கால நதிக்கரையில் …. – அத்தியாயம் – 9

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

வே.சபாநாயகம்


ரெங்கம்மாவுக்குப் பொட்டுக் கட்டியதை சிதம்பரம் பார்த்ததில்லை. அவ்வாறெல்லாம் அவர் அதற்குப் போக முடியாது. வீட்டில் விட மாட்டார்கள். ஆனால் எங்கும் புகுந்து புறப்படுகிற தொந்தி மாமாதான் அப்போதைய செய்திச் சேகரிப்பாளர். எந்தச் செய்தியும் அவருக்குத் தெரியாமலிருக்காது. அந்த ஊரின் வரலாற்று ஆசிரியர் அவர். அழைக்காது போனாலும் எல்லா இடத்துக்கும் எல்லா நிகழ்வுக்கும் அவர் சாட்சி யாக இருப்பவர். அவர் ரெங்கத்துக்குப் பொட்டுக் கட்டிய போது சிவன் கோயிலுக்குப் போனவர். பார்த்ததை சிதம்பரத்துக்குச் சொல்லியிருக்கிறார்.

பொட்டுக் கட்டியது ஒரு சின்னக் கல்யாணம் போல நடந்திருக்கிறது. சிவன் சன்னதியில் வைத்து கோயில் செலவில் நடந்தது. சீர் வரிசையெல்லாம் கோயிலில் இருந்து மேளதாளத்துடன் பெண் வீட்டுக்கு எடுத்துச் சென்று ஊர்வலமாய் ரெங்கத்தை அழைத்து வந்தார்கள். முறைப்படி அய்யர் மந்திரம் ஓத, கெட்டிமேளம் முழங்க ரெங்கத்தின் பெரியம்மாதான், சிவலிங்கத்தின் பாதத்தில் வைத்துப் பூஜை செய்து குருக்கள் கொடுத்த சின்ன தங்கக் பொட்டினைத் தாலியாக அந்தக்
கோயிலின் மூலவர் கைலாசநாதர் சார்பில் கட்டினாள். அதற்குப் பின்னர் அவளுக்குக் கைலாசநாதர்தான் கணவர். வாழ்நாள் முழுதும் இனி அவரது சேவைக்கு அவள் அர்ப்பணம். கோயில் திருவிழாவில் அவள் பாடவேண்டும். அந்தக் காலத்தில் சதிர் ஆடவும் வேண்டும். இப்போது பெயருக்குத்தான் கோயிலுக்குச் சொந்தம். வேறு பந்தமோ உரிமையோ எதுவும் இல்லை.

பள்ளிக்கூட வயதில் அதில் மறுப்புச் சொல்ல ரெங்கத்துக்கு ஏதுமில்லை. பரம்பரை பரம்பரையாக அவளது பெரியம்மா, பாட்டிகளைப்போல கோயிலுக்கான ஒரு சடங்கு என ஏற்றுக் கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை. பள்ளியில் அந்தச் சடங்கு நடந்த கொஞ்ச நாட்களுக்கு, அவளது கழுத்தில் குட்டையாய்த் தொங்கும் அந்தச் சின்னப் பொட்டுத் தாலியைப் பார்த்துப் பிள்ளைகள் புதுச் செய்தியாய்த் தங்களுக்குள் ரகசியமாய்ப் பேசிக் கொண்டார்கள். பிறகு எல்லோரும் – ஏன் அவளும் கூட அதை மறந்து போனார்கள்.

முன்பே சொன்னபடி ரெங்கத்துக்கு மனதுக்குப் பிடித்த ஒருவன் – அவளுக்கு முன்னர் அதே பள்ளியில் இரண்டு வகுப்புகள் மேலாகப் படித்துகொண்டிருந்தவன் – கோபு என்கிற கோபாலன் இருந்தான். பள்ளியில் ஏற்பட்ட பரஸ்பர ஈர்ப்பு காதலாக
மாறியது. பிள்ளைக் காதல்தான் என்றாலும் வயதாக வயதாக அது தீவிரக் காதலாக வளர்ந்தது. என்னதான் ரகசியமாய்ச் சந்தித்தாலும் கிராமத்தில் அது வெளிப்படாமல் இருக்குமா? ஆனால் யாரும் அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. ‘பிஞ்சிலேயே ஆளைப் பிடித்து விட்டாள்’ என்ற விமர்சனம் தவிர வேறு பேச்சு இல்லை. ரெங்கத்தின் பெரியம்மாக்கள் தெரிந்தும், அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. எப்படியானாலும் ஒருவன் அவளுக்கு வரத்தானே வேண்டும் – அது யாராக இருந்தால் என்ன?
ஆனால் கோபுவின் தாயால் அப்படி இருக்க முடியுமா? தகப்பனில்லாத – வீட்டுக்கு ஒரே வாரிசான, எதிர்கால ஊர் மிராசுகளில் ஒருவனான அவனை இப்படி விட்டுவிட முடியுமா? அவள் கண்கொத்திப் பாம்பாய்க் கவனித்துக் காவலிருந்தாள்.

