வணக்கம் துயரமே! அத்தியாயம் – 7

This entry is part of 43 in the series 20061019_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அத்தியாயம் – 7

அதற்குப் பிறகு, நடந்தவற்றை இத்தனை தெளிவாக என்னால் ஞாபகப்படுத்தமுடிகிறதை நினைத்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. நல்லது எது கெட்டது எது, என்பதில் மனது தெளிவாக இருந்தது. வேறு யாராவது என்னைப்போல மனதில் இத்தனை விகற்பமின்றி இருந்திருக்கமுடியுமா என்பது கேள்வி, ஏன் நானே கூட இதுவரை அப்படியெல்லாம் இருந்ததில்லையென்றுதான் சொல்லவேண்டும். எதிலும் நான் முந்தியென்கிற மனோபாவமும், வெளிப்படையான எனது சுயநலமும் இயற்கை எனக்களித்த வரம், வாழ்க்கையில் இதுவரை அவற்றைத்தான் கடைபிடித்து வந்திருக்கிறேன். ஆனால் கடந்த சில தினங்களாக என்ன நடந்தது? எனக்கு அதிர்ச்சிதரவேண்டும், அதன்மூலம் நானும் கொஞ்சம் மூளையைக் கசக்கிக்கொள்ளவேண்டும், பிரச்சினைகளை சமாளிக்கவேண்டும் என்பது போலத்தானே காரியங்கள் நடந்தன. ஒருவகையில் எனது சுயபரிசோதனைக்கான வாய்ப்பென்பதால், அத்தனை மன வலிகளையும் சகித்துக்கொண்டேன். “ச்சே…ஆன்(Anne)மீது எனக்கிருக்கும் அபிப்ராயங்கள் மட்டமானவை, அபத்தமானவை, அவளை அப்பாவிடமிருந்து பிரிக்கவேண்டுமென்று கங்கணம் கட்டியிருக்கிறேனே அதைப்போல, மோசமானவை…”, சரி அப்படியென்ன நடந்துவிட்டது? எதற்காக என்னைநானே விமர்சித்துக் கொள்ளவேண்டும், சொல்லுங்கள்.. சராசரி பெண்ணென்கிறவகையில் எனக்கும் நெருக்கடிகளை விருப்பப்படி சந்திக்கிற உரிமை உண்டா, இல்லையா? எனது வாழ்க்கையில், அப்போதுதான் முதன்முதலாக ‘என்னை’ பங்குபோட்டுக்கொள்ளும் இன்னொருத்தியைச் சந்திக்கிறேன், அந்தச் சக்களத்தி சண்டையை இப்போது நினைத்தாலும் அதிசயமாகயிருக்கிறது. என்ன சொன்னேன்? எதற்காக என்னை நானே நிந்தித்துக்கொள்ளவேண்டும் என்றுதானே கேட்டேன். அதற்கான காரணங்களும் இருக்கத்தான் செய்தன. அவற்றை மெல்ல முணுமுணுக்க எனது இன்னொருத்தி சிலுப்பிக்கொண்டு எழுந்தாள், எனக்கெதிரே என்னின் பிரதியாக நின்றபடி, எனது காரணங்களை மறுக்கிறாள், அவைகள் நியாயமானவைபோல தோற்றமளித்தபோதிலும், அதில் உண்மையில்லை என்கிறாள், என்னைநானே குழப்பிக்கொள்கிறேனாம், சத்தமிட்டாள். நீங்களே சொல்லுங்கள் உண்மையில் எங்களிருவரில் யார் ஏமாற்றுவது, யார் குழப்புவது? அந்த இன்னொருத்திதானே? நமது குறைகளை மூடி மறைக்கும் சாமர்த்தியம், நாம் செய்யும் தவறுகளைக்காட்டிலும் மோசமானவை இல்லையா? ஆன்(Anne)மீது எனக்குள்ள இந்த பயமும், பகையும் உண்மையில் நியாயமானதுதானா? நியாயாமானதுபோலத்தான் தோன்றுகிறது அல்லது ஒருவேளை நான்ந்தான் சுதந்திரம் என்ற சொல்லை தவறாக புரிந்துகொண்டிருக்கும், சுயநலமும், அற்பத்தனமும் கொண்ட சின்னப்பெண்ணா? எனது அறையில் அமர்ந்து, மணிக்கணக்கில் யோசித்தும் முடிவுக்குவராமல் குழம்பினேன்.

இந்தநிலையில், எனது உடம்பு ஒவ்வொரு நாளாக மெலிந்துக்கொண்டுப் போனது. தினந்தோறும் கடற்கரைக்குப்போவதும், மணலில் படுத்துக் கிடப்பதுமாக இருக்கிறேன். உணவுண்ணும் நேரங்களில், எனது இயல்பிற்கு மாறான அமைதியைக் கடைபிடிக்க கடைசியில் அவர்களை என்னிடத்தில் கோபம்கொள்ளும் நிலைக்குக் கொண்டுசென்றது. ஆன்னை(Anne) அமைதியாக, உளவுபார்ப்பவ¨ளைப்போல பார்த்துனொண்டிருந்தேன், சாப்பிட்டு முடியும்வரை என்னை வியப்பிலாழ்த்தும் வகையில் ஏதேதோ எண்ணங்கள்: “அப்பாவிடம் அவள் காட்டும் பரிவும் நெருக்கமும், காதலில்லாமல் வேறென்ன? இனியொருபோதும் இப்படியான காதல்கொண்ட ஒருத்தியை அவர் சந்திக்க வாய்ப்பில்லையென்றுதான் சொல்லவேண்டும். சதா என்னைப் பார்த்து புன்னகைத்தபடி இருக்கிறாளே அதனையும், அவளது கண்களுக்குள்ளே தெரியும் என்னைப்பற்றிய கவலைகளையும் மறந்தவளாய், அவள் மீது வருத்தங்கொள்ள எனக்கு நியாயமும் உண்டா?” எனத் தொடர்ந்து மனதிற்குள் வியக்க, சட்டென்று அவள், “ரெமோன்.. நாம எப்போ திரும்பறோம்…” என்று கேட்கிறாள், எஞ்சிய காலத்தை எங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கும் அவளது பெருந்தன்மையை எண்ணி பிரம்மிக்கிறேன். இதுவரை என் மனதில் இடம்பிடித்திருந்த தந்திரமும், உறைபனி தன்மையும் கொண்ட ஆன் இப்போதில்லை. வேறுவகையாய்த் தெரிந்தாள்: அவள் உறைபனியென்றால், அப்பாவும் நானும் வெதுவெதுப்பானவர்கள்; அவள் சர்வாதிகாரியென்றால், நாங்கள் சர்வ சுதந்திரத்திற்கும் உரியவர்கள்; எதிலும் அலட்சியமென பிறர் வெறுப்புக்கு ஆளாகக்கூடிய குணங்களவை, அவற்றைத்தான் நாங்கள் விரும்பினோம்; அவளது அசிரத்தையை, பிறர் வெறுக்கலாம், நாங்கள் விரும்புவோம்; அவள் அழுத்தக்காரி, நாங்களோ சந்தோஷமென்றால் துள்ளிக்குதிப்பவர்கள். அவளை உயிரற்ற ஜடமென்று சொன்னாலும் தப்பில்லை. எங்களிருவருக்குமிடையில் ஊர்ந்து சத்தமிடாமல் ஒளிந்துகொண்டு, தனது மரத்துப்போன சரீரத்திற்கு உயிரூட்டக்கூடும், அப்படியே கொஞ்சகொஞ்சமாக எங்களிடமிருக்கும் உல்லாசம், சந்தோஷம் அனைத்தையும் திருடுவாள், ஒர் அழகானப் பாம்பினைபோல! என்ன? பாம்பென்றா சொன்னேன். ஆமாம் பாம்பு… அழகுப் பாம்பு! ரொட்டித்துண்டொன்றினை அவள் நீட்டினாள், சட்டென்று விழித்துக்கொண்டேன், மனதிற்குள் சத்தம்போட்டேன்: பைத்தியக்காரி.. பைத்தியக்காரி… ஆன்(Anne) எவ்வளவு பெரியவள்? அவள்.. அனுபவமென்ன? அறிவென்ன? உன்னோட அம்மா இடத்தில், அவளிருந்து உன்னைப் பார்த்துக்கொண்டதெல்லாம், இதற்குள் மறந்தாயிற்றா என்ன? எதிலும் அசிரத்தையாக அவள் இருப்பதென்ன புதிதா? அதற்கெல்லாம் உள்நோக்கம் கற்பிக்க முடியுமா? எதிலும் பட்டும்படாமல் இருப்பதால்தானே, கண்ட சாக்கடைகளிலிருந்தும் தன்னை அவளால் காப்பாற்றிக்கொள்ளமுடிகிறது, ஒருவகையில் எதையும் அல்லது எவரையும் அலட்சியம் செய்யும் அக்குணத்தினை அவளது மேட்டிமைகுணத்திற்கான உத்தரவாதமென்று சொல்லலாமா?” அழகுப்பாம்பு…ச்சீ எத்தனைமோசமாக எனது நினைப்பு போகிறது, வெட்கக்கேடு. ஆன்னைப் பார்த்தேன். மனதிற்குள்ளாக அவளிடம் மன்னிக்கவேண்டுமென கெஞ்சினேன். சிலவேளைகளில் ஆச்சரியமும் அலட்சியமும், அவள் முகவழகைக் குலைப்பதும், அவள் உரையாடலைக் கெடுப்பதும் பழகிப்போன காட்சி, என்னை வியப்பிலாழ்த்தியிருக்கிறது. ஆன் கண்களிரண்டும், ஒருவித ஆர்வத்தோடு அப்பாவை சதா தேடிக்கொண்டிருந்தன. அப்பாவும் அதற்கான காரணத்தை அறியாதவராக பிரம்மிப்புடனோ அல்லது காதலுடனோ அவளைப் பார்க்கிற வழக்கத்தைக் கொண்டிருந்தார். காற்றேதுமற்ற வெளியில் என்னை தள்ளி எனது சுவாசத்தை நிறுத்த முற்சிப்பதுபோல உணர்ந்தேன். என்னை நானே வெறுத்தேன். அப்பாவும் தன்பங்கிற்கு அவரது பாணியில் வருந்தியிருக்கக்கூடும், ஆன்(Anne)மீதான அவரது பைத்தியக்காரத்தனமான மோகமும், பெருமையும், சந்தோஷமும் – தனது உயிர்வாழ்க்கையின் நோக்கமே அவற்றுக்காகத்தானென, அவர் நடந்துகொள்வதையும்வைத்து பார்த்தபோது அவர் வருந்துவதற்கான வாய்ப்பேயில்லை. எனினும் ஒருநாள், காலை குளியலுக்குப்பிறகு கடற்கரை மனலில் படுத்திருந்தேன், என் அருகில் வந்து உட்கார்ந்தவர் என்னையே பார்க்கிறார். அவரது பார்வை என்மீது ஏதோ சுமையாக இறங்குவதுபோல உணர்ந்தேன். அதிலிருந்து விடுபடும்விதமாக, முகத்தில் பொய்யாய் மகிழ்ச்சியை வரவழைத்துக்கொண்டேன் – சமீபகாலங்களில் எனக்குப் மிகச்சுலபமாக பழகியிருந்தது. அப்பாவிடத்தில் கடலில் இறங்கி குளியுங்கள் என்று சொல்ல எத்தனிக்க, அவரது கையினை எனது தலைமீது வைத்து பரிதாபமானகுரலில்:

” – ஆன் இங்கே வா.. இந்த வெட்டுக்கிளியைக் கொஞ்சம்பார். நாள்முழுக்க படிப்பு படிப்புண்ணு ஓய்வில்லாம உழைச்சதால, உடம்பு ஓடாக போயிருக்கும்னா, அதனை உடனே நிறுத்தியாகாணும்.”

பிரச்சினைகளெல்லாம் தீர்ந்துவிட்டனவென்று அப்பா நினைத்திருக்கவேண்டும். உண்மைதான் அப்பா நினைப்பதுபோல பத்து நாட்களுக்குமுன்பே இப்பிரச்சினைகளெல்லாம் தீர்க்கபட்டிருக்கவேண்டும். ஆனால் அவ்வளவு சீக்கிரம் பிரச்சினைகளிலிருந்து நான் விடுபடக்கூடுமென்று நினைக்கவில்லை. பெர்க்சன்(Bergson)னுடைய புத்தகத்தைத் தவிர வேறொன்றை நான் தொட்டதில்லை என்பகிறபோது, மதியவேளைகளில் படிப்புக்கென்று நான் ஒதுக்கிய நேரங்கள், எனக்கு சுமையாக இருந்தனவென்று சொல்லமாட்டேன்.

ஆன் எங்களிடத்தில் வந்தாள். நான் மணலில் கவிழ்ந்தபடி படுத்துக்கொண்டிருக்கிறேன், எனது கவனம் அவளது காலடிச் சத்தத்தில் படிந்திருந்தது. அடுத்தப்பக்கத்தில் அமர்ந்தவள் முணுமுணுப்பது காதில் விழுந்தது. :

” – நாம நினப்பது போல நடக்கப்போறதில்லை. உண்மையில் அவள் தேர்வில் வெற்றிபெறவேண்டுமென்றும் நினத்தால், அறைக்குள்ளே வெறுமனே சுற்றிவருவதை கைவிட்டுவிட்டு ஒழுங்காக படிக்கவேண்டும்…”

படுத்திருந்தவள் திரும்பினேன். அவர்களிருவரையும் பார்த்தேன். நான் அறையிலே படிக்காமலிருந்தேனென்று எப்படி அவளால சொல்ல முடியுது? ஒருவேளை எனமனதில் இருப்பதை அனுமானிக்கிறாளா? அவளால் எதுவும் முடியும். அப்படி நினைத்தவுடனேயே தேவையின்றி ஒருவித பயம் சேர்ந்துகொண்டது:

“- நான் அறையிலே வெறுமனே சுற்றிவல்லே- கோபத்துடன் சொன்னேன்.

– என்ன அந்தப் பையனை பார்க்கமுடியலைங்கிற வருத்தமா?

– இல்லை..இல்லை!”

உறுதியாக அப்பாவை மறுத்தபோதிலும், உண்மையில் சிரிலை(Cyril) நினைத்துப் பார்க்கக்கூட நேரமில்லையென்றுதான் சொல்லவேண்டும்.

” நீ பொய் சொல்ற, உனக்கு அந்தப்பையனை பார்க்க முடியலைங்கிற வருத்தம் இருக்கத்தான் செய்யுது. இல்லைண்ணா, குடலையெல்லாம் எடுத்துட்டு வெயிலில் வாட்டிய உறித்த கோழிபோல நீ இருக்கமாட்டே.

– செசில் செல்லம், கொஞ்சம் கவனமெடுத்துபடி, வேளாவேளைக்கு ஒழுங்கா சாப்பிடு; இந்தப் பரிட்ஷை உனக்கு முக்கியமில்லையா?- ஆன்

– பரிட்ஷை என் மசுருக்குச் சமானம், நான் என்னசொல்றேண்ணு உங்களுக்குப் புரியுதா? பரிட்ஷையைப் பத்தி எனக்கு எந்தக் கவலையுமில்லைண்ணு சொல்றேன்.”

விரக்தியுடன் ஆன்னை(Anne) நேரிட்டுப்பார்க்கிறேன். தேர்வைக் காட்டிலும் நான் கவலைகொள்ள வேறு விடயங்கள் எனக்குள்ளன என்பதை அவள் புரிந்துகொள்வாளென நினைத்தேன். அவள் என்னிடத்தில் பரிவுடன், “உனக்கு என்ன ஆச்சுண்ணு? கேட்டிருக்கலாம், அல்லது அடுத்தடுத்துக் கேள்விகள்கேட்டு, எனமனதிலிருப்பதென்னவென்று சொல்லவைத்திருக்கலாம். எனது தேவைகளென்ன, என்பதை புரிந்துகொண்டு ஆறுதலாக நான்கு வார்த்தைகள்கூறி என்னை அமைதிபடுத்தியிருக்கலாம். அப்படியெல்லாம் நடந்திருந்தால் கசப்புகளையும், வேதனைகளை சுமந்து அழுதுகொண்டிருக்கமாட்டேன். மிகுந்த அக்கறையோடு என்னைப் பார்த்தாள். அதிகப்படியான கரிசனத்தோடும் அதே சமயத்தில் என்னை நிந்திப்பதுபோலவுமிருந்த, அவளிரண்டு கண்களிலும் கருநீலத்தில் வளையம். எனக்குப் புரிந்துவிட்டது, அவள் ஒருபோதும் நான் எதிர்பார்ப்பதுபோல என்னைக் கேள்விக்கணைகளால் துளைக்கப்போவதுமில்லை, எனது வருத்தத்தை தீர்க்கப்போவதுமில்லை, இப்போதைக்கு அவசியமேதுமில்லையென நினைத்தாளோ என்னவோ, அதற்கான அறிகுறிகளும் அவளிடத்திலில்லை. அசிரத்தையாகவும், அலட்சியத்துடனும் நடந்துகொண்டு, என்னை வேதனைப்படுத்தும் அவள் மனதை, கல்நெஞ்சக்காரி! எத்தனை சாதுரியமாக மறைத்துக்கொள்கிறாள். எதற்காக இப்படியெல்லாம் அவளை விமர்சிக்கிறேனென நீங்கள் நினைக்கக்கூடாது. அவளுக்கு நான் சொன்னது தகும். தவிர ஆன்னுக்கு(Anne) எதற்கு எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்பது? கைவந்த கலை. இந்த ஒரு காரணத்தினாலேயே அவளிடத்தில் எனது பிரச்சினைகள் என்றைக்குமே முடிவுக்கு வராதென நினைக்கிறேன். என்னை நானே மணலில் வீசி எறிந்தைப்போல உணர்வு, சுடுமணலில் அழுந்திய எனது கன்னம் கொதிக்கிறது, இழுத்து மூச்சினை விட்டேன், உடலில் இலேசாக அதிர்வு. ஆன்னுடைய(Anne)கை மெல்ல, ஆனால் எனக்கு நம்பிக்கையூட்டுவதுபோல எனது கழுத்தில் படிகிறது, ஒரு சில நிமிடங்கள், எனது உடலின் நடுக்கம் குறையட்டுமென்பதுபோல காத்திருக்கிறது.

” – எதைஎதையோ நினைச்சு மனசை கெடுத்துகிற, எப்படி இருந்த? சந்தோஷமா, எந்த நேரமும் துறுதுறுண்ணு.. இப்ப என்ன ஆச்சு. பழைய நிலைமையில் உன் மனசு இல்லை, எதையாவது தலையில இழுத்துப்போட்டுக்கொண்டு புலம்ப ஆரம்பிச்சுடற. இது நீ பழைய செஸில்(Cecil) இல்லை.”- ஆன்

” – நான் மறுக்கலை. என்னைச்சுற்றி என்ன நடக்கிறதென்று புரிந்துகொள்ளாத பெண்ணென்றாலும், ஓரளவு தெம்பும் இருக்கிறது, எல்லையில்லாத சதோஷமும் இருக்கிறது, அசடாக இருக்கிறோமே என்கிற கவலையுமிருக்கிறது.

– சரி எழுந்திரு, சாப்பிடப்போகலாம்”, அவள்.

நானும் ஆன்னும்(Anne) பேசிக்கொண்டிருக்க, அந்தநேரம் அப்பா தள்ளியிருந்தார். அவருக்கு இம்மாதிரியான உரையாடல்களில் ஆர்வமிருந்ததில்லை. வில்லாவுக்கு மூவருமாக திரும்பியபொழுது, எனது கரத்தினை அப்பா விடாமல் பிடித்தபடி வந்தார். அவரது கைகள் கனத்தன, எனினும் மனதிற்கு ஆறுதலாக இருந்தது: எப்படியெல்லாம் அந்தக் கைகள் என்னைச் சுற்றிவந்திருக்கின்றன; முதன்முதலாக காதற் துயரில் என்னைதள்ளியதும், எனது இன்ப துன்பங்களில் பங்கெடுத்ததும், நெருக்கடியான நேரங்களிலும், பைத்தியக்காரிபோல சிரித்து கும்மாளம்போட்டபோது பக்கத்திலிருந்ததும் அந்தக் கைகள்தான். ஆனால் அதே கைகள்தான் இன்றைக்கு காரின் ஸ்டீயரிங்கில், கார்ச் சாவிகளில், மாலையில், சாவியினை வைத்துக்கொண்டு திறப்பினைத் தேடி அவதிபடவும், பெண்மணியொருத்தியின் தோளில் விழவும், சிகரெட் பிடிக்கவும் செய்வதன்றி, எனக்கென்று எதையும் செய்வதில்லை. அவரது கையை இறுகப் பற்றினேன், எனக்காய்த் திரும்பிய அப்பா, புன்னகைத்தார்.

————————————————————————————–

Series Navigation