மஞ்சள் வெளியின் இரண்டாவது அறை

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

கே.பாலமுருகன்



1
மழை பெய்யாத ஓர் இரவு நேரம். மெல்லிய காற்று மட்டும் சலனித்துக் கொண்டிருந்தது. எங்கும் சூன்யமாக இருப்பதைக் கண்டு அம்மா இரண்டாவது அறையில் அழுது கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. மனிதர்களின் மனப் பிறழ்வைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். அனேகமாக மனப்பிறழவை உணர்ந்து கொண்டிருக்கிறேன் என்று தோன்றுகிறது.
மீண்டும் சூன்யமும் மழை பெய்யாத ஓர் இரவு நேரமும் நானும் அம்மாவும். அம்மா இரண்டாவது அறையில் இருப்பதாக ஒரு பிரக்ஞை. காற்று சிறிது நேரத்தில் சலனங்களைச் சுருட்டிக் கொண்டு ஓடியது.
பிறகு, நான் முதல் அறையிலும் அம்மா இரண்டாவது அறையிலும் உறங்கிக் கொண்டிருந்தோம்.
பின் குறிப்பு : அந்த இரவு வெகு நீளமாக நீண்டு கொண்டிருந்ததில் பெரிய குழப்பம். அம்மாவைப் பல முறை அழைத்துப் பார்க்கிறேன். அவர் உறங்கும் சத்தம் மேலும் பயத்தை ஏற்படுத்துகிறது. பிறகு நான் முடிவடைந்த நேரம் துல்லியமாக ஞாபகத்தில் இல்லை.
2
ஒரு வருடத்திற்கு முன்பு எழுதி அனுப்பியிருந்த கதை இன்னமும் பிரசுரமாகமலிருந்தது குறித்துச் சலிப்படைந்து கொண்டிருந்த ஒரு மாலை பொழுது. அந்தக் கதையை எங்கு வைத்திருக்கிறேன் என்ற ஞாபகமும் தளர்ந்திருந்தது.
அம்மா குளித்துக் கொண்டிருந்தார். இன்னமும் சாமி விளக்குப் பற்றவைக்கப்படவில்லை. சாமி அறையின் கதவோரத்தில் கட்டப்பட்டிருக்கும் மஞ்சள் துணியின் விலகல் அதை ஞாபகப்படுத்திச் சென்றது.
எதிர்வீட்டு சீனத்தியை நான் பார்க்கவில்லை. ஆனால் அவள் கதவோரத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அவள் இன்னும் சிறிது நேரத்தில் அழுதுவிடுவாள் என்ற அறிகுறியைக் கூட என்னால் யூகிக்க முடியாமல் இருந்தது. பிறகு அவள் அங்கு இல்லாமல் போய்விட்டாள். வெறும் சூன்யம்.
அன்று இரவு நான் முதல் அறையிலும் அம்மா இரண்டாவது அறையிலும் உறங்கிக் கொண்டிருந்தோம் என்று நினைக்கிறேன்.
பின் குறிப்பு: குளித்து முடிந்து, 5 நிமிடத்திற்குப் பிறகு, அம்மா வீட்டில் இல்லாமல் போய்விட்டார். அன்று முழுவதும் தேடிப் பார்த்துவிட்டு முதல் அறையில் நான் உறங்கும் போது, இரண்டாவது அறையில் அம்மா உறங்கும் சத்தம் கேட்கிறது. பிரக்ஞையில் பலத்த பிசகு.

3
வண்ணத்துப் பூச்சிகள் இரண்டு வீட்டினுள்ளே பறந்து கொண்டிருந்தன. யாரோ விருந்தாளிகள் வரப் போகிறார்கள் என்று அம்மா புலம்பி கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுது. அன்று அம்மா சமைக்கவில்லை. வெகு நேரமாக எதிர்வீட்டு மரங்கள் மரணித்துக் கொண்டிருந்த மஞ்சள் வெளியில் கிசுகிசுத்துக் கொண்டிருந்தன. யாரோ சிலர் வீட்டின் முன் பேசிக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு சத்தம். எதையும் அவ்வளவு தெளிவாக யூகிக்க அம்மா என்னை விடுவதில்லை.
எப்பொழுதும் சாமி கும்பிடும் போது ஆடை முழுமையாக அணிந்திருக்க வேண்டுமென்பது அம்மாவுடைய கட்டளை. ஆண்கள் கண்டிப்பாக சட்டை அணிந்திருக்க வேண்டும். சட்டைப் போட்டுக் கொள்ளாமல் சாமி கும்பிட்டால் அம்மாவிற்குப் பிடிக்காது. ஆனால் அப்பா பல நாட்கள் துண்டு கட்டிக் கொண்டுதான் சாமி கும்பிடுவார் குளித்து முடித்த உடலுடன்.
இதைப் பற்றி ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்பாத இந்தக் கனம் முடிவடைவதற்கு முன்பதாக நான் துண்டுடன் சாமி அறைக்குள் நுழைந்து கொண்டிருப்பது போல இருந்தது. எப்பொழுது குளித்தேன்? அம்மா இல்லாததைப் போல பிரக்ஞையின் மறு பரிணாமம். இல்லை. அம்மா நடமாடிக் கொண்டிருப்பதைப் போலதான் தோன்றுகிறது. வண்ணத்துப் பூச்சிகள் இன்னமும் பறந்து கொண்டிருந்தன. அம்மா எழுந்து வெளியே போய் கொண்டிருந்த ஒரு வெளுத்த மாலை பொழுது. மஞ்சள் வெளி கருகிக் கொண்டிருந்தது.
அன்று இரவு நான் முதல் அறையிலும் அம்மா இரண்டாவது அறையிலும் உறங்கிக் கொண்டிருந்தோம்.
பின் குறிப்பு: அந்த இரண்டு வண்ணத்துப் பூச்சிகளும் வர்ணத்தை இழந்திருந்தன. அவ்வளவு சரியாக சொல்ல முடியாத ஒரு வர்ணம். அம்மா மறைத்துக் கொண்டு நின்றிருந்ததில் எதையும் சரியாகக் கவனிக்க முடியவில்லை.
4
“உனக்கும் சிறுகதை ஓரளவு வருகிறது” என்று முத்துசாமி ஐயா சொன்னதை நினைத்துக் கொண்டு அயர்ந்திருந்த ஒரு சோம்பலான மாலைப் பொழுது. அம்மாவைப் பற்றி ஒரு கதை எழுதியிருந்த சமயம். யாரோ மூவர் கதையின் முடிவைக் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார்கள். அவர்கள் யார் என்றும் மறந்திருந்தேன். கதையின் முடிவை மாற்றாமல் இருந்த ஒரு மாலைப் பொழுதில்தான் அது நடந்தது.
“யேண்டா என்ன கொன்ன? நான் சுவாசிக்கறது உனக்கு உறுத்தலா இருக்கா? காத்து ஒடம்பு ரோதனையா இருக்குடா, வாழ்னும்னு தோனுதுடா”
என்று புலம்பிவிட்டு அம்மா இரண்டாவது அறைக்குள் நுழைந்து கொண்டார். நான் மறு சிருஷ்டியாளனாக மாறிக் கொண்டிருந்தேன்.
அன்று இரவு கதை முடிவில் அம்மாவிற்கு உயிர் கொடுத்த திருப்தியில் நான் முதல் அறையிலும் அம்மா இரண்டாவது அறையிலும் உறங்கிக் கொண்டிருந்தோம் என்று நினைக்கிறேன்.
பின் குறிப்பு: அந்தக் கதையில் அம்மா இறந்து போவதற்கான காரணத்தை நான் எழுதாமல் விட்டது சௌகரியமாக இருந்தது. மறு உருவாக்கத்தில் அம்மா வண்ணத்துப் பூச்சியைப் போல எங்கும் பறந்து கொண்டிருக்கிறார் என்று கதையை மாற்றி முடித்திருந்தேன். அன்று முழுவதும் நான் எதிர்வீட்டு சீனத்தியைப் பார்க்கவில்லை.
5
எதிர்வீட்டு சீனத்தி காயங்களை மறைக்க முயற்சித்துக் கொண்டிருந்த ஒரு காலை பொழுது. உற்சாகம் குறைந்திருந்தது. அம்மா அன்று வீட்டில் இல்லை. இரண்டு பூனைகள் மட்டும் வெளி வரந்தாவில் சோம்பலான மௌனத்தில் உறைந்து கிடந்தன. என்னுடைய “அம்மா” என்ற கதையில் வரும் பூனைகளையே ஒத்திருந்தன அதன் மௌனம். பெரும்பாலான கதைகளில் பூனைகள் வந்து மௌனமாகவே அண்டிக் கொள்வதுண்டு.
எதிர்வீட்டு சீனத்தி, முட்டிக் கால்களை மார்போடு அணைத்துக் கொண்டு காயங்களைத் தடவி பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளேயிருந்து ஓர் அழைப்பு கேட்டதும், காயங்களை மறைக்கத் தொடங்கினாள். பழக்கமாகிப் போன ஒரு சுபாவம். அம்மா வீட்டில் இல்லாதது கொஞ்சம் பயமாக இருந்தது.
அன்று இரவு, நான் முதல் அறையிலும் அம்மா இரண்டாவது அறையிலும் உறங்கிக் கொண்டிருந்தோம். சீனத்தி?
பின் குறிப்பு: அந்தச் சீனத்தியின் காயங்கள் கத்தியால் கிழிக்கப்பட்டதோ, தடிப்பான கட்டையால் அடிக்கப்பட்டதோ இல்லை. ஒரு முள் கரண்டியால் சுரண்டப்பட்டது. அவளுடைய கால்கள் கைகளிலெல்லாம் முள் கரண்டியின் பற்கள்.

