று நம்மையே கேட்பார்கள் என்கின்ற கஸிமோவ், நான் அப்படி அல்ல என்கிறார்.

இறந்தவன் அவர்களே , இங்கே கவனிக்க வேண்டும். கஸிமோவ் சுழித்திருக்கும் அந்த வார்த்தையின் பொருள் புரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். ஆம், அதுதான்; அதுவேதான். படைப்பாளியாகிய நம்மில் எத்தனைப்பேர் இப்படி உண்மையாக இருக்கிறேம். நாலுவரி கதையின் போக்கிற்கு நாற்பதுவரி இயற்கையின் மலைப்பையும், வலிய தத்துவங்களின் திணிப்பையும் செய்யவே ஜரூராக நிற்போமேயல்லாது அதில் ஒரு வரி நிஜத்தைச் பளிச்சென்று சொல்வோமாயென்ன!

நாவலின் இன்னொரு இடத்தில், பழைய கீம் நகர சிதைவுக்குப் பிறகான ஆண்டுகளில் அங்கே ஆண்ட அதிகார மையத்தில் நசிவுகள் தொடங்க, தலைவனும் தலைவியும் இரு கூறாகப் பிரிந்தார்கள் என்கிறார் கஸிமோவ். தலைவியின் சகாக்கள் மங்கோலியா வின் பக்கம் சென்று, அங்குள்ள மலை அடிவாரங்களில் வாழலானார்கள் என்றும், தலைவனைச் சார்ந்த கூட்டம் பாரசீக பீடபூமிக்குப் போய் சேர்ந்தார்கள் என்றும் சான்றுகள் சில வைக்கிறார். இன்றைக்கு பெர்சியாவின் சில நகரங்களில் திருத்தமான அழகுடன், கூடிய தொகைக்கு, உயர்ரக பாலியல் தொழிலாளர்களாக இருப்பவர்கள் அந்த கூட்டத்தின் வழி வந்தவர்கள்தான் என்கிறார் கஸிமோவ்.

அந்த வாழ்க்கை பிடிக்காத அவர்களில் சிலர், மீண்டும் சோவியத்தின் மேற்கு நகரங்களின் பக்கம் வந்து சேர்ந்தார்கள் என்றும், இன்றைக்கும் அவர்கள் ஓரோனீஸ் நகரத்தின் புறப் பகுதிகளில் பழைய இரும்பு வியாபாரம் செய்பவர்களாக இருக்கின்றார்கள் என்றும், அவர்கள் ஒவ்வொருவரின் முகவரியும் தனக்குத் தெரியும் என்றும்,அந்த பழைய இரும்பு வியாபார யூனியனின் தலைவரே என்னுடைய தந்தைதான் என்கிறார் கஸிமோவ்!

கஸிமோவின் இந்த கூற்று நமக்கு சில உணர்தல்களை ஏற்படுத்தும் முன்னே, அவரே முன் வந்து மேலும் ஒரு தகவலை வைக்கிறார். என் தந்தை வழிப் பாட்டனின் தொப்புள் கொடி சந்ததியினரை கணக்கில் கொண்டு பார்த்தால் சுமார் இருபது தலைமுறைக்கு முந்தியப் பூட்டன், கீமின் கடைசி தலைவனென அறியப்படும் விதூராகவே இருக்கும் என்கிறார். கீம் வழி சந்ததியினரில், சில கோத்திர மக்கள் இன்றைக்கும் என் தந்தையை வலிய தேடிவந்து, தேவையற்று மரியாதைக் காட்டி, இந்த சோவியத் சோஷலிச அரசு காலத்திலும் தங்கள் ஜீனில் உறங்கும் விசுவாசத்தை வீணே எழுப்பி, முகமன் செய்துவிட்டுப் போகின்றார்களென ஆதங்கம் கொள்கிறார். கஸிமோவ் கூறும் பல உண்மைகளின் நிதர்சனம் போற்றுதலுக்குக்குரியது. அதையொட்டி அவர் மீது கூடும் மதிப்பும் தவிர்க்க முடியாதது. தனது இனம் குறித்த ஆத்ம பரிசோதனையை, நாவலாக அவர் நிகழ்த்தியிருக்கும் ஆய்வு வியப்பும் மலைப்பும் தரக்கூடியதாகவே இருக்கிறது. He is the real hero of the novel.

இந்த முறை கஸிமோவின் நாவல் குறித்து உங்களோடு பகிர்ந்துக் கொள்ளும் ஆர்வத்தில் எதிர்பார்த்ததைவிட பக்கங்கள் கூடி விட்டது. ருஷ்ய மொழியில் அந்த நாவலை எழுதிய ஜான் கஸிமோவே, கொஞ்சம் நாள் கழித்து அதை அவரே ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்திருக்கிறார். மூலப் படைப்பில் அவர் உபயோகித்த ருஷ்யக் கலைச்சொற்களை ஆங்கிலப் பதிப்பில் அப்படியே உபயோகித்திருக்கிறபோதும் அந்த சொற்களின் தலையில் நட்சத்திரக் குறிப்பிட்டு, நாவலின் கடைசிப் பகுதியில் கலைச் சொற்களுக்கான ஆங்கில விளக்கத்தை அட்டவணைப் படுத்தியிருக்கிறார். ஆங்கில மொழிப் பெயர்ப்பில் அவரது எளிய நடை குறிப்பிடத்தகுந்த விசேசம். ஆங்கிலத்தில் இதன் முதல் பதிப்பு 1974 ம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. 1978 ம் ஆண்டு இந்த நாவல் நோபல் பரிசுக்கு பலராலும் வலுவாக பரிந்துரைக்கப்பட்ட போதிலும், சோவியத் அரசு தனது அதிகாரத்திற்குட்பட்ட ‘கலாச்சார மேம்பாட்டு மையத்தின்’ மூலம் அதற்கு எதிப்பு தெரிவித்ததால், இந் நாவலுக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனதாக நம்பத்தகுந்த செய்தி உண்டு.