ரெங்கம் ஒரு நாள் வயதுக்கு வந்து அதற்கான சடங்குகள் முடிந்ததும் பெரியம்மாக்கள் அவளுக்குச் சாந்தி முகூர்த்தம் நடத்திவிட ஆயத்தம் செய்தார்கள். கோபுவுக்குத் துடித்தது. ஆனால் அம்மா தன் அருமைப் பிள்ளையைத் தாசிக்கு தத்தம் செய்துவிடுவாளா? காதலர்கள் இருவரும் செய்வதறியாது தவித்தார்கள்.

கடைசியில் அவளுக்குச் சாந்தி செய்து வைக்க அடுத்த ஊர் மைனர் ராஜக்கண்ணு முன் வந்தான். கோபுவுக்கு ஏக்கப் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. ரெங்கம் அழுது ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யவில்லை.
ராஜக்கண்ணு என்ன தாலி கட்டவா போகிறான்? ஆரம்பிக்கிறவன் அவன் என்பதால் அவனிடமே இருக்க வேண்டும் என்று சட்டமா என்ன?

ராஜக்கண்ணுவுக்கு வயது நாற்பதுக்கு மேல். இளமையும் இல்லாமல் முதுமையும் இல்லாமல், தலைமுடியில் ஆங்காங்கே பளிச்சிடும் வெள்ளி நரை, முறுக்கு மீசை, எப்போதும் தாம்பூலம் நிறைந்த சிவந்த வாய், கழுத்தில் மைனர் சங்கிலி, காலில் கட் ஷ¥, வலது புஜத்தில் கறுப்பு முடிக்கயிற்றில் வெள்ளித் தாயத்து, வெள்ளை வெளேரென்ற மஸ்லின் வேட்டி, கைவைத்த வெள்ளை பனியன், தோள்மீது கனத்த தேங்காய்ப்பூத் துண்டு, நெற்றியில் அரகஜா சந்தனம், தூக்கி வாரிய நெளிநெளியான அமெரிக்கன் கிராப், கூடவே வெள்ளி வெற்றிலைப் பெட்டியை ஏந்திய ஒரு எடுபிடியு டன் – பளிச்சென்று புத்தம் புதிது போலத் தோற்றமளிக்கும் ரேக்ளாக் குதிரை வண்டியைக் கடகடவென ஓட்டியபடியபடி தான் வருவான். வடக்குத் தெருவுக்கு அந்த ரேக்ளா முரட்டு ஆவேசத்துடன் ஓடி நுழைகையில், தெருவில் திரியும் கோழிகளும் பன்றிகளும் கிறீச்சிட்டுப் புறம் ஓடும். சிறு பிள்ளைகளும் பெண்களும் இந்த பந்தாவில் சற்று மனம் பறிகுடுப்பார்கள். ஆனால் ரெங்கம் இதற்கெல்லாம் மயங்கி விடவில்லை.

தடபுடலாக அவளது சாந்தி முகூர்த்தம் நடந்தேறியது. சோபன அறைக்கு வேண்டிய இரட்டைக்கட்டில், மெத்தை, அலமாரி எல்லாம் ராஜக்கண்ணு ஏற்பாட்டில் வண்டியில் வந்து இறங்கின. அப்போதைய நடைமு¨றைப்படி நல்ல முகூர்த்த நாளில் உற்றார் உறவினர் முன்னிலையில் கெட்டி மேளம் முழங்க ரெஙகத்தின் கையைப் பிடித்து அழைத்து, சோபன அறைக்குள் நுழைந்தான் ராஜக்காண்ணு. ரெங்கம் உடம்பை அவன் வசம் விட்டுவிட்டு மனதைக் கோபுவிடம் தொடர விட்டாள்.

