எலிசெபத் ஏன் அழுதாள்

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

என் எஸ் நடேசன்


ரிவியில் மதிய நேரத்தில் வரும் Days of our life என்ற அமெரிக்க தொடர் நாடகம் ஓடிக்கொண்டிருந்தது. நாடகத்தில் ஆணிடம் இளம்பெண் பலமாக விவாதிக்கிறாள். விவாதத்தின் முடிவில் கட்டி அணைத்து பலமாக உதட்டில் முத்தமிடுகிறாள். இந்த முத்தக் காட்சி சாதாரணமாக எந்த மானிடருக்கும் சலனத்தை உருவாக்கும். உருவாக்க வேண்டும் என்பதே நாடகத் தயாரிப்பாளரின் நோக்கமாகும்.

எலிசெபத் ரிவிக்கு முன்பான கதிரையின் ஒருபக்கமாக அடித்து போட்ட பாம்பை போல் உடலில் பலநெளிவுகளுடன் முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் சாய்ந்திருந்தாள்.

எலிசெபத்துக்கு காதுகள் சத்தத்தை கேட்ப்பதால் கண்கள் ரிவியை நோக்கி இருந்தது. எந்த காட்சியையும் கிரகிக்கவோ அதை ஞாபகப்படுத்தும் சக்தி அவளது மூளைக்கு கிடையாது. இப்படியான அவளது மனத்தில் எந்த காட்சியும் சலனத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமில்லை.

15 வருடங்களுக்கு முன்பு (Alzheimers) அல்சைமர் எனும் ஞாபகமறதி அவளது மூளையை தாக்கியது. விலை உயர்ந்த புத்தகத்தின் அட்டையை தாக்கிய கரையான் இறுதியில் முழு புத்தகத்தையே தின்றுவிடுவது போல் கடந்த 15வருடங்களாக அல்சைமர் அவளது மூளையைத் தாக்கி அழித்துவிட்டது.

ஜோசி கழுவிய திராட்சைப்பழங்களை எடுத்துக்கொண்டு வந்து எலிசெபத் அமர்ந்துள்ள கதிரையில் கைகளில் அமர்ந்து ஒவ்வொரு பழமாக மெதுவாக ஊட்டினாள். இடைக்கிடை பழங்கள் வாயில் இருந்து நழுவி விழுந்தன. விழுந்தவற்றை மெதுவாக எடுத்து முன்னால் இருந்த பழைய பத்திரிகையின் மேல் வைத்தாள்.

எலிசெபத்தின் வாய் அசைந்தாலும் கண்மட்டும் ரிவியை நோக்கி இருந்தது, ஜோசி திராட்சை பழங்கள் முடிந்தவுடன் சிறிய துணியால் எலிசெபத்தின் வாயை துடைத்துவிட்டு தனது அறைநோக்கி சென்றாள்.

* * * *

ஜோசி பஞ்சாப்பில் லூதியானா பல்கலைக்கழகத்தில் உதவிவிரிவுரையாளனாக இருந்தபோது எதிர்பாராமல் கொழும்பு திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புலமைப்பரிசில் கிடைத்தது, குடும்பத்தில் ஒரே ஆண்பிள்ளை அதுவும் இரண்டு அக்காமார்களுக்கு பின்பாக சிலவருடம் காத்திருந்து பெற்றபிள்ளை. அக்காமாருக்கு திருமணம் முடிந்துவிட்டது.

ஒரு பொறுப்பும் இல்லாதபடியால் திருமணம் செய்யாமல் முப்பது வயது வரையும் இருந்துவிட்டான். அவுஸ்திரேலிய புலமைப்பரிசில் கிடைத்தவுடன் தாய் அழுது கதறியபடி திருமணம் செய்யும்படி வற்புறுத்தினார். தந்தை தனது உறவில் திருமணம் செய்யும்படி வற்புறுத்தினார்.

ஜோசியின் தாய் தந்தையர் பஞ்சாப்பில் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். மேலும் உறவுகளை வலுப்படுத்த மகனை பாவிக்க எண்ணினார்கள். கடைசியில் அவுஸ்திரேலியாவில் இருந்து ஒரு வருடத்தில் திரும்பிவந்து திருமணம் செய்வதாக உறுதியளித்துவிட்டு விமானம் ஏறினான்.

மெல்பேன் வந்து இறங்கியதும் ஆங்கிலம் கற்பதற்காக ஆங்கில வகுப்புக்கு செல்லவேண்டி இருந்தது. ஜோசிக்கு ஆங்கிலம் கற்பது கடினமில்லை. பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான விரிவுரையாளராக இருந்தவன் ஆங்கில வகுப்புகள் இலகவாக மட்டும் அல்ல இனிப்பாகவும் இருந்தன.

அங்குதான் எலிசபத் ஆங்கிலம் கற்பித்தாள். எலிசெபத்தின் ஆங்கிலம் அவனைக் கவர்ந்தது. எலிசெபத் ஸ்கொட்லாண்டில் இருந்து வந்தவள். எலிசெபத்தின் உச்சரிப்பில் தன்னை மறந்தான். சிலவேளையில் எலிசெபத்தின் வகுப்பில் கண்களை மூடியபடி இருப்பது ஜோசியின் வழக்கம். எலிசெபத் ஜோசியைவிட பத்துவயது மூப்பானவர். ஆரம்பத்தில் ஜோசியின் வெட்க சுபாவம் அவளை ஈர்த்தது, மிக முயற்சி செய்து ஜோசியை சங்கோசம் என்னும் கூண்டில் இருந்து வெளிக்கொணர்ந்தாள். ஆசிரியர் மாணவன் நட்பு என ஆரம்பமாகி பின்பு நண்பர்களாக்கியது. மெல்பேனின் பொட்டனிக்கல் தோட்டம், ஆட்சென்ரர்; லைப்ரரி என்பனவற்றில் எலிசெபத்துடன் பலமணிநேரம் கழித்தான்.

எலிசெபத் தன்னைவிட வயதில் மூத்தவளாக, திருமணம் செய்து விவாகரத்து பெற்றவளாக இருந்து, ஆரம்பத்தில் தொண்டையில் சிக்கிய சிறிய மயிர்போல் ஜோசிக்கு கரகரத்தது. எலிசெபத் ஆங்கில ஆசிரியை மட்டும் அல்லாமல் சினிமாபட விமர்சகராகவும் இலக்கிய புத்தகங்களை விமர்சிப்பவளாகவும் பிரபலமான பத்திரிகைகளுக்கு எழுதிவந்தாள். இப்படியான புத்திஜீவித்தனம் பலமுறை ஜோசியை தாழ்வு மனப்பான்மை கொள்ளவும் வைத்தது. காலங்கள் செல்ல மெல்பேனின் குளிரும் இருவரின் தனிமையும் புரிந்துணர்வும் பதிவுத்திருமணத்தில் முடிந்தது.

ஜோசி இந்தியாவில் இருந்துவந்தாலும் இந்திய சாஸ்திர சங்கீதத்தின் அரிச்சுவடு தெரியாமல் வளர்ந்தான். லதாமங்கேஸ்கார், முகமட்ராவியின் இந்திபட பாடல்கள் மட்டுமே இந்திய சங்கீதமாக நினைத்தான். இந்திய மத்திய தரத்துக்கே உரிய படிப்பு, பின்பு பல்கலைக்கழகம் இடைக்கிடை இளம்பெண்களை கேலி செய்தல் ‘ என்பனவற்றில் அவனது இளமை கரைந்தது.

ஆரம்பத்தில் எலிசெபத்துக்காக ஒப்பரா எனப்படும் சங்கீத நாடகங்களுக்கு சென்று வந்தான். காலப்போக்கில் ஒப்பராவின் தந்தையான ரிச்சாட் வாக்னரை பற்றி விவாதிக்கும் அறிவைபெற்றான். மேற்கத்திய சங்கீதத்தை ரசிக்க தொடங்கிய போது மொய்ராட் ,பாச் போன்றவர்களின் சங்கீத மெட்டுகளை வேறுபடுத்தி பார்க்க தொடங்கினான். ஜெகுடி மெனுகிடின் பியானோ இசைதட்டுகளை கேட்டான். எலசெபத் மேற்கத்தைய சங்கீதத்துடன் இந்திய சங்கீதத்தையும் ஜோசிக்கு அறிமுகப்படுத்தினாள். இந்துஸ்தானியை ரசிக்க தொடங்கியவன் அதில் உள்ள மற்றும் அராபிய கலப்பை உணர்ந்தான். இந்தகாலத்தில் தென்னாட்டு கார்நாடக சங்கீதம் வேற்றுநாட்டு கலப்பற்ற பாரதநாட்டின் கலைவடிவம் என உணர்ந்த போது தென் இந்திய கலைஞர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து அவர்களின் சங்கீத திறமையை மற்ற இனத்தோரும் கேட்கவைப்பதை தனது கடமையாகச் செய்தான். இதில் தன்னை மறந்தான்.

* * * * சந்தோசமான இவர்கள் வாழ்க்கையில் இடியோ புயலோ திடாரென வரவில்லை. சிறிதுசிறிதாக இருந்து மெதுவாக பெரிதாகி உயிரை எடுக்கும் புற்றுநோய் போல் துன்பம் வந்து சேர்ந்தது,

எலிசெபத் தனக்கே உரிய அமைதியான தன்மையை இழந்தாள். சிறிய விடயங்களுக்கெல்லாம் எரிந்து விழுந்தாள். ஜோசி சிறிதுநேரம் பிந்தி வீடு திரும்பினாலும் தாம் தூம் என குதித்தாள். எலிசெபத்தின் 50வயது பிறந்தநாளுக்கு பரிசாக MS சுப்புலட்சுமியின் இசைதட்டை பரிசளிக்க விரும்பி சென்னையில் இருந்து ஒரு நண்பன் மூலம் வரவழைத்தான். இசைத்தட்டு பார்சலை எலிசெபத்திடம் கொடுப்பதற்காக படுக்கை அறைக்கு சென்றபோது விம்மி விம்மி அழுதாள். பலமுறை கேட்டும் காரணம் கூறவில்லை. பிறந்தநாளில் உணர்ச்சிவசப்பட்டு விட்டாள். அதிலும் பெண்கள் வயது போவதை விரும்புவதில்லை என நினைத்துக்கொண்டு கட்டி தழுவி அவளை ஆசுவாசப்படுத்தினான்.

மறுநாள், பாத்திரத்தை நிலத்தில் போட்டு உடைத்துவிட்டாள். என்ன நடந்தது என வினவிய போது கையில் சுட்டுவிட்டது என்றாள். வழக்கமாக தடிப்பான கைஉறை போட்டு மிக அவதானமாக வேலைசெய்யும் எலிசெபத்துக்கு இப்போது என்ன நடந்தது என தன்னை கேட்டுக்கொண்டான். சிறிய விடயங்களை விவாதிக்கும் போது தன்மை மறந்து கோபமடைந்தாள். முன்பெல்லாம் தனது வாதங்களை ஆதாரத்துடன் வழக்கறிஞர்போல் விவாதிக்கும் எலிசெபத் இப்பொழுது இல்லை. ஆரம்பத்தில் வழக்கமான மாதவிலக்கு நிற்கப் போவதால் வரும் (Pre Menoposal Syndrome) (PMS) என நினைத்தான்.

எலிசெபத் வேலையை ராஜினாமா செய்தாள். புத்தகம், சினிமாவுக்கு செய்யும் விமர்சனங்களை நிறுத்தினாள். ஒருநாள் உள்பாவாடை அணியாமல் வெளிகிளம்பினாள். இதைப் பார்த்த ஜோசிக்கு அதிர்ச்சியாகிவிட்டது.

மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துச் சென்றான். எலிசெபத் கேட்டும், இவன் உள் செல்லவில்லை. ஒரு மணி நேரத்தின் பின் டாக்டர் அழைத்தார்.

“என்னை மன்னிக்கவேண்டும். உமக்கு இந்த செய்தி அதிர்ச்சிதரும். எலிசெபத்துக்கு அல்சைமர் என்ற ஞாபகமறதி நோய் வந்துள்ளது. எதற்கும் மூளை ஸ்கானுக்கு (CAT Scan) அனுப்புகிறேன்.”

“நான் ஓரளவு அனுமானித்தேன்”

“ஆரம்பகாலமான படியால் வீட்டில் வைத்து கவனிக்கலாம். பின்பு நோர்சிங் கோமுக்கு அனுப்பவேண்டிவரும்.”

“நாள் ஒருகாலமும் எலிசெபத்தை நோர்சிங் கோமுக்கு அனுப்பமாட்டன”;.

“இவ் வருத்தத்திற்கு தொடர்ச்சியான கவனிப்பு தேவை. உம்மால் எப்படி கொடுக்க முடியும் ?”

“நான் கடந்தவாரமே என்வேலையையும் விட்டுவிட்டேன். முழுநேரமும் எலிசெபத்தை கவனிக்க போகிறேன்.”

“மிக்க நல்லது. அடுத்தமுறை சந்திப்போம்”

சமையல் வேலை, துணிதோய்தல், மற்றும் வீடுபெருக்கல் போன்ற எல்லாவேலைகளையும் ஜோசி செய்தான். ஆரம்பத்தில் கஷ்டமில்லை. தனது வேலைகளை எலிசெபத்தால் செய்யமுடியும்.

இக்காலத்தில் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தென்இந்தியாவில் இருந்து பல சங்கீத வித்துவான்களை வரவழைத்து பலநகரங்களில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினான். சேர்த்து வைத்திருந்த பணம் கரைந்தது, ஜோசி கவலைப்படவில்லை.

காலங்கள் உருண்டோடின. காலதேவன் எலிசெபத்தின் உடலை மட்டுமல்லாமல் அவளது மூளையையும் தனது கொடுமைக்கு உள்ளாக்கினான். CAT Scan எனும் எஸ்ரேயில் எலிசெபத்தின் மூளையை பார்க்கும் போது மருத்துவ அறிவில்லாதவனுக்கும் அல்சைமர் என்ற கறையான் அரித்த மூளையையும் அடையாளம் காணமுடியும்.

* * * ** * * * * * * *

அன்று நாற்பது டிகிரியில் அனல்காற்று வீசியது. எர்கன்டிசன் வேலை செய்தாலும் எலிசெபத் வெப்பத்தால் கஸ்ரப்படுவது தெரிந்தது. மெதுவாக யன்னல் ஓரமாக வந்தவளை கதிரையில் இருத்திவிட்டான். ஈரத்துணியால் முதுகைத் துடைத்துவிட்டான். மெதுவாக சட்டையை தளர்த்திவிட்டு மார்பகத்தை துடைக்க முயற்சித்தபோது ஜோசியின் கைகளை பற்றிக் கொண்டாள். கண்களில் இருந்து அருவியாக கண்ணீர் கொட்டியது.

துடைப்பதை நிறுத்திவிட்டு எலிசெபத்தை பார்த்தான். அவள் கண்களில் இருந்து ஏதாவது புரிந்து கொள்ள முயற்சித்தான். அழகாக இருந்த தன் உடல் இப்படியாகிவிட்டதை நினைத்தாளா ? புத்தகங்களையும் சினிமாக்களையும் விமர்சித்த தனது மூளை இப்படி செல்லரித்துவிட்டதே என கவலைப்படுகிறாளா ? தன்னை திருமணம் செய்ததற்காக ஜோசி இப்படி கஸ்ரப்படுகிறானே என நினைத்து வருந்தினாளா ?

ஆமாம், பேசும் சக்தியை எலிசெபத் இழந்துவிட்டாள்.

***

uthayam@ihug.com.au

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்