வன்றொடர் குற்றியலுகரம்

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

பத்ரிநாத்


ஏற்கனவே எத்தனையோ முறைகள் சொல்லப்பட்டிருந்தாலும், குடும்பம் என்ற ஒரு நிறுவனம் நிலவும் வரை, அது சார்ந்த பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கிறது.

விசயம் இதுதான். அந்தத் தம்பதியினருக்குள் பலமான கருத்து வேறுபாடுகள்.

அவர்கள் பெயர்.. பெயர் கிடக்கட்டும்.. அதுவா பிரச்சனை.. வேண்டுமானாலும் ராமன் சீதை என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அல்லது உங்களுக்குப் பிடித்த மத வழக்கில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்..

அது சரி.. என்ன பெரிய கருத்து வேறுபாடுகள் – உலகப் பொருளாதார நெருக்கடிக்குத் என்ன தீர்வு என்றா.. அல்லது இந்தியத் தேர்தல் நடைமுறைகளில் மாற்றம் தேவை என்றா என்று கிண்டலடிக்க வேண்டாம்.. வழக்கமாக அனைத்துத் தம்பதியினருக்கு வருவதுதான் என்றாலும் அவர்களுக்குள் நிலவிய அந்தக் கருத்து வேறுபாடுகள் பல ஆண்டுகளாக அவர்கள் பிரிவை நோக்கி நெட்டித் தள்ளிவிட்டது.

எப்படி எப்போது ஆரம்பத்தது என்பதைக் கண்டுபிடித்து பெரிய பயன் இல்லை. அது தேவையும் இல்லை. பிரதானமாக அவர்கள் இருவருக்கும், ஈகோ பிரச்சனை . இருவரும் பணியில் இருக்கிறார்கள். மனைவியைக் காட்டிலும் கணவனின் வருவாயும் பதவியும் குறைவுதான். அதற்கு யார் என்ன செய்ய இயலும்.. மனைவி கணவனைக் காட்டிலும் சற்று நுண்ணறிவு அதிகமாக இருந்ததால், அவளுக்கு அந்த உயர் பதவி கிடைத்துவிட்டது. அதன் பொருட்டே அவர்கள் இருவருக்கும் அதிகமாக இடைவெளி வந்திருக்கலாம். வளர்ந்த ஒரு பெண் குழந்தை . இந்நிலையிலும் இருவரும் அதன் பொருட்டு விட்டுத் தர சம்மதிக்கவில்லை.

விளம்பரக் காற்றால் ஊதிப் பெருக்கப் பட்ட நுகர்வு பூதம் ஆட்டிப் படைக்கும் ஒரு சமூகத்தில் அதன் பக்க விளைவாகத் தோன்றும் நெருக்கடிகள் பற்றி சில பத்திரிகைகளில் படித்ததை நினைவு படுத்திக் கொண்டேன்.

இப்படி வியாக்யானம் செய்து அவர்களை அறிவுறத்த முயன்றால், ஏளனமே மிஞ்சியது. அதைக் கேட்கக்கூடிய நிலையில் அவர்கள் இருவரும் இல்லை. அவர்கள் திருமணத்திற்குப் பல வருடங்களுக்கு முன் சாட்சிக் கையெழுத்துப் போட சென்றிருக்கிறேன். அதனாலோ அல்லது அவர்களைக் காட்டிலும் சற்று வயது முதிர்ந்தவன் நான் என்பதாலோ அவர்களுக்கு என் மேல் மதிப்பு இருந்தது. என்றாவது அவர்கள் வீட்டிற்கு நான் செல்லும் போதெல்லாம், மரியாதையுடன் உபசரிப்பார்கள்.

இந்த நாள் வரை அவர்களுக்குள் எந்தப் பிரச்சனை இல்லை என்று நான் நினைத்தது, ஒரு மூன்றாவது மனிதனின் மேலோட்டமான பார்வைதான் .

மனைவியை விட்டுப் பிரிந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது என்று அன்று அவன் என்னிடம் சொன்ன போது, அதிசயத்துப் போனேன். அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் அவன் சொன்ன அந்தத் தகவல்தான் பெரும் குழப்பத்தை எனக்குத் தந்தது.

‘ ‘டைவர்சுக்கு அப்ளை பண்ணிட்டேன்.. நா வேற கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்.. ‘ ‘, என்றான்.

‘ ‘என்னப்பா இது.. எப்படிச் சாத்தியம்.. இது சரியான முடிவு இல்ல.. உன்னுடைய மகளின் நிலைமையை நினைச்சுப் பாரு.. ‘ ‘, படபடப்பாக இருந்ததது.

‘ ‘ச்.. அதப் பத்தி அவளே கவலை படல.. நா மட்டும் கவலப் படணுமா.. இன்னொரு மூணு வருசம் எம் பொண்ணு காத்திருக்கணும்.. பதினெட்டு ஆகறதுக்கு…அப்பறம் கோர்ட்டு மூலம் அவ யாருகிட்ட இருக்கணும்னு விருப்பமோ அங்க இருக்கட்டும்.. அது அவ இஸ்டம்.. ‘ ‘,

நாற்பது வயதிற்கு பின்பு விவாகரத்து என்பது தேவையற்ற ஒன்று என்பதுதான் என் நிலைபாடாக இருந்தது-ஆனால் அவனோ உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. இப்போது இவையெல்லாம் சர்வ சகஜமானது என்கிறான். அயல் நாட்டில் சகஜம்தான். இன்னமும் ரெண்டான் கெட்டான் நிலையில் இருக்கும் நம்நாட்டிலும் சகஜமா என்பதுதான் என்னுடைய கேள்வியே. ஆமாம் சகஜம்தான் என்கிறான். அதுதான் தற்போதைய உலக வழக்கு என்றும் அடித்துக் கூறினான். தங்கம் வைத்திருந்த நாவிதன் கதையை அவனிடம் சொன்னேன். அதற்கும் மசிய வில்லை.

அவன் மனைவியைச் சந்திப்பதே சிறந்தது என்று முடிவெடுத்தேன்.

ஆனால் அவளோ, ‘ ‘ சார்.. நீங்க வெல் விஷர்ன்னுதான் உங்க கிட்டப் பேசறேன்.. எனக்கு விட்டுப் போச்சு.. அவருடைய பாஸிச நடவடிக்கைகள் பார்த்தாலே எரிச்சலா இருக்கு.. என்னோட சுபாவமே இந்த மாதிரி ஷாவனிசத்த ஏற்காது.. நா ரொம்ப சென்சிடிவ்தான் .. இருந்தாலும் திருமணத்துக்குப் பின்னே என் சுபாவத்தை முடிஞ்ச அளவு மாத்திக்கிட்டேன்ி.. பொறுமையா இருந்தேன்.. ஆனா அதை இந்த ஆளு தனக்குச் சாதகமாக பயன் படுத்தறததான் ஏற்க முடியல.. அத என்னோட பலவீனமாக நெனைக்கிறாரு.. விடுங்க சார்.. எத்தனையோ பேசியாச்சு.. அவர் திருந்தறதா தெரியல.. நான் என் மனசை கல்லாக்கிட்டேன்.. அவர்தான் விவாகரத்த பிரபோஸ் பண்ணினாரு.. இப்போ அவர்தான் கோர்ட் மூலமா நோட்டாஸ் கொடுத்துருக்கிறாரு.. நான் அதுக்கு சம்மதம் கொடுக்கப் போறேன்.. ‘ ‘,

அவளிடம் பேசப் பேச இவன் மீதுதான் அதிகத் தவறுகள் இருப்பதாகப் பட்டது.. அதை நான் அவனிடம் சொன்னேன்.

‘ ‘அட.. நீங்க வேற.. பல விசயங்கள நான் சொல்ல விரும்பல.. நானே என் வாயால் சொல்ல வேண்டாம்னு பாத்தேன்.. அவளுக்கு வேற ஒரு தொடர்பு இருக்கு.. ‘ ‘, என்றான் இறுக்கமான முகத்துடன்.

‘ ‘சேச்சே.. ‘ ‘.

‘ ‘இல்லை.. உண்மை.. இதுக்கு மேலே என்னக் கேக்காதிங்க.. குடும்ப நண்பர் என்ற முறையில ஒங்களிடம் பகிர்ந்து கிட்டேன்.. இந்த விசயத்தை ரகசியமா வச்சுகிடுங்க.. வெளியே தெரிஞ்சா எனக்குத்தான் அசிங்கம்.. எப்படியாவது தொலையட்டும்னு விட்டுட்டேன்.. எங்கப்பாவும் சொல்லிட்டாரு.. எனக்கு வேறு திருமணம் செஞ்சு வைக்கிறதா சொல்லிட்டாரு.. நானும் சம்மதிச்சுட்டேன்.. ஏதோ இத்தனையாண்டு கெட்ட கனவா என் மண வாழ்க்கையை மறக்க முடிவு பண்ணிட்டேன்.. ‘ ‘, என்றான்..

சில நாட்களின் எனக்கு வந்த தகவலே என்னை மேலும் குழப்பியது…. அவன் கூறியது உண்மையில்லை…. மனிதர்கள் தங்களுக்குப் பிடிக்காத விசயங்களுக்காவும், தன் இலக்கை அடைவதறகாக எதை வேண்டுமானாலும் நியாயப் படுத்துவார்கள், சமாதானப்படுத்திக் கொள்வார்கள் என்பதற்குச் சரியான வகைமாதிரி இவன்தான் என்று தெரிந்து கொண்டேன். தன் அலுவலகத்தில் சாதாரணமாக ஒருவரிடம் பழகுகிறாள். அது முறையற்ற உறவு என்பதெல்லாம் விகாரமானது. அதுவும் இல்லாமல் நம்நாட்டில் கணவனை விட்டுப் பிரிந்திருப்பவளோ, கணவனை இழந்தவளோ எந்த ஆணுடனும் பழகினாலும், அதைச் சகிக்காத சூழல்தான் இன்னமும் இருந்து வருகிறது..

நிஜத்தில் இவனுக்குத்தான் ஏதோ தேவை அதனால் வம்படியாக எதையோ செய்ய நினைத்திருக்கிறான். அவள் இந்தக் காலத்தவள் என்பதால் அதற்குண்டான சிந்தனையோட்டத்துடன் இருந்திருக்கிறாள் என்பது புரிந்தது. ஒரு வேளை இவர்கள் காதல் திருமணத்தை அப்போதே ஏற்காத பெற்றோர்கள் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எரிகிற தீயில் எண்ணெய் வார்க்க முற்படலாம்.. அவனைச் சந்தித்து இப்படித்தான் பேசினேன்.

‘ ‘நல்ல யோசன பண்ணிட்டேன்.. நீயும் நான் சொல்றத பரிசீலனைப் பண்ணிப்பாரு.. நீயோ அவளுக்கு வேற ஒரு தொடர்பு இருக்குன்னு சொல்ற.. நிச்சயமா நீ உன் மனைவிய விவாகரத்து பண்ணினா அவள் அவனைத் திருமணம் செய்து கொள்ளக் கூடும்.. நீயும் வேற ஒரு பொண்ண தேடிக்கலாம்.. இதனால் எந்தப் பிரச்சனையும் இல்லைதான்.. இந்த நவீன காலத்தில யாருக்கும் யாரும் கட்டுப்பட வேண்டியதில்லதான்.. அவரவர்களக்கு படிப்பு உத்தியோகம்னு இருக்கு… சுதந்திரமா வாழலாம்தான்.. ஆனா ஒன் மகளுக்கு நிச்சயமா கஷ்டமாத்தான் இருக்கும்.. அதுவும் சில வருடங்கள் போனால் அந்தப் பிரச்சனையும் இருக்கப் போறதில்ல.. ஆனா.. புதுசா வரப்போறானே ஒரு ஆண்.. அவன் உன் மனைவிய புதுப் பொண்டாட்டின்னு பாப்பான்.. உன் மகளை மகளாகவே பார்ப்பானா.. அப்படிப் பாக்கவேண்டிய அவசியமில்லையே.. அந்தப் பெண்ணை, பதினாலு வயசுப் பெண்ணை மகளா பாக்காம வேற விதத்தில் பாத்தா, அதுக்கு ஏதாவது பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கா.. என்ன உத்தரவாதம் தர முடியும்.. ‘ ‘,

அவன் சற்று அதிர்ந்து, ‘ ‘ அதெல்லாம் ஒண்ணும் கிடையாது.. நா எதுக்கு இருக்கேன்.. வெட்டிப் பலி போட்ருவேன்..அதெல்லாம் பிரச்சனை இல்லை.. ‘ ‘, என்று சொன்னான்.. நான் எத்தனையோ மாறி மாறி இந்த விசயத்தைப் பற்றிக் கூறி அவன் மனதை மாற்ற முயன்றும் அது வீண் வேலையாக இருக்கும் என்று தோன்றியதால், இதற்கு மேல் தலையிட வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்தேன். இனி நான் பேசி எந்தப் பயனும் இல்லை என்று சில தினங்களாக அவர்கள் விசயத்தை என் மண்டையில் போட்டுக் கொள்வதை தவிர்த்தே விட்டேன்.. அதுவே தன் போக்கில் போய் எங்கு நிற்குமோ அங்கு நிற்கட்டும்.

ஆனால் அடுத்த சில வாரங்களில் திடாரென்று அந்தத் தம்பதியினர் ஒன்று சேர்ந்து விட்டத் தகவல் எனக்குக் கிடைத்தது. இவன்தான் அவளிடம் போய் ஏதோ பேசியிருக்கிறான்.. வீண் தகராறுகள் வேண்டாம் என்றானாம்.. வேறு வார்த்தைகளில் மன்னிப்பை நாசூக்காக கேட்டிருக்கிறான் என்ற தகவல் கிடைத்தது.. ஒரு வேளை நான் அன்று அவனிடம் நெத்தியடியாக சொன்ன அதிரடி வார்த்தைகள் அவனைப் பாதித்துவிட்டிருக்கும் என்றே எனக்கு உறுதியாய்ப் பட்டது. எப்படியோ.. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கேற்பட்ட அந்த மகிழ்ச்சி அவர்கள் ஒன்று சேர்ந்ததற்கு மட்டும் இல்லை. மாறாக என் பேச்சுத் திறமைக்கும் சேர்த்துத்தான் என்று நினைத்து எனக்கு நானே நன்றி சொல்லிக் கொள்கிறேன்..

prabhabadri@yahoo.com

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்