எஸ். ஷங்கரநாராயணன்
ஏலாம்பாக்கத்தில் லோடு இறக்கி விட்டு அவர்கள் நடந்தார்கள். புதிய ஊரின் வனப்புகள். அருகில் அண்ணன்.
என்னவோ தோணியது. அண்ணன் கையைப் பற்றிக் கொண்டே சின்னக் குழந்தையாட்டம் நடந்தான்.
அதைப் பார்க்க கிருட்டினமணிக்குச் சிரிப்பு. ‘எலேய் பசிக்கா?’
இல்ல, எனத் தலையாட்டியவன், பிறகு வெட்கத்துடன் ‘ஆமாண்ணே’ என்றான் தயக்கமாய். அவனிடம் யார், பசிக்கிறதா என்று கேட்டிருக்கிறார்கள்.
ஆனால் அண்ணன் வெறும் டீ வாங்கிக் கொடுத்தான்! மணி எட்டு எட்டரை. வழியில் எங்கயும் சாப்பாடு விருத்தியாய் இராது என தள்ளிக் கொண்டே வந்துவிட்டான் கிருட்டினமணி. தவிரவும் குளிக்காமல் கொள்ளாமல் சாப்பிட பொதுவாக அவன் விரும்புவதில்லை. லாரிஷெட்டில் கூட எப்பவும் வேலை முடித்த ஜோரில் தண்ணியடிக்கிற குழாயில் குளித்து விடுவான். உடைமாற்றிக் கொண்டு சுத்தபத்தமாய்ச் சாப்பிட உட்கார்வான்.
‘ரெண்டு தெரு திரும்பினா பத்தினிக்கண்ணீர்னு ஒரு ஆறுடா. போயிக் குளிச்சிட்டு வந்து சாப்பிடலாம்… என்ன?’
சரி என்று சொல்ல வேண்டியதாயிற்று. உண்மையில் அதுவரை காணாத உலகப் பசி அவனை ஆட்கொண்டிருந்தது. ஆச்சர்யம். எத்தனை கடும் பசியையும் தாக்குப் பிடித்தபடி வெறுமே திண்ணைகளில் திடல்களில் நோக்கம் எதுவும் இல்லாமல் படுத்துத் தூங்கியவன். உறவு சுற்றம் வந்தால் மனசைப்போல, பசியும் திறந்து கொள்ளும் போல!
கடையில் நின்று சோப்பு வாங்கிக் கொண்டார்கள்.
‘போட்டு மாத்திக்கிறதுக்கு உடுப்பு இருக்காடே?’
‘இருக்கு’
சில்லென்று கிடந்தது நீர். தெளிந்த தண்ணீரே அழகு. அதன் உள் வயிறு தெரிந்தது. இந்தக் காலப் பெண்கள் இப்படித்தான் புடவை அணிகிறார்கள்… சிவஜோதிக்கு இப்படி உடைகள் பிடிக்கின்றன. தொப்புள் சுழி தெரிய இறக்கிச் சேலை கட்டுவது அவனுக்கும் பிடிக்காது. அவளும் அதை விரும்புவதில்லை. தலை நிறைய கனகாம்பரம் வைத்துக் கொள்கிறாள். ஏனோ வெள்ளைப் பூக்களை விட வண்ணப் பூக்களை அவள் விரும்பினாள். நிறைய நிறைய வைத்துக் கொள்ள விரும்பினாள். ரோஜாவே கூட ஒற்றை ரோஜா வைக்க மாட்டாள். தொடுத்துக் கட்டி பிறைநிலா வட்டமாய் வைப்பாள். முகப் பௌடர். திருஷ்டிப் பொட்டு. அவள் அலங்காரம் செய்து கொள்வதைப் பார்த்து நல்லா இருக்கு, என அவன் சொல்ல வேண்டும்!
பரபரப்பாய் வீட்டு வேலை செய்கிறவள். டிரஸ் பண்ணிக் கொண்டால் நடையே மாறிவிடும். காதில் ரிங் அணிவதில் ஆசை அவளுக்கு.
‘நல்லா இருக்கா?’
‘நல்லாதாண்டி இருக்கு. ஆனா என்ன, இருட்டுல இப்டியே எதிர்ல வந்திறப்டாது… கண்ணுல மை தீட்டச் சொன்னா, மைல கண்ணைக் கழட்டிப் போட்டாப்ல இருக்கே’
வீட்டில் குளித்தால் குளியல் அறைக்கு வந்து முதுகு தேய்த்து விடுவாள். சுரண்டச் சுரண்ட சுரங்கமாய் அழுக்குருண்டைகள் வரும்… இந்த மாதிரி உடலைச் சூடேற்றிக் கொண்டால் பயண அலுப்பு பத்திகூடக் கவலைப் படாமல் மனம் குஷியாகி விடும்…
ராஜா கொட்டாவி விட்டான்…
– கமலா என ஒரே பெண் அவருக்கு. நாலாம் வகுப்பு போகிறதாக அண்ணன் சொன்னார். அவளை உடனே பார்க்க வேணுமாய் இருந்தது ராஜாவுக்கு. உறவு தளிர்க்கும் காலம்.
நான் போவதே அண்ணிக்கும் அந்தக் கமலாவுக்கும் தெரியாது….
பத்தினிக்கண்ணீர். பெரிய ஆறு என்று சொல்ல முடியாவிட்டாலும் தண்ணீர் கிடந்தது. குளிக்கிற அளவில் இடுப்புக்கு ஆழம். காலையில் சில்லிட்டுக் கிடக்கும் ஆறு நேரம் ஆக ஆக சுடும். மேல்ப்பக்கம் சூடாகவும் முங்க முங்க குளிராவும் கலப்படமாய் இருக்கும் அது.
அழுக்கு தீரத் தீர நிதானமாய்க் குளித்தார்கள். தண்ணீருக்குள் மொட்டைக் கட்டையாய் இருந்து கொண்டு முழுசாய் உடைகளைக் கழற்றி அலசிப் பிழிகிறான் அண்ணன். ஈரத்துண்டைக் கட்டிக் கொண்டு எழுந்து நிற்கிறான் பிறகு. அந்தத் துண்டு டிங் டாங்கை மறைச்சாப்ல தோணவில்லை.
சாப்பிட சாப்பிட வயிறு திறந்து கொண்டாப் போல இருந்தது. கிருட்டினமணியும் செலவைப் பற்றிக் கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை.
‘வேறெதாவது வேணுமாடா…’ என்கிறான் பரோட்டாவைப் பல்லால் இழுத்துக் கொண்டே.
‘பார்சல்…’
‘பார்சலா?’
‘தங்கச்சிக்கு…’ என்று சிரித்தான் ராஜா. அவனுக்கு உடனே கமலாவைப் பார்க்கணும் போல இருந்தது.
பெண்துணை காணாதவன் அல்லவா!
>>>
மனம் விரும்பி உறவுகளைப் பற்றிக் கொள்கிறது. சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள ஆட்கள் கூட இருப்பதே தெம்புதான். சுகங்கள் அப்போது இரட்டிப்பாகவும், துக்கங்கள் பாதியாவுமே கூட பரிமாணம் பெற்று விடுகின்றன!
விட்டுக் கொடுத்து விட்டால் இழப்புகளில் வலி இல்லை.
விரதம் இருக்கையில் பட்டினி கூட எத்தனை அழகாகி விடுகிறது.
காத்திருத்தல் கனவுகளின் நீட்சிதான். நம்பிக்கை அப்போது உள்ளே பூ போல விரிந்து மணம் பரப்புகிறது.
கால்களில் கண்ணறியா கொலுசுகள் கட்டி விட்டது யார்? சிரிப்பில் சற்று வெண்மையைப் பூசி விட்டது யார்?
‘தங்கச்சிக்கு என்ன பிடிக்கும்?’ என்கிறான் ராஜா.
‘தங்கச்சிக்கா?… உன்னைப் பிடிக்கும்’ என்று கேலி செய்கிறான் கிருட்டினமணி.
‘என்னைச் சாப்பிட முடியாது’ – அவனும் விடுவதாய் இல்லை. கன்றுக்குட்டித் துள்ளலாய் மனம் கிறங்கித் திரிகிறது. இத்தனை நாளாய் உறவுக்கு உள்ளூற ஏங்கிக் கிடந்திருக்கிறேன்.
‘இதான் கமலா…’ என்று பர்சின் புகைப்படத்தைக் காண்பிக்கிறான் கிருட்டினமணி. அவன், சிவஜோதி, கமலா என்று மூவர் கூட்டணியில் குடும்பப் புகைப்படம். எப்பவும் பர்சில் வைத்துக் கொண்டிருந்தான் அவன். ரெட்டைச் சடை போட்டு கருப்பு நெற்றிநடுப் பொட்டு. கன்னங்கள் உப் பி புதிதாய்ப் போட்டெடுத்த பூரிபோல் இருந்தன. அதில் கூட மச்சம் போல் சிறிய திருஷ்டிப் பொட்டு. புகைப்படம் எடுக்கிற ஆனந்தம் அதற்கு. சிரித்த பல்வரிசையில் நடுவில் ஒரு பல், கிரிக்கெட் ஆட்டத்தில் நடுக்குச்சி எகிறினாப் போல… காணவில்லை.
பல் கெட் அப்ல உனக்கும் அவளுக்கும் ஒரே மாதிரிடா! – என்று சிரிக்கிறான் கிருட் டினமணி.
சின்னவயசுப் புகைப்படம். பட்டுப் பாவாடை கட்டிய உற்சாகம். மயில்நீல பட்டு உடையில் ஊடாடி ஜரிகைகள். சின்னாளப் பட்டு. இப்போது முகமும் சிறிது மாறியிருக்கும். உயரங் கொடுத்திருப்பாள்.
அப்பாவின் மிலிட்டரிச் சட்டை போட்டிருந்தான் ராஜா.
பாரதி, இது அவன் கேட்காமலே கிடைத்த பெரிதினும் பெரிது…
தொளதொளவென்று முட்டிவரை தொங்கியது. ‘ஏல உனக்கு கீழ டவுசரே தேவையில்லைடா’ என்று கிருட்டினமணி கேலி செய்தான். ‘வேற உடுப்பு எதும் எடுக்கணுமா?-ன்னு கேட்டேன்ல…’ என்றான்.
‘அப்பா சட்டை. நல்லாதான் இருக்கு…’ என்றான் ராஜா.
‘ஐய இப்பிடியே போனா… பொண்ணு பூச்சாண்டின்னு பயந்துக்கும்டா…’
சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தார்கள். உண்மையில் மாத்து உடை இருக்கிறதா என்று நான் அவனிடம் கேட்டிருக்கக் கூடாது. பாவம் அண்ணன் எவ்வளவுதான் செலவு செய்யும்னு, ஒரு கணம் ஜகா வாங்கி விட்டானோ, என்றிருந்தது. நல்ல பிள்ளைதான். இவனைப் பெத்து வளர்க்க இவங்க அப்பன் ஆத்தாளுக்குக் குடுத்து வைக்கல பாரேன், என்று வருத்தமாய் இருந்தது.
‘ஏல உண்மையச் சொல்லு… எத்தனை வரை பள்ளிக் கூடம் போனே?’
‘அட எப்பவோ போனது….’
‘டேய் சொல்லுடா…’
‘நாலாவது.’
‘ஏன்… மேல படிக்கலியா?’
‘இல்ல’
‘அதான் ஏன்?’
ராஜா சிரித்தபடியே ‘நாலுக்குப் பிறகு அஞ்சுன்னு ஞாபகம் வராமப் போச்சு…’
‘ஏல என்ட்டியே திருப்பிச் சொல்றியாக்கும்…’
‘அத்த விடுங்கண்ணே… ருவ்வாக் கணக்கு தெரியும். தமிள்ல எழுத்துக் கூட்டி வாசிப்பேன்… பஸ்ல போறஊர் வாசிக்கத் தெரியும்.’
‘வர்ற ஊர்னா தெரியாதா!…’
போகும் வழியில் பெட்டிக்கடையில் அன்றைய தினசரியின் செய்தி போஸ்டர்.
‘அது என்ன?’
‘அது வடை சுத்தித் தர்ற காகிதம்ண்ணே…’
‘ஏல வெளையாடாதே… ஒன் வயசுல படிக்கணும்டா… நான்தான் விளையாட்டுத்தனமா விட்டுட் டேன்… படிக்கிற வயசுல படிக்கணும்.’
எளிய பருத்தி உடைகள். ரெண்டு டவுசர், ரெண்டு சட்டை, ரெடிமேட் வாங்கினான் கிருட்டினமணி. உள்ளாடைகள் பிறகு பார்த்துக் கொள்ளலாம். டிங் டாங்கைக் காத்தாற விடவேண்டிதான். பணம் இல்லை. இதுக்கே ராஜாவுக்கு வருத்தம். அண்ணனைப் போட்டு செலவு செலவு என்று வாட்டுகிறான் அவன். அழுகை வந்து விட்டது அவனுக்கு…
‘ஏல எதுக்கு அழுவறே? இப்ப என்ன ஆயிப் போச்சின்னு அழுகறே?’ என்று தட்டிக் கொடுக்கிறான் கிருட்டினமணி.
‘எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சிரிச்சிக்கிட்டே சகிச்சுக்கிட்டேன் அண்ணே… இப்ப சந்தோசம் வர்ற போது…. அழுகை அழுகையா வருது!’ என்றான் ராஜா.
