சுஜாதா சோமசுந்தரம்
அந்தி வானம் பூமியோடு வம்பு செய்துக்கொண்டிருந்த வேளை.மழையும்,காற்றும் தங்கள் திறமைகளை போட்டிப்போட்டு பூமியிடம் புலப்படுத்திக்கொண்டிருந்தது.நடன வகுப்பு முடிந்து வீடு திரும்பாத மகளுக்காக மனதில் பயத்தோடும்,மடியில் கனத்தோடும் காத்திருந்தாள் ராதா.கடிகாரத்தையும்,வாயிலையும் மாறி மாறி பார்த்ததில் கண்களே சோர்ந்துவிட்டன. உட்காரலாம் என்றாலோ எண்ணங்கள் இட்டுக்கட்டி கதை கூறி இம்சை செய்தது. நாகரிகம் என்னதான் காலத்தின் வேகத்தோடு கைகோர்த்து நடந்தாலும் தவறுகளும் அதே வேகத்தில் நடக்காமல் இருப்பதில்லையே.
அம்மா….! வேலைக்கு போகல ? சொட்ட சொட்ட நனைந்தபடி வீட்டிற்குள் வந்த அமர் சோபாவில் தொப்பென்று சரிந்தான்.
அமர்…தலையை துவட்டிக்கிட்டு உடையை மாத்திட்டு வந்து உட்காரேண்டா.
ஒவ்வொன்றையும் கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப்போல சொன்னாதான் செய்வியா ?நாம் வளர வளர பொறுப்புகள் கூடணுமே தவிர குறையக்கூடாது என்றபடி தலையை துவட்டி விட்டாள் ராதா.சற்று நேரத்திற்குள் உடையை மாற்றிக்கொண்டு வந்து அம்மாவின் அருகில் அமர்ந்தான்.
அமர்….மது வெளியே எங்காவது போறதா உங்கிட்ட சொல்லிட்டு போனாளா ?வகிப்பு முடிஞ்சு நேரா வீட்டுக்கு வராம எங்கே போய் தொலைஞ்சான்னு தெரியல. மனசு கிடந்து பலவிதமா படுத்துதுடா.காற்று சத்தத்திற்கெல்லாம் கதவை ஓடி ஓடி திறந்து பார்த்தாள்.
அம்மா…மழை அதிகமாயிருக்கிறதால எங்கேயாவது ஒதுங்கியிருப்பா.நீங்க கண்டதையும் நினைச்சி கவலைப்படாதிங்க.
சரிடா…ஒரு போன் பண்ணி சொல்லலாம் இல்லையா ?அவளை பார்க்காமா வேலைக்கு போனேன்னா வேலையில கவனம் செலுத்த முடியாமல் திணறிடுவேன்.
அப்படின்னா…திருமால்மாதிரி வீட்டை அடி வைச்சி அளக்காம ஓரிடத்திலே உட்காருங்க.அவ வந்ததும் அம்பாள் தரிசனம் வாங்கிட்டு போகலாம் என்றபடி செய்திதாளை பிரித்தான்.
பெத்தவங்களோட உணர்வை புரிஞ்சுக்காம ஏட்டிக்கு போட்டியா பேசுறதை விடாம பிடித்து வைச்சுக்கோ.அம்மா என்ன சொல்றேன்னு என்றைக்காவது காது கொடுத்து கேட்டுருக்கியா ?
அம்மா…நான் காது கொடுத்து கேட்டதனாலதான் இந்த அமர் உன் பிள்ளையாகவே இருக்கேன் போதுமா…என்றவன் ராதாவின் கழுத்தை இரு கைகளாலும் கோர்த்தபடி என்னம்மா பிரச்சனை ? கொஞ்ச நாட்களா எதற்கெடுத்தாலும் பயப்படுறீங்களே ஏன் ?
மகனின் கையை விலக்கிய ராதா,அமர்…இப்பவெல்லாம் மதுவோட போக்குல நிறைய மாற்றமிருக்கு.ஒரு வயசுப் பொண்ணுக்கிட்ட இருக்கிற கலகலப்பு சுத்தமா இல்லாம மெளனமா இருக்கிறத பார்த்தா பயமாயிருக்குடா.
