அவருடைய புகழுக்குப் பின்னால்

This entry is part [part not set] of 32 in the series 20071004_Issue

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்


“சமையல் முடிந்து விட்டதா?” ராஜாராமன் கேட்டார், கரிவேப்பிலையைப் பறிக்க கொல்லைப்புரம் வந்த மனைவி சீதாலக்ஷ்மியிடம்.
“இதோ முடிந்துவிடும். என்ன இன்னிக்கு புதுசா கேட்கிறீங்களே?” சீதாலக்ஷ்மி வியப்புடன் கேட்டாள்.
எப்போதும் பன்னிரெண்டு மணி தாண்டிய பிறகுதான் சாப்பிட எழுந்துகொள்ளும் கணவர் இன்று பத்தரை ஆனதுமே சமையல் ஆகிவிட்டதா என்று கேட்டது அதிசயமாக இருந்தது.
“ஒரு ஆள் வருவதாகச் சொல்லிருந்தான் பதினொன்றரை மணிவாக்கில். அவனுடன் பேசிக் கொண்டிருந்தால் ஒரு மணி ஆகிவிடுமோ என்னவோ. ரொம்ப தாமதம் ஆகிவிடும் இல்லையா. அதான் முன்னாடியே சாப்பிட்டு விடலாமே என்றுதான்.”
“அப்படி என்றால் சரி. பத்து நிமிடங்களில் இலை போட்டு விடுகிறேன்.” கரிவேப்பிலையைப் பறித்துக் கொண்டு சமையலறைக்குப் போனாள் சீதாலக்ஷ்மி.
சரி என்று சொல்லாளே தவிர அவள் மனதில் ஏதோ ஒரு மூலையில் ரோஷம் தலை தூக்கியது. தனக்கு என்றாவது பசியாக இருந்து, முக்கியமாக முதல் நாள் ஏகாதசி ஒருபொழுது இருந்து மறுநாள் காலையில் சோர்வாக இருக்கும் போது சீக்கிரமாக சாப்பிட வரச் சொன்னால் நாற்காலியை விட்டு எழுந்து கொள்ள மாட்டார்.
“நீ சாப்பிட்டு விடேன், என்னை தொண தொணக்காமல்” என்று எரிந்து விழுவார். தான் சாப்பிடாமல் மனைவி சாப்பிட மாட்டாள் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அறுபது வருடங்களாக குடித்தனம் செய்து வருகிறோம். அவரைப் பற்றி தனக்குத் தெரியாதா? தன்னைப் பற்றி அவருக்குத் தெரியாதா? பசி தாங்காமல் முன்னாடி சாப்பிட்டாலும், கையை அலம்பியதுமே கொஞ்சம் படுத்தால்தான் முடியும். அப்படியே கண் அசந்து விட்டால் மறுபடியும் எழுந்து கொண்டு அவருக்கு பரிமாற வேண்டும் என்று நினைத்தாலே அலுப்பாக இருக்கும். ஒரு நாளும் அவர் தனக்குத் தானே பரிமாறி கொண்டு சாப்பிட்டதில்லை.
கணவரின் சுபாவத்தை மனதில் அசை போட்டுக் கொண்டே மளமளவென்று சமையலை முடித்தாள்.
‘அத்தனை நேரம் பேசுவதற்கு யார் வரப் போகிறார்கள்?’ என்ற கேள்வி மனதில் எழுந்தாலும் கணவரிடம் கேட்டு விட முடியுமா? கேட்டால்தான் சொல்லி விடப் போகிறாரா? ‘ஆண்கள் என்றால் ஆயிரம் விஷயங்கள் இருக்கும். அதெல்லாம் உனக்கு எதுக்கு?’ என்று மழுப்பி விடுவார். தனக்காக ஏதாவது தேவைப்பட்டால் மட்டும் கிளிப்பிள்ளையைப் போல் எல்லா விவரங்களையும் சொல்லுவார். உள்ளூர சிரித்துக் கொண்டாள் சீதாலக்ஷ்மி. அதைவிட வேறு என்ன செய்ய முடியும் அவளால்?
சாப்பிடும் போது கூட ராஜாராமன் அந்த ஆள் யாரோ, எதற்காக வருகிறானோ எதுவும் சொல்லவில்லை. சீதாலக்ஷ்மி தானாக கேட்கவும் இல்லை.
சொன்னது போலவே பதினொன்றரை மணிக்கு யாரோ பெல்லை அடித்தார்கள். ராஜாராமன் எழுந்து போய் கதவைத் திறந்தார். ஒருத்தன் இல்லை. இரண்டு பேர் வந்திருந்தார்கள். ஒருத்தன் தோளில் கேமிரா மாட்டிக் கொண்டிருந்தான். சீதாலக்ஷ்மி கதவின் இடுக்கு வழியாக பார்த்தாள்.
வெயலில் வந்ததால் அவர்களுக்கு தாகமெடுத்தது போலும், குடிக்க தண்ணீர் கேட்டார்கள். ராஜாராமன் உள்ளே வந்து மனைவியிடம் டம்ளர்களில் பானைத் தண்ணீரைக் கொண்டு வந்து தரச் சொன்னார்.
சீதாலக்ஷ்மி தண்ணீர் டம்ளர்களுடன் ஹாலுக்குப் போன போது அங்கே உட்கார்ந்திருந்தவர்களில் கேமிராவை வைத்திருப்பவனைத் தவிர இன்னொருத்தன் ராஜாராமனிடம் சுதந்திரப் போராட்டத்தில் அவர் பங்கெடுத்துக் கொண்ட விவரங்களை கேட்டுக் கொண்டிருந்தான். சுதந்திரப் போராட்ட சிற்பிகள் என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகத்திற்கு அவார்ட் கிடைத்த சந்தர்ப்பத்தில் அவருடைய கடந்த கால அனுபவங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு தங்கள் பத்திரிகையில் கட்டுரை வெளியிடப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தான்.
அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்று சீதாலக்ஷ்மிக்குப் புரிந்தது.
கணவர் உற்சாகத்துடன் தன் பிள்ளைப் பருவத்திலிருந்து சொல்லத் தொடங்கியதும் சீதாலக்ஷ்மி காலி டம்ளர்களை எடுத்துக் கொண்டு உள்ளே வந்து விட்டாள். ஏற்கனவே சமையலறையில் பாத்திரங்களை ஒழித்துப் போட்டு விட்டு வேலைகளை முடித்துக் கொண்டு விட்டதால் நடுவறையில் இருந்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு பின்னால் சாய்ந்துகொண்டாள். ஹாலிலிருந்து கணவரின் குரல் ஸ்பஷ்டமாக கேட்டுக் கொண்டிருந்தது. நடுநடுவில் அந்த நிருபர் ஏதோ கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தான். ராஜாராமன் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
அந்த நாட்கள் மறுபடியும் சீதாலக்ஷ்மியின் கண்முன்னால் காட்சிகளாக விரிந்தன. அவள் குடித்தனத்திற்கு வந்து நாலைந்து வருடங்கள்தான் ஆகியிருக்கும். அதற்குள் இரண்டு குழந்தைகள். பெரியவனுக்கு இரண்டு வயது. சின்னவன் மூன்று மாதக் குழந்தை. சுதந்திரப் போராட்டம் ரொம்ப தீவிரமாக இருந்த நாட்கள் அவை. நாட்டுப் பற்றுக் கொண்ட ராஜாராமன் அதில் பங்கெடுத்துக் கொண்டார்.
கல்லூரியில் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருவதோடு மாலை வேளைகளில் பார்க்குகளில் கூடியிருந்த மக்களை ஒன்றாகத் திரட்டி முழக்கமிட்டது, போலீஸார் அவர்களை கலைக்க முயன்றால் எதிர்த்து நின்று லாட்டியால் அடிவாங்கியது, கைது செய்யப் பட்டு சிறைச்சாலைக்குப் போனது, அந்த நாட்களில் சிறைச்சாலைகளில் நிலவியிருந்த சூழ்நிலை …. அந்த அனுபவங்களை எல்லாம் விலாவாரியாக சொல்லிக் கொண்டிருந்தார் ராஜாராமன்.
சிறைச்சாலையிலிருந்து வந்த பிறகு தனக்குச் சேர வேண்டிய நிலத்தை விற்பதற்கு அனுமதி கேட்ட போது ராஜாராமனின் தந்தை மறுத்துவிட்டார். இன்னும் முன்னுக்கு வர வேண்டிய மற்ற குழந்தைகள் இருக்கும் போது இப்பொழுதிலிருந்தே நிலத்தை விற்கத் தொடங்கிவிட்டால் போகப் போக எப்படி இருக்குமோ என்று அவர் பயந்தார். கிடைத்த வேலையை விட்டு விட்டு அரசியலில் சேர்ந்ததோடு அல்லாமல், இருக்கும் கொஞ்ச நஞ்ச சொத்தையும் விற்றுவிட்டால் எப்படி என்று மகனை அதட்டினார். கணவர் வேதனைப் படுவதை சகித்துக் கொள்ள முடியாமல் சீதாலக்ஷ்மி கைவளையல்களையும், கழுத்தில் போட்டிருந்த இரட்டை வடத்தையும் கழற்றித் தந்தாள் போராட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளச் சொல்லி.
