செவ்வாயின் மீது வீழ்வது

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

ஜியோஃப்ரி ஏ லாண்டிஸ் (அறிவியல் சிறுகதை தமிழில் : துக்காராம் கோபால்ராவ்)


(அனலாக் அறிவியல் புனைகதை இதழிலிருந்து : Falling Onto Mars by Geoffrey A. Landis )

நாம் விரும்புவதுபோல

வரலாறு இருக்க வேண்டியதில்லை…

செவ்வாய் கிரகத்தின் மக்களிடம் எந்தவித இலக்கியமும் இல்லை. செவ்வாயில் குடியேறுவதன் பிரச்னைகள் தரும் கொடுமைக்கு நடுவே, பூமியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு எழுதுவதற்கு நேரமில்லை. ஆகவே அவர்களிடம் கதைகளே இல்லை. குழந்தைகளிடம் சொன்ன கதைகளோ அவர்கள் புரிந்துகொள்ள இயலாதவை. இந்தக் கதைகளும் இந்தக் குழந்தைகள் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்பவை. இவைகளே செவ்வாயினரின் செவிவழிக்கதைகள்.

இந்தக் கதைகளில் ஒன்று கூட காதல் கதை அல்ல.

அந்தக் காலத்தில், மக்கள் வானத்திலிருந்து விழுந்தார்கள். காவி வண்ண வானத்தின் வழியே பறக்கும் கலங்களிலிருந்து விழுந்த மெல்லிய அலுமினிய உருளைகளுக்குள் திணிக்கப்பட்டிருந்த மானுடம் பாதி இறந்தும், மீதப்பாதி அரைகுறை உயிரோடும் இருந்தன. விழுந்த வேகத்திலும், மெல்லிய அலுமினியத்தாலும் விழுந்த கணத்திலேயே வெடித்து உடைந்தன இந்த உருளைகள். அவற்றிலிருந்து உடல்களும், விலை மதிக்கவியலா காற்றும் ஏறத்தாழ காற்றற்ற செவ்வாயில் சிதறின. இருந்தும் அவை விழுந்தன. அலை அலையாய், மனிதத்தின் கழிவாக அக்கறையின்றி விண்வெளியில் வீசப்பட்ட கலங்களாக செவ்வாயின் குழிகள் நிறைந்த பாலைவனங்களில் விழுந்தன.

21ஆம் நூற்றாண்டின் மத்தியில் பூமியின் அரசாங்கங்கள் மரண தண்டனையை ஒழித்திருந்தன. ஆனால், கொலையையோ கற்பழிப்பையோ அல்லது பயங்கரவாதத்தையோ ஒழித்திருக்க முடியவில்லை. சில குற்றவாளிகள் எந்த சீரமைப்புக்கும் அப்பாற்பட்ட வன்மம் கொண்டவர்களாக அறியப்பட்டிருந்தார்கள். சமூகத்துக்கு திருப்பி அனுப்ப முடியாத அளவுக்கு வன்முறையும் தந்திரமும் கொண்டவர்களாக உடைந்தவர்களாக உடைக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். பூமியில் இருக்கும் அரசாங்கங்களுக்கு இன்னொரு உலகத்துக்கு இவர்களை தபாலாக அனுப்பி விடுவதும், அங்கு இவர்களாக வாழ முடிந்தால் வாழ்ந்து பார்த்துக்கொள்ளட்டும் என்பதும் துல்லியமான தீர்வாக இருந்தது. அங்கு வாழ முடியவில்லை என்றால் அது அவர்களின் குற்றமே, அதற்கான பழி பூமியில் இருக்கும் எந்த ஒரு நீதிபதியையும் சார்ந்திராது.

யார் விலைமலிவாக அலுமினியக்கப்பல்களும் உருளைகளும் பண்ணித்தர ஒப்புக்கொண்டார்களோ அவர்களுக்கே எல்லா ஒப்பந்தங்களும் சென்றன. சிறைக்கைதிகளுக்கு தேவையான உணவும், காற்றும் தண்ணீரும் இல்லையென்றாலோ, கொடுக்கப்பட்ட உயிர்வாழத்தேவையான பொருட்கள் தரம் குறைந்தவையாக இருந்தாலோ என்ன ? யார் சொல்லப்போகிறார்கள் ? பயணமோ ஒருவழிப்பாதை. விண்கலங்கள் கூட திரும்பி பூமிக்கு வரபோவதில்லை. பூமியிலிருந்து விண்கலம் கிளம்புவதற்கு தாக்குப்பிடித்தால் போதுமானது. ஏன் ஒரு சில விண்கலங்கள் பூமியிலிருந்து கிளம்பி கொஞ்ச நேரத்திலேயே உடைந்து சிதறிப்போனாலும் வருத்தப்பட யாரும் இல்லை. எப்படியாகினும், சிறைக்கைதிகள் பூமிக்குத் திரும்பி வரபோவதில்லை.

எனது தாத்தாவின் தாத்தாவின் தாத்தா மோகன், ஐந்தாவது அலையில் செவ்வாய்க்கு வந்ததாகச் சொன்னார்கள். எங்கள் குடும்ப செவிவழிக்கதைப்படி மோகன் ஒரு அரசியல் கைதி. உதவி மறுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக போராடிய காரணத்தால் சிறைக்கு அனுப்பப்பட்டவர்.

பூமியின் அரசாங்கங்கள் அரசியல் கைதிகளை செவ்வாய்க்கு அனுப்புவதில்லை என்றுதான் சொல்லி வந்தன. திருத்த முடியாத, மோசமான, தாங்கள் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்ளக்கூட முடியாத குற்றவாளிகளே திரும்பவும் சமூகத்துக்குள் வருவதை அனுமதிக்க முடியாதபோதுதான் அவர்கள் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டதாக கூறின. ஆனால், பூமியின் அரசாங்கங்களோ பொய் சொல்லுவதில் மிகவும் வல்லமை படைத்தவை. கொலைகாரர்களை செவ்வாய்க்கு அனுப்பினார்கள் என்பது உண்மைதான். ஆனால், ஆபத்தான கருத்துக்களை பரப்பி வந்த அரசியல்கைதிகளையும் இவ்வாறு செவ்வாய்க்கு அனுப்பி வந்தார்கள் என்பதும் உண்மைதான்.

இருப்பினும், என் குடும்ப செவிவழிக்கதையும் பொய் சொல்கிறது. அப்பாவியான மக்களை இவ்வாறு நாடுகடத்தல் போல கிரகக்கடத்தல் செய்துவந்தது உண்மைதான் என்றாலும், எனது தாத்தாவின் தாத்தாவின் தாத்தா அவர்களில் ஒருவர் அல்லர். காலம் மழுங்கடித்துவிடுகிறது. யாருக்கும் உண்மையான தகவல்கள் தெரியாது. ஆனால், நிச்சயமாக அவர் எப்படியாவது புகுந்து புறப்பட்ட்டு தப்பித்து வாழத் தெரிந்தவர். பழைய கயிறு போன்ற உறுதியும், பாம்பு போன்ற தந்திரமும், ஒல்லியான உருவமும் கொண்ட எலி போன்ற மனிதர்.

என்னுடைய பாட்டியின் பாட்டியின் பாட்டி சைலஜா, செவ்வாயின் ஆரம்பக்குடிகளில் ஒருவர். யாரும் செவ்வாயில் குற்றவாளிகளை தூக்கி எறியும் நினைப்புக்கு வருவதற்கு முன்னர் இருந்தே செவ்வாயில் இருந்து வந்த புளிமாங்கனி என்ற அகில உலக ஆராய்ச்சி நிலையத்தில் பணி புரிந்து வந்தவர்களில் ஒருவர். இந்த ஆராய்ச்சி நிலையம் மூடப்படுவதாகவும், இங்கு பணிபுரியும் அனைவரும் திரும்பி பூமிக்கு வரவேண்டும் என்ற கட்டளை வந்தபோது சைலஜா இங்கே செவ்வாயிலேயே தங்க முடிவு செய்துவிட்டார். தனக்கு அறிவியல் மிகவும் முக்கியமானது என்று அவர் பூமியில் இருக்கும் அரசியல்வாதிகளிடமும் மக்களிடமும் கூறிவிட்டார். செவ்வாயின் கடந்தகாலத்தில் எவ்வாறு பருவகாலங்கள் இருந்திருக்கின்றன என்ற ஆராய்ச்சியை அவர் தொடர்ந்து செய்துவந்தார். எவ்வாறு செவ்வாய் காய்ந்து போய் குளிர்ந்தது என்று அறிய முற்பட்டுவந்தார். இப்படிப்பட்ட ஒரு ஆராய்ச்சி பூமிக்கும் உதவும் என்று அவர் கருதினார்.

புளிமாங்கனி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி விட்ட 17 மனிதர்களில் ஒருவராக இருந்தமையால் அவர் ஓரளவுக்கு புகழ்பெற்றவராக இருந்தார். இந்த புகழ் அவருக்கு பல விதங்களில் உதவியது. வானத்திலிருந்து மக்கள் விழ ஆரம்பித்ததும், புளிமாங்கனியிலிருந்து வெளி வந்த ரேடியோ செய்திகள் பூமியின் அரசாங்கங்களை கட்டாயப்படுத்தின. அவர்களது வாக்குறுதிகளை அவைகளுக்கு ஞாபகப்படுத்தின. செவ்வாய்க்கு அனுப்பப்படுவது ஒரு மரண தண்டனை அல்ல என்று அந்த அரசாங்கங்களுக்கு நினைவுறுத்தின. செவ்வாய்க்கு வந்த அகதிகள் கூறியிருந்தால் அவை பொய்கள் என்றும் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் யாரேனும் சொல்லியிருக்கலாம். ஆனால் புளிமாங்கனியிலிருந்து வந்த ரேடியோ செய்திகளை அவ்வாறு ஒதுக்கமுடியவில்லை.

அடுத்த சில வருடங்களில் பூமியிலிருந்து உதவிப்பொருட்கள் தனியார் உதவி நிறுவனங்களிலிருந்து வந்தன. ராமகிருஷ்ணா மிஷன், அம்னஸ்டி இண்டர்நேஷனல் போன்றவை அனுப்பின. ஆனால் அவை போதுமானவையாக இல்லை.

முதலிரண்டு அலைகளில் வந்த அகதிகளை பார்த்தபின்னர், புளிமாங்கனியில் இருந்த அறிவியலாளர்கள் இனிமேல் அறிவியல் ஆராய்ச்சி பண்ண முடியாது என்பதைப் புரிந்து கொண்டுவிட்டார்கள். கைதிகளை தங்களால் முடிந்த அளவு வரவேற்றார்கள். காலத்துக்கு எதிரான பந்தயத்தில் குடியிருப்புக்களை கட்ட உதவினார்கள். தாவரங்கள் காற்றை தூய்மைப்படுத்தி இவர்கள் உயிர்வாழ உதவும் என்று சில தாவரங்களை பயிரிட ஆரம்பித்தார்கள்.

செவ்வாய் ஒரு பாலைவனம். விண்வெளியில் ஓடும் பாறாங்கல். சாவுக்கு அனுப்புவதற்கு பதிலாக செவ்வாய்க்கு அனுப்புவதில் எந்த விதக்கருணையும் இல்லை. வெகு விரைவில் கற்றுக்கொள்ளவேண்டும் இல்லையேல் சாகவேண்டும். பெரும்பாலானவர்கள் செத்தார்கள். சிலர் கற்றுக்கொண்டார்கள். ஆழத்தில் பொதிந்திருக்கும் நிலத்தடி நீரை மின்சாரம் மூலம் பிரித்து ஆக்ஸிஜன் எடுக்க கற்றுக்கொண்டார்கள். எரி ஆலைகளை உருவாக்கக்கற்றுக்கொண்டார்கள். இவர்கள் கற்றுக்கொள்ளும் வேகத்தை விட அதிக வேகத்தில் வானத்திலிருந்து கையறு நிலை கொண்ட செத்துக்கொண்டிருக்கும் சிறைக்கைதிகள் விழுந்தார்கள். கோபமும் வன்முறையும் கொண்டவர்கள் எதையும் இனிமேல் இழக்க இல்லாதவர்கள் மேலும் மேலும் விழுந்தார்கள்.

ஆறாவது அலையே புளிமாங்கனியை உடைத்து சுக்கு நூறாக எறிந்தது. அது முட்டாள்த்தனமான தற்கொலைத்தனமான விஷயம்தான். ஆனால் கைதிகள் செத்துக்கொண்டிருந்தார்கள், கோபம் கொண்டிருந்தார்கள். ஒரு தலைமுறைக்குப் பின்னர் தங்களை அரசியல் கைதிகள் என்று அழைத்துக்கொண்டார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் வெறும் ரவுடிகளும், திருடர்களும் கொலைகாரர்களுமே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆறாவது அலையில் ஒரு மனிதன் வந்தான். அவன் தன்னை டிங்கோ என்று அழைத்துக்கொண்டான். சென்னையில் ஒரு அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸில் தனக்கு மாமூல் கொடுக்காதற்காக ஒரு நூறு மனிதர்களை மெஷின் கன் மூலம் கொன்றிருந்தான். விண்கலத்தில் வரும்போது வெறும் கைகளாலேயே ஆறு சிறைக்கைதிகளை கொன்றான். தான் தான் தலைவன் என்று எல்லோருக்கும் நிரூபிக்கத்தான்.

ஆம் தலைவனாகத்தான் இருந்தான். பயத்தாலோ, மரியாதையாலோ கோபத்தாலோ, விண்கலத்தில் இருந்த கைதிகள் அவன் சொன்னபடி நடந்தார்கள். அவர்கள் செவ்வாயில் விழுந்தபோது, அவர்களை அணியாகத்திரட்டி, உதைத்து, மிரட்டி, பேசி ஒரு கோபம் கொண்ட ராணுவமாக உருவாக்கினான். செவ்வாயில் நாம் கைகழுவப்பட்டு விட்டதற்குக் காரணம் நாம் மெல்ல மெல்ல இறக்கவேண்டும் என்பதற்காகத்தான் என்று சொன்னான். இங்கே உயிர்வாழ வேண்டுமென்றால், பூமியின் வக்கிரத்துக்கு எதிர் வக்கிரம் நம்மிடம் இருக்க வேண்டும் என்று சொன்னான். 500 கிலோமீட்டர் பாலைவனத்தின் வெற்று மணலில் நடக்க வைத்து அவர்களை புளிமாங்கனிக்கு கொண்டுவந்தான்.

அந்த ஆராய்ச்சி நிலையம் அங்கிருப்பவர்கள் தாங்கள் தாக்கப்படுகிறோம் என்று உணரும்முன்னரே கைப்பற்றப்பட்டுவிட்டது. அந்த ஆராய்ச்சி நிலையத்தை விட்டு ஓடாத அறிவியலாளர்கள் அந்த ஆராய்ச்சி நிலையத்தில் இருந்த கருவிகளாலேயே அடிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரையும் பிணைக்கைதிகளாக பிடித்துக்கொண்டு பூமிக்கு ரேடியோ மூலம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்று கோரினார்கள். எந்தக்கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. பதில் கூட இல்லை. கோபம் கொண்ட இவர்கள் எல்லோரையும் பாதுகாப்புக்கவசம் இன்றி செவ்வாயின் நிர்வாண நிலத்தில் தூக்கி எறிந்தார்கள். அந்த ஆராய்ச்சி நிலையத்தில் இருந்த பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டார்கள்.

நான்காவது ஐந்தாவது அலையில் வந்தவர்கள் ஒன்றிணைந்து கொண்டார்கள். ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க முடியாமல் பாதுகாப்புக் கவசங்களுக்குள்ளாக இருந்தாலும், குற்றவாளிகளாக வந்தவர்கள் காலப்போக்கில், இங்கு உயிர்வாழ ஒரே வழி ஒத்துழைப்பதுதான் என்று தெரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களது சிறிய ரேடியோக்கள் புளிமாங்கனி உடைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று அவர்களுக்கு தெரிவித்தன. பாலைவனத்தில் ஊர்ந்து சென்று வெளியே காத்திருந்தார்கள். ஆராய்ச்சி நிலையத்தை அழித்துக்கொண்டிருந்தவர்கள் வெளியே வரக்காத்திருந்தார்கள். ஆராய்ச்சி நிலையத்தை அழித்தவர்கள் வெளியே வரும்போது ஐந்தாம் அலையினர் எதிர்பார்க்காத நேரத்தில் இவர்களைத்தாக்கி ஒருவர் விடாமல் கொன்று தள்ளினார்கள். டிங்கோ பாலைவனத்துக்குள் தப்பி ஓடினான். என்னுடைய தாத்தாவின் தாத்தாவின் தாத்தா மோகன் இவனைத் துரத்திக்கொண்டு பாலைவனத்துக்குள் ஒடினார். அங்கு அவனைப் பார்த்து, பின் தொடர்ந்து, கொன்றார்.

பிறகு அவர்கள் புளிமாங்கனி ஆராய்ச்சி நிலையத்துக்குச் சென்றார்கள். அங்கு ஏதாவது காப்பாற்ற முடியுமா என்று பார்க்க முனைந்தார்கள்.

என்னுடைய தாத்தாவின் தாத்தாவின் தாத்தா, சைலஜாவை இடிபாடுகளுக்கு இடையே கண்டுபிடித்தார். அவள் கண்கள் மீது ஒட்டப்பட்டிருந்த பசைப்பட்டையை பிய்த்து எடுத்தார். சைலஜா திடாரென்று வெளிச்சத்தில் ஒன்றும் புரியாமல் தன்னை கற்பழித்து, ஆராய்ச்சி நிலையத்தை அழித்த கும்பலின் ஆள்தான் இதுவும் என்று நினைத்தாள். காற்று வெளியே போய்விடாமல் இருக்க தீவிரமாக அவரது கும்பல் வேலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்தாள். எனது தா-தா-தாத்தாவும் மற்றவர்கள் இன்னும் உயிரோடு இருப்பவர்களைத் தேடிச் சென்றார்கள். அவளது அனைத்து துவாரங்களிலிருந்து ரத்தம் வெளிவருவதையும் பொருட்படுத்தாமல், அவள் சொன்னாள், ‘நான் சாவதற்கு முன்னால் நீ தெரிந்து கொள்ளவேண்டும், செவ்வாயின் நிலத்தில் ஆக்ஸிஜன் இருக்கிறது. அதனை சூடாக்கி வெளியேற்றவேண்டும் ‘ என்றாள்.

‘என்னது ? ‘ என்று தா-தா-தாத்தா சொன்னார். ஏறத்தாழ சாகக்கிடக்கும் நிர்வாணமான ரத்தம் பெருகும் ஒரு பெண்ணிடமிருந்து இதனை அவர் எதிர்பார்க்கவில்லை.

‘ஆக்ஸிஜன் ‘ அவள் சொன்னாள். ‘ஆக்ஸிஜன். சில தாவரங்கள் பிழைத்திருக்கலாம். ஆனால் ஆராய்ச்சி நிலையத்தின் ஆக்ஸிஜன் போய் விட்டது. உனக்கு நேரமில்லை. உங்களுக்கு ஆக்ஸிஜன் வேண்டும். சூரியனை வைத்து எரி ஆலை செய்து நிலத்தை சூடாக்கினால் ஆக்ஸிஜன் வரும் ‘ என்று சொன்னாள்.

அதன்பின்னர் மயக்கம் போட்டுவிட்டாள். எனது தா-தா-தாத்தா அவளை ஒரு சாக்குப்பை போல இழுத்துச் சென்று மற்றவர்களிடம் காண்பித்தார், ‘உயிரோடு ஒருத்தரை கண்டுபிடித்துவிட்டேன் ‘

அதன் பின்னர் சில மாதங்கள் மோகன் அவளை காப்பாற்றி அவள் திட்டினாலும், அழுதாலும் தாங்கிக்கொண்டு ஆரோக்கியமாக அவளை ஆக்கி கர்ப்ப காலம் முழுவதும் காப்பாற்றினார். செவ்வாயில் நடந்த முதல் திருமணங்களில் அது ஒன்று. செவ்வாய்க்கு அனுப்பும் அளவுக்கு சில பெண்கள் படு மோசமான குற்றவாளிகளாக இருந்தாலும், 10 ஆண்களுக்கு 1 பெண் என்ற அளவிலேயே இருந்தது.

ஒரு கொலைகாரன், ஒரு அறிவியலாளர், இவர்களுக்கு இடையே ஒரு சமுதாயத்தைக் கட்டினார்கள்.

இன்னும் பூமியிலிருந்து விண்கலங்கள் வருகின்றன. முந்தைய விண்கலத்தை விட அடுத்த விண்கலம் இன்னும் மோசமாகக் கட்டப்பட்டதாக இருக்கிறது. இவை விழும்போது உயிருள்ள ஆட்களை விட செத்துப்போன ஆட்களையே இவை உருவாக்குகின்றன. எத்தனைதான் பஞ்சத்தில் அடிபட்டதுபோல செத்தவர்கள் இருந்தாலும் அவர்களில் இருக்கும் கரியும் அமினோ அமிலங்களும் செவ்வாய் நிலத்தின் இன்னொரு சதுர அடியை வளப்படுத்துகின்றன. ஒவ்வொரு சடலமும் ஒரு உயிருள்ளவனை உயிருடன் வைத்திருக்கின்றது.

ஆயிரக்கணக்கானவர்கள் பசியாலும் காற்றில்லாததாலும் இறந்தார்கள். ஒருவர் சுவாசிக்கும் காற்று வேண்டி ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். அகதிகள் வெகு விரைவிலேயே கற்றுக்கொண்டார்கள். எனது தா-தா-தாத்தாவாலும் என் பா-பா-பாட்டியாலும் தலைமை தாங்கப்பட்ட கும்பல் ஒரு விண்கலம் செவ்வாயில் விழுந்து பிரிவதற்கு முன்னரே அதனைஉடைத்து தேவையான பொருட்களை அள்ளிக்கொள்ள கற்றுக்கொண்டார்கள்.

கடினமானவர்களே பிழைத்தார்கள். அவர்கள் எலிகள் போல சிறியவர்களாகவும், வக்ரம் கொண்டவர்களாகவும் தந்திரம் மிகுந்தவர்களாகவும் கொலை செய்யப்படுவதிலிருந்து தொடர்ந்து தப்பித்துக்கொள்ளத் தெரிந்தவர்களாக இருந்ததாலேயே உயிர்பிழைத்தார்கள். இரண்டரை லட்சம் மக்களை செவ்வாய்க்கு அனுப்பிய பின்னர், குணத்தை மாற்றும்சில்லுக்களை மூளையில் பொறுத்துவது செவ்வாய்க்கு அனுப்புவதை விட காசு குறைவானது என்பதை கண்டுகொண்டபின்னர், பூமியில் இருக்கும் அரசாங்கங்கள் செவ்வாய்க்கு கைதிகளை அனுப்புவதை நிறுத்தின. அப்புறம் அவ்வாறு அனுப்பியதை மறக்க தீவிரமாக முயற்சி செய்தன.