அம்மா…அவளை பள்ளி தவிர துணைப்பாட வகுப்பு,நடனம்,பாட்டு,நீச்சல்னு ஒன்னுவிடாம அனுப்புறீங்க.அவளும் என்னை மாதிரி முடியாதுன்னு அடம்பண்ணாம ஆர்வக்கோளாருல போறா.அப்படியிருக்கையில் டென்சன் பட முடியுமே தவிர சிரிச்சிக்கிட்டே இருக்க முடியாது.
அமர்…நீ நினைக்கிற மாதிரியெல்லாம் என்னால சுலபமா யோசிக்கவோ ,எடுத்துக்கவோ முடியாது.பதினைந்து வருடமா சந்தோசத்துலயும்,துக்கத்துலயும் அவளோட ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமா ஊன்றி பார்த்து வளர்த்தவ நான். என்கிட்ட முகங்கொடுத்து பேச தயங்குறான்னா தவறு நிகழ்ந்துருக்குன்னுதானே அர்த்தம்.என்னோட பல சந்தர்ப்பங்கள்ல உங்கிட்ட கடுமையா நடந்துகிட்ட அளவுக்கு மது அதிர்ந்து பேசக்கூட இடங்கொடுத்தது கிடையாது.அப்படிப்பட்டவ ஏன் அமைதியா இருக்கனும் சொல்லு ?
அம்மா..என்னைவிட மதுவுக்கு பொறுப்பும்,பொறுமையும் அதிகம்.எக்காரணத்தை கொண்டும் நானோ,மதுவோ உங்களை தர்மசங்கடத்துக்கோ,மனகஸ்டத்துக்கோ தொடரந்து ஆளாக்க மாட்டோம்மா.நீங்க கவலைப்படாம வேலைக்கு போங்க.நான் மதுகிட்ட பேசுறேன்.
சரிடா அமர்..மது வந்தவுடன் மறக்காம போன் பண்ண சொல்லு.அப்பா வர்றதுக்கு காலதாமதம் ஆயிட்டுன்னா காத்துக்கிட்டு இருக்காம நேரத்தோட சாப்பிட்டு தூங்குங்க பேசியபடி வெளியேறிய ராதாவை தடுத்து திரும்ப வைத்தது அமரனின் அரவணைப்பான குரல்.
அம்மா…சில விசயங்களை மனசுக்குள்ள போட்டு பூட்ட நினைச்சி சாவியை தொலைச்சிடாதீங்க.மது மறந்தும்கூட நம்பிக்கை துரோகம் செய்யமாட்டா. தாயின் தலை மறைந்ததும் சோபாவில் கால்களை நீட்டிவிட்டு உறங்க ஆரம்பித்தான்.
ராதா-ராமு தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள்.ராதா குடிநுழைவுத்துறையில் கிட்டதட்ட பன்னிரெண்டு ஆண்டுகளாக வேலை செய்கிறாள்.ராமு சொந்தமாக கணினி பாகங்கள் விற்கும் கடையை சிங்கப்பூரிலும்,இந்தோனீசியாவிலும் நடத்தி வருகிறார்.ராமு வாரத்தில் பாதி நாட்களை இந்தோனீசியாவில் இன்பமாக கழித்து வந்தான். இவர்களின் மூத்த மகன் அமர் தொடக்ககல்லூரியிலும்,இளையவள் மது உயர்நிலைப்பள்ளியிலும் பயின்று வருகின்றனர்.அழகான குடும்பம் என்றாலும் அமைதியை ஆளுக்கொரு பக்கம் தொலைத்துவிட்டு அல்லாடிக்கொண்டிருந்தனர்.
நெஞ்சுமுட்ட கோப்புகளை சுமந்தபடி மழையில் பாதி நனைந்தும் நனையாதததுமாக வீட்டிற்குள் வந்தாள் மது.
அண்ணா…! சாப்பிட்டியா ? ஈர கூந்தலை கைகளால் அலைந்தபடி கேட்டாள்.
நீ எப்ப வந்தே….கண்களை கசக்கியபடி எழுந்து அமர்ந்தான்.பொண்ணா பிறந்தவ காலநேரத்தோட வீட்டுக்கு வரவேண்டாமான்னு அம்மா கேட்க சொன்னாங்க.