எண்ணூறு பக்கங்களைக் கொண்டது அந்த நாவல். வடதுருவ ஆக்கிரமிப்பையொட்டி நடந்த கீம் மக்களின் படையெடுப்பை சுமார் முன்னூறு பக்கங்களுக்கு மேல் எழுதி உள்ளார். வடதுருவம் சென்றபோது அவர்களுக்குள் ஏற்பட்ட குழு தகராறு, குழுக்களில் சிலரது மரணம், உணவுப் பொருட்களது கையிருப்பு தீர்ந்து போன நிலை, இறந்து போனவர்களைத் திண்ணத் தொடங்கிய அவலம், உறைபனிக்கும் கீழே குகை தோண்டி தங்க முயற்சித்தது என பல சம்பவங்களை மெய் சிலிர்க்கும் வகையில் சொல்லிக் கொண்டே போகிறார். இத்தனை கனமான இந்த நாவலைப் பற்றி, மேலோட்டமாக நான் வாசித்ததை எழுத்தில் சொல்லிச் செல்கிறபோது சில தருணங்களில் அவருடைய காட்சி வருணனைகளின் மொழிப்பெயர்ப்பை அப்படியே எழுதும்படியும் ஆகிவிட்டது. சிரமத்திற்கு மன்னியுங்கள். மொத்தத்தில் கஸிமோவ் உங்களையும் கவர்ந்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

எழுதுங்கள்.

பதிலுக்காக காத்திருக்கும்,
பிறந்தவன்.

***

அன்புடன் பிறந்தவனுக்கு…

உங்களது நீண்டகடிதம் கண்டேன். உங்கள் சக்தியை விரயமாக்கி இருக்கின்றீர்கள். என் அனுபத்தில் உங்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் விற்பனையை மனதில் கொண்டு எழுதப் பழகுங்கள். அப்படியான எழுத்துதான் உங்களை பரவலாக எல்லா தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும். எழுத்தில் சோதனைமுயற்சிகள் என்பதெல்லாம் வீம்பு கொண்டவர்களின் வீண் வேலை. அமுதம் வார இதழில் என் தொடர்கதையை முப்பத்தி மூணு வாரத்திற்கு பிரசுரிக்க இருக்கின்றார்கள். தேன் தடவிய காதல் கதையது. என் புகைப்படத்துடன் இரண்டு வாரங்களாக அந்த இதழில் விளம்பரம் வருவதை நீங்கள் கவனித்திருக்கக் கூடும். இதுதான் எழுத்தின் நிஜ வெற்றி. சாகித்திய அகடமியின் பரிசெல்லாம் இதற்குப் பிறகுதான்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கிற நாவலை இரண்டு வருடத்திற்கு முன்னேயே வாசித்திருக்கிறேன். ‘தி பெக்கர்’ ஓர் வெற்றியடையாத நாவல். கஸிமோவும் உங்களை கவர்ந்த மாதிரி என்னை கவரவில்லை.

தொடர்ந்து எழுதுங்கள்.
இப்படிக்கு,
இறந்தவன்.

***

கடிதத்தைப் படித்த பிறந்தவன், வெகுநேரம் மனதிற்குள் சிரித்தான். தான்விரித்த வலையில் இறந்தவன் விழுந்ததில் ஆச்சரியம் இல்லையென்று நினைத்தான். ஒரு போலியை வாசகர்களின் பார்வைக்கு கொண்டு சேர்க்க நினைத்தது சரியென்றாலும், அதற்
காக இத்தனைப் பெரிய வலைப் பின்னியது அதிகம் என்றே தோன்றியது. ‘தி பெக்கர்’ வெற்றியடையாத படைப்பாம்! இரண்டு வருடத்திற்கு முன்பே அதை அவர் வாசித்திருக்கிறாம்! தவிர, காஸிமோவ் வேறு அவரை கவரவில்லையாம்!

பிற்ந்தவன் முகத்தில் வெற்றியின் பிரகாசம். காஸிமோவின் ‘தி பெக்கர்’தான் ஏது? காஸிமோவேதான் ஏது?

(முற்றும்)

குறிப்பு: அச்சில் வரவிருக்கும் ‘இறந்தவன் குறிப்புகள்’ நாவலிலிருந்து…

satajdeen@gmail.com
http://tamilpukkal.blogspot.com/

Series Navigation

தாஜ்

தாஜ்