கதை 05-எஜமானும் அடிமையும்

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

தமிழில் : நாகூர் ரூமி


லுக்மான் அவர்கள் சுயநலமற்ற ஒரு அடிமையாக வாழ்ந்து வந்தார்கள். அல்லும் பகலும் தனது எஜமானுக்காக அயராது உழைத்தார்கள். எஜமானுக்கு லுக்மானை மிகவும் பிடித்திருந்தது. அதற்குக் காரணமில்லாமலில்லை. லுக்மான் கறுப்பாக இருந்தாலும் அவர்களது அறிவும் உள்ளமும் எப்போதும் ஒளி வீசிக்கொண்டிருந்தன.

ஒரு முறை லுக்மானின் மீது பொறாமை கொண்ட மற்ற அடிமைகள் பழங்களையெல்லாம் சாப்பிட்டுவிட்டு லுக்மான் சாப்பிட்டுவிட்டதாக எஜமானிடம் வந்து பொய்கூறினர். விசாரிக்கப்பட்டபோது லுக்மான் சொன்னார்கள்.

‘எங்கள் அனைவருக்கும் சுடுதண்ணீரைக் குடிக்கக் கொடுங்கள். பின்னர் இந்தப் பாலைவனத்தில் வெகுதூரம் ஓடவிடுங்கள். நீங்கள் எங்கள் பின்னால் சவாரி செய்து வந்து பாருங்கள். உண்மை தெரியும். ‘

அதன்படியே செய்யப்பட்டது.

ஓடிய அனைவரையும் சுடுதண்ணீர் வாந்தி எடுக்கவைத்தது. விழுங்கிய பழங்களும் வாந்தியுடன் வெளியே வந்தன. லுக்மானின் வயிற்றிலிருந்து வெளியானதோ சுத்தமான சுடுநீர்!

இப்படிப்பட்ட ஞானவானாகிய லுக்மான், தான்பெற்ற மக்களைவிட அதிகமாக அந்த எஜமானை நேசித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனில் லுக்மான் அடிமையாகப் பிறந்திருந்தாலும் தனக்குத் தானே எஜமானாக இருந்தார்கள். மேலும் உலக இச்சைகளின் பிடியிலிருந்து அவர்கள் விடுதலை பெற்றிருந்தார்கள்.

‘என்னிடம் எதையாவது கேளுங்கள், தருகிறேன் ‘ என்று ஒரு நாள் அரசன் ஒருவன் தன் குருவிடம் சொன்னானாம்.

‘அரசனே! என்னிடம் இப்படிச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா ? இங்கேவா, இரண்டு கீழ்த்தரமான அடிமைகள் என் வசம் உள்ளனர். ஆனால் அந்த அடிமைகள் இருவரும் உனக்கு எஜமானர்களாக உள்ளனர் ‘ என்றாராம் குரு.

‘என்ன, எனக்கு எஜமானர்களா ?! இருக்க முடியாது. நீங்கள் சொல்வது தவறு. உண்மையெனில் யார் அவர்கள் ? ‘ என்று கேட்டானாம் அரசன்.

‘ஒருவன் கோபம், இன்னொருவன் காமம் ‘ என்று பதிலடி கொடுத்தாராம் குரு.

ராஜ்ஜியங்களை யார் கருத்தில் கொள்ளவில்லையோ அவனே உண்மையான ராஜா. அவனுடைய ஒளி சந்திரனிலிருந்தும் சூரியனிலிருந்தும் வருவதல்ல.

லுக்மானுடைய எஜமான் உண்மையில் லுக்மானின் அடிமையாகத்தான் இருந்தார். இந்த தலைகீழான உலகத்தில் இப்படி நிறையவே உண்டு. (இப்படிப்பட்ட இந்த உலகத்தில்) மக்கள் வைக்கோலைவிட கேவலமாக முத்தை மதிப்பிடுவார்கள்.

ஆனால் ‘ஹு ‘வின் (படைத்தவனாகிய இறைவனின்) ரகசியங்களைத் தெரிந்து கொண்டவனுக்கு படைப்பினங்களின் ரகசியங்கள் எம்மாத்திரம் ? அண்ட சராசரங்களின்மீது உலாத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த உலகின்மீது நடப்பது பெரிய காரியமா ? தாவூதின் கைகளில் மெழுகைப்போல உருகியது இரும்பு. அப்படியானால் மெழுகு என்னவாகும் ?! சிந்தித்தாயா பலகீனமான மனிதனே ?

பார்வைக்கு அடிமையாகவும் உண்மையில் எஜமானாகவும் இருந்தார் லுக்மான். புதிய இடங்களுக்குச் செல்லும்போது தனது உடைகளை லுக்மானுக்கு அணிவித்து, லுக்மானின் உடைகளைத் தான்அணிந்துகொண்டு செல்வது லுக்மானின் எஜமானுக்கு வழக்கமாக இருந்தது.