அப்புறம் என்ன சொன்னாங்க ?என்ற தங்கையிடம் , அம்மாவுக்கு போன் செய்துடு.மற்ற விசயங்களை காலையில பேசிக்கலாம் தூக்க கலக்கத்தில் அறைக்குள் நுழைந்தவன் திரும்பி மதுவைப் பார்த்து எனக்கு சாப்பாடு வேணாம்.காலையில சீக்கிரமா எழுப்பி விடு.
அவசர அவசரமாக படுக்கைக்கு செல்லும் அண்ணன்,அவசியமில்லாம வேலைக்கு செல்லும் அம்மா,நேரங்கெட்ட நேரத்தில் வரும் அப்பா,இவர்களுக்கு மத்தியில் நானும் ஒரு திசையாக புழுங்க வேண்டியதுதான்.தனியாக சாப்பிட பிடிக்காமல் தூங்கச்சென்றாள்.
படுக்கையில் விழுந்த மது கண்களை இறுக்கமாக மூடினாள்.இமைகள் இணைந்ததே தவிர தூக்கம் தூரத்தில் நின்று வேடிக்கைகாட்டியது.மல்லாந்து படுத்தபடி விட்டத்தை வெறித்தவளுக்கு வெறுமை விஸ்வரூபம் எடுத்தது.வயிறு தன் பங்குக்கு குறுகுறுவென்று கத்தி ஆர்ப்பரித்தது.வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருந்தும் நிம்மதியாய் வாழ முடியாமைக்காக தன்னையே வருத்திக்கொண்டாள்.
காலம் யாருக்காகவும் காத்திராமல் தன் கடமையை செவ்வனே செய்து கொண்டிருந்தது.அன்று ராமு அலுவலகத்துக்குகூட போகாமல் விடிய விடிய உறங்காமல் கணினியில் வேலை செய்து கொண்டிருந்தான்.ஆனால்,கண்கள் ஆத்திரத்தை டன் கணக்கில் அனலாக கக்கி கொண்டிருந்தன.
இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ராதா அறைக்கதவை திறந்தாள்.அறையில் நாலாபக்கமும் பொருள்கள் சுவற்றில் அடிக்கப்பட்டு சிதறி கிடந்தன. என்ன நடந்திருக்கும் யூகிப்பதற்கு முன்னே,மனைவியை பார்த்த வேகத்தில் படபடக்க ஆரம்பித்தான் ராமு.
வீட்ல இருந்து பொறுப்பா பிள்ளைகளை கவனிக்காம பொழப்பு தேடிப்போன காலம் முழுவதும் நம்பளை புலம்ப வைச்சிருவாங்கன்னு உனக்கு தெரியாது….
கணவனையே கண்கொட்டாமல் கவனித்துக்கொண்டிருந்தவளுக்கு உள்ளூர சற்று கலவரம் நிறைந்த பயம் நிழலாடியது.எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அமைதியாக என்ன நடந்தது என்றாள்.
உன் சீமந்தபுத்திரன் பத்து பெண்களோட சிரிப்பும் களிப்புமா பாதயாத்துரை சென்ற கண்கொள்ளா காட்சியை பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது. என்னை பார்த்தும் பார்க்காதது போல எவ்வளோ திமிறா போறான் தெரியுமா ?
ராதாவுக்கு நெஞ்சிக்குழியை யாரோ அழுத்திப்பிடித்தது போல வார்த்தை வராமல் திணறவும் ராமுவே தொடந்து பேசலானான்.
உனக்கு இந்த கண்றாவியெல்லாம் ஏற்கனவே தெரியுமா என்ன ? அவள் தோற்பட்டையை பிடித்து அழுத்தாத குறையாக கேட்டான்.
எனக்கு எதுவுமே தெரியாது.ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட்டு அவசர அவசரமாக ?ாலுக்கு வந்தாள் ராதா.
மது காபியை உறிஞ்சி குடித்தபடி சோபாவிலும்,அமர் போனில் யாருடனோ காற்பந்து பற்றி அளாவியபடியும் அமர்ந்திருந்தனர்.
அமர்…போனை வை. உங்கிட்ட கொஞ்சம் பேசனும் என்ற அம்மாவையும்,பின்னால் நின்ற அப்பாவையும் பார்த்தபடி தொலைபேசியின் தொடர்பை துண்டித்தான்.
அம்மா..எதுவா இருந்தாலும் சீக்கிரமா பேசுங்க.எனக்கு வெளியே ஏகப்பட்ட வேலை இருக்கு.மது குடித்துக்கொண்டிருந்த காபியை பிடுங்கி குடித்தபடி பேசினான்.
அப்படியென்ன அய்யாவுக்கு அவசர வேலைன்னு நான் சொல்லட்டுமா ? என்ற தந்தையை வெகுநாட்களுக்கு பிறகு ஏறிட்டுப்பார்த்தான்.படிக்கிற காலத்துல படிப்பை தவிர மற்ற விசயங்களில் அளவுக்கு அதிகமா ஆர்வங்காட்டுறது படிக்கிறவனுக்கு அவசியமாத்தான் தெரியும்.ஆனா,எங்களுக்கு அனாவசியமா தெரியுதே.சரி…யாரு அந்த பொண்ணு ?
தந்தையிடமிருந்து திடுதிப்பென இப்படியரு கேள்வியை எதிர்பார்க்கவில்லையென்றாலும் தனக்கே உரிய மிடுக்குடன், எந்த பொண்ணை கேட்குறீங்க ? காபி கோப்பையை டேபிளில் வைத்துவிட்டு நிமிர்ந்தான்.எல்லோரும் தன்னையே உற்று கவனிக்கிறார்கள் என்பதை யூகிக்க முடிந்தது.அம்மா…நான் என்னமோ மிகப்பெரிய குற்றம் செய்தவன் போல கூடி நின்னு வேடிக்கை பார்க்கிறதும்,கேள்வி கேட்குறதும் முறையா படல.அதுக்காக நான் நூறு சதவிகிதம் யோக்கியனும் நிருபிக்கவும் விரும்பல.அமர் பேசிக்கொண்டிருக்கையில் இடைமறித்து பேசினான் ராமு.
அதான் உன்னோட யோக்கியதையை வீதியில வித்திட்டாயே. அவ தெரிஞ்ச பொண்ணா ? இல்ல தெரிய வேண்டியவளா ?
உச்சந்தலைக்கு ஜிவ்வென ஏறிய ஆத்திரத்தை வலுக்கட்டாயமாக இழுத்து வந்த அமர், அப்பா..பத்தொன்பது வயது பையன்கிட்ட அந்த பொண்ணு யாரு ? இந்த பொண்ணு யாருன்னு கேட்கிறதெல்லாம் அநாகரிகம்.நான் பொண்ணுங்க பின்னாலோ,பொண்ணுங்க என் பின்னாலோ சுத்துறது பெரிய விசயமே இல்லை.எனக்கு சரியாபட்றது உங்களுக்கு தவறாபடுதுங்கிறதுக்காக பயந்து நடக்க என்னால முடியாது.ஒரு அப்பாவா பிள்ளைக்கிட்ட சாப்பிட்டியா,படிச்சியா,பணம் வேணுமான்னு கேட்டா போதும்.
அமர்…யாருக்கிட்ட நின்னு பேசிக்கிட்டு இருக்குறங்கிற நிதானம் இருக்கட்டும்.வளர்ந்துட்டேங்கிறதுக்காக வரைமுறை இல்லாமலும்,வார்த்தையை நீட்டியும் பேசாதே.ராதாவின் ஓங்கிய குரல் வந்த திசைக்கு சடாரென்று திரும்பினான் அமர்.
அம்மா..நான் ஒண்ணும் கட்டிய பொண்டாட்டியையும்,கருத்து வந்த பிள்ளைகளும் கல்லுமாதிரி இருக்கையில காதலி தேடலை.இந்த வயசுல பொண்ணுங்ககூட பழகுற சாதாரண பழக்கத்தையெல்லாம் என்னால தவிர்க்க இயலாதுங்கிறதை உங்க கணவர்கிட்ட சொல்லி வையுங்க. அரண்டவன் கண்ணுக்குதான் இருண்டதெல்லாம் பேயா தெரியும்.பெத்தவங்க பாத சுவடுகளை பின்பற்றிதான் பிள்ளைகள் புனிதயாத்திரை மேற்கொள்ளனும் அமர் முடிக்குமுன்னே ராதாவின் கை அவன் கன்னத்தில் இறங்கியது.
அம்மா….அவனடைய உந்தியிலிருந்து உதறிக்கொண்டு எழுந்து வந்து விழுந்த வார்த்தை அவளுடைய கருப்பையை இறுக்கி சுறுக்கென்று வலித்தது.கன்னத்தில் வைத்த கையை எடுக்காமல் அறைக்குள் சென்ற அமரின் பின்னால் மதுவும் ஓடிச்சென்று கதவை அறைந்தது சாத்தினாள்.
நான் பேசிக்கிட்டு இருக்கையில சட்டுனு கையை ஓங்கினது தவறு.தலைக்கு மேல் வளர்ந்தவன் ஓங்கின கையை உயர்த்தி பிடிச்சிருந்தா என்னவாயிருக்கும் என்ற கணவனிடம்,என் பிள்ளையை நான் அப்படி வளர்க்கல என்றாள்.
சரி..சரி.நீ…போய் அவனை சமாதானப்படுத்து.எனக்கு அலுவலகத்துல வேலையிருக்கிறதால போய்ட்டு வர்றேன்.ராமு ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக சொன்னானே தவிர மனம் முழுவதும் மகன் பேசியதையே சுற்றி சுற்றி வந்தது. கணவன் சென்றதை உறுதிசெய்து கொண்டபின் மகனிடம் வந்தாள் ராதா.
அம்மா…அண்ணனை எதற்காக அடிச்சீங்க ? வயலை சுவரா இருந்து பாதுகாக்கிற வரப்பும்,வாய்க்காலும் சரியா இருந்தா தண்ணீர் ஏன் வேற வயல்ல போய் பாயப்போகுது.நீங்க செல்கிற வழி தெளிவா இருக்கையில, நாங்க எப்படி வேற வழில பயணிக்க முடியும்.அண்ணங்கிட்டயிருந்து செய்தியை முழுமையா வாங்கிருந்தீங்கன்னா அடிக்கமாட்டாங்க அதிர்ச்சிதான் அடைவீங்க.
மது…நீ பார்த்துட்டுதானே இருந்தே அவன் பேசினதெல்லாம்.பெரியவங்ககிட்ட பேசுற விவஸ்தை தெரியாம சரிசமமா பேசலாமா ?
அம்மா…நீங்க வெளுத்தது எல்லாம் பாலுன்னு நம்புறீங்க.நாமயெல்லாம் நினைக்கிறமாதிரி அப்பா நல்லவரில்லை.அவருக்கும் ,அண்ணன் வயசுல ஒரு பொண்ணுக்கும் தொடர்பு இருக்கு.அவுங்க இரண்டு பேரையும் பல இடங்கள்ல நானே பார்த்துருக்கேன். மது பேச பேச ராதா ஸ்தமித்து நன்றாள்.கார் சாவியை மறந்து விட்டுப்போய் எடுக்க வந்த ராமுவும் அதிர்ச்சியில் உறைந்து அப்படியே நின்றான்.
மது அப்பாகிட்ட வேலைசெய்கிறவங்ககூட அப்பா வெளியே போகக்கூடாதா என்ன ?நாம எதையோ பார்த்தோங்கிறதுக்காக கண்டதையும் கற்பனை பண்ணக்கூடாது.
அம்மா…அண்ணன் என் மேல கைபோட்றதுக்கும்,யாரோ ஒருத்தி மேல கைபோட்றதுக்கும் வித்தியாசம் தெரியாத குழந்தை இல்லைநான்.நீங்க வேலையையும்,வீட்டையும் கட்டிக்கிட்டு அழுதீங்கன்னா, வெளியே என்ன நடக்குதுன்னு எப்படி தெரியும்.
அம்மா…நீங்க அடிச்சதைவிட ஏமாந்துக்கிட்டுயிருக்கீங்கிற வலிதாம்மா அதிகமாயிருக்கு.என் வயசுல பத்து பெண்களோட பழகுறதும்,சுத்துறதும் கொலை குற்றம்னா,அவரு செய்யிறதுக்கு பேர் என்ன. உண்மையா இருக்க தெரியாதவங்க உறவுகள்ன்னு சொல்லிட்டு உலகத்துல உலாத்துறது கேவலம்.பெத்த பிள்ளைங்க தவறு செய்திடுமோன்னு தடுமாறி,உங்க தாலிக்கு வேலியா இருக்க வேண்டியவரு வேசம் போட்றது வேடிக்கையாகவும்,வேதனையாகவும் இருக்கும்மா.
மதுவும்,அமரும் மாறி மாறி கேள்வி கேட்பதை பொறுக்கமுடியாத ராதா,தனக்கு ஏற்கனவே தெரியும் என்ற உண்மையை உடைத்துவிட்டு சிதறி நின்றாள்.
அம்மா…அதிர்ச்சியோடு அழைத்த பிள்ளைகளை இரு தோள்களிலும் சாய்த்து சமாதானப்படுத்த முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள்.
எப்படிம்மா தனக்கு சொந்தமானதை எவகிட்டேயோ வாரி கொடித்துட்டு வாய் திறக்காம அமைதியாய் இருக்கீங்க ?
மது…இந்த வாழ்க்கை என்மேல திணிக்கப்பட்டது அல்ல,நான் உதறிட்டு ஓடிப்போய் விலகிக்கொள்ள.இந்த வாழ்க்கையை நான் வாழனுங்கிறதுக்காக எத்தனை உறவுகளை காயப்படுத்திருக்கேன் தெரியுமா. நான் தேடிப்போய் தேர்ந்தெடுத்த வாழ்க்கைக்கு தண்டனையை எனக்குதான் கொடுத்துக்கனுமே தவிர உங்களுக்கு இல்லை.தண்டவாளத்தால ரயில் தடம் மாறினாலும்,ஓட்டுனரின் கவனக்குறைவால விபத்து நிகழ்ந்தாலும் பாதிப்புபயணிகளுக்குதான்ங்கிறதை உங்கப்பா புரிஞ்சுக்கல.
அப்படின்னா பிள்ளைகளுக்கு புரியிறது பெத்தவருக்கு புரியலங்கிறீங்களா ?தவறு செய்யிறவரை சட்டையை பிடிச்சி தட்டி கேட்காம தயங்குறதுக்கு காரணம் இருக்குதாம்மா ? என்ற அமரை கண்கள் ததும்ப பார்த்தாள் ராதா.
அமர்….நான் கேள்வி கேட்க ஆரம்பிச்சிருந்தா பிரச்சனை கூடுமே தவிர தீர்வு கிடைக்காது.உங்கப்பா பாதையில்லாத வழில பயணிச்சிட்டிருக்கார்.பயணம் சொகுசா இருந்தாலும் பாதை சரியில்லைங்கிறது அவரோட அறிவுக்கு எட்டாமல் போகாது.
அப்படின்னா….அவருக்கு புத்தி வரறப்ப வரட்டும்னு அவர் போக்குலேயே விடப்போறீங்களா ?
அமர்..உன்னோட அவசரமும்,மதுவோட ஆத்திரமும் வாழ்க்கையை உணர வைக்காது.பதினேழு கூட நாற்பத்தி எட்டு ஈடுகொடுத்து நடக்கலாமே தவிர எண்ணங்களால் ஏணி வைத்து ஏறிட முடியாதுங்கிறதை ஆத்திரமும் அவசரமும் எடுத்துச்சொல்லாட்டிலும் நிதானம் நிறுத்தி சொல்லும்.வாழ்க்கைங்கிற புத்தகத்துல எல்லா அத்தியாயங்களும் நிறைவா இருந்திட்றது கிடையாது.சில அத்தியாயங்கள் திருப்தியளிக்கலங்கிறதால ஒட்டு மொத்த வாழ்க்கையையும் குத்தம் சொல்ல கூடாது.
அம்மா…! ஒழுக்கத்தை பற்றி ஓயாம பேசுற உங்களுக்கு இதெல்லாம் உறுத்தலா தெரியல.திரும்புகிற திசையெல்லாம் தவறுகள் நிகழுதுங்கிறதுக்காக தர்க்கம் செய்யாமல் மெளனம் சாதிக்கிறது நியாமா படலம்மா.உங்களை மாதிரி நடக்கிறதை நாசூக்கா பார்த்துக்கிட்டு எங்களால போக முடியாது.
மது..என்னோட திருமண வாழ்க்கை சடைசிவரை நிலைக்கனுங்கிறதுக்காகதான் நாசூக்கா பார்த்துக்கிட்டு தாகரிகமா விலகி நின்னு வேடிக்கை பார்க்கிறேன். என்னால காலத்துக்கு தகுந்த மாதிரி சட்டுன்னு மாறவோ,உறவுகளை தராசுபோல மனசுல ஏத்தி வைச்சி இறக்க இயலாது.
அம்மா…உங்களுக்கு நீங்களே ஒரு வட்டத்தை போட்டுக்கிட்டு தண்டனையை அனுபவிக்கிறதை பார்க்க முடியலம்மா. எங்களுக்காகனாலும் வட்டத்தை விட்டு கொஞ்ச நேரம் வெளியே வாங்கம்மா.
அமர்…நான் என்னோட கொள்கைங்கிற வட்டத்திலிருந்து வெளியே வர்றதால நடந்த எதுவுமே இல்லைன்னு ஆயிடிமா ? உங்கப்பா எனக்கு செய்தது மன்னிக்கமுடியாத துரோகம்னாலும் அதுக்காக அவரை தூக்கி போட்டுட்டு போகமாட்டேன்.
ஏம்மா..நான் எது செய்தாலும் இப்படித்தான்பார்த்துக்கிட்டு இருப்பீங்களா ? என்ற மகனிடம் கூடுமானவரை அரவணைப்பாக பேசலானாள்.
அமர்.. தவறுன்னு தெரியாம செய்யிறவங்களை தட்டி கேட்கலாம்.தெரிஞ்சு செய்யிறவங்கள எதுவுமே கேட்கமுடியாது.உன்னை பொறுத்தவரை நல்லது கெட்டதுகளை அலசி ஆராய முடியாத வயசுல வாழ்ந்திட்டுருக்கே.காலத்தின் வேகத்துல கண்களை கட்டிய குதிரையாய், எதற்கும் வளைந்து கொடுக்கிற வயசுல தவறு நிகழ்ந்தா கண்டிப்பா சுட்டிக்காட்டுவேன்.நீ செய்யிறதையெல்லாம் வேடிக்கை பார்க்க நான் பார்வையாளர் இல்லை, உன்னை பத்துமாதம் சுமந்து பெத்தவ.அமர்..தடுக்கி விழறதுக்கும்,தடம்மாறதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.நீ தடுக்கி விழுந்தா அதற்குபேர் விபத்து.உங்கப்பா விழுந்தா தலைவிதி.
அம்மா….அமர் இழுத்தான்.
அமர்….நீ இப்படித்தான் வாழனும்னு கட்டுக்கோப்புகள் போடமாட்டேன்.அதே நேரத்துல நான் வரைந்து வைத்துள்ள பாதையில வரம்பை மீறி போகவும் விடமாட்டேன்.நீ வாழற காலகட்டமும்,வயசும் எல்லாத்தையும் சரியானதான் சொல்லும்.ஆனா நீதான் பகுப்பாய்வு பண்ண பழகிக்கனும்.உன்னை நம்புற எனக்கு, இரண்டுங்கெட்டான் வயதை நம்ப முடியாதனாலதான் வேகமா போகமா இருக்க அறிவுரைகள் மூலம் ஸ்பீட் ப்ரேக் போட்றேன்.என்னோட வளர்ப்பு முறையில சின்ன கரும்புள்ளிக்குகூட இடம் இருக்ககூடாது.
மது…வாழ்க்கைங்கிறது ஒரு அற்புதமான ஓவியம். ஒரு கலைஞனா பல இன்னல்களுக்கு இடையிலும் ரசிக்க கத்துக்கிட்டா பிரச்சனைங்கிற பிரளயம் வராது.இந்த பூமியே நாட்டுல நடக்கும் அட்டூழியங்களை கண்டும் காணாதமாதிரி பொறுத்துபோகயில நான் எம்மாத்திரம் சொல்லு ?என்னோட வாழ்க்கையில சில அத்தியாயங்கள் உங்களுக்கு படிப்பினையாய் இருக்காலாமே தவிர பாதையாகிவிடக்கூடாது.உங்களை ஆச்சாரமாகவோ,அடித்தோ வளர்க்கலன்னாலும் உணர்வுகளோட வலியின் வடு தெரிய ஆளாக்கியிருக்கேன்.உங்ககிட்ட மறைக்கனும்னு நினைச்சி எதையும் மறைச்சதில்லை.உங்கப்பாவை கடுமையான சொற்களால காயப்படுத்துறதை விட அன்பால பேசிபாருங்க.அன்புக்கு மட்டும்தான் அகிலத்தையே அணைக்கிற சக்தியிருக்கு என்கவும் இருவரும் ஒருசேர சரிம்மா என்றார்கள்.
இவ்வளவையும் எந்தவித சலனமின்றி கேட்டுக்கொண்டிருந்த ராமு,சாவியை எடுத்துக்கொண்டு சுவடு படாமல் கார் பார்க்கை நோக்கி நடந்தான்.காரை திறந்து இருகையில் சாய்ந்தவனின் மனம் ஒருநிலையில் இல்லாமல் தவித்தது. தன்னுடைய சுயநலம் கலந்த வாழ்க்கையில் தன் பிள்ளைகளின் சந்தோசத்தையும், மனைவியின் தியாகத்தையும் எங்கே தொலைத்தேன்.அன்பை அட்சயபாத்திரமாக அள்ளி கொட்டும் ஒரு அழகான குருவி கூடு என்னையும் அறியாமல் சிதற காரணமா இருந்தது எது ? என் பிள்ளைகளை மன உளைச்சலுக்கு ஆளாக்க காரணமா இருந்தவன் நானா ? இவ்வளவும் கேவலமான உறவினால்தானே.வேண்டாம்.எனக்கு என் குடும்பம்ங்கிற குத்து விளக்கால மட்டும்தான் வெளிச்சம் தரமுடியும்.மனத்தளவில் மாசற்றவனா இருக்கும் மனசாட்சியிடம் மன்னிப்புக்கேட்டவன் காரை அலுவலகத்துக்கு திருப்பினான் ராமு.
சுஜாதா சோமசுந்தரம், சிங்கப்பூர்.
.
- காவ்யா அறக்கட்டளையும், பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி
- நிலக்கரி எரிவாயு எரிஆயில் எருக்கள் ஈன்றும் எரிசக்தியில் வெளியாகும் விஷ வாயுக்கள் [Toxic Emissions from Fossil Fuel Energy]
- அருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்)
- ஒரு துளியின் சுவை
- சங்க இலக்கியம்-ஓர் எளிய அறிமுகம்-1
- மெய்மையின் மயக்கம்-13 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)
- கருணாநிதியின் ஜெக ஜால வெளியீடுகள்:
- ஆட்டோகிராஃப் 14 ‘பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்டவர்க்கு ஞானம் இல்லை ‘
- டாம் இந்தியா ‘ நிதி நடை நிகழ்ச்சி ‘
- நெரூதா அனுபவம் – நான் சில விஷயங்களை விளக்குகிறேன்
- என் சிறுகதைகள் – ஓர் வேண்டுகோள்
- உயிர்க்குடை
- ‘இன்னொரு ரஜினிகாந்த் ‘ – ஞாநியின் கட்டுரைக்கான எதிர்வினை
- அன்புடன் இதயம் – 28 – என் குடும்பம்
- சின்னஞ்சிறு சிட்டு அவள்…
- 8க்குள் முன்னேற்றம் எட்டு !
- தோழி
- எனக்குள் காலம்
- வேண்டும் – வேண்டாம்
- மல மேல இருக்கும் சாத்தாவே!
- பெரியபுராணம் — 5
- மரண தண்டனை எதற்காக ?
- மழை மழையாய்…
- ரயில் பயணங்களில்
- எங்கே தவறு ?
- பாதை மாறினால்….
- குரங்கிலிருந்து …
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்- 33
- மசாஜ்
- மனித உரிமை ஆணையம்..!!!
- சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது குறிஞ்சிவேலன். – பதிவுகள்
- குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ? – பகுதி 2
- கிள்ளுப் பூ
- டைரி தீம்தரிகிட ஆகஸ்ட் 16-31 2004
- காற்று
- நிகழ்வின் ரகசியம்
- அன்பு
- எங்கள் கிராமத்து ஞானபீடம்
- தனிமை வாசம்
- அது
- புன்னகையை மறந்தவன்
- காதலிக்கச்சொன்ன வள்ளுவர்…(113) தொடர்