கால நதிக்கரையில்……(நாவல்)-19

This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue

வே.சபாநாயகம்



சிவன் கோவிலுக்கு முன்னதாக குளத்தங்கரை ஓரமாக இருந்த முதல் வீட்டை சிதம்பரம் மறக்க முடியாது. அவரது வலது உள்ளங்கையில் ஆட்காட்டி விரலுக்கடியே அரையங்குல நீளத்து நிலைத்துவிட்ட தழும்பு ஒன்று அந்த வீட்டை
நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

அந்த வீடு – அவர்கள் வீட்டில் வெகு காலமாய் வேலை செய்து வந்த சுந்தரத்தினுடையது. சுந்தரத்தின் கணவன் தருமலிங்கமும் சிதம்பரம் வீட்டில் சிறு வயதிலிருந்தே வேலை செய்து வந்தவர். சுந்தரம் வீடு கூட்டுவது, பாத்திரம் தேய்ப்பது, பிள்ளைகளுக்குக் குளிப்பாட்டுவது போன்ற வேலைகளையும், தருமலிங்கம் வண்டி ஓட்டுவது, கிணற்றிலிருந்து நீர் சேந்தி வருவது, பால் கறப்பது போன்ற இதர வேலைகளையும் செய்து வந்தார்கள்.

காலை வேலைகள் முடிந்ததும் சுந்தரம் வீடு திரும்பும்போது சில சமயங்களில் மூன்று வயதுக் குழந்தையாயிருந்த சிதம்பரத்தை இடுப்பில் தூக்கிக் கொண்டு செல்வதுண்டு. அவர்கள் வீட்டில் சிதம்பரத்துக்கு விளையாட அவர் வயதே ஒத்த அவர்கள் மகன் மருது இருந்தான். மதியம்வரை சிதம்பரம் அவர்கள் வீட்டில்தான் இருப்பார். பிள்ளைகள் குளக்கரைக்குச் சென்று விடாமலும் ஆபத்தான விளையாட்டில் ஈடுபடாமலும் வேலைக்கிடையே சுந்தரம் கவனமாய் இருப்பதுண்டு.

ஒருமுறை சுந்தரம் அடுப்படியில் வேலையாய் இருக்கையில் சிதம்பரமும் மருதும் வீட்டின் பின்புறம் இருந்த பூவரச மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார் கள். அப்போதுதான் அந்த விபத்து நடந்தது.

பூவரசம் பூ எப்போதுமே சிதம்பரத்துக்குப் பிடிக்கும். அதன் மஞ்சம் வண்ண
இதழ்களும் உள்ளே அடிப்பகுதியில் வட்டமாகத் தெரியும் கருஞ்சிவப்பு நிறமும் அவருக்குப் பரவசமூட்டுபவை. இப்பொழுது மரம் நிறையப் பூத்திருந்தது. கொஞ்சம் பூக்க¨ளைப் பறிக்க சிதம்பரம் ஆசைப் பட்டார். பூ உயரத்தில் இருந்தது. பெரியவர் களுக்குக் கைக்கெட்டும் தூரம்தான். ஆனால் சின்னப் பிள்ளைகளுக்கு எட்டாதபடி இருந்தது. மரத்தின் மீது ஒரு நீண்ட மூங்கில் சார்த்தி இருந்தது. மருதுவைக் கழியைப் பிடித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு சிதம்பரம் அந்தக் கழியைப் பற்றிக் கொண்டு ஏறினார். குரங்கு வாசற்கம்பிமீது நடக்கிற மாதிரிதான். கால் நழுவி எந்தக் கணத்திலும் விழுந்து விடலாம். ஆனாலும் பூவைப் பறிக்கும் ஆவலில் தத்தித் தடுமாறி ஏறி விட்டார். கிட்டத்தில் ஒரு பூ இலைக்கடியில பாதி மறைந்தபடி தெரிந்தது. எட்டிக் கையை நீட்டி அதைப் பறித்தார். அப்போது ‘சுரீர்’ என்று ஏதோ உள்ளங் கையில் குத்தியது மாதிரி இருந்தது. ‘வீல்’ என்று அலறினார். மருது பயந்து போய் “அம்மா..அம்மா… ” என்று வீரிட்டான். “ஐயோ, என்னடா?” என்று சுந்தரம் அடுப்படி யிலிருந்து ஓடி வந்து பார்த்தால்…!