நேற்றையவரை அடுத்தவேளைச் சோற்றுக்கு இல்லாதவன். ஒரே நாளில் எத்தனை பெத்தம் பெரிய மாறுதல்கள்.
வாழ்க்கை. அதன் விசித்திர முடிச்சுகள்.
பூ – கட்டிய ஜோரில் அர்ச்சனைக்கும் போகும் – பிணத்தின் மேலும் போய்ச்சேரும் என்கிறாப்போல!
அண்ணன் அவனைப் பார்த்துவிட்டு ‘நாளைக்கு ஊருக்குப் போயி உனக்கு முடி வெட்டணும்டா’ என்கிறான்.
எனக்கே இத்தனை தூக்கம். இரா முழிச்சி, வண்டி ஓட்டி வந்திருக்கிறான் அண்ணன். அவனுக்கு உடம்பு அலுப்பு எப்பிடி இருக்கும்…
‘பழகிருச்சி… ஆச்சி. வீட்ல போயித் தூங்க வேண்டிதான…’ என்றான் கிருட்டினமணி.
திரும்ப பஜார்ப் பக்கம் வந்தபோது லாரி காலியாய் இருந்தது. லோடு இறக்கி விட்டார்கள். அதைவிட ஆச்சர்யம் – அதில் பாதி தார்கள் விற்றுப் போயிருந்தன.
வாலாந்துறைப் பழம்னா எப்பவுமே கிராக்கிதான். ருசியை வெச்சே சொல்லிறலாம். அந்த மண் வளம் அப்படி, என்றான் அண்ணன்.
லாரிக்குள் ஒரு சீப்பு பழுக்காத பழங்கள் கேட்டு வாங்கி வைத்துக் கொண்டிருந்தான் ராஜா. தங்கச்சிக்குப் பிடிக்கும், என்று கிருட்டினமணி சொல்லியிருந்தான்.
( தொ ட ர் கி றது )
storysankar@gmail.com
- யாரிந்த நீதிபதிகள் ?
- சதாம்
- நிஜ உலகிலிருந்து சுதந்திரத்துக்கு…
- நீர்வலை (5)
- திண்ணை ஏழு ஆண்டுகள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:11)
- ஆண்பால் பெண்பாலுக்கு அப்பால்…
- படுகொலை செய்யப்பட்ட சதாம் உசைன் அவர்கள்…
- சதாமின் மரணம் ஒரு பழிவாங்கல் மட்டுமா?
- காதல் நாற்பது (3) – சொர்க்கத்தை நோக்கி !
- மடியில் நெருப்பு – 19
- தாயகமே உன்னை நேசிக்கிறேன்
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 3 – இரட்டைக்குழல் துப்பாக்கி
- புதிய காற்று
- ஞானரதத்தில் ஜெயகாந்தன் – புத்தக அறிமுகம்
- விடாது துரத்தும் ஜின்
- யூமாவாசுகி முதல் சமுத்திரம் வரை – அறிமுகம்
- சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்
- ஜெயந்தி சங்கர் நூல் வெளியீடு – அழைப்பிதழ்
- Limp scholarship and Nadar bashing
- திண்ணை வாசகருக்கு ஓர் அறிவிப்பு
- அம்ருதாவின் புத்தக வெளியீட்டு விழா
- பிரதாபசந்திர விலாசம் – புத்தக அறிமுகம்
- ஜெயமோகனின் விசும்பு – புத்தக அறிமுகம்
- பசுக்கள் பன்றிகள் போர்கள் – II – அறிமுகம்
- ஜெயமோகன், சூத்ரதாரியின் இலக்கிய உரையாடல்கள் – புத்தக அறிமுகம்
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 18
- நாவலர், பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய “கள்ளர் சரித்திரம்”
- இன்னும் சில ஆளுமைகள் – புத்தக அறிமுகம்
- ஒரு செம்பு சுடு தண்ணீர்.
- பொய் – திரைப்பட விமர்சனம்
- உராய்வு கவிதைத்தொகுப்பு – ஒரு பார்வை
- கடித இலக்கியம் – 39
- திருவருட்பயன் – பெண்ணிய வாசிப்பு
- இலை போட்டாச்சு 9 – இனிப்புப் பச்சடி வகைகள்
- பேய்மழை
- புத்தக அலமாரி
- * ஒற்றை சிறகு *
- விறைத்துப்போன மௌனங்கள்
- பெரியபுராணம்–119 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- உடைந்து போன புல்லாங்குழல்களை ஒன்று திரட்டிய நிஷாப் பெண்
- மீசை