முருகனும் சிம்ரனும்..

This entry is part [part not set] of 34 in the series 20051223_Issue

பத்ரிநாத்


முருகனின் வாழ்க்கையில் சிம்ரன் பெருமளவிற்கு விளையாடிவிட்டாள் என்றால் யாரால்தான் நம்ப முடியும்.. ? இதோ இந்த இந்தி மொழி பேசும் மாநிலத்தில் குடியேறக் காரணமானதிலிருந்து, தாபாவை மேலாண்மை செய்வதுவரை வந்ததற்கு சிம்ரன்தான் காரணம்.. ரூர்க்கி நகரைத் தொடர்ந்து உத்ராஞ்சலை நோக்கி நீளும் பிரதான சாலையில் வீரப்பன் வனாந்திரமாக பரந்து விரியும் பாதையில், அவன் மாலிக் ராம் அவ்தார் சிங்கின் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாகி இந்த ‘ரன் தாபா ‘-வை (இங்கும் சிம்-ரன்னா.. ?) லீசுக்கு விட, அவன் மாலிக் தேர்ந்தெடுத்தது கூட தன்னிடம் வேலை பார்த்த உபி காரனையோ பீகாரியையோ இல்லை.. இந்த மதுரைத் தமிழனைத்தான்.. (வெற்றி மதுரைத் தமிழனுக்கே..)…

சூருட்டுப் பிடித்துக் கொண்டு, தூங்கி வழியும் கண்களுடன் ‘ ‘ராம் ராம் சாப் ‘ ‘ என்று இவனைப் பார்த்து காரை படிந்த சிவப்பேறிய பற்களுடன் சிரிக்கும் மஸ்தூர்கள் சைக்கள்களில் வரும் சப்ராசிகளுக்காக ‘ரொட்டி தால் ‘ செய்து கொடுக்கும் அளவிற்கு

வந்ததும்.. சிம்ரனால்தான்…

‘எங்கள் வாழ்க்கையில்தான் சில வருடங்களில் எத்தனை மாற்றம், விரும்பியோ விரும்பாமலோ.. நான் மானாமதுரையிலிருந்து சென்னை வந்து உ.பி யில் கரைந்து விட்டேன்.. முத்துப் பாண்டியை சென்னையில் தொலைத்துவிட்டேன்.. சிம்ரனுக்குத் திருமணமாகிவிட்டது.. ‘

‘ ‘எலேய் சிம்ரனுக்கு கல்யாணம் ஆவப் போவுதாம்…. இல்லன்னா ஒன்னையத்தான் கட்டியிருக்கும்.. ‘ ‘, என அப்போதெல்லாம் கூறி கெக்கே என்று சிரிப்பான், முத்துப் பாண்டி.. இப்போது முத்துப் பாண்டி என்ன செய்து கொண்டிருக்கிறானோ.. ? எங்கிருக்கின்றானோ.. ? போலீசு அடித்ததில் முத்துப் பாண்டி, முத்துநொண்டி ஆகியிருப்பான்.. ‘அம்போ என்று தமிழ்நாட்டில் அவனை விட்டுவிட்டு வந்துவிட்டேன்.. அந்தப் பாவம் என்னைச் சும்மா விடாது.. ‘ அன்று மானாமதுரையிலிருந்து சென்னைக்கு ஓடிவந்த போது அவனுக்கு அடைக்கலம் கொடுத்தவன்தான் முத்துப்பாண்டி.. தூத்துக்குடிக்காரன்.. ‘ ‘நம்ம வூர் பய நீ.. பயப்படாத.. ‘ ‘, என்று ஆறுதல் தந்தவன்.. எப்படி ஒரு செல்வந்தன் இன்னொரு செல்வந்தனை அடையாளம் கண்டுகொண்டு நட்பு பாராட்ட ஆரம்பிக்கிறானோ, அதைப் போல ஓர் அனாதை-அன்றாடங்காய்ச்சி இன்னொரு அனாதை-அன்றாடங்காய்ச்சியை இனம் கண்டு கொண்டு விடுகிறான்.. அப்படித்தான் முத்துப் பாண்டி முருகனை அரவணைத்தது..

முத்துப் பாண்டி, சாமான்கள் ஏற்றும் மூன்று சக்கர வண்டி வைத்திருந்தான்.. ‘ ‘நம்ம சிநேகிதப் பயலோடதுதான்.. ‘ ‘, என்ற அவனை பின்னால் ஏற்றிக் கொண்டு, ‘ ‘இந்த ஏக்கம் கொள்ளாமல் எந்த நாடும் இன்றில்லை.. ‘ ‘, என்று பாடிக் கொண்டு சந்தோசமாக இருப்பான்..

சென்னை அடையாரில் சாந்திலால் மார்க்கெட்டிங் டிஸ்டிரிப்யூட்டர் அலுவலகத்தில் விதவிதமாக அட்டைப் பெட்டிகள் வந்திறங்கும்.. சாந்திலால், ‘ ‘ டொய்.. நாளக்கு காத்து அடிச்சிகிணு வந்துரு.. நெறய ஸ்டாக் போவணும்.. ‘ ‘, என்று இந்தி கலந்த தமிழில் கூறுவான்.. முத்துப் பாண்டி சலியாத உழைப்பாளி.. மாங்கு மாங்கு என்று எத்தனை பெட்டிகளை பின்னால் வைத்தாலும், சிரித்த முகத்தோடு சைக்கிளை மிதிப்பான்.. பின்னால் முருகன் சைக்கிளைத் தள்ளி விடுவான்.. ஆனால், பாண்டியோ, ‘ ‘எலேய்.. நீயும் ஏறிக்கோ.. ‘ ‘, என்று சிரிப்பான்.. ‘ ‘வேணாம் நண்பா.. எப்டி மிதிப்பே.. ‘ ‘, என்று கேட்டால், ‘ ‘ அட.. நீ.. உட்காரு முருகா.. இதெல்லாம் ஒரு வெயிட்டா.. ஜீஜீபீ.. ‘ ‘, என்று மறுபடியும் சிரித்து, ‘ ‘இந்த ஏக்கம் கொள்ளாமல், எந்த நாடும் இன்றில்லை.. ‘ ‘,

‘ ‘அது என்ன பாட்டு.. பாண்டி.. ‘ ‘,

‘ ‘வாத்தியார் பாட்டு.. பளசு.. ‘ ‘, என்று மீண்டும் முப்பத்தியிரண்டு பல்லையும் காட்டுவான்….

பாட்டாளி…

சில சமயம் அய்ம்பது நூறு கிடைக்கும்.. சில சமயம் சற்று அதற்கு மேல் கிடைக்கும்.. அப்போது முத்துப்பாண்டி ரொம்ப குதூகலமாகிவிடுவான்.. அன்று பீப் பிரியாணி வெட்டிவிட்டு, சரக்கு ஏற்றிக் கொண்டு, இரவுக் காட்சி.. ஏதோ ஒரு தமிழ்ப் படம்.. பள பளவென்று பங்களா, நீச்சல் குளம், விதவிதமான வித்தியாசமான வண்ண உடைகளில் நாயக நாயகியர்கள் வலம் வருவதை வாயைத் திறந்து கொண்டு பார்ப்பான், முருகன்.. ‘ ‘குட்டி என்ன ஷோக்கா இருக்கா.. ‘ ‘, என்று நினைத்துக் கொள்வான்.. ‘ ‘யாரு.. பாண்டி இந்தப் பொண்ணு.. ‘ ‘,

‘ ‘சிம்ரன்..புதுப் பொண்ணு.. ‘ ‘,

‘ ‘அட.. நல்ல சிவத்த குட்டியா இருக்கு.. ஐயரு பொண்ணா.. ‘ ‘,

முத்துப் பாண்டி கொழம்பிப் போய், பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டுச் சொன்னான், ‘ ‘இல்ல.. வடக்கத்திப் பொண்ணாம்.. ‘ ‘,

‘ ‘அப்படின்னா.. ‘ ‘,

‘ ‘அதான்டா.. டெல்லி பம்பாய்லேர்ந்து வந்துருக்கு.. ‘ ‘,

சிம்ரன் எத்தனை நல்ல பெண்.. என்னமாய்ப் படபடவென்று பேசுகிறாள்.. அழகாகச் சிரிக்கிறாள்.. எத்தனை அன்யோன்யமாகப் பழகுகிறாள்.. என்ன ஒரு தன்மை.. நியாயத்திற்காக பயங்கரமாக வாதாடுவாள் போலிக்கிறதே..

அன்றிலிருந்து, முருகனுக்கு சிம்ரன் மீது இனம் புரியாத உணர்வு ஏற்பட்டுவிட்டது.. எங்காவது போஸ்டரில் சிம்ரன் படம் இருந்தாலும், சிம்ரன் தன்னையே உற்றுப் பார்த்துச் சிரிப்பது போல உணர்வு அவனுக்கு ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்.. சிம்ரன் நடித்த படத்தை விடாமல் பார்க்க ஆரம்பித்தான்.. ஒரு நாளாவது அவளை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை பெருகிக் கொண்டேயிருந்தது.. ‘ ‘பாத்துருலாம் முருகா.. இந்த வூர்லதான் இருக்கு.. பாத்து கேட்ரலாமா.. எம்மா.. முருகன் ஒன் நெனப்பாவே இருக்கான்.. கட்டிக்கிற சம்மதமான்னு.. ‘ ‘, என்று சிரிப்பான்.. முருகன் சற்று வெட்கப்பட்டான் ..

‘ ‘அட ஆசயப் பாரு.. ‘ ‘, சிரித்தான் முத்துப் பாண்டி.. தன்னுடைய சிநேகிதனின் ஆசையை நிறைவேற்றவிட்டால், நான் என்ன மனிதன் என்று முத்துப் பாண்டி எண்ணியிருப்பானோ என்னவோ, ஒரு நாள் அவர்கள் வசிக்கும் குடிசைக்கு அருகே ஒரு வீட்டில், ஏதோ திரைப்பட ஷீட்டிங்காம்.. அதில் சிம்ரன் நடித்துக் கொண்டிருப்பதாக தகவல் அறிந்து கொண்டான்..

அட..

சாந்திலால் கடை அட்டைப் பெட்டிகள் வேறு சைக்களில் இருந்தது.. அதை அவசரஅவசரமாக தன்னுடைய குடிசை வீட்டில் வைத்துவிட்டு, இருவரும் சிம்ரன் தரிசனத்திற்குச் சென்றுவிட்டார்கள்..

இதோ சிம்ரன் அதோ சிம்ரன் என்று கால் கடுக்க நின்று கொண்டிருந்தவர்களை அடிக்கடி காவலாளி விரட்டியடித்துக் கொண்டிருந்தானே ஒழிய கண்குளிர அவளைப் பார்க்க விடவில்லை…. ஒரு வழியாக மாலைதான் ஏதோ கொஞ்சம் பார்க்க முடிந்தது.. பார்க்க விட்டால்தானே.. சே.. என்ன ஒரு கூட்டம்.. அய்.. அதோ சிம்ரன்.. அப்பப்பா.. இவள் வானிலிருந்து நிச்சயம் குதித்திருக்க வேண்டும்.. எத்தனையொர் அழகு.. என்ன ஒரு நிறம்.. அவளை லேசாகத் தொட்டு, அந்த விரலால் நம்மைத் தொட்டுக் கொண்டால், நாமும் இத்தனை சிவப்பாகிவிடுவோமா என்று தோன்றியது, முருகனுக்கு.. தன்னைக் காட்டிலும் அட்டைக் கரியாக இருக்கும் முத்துப் பாண்டிக்குத்தான் இவளின் நிறத்தை சற்று தரவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.. கூட்டம் முண்டியடித்தது.. காவலாளி அனைவரையும் வெளியே விரட்டியடித்தான்.. அதைப் பார்த்து சிம்ரன் ஒன்றுமே சொல்லாதது, முருகனுக்கு எரிச்சலான எரிச்சல் வந்தது…. ஒரு வழியாக வெளியே வந்த போது இருட்டியே விட்டது..

‘ ‘எலேய்.. அட்டப் பொட்டிய அப்படியே விட்டுட்டோமே.. போய்க் குடுக்க வேணாம்.. ‘ ‘, என்றான் முருகன்..

‘ ‘இனிமே போய்ப் பிரயோசனம் இல்ல.. நாளக்கிக் காலையில கொடுத்துறலாம்.. ஒண்ணும் பிரச்சனயில்ல ‘ ‘, என்று நடையைப் போட்டான், முத்துப் பாண்டி..

வீட்டிற்குச் சென்று பார்த்தால், அட்டைப் பெட்டிகள் சிலவற்றைக் காணவில்லை.. ஒரு பெட்டியை வேறு உடைத்துப் போட்டு உள்ளே இருப்பதை குடைந்து யாரோ அபேஸ் செய்திருந்தார்கள்.. அதிர்ந்து போய், பக்கத்தில் விசாரித்தால், வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்த அந்தக் கிழவி, யாரோ முத்துப் பாண்டிக்கு சிநேகிதன் என்று கூறிக் கொண்டு அவற்றை எடுத்துச் சென்றதாகச் சொன்னாள்.. எழவெடுத்த வீட்டிற்கு பூட்டாவது ஒழுங்காக இருக்கிறதா.. ? முதலில் இது ஒரு வீடா.. ? இதை நம்பி அந்தப் பெட்டிகளை வைக்கலாமா.. சே.. எத்தனை பெரிய முட்டாள்தனம் செய்து விட்டோம் என்று நொந்து கொண்டான், முருகன்..

சாந்திலால் முத்துப் பாண்டியின் கதைகளை நம்பத் தயாராக இல்லை, போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டான்… பாண்டி கைது செய்யப்பட்டான்.. தன்னையும் வேறு சந்தேகப் பட்டு கைது செய்யப் போகிறார்கள் என்பதை அறிந்து கொண்ட முருகன், அன்று அவசர அவசரமாக திருட்டு ரயில் ஏறி டெல்லி வந்தவன்தான்.. நிச்சயமாக ஒரு நண்பனை நட்ட நடு ஆற்றில் விட்டு வரும் அளவிற்கு மோசமானவன் இல்லைதான்.. இருந்தாலும், போலீஸ் முத்துப்பாண்டியை லாக்கப்பில் ஜட்டியுடன் தலைகீழாகத் தொங்கப் போட்டு அடிப்பதாகத் தகவல் வந்தது.. டின் கட்டி அடித்து பாண்டியின் காலையே ஒடித்துவிட்டதாம் போலீசு.. இதைக் கேள்விப்பட்டு, அதிர்ந்து போய், அடிக்கு பயந்துதான் ஓடி வந்து விட்டான்..

‘நண்பா.. மன்னித்துவிடு.. என்றாவது உன்னை வந்து பார்ப்பேன்.. ‘, அப்படி என்றாவது என்பதற்கே ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.. வர வேண்டும் என்று நினைத்தாலும், போலீசு வெறியுடன் அவனைத் தேடி அலைகிறதோ என்ற நினைவு அவன் ஆவலைத் தடுத்து நிறுத்திவிடும்.. முதலில் டெல்லி வந்து, அங்கு ஏதோ ஒரு தமிழர் ஓட்டலில் வேலை பார்த்து, அடுத்தடுத்து சில வருடங்களில் ராம் அவ்தார் சிங்குடன் இனம் புரியாத நட்பு ஏற்பட்டு, அவருடன் வெளியேறி, இதோ முடிவில் இந்த ரோட்டோர ‘தாபா ‘… இப்போது மாலிக்கும் கடையை அவனிடம் கொடுத்துவிட்டு தன் சொந்தவூர் சென்று விட்டார்…,.. அவன் தமிழ்நாடு செல்லத் தருணம் பார்த்து வந்தான்.. இன்னமும் சில வருடங்கள் ஆகும் போலத் தோன்றியது.. அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.. சோகம் வாட்டியெடுத்தது.. இது என்ன பிடிப்பே இல்லாத வாழ்க்கை.. புரியாத வாழ்க்கை.. டிசம்பர், ஜனவரி மாத உ.பி குளிரைப் போல சுற்றிலும் வெண்மைப் பனியாக எதுவும் தெரியாத, புரியாத வாழ்க்கை.. சென்னையில் இப்போதைக்காட்டிலும் குறைவாக வருமானம் வந்தாலும், அதில் எத்தனை நிறைவும் சந்தோசமும் இருந்தது.. ஆனால் இங்கு.. ம்ம்..

ஊரிலிருந்து மாலிக், ஏதோ ஒரு குடும்பத்தை கடையில் வேலை செய்ய அனுப்பியிருந்தார்.. தாயும் மகளும் முருகன் முன்பாக வந்து நின்றார்கள்.. இரண்டு பெண்களும் ஒரு மூக்கில் மட்டும் வளையம் போட்டுக் கொண்டு, பூனைக் கண்களால் மிரட்சியுடன் முருகனைப் பார்த்தார்கள்.. இவள் மகளாவது பரவாயில்லை.. இந்தக் கிழவியிடம் என்ன வேலை வாங்க முடியும்.. காய்ந்த தென்னஞ்சருகு போல இருந்தாள், கிழவி..

‘ ‘அரே சோக்ரீ.. க்யா நாம் துமாரா.. ‘ ‘, என்று வினவினான்..

‘ ‘சிம்ரன்.. ‘ ‘, என்றது அந்தச் சின்னக் குட்டி..

உஷ்ணம் தலைக்கேறியது, முருகனுக்கு.. சற்றுத் திகைத்தவன், பின்னர் இந்தியில் தொடர்ந்தான்.. ‘ ‘காலையில் கடை முழுவதும் சுத்தம் செய்வது, பாத்திரம் அலம்பி வைப்பது, மாவு பிசைவது, வந்தவர்களுக்கு ரொட்டி உடனே செய்வது.. ‘ ‘ என்று வெறி பிடித்தவன் போல வேலைகளை அடுக்கிக் கொண்ட சென்றான்..

(நன்றி வடக்கு வாசல் நவம்பர் 2005)

prabhabadri@yahoo.com

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்