சிதம்பரம் மூங்கில் கழியில் சரிந்து தொத்தியபடி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார். வலது உள்ளங்கையிலிருந்து ரத்தம் கொட்டுகிறது. கால் கட்டை விரல்கள் மட்டும் மூங்கில் கழியை அணைத்தபடி இருந்தன. ‘ஐயோ.!’ என்று பதறிய படி சுந்தரம் ஓடிவந்து தொங்கும் சிதம்பரத்தைத் தலையில் தாங்கிக் கொண்டார்.சிதம்பரத்தின் வீறல் நிற்கவில்லை. “ஐயோ! யாராவது ஓடியாங்களேன்!” என்று சுந்தரம் அலறியது கேட்டு பக்கத்து வீட்டுப் பண்டாரம் ஓடி வந்தார்.

“ஐயோ, தூண்டில் முள்ளுல்ல கையிலே மாட்டிக் கிட்டிருக்கு…….!” என்று அலறியவராய் ஓடி வந்து பல்லால் தூண்டில் முள்ளின் இணைப்பு நூல் கயிற்றைக் கடித்து அறுத்து சிதம்பரத்தை விடுவித்தார். சிதம்பரத்தைக் கீழே இறக்கி அவர் கதறக் கதற தூண்டிலின் வளைவான கூரிய முள்ளை லாகவாய்ப் பிடுங்கினார் பண்டாரம். ஆற்றில் மீன் பிடிக்கும் பெரிய தூண்டில் அது. தூண்டில் முள் ஒரு குட்டி அரிவாள் மாதிரி பெரிதாக இருக்கும். கனமான நீண்ட மூங்கிலில் கட்டிய முரட்டு நூலின்
கயிற்றில் அது இணைக்கப் பட்டிருந்தது. மீன் பிடிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் அதனை மரத்தில் சார்த்தி வைப்பார்கள். சிதம்பரத்தில் கண்ணுக்கு இலைகளுக்கிடையே மறைந்திருந்த தூண்டில் முள் தெரியவில்லை. உள்ளங்கையில் ஆட்காட்டி விரலுக்கும் மோதிர விரலுக்கும் இடையே புகுந்து ஆட்காட்டி விரலுக்கு அடியில் குத்தி மறுபக்கம் வந்திருந்தது. உடனே பக்கத்து நகர ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய், கட்டுக்கட்டி கை பூரணமாகக் குணமடைய ஒரு மாதத்திற்கு மேல் ஆயிற்று.

இப்போது நினத்தாலும் சிதம்பரத்துக்கு எலும்புக் குருத்துக்குள் பயம் ஊடுருவி சில்லிட வைக்கிறது. சுந்தரம் மட்டும் உடனே ஓடி வந்து தலையில் தாங்கவில்லை என்றால் சிதம்பரத்தின் கால்பிடி நழுவி, அந்தரத்தில் தொங்கி கனம் தாளாமல் கை விரல்களுக்கிடையில் அறுந்து………..ஐயோ அதை நினைத்தாலே சிலிர்க்கிறது!

இதனால் மட்டுமின்றி, சிதம்பரத்துக்கு சுந்தரம் மீதும் தருமலிங்கம் மீதும் ஒரு மதிப்பும் கனிவும் இருந்தது. இருவரும் அவர்கள் வாழ்நாள் முழுதும் சிதம்பரம் வீட்டிலேயே வேலை செய்தார்கள் என்பதல்ல அதற்குக் காரணம். அவர்கள் இருவரும் தங்களை வேலைக்காரர்களாகவே எண்ணாமல் அவ்வீட்டின் உறுப்பினர்களாகவே கருதி பொறுப்புடனும் பாசத்துடனும் பணி செய்தார்கள். சிதம்பரத்திடமும் மற்ற குழந்தைகளிடமும் மிகவும் பாசம் காட்டினார்கள். அவர்களுக்கு அம்மா
தாராளமாகவே ஊதியம் கொடுத்தது மட்டுமின்றி வீட்டில் எது செய்தாலும் அவர்களுக்குக் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள். அதோடு அவர்கள் வேலை செய்யும் போது அம்மாவும் சும்மா மேற்பார்வையிடாமல் தானும் கலந்து கொண்டு செய்வார்கள். “நாங்கதான் இருக்கமே, நீங்க ஏன் ..?” என்று அவர்கள் தடுத்தாலும் வேலைகளில் பங்கு கொள்வது அம்மாவின் சுபாவம். வேலைக்காரர்கள் அம்மாவுக்கு உதவிக்குத்தானே தவிர முழுதும் அவர்களிடமே விட்டுவிட்டு மேற்பார்வை இடுவதற்காக அல்ல.

இவ்வளவு பரிவோடு அவர்களிடம் இருக்கும் அம்மா ஒரு விஷயத்தில் மட்டும் சுந்தரத்தைச் சிறுமைப் படுத்துகிற மாதிரி நடந்துகொள்வது சிதம்பரத்துக்கு உறுத்தலாய் இருந்தது. சுந்தரம் வீடு கூட்டும்போது காமிரா அறைக்குள் கூட்டச் சென்றால் அம்மா பிள்ளைகளில் யாரையாவது உடன் காவலுக்கு இருக்கச் சொல்லுவார்கள். அந்த அறைக்குள் மறைத்து எடுத்துச் செல்கிறமாதிரி எதுவும் திறந்து கிடப்பது இல்லை என்றாலும் அம்மா யாரையாவது உடன் அனுப்புவது சுந்தரம் வேலைக்கு வந்தது முதலே பழக்கமாய் இருந்து வந்திருக்கிறது. ஆனால் ஒரு தடவை கூட சுந்தரம் அதற்காக முகம் சுளித்ததில்லை. “இத்தினி வருஷமா செய்யிறேன், இன்னும் எம்மேலே நம்பிக்கை இல்லியா?” என்று கேட்க வேண்டாமோ? ஊகூம்! ‘அவர்கள் பொருள், அவர்கள் எச்சரிக்கையாய் இருக்கிறார்கள்’ என்றுதான் நினைப்பு ஓடி இருக்குமே தவிர, எதிர்ப்புணர்ச்சி இருந்ததாகத் தெரியவில்லை. அம்மாவுக்கும் அதில் உறுத்தல் இல்லாதது போலவே சுந்தரத்துக்கும் அதில் உறுத்தல் இருந்ததில்லை என்பதுதான் சிதம்பரத்தின் ஆதங்கம். இன்னும் சொல்லப்போனால் அறைக்குள் கூட்டச் சென்றால் சுந்தரமே பிள்ளைகளில் யாரையாவது அழைத்து ‘காமிரா கூட்டப் போறேன் வா’ என்று அழைப்பார். தன்னைக் கட்ட, யானை தானே தன் சங்கிலியை எடுத்துக் கொடுப்பது போல அது இருக்கும்.

‘இப்படியுமா அப்பாவியாக – தான் சிறுமைப் படுத்துவதை உணராமல் அல்லது உணர்ந்தும் அது பற்றி முகம் சுளிக்காமல் – மனிதர்கள் இருப்பார்கள்?’ என்று சிதம்பரத்துக்கு சுந்தரத்தின் மீது வியப்பும் மதிப்பும் ஏற்படும்.

– ‘இன்று அப்படி விசுவாசமான வெகுளியான மனிதர்களைப் பார்க்க முடியுமா?’ என்று சிதம்பரத்துக்கு சிந்தனை ஒடியது. சுந்தரம் அவர் மனக்கண்னில் தோன்றி மென்மையாய் முறுவலித்தார்.

இதோ! சுந்தரத்தின் வீடு வந்து விட்டது. அதே கூரை வீடுதான். ஆனால் ஆள் குடியிருக்கிற மாதிரி கூரை திருத்தி வீடு சேதமில்லாமல் இருந்தது. வீட்டின் முன்னே வந்து நின்றார். யார் இருப்பார்கள்? சுந்தரமும், தருமலிங்கமும் அப்போதே
ஐம்பது வயதுக்கு மேல். மருது இருக்கலாமோ என்னவோ! திறந்திருந்த முன் வாயிலிலிருந்து யாரோ வெளியே வருவது தெரிந்தது.

“ஆருங்க? ஆரைப்பாக்குறீங்க?” என்றபடி முண்டா பனியன் அணிந்த ஒரு ஆள் வெளியே வந்தார்.

” இது மருது வீடுதானே?”

“ஆமாங்க. நீங்க யாருன்னு தெரியலையே!”

“அட! நீ மருது தானே?” என்று அடையாளம் கண்டுகொண்டவராய் சிதம்பரம் மகிழ்ச்சி பீரிடும் குரலில் கேட்டார். “என்னத் தெரியுதா? சிதம்பரம்…”.

ஒரு கணம் திகைத்த அவன், “அய்! நீங்களா? அய்யோ! என்ன அதிசயமா இருக்கு? எப்ப வந்தீங்க? எங்கேர்ந்து வர்ரீங்க? எங்களயெல்லாம் இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களே!” என்று கூவினான் பரவசத்துடன்.

“காலைலேதான் வந்தேன். ரிடையர் ஆயாச்சு. ரொம்ப வருஷம் ஆச்சேன்னு நம்ம ஊரைப் பார்க்கிறதுக்காக வந்தேன். தெரிஞ்ச முகம் ஆருமே இல்லே. அப்பு வீட்டுக்குப் போனேன். அவனுக்கு ஞாபக முட்டவேண்டி இருந்தது. பழைய மனுஷங்க யாரையாவது பாக்க மாட்டமான்னு ஏக்கமா இருந்துது. நல்ல வேளை நீயாவது இருக்கியே!”

“நீங்க வேலைக்குப் போனப்புறம் உங்களப் பாக்கவே முடியிலியே! இனிமெ என்னிக்காச்சும் உங்களப் பாப்பமான்னு இருந்துது. நீங்களே வந்துட்டிங்க” என்றான் மருது உணர்ச்சிப் பெருக்குடன்.

“சரி! நீ என்ன செய்றே, அப்பா அம்மால்லாம் இருக்காங்களா எல்லாம் சொல்லு” என்றார் சிதம்பரம்.

“அய்ய, வெலியிலியே நிக்கிறீங்களே உள்ள வாங்க” என்றழைத்தபடி ஓடி திண்ணையைத் தன் மேல் துண்டால் தூசி தட்டி உட்காரக் காட்டினான். சிதம்பரம் திண்ணைமீது அமர்ந்தார்.

“அப்பா அம்மா செத்து பத்து வருஷத்துக்கு மேலே ஆச்சி. நா பத்தாவதுக் கப்றம் டிரைனிங் படிச்சு வாத்தியாரா இருந்துட்டு இப்பதான் ரிட்டையர் ஆனேன். இங்கியேதான் இருக்கேன். ஒண்ணும் பெரிசா மாத்தமில்லே. அன்னைக்கு நீங்க
பாத்த அதே மாதிரிதான். என்ன, அப்பா அம்மா மாதிரி வீடு சேவகம் செய்யாம தேக உழைப்பு இல்லாம, பிக்கல் பிடுங்கல் இல்லாத வாத்தியார் உத்தியோகம். எதோ கவுரமா ஓடிக் கிட்டிருக்கு”

“எங்க போனாலும் எத்தினி வருஷம் ஆனாலும் சொந்த ஊர, பாலிய ஞாப கத்தை மறக்க முடியுமா? அதிலியும் உங்கம்மாவ மறக்குமா? அதோட உங்கத் தோட்டத்துப் பூவரச மரத்த மரக்க முடியுமா?”

“அய்ய! அத இன்னுமா ஞாபகம் வச்சிருக்கீங்க?’ என்று வியப்பூடன் கூவினான் மருது.

“மறக்கமுடியுதா? சாப்பிட எப்ப உள்ளங்கைய விரிச்சாலும் இந்தத் தழும்பு ஞாபம மூட்டிக்கிட்டு இருக்கே!” என்று அந்தத் தழும்பைக் காட்டினார் சிதம்பரம்.

“ஆமாங்க! சின்ன வயசு சம்பவம்லாம் அப்பிடியே மனசுலே தங்கிடும்தான். கொஞ்ச இருங்க, டீக்கடைக்குப் போயி ஒரு டீ வாங்கியாந்துடுறேன்” என்று கிளம்பினான் மருது. என்ன தடுத்தும் நிற்காமல் ஒட்டமும் நடையுமாகப் போய் எங்கிருந்தோ ஒரு கிளாஸ் டீயுடன் வந்தான்.

டீயைக் குடித்துவிட்டு “நீ இப்ப சும்மாதானே இருக்கே, வாயேன் சிவங்கோயிலப் பாக்கலாம்” என்றழைத்தார் சிதம்பரம்.

“அதவிட எனக்கு என்னா பெரிய வேல? நீங்க வராதவங்க வந்திருக்கீங்க, வாங்க போலாம். இந்த டீக்கிளாசக் குடுத்துட்டு வர்ரேன்” என்று மருது ஓடினான். அவன் வந்ததும் சிவன் கோவிலை நோக்கி இருவரும் நடந்தார்கள்.

(தொடரும்)

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்