எல்லோருக்கும் அது தெரிந்த விஷயந்தான். ஆனால் நாளடைவில் சரியாகிவிடும் என்று எண்ணினார்கள். ஆனால் இலைமறைவு காய்மறைவாய் அதுவரை இருந்து வந்த காதலர் சந்திப்பு அதற்குப் பிறகு போகப்போக வெளிப்படையாகவே அதிகரிக்கலாயிற்று. ராஜக்கண்ணு ஊரில் இல்லாத நாட்களில் கோபுவைத் தேடி ரெங்கம் இரவில் குறிப்பிட்ட இடத்துக்கு வருவதும் பாதி ராத்திரியில் திரும்புவதும் தொடர்ந்தது. ஊரில் ‘கிசு கிசு’ வளர்ந்து சுவற்றில் இவர்கள் காதல் ரகசியத்தை எழுதும் அளவுக்குப் போயிற்று.

தாமதமாகத்தான் ராஜாக்கண்ணுவுக்கு விஷயம் தெரிந்தது. நல்லதனமாக ஆரம்பித்து புத்திமதிபோல ரெங்கத்தைக் கண்டித்தான். அவள் ஒன்றும் எதிர்த்தோ மறுத்தோ பேசவில்லை. ‘இப்போதைக்கு இது போதும்’ என்று அதிகம் மிரட்டாமல்
விட்டான். ஆனால் தொடர்பு நிற்பதாகத் தெரியவில்லை. பிறகு மிரட்டி, உருட்டிப் பார்த்தான். ஊகூம், ரெங்கத்தின் போக்கில் மாற்றமில்லை. ஆனால் இப்போதும் அவள் மறுப்பு, எதிர்ப்பு எதுவும் காட்டவில்லை.

வாய்ப்பேச்சால் பலனில்லை என்றதும் அடி உதை என்று ஆரம்பித்தான். அப்போதுதான் ரெங்கம் எதிர்க்க ஆரம்பித்தாள். நேரடியாகவே “நா என்ன ஒனக்குத் தாலி கட்டின பொண்டாட்டியா? நா தேவடியா, யார்கூட வேணுமானாலும் போவேன்.
நீ அதக் கேக்க முடியாது!” அவள் சீற ஆரம்பித்ததும் ராஜக்கண்ணு அவளிடம் நேருக்கு நேராகப் பேசுவதை விட்டு, அவளுடைய பெரியம்மாக்காள், உறவினர்களிடம் சொல்லித் தடுக்க முயற்சித்தான். யார் பேச்சையும் ரெங்கம் கேட்பதாக இல்லை.
மேலும் ராஜக்கண்ணுவுக்கு உள்ளூரில் அவ்வளவாக செல்வாக்கும் இல்லை.

நியாய அநியாயம் பார்க்காமல் ஊர்க்காரர்கள் உள்ளூர் விசுவாசியாக இருந்தார்கள். விதேசி மோகம் எல்லாம் வெள்ளைக்காரனிடம் மட்டும்தான் இருந்தது. “அவ சொல்றதும் ஞாயம்தானே? இவுரு சாந்தி முகூர்த்தம் பண்ணி வச்சுட்டாருன்னு இவுருக்கே சொந்தமாயிடுவாளா? அவ கோயிலுக்குப் பொட்டுக் கட்டினவ. அவ காசு குடுக்குற எவங்கிட்டியும் போவாதான்!” என்று நரிப் பஞ்சாயத்துப் பேசினார்கள்.

ஆனால் காசு இங்கு பிரச்சினை இல்லையே? ராஜக்கண்ணு அதில் சுணக்கம் காட்டியவன் இல்லை. அத்தோடு ரெங்கமும் காசுக்காக கோபுவிடம் போகவும் இல்லை. அவளுக்கு கோபுவிடம் பால்யத்தில் ஏற்பட்டுவிட்ட மோகம் தான் இதற்குக்
காரணம். அதை ராஜக்கண்ணுவால் தடுக்க முடியாது.

மிகவும் யோசித்து ராஜக்கண்ணு வேறு உக்தியைக் கையாள முடிவு செய்தான். ‘எரிவதை இழுத்தால் கொதிப்பது நின்றுதானே ஆக வேண்டும்?’

(தொடரும்)

v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்