மடியில் நெருப்பு – 9

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

ஜோதிர்லதா கிரிஜா



தான் அலுவலகத்தை விட்டு முன்னதாய்க் கிளம்பிச் சென்றுவிட்ட உண்மை அம்மாவுக்கு எப்படியோ தெதிந்துபோவிட்டது என்பது அவளது கறாரான கேள்வியிலிருந்து புரிய, சூர்யாவின் இதயம் அதன் விளைவான படபடப்புக்கு ஆளான அந்தச் சில கணங்களுக்குள் அவள் மனத்தில் எண்ணற்ற எண்ணங்கள் எழுந்து வீழ்ந்தன. ‘என்ன சொல்லித் தப்புவது? ஒருவேளை அவரோடு என்னைச் சேர்த்துப் பார்த்துவிட்டு யாராவது அம்மாவிடம் சொல்லிவிட்டார்களோ? அல்லது டாக்டரிடம் போவதற்காக வெளியே போன அம்மாவின் பார்வையிலேயே நான் பட்டிருந்திருப்பேனோ? …’
“என்னடி? வாயிலே கொழுக்கட்டையா அதக்கிக்கிட்டிருக்குறே? எங்க போய்ச் சுத்திட்டு வறே?”
‘அம்மாவிடம் உண்மையைச் சொல்லிவிடலாமா?… வேண்டாம்… இப்போதைக்கு வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும். எங்கள் முதல் சந்திப்பே இன்றுதானே நடந்திருக்கிறது? அதற்குள் அவசரப்படக்கூடாது…இப்போதைக்குப் பொய்யே சொல்லலாம். உண்மை தெரிந்திருந்து என்னை மடக்கினால்,அப்போது நடந்ததைச் சொல்லிக்கொள்ளலாம்…’
அவள் அனந்தநாயகியின் கண்களைச் சந்திக்காமல், ” எங்க ஆ·பீஸ் சிநேகிதிங்களோட சேர்ந்து சினிமாவுக்குப் போனேம்மா…திடீர்னு தீர்மானிச்சுப் போனோம்மா. அதனாலதான், முன்கூட்டி உங்கிட்ட சொல்ல முடியல்லே. உனக்கு உடம்பு சரியில்லாததைப் பார்த்ததும் எனக்கு உறுத்தலாயிடிச்சு. அதான் பொய் சொல்லிட்டேன்…உனக்கு என்னம்மா உடம்புக்கு? டாக்டர் என்ன சொன்னாரு?”
அனந்தநாயகி மகளை உற்றுப் பார்த்தாள். ‘ஆ·பீஸ் சிநேகிதிங்களோட சினிமாவுக்குப் போயிருந்தா, அதுக்குப் பொய் சொல்ல வேண்டிய அவசியமென்ன? உறுத்தலென்ன உறுத்தால்!’
சூர்யா வேலையில் சேர்ந்த அன்றே அனந்தநாயகி அவளுக்கு எக்கச்சக்கமான அறிவுரைகள் கூறியிருந்தாள். ‘வீடு உண்டு, அலுவலகம் உண்டு’ என்று நேராக வீடு வந்து சேரவேண்டும் என்பது அவற்றில் முக்கியமான அறிவுரை. எதிர்பாராத காரணத்தால் அவள் வீடு திரும்பத் தாமதமாகுமானால், எதிர்வீட்டுத் தொலைபேசியில் தகவல் சொல்லிவிடவேண்டுமென்பது அவள் கட்டளை.
“என் உடம்பு கிடக்கட்டும். வயசுப் பொண்ணு. உன் உடம்பை நீ பத்திரமாப் பாத்துக்கடி,” என்று அவள் சூர்யாவை நேரடியாகப் பார்த்துச் சொன்னபோது அவளுக்குத் திடுக்கென்றது.
“என்னம்மா இது? என்னென்னமோ சொல்றே?”
“காலம் கெட்டுக் கிடக்குதுடி. செக்கச் செவேல்னு இருக்கே. மூக்கும் முழியுமா வேற இருக்கே. தளதளன்னு நீ இருக்கிறதைப் பாக்குறப்பல்லாம் எனக்கு மனசு பக்குபக்குனு அடிச்சுக்குதுடி. ஒரு பெத்த தாயோட கவலையைப் புரிஞ்சுக்கடியம்மா! ஓடுகாலிக் குடும்பம்ம்கிறதா நீ வேற இந்தக் குடும்பத்துக்குப் பேரைத் தேடி வெச்சுடாதே!”
சூர்யா இப்போது தாயை நேரடியாக நோக்கினாள்: “என்னம்மா, இது? ஓடுகாலி அது, இதுன்றே? நான் உனக்கு சத்தியம் வேனும்னாலும் பண்ணித்தறேம்மா… அப்படியெல்லாம் நான் ஓடப்பட்டவ இல்லே! போதுமா? இல்லே, உள்ளங்கையிலே சூடம் கொளுத்தி சத்தியம் பண்ணணுமா?”
இவ்வாறு அழுத்தந்திருத்தமாக அறிவித்துவிட்டு அவள் தலையைத் திருப்பியபோது, சுகன்யாவின் ஆழமான, பொருள் பொதிந்த பார்வை அவளைத் துளைத்துக் கொண்டிருந்தது. அவள் கண்களில் இலேசான குறும்புச் சிரிப்புக்கூடத் தென்பட்டதாக் அவளுக்குத் தோன்றிற்று. அதை எதிர்கொள்ள முடியாமல், அவள் முகம் சிவந்து போனாள்.
“என்னாமோடியம்மா! உன்னோட அக்காக்காரி அப்படிப் பண்ணினா. நீ வேற என்னமும் பண்ணி இந்தக் குடும்பத்துக்குத் தீராப் பழியைத் தேடி வெச்சிறாதே. அம்புட்டுத்தான் நான் சொல்லுவேன். இத்த அம்மா என்ன இப்படியெல்லாம் பேசுதுன்னு இப்ப எரிச்சலாத்தான் இருக்கும். நாளையும் பின்னேயும் நீயும் ஒரு தாயாவேடி. அப்ப உனக்குப் புரியும் என்னோட கவலை! இப்ப புரியாது.”
சூர்யாவின் பார்வை தாழ்ந்தது. அனந்தநாயகி மறுபடியும் தொடர்ந்தாள்: “இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்கிறாப் போல, போத்தின முந்தானை வெலகாம, அவளும்தான் அடக்க ஒடுக்கமா இருந்துக்கிட்டிருந்தா. கடைசியிலே என்ன ஆச்சு? எவனோடவோ ஆள் மாயமா மறைஞ்சு போயிட்டா. வக்கணையா ஒரு கடுதாசியை எழுதி வெச்சுட்டுப் போயிட்டா. படுபாவி! எங்கிட்டு இருக்காளோ! இழுத்துக்கிட்டு ஓடுற பொண்ணுங்க நல்லா வாழ்ந்ததா எந்தக் கதையும் கிடையாது…அந்தப் பாவிப் பயலோடதான் இருக்காளோ, இல்லாட்டி அவனும் கைகழுவிட்டு ஓடிட்டானோ?” – எழுந்து உட்கார்ந்த அவள் உதடுகள் துடித்தன. அழுகையை அடக்க முயன்றதில் கன்னங்கள் அதிர்ந்தன.
சுகன்யா சட்டென்று ஓடிவந்து, “உணர்ச்சி வசப்படக் கூடாதுன்னு டாக்டர் சொல்லி அரை மனி நேரங்கூட ஆவலே. அதுக்குள்ளாற இப்பிடி ஆயாசப் பட்றியேம்மா? பேசாம இரும்மா…” என்றாள்.
அனந்தனாயகி படுத்துக்கொண்டாள். சுகன்யாவின் பேச்சு நெருடலான தலைப்பிலிருந்து விலக அடி யெடுத்துக் கொடுத்தாற் போலிருக்க, சூர்யா, “டாக்டர் என்ன சொன்னாரு, சுகன்யா?” என்று கவலையாய் விசாரித்தாள்
“ரத்த அழுத்தம்னு சொல்லி மாத்திரை எழுதிக் கொடுத்திருக்காருக்கா. அதிர்ந்து பேச வேணாம்னாரு. கடினமான வேலையெல்லாம் செய்யக் கூடாதாம்…கவலையே படக்கூடாதுன்னாரு.”
சுகன்யா கவலையுடன் தாயைப் பார்த்த போது, அவள் கண் மூடிப் படுத்திருந்தாள். சூர்யா பின்கட்டுக்குப் போனாள்….முகம் கழுவிக்கொண்டே ராஜாதிராஜணைப் பற்றி யோசிக்கலானாள். ‘ராஜாதிராஜனாமே, ராஜாதிராஜன்! ராஜாக்களுக் கெல்லாம் ராஜா மாதிரிதான் இருக்காரு. . ஆனா அந்தக் கை தான் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம் பண்ணப் பார்க்குது. அப்பப்பா! .. ஜாக்கிரதையா யிருக்கணும்…என்ன வயசு இருக்கும்? நாங்க ரெண்டு பேருமே வயசு கேக்கல்லே…’ – முகத்தில் சோப்பு நுரையுடன் கண்மூடியிருந்த அவள் ஓசைப்படாமல் அருகே வந்து நின்ற சுகன்யாவைக் கவனிக்கவில்லை. கவனித்திருப்பின், அவளையும் அறியாது அந்தப் புன்னகை அவள் உதடுகளை வளைத்திருக்காது.
சுகன்யா தொண்டையைக் கனைத்துத் தன் வருகையைத் தெரிவித்தாள். அந்தக் கனைப்பில் ஒரு குறும்பும் சேர்ந்து ஒலித்ததை சூர்யா உணர்ந்தாள். அசடு வழியத் தன் புன்னகையைச் சமாளித்தவாறு அவள் முகத்தில் தண்ணீரை அடித்துக்கொண்டாள்.
“அம்மாவுக்கு வாங்க வேண்டிய மருந்தை யெல்லாம் வாங்கிட்டியா?”
“இல்லேக்கா. இருட்டத்தொடங்கிட்டதால, அம்மா நாளைக்கு வாங்கிக்கலாம்னுட்டாங்க. நாளைக்கு நல்ல நாளாம். அதனால நாளையிலேருந்தே மருந்தைச் சாப்பிடத் தொடங்குறாங்களாம்.”
“உடம்புக்கு ஒண்ணுன்னா மருந்து சாப்பிட நாளும் நட்சத்திரமுமா பார்ப்பாங்க? நல்ல அம்மா. இப்பவே நாம ரெண்டு பேருமா கடைக்குப் போயி மருந்தை வாங்கிட்டு வந்துடலாம்…”
“சரிக்கா. அம்மாகிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்… இந்தா காப்பி. அதைக் குடுக்கத்தான் வந்தேன். காப்பி ஆறினா உனக்குப் பிடிக்காதே! அதான் இங்கேயே கொண்டுவந்துட்டேன்.”
முகத்தைத் துடைத்துக்கொண்ட சூர்யா சுகன்யாவிடமிருந்து காப்பியைப் பெற்றுக்கொண்டு, வட்டையில் பாதியை ஊற்றி, அவளிடம் நீட்டினாள்: “மணி ஏழாயிடிச்சு. பாதி காப்பி போதும்…”
இருவரும் குழாயடியிலேயே நின்று காப்பியைப் பருகினார்கள். சுகன்யா நின்றுகொண்டே இருந்தாள்: “எதுக்குடி நின்னுக்கிட்டே இருக்கே? தம்ப்ளரை வாங்கிட்டுப் போறதுக்கா? அந்த வட்டையையும் குடு. நான் கழுவி எடுத்துட்டு வர்றேன்…”
சுகன்யா குழாயடிக்கே காப்பியை எடுத்து வந்ததும், சற்றே தயங்கினாற்போல் அவள் நின்ற தோரணையும் தன்னிடம் ஏதேனும் கேட்பதற்கோ என்று சூர்யாவை நினைக்கவைத்தன.
“இப்பவே கடைக்குப் போறோம்னு அம்மாகிட்டப் போய்ச் சொல்லு, போ.”
“சரிக்கா.” – சுகன்யா சென்றாள். அவள் நடந்து சென்ற அழகை வைத்த கண் வாங்காது பார்த்த சூர்யா. ‘இந்த வீட்டிலே எல்லாருமே அழகுதான். நல்ல வேளையா யாரும் அப்பவைக்கொண்டு பொறக்கல்லே!’
உடனே, ‘உன் தங்கச்சியும் உன்னை மாதிரியே அழகாய் இருப்பாளா?’ என்று ராஜாதிராஜன் தன்னிடம் கேட்டது அவளுக்கு ஞாபகம் வந்தது. தன் அப்பாவின் ரகசிய வாழ்க்கையைப் பற்றி யெல்லாம் அவன் தானாகவே முன்வந்து உள்ளது உள்ளபடி சொன்னபோது, தான் மட்டும் ஓடிப்போன அக்கா ராஜலட்சுமியைப் பற்றிச் சொல்லாமல் மறைத்துவிட்டது பற்றிய நினைப்பு அவள் நெஞ்சைக் குத்தியது. ‘நாளைக்குப் பார்க்கும்போது சொல்லிவிட்டால் போச்சு!’ என்று எண்ணிக்கொண்டாள். ஒருகால் அதையும் அறின்தவனாக அவன் இருக்கக் கூடும் என்றும் நினைத்தாள்.
நெற்றியில் பொட்டுவைத்துக்கொண்டு, கலைந்திருந்த தலையையும் வாரிக்கொண்டு அவள் சற்று நேரத்தில் தயாரானதும், சுகன்யா கைப்பையுடன் அவளெதிரே வந்து நின்றாள் “அம்மா சர்¢ன்னுட்டாங்க. ஆனா மழை வரும் போல இருக்காம். அதனால் போனேன் வந்தேன்னு வரச்சொன்னாங்க.”.
தெருவில் சற்று நேரம் மவுனகாய் நடந்தார்கள். இரண்டு நிமிட நடைக்குப் பிறகு, தொண்டையைக் கனைத்த சுகன்யா, “யாருக்கா அந்த ஆளு?” என்றாள்


தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா