மழலைச்சொல் கேளாதவர் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

என். சொக்கன்


அறைக்குள் ஒரு பெரிய புயலடித்து ஓய்ந்தாற்போலிருந்தது.

பிரசவித்த களைப்பில் மதுமிதாவும், பிறந்த களைப்பில் அவளது குழந்தையும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்கள். சற்றுத் தள்ளி ஒரு சாய்வு நாற்காலியில் தளர்ந்து படுத்திருந்தான் அஷ்வின்.

இன்னும் இரண்டு வாரங்கள் கழித்துப் பிறந்திருக்கவேண்டிய குழந்தை. கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டது. என்றாலும், அதற்கான குறை அடையாளங்கள் ஏதுமின்றி, நன்கு ஆரோக்கியமாகவே பிறந்திருக்கிறது. நிம்மதி.

அஷ்வினுக்கு இன்னும் பதட்டம் தணிந்திருக்கவில்லை. நெஞ்சின் படபடப்பு காதுகளில் பலமாக எதிரொலித்துக்கொண்டிருந்தது.

எந்த விசேஷமும் தட்டுப்படாத சாதாரண நாளாகதான் இது தொடங்கியது. காலை எழுந்து, குளித்து, பிரட்டில் மிளகாய்ப் பொடியைத் தோய்த்துத் தின்றுகொண்டிருக்கும்போது, உள்ளறையிலிருந்து மதுமிதாவின் அலறல் சப்தம் கேட்டது.

அவசரமாக உள்ளே ஓடிச் சென்று பார்த்தபோது, வயிற்றைப் பிடித்துக்கொண்டு படுக்கையில் மல்லாக்கக் கிடந்தாள் அவள். வேதனையும், ஆத்திரமும் கலந்து அவள் கத்துவதைப் பார்க்கையில், சற்றுமுன் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்த பெண்தானா இவள் என்றிருந்தது.

அவளை நெருங்கிக் குனிந்து நெற்றியில் கை வைத்தான் அஷ்வின், ‘பதட்டப்படாதே மது, நான் டாக்டருக்கு ஃபோன் பண்றேன் ! ‘

அவன் சொல்வது அவளுக்குக் கேட்டதோ, இல்லையோ. ‘வேண்டாம் ‘, என்பதுபோல் இருபுறமும் தலையசைத்து மறுத்தாள் அவள், பொறுக்கமாட்டாத வலியில் கீழுதட்டைப் பல்லால் கடித்து ரத்தம் வரத்தொடங்கியிருந்தது.

டாக்டர்களின் ஆலோசனைப்படி, பல மாதங்களுக்குமுன்பிருந்தே இதுபோன்ற சூழ்நிலைக்கு அஷ்வினும், மதுமிதாவும் தயார் செய்யப்பட்டிருந்தார்கள். உதவிக்கு யாருமில்லாத நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டால், என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்றெல்லாம் அட்டவணை தயாரித்துக் கொடுத்திருந்தார்கள். ஆகவே, இப்போது அநாவசியமாகத் தடுமாறாமல், தெளுவாகச் செயல்பட முடிந்தது.

என்றாலும், அந்தக் கணத்தில், அஷ்வினுக்குள் இனம் புரியாத ஒரு அழுத்தம் ஊடுறுவியிருந்தது. இரண்டு உயிர்களைக் காப்பாற்றுகிற பொறுப்பு, அவன் ஒருவனின் தலைமேல் சுமத்தப்பட்டிருப்பதை நினைக்கையில் கண்கள் இருண்டு, கால்கள் நில்லாமல் கழன்றுவிடுவதுபோல் உணர்ந்தான்.

மதுமிதாவை ஆசுவாசப்படுத்தி, உடைகளைத் தளர்த்திவிட்டு, எதிரிலிருந்த அலமாரியைத் திறந்தான் அஷ்வின். பிரசவ நேரத்தில் உதவுவதற்கான விசேஷ ரோபோ அதனுள் இருந்தது.

ஆனால், அந்தப் பெட்டியைத் திறந்து ரோபோவை வெளுயிலெடுத்துப் பாதி பொருத்துவதற்குள், மீண்டும் மதுமிதாவின் அலறல் கேட்டது. எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு அவளருகே ஓடினான் அஷ்வின். அடுத்த ஒன்றரை நிமிடங்களுக்குள், அவர்களுடைய குழந்தை பிறந்துவிட்டது.

ஆண் குழந்தை. அவர்கள் பயந்ததுபோல் ரொம்ப சிரமமாக இல்லாமல், வலுக்கட்டாயமாக அஷ்வினுக்கு தாதிப் பயிற்சி கொடுத்த மருத்துவர்களின் புண்ணியத்தில், சுகப் பிரசவம்தான்.

டாக்டர்களுக்குமட்டுமின்றி, முன்னேறிவிட்ட மருத்துவத் தொழில்நுட்பத்திற்கும்தான் நன்றி சொல்லவேண்டும். பிரசவம் என்பது மறுபிறப்புக்குச் சமம் என்றெல்லாம் சென்ற பல நூற்றாண்டுகளாக கர்ப்பிணிப் பெண்களை பயமுறுத்திக்கொண்டிருந்த கஷ்டங்கள் யாவும் இப்போது வழக்கொழிந்தாயிற்று. குழந்தைப் பிறப்பின்போது ஏற்படக்கூடிய பெரும்பாலான அபாயங்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாக மருந்துகளைக் கண்டுபிடித்து, கருவான இரண்டாம் மாதத்திலிருந்து இதற்கென்று விசேஷ ஊசிகள், க்ரீம்கள் என்று ஏதேதோ கொடுத்து, பிரசவத்தின்போது ரத்தப்போக்கைப் பெருமளவு கட்டுப்படுத்தி, வலியைக் குறைத்து, இன்னும் என்னென்னவோ மாயங்கள் செய்துவிட்டார்கள். பெட்டியைத் திறந்து, பொருளை எடுப்பதுபோல், பிரசவம் பார்ப்பதும் லகுவாகிவிட்டது.

என்றாலும், முற்றிலும் புதியதான ஒரு உயிரை உலகிற்குக் கொண்டுவருவதென்றால் சாதாரண விஷயமா ? அப்போதுதான் பிறந்த குழந்தையைச் சுத்தம் செய்து, கையிலெடுத்துப் பார்க்கையில், அந்த சந்தோஷத்தையும் மீறி, அஷ்வினின் உடல்முழுதும் நடுங்கிக்கொண்டிருந்தது.

அந்தக் கணத்தில் அவனுக்கிருந்த மனநிலையை வார்த்தைகளில் கொண்டுவருவது ரொம்ப சிரமம். ஒரு மிகப் பெரிய விஷயத்தைச் செய்துமுடித்துவிட்டதுபோல் பெருமிதம் இருக்கிறது. என்றாலும், அதைச் சரியாகதான் செய்திருக்கிறோமா என்று யாரேனும் உறுதிப்படுத்தினால் பரவாயில்லையே என்று மனம் கிடந்து துடிக்கிறது. எதுவும் தப்பாக நடந்துவிடவில்லையே ? யாரிடம் கேட்பது ? விடாமல் அலறுகிற இந்தக் குட்டியூண்டு பாப்பாவிடமா ? அல்லது, களைத்து உறங்கும் மதுமிதாவிடமா ?

சிறிது நேரம் பிடிவாதமாக அழுதுகொண்டிருந்த குழந்தை, அப்படியே தூங்கிவிட்டது. மதுமிதா விழித்து எழுந்தபிறகுதான், அதற்கு ஏதேனும் சாப்பிடக் கிடைக்கும்.

அஷ்வினுடைய மோதிர விரலை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டிருந்தது குழந்தை. அதைப் பிரிக்க மனமில்லாமல், சிறிது நேரம் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு, குழந்தையை மதுமிதாவுக்கு அருகே படுக்கச்செய்து, ஒரு சிறிய துண்டால் போர்த்திவிட்டான்.

மதுமிதா எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை. பிறந்த குழந்தையைப் பார்த்தாளா என்பதுகூட நிச்சயமில்லை. மேலேறித் தாழ்ந்துகொண்டிருந்த அவளுடைய வயிறு, இன்னும் லேசாகப் புடைத்திருந்ததைப் பார்க்கையில், உள்ளே இன்னொரு குழந்தை இருக்கிறதோ என்று சந்தேகமாக இருந்தது அஷ்வினுக்கு.

ஆனால், பிரசவித்த பெண்ணின் வயிறு, சரேலென்று பழையபடி சுருங்கிவிடாது என்று டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள். அதற்குச் சில பயிற்சிகள் இருக்கின்றன, எல்லாம் சரியாவதற்குச் சில மாதங்களாவது ஆகும்.

மெதுவாக ஆகட்டும். ஒன்றும் அவசரமில்லை. மதுமிதாவின் தலைமுடியை மெல்லமாகக் கோதி, அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தான் அஷ்வின். பக்கத்தில் படுத்திருந்த குழந்தைக்கும் ஒரு ஈர முத்தம். அதன்பின், சாய்வு நாற்காலியில் சரிந்து விழுந்ததுதான் நினைவிருந்தது.

மீண்டும் அவன் எழுந்தபோது, கரகரப்பில்லாத, ஆனால் இயந்திரத்தனம் தெளுவாகத் தெரியும் குரலில் யாரோ வளவளவென்று பேசிக்கொண்டிருந்தார்கள். திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தால், தாதிப் பணிக்கென்று வாங்கியிருந்த ரோபோ. அஷ்வின் பாதியைப் பொருத்தியபிறகு, மிச்சத்தைத் தானே பொருத்திக்கொண்டுவிட்டதுபோல.

அஷ்வினின் நாற்காலி எழுப்பிய க்ரீச் ஒலியில் கவனம் கலைந்த ரோபோ, ‘குழந்தை பிறந்தாச்சா ? ‘, என்றது நேரடியாக.

அவன் அதற்கு பதில் சொல்லாமல், ‘நீ யார்கிட்டே பேசிகிட்டிருந்தே ? ‘, என்றான்.

‘அது ஒண்ணுமில்லை. சும்மா ஸிஸ்டம் செக் ‘, என்றது ரோபோ, ‘குழந்தை பிறந்தாச்சா ? ‘

‘ஆச்சு ‘, என்றான் அஷ்வின் சலிப்பாக.

‘என்ன குழந்தை ? ‘

‘இப்போ உனக்கு அவசியம் தெரிஞ்சாகணுமா ? ‘, அஷ்வினின் குரலில் எரிச்சல் மண்டியிருந்தது, ‘ஆணோ, பொண்ணோ. குழந்தை பிறந்தாச்சு. இனிமே உன் சர்வீஸ் தேவையில்லை ‘, என்றபடி மின்சார இணைப்பைத் துண்டித்தான்.

ரோபோவின் கண்கள் லேசாக மங்கின. பிறகு, ‘பேட்டரி சக்தி இன்னும் பன்னிரண்டரை நிமிடங்களுக்குச் செல்லும் ‘, என்று அறிவித்தது அது. பின்னர், ‘என்ன குழந்தை ? ‘, என்றது விடாமல்.

அப்போதும் அஷ்வினிடமிருந்து பதில் வரவில்லை. ஆகவே, அடுத்த கேள்வியாக, ‘அரசாங்கத்துக்குச் சொல்லியாச்சா ? ‘, என்றது ரோபோ.

ஏதோ எரிச்சலாகச் சொல்லவந்த அஷ்வின், சட்டென்று சுதாரித்துக்கொண்டான். அவசரப்படக்கூடாது. இன்னும் பன்னிரண்டு நிமிடங்களுக்காவது, இந்த ரோபோவிடம் வம்பளத்து, அதன் பேட்டரி சக்தியைக் கரைத்து, பெட்டிக்குள் வைத்துப் பூட்டியாக்வேண்டும். இல்லையென்றால், யோசித்துவைத்த எதையும் செயல்படுத்தமுடியாது.

‘அரசாங்கத்துக்குச் சொல்லியாச்சா ? ‘, குரலில், ஏற்ற இறக்கங்களில் சிறிதும் மாற்றமின்றி மறுபடி கேட்டது ரோபோ.

‘சொல்லணும் ‘, என்றான் அஷ்வின், ‘குழந்தை தூங்குது. முழிச்சப்புறம் சொல்லலாம்-ன்னு இருக்கேன் ‘, என்று சொல்லிவிட்டு, சட்டென்று கட்டிலைப் பார்க்கத் திரும்பிக்கொண்டான்.

அவனுடைய பார்வையிலும், பேச்சிலுமிருந்த கள்ளத்தனத்தை அந்த ரோபோ கவனித்ததா தெரியாது. ஆனால், சில நிமிடங்களுக்கு எதுவும் பேசாமல் மெளனித்திருந்தது. பின்னர், ‘சீக்கிரம் சொல்லிவிடுவது நல்லது ‘, என்றது.

‘ம், சரி ‘, என்றான் அஷ்வின், ‘அரை மணி நேரம் கழித்துச் சொன்னால்தான் என்னவாம் ? ‘

‘அதெல்லாம் தப்பு ‘, என்றது ரோபோ, ‘குழந்தை பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் இஞ்ஜக்ஷன் போட்டுவிடவேண்டும் என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறார்கள் உனக்கு ? ‘

அஷ்வின் கண்களை மூடியபடி சரிந்து படுத்துக்கொண்டான். தலைக்குள் சுழல்சுழலாக வளையங்கள் பிணைந்து, பிரிந்து, பிணைந்து, பிரிந்து அல்லாடின. அவற்றினிடையே, ஒரு கூரான ஊசி முனை தலை நீட்டி, ‘எங்கே உன் குழந்தை ? ‘, என்று அதட்டியது.

சட்டென்று கண்களை அகலத் திறந்து, மதுமிதாவின் அருகே தூங்கும் குழந்தையைப் பார்த்தான் அஷ்வின். அந்த ரோபோவின் இயந்திரக் குரல் அவனுக்குள் இன்னும் தெளுவாகக் கேட்பதுபோலிருந்தது, ‘குழந்தை பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் இஞ்ஜக்ஷன் போட்டுவிடவேண்டும் ‘

‘முடியாது ‘, என்று தனக்குள் உறுதியாகச் சொல்லிக்கொண்டான் அஷ்வின், ‘என் குழந்தைக்கு அந்த ஊசி தேவையில்லை ! ‘

அரசாங்கத்தின் கட்டாய ஊசியை ஏமாற்றி, தன் குழந்தையைக் குழந்தையாகவே வளர்க்கவேண்டும் என்று பல நாள்களாகவே அவன் யோசித்த விஷயம்தான். இன்னும் மதுமிதாவிடம்கூட சொல்லவில்லை. ஆனால், அதுபற்றி அவனுக்குக் கவலையாக இல்லை. அவளிடம் சொன்னால் நிச்சயமாக சந்தோஷப்படுவாள்.

இந்தக் கருக்காலத்தில்கூட, சோதனைக் குழாய்க்குள் தங்கள் குழந்தையை வளர்த்துக்கொள்கிற அதி சவுகர்யங்களையெல்லாம் நிராகரித்துவிட்டு, இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்று தீர்மானித்திருந்தாள் மதுமிதா. இதற்காக, அவள் தனது கல்லூரி உத்யோகத்தைக்கூட துறந்துவிடவேண்டியிருந்தது.

ஆகவே, இப்போது இந்தச் செயற்கை மருந்துகளையெல்லாம் துரத்தியடித்துவிட்டு, நம் குழந்தையை இயற்கையாகவே வளர்க்கலாம் என்றால், மதுமிதா நிச்சயம் மறுக்கப்போவதில்லை என்று அஷ்வினுக்கு உறுதியாகத் தோன்றியது. அவளுடைய ஒத்துழைப்புமட்டும் இருந்துவிட்டால் போதும், அரசாங்க விதிமுறைகளையெல்லாம் குப்பையில் கொட்டித் தீய்த்துவிடலாம்.

இந்தக் குழந்தை கொஞ்சம் முன்னதாகவே பிறந்துவிட்டது இன்னும் வசதி. அரசாங்கத்திலிருந்து யாரும் விசாரிக்க வரமாட்டார்கள். எப்படியாவது எட்டரை மணி நேரம் கடந்துவிட்டால், அதன்பிறகு அந்த ஊசியின் ஜம்பம் செல்லாது.

இப்படி நினைக்கும்போது, அதிலிருக்கும் விதிமீறலின் சந்தோஷம், அஷ்வினுக்கு ரகசியக் கிளர்ச்சிபோலிருந்தது. ஆனால், அதற்காகதான் அவன் அந்த ஊசியை ஏமாற்ற விரும்புகிறானா என்றால், இல்லை.

மதுமிதா கருவுற்றிருக்கிறாள் என்று தெரிந்ததுமே, அரசு முதியோர் காப்பகத்திலிருக்கும் அம்மாவைக் கூப்பிட்டுச் சொன்னான் அஷ்வின். பல மைல்களுக்கப்பாலிருந்து கேட்டாலும், அம்மாவின் குரலில் முன்பு எப்போதும் பார்த்திராத சந்தோஷம் தெரிந்தது. மதுமிதாவுக்குச் சில மருத்துவக் குறிப்புகள் சொல்லிவிட்டு, வீட்டின் மேல் அலமாரியிலிருக்கும் ஒரு மெரூன் நிற டைரியைப் பிரித்துப் பார்க்கச் சொன்னாள்.

மதுமிதா பேசிக்கொண்டிருக்கும்போதே அஷ்வின் அந்த டைரியைத் தேடிப் பிடித்துவிட்டான். அதன் முதல் பக்கத்தில் ஒரு போஷாக்கான ஆண் குழந்தை சிரித்துக்கொண்டிருந்தது. அதற்குக்கீழே, ‘அஷ்வின் ‘, என்றெழுதியிருந்தது.

அதுவரை அஷ்வின் அந்த ஃபோட்டோவைப் பார்த்ததே இல்லை. சொல்லப்போனால், புகைப்படத்திலோ, நேரிலோ அவன் ஒரு குழந்தையைப் பார்ப்பது இதுதான் முதல் தடவை. சமீப காலமாக, எந்தக் குழந்தையையும் எட்டரை மணி நேரத்துக்குமேல் குழந்தையாக இருப்பதற்கு உலக அரசாங்கம் அனுமதிப்பதில்லை என்பதால், தன்னுடைய அந்தக் குழந்தைப் படத்தை, ஒரு அதிசயக் காட்சியை எதிர்கொண்டதுபோல வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

அம்மாவுடன் பேசிவிட்டு வந்த மதுமிதாவும், அந்த புகைப்படத்தைப் பார்த்து திகைத்து நின்றுவிட்டாள், ‘நீயாடா இது ? ‘, என்று அவனைப்பார்த்து நம்பமாட்டாமல் கேட்டவள், கண்களை அகல விரித்து, அவனையும், ஃபோட்டோவையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, தன் வயிற்றில் கை வைத்து, ‘நம்ம பையனும் இதேமாதிரி அழகா இருப்பான் இல்ல ? ‘, என்றாள் பூரிப்பாக.

அஷ்வின் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல், அவளை மெல்ல அணைத்துக்கொண்டு மீண்டும் அந்தப் புகைப்படத்தை ஏக்கமாகப் பார்த்தான். பிறக்கப்போவது அழகான குழந்தையோ, அசிங்கமான குழந்தையோ, எப்படியானாலும் வெறும் எட்டரை மணி நேரம்தானே குழந்தைப் பருவம் என்ற உண்மையின் கசப்பு அவனை உறுத்தியது. அதை இப்போது நினைவுபடுத்தி, மதுமிதாவின் சந்தோஷத்தையும் கெடுக்க அவன் விரும்பவில்லை.

பிஞ்சுக் குழந்தைகள் வளர்ந்து, பெரியவர்களாவதை அணுவணுவாகப் பார்த்து ரசித்து, ஃபோட்டோவும், வீடியோவுமாகப் பிடித்துவைத்த காலமெல்லாம், சென்ற தலைமுறையோடு போயிற்று. இதற்காக அநாவசியமாக இருபது வருடங்களை வீணடிப்பதா என்று சிந்தித்த அரசாங்கம், உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை அதிவேகமாகத் தூண்டிவிட்டு, குழந்தைகளின் மன, உடல் வளர்ச்சியை விரைவாக்குகிற மருந்துகளைக் கண்டுபிடித்துவிட்டது.

இப்போதெல்லாம், பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் ஒரே ஒரு ஊசி. அடுத்த சில நிமிடங்களில், மந்திர மாயம்போல் அந்தக் குழந்தை இருபது வயது இளைஞனாகவோ, இளைஞியாகவோ வளர்ந்துவிடுகிறது. வெறுமனே உடம்பைமட்டும் பெரிதாக்குகிற அசுர வளர்ச்சியாக இல்லாமல், இத்தனை ஆண்டுகளில் சேரவேண்டிய படிப்பறிவு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும், ஒற்றை ஊசியில் நுணுக்கி அடக்கிவிட்டார்கள். பிறந்த மறுதினத்திலிருந்து, அந்தக் குழந்தை கல்லூரிக்குச் சென்று, விருப்பமுள்ள துறையில் வல்லுனராகி, ஒரு வயதுக்குள் டாக்டர் பட்டம் பெற்றுவிடுவதெல்லாம் சுலப சாத்தியம்தான்.

இன்னும் கண் திறக்காத குழந்தைகளெல்லாம், இப்படி திடுதிப்பென்று பெரியவர்களாகி நடமாடத்தொடங்கிவிடுவதில், எல்லோருக்குமே லாபம்தானே ? கொஞ்சம்கொஞ்சமாக அவர்களுக்கு உடல் வலுவேற்றி, உடம்பு சரியில்லையென்றால் கவலைப்பட்டு, பேச, எழுதப் படிக்க சொல்லிக்கொடுத்து, பரீட்சைகளில் அவர்கள் நல்ல மார்க் வாங்குவார்களா என்றெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதைவிட, இப்படி உடனடியாக அவர்களைப் பயனுள்ள குடிமகன்களாக்கிவிடுவதால், நாட்டில் மனித சக்தி அபரிமிதமாகிவிடும், இதன்மூலம் பல புதிய விஷயங்களை சாதிக்கலாம் என்றெல்லாம் கட்டுரைகள் அச்சிட்டு வெளுயாகியிருக்கின்றன.

ஆரம்ப காலத்தில் இந்த ஊசிக்கு எதிர்ப்பு இருந்ததோ என்னவோ, ஆனால், கடந்த சில பத்தாண்டுகளாக, எல்லோரும் இந்த முறையைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இதில் தாங்கள் இழப்பது எதுவுமில்லை என்ற ஞானம் எல்லோருக்கும் கவனமாக ஊட்டப்பட்டிருந்தது. ஒன்பதே கால் மாதங்கள் இரட்டை உயிராகக் குழந்தையைச் சுமக்கிற பெண்களைக்கூட, இதுபற்றிய உணர்வுபூர்வமான பற்றுதல்களையெல்லாம் தவிர்க்கவைத்து, தாய்மை என்பது, ஒரு உயிரியல் தேவைமட்டுமே என்று ஏற்றுக்கொள்ளச்செய்துவிட்டார்கள். அதன்பிறகு, இந்த அதீத வளர்ச்சியையும் இயல்பான ஒரு விஷயமாக ஒப்புக்கொண்டு, முப்பது வயதுப் பெற்றோர், இருபது வயது மகனையோ, மகளையோ நண்பர்கள்போல் ஏற்றுக்கொள்ளமுடிந்துவிட்டது.

இந்த குழந்தைப் புகைப்படத்தைப் பார்க்கும்வரை, அஷ்வினுக்கும், மதுமிதாவுக்கும்கூட, அப்படிப்பட்ட எண்ணம்தான் இருந்தது. ஆனால், இந்த அம்மாதான், வேண்டுமென்றோ, அல்லது தன்னையும் அறியாமலோ, அவனுக்குள் ஒரு குறுகுறுப்பைக் கிளப்பிவிட்டாள்.