6
“கதைலாம் எப்பலேந்து எழுதனும்னு தோனுச்சு?”
“அத பத்தி ஞாபகம் இல்ல”
“கதைலாம் வாழ்க்கையோட வெளியிலிருந்துதான் தரிசிக்க முடியும்னு நான் நெனைக்கிறென்”
“ அது உங்க நெனப்பு.அவ்ளதான். நான் அதுவாவெ வாழ்ந்துகிட்டு இருக்கேன்”
“உங்களுக்கு ஈகோ ஜாஸ்தினு நெனைக்கிறென்”
“அதான் மொதல்லயே சொல்லிட்டனே, அது உங்களோட பார்வை, அவ்ளதான்”
“அப்பனா எல்லாமே என்னா மனப்பிராந்தியத்திலா போயிகிட்டு இருக்கு?”
“மனப்பிராந்தியம் மனப்பிராந்தியம் அற்ற தன்மை எல்லாமே உனக்குள்ளும் எனக்குள்ளும் இருக்கறதுதான், வெளிப்படறெ நேரமும் காலமும்தான் வித்தியாசப்படுது”
“ நீங்க உட்டா தேவை இல்லாமெ பேசிகிட்டே போவிங்க”
“அதுக்கு முன்னெ நீங்க என்னெ விட்டுடுங்க”
யாரோ சிலர் கேட்ட கேள்விகளுக்கு மிகுந்த நிதானத்துடனும் அலட்சியத்துடனும் பதிலளித்த ஒரு நிகழ்வைப் பற்றி நினைத்துக் கொண்டே வீட்டின் கதவோரத்தில் சாய்ந்து கிடந்த ஒரு மதியப் பொழுது. கேள்வி கேட்ட நபரின் முகமும் மறந்து போயிருந்தது.
உயிர் கொடுத்ததிலிருந்து அம்மா வீட்டில் இருப்பதில்லை. இரண்டாவது அறையில் அவ்வப்போது தேடிப் பார்த்துக் கொள்கிறேன்.
எதிர்வீட்டு சீனத்தி அழுதுக் கொண்டிருந்தாள். அவள் என்னைப் பார்க்கவில்லை. நானும்தான். அவள் வீட்டின் முன் கதவிலெல்லாம் முள் கரண்டியின் பற்கள். வாளிகளை எடுத்துக் கழுவிக் கொண்டிருப்பது போன்ற பாவனையில், காயங்களைத் தடவிப் பார்த்துக் கொண்டாள். அவள் என்னைப் பார்க்கவில்லை. நானும்தான்.
அன்று இரவு நான் முதல் அறையிலும் அம்மா இரண்டாவது அறையிலும் உறங்கிக் கொண்டிருந்தோம்.
பின் குறிப்பு: முடிவடைவதற்கு 5 நிமிடம் இருக்கும் சமயத்தில், அந்த இரண்டாவது அறையின் இருள் வெளியில் அம்மா உறங்கும் சத்தம் கேட்டது.
7
“நான் – அவள் – அவளுடைய கனவன்” என்ற தலைப்புக் கொண்ட என்னுடைய ஒரு கதை மேசையில் வெகு நாட்களாக கிடப்பதை நான் கவனிக்கவே இல்லாததை மறந்திருந்த ஒரு மதியப் பொழுது. மீண்டும் கதவோரத்தில் சாய்ந்து கிடந்தேன். இப்பொழுது எதிர்வீட்டு சீனத்தி தடிப்பான கயிற்றுச் சுருள் ஒன்றை யாரும் கவனியாத ஒர் எச்சரிக்கையோடு பத்திரப்படுத்திக்
கொண்டிருந்தாள். அவள் முகத்தில் கலவரங்களுக்குப் பஞ்சமற்று போயிருந்தது. நான் அவளுக்கு எந்தவகையிலாவது உறவாகி போயிருப்பேனா என்று மனம் குழம்பியது. அவளும் நானும் பார்த்துக் கொள்ளவில்லை. அவள் முகத்திலெல்லாம் முள் கரண்டியின் பதிவு.
