மடியில் நெருப்பு – 8

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

ஜோதிர்லதா கிரிஜா


8.
படபடத்த இதயத்துடன், ‘ராஜாதிராஜன் என்ன கேள்வி கேட்கப் போகிறானோ?’ எனும் ஆர்வக் கவலையால் இமைக்கவும் மறந்தவளாய் அவள் அவனைப் பார்த்தபடியே இருந்தாள்.
“நம்ம ரெண்டு பேருக்கும் ஒருத்தரைப் பிடிச்சுப் போனதுக்கு நாம ரெண்டு பேருமே அழகாய் இருக்கிறதுதான் காரணம்னு நீ சொல்றே. அதை நான் ஒத்துக்குறேன். பஸ் ஸ்டாப்லெ உனக்குப் பதிலா அவலட்சணமா ஒரு பொண்ணு நின்னுக்கிட்டு இருந்திருந்தா நான் காரை நிறுத்தி அவளுக்கு லி·ப்ட் குடுதிருந்திருக்க மாட்டேன்தான்! முதல் நாளே, உன்னைப் பார்த்ததும் எனக்குள்ளே ஒரு சந்தோஷ அதிர்ச்சி பரவிச்சு – இப்படியும் ஒரு அழகான்னு! ரொம்ப ஆச்சரியப்பட்டுப் போயிட்டேன். உன்னைப் பார்க்கணும்கிறதுக்காகவே அந்தத் தெரு வழியாத் தேவையே இல்லாம காரை ஓட்டிக்கிட்டு வந்தேன்…”
“அதான் சொன்னீங்களே!”
“மறுபடியும் அதை இப்ப நான் சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கு. உன்னோட அழகு தான் என்னை வளைச்சுப் போட்டிச்சுன்னாலும், உன்னைப் பத்தி நான் விசாரிச்சுப் பார்த்தப்போ, நீ ஒரு ஏழைக் குடும்பத்துப் பொண்ணுன்னு எனக்குத் தெரிய வந்திச்சு. அதிலேயும், எப்படிப்பட்ட ஏழைக் குடும்பம்? நாலு வீடுகள்ளே வேலை செஞ்சு அம்மாவாலே காப்பாத்தப்பட்ட குடும்பம்…”
“எங்கப்பா சீக்காயி, படுத்தபடுக்கையானதுக்குப் பெறகுதான் அம்மா நாலு வீடுகள்ளே வேலை செஞ்சு சம்பாதிக்கத் தொடங்கினாங்க…”
“அடடே! நீ ஒண்ணும் எக்ஸ்ப்ளெய்ன் பண்ண வேண்டாம். தப்பா எடுத்துக்காதே, சூர்யா. இந்த உலகத்துலே ஏழைகள்தான் அதிகம். ஏழையாய் இருக்கிறதுன்றதுல அவமானப் படுறதுக்கு எதுவுமில்லே. இந்த நாட்டிலே இத்தனை ஏழைகள் இருக்கிறதுக்கு அவமானப்பட வேண்டியதெல்லாம் எங்களை மாதிரிப் பணக்காரங்கதான்!…சரி. … எதுக்குச் சொல்ல வந்தேன்னா, நீ படு மோசமான வறுமைக்கு நடுவிலே படிச்சுட்டு இப்ப வேலை பார்த்துக்கிட்டிருக்கிறது தெரிஞ்சும், முதல் பார்வையிலே உன் மேலே என் மனசிலே விழுந்த எண்ணம் கொஞ்சம் கூட மாறல்லே…நீ ஏழைப்பொண்ணுங்கிறது என்னோட காதலைக் கொஞ்சம் கூடக் குறைக்கல்லே! ஆனா உன்னோட நிலைமை அப்படி இல்லே!”
அவள் சற்றே குழம்பியவளாய் அவனைப் பார்த்தாள்.
“முதன் முதலா அந்தத் தெருவுக்குள்ளே நான் கார்ல நுழைஞ்சதுமே நம்ம பார்வை தற்செயலாச் சந்திச்சுது. நாம ரெண்டு பேருமே ஒரு ஆச்சரியத்தோட எதிராளியோட அழகைக் கவனிச்சோம். மறுபடியும் சொல்றேன் – நீ ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள்ங்கிறதெல்லாம் அப்ப எனக்குத் தெரியாது. விசாரிச்சதுக்குப் பெறகுதான் தெரியும். ஆனா, உனக்கோ எடுத்த எடுப்பிலேயே நான் பணக்காரன்கிறது புரிஞ்சு போயிருக்கும்!. இல்லாயா?”
அவன் என்ன கேட்க இருந்தான் என்பது புரிந்துவிட்டதில், சூர்யாவின் மனம் அவமானமுற்றது: “நீங்க பணக்காரர்னு நினைச்சு நான் உங்களுக்குச் சம்மதிக்கல்லே! ஏன்னா, காரை ஓட்டிக்கிட்டு வர்றவர் மாசச் சம்பளம் வாங்குற டிரைவராக் கூட இருக்கலாம்!”