அந்த நாளைய விஷயங்களை எல்லாம் நிருபரிடம் ராஜாராமன் சொல்லிக் கொண்டிருந்த போது, தான் நகைகளைக் கொடுத்த விஷயத்தையும் சொல்லுவாரோ என்று சீதாலக்ஷ்மி காதுகளைத் தீட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தாள். சொன்னார் போல் தெரியவில்லை. சட்டென்று எழுந்த ஹால் வாசலுக்குப் போய் நின்றுகொண்டாள். கேமிராக்காரனும், நிருபரும் சீதாலக்ஷ்மியின் பக்கம் பார்த்தார்கள். திடீரென்று அவர்கள் தன்னைப் பார்க்காமல் தனக்குப் பின்னால் இருந்த வாசல் பக்கம் பார்த்ததும் சந்தேகம் வந்து பின்னால் திரும்பிப் பார்த்தார் ராஜாராமன். சீதாலக்ஷ்மி அங்கே நின்றுக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு “என்ன வேண்டும்?” என்றார் நெற்றியைச் சுளித்துக் கொண்டே. பூஜை வேளையில் கரடி நுழைந்து விட்டாற் போன்ற எரிச்சல் வெளிப்பட்டது அந்தக் குரலில். சீதாலக்ஷ்மி சொல்ல வந்த வார்த்தைகள் தொண்டைக் குழியிலேயே நின்று விட்டன.
“அது வந்து …. காபி கலக்கட்டுமா என்று கேட்கத்தான் …” என்றாள் தடுமாறும் குரலில். மனைவி காபி பற்றி பேச்செடுத்த பிறகு தான் மறுத்தால் நன்றாக இருக்காது என்று “ஊம். கொண்டு வா. கேட்பானேன்?” என்றார் மிடுக்காக. சீதாலக்ஷ்மி உள்ளே போய்விட்டாள்.
கைவளையல்களையும், கழுத்துச் சங்கிலியையும் கழற்றி கணவனிடம் கொடுத்தாள் என்று தெரிந்தபோது அன்று அவளுடைய தாய் அவளை நன்றாக திட்டித் தீர்த்தாள். மனைவியின் நகைகளை பயன்படுத்திக் கொண்டதற்கு மாப்பிள்ளையையும் வசைபாடினாள்.
அதற்குப் பிறகு ராஜாராமன் தன் தந்தையிடம் சண்டை போட்டு நிலத்தில் தனக்குச் சேர வேண்டிய பங்கை விற்கச் செய்து சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இறங்கிவிட்டார். மேலும் இரண்டு முறை கணவர் ஜெயிலுக்கு போனபோது, அந்த சமயத்தில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிறந்த வீட்டிலும் புகுந்தவீட்டிலும் மாறி மாறி இருந்து வந்தாள். குழந்தைகளின் படிப்பு பாழாவதைக் கண்டு வருத்தப் படுவதும், எல்லோருடைய ஏச்சுப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டு உள்ளூர நொந்துக் கொள்வதுமாக காலம் கழிந்தது. கணவர் ஜெயிலிலிருந்து திரும்பி வந்த ஒவ்வொரு தடவையும் தான் உண்டாவது அவளுக்கு தலைகுனிவாக இருந்தது. குழந்தைகளை பெற்று, வளர்த்து ஆளாக்குவதற்கும், படிப்புச் சொல்லித் தருவதற்கும் தான் பட்ட அவஸ்தைகள் எல்லாம் நினைவுக்கு வந்தன.
அந்த நாட்களில் துர்க்காபாயுடன் மற்ற பெண்களும் கொடிகளை கையில் ஏந்தி சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டதைப் பார்த்த போது சீதாலக்ஷ்மிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
“நானும் அவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் கலந்து கொள்ளலாம்னு இருக்கேன்.” ஒருநாள் கணவரிடம் சொன்னாள்.
“அரெஸ்ட் ஆகி நீ ஜெயிலுக்குப் போனால் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்?” துப்பாக்கிக் குண்டு போல் வந்தது கேள்வி.
ஆத்திரத்தில் உடல் பற்றி எரிவது போல் இருந்தது சீதாலக்ஷ்மிக்கு. “தீடீரென்று நான் செத்துப் போனால் என்ன செய்வீங்க?” கேட்காமல் அவளால் இருக்க முடியவில்லை.
“என்ன செய்வேனா? மறுபடியும் கல்யாணம் செய்துகொள்வேன்” என்றார் ஏளனமாக சிரித்துக் கொண்டே.
அந்த ஏளனத்திற்குப் பின்னால் மறைந்திருந்த உண்மையைப் புரிந்துகொண்ட சீதாலக்ஷ்மி வாயை மூடிக் கொண்டு மௌனமாக இருந்துவிட்டாள்.