இத்தனைக்கும் அது ஒரு மங்கலாகிச் சிதைந்துவிட்ட புகைப்படம். அதிலிருப்பது தன்னுடைய குழந்தை உருவம்தானா என்றுகூட அஷ்வினால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை, ஆனால் பளிச்சென்று அகலச் சிரித்துக்கொண்டிருந்த அந்தக் குழந்தை, அவனைக் கொஞ்ச அழைப்பதுபோல் உணர்ந்தான் அவன். வாயேன், வந்து என்னைத் தூக்கிக்கொள்ளேன், ஒரு முத்தம் கொடேன், நான்தான் நீயா ? அல்லது, நீதான் நானா ? உன் குழந்தை என்னைப்போல இருக்குமா ? அல்லது, என் குழந்தை உன்னைப்போல இருக்குமா ? உன் குழந்தைக்குப் பட்டு தேகம் உண்டா ? குட்டித் தொப்பை ? குறுகுறு நடக்கும் கால்கள் ? கூழ் அளாவும் சிறுகைகள் ? ஒன்றிரண்டு பற்களைமட்டும் லேசாக வெளுக்காட்டியபடி பொக்கை வாயில் சிரிக்குமா உன் குழந்தை ? அறியாமையின் உவப்பும், களங்கமற்ற புன்னகையும் பொங்க, அதன் ஒவ்வொரு அசைவையும், விஷமத்தையும் பார்த்து ரசிக்கிற பாக்கியம் உங்களுக்கு உண்டா ?

எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல் அவனுக்குள் ஆற்றாமையாகப் பொங்கிய இந்த நினைப்பெல்லாம் மதுமிதாவுக்கும் இருந்ததா என்று அஷ்வினுக்குத் தெரியவில்லை. ஆனால், இந்தப் புகைப்படத்தைப் பார்த்தபிறகுதான் தங்கள் குழந்தையைத் தாங்கியிருப்பதன் சந்தோஷத்தை முழுமையாக உணர்வதாக அவள் அவனை முத்தமிட்டுச் சொன்னாள்.

அப்போதுதான் அஷ்வின் அந்த முடிவுக்கு வந்திருந்தான் – என் குழந்தைக்கு இந்த ஊசி வேண்டாம், அசுரத்தனமான வளர்ச்சியும் வேண்டாம் – வெறும் எட்டரை மணி நேரம், அதுவரை இந்தக் குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை அரசாங்கத்துக்குச் சொல்லாமல் மறைத்துவிட்டால் போதும். அதன்பிறகு அவர்களுடைய ஊசிகளால் எந்தப் பயனும் இல்லை. மணிக்கணக்காகக் காற்றை உதைத்து சண்டை போட்டு, மழலை பேசி, தரையிலிருப்பதையெல்லாம் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, மென் தேகத்துடன் தட்டுத் தடுமாறி நடந்து, கீழே விழுந்து அடிபட்டு, ஆனா, ஆவன்னா எழுதக் கற்று, இயற்கையான குழந்தைப் பருவத்தை அனுபவித்து வளரும் எங்கள் குழந்தை.

மெலிதான கொட்டாவியை அடக்கியபடி வாட்சைப் பார்த்தான் அஷ்வின். மணி ஒன்றரை. குழந்தை பிறந்து நாலு மணி நேரமாவது ஆகியிருக்கும். இப்படியே இன்னும் பாதி நேரத்தை ஓட்டியாகவேண்டும்.

செல்பேசியின்வழியே இணையத்தில் நுழைந்து, விடுப்புக் கோரி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினான் அஷ்வின். அப்போது, அவனருகே ஸ்தம்பித்து நின்றிருந்த ரோபோ, சட்டென்று உயிர் பெற்று, ‘அரசாங்கக் கார் வருகிறது ‘, என்றது.

அந்தக் குரலின் திடார்மையும், அதிலிருந்த எதிர்பாராத செய்தியும், அஷ்வினை திடுக்கிடவைத்தது. ‘அதெல்லாம் ஒன்றுமில்லை ‘, என்றான் சுதாரித்து, ‘நான் இன்னும் அவர்களுக்குத் தகவல் அனுப்பவில்லை ‘

‘அதனால் என்ன ? நான் அனுப்பிவிட்டேன் ‘, என்றது ரோபோ, ‘அவர்கள் வந்துவிட்டார்கள், அதோ, சைரன் சத்தம் கேட்கிறது ‘

‘ஐயோ ‘, என்று அனிச்சையாக அலறிய அஷ்வின், அதே வேகத்தில் எழுந்து, அந்த ரோபோவின் கழுத்தைக் கொத்தித் தூக்கினான், ‘துரோகி யந்திரமே, என் அனுமதியில்லாமல் நீ எப்படி அரசாங்கத்துக்குத் தகவல் அனுப்பலாம் ? ‘, என்று கத்தியபடி, அதைக் கீழே விசிறியடித்தபோது, அதன் பிளாஸ்டிக் மேல் பாகத்தில் ஆழமான விரிசல் கண்டது.

பாம்புபோல் தரையில் நெளுந்து புரண்ட ரோபோ, ஏதோ முனகலாகப் பேசினாற்போலிருந்தது. பிறகு, அதனிடமிருந்து எந்தச் சலனமும் இல்லை.

இப்போது அஷ்வினுக்கு அந்த சப்தம் தெளுவாகக் கேட்டது. அரசாங்க வாகனம்தான், பக்கத்தில் வந்துவிட்டார்கள்.

அடுத்து என்ன செய்வது என்று புரியாமல், கட்டிலின் அருகே ஓடினான் அஷ்வின். குழந்தையைத் தூக்கிக்கொண்டு எங்காவது ஓடித் தப்பிவிடலாமா ? துரத்திக்கொண்டு வருவார்களா ? எண்பது திசைகளில் கண்ணுள்ள இந்த அரசாங்கத்தை மீறி எங்குதான் சென்றுவிடமுடியும் ? நினைக்க நினைக்க, கண்களில் நீர் பெருகுவதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

சைரன் ஒலி ரொம்பப் பக்கத்தில் வந்திருந்தபோது, அஷ்வின் ஒரு திடமான முடிவுக்கு வந்திருந்தான். தரையில் மண்டியிட்டு அமர்ந்து, மதுமிதாவை உலுக்கி எழுப்பினான்.

அவள் கண்களைச் சிரமமாகத் திறந்தபோது, அவளுடைய கன்னத்தில் அஷ்வினின் சுவாசச் சூடு, ‘மது, சீக்கிரம் எழுந்திருடா, ப்ளீஸ் ! ‘

மதுமிதாவுக்குத் தான் எந்த உலகத்தில் இருக்கிறோம் என்றே புரியவில்லை. பல யுகங்களுக்குமுன் எங்கோ ஒரு வனாந்திரத்தினிடையே தனக்குப் பிரசவ வலி கண்டதுபோல் ஒரு நினைவு, ஆனால் குழந்தை பிறந்ததா என்று அவளால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை.

அவளுடைய தலையைப் பற்றித் தூக்கி, மடியில் வைத்துக்கொண்டான் அஷ்வின். கதறலோடு கலந்து வார்த்தைகள் வெளுவந்தன, ‘மது, இதுதான் ஒரே சான்ஸ், நம்ம குழந்தையை நல்லா ஒரு தடவை பார்த்துக்கோ, ப்ளீஸ் ! ‘

அவன் சொல்வது மதுமிதாவுக்குச் சரியாகப் புரியாவிட்டாலும், அஷ்வின் வலுக்கட்டாயமாக அவளுடைய முகத்தைக் குழந்தையின்பக்கம் திருப்பியிருந்ததால், மதுமிதாவால் தங்களின் குழந்தையை மங்கலாகப் பார்க்கமுடிந்தது. அன்றைக்கு ஃபோட்டோவில் பார்த்ததுபோலவே, கொள்ளை அழகாக இருந்தது குழந்தை.

அவர்கள் இருவரின் விழிகளும் கண்ணீரில் நிரம்பியபோது, அறைக் கதவு பலமாக தட்டப்பட்டது.

***

Series Navigation

என். சொக்கன்

என். சொக்கன்