என்னுடைய தா-தா-தாத்தா மோகன் இந்த அகதிகளின் தலைவனாக ஆனார். கடூரமான வேலை, அவர்கள் கடூரமான மனிதர்கள், அவர் எல்லோருடனும் சண்டையிட்டு தந்திரம் செய்துதான் அவர்களை தலைமை தாங்கி நடத்த முடிந்தது.

செவ்வாயில் எந்த காதல் கதைகளும் இல்லை. அகதிகளுக்கு நேரமில்லை. காதலிக்க எந்த மூலாதாரங்களும் இல்லை. எதிர்பார்க்கமுடியாத நோயாக காதல் அகதிகளுக்குத் தெரிந்தது.காதல் வயப்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். உயிர் வாழ்வதற்கு கீழ்ப்படிதலும் அயர்வற்ற உழைப்பும் தேவையாக இருந்தது. தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் கோரும் காதலுக்கு செவ்வாயில் இடமில்லை.

அரசாங்கத்துக்கு எதிராக சுதந்திரம் நோக்கி பேசியதற்காக சிறைப்பிடிக்கப்பட்டு செவ்வாய்க்கு அனுப்பப்பட்டவர் தான் மோகன். ஆனால் மோகன் பாலைவனத்தில் இறந்துவிட்டார். புளிமாங்கனியைக் காப்பாற்ற ஐந்தாம் அலையினர் வந்தபோது டிங்கோ பாலைவனத்துக்குள் தப்பி ஓடியபோது மோகன் துரத்திக்கொண்டு சென்றார். அதுதான் அவரது வாழ்க்கையின் கடைசி தவறு. ஒருவர்தான் மோகனின் உடையை உடுத்திக்கொண்டு பாலைவனத்திலிருந்து திரும்பி வந்தது. தன்னை மோகன் என்று கூறிக்கொண்டு. யாரும் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. உண்மையான மோகனின் விண்கலத்தில் வந்த ஐந்தாம் அலையினரில் ஒருசிலரே மோகனை அடையாளம் காணக்கூடியவர்கள். மோகன் திரும்பி வந்ததும் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஆறாம் அலையின் மக்களே டிங்கோவை அடையாளம் காணக்கூடியவர்கள். அவர்களும் ஐந்தாம் அலையினரால் கொல்லப்பட்டுவிட்டார்கள்.

பாலைவனத்திலிருந்து திரும்பி வந்து எனது பா-பா-பாட்டியை காப்பாற்றினார். ஐந்தாம் அலையினர் அவரை ஒப்புக்கொண்டுவிட்டார்கள்.

ஆனால் நிச்சயமாக என் பாட்டியின் பாட்டியின் பாட்டி முட்டாளாகவில்லை. அவர் புத்திசாலிப்பெண். தன்னுடைய துறையில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர். தன்னை மனைவி என்று கோரிக்கொண்டவன்தான் தனது ஆராய்ச்சி நிலையத்தை அழித்து, தன்னை கற்பழித்து, தனது நண்பர்கள் செவ்வாயின் மெல்லிய காற்றில் இறக்கும்போது சிரித்தவன் என்பதை அறிந்தே இருந்தார்.

ஆனால் உயிர்வாழ்வதுதான் செவ்வாயில் முக்கியமானது. காதல் அல்ல. அங்கிருப்பவர்களிலேயே தலைவன் என்பது மோகன்தான்.

செவ்வாயில் முதலில் வந்த அகதிகளில் நிறையக்கதைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று கூட காதல் கதை அல்ல.

***

மொழிபெயர்ப்பு : துக்காராம் கோபால்ராவ்

**

Series Navigation

துக்காராம் கோபால்ராவ்

துக்காராம் கோபால்ராவ்