பழைய நினைவுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு காபியைக் கலந்து இரண்டு டம்ளர்களில் ஊற்றி ஹாலுக்கு எடுத்துக் கொண்டு போனாள்.
ஒருபக்கம் ராஜாராமன் பேசிக் கொண்டிருக்கும் போதே கேமரா ஆள் பளிச் பளிச்சென்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான். இத்தனை போட்டோக்களை எடுக்கிறானே என்று வியப்புடன் பார்த்தபடி கையில் ட்ரேயுடன் நின்றுகொண்டிருந்தாள் சீதாலக்ஷ்மி.
“அய்யா! ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லுவார்கள் இல்லையா. உங்கள் விஷயத்தில் அப்படி யாராவது இருக்காங்களா?” பத்திரிகை நிருபர் கேட்டான்.
அந்தக் கேள்வி வேடிக்கையாக இருந்தது சீதாலக்ஷ்மிக்கு. கணவர் என்ன பதில் சொல்லப் போகிறாரோ பார்ப்போம் என்று ஆர்வத்துடன் அவர் பக்கம் பார்த்தாள். ராஜாராமன் ஒருவினாடி நேரம் திக்குமுக்காடியது போல் தென்பட்டார். உடனே சமாளித்துக் கொண்டு “இவளைத் தவிர வேறு பெண் யாரும் இல்லை என் வாழ்க்கையில்” என்று ஜோக் அடித்தபடி சிரித்துவிட்டு ஓரக்கண்ணால் மனைவியைப் பார்த்தார்.
காபி டம்ளர்களை டீபாய் மீது வைத்து விட்டு சீதாலக்ஷ்மி உள்ளே போவதற்காக திரும்பிய போது போடோகிராபர் “அம்மா! ஒரு நிமிஷம் அவருக்குப் பின்னால் நில்லுங்கள். இரண்டு பேரையும் சேர்த்து போட்டோ எடுக்கிறேன்” என்றான்.
“அய்யோ! நான் எதற்கு தம்பீ?” என்று சொல்லிக் கொண்டே இரண்டடிகள் பின்னால் நகர்ந்தாள். ராஜாராமனும் “நடுவில் அவள் எதுக்கு? ” என்றார் தேவையில்லை என்பதுபோல்.
பத்திரிகை நிருபரும் அவர்களை சங்கடப்படுத்த வேண்டாம் என்பதுபோல் போட்டோகிராபரைப் பார்த்து ஜாடைக் காட்டினான்.
சீதாலக்ஷ்மி உள்ளே போய்விட்டாள். ஈசிச்சேரில் உட்கார்ந்து கொண்டே ‘ஏன் வேண்டாம்னு தயங்கினோம்?’ என்று தன்னையே நொந்து கொண்டாள். பிறகு ‘நல்ல காரியம்தான் செய்தேன். அந்த புகழ்ச்சியும் பாராட்டும் தனக்கெதற்கு?’ என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டாள். கணவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட போது, தான் வீட்டில் இருந்துகொண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி, எப்படியோ நிலைமையை சமாளித்தாள். தானும் அவருடன் சிறைச்சாலைக்குப் போயிருந்தால் குழந்தைகளின் கதி என்னவாகியிருக்கும்? அவர் சொன்னதும் உண்மைதானே? ஆனால் அன்று தான் எதையும் பொருடப்படுத்தாமல் கணவரைப் போல் நாட்டுக்காக போராடி ஜெயிலுக்குப் போகவும் துணிந்திருந்தால் இன்றைக்கு பத்திரிகை நிருபர் தன்னையும் இதேபோல் பேட்டி கண்டு, சுதந்திரப் போராட்டத்தில் தன்னுடைய அனுபங்களைப் பற்றி, செய்த தியாகங்களைப் பற்றி பத்திரிகையில் எழுதியிருப்பான் இல்லையா. அந்த போட்டோகிராபர் தன்னையும் தனியாக போட்டோ எடுத்திருப்பான்.
இப்படி பலவிதமாக யோசித்துவிட்டு தனக்குக் கிடைக்காமல் போன புகழை நினைத்து ஒரு நிமிடம் வருத்தப் பட்டுக் கொண்டாள். கொஞ்ச நேரம் கழித்து விரக்தியுடன் சாய்வு நாற்காலியை விட்டு எழுந்து கொண்டே “சுதந்திரம் கிடைத்து அறுபது வருடங்கள் ஆகிவிட்டது என்று விழாக்களை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். யாருக்குத்தான் வந்ததோ அந்த சுதந்திரம்? என் வரையில் வந்தாற்போல் தெரியவில்லை” என்று முணுமுணுத்துக் கொண்டே பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

முற்றும்

தெலுங்கில் Abboori Chayadevi
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்