‘அடிமையே! நீ எனக்குரிய இடத்தில் அமர்ந்து, எனக்குரிய மரியாதையையும், கெளரவத்தையும் பெறுவாயாக. நான் உனது அடிமையைப்போல உனது காலணிகளைச் சுமந்து வருவேன். என்னை நீ ஒரு அடிமையைப் போலவே நடத்து. கடிந்து கொள். எனக்கு எந்தவிதமான மரியாதையையும் காட்டாதே ‘ என்பார் லுக்மானின் எஜமான்.

எத்தனையோ எஜமானர்கள் இவ்விதம் அடிமைகளின் பாத்திரத்தை உவந்து ஏற்றுள்ளார்கள். ராஜ்ஜியச் சுவையை கடைசிவரை அனுபவித்தது போதும் என்று விட்டவர்கள் அவர்கள். திருப்தியில் திளைத்தவர்கள் அவர்கள். ஆனால் ஆசைகளின் அடிமைகளோ, ஞானத்துக்கும் ஆத்மாவுக்கும் அதிகாரிகளாகத் தங்களைக் காட்டிக்கொண்டு அலைகிறார்கள்.

லுக்மானின் உண்மையான அந்தஸ்து என்ன என்பதை அந்த எஜமான் அறிந்து வைத்திருந்தார். அந்த உயர்ந்த நிலையின் அடையாளங்களை அவர் பல முறை பார்த்திருக்கிறார்.

தனது ரகசியம் வெளியில் தெரியாதிருக்கும் பொருட்டு, தான் ஒரு அடிமையாகவே தோன்ற விரும்பினார்கள் லுக்மான். அதையறிந்துகொண்ட எஜமானும் லுக்மானை தனது அடிமைத்தளையிலிருந்து விடுவிக்காமல் இருந்தார்.

கெட்டவர்களிடமிருந்து தனது ரகசியத்தை ஒருவன் மறைக்க விரும்பினால், அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் உன்னிடமிருந்தே உனது ரகசியங்களை நீ மறைக்க வேண்டும். உனது பார்வையில் இருந்தே உனது காரியங்களை நீ மறைத்துவிட்டால் (பிறர்) கண்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.

காயப்பட்டவனின் உடம்பில் குத்திய ஈட்டி அல்லது அம்பின் முனையை வலி தெரியாமல் வெளியே எடுக்க அவனுக்கு போதையூட்டுவார்களாம். (அதைப்போல) உங்கள் மனதை (கவனத்தை) ஏதாவதொன்றில் வைக்கும்போது வேறு ஏதாவதொன்று உங்களிடமிருந்து ரகசியமாகத் திருடப்படும்.

எவ்வளவு முன்ஜாக்கிரதையாக இருந்தாலும் நீங்கள் பாதுகாப்பு என்று கருதும் பகுதியின் வழியாகத் திருடன் நுழைந்துவிடுவான். எனவே உயர்ந்தவற்றின் பக்கம் உங்கள் முழு கவனத்தையும் வையுங்கள். உங்களில் எது கீழ்த்தரமானதோ அதை வேண்டுமானால் திருடன் எடுத்துக்கொண்டு போகட்டும்.

எந்த உணவை யார் தனக்குக் கொண்டுவந்தாலும் முதலில் லுக்மானுக்கு அதை அனுப்பி சாப்பிடச் செய்வார் லுக்மானின் எஜமான். லுக்மான் சுவைத்த மீதியைத்தான் அவர் உண்பார். லுக்மான் சுவைக்காத எந்த உணவையும் எஜமான் சாப்பிடமாட்டார். எறிந்துவிடுவார்.

ஒருநாள் முலாம்பழம் ஒன்று பரிசாக வந்தது. வழக்கம்போல லுக்மானை அழைத்து ஒரு துண்டை அறுத்துக் கொடுத்தார் எஜமான். சர்க்கரையையோ தேனையோ சுவைப்பதுபோல லுக்மான் அதை விரும்பிச் சாப்பிட்டார்.

அதைக்கண்ட எஜமான் மேலும் மேலும் கொடுத்துக்கொண்டே இருந்தார். பதினேழு துண்டுகளை இவ்விதமாக லுக்மான் சுவைத்துவிட்டார்கள். ஒரேயொரு துண்டு மிச்சமிருந்தது.

‘இதை நான் சாப்பிடுகிறேன், எவ்வளவு இனிப்பு பார்க்கலாம் ‘ என்று அந்த துண்டை வாயில் வைத்தார் எஜமான்.

உடனே அவர் நாக்கு கொப்பளித்தது. தொண்டை எரிந்தது. அவ்வளவு கசப்பு. கசப்பின் நெருப்பு.

‘ஓ லுக்மான் ! இந்தக் கசப்பையா முகம் சுளிக்காமல் உண்டார்கள் ?! எப்படி இந்த விஷத்தை விஷ முறிவாக்கினீர்கள் ? இந்தக் கொடுமையை எப்படிக் கனிவாக்கினீர்கள் ? என்ன மகத்தான பொறுமை இது! ஏதாவது சாக்குச் சொல்லி என்னை சாப்பிட வைத்திருக்கலாமே ‘ என்று அங்கலாய்த்தார் எஜமான்.

‘உங்கள் தாராள கைகளினால் நான் எவ்வளவோ சாப்பிட்டிருக்கிறேன். உங்கள் வள்ளல் