ஆண்டச்சி சபதம்

This entry is part [part not set] of 30 in the series 20050616_Issue

மா. சிவஞானம்


இந்நேரம் தொடையோ, உயிர்நிலையோ கிழிஞ்சிருக்கும் முனியனுக்கு. கண் சிமிட்டும் நேரத்துக்குள் நாவல் மரத்தில் ஓடி ஏறிட்டான். கறுப்பனும் கன்னியப்பனும் மூங்கில் புதருக்குள் ஒளிஞ்சுக்கிட்டானுங்க. மூக்கன் எதிர்த்திசையில் ஓட்டம் பிடிச்சான். உறுமல் தொடர்ந்து வந்துக்கிட்டிருக்கு. முன்னங்கால் ரெண்டாலும் தரையைக் கீறியது. முனியன் ஒவ்வொரு முறையும் மரத்திலிருந்து இறங்க வரும்போதும் பின்னாலக் கொஞ்ச தூரம் நகர்ந்து வேகமாகத் தலையைக் கவிழ்த்துக்கினு முன்னாடி ஓடிவந்துச்சு. ஓடி வந்து மரத்தை முட்டிச்சி. முனியன் திரும்பவும் உயரத்தில் ஏறிக்குவான். கரு கருவென புசு புசுத்த மயிர். எருமைக்குக் கோரைப் பல் முளைச்சது போல. ஆண்டச்சி உருட்டி உருட்டி முழிக்கிறது மாதிரி முழிச்சி முழிச்சி உருமிக்கினு நிக்குது, எமனே வறதைப் போல. கணந்தப்பினால் மரணந்தான்.

இந்த வெளையாட்டு ஒரு மணி நேரமா நடந்திட்டிருக்கு. இவங்க இந்த இழுபறியில ஜெயிச்சாகனும். அப்பதான் கதைக் கந்தலா போகாம கோவையா வந்து முடியும்.

முனியனுக்கு மூச்சிறைத்தது. வசதியா ஒரு கிளை மேல முதுகச் சாச்சிக்கிட்டு இன்னொரு கிளையில ரெண்டு காலையும் பின்னிக்கிட்டு உக்காந்தான். பயத்தையும் களைப்பையும் போக்க மனசுக்குப் பெராக்குக் காட்டணும். ஆனாலும் முனியனுக்குக் கொஞ்சம் போல கொழுப்பு அதிகந்தான். இல்லாட்டி இருக்கிற வேலை மேல கவனமில்லாம ஆண்டச்சித் தொடைய பத்தி இப்ப நெனச்சிப் பாப்பானா! கிளையைக் காலால் இன்னும் இறுகப் பின்னிக்கிட்டான். வெறும் பயலுக்குக் கிறுக்கு ஏறிடுச்சி.

அது மார்கழி மாசம் ஒரு நாளில் நடந்தது. முனியனுக்கு அந்த நெனப்பு வெட்டுக் கிளி தத்தித் தத்திப் பறப்பது போல அப்பப்ப மனசுல பறந்துட்டுப் போகும். கொழு கொழுன்னு பொம்மையாட்டம் கல்யாணத்தப்ப வந்து சேர்ந்த ஆண்டச்சியா நூறு ஏக்கர் நிலத்தையும் தாட் பூட்டுண்ணு நிர்வாகம் பண்றாங்கண்ணா ஆச்சரியந்தான். ஆண்டையப் புடிச்சி ரெண்டே வார்த்தையிலக் கட்டிப் போட்டுட்டா ஆண்டச்சி. ஆண்டை எதுக்கெடுத்தாலும், ‘ம்..சரி, ம்.. சரி ‘ தான். சும்மா சர் சர் ன்னு வரப்புல தொடை அதிர நடந்து வந்து ஆட்டை மாட்டை வெரட்டுறாப்பல வேலை வாங்கும் ஆண்டச்சி. அப்படித்தான் பரபரப்பா நடந்து வந்தப்ப முனியன் குனிஞ்சி தண்ணியத் திருப்பிப் பாய்ச்சிக்கிட்டிருந்தான். ஆண்டச்சி கால வச்ச எடத்துல வரப்பு சரிஞ்சி முனியன் மேல தொபுக்குன்னு உழுந்துட்டாங்க. கம கமன்னு பெளடர் வாசம். பேசாம எழுந்துத் திரும்பிப் போயிட்டாங்க. பஞ்சாட்டம் தொடை.

பயலுக்குக் கெரக்கம் ரொம்ப நேரம் நீடிக்கல. உச்சிக் கிளை சல சலத்து ஆடிடுச்சி. கெக்களிப்பில் ஒரு குரல். முனியன் நாலா பக்கமும் மேலயும் கீழேயும் பார்த்தான். யாருமில்லை. கொஞ்சம் போல் அவனுக்குள்ளே கிலி பரவிடுச்சி. ‘டே கறுப்பா கன்னியப்பா எங்கடா இருக்கீங்க, பரதேசிப் பசங்களா ? ‘ தொண்டை வரளக் கத்தினான். மூர்க்கமாய் உறுமி ஓடி வந்து மரத்தை முட்டிடுச்சி. முனியனுக்குக் குலை நடுங்கியது. கறுப்பனுக்கும் கன்னியப்பனுக்கும் குரல் கொடுக்கப் பயம். திசைத் திரும்பினால் உடல் கந்தல்தான்.

முனியனுக்குள்ளே யார் யாரோ பேசினாங்க. ‘எலியக் கவ்வாத பூனையே, ஏத்தமாடா உனக்கு! ‘

‘அடேய் ஆரு நீ! காட்டு வேடியப்பன் உன்னைக் கவனிச்சுக்குவான், கிட்ட நெருங்காதே பேடிப் பயலே ‘

முனியன் அவன் பாட்டுக்குக் கத்தினான்.

அவ்வளோ பயத்திலும் மொள்ளன் சொன்னது முனியனுக்கு ஞாபகம் வந்திடுச்சி – நடுச் சாமத்தில நடுக் கட்டான் பக்கத்துல வரும்போது கீரிக் கெழவி கொமரியாட்டம் வந்து பயமுறுத்தினாளாம். ஆருகிட்ட உன் வேலையக் காட்டுற ன்னு அவன சுத்தி ஒன்னுக்கடிச்சானாம். இருந்த எடந்தெரியாம மாயமா மறைஞ்சிட்டாளாம். முனியனுக்கும் அதே கதிதான். உச்சிக் கிளை அப்படி ஆக்ரோசமா ஆடுச்சி. மரத்தை இறுக்கிப் பிடுச்சிக்கிட்டான். யாராயிருக்கும்! செவத்தான் பையன் சந்திரனா ?

முனியன் தன்பாட்டுக்குக் கத்தினான், ‘டே யாருடா நீ, நாதிகெட்டப் பயலே, வாடா முன்னே, நாயே ‘

உடல் வெட வெடன்னு ஆடுச்சி முனியனுக்கு.

கறுப்பனும் கன்னியப்பனுங்கூட பயத்திலிருந்து மீளல. நாலா பக்கத்திலிருந்தும் பயம் வந்து பிடுங்கினா என்னப் பண்ணுவானுங்க. இதை விட்டா ஆண்டச்சி – ‘ நாலு மணிக்குள்ளத் திரும்பாட்டி சோத்துக்குப் பிச்சைதான் எடுக்கனும் ‘ ன்னு மெரட்டினாங்க.

வாயைத் திறந்தா உறுமி வந்து பாஞ்சிடுமோ! முனியனின் மூத்திரக் கெளச்சியைச் சத்தம் போடாமப் பொறுத்துக்கிட்டாங்க.

ஆக்கோரசமா அப்பிடியிப்படி ஓடிப் பிறகு மூங்கில் பொதர்கிட்டப் போய் சட்டுன்னு சரிஞ்சிப் படுத்திடுச்சி. வேக வேகமா மூச்சி வாங்கினதால வயிறு மேலுங் கீழும் குலுங்கிடுச்சி. நாலு காலையும் நீட்டிக் கவுந்து படுத்திடுச்சி.

‘ஈட்டிய வச்சிக்கினு என்னடா பண்ணுறீங்க, நாயிங்களே ‘

மூச்சுமுட்டக் கத்தினான் முனியன். அப்படிக் கத்தின மாத்திரம் சட்டுன்னு எறிஞ்சாங்க ஈட்டிய.

காடு அதிரக் கத்திக்கிட்டேயிருந்து அடங்கிடுச்சி.

மரத்திலிருந்து மெதுவா இறங்கிவந்தான் முனியன். வேற திசையில ஓடின மூக்கன் ஒய்யாரமா நடந்து வந்தான். கறுப்பனும் கன்னியப்பனும் மட மடன்னு முன்னங்கால் ரெண்டையும், பின்னங்கால் ரெண்டையும் கயித்தாலக் கட்டினாங்க. பிறகு நாலு காலயும் சேத்துக் கட்டிட்டாங்க. உறுமல் அடங்கிப் பாதி மயக்கத்திலிருந்தது. மூக்கன் வாயையிறுக்கிக் கட்டிட்டான். கருங்காலிக் கொம்பை காலுங்களுக்கு நடுவில விட்டுத் தூக்க ஆயத்தமானாங்க.

முனியன் ஒரு மாதிரி வாடிப்போயிருந்தான். திரும்பிப் போற வழியில வேடியப்பங்கோயில் நீறு எடுத்துப் பூசினா எந்தக் காத்தும் கறுப்பும் ஓடிப்போயிடுமின்னு அவனுக்குத் தைரியம் சொன்னாங்க. இப்பவே சாயந்திரம் ஆறு மணியாயிடுச்சி. எல்லாரும் ஒருத்தனை ஒருத்தன் பார்த்துட்டு முழிச்சானுங்க.

‘ஆய்லேசா ஆய்லேசா, ஆத்துத் தண்ணி ஆய்லேசா

ஆய்லேசா ஆய்லேசா, அயிர மீனு ஆய்லேசா

ஆய்லேசா ஆய்லேசா, சேர்த்துப் புடி ஆய்லேசா

ஆய்லேசா ஆய்லேசா, தூக்கி வையி ஆய்லேசா

ஆய்லேசா ஆய்லேசா காத்துக் கறுப்பு ஆய்லேசா

ஆய்லேசா ஆய்லேசா ஓட்டம்பிடி ஆய்லேசா

ஆய்லேசா ஆய்லேசா கன்னிப் பொண்ணு ஆய்லேசா

ஆய்லேசா ஆய்லேசா கட்டிப் புடி ஆய்லேசா

ஆய்லேசா ஆய்லேசா மாரிமுத்து ஆய்லேசா

ஆய்லேசா ஆய்லேசா இன்னும் ஊத்து ஆய்லேசா

ஆய்லேசா ஆய்லேசா ஆண்டச்சி பார் ஆய்லேசா

ஆய்லேசா ஆய்லேசா அமுக்கிப் புடி ஆய்லேசா ‘

சிரிப்புத் தாங்க முடியில எல்லோருக்கும். கனமும் அப்படித்தான். தோள்பட்டையை அமுக்குது. சொட்டக் கல் அடிவாரத்திலிருந்து தூரம் கொஞ்சமா! நரிமேடு, நரிப் பள்ளம், வட்டப் பாறை, மாட்டுத் தடம், வேடியப்பங்கோயில் ன்னு கடந்து போகனும்.

*

முடியாம வாசலில் பந்தலுக்கடியில் காத்தோட்டமாக் கட்டில் மேல, ராமர் நாமம் போல ரெண்டு காலையும் நேரா நீட்டி ஆண்டச்சி படுத்துக்கிட்டிருக்காங்க. போட மலையைப் பார்த்தபடிக் கட்டிலைப் போட்டிருக்காங்க. காட்டுக்குப் போனவங்க திரும்பி வரத வசதியா முன் கூட்டியே பார்த்துட முடியும். என்ன இருந்து என்ன பண்ண, வலியோட வேதனையை ஆண்டச்சியால தாங்கிக்க முடியல. அப்படியே கண்ண மூடி யோசிச்சாத் தேவலை. மனச வலியிலிருந்துத் திருப்பிடலாம். ஆண்டச்சிக்கும் அப்படித்தான் தோணிச்சி. கண்ண மூடினா, பெண்ணையாத்துலத் துள்ளித் துள்ளி நீந்தியோடும் மீன் கூட்டம்போல நெனைப்புங்க முட்டி மோதிக்கிட்டு வருது.

ஆண்டச்சி என்னைக்கும் இப்படிப் படுத்ததில்லை. யாருக்கும் பயப்பட்டதில்லை. யாரும் இரக்கப்படும்படி இருந்ததில்லை. அதனாலயோ என்னமோ ஆண்டச்சிக்கு அப்பா ஞாபகம் வந்திடுச்சி.

அப்பாவும் அப்படித்தான்.

‘அவரை மீறி யாரும் நடந்துக்க மாட்டாங்க. இல்லாட்டி குப்பன் பயலுக்கு வந்த கதிதான். ஆதரவத்தப் பயலுக்கு தலைக்கு மேலத் திமிரு. கோமணம் பெரிசு நெலந்தான், ஆனா மிராசுதார் மாதிரி வந்து பேசினான். ‘ஏம்பா, உங்க ஆளுக்காரனுங்கக் கவனக் குறைவுக்கு நாந்தான் மாட்டினேனா! ஒரு கழனி நெல்லுப்பயிர முழுசா மேஞ்சிடுச்சே, என்னப்பா சொல்ற ‘ ன்னு கேட்டவன அதட்டி அனுப்பிச்சார் – ‘ போடா வாய மூடிக்கிட்டு. வாயில்லா ஜீவன் பண்ணதுக்கெல்லாம் பெரிசா ஞாயங்கேக்க வந்துட்டான். ‘ இத ஒரு குறும்பா மனசில வச்சிக்கிட்டு ஃபாரஸ்ட்டருக்கிட்ட போய், இராமசாமி மானை அடிச்சிச் சாப்பிடறாருன்னு பத்த வச்சிட்டான் பரதேசி. ஃபாரஸ்ட்டர் வீட்டுக்கு வந்திட்டாரு. கொஞ்சம் இருங்க சார், இதோ வந்திடறேன்னுட்டுப் போய் குப்பனக் கீழத் தள்ளி எட்டி எட்டி ஒதச்சாரு அப்பா. செறுப்பில இருந்த ஆணி பட்டு குப்பன் தொடையில ரத்தம், ஜென்மத்துக்கும் இனி வம்பு பண்ண மாட்டான். வீட்டுக்குத் திரும்பனப்ப அம்மா தொடைக் கறிய வறுத்து வச்சிருந்தா. மான் கறியா மாட்டுக் கறியான்னு கூட ஃபாரஸ்ட்டருக்கு வித்தியாசந்தெரியல. ‘அப்பா செல்லமா ‘ன்னு என் கன்னத்த நீவி விட்டாரு ‘ ஃபாரஸ்ட்டரு. ‘

(ஆண்டச்சி ஆண்டையோட சந்தோசமா இருந்தப்பல்லாம் எப்படியும் இந்தப் பேச்சு வந்திடும், ‘ எங்கப்பாவுக்கு மான் கறின்னா இஷ்டம். அதுவும் தொடைக் கறிதான் விரும்பிச் சாப்பிடுவார். அம்மா தொடைக் கறியைத் தனியா வறுத்துக் கொடுத்திடும். நான் அப்பாத் தொடை மேல உக்காந்துக்குவேன். அப்பா எனக்கும் ஊட்டிவிடுவார். ‘)

‘ ‘அப்பாவுக்குப் பிள்ளை தப்பாம ‘ ன்னு அடிக்கடிச் சொல்லிக் காட்டுவா அம்மா. ‘ ஆனா ரெண்டு வெவகாரத்துல வெம்பின மனசு அடங்கவேயில்லை ஆண்டச்சிக்கு. ஒன்னு ஜொல்லுக்குட்டி – அப்ப, ரெண்டாவது காட்டுப் பன்னி – இப்ப.

தர்மபுரி மாவட்டத்துச் சுத்து வட்டாரமெல்லாம் ஜொல்லுக் குட்டியின் அதிகாரத்துக்குக் கீழ அடக்கம். ஜொல்லுக்குட்டியொன்னும் பயில்வானல்ல. கிழவன். ஒத்த கோமணத்தோட ஊர் சுத்தற நாத்தம் புடிச்சக் கிழவன். ரயில் வண்டிச் சக்கரத்து அச்சு கணக்கா அவன் கால் ரெண்டும் ஒரே சீரா அவசர கதியில வேகமா நடக்கும். அதே வேகத்தில ஊர் ஊரா பயத்தை நட்டுட்டு வருவான். உங்களால நம்ப முடியிலதானே ? ஆண்டச்சிக்கும் இதே பிரச்சினைதான். வெறும் பஞ்சப் பரதேசின்னுதான் நெனச்சிட்டாங்க. இதைக் கேட்டாங்கண்ணா உங்களுக்கு ஒரு வேளை ஜொல்லுக்குட்டியின் அதிகாரத்தைப் பத்திய நம்பிக்கை வரலாம்.

எங்க ஊருக்கு வருஷா வருஷம் குருவிக் காரங்க கூட்டம் ஒன்னு வரும். சரியா அறுவடை சமயத்தில வருவாங்க. திரெளபதியம்மன் கோயில் மைதானத்தில்தான் கூடாரம் போடுவாங்க. இப்படித்தான் இவங்க தண்டராம்பட்டு, தானிப்பாடி, அம்மாப் பேட்டை, ஆண்டியூர், தீர்த்தமலை, சித்தேரி, அரூர், செங்கம் ன்னு ஊர் ஊரா கூடாரம் போட்டு பொழப்பு நடத்திக்கிட்டு வராங்க.

ஏதோ அம்பது வருஷம் வாழ்ந்த இடம் போல வந்து சேர்ந்த நாளே அவங்கவங்க பொழப்பப் பார்க்கப் போயிடுவாங்க. ஆம்பிளைங்க ஒரு கும்பல் காட்டு லைனோரம் சாமை வயல்களுக்குப் போய் காடைங்களுக்குக் கன்னி வைக்கும். இன்னொரு கும்பல் காட்டுக்குள்ள போய், கெளதாரி, காட்டுக் கோழிகளுக்கு வலை விரிக்கும். ஒரு கும்பல் ஆத்தோரமாய்ப் போய் கொக்குகளுக்குக் குறிவைக்கும். காடை, கெளதாரி, காட்டுக்கோழியெல்லாம் ஊர்ல வித்துப் பணம் பண்ண – கொக்கு அவங்க எல்லொருடைய வயித்தையும் நெறப்ப. குருவிக்காரப் பொம்பிளைங்க கஸ்தூரி, கோரோஜனம், வசம்பு, மணிவகைகள்ன்னு வீடு வீடாப் போவாங்க. எல்லோரையும் சொந்தக் காரங்கப் போலப் பாவிப்பாங்க. எல்லோரையும் பேரிட்டுக் கூப்பிட்டு நலம் விசாரிப்பாங்க. அப்படியேக் கதை பேச ஆரம்பிச்சிடுவாங்க. அதில பல ஊர்ல நடந்த ஜொல்லுக்குட்டியோட சங்கதிகளும் அடங்கும்.

குள்ள நரிக் கிழவனும் வந்தான். குளிருக்கு ஒட்டி அடங்கியிருக்கும் கோழிகளைப் பிடிக்க வரும் குள்ளநரிகளோடத் தொல்லை அதிகம். குள்ளநரிக் கிழவன் அதுகளுக்குக் கன்னி வைத்துப் பிடிப்பதில் வல்லவன். ஒன்னு கூட அவங்கிட்டிருந்துத் தப்பமுடியாது. ஒவ்வொரு வீடா அவனக் கூப்பிடுவாங்க. குள்ளநரிப் பிடிக்கிறதால அவன் குள்ளநரிக் கிழவன் ஆனான். இந்த முறை குள்ளநரிக் கிழவனிடம் சரியான களை இல்லை. கிழவனுக்கு ரொம்ப வயசாயிடுச்சி. தள்ளாடித் தள்ளாடித்தான் நடந்தான். காதுங் கேக்கல. நெறையக் கதை சொல்லுவான். சில சமயம் பின்னால நடக்கப் போகிறதைச் சொல்ற மாதிரியே இருக்கும் அவனுடைய பேச்சு.

சாயங்காலம் கூட்டங்கூட்டமா கொக்குகள் வானத்தில பறந்து போனதுங்க. அந்த சமயத்தில, ‘கொக்கே கொக்கே பூப் போடு ‘ன்னு வேண்டிக்கிட்டு கைவிரல் நகங்களை ஒன்னோடு ஒன்னாத் தேச்சா நகங்கள்ள பூ விழும். அப்படி நாங்க வேண்டிக்கிட்டிருந்தப்பப் பக்கத்திலிருந்தக் குள்ளநரிக் கிழவன் மேல பீ போட்டிடுச்சி ஒரு கொக்கு. ‘என்ன சனியன் ‘ன்னு ‘ச் ‘ கொட்டினான் கிழவன்.

சனியந்தான் அவனப் பிடிச்சிடுச்சி. இல்லைன்னா ஒரு மானஸ்த நரிக் குறவனுக்குக் கோழிக் குஞ்சுகளைப் பிடிச்சித் திங்க ஆசை வருமா! அதுவும் ஆண்டச்சி வீட்டுக் கோழிக் குஞ்சுகளை! பாதி கூடத் தின்னிருக்கமாட்டான். பாத்திரத்தைக் காலாலே எட்டி உதைச்சாங்க ஆண்டச்சி. பட்டு பட்டுன்னு முறத்தாலே அடிச்சிக்கிட்டிருக்கப்ப, அடி வாங்கிக்கிட்டே சொல்லிக்கிட்டிருந்தான் கிழவன், ‘ என்னைப் போல ஒருத்தன் வருவான். உன்னை உருட்டியெடுத்து ஒரே எடத்தில நிக்க வைப்பான் ‘

அப்படித்தான் காத்து போல வந்தான் ஜொல்லுக்குட்டி ஒரு நாள். தலையிலயும் மூஞ்சியிலும் பஞ்சு பஞ்சா முடி. சில்லி வண்டு மாதிரி நிறுத்தாம அவன் பாட்டுக்கு ஒரே பேச்சு. பேசப் பேச ஒதட்டோரம் வத்தாம வழியிற ஜொல்லு. டப்புன்னு திரும்பி விர் விர்ன்னு வீசனான் கல்லை. பின்னால ஓடி வந்த பசங்கக் கூட்டம் எதிர்த் திசையில எடுத்தது ஓட்டம். மடியில எப்பவும் கல்லைப் பத்திரப் படுத்தி வச்சிருப்பான். அவன் மேல அடிக்கிற அழுக்குக் கவுச்சியா இல்ல எந்த நிமிஷமும் வெடிக்கிற கெட்ட வசவைத் தவிர்க்கவோ அவனுக்குக் கைமேல சாப்பாடு கெடச்சிடும். பசிச்சா மட்டுந்தான் சாப்பாடு வேணும். மத்த நேரமெல்லாம் ஒரே பேச்சுதான் – மேல பார்த்து, கீழ பார்த்து ஓரமாப் போற நாயப் பார்த்து. அன்னிக்கிப் பார்த்து ஆண்டச்சிக்கிட்டப் போய் நின்னு கேட்டான், ‘ ஏய் சோறு கொண்டா ‘

‘ போடாத் தூர, நாயி ‘

‘ என்னாடி பன்னி மாதிரி நின்னுக்கிட்டு, கொண்டாடி சோத்தை, குண்டுப் பன்னி ‘

முறத்தைக் கையிலெடுத்துக்குனு ஓடி வந்தாங்க ஆண்டச்சி. நறுக்குன்னு தொடையில கிள்ளிட்டுப் புடிச்சித் தள்ளிட்டான் ஜொல்லுக் குட்டி. மல்லாந்து விழுந்த ஆண்டச்சி, சுதாரிச்சி நிமிஷத்தில எழுந்து வெறியோட வந்தாங்க. கண் சிமிட்டிறதுக்குள்ளார மடியிலிருந்து விட்டெறிஞ்சான். துப்பாக்கியிலயிருந்து வற மாதிரி சர் ன்னு சத்தம் போட்டு ஆண்டச்சிய ஒட்டி விழுந்து ஓடிச்சி கல். காது ரெண்டையும் பொத்திக்கிட்டு மரமா நின்னுட்டாங்க ஆண்டச்சி. ரயில் வண்டி மாதிரி அவன் பாட்டுக்குப் போயிட்டான் ஜொல்லுக்குட்டி.

ஒருமுறை பட்டும் புரிஞ்சிக்க ஆண்டச்சி கெளரவம் இடங்கொடுக்கலை. இல்லாட்டி அப்படியே நின்னுட்டு முறைச்சிப் பார்த்துக்கிட்டிருந்திருப்பாங்களா! ஆண்டச்சி வாசல் தெளிக்க வாளியை வச்சிருந்த செண்பகம், காட்டுப் பன்னித் தலையை ஆட்டிக்கிட்டு வறதப் பார்த்ததும், வாளியைக் கீழே போட்டிட்டு ஓடினதாலத் தப்பிச்சா. திரும்பறதுக்குள்ளாற ரெண்டுத் தொடைக்கும் நடுவிலத் தலையை நொழச்சி, அலாக்காத் தூக்கி…. ‘பிடிங்கடா, பிடிங்க ‘ ன்னு மல்லாந்து படுத்துக்கிட்டு கத்தினப்போ ஆண்டச்சிக்கு ஜன்னி வந்து இழுத்ததைப் போலிருந்திச்சி.

ஆண்டச்சி வலியில மொணகிக்கிட்டேயிருக்காங்க. என்னென்னமோ உளறிக்கிட்டு, பல்லை நற நறன்னுக் கடிச்சிக்கிட்டு அவங்க பாட்டுக்கு அணத்தறாங்க.

‘கோரப் பல்லெடுத்துச் சீவித் தலைமுடிப்பேன்

கொட்டும் இரத்தமெடுத்து வாசல் தெளிப்பேன்

தூவி வாசல் தெளிச்சவத் தொடையக் கிழிச்சயே

பாவியுன் தொடைக் கறிய வறுத்துத் தின்னுவேன். ‘

ஆண்டை பக்கத்தில நின்னுகிட்டுப் பரிதாபமாப் பார்த்துக்கிட்டிருக்காங்க. ஆளரவங் கேட்டுத் தலையத் தூக்கிப் பாக்குறாங்க, ஆண்டச்சி. முகமெல்லாம் ஒரே பூரிப்பு. ஆண்டையப் பார்த்துச் சொல்லறாங்க.

‘ அவனுங்க களைப்பா வந்திருக்காங்க. அலமாரியிலப் பணம் வச்சிருக்கேன். கொண்டாந்து அவனுங்கக்கிட்ட குடுங்க. சாராயம் கீராயம் குடிச்சிட்டு வந்து கறி சாப்பிடட்டும் ‘

‘ம். சரி ‘

தூக்க முடியாமத் தூக்கிவந்த காட்டுப் பன்னியைக் கீழே எறக்கி வச்சிட்டு, முனியன், கறுப்பன், கன்னியப்பன், மூக்கன் ஒருத்தன ஒருத்தன் ஆச்சரியமாப் பார்த்துக்கிட்டானுங்க. நம்பமுடியாம இருந்தாலும் தென்னங்கீத்து அசைஞ்சதைப் போலச் சிரிப்பு வந்து போனது உண்மைதான்.

-மா. சிவஞானம்.

25 பிப்ரவரி, 2005

email id : masivagnanam@hotmail.com

Series Navigation

மா. சிவஞானம்,

மா. சிவஞானம்,