அம்மா வீட்டில் இருப்பது போல ஒரு பிரக்ஞை. இந்தச் சுவரில் சாய்ந்திருந்த பூனைகள் எதிர்வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தன. 10 நாட்களுக்கு மேலாக வயிற்றில் ஒரு பசி. வயிறு ஒட்டிப் போயிருந்தது. உள்ளே நுழைந்து சமையலறை முழுவதும் முள் கரண்டியின் முட்கள் பதியாத கைகளுடன் எதையோ தேடிக் கொண்டிருந்தேன். அம்மா எதையும் யூகிக்க அனுமதிப்பதில்லை. மீண்டும் கதவோரத்தில்.
அன்று இரவு நான் முதல் அறையிலும் அம்மா இரண்டாவது அறையிலும் உறங்கிக் கொண்டிருந்தோம் என்று நினைக்கிறேன்.
பின் குறிப்பு: அன்று முடிவடைவதற்கு முன்பு, வயிற்று வலியால் குளியலறையிலேயே சுருண்டு படுத்திருந்தேன். யாரோ எழுப்பிவிட்ட பின்புதான் எழுந்தேன். அம்மா வீட்டி இல்லாததைப் போல மீண்டும் ஒரு பிரக்ஞை.
8
வண்ணத்துப் பூச்சிகள் வீட்டில் பறந்து கொண்டிருந்தன. “நான்-அவள்-அவளுடைய கணவன்” என்ற கதையை அப்பொழுதுதான் பார்த்தேன். கதை முடிக்கப்படாமல் கிடந்தது. கடைசிவரை அந்தக் கதையின் பெண் தன் காயங்களைத் தடவியப்படிதான் வீட்டைவிட்டு வேளியேறுகிறாள். பிறகு? கதை முடிவை நான் பெரிதுப்படுத்தாமல் விட்டுவிட்டேனோ?
மதியப் பொழுதா அல்லது மாலை பொழுதா என்று யூகிக்க முடியவில்லை. அம்மா வீட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. வீட்டின் முன் கதவோரம் யாரோ வந்து நிற்கிறார்கள். ஏதோ பேசிக் கொள்கிறார்கள். சன்னாசி அக்காவைப் போலவே இருக்கிறது. கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.
“என்னாடா இப்படி ஆயிட்ட? சாப்ட்றியா இல்லயா?”
“அவ்வளவா இல்ல”
“இந்த எதுத்த வீடு ரொம்ப நாளா கோசமா இருக்காமெ, சேவானு போட்டிருக்கு. யாருகிட்ட விசாரிக்கறத்குனு தெரில, அதான் இப்படியே வந்துட்டுப் போனேன்”
“எனக்கும் தெரிலயெ”
“சரிப்பா.. ஒங்கம்மா இருந்தப்பெ நல்லா இருந்தெ. கதலாம் இன்னும் எழுதறியா?”
“இல்ல எழுதுறதில்ல”
“சரிப்பா நான் கெளம்புறேன், ஒங்க பக்கத்து வீட்டுல கேட்டுப் பாக்கறேன், சேவாவ பத்தி. ஒடம்ப பாத்துக்கயா. அம்மா நெனப்பாவே இருக்காதெ. . எல்லாம் ஒரு காலம் வந்தா போய்தானே ஆகனும்”
சன்னாசி அக்கா கதவைத் திறந்து கொண்டு வெளியே போவதைப் போல இருந்தது. மஞ்சள் வெளி ஓர் இருளில் புதைந்து கொண்டிருந்தது.
வண்ணத்துப் பூச்சிகள் இன்னமும் பறந்து கொண்டுதான் இருந்தன. அன்றைய பொழுதைச் சரியாக யூகிக்க முடியவில்லைதான். எதிர்வீட்டு சீனத்தியோ அல்லது அம்மாவோ இருப்பதைப் போலதான் பிரக்ஞை.
அன்று இரவு நான் முதல் அறையிலும் அம்மா இரண்டாவது அறையிலும் முடிவடைந்து கொண்டிருந்தோம் என்று நினைக்கிறேன்.
பின் குறிப்பு: அந்த இரண்டாவது அறை ஒரு மஞ்சள் வெளிக்குள் பரவிக் கொண்டிருந்தது. அம்மா பறந்து கொண்டிருந்தார். நானும்தான்.

கே.பாலமுருகன்
மலேசியா


bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்