‘பணக்காரன்னு நினைச்சுத்தானே சம்மதிச்சே?’ என்பதாய்த் தான் கேட்க இருந்ததை ஊகித்துவிட்டதோடு, ‘மாதச் சம்பளம் வாங்குற டிரைவராக்கூட இருக்கலாம்’ என்கிற அவளது மூக்குடைப்பான பதில் அவனை அயர்த்தியது.
“சேச்சே! என்ன நீ? தப்பா எடுத்துக்கிட்டியா? மனசு விட்டுப் பேசறது நல்லதுதானே?”
“நான் தப்பாவே எடுத்துக்கல்லே. நான் மட்டும் கேக்கல்லியா – நான் ஒரு அவலட்சணமான பொண்ணாயிருந்தா காரை நிறுத்தி லி·ப்ட் குடுத்திருப்பீங்களான்னு? நான் கேக்கலாம், நீங்க கேக்கக்கூடாதா?
தாராளமா எது வேணும்னாலும் கேளுங்க!”
“நான் கேக்க நினைச்ச குத்தலான கேள்விக்கு நீதான் பொ¡ட்டில அடிச்சமாதிரி பதில் சொல்லிட்டியே!…அதிலேயே எல்லாம் அடங்கிடிச்சு…”
“சரி. இப்ப நானும் உங்ககிட்ட மனசுவிட்டு சில விஷயங்களைச் சொல்லிடறேன். அதைக் கேட்ட பெறகு உங்களுக்கு ‘இந்தப் பொண்ணு வேண்டாம்’னு தோணினாலும் தோணலாம்…”
“பார்த்தியா, பார்த்தியா! இதானே வேணாங்குறது?”
“சரி, சரி… நான் எதுவுமே சொல்லாமயே கூட, இந்த உறவை நீங்க கட்டாயம் மறு பரிசீலனை பண்ணணும்… இப்பவும் சொல்றேன். நான் உங்க அந்தஸ்துக்கு ஏத்தவ இல்லே. வீணா உங்க அப்பாவோட விரோதத்தைச் சம்பாதிச்சுக்கிட்டு, சொத்து சுகங்களை யெல்லாம் எனக்காக இழக்காதீங்க.”
“அய்யோ! என்னது நீ! முதல் நாளே மெலோட்ராமாவுக்கு இழுக்கறே! ஐ’ம் சாரி. நான் அப்படிக் கேக்க நினைச்சிருக்கவே கூடாது. உன்னை இப்ப நல்லாப் புரிஞ்சுக்கிட்டேன். நாம ரெண்டு பேருமே முன்னே பின்னே ஒருத்தரை ஒருத்தார் அறியாதவங்க. திடீர்னு இது மாதிரி ஒரு உறவிலே..
அதாவது நான் என்ன சொல்ல வர்றேன்னா…”
“மாட்டிக்கிட்டோம்னு சொல்ல வர்றீங்க! அதானே?” என்று அவள் சிரித்ததும், இருவருக்குமிடையே விளைந்திருந்த தற்காலிக இறுக்கம் அறவே தளர்ந்துவிட்டது.
” அப்ப, நாம ரெண்டு பேருமே இன்னதுன்னு விண்டு சொல்லமுடியாத காரணத்தால ஒருத்தரை யொருத்தர் விரும்புறவங்கன்னு வெச்சுக்கலாமா?”
“வெச்சுக்கலாம்தான்…ஆனா, எனக்குக் கொஞ்சம் – கொஞ்சமென்ன? நிறையவே – பயமாயிருக்குங்க. நீங்க பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்ங்கிறதால எனக்கு சந்தோஷத்தை விட, பயம்தாங்க அதிகமா வருது!”
“சூர்யா! இத பாரு. எனக்குன்னு சில கொள்கைகள் உண்டு. பணம் பணத்தோட சேரணும்கிறது எனக்குப் பிடிக்காத ஒண்ணு. ஏழைகளும் பணக்காரங்களுமோ, இல்லாட்டி நடுத்தர வர்க்க மனுஷங்களும் பணக்காரங்களுமோ சம்பந்தம் செய்துக்கிட்டாத்தான், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் கொஞ்சமாச்சும் சமன்படும். இது எங்க அப்பாவுக்குப் பிடிக்காதுன்னு தெரியும்தான். அதுக்காக எனக்குன்னு இருக்குற ஒரு கொள்கையை நான் விட்டுட முடியுமா? என் எண்ணங்ளுக்குத் தோதா நீ எனக்குக் கிடைச்சது என்னோட அதிருஷ்டம்!”
” உங்களைவிட நான் தாங்க அதிருஷ்டசாலி!”
“சரி. அப்படியே இருக்கட்டும்!…..அது சரி, நாளைக்கும் உன்னால வர முடியுமா?”
“அதெப்படிங்க? தினமும் பெர்மிஷன் போட முடியுமா?” என்று அவள் சிரித்தாள்.
“அப்ப ஒண்ணு பண்ணு. ஆ·பீஸ்ல வேலை ஜாஸ்தின்னு சொல்லிடு. சரியா அஞ்சு மணிக்கு உன்னை பிக்-அப் பண்ணிக்கிறேன். இன்னைக்கு மாதிரியே பக்கத்துத் தெருவிலே ட்ராப் பண்ணிட்றேன்.”
“சரி. ஆனா, முடியுமா முடியாதான்றதுக்கு நான் உங்களுக்கு ·போன் பண்றேன்.”
“வேணாம், சூர்யா. ·போன் பண்ணவேணாம்…”
“ஏங்க?”
“நான் சீட்லயே இருக்க மாட்டேன். என்னோட ஸ்டெனோ – கங்காதரன்னு பேரு – அவன்தான் எடுப்பான். பொண்ணோட குரல் கேட்டா இல்லாத பொல்லாத கற்பனை யெல்லாம் பண்ணுவான். இப்போதைக்கு அது வேண்டாம். நான் வேணா உனக்குப் பண்ணட்டுமா?”
சூர்யா சிரித்தாள்: “அது மட்டும் தேவலையா? டெலி·போன் எங்க ஹெட்க்ளார்க் டேபிள்லேதான் இருக்கு. சரியான வம்புக்கார மனுஷன். நான் என்ன பேசறேன்னு கேட்டுக்கிட்டே இருப்பாரு….”
“நீ எனக்கு ·போன் பண்றேன்னு சொன்னியே? அப்ப மட்டும் கேக்க மாட்டாரா?”
“ஒரு பத்து நிமிஷம் வெளியே பொயிட்டு வறேன்னு சொல்லிட்டு எதிர்ல இருக்கிற கடையிலேர்ந்து பண்ணுவேன்.”
அவன் பேசாமல் இருந்தான். பிறகு, ” சரி அப்ப ஒண்ணு பண்றேன். நாலு மணிக்கு அப்பால வர்ற டெலி·போன் கால்ஸை நானே இனிமே ஆன்சர் பன்ணிட்றேன். நான் ஆன்சர் பண்ணினா, ‘ராஜாதிராஜன் ஹியர்’ அப்படின்னு என் பேரைச் சொல்லிடுவேன். ஏதோ காரணத்தால நான் சீட்ல இருக்க முடியாம போனா அவன்தான் எடுப்பான்.”
“சரிங்க,” என்ற அவள் அவனது தொலைபேசி இலக்கத்தைக் கேட்டுக் குறித்துக்கொண்டாள். அவன் காரை நிறுத்தினான். அவள் வெட்கத்துடன் இறங்கிக்கொண்டாள். அவன் காரைக் கிளப்பினான்.
சூர்யா விரைவாக நடந்தாள். அவள் மனம் விளக்கவே முடியாத மகிழ்ச்சிப் பரவசத்தில் ஆழ்ந்திருந்தது.
தன்னைப் போன்று கொடுத்துவைத்த இன்னொரு பெண் இருக்க மாட்டாள் என்று அவள் மிக நிச்சயமாய் நம்பினாள்.
வீட்டுக்குள் அவள் நுழைந்த போது கதவு வெறுமே சாத்தி யிருந்தது. கூடத்தை யடைந்த அவள் தன் அம்மா படுத்துக் கொண்டிருந்ததைக் கண்டாள். சாதாரணமாக அனந்தநாயகி எவ்வளவுதான் உடம்பு சரியாயில்லாவிட்டாலும் விளக்கு வைத்த பிறகு படுக்கமாட்டாள்
“என்னம்மா? உடம்பு சரியில்லையா?”
“ஆமா. சுகன்யாவோட டாக்டர்கிட்ட போயிட்டு இப்பதான் வந்தேன்….அது சரி, நீ ஏன் இவ்வளவு லேட்டு?”
“ஆ·ப்பிஸ்ல ரொம்ப வேலைம்மா. அதான் லேட்டாயிடிச்சு.”
“என்னது? இங்க வாடி. வந்து நேரா என் முகத்தைப் பார்த்துச் சொல்லு. ஆ·பீஸ்ல வேலை ஜாஸ்தியா! அதனாலயா நீ லேட்டு?” என்றாள் அனந்தநாயகி. அவளது ஆழமான பார்வையைச் சந்திக்க முடியாமல் சூர்யா கண்களைத் தாழ்த்திக்கொ¡ள்ள வேண்டியதாயிற்று. அவள் இதயம் படபடத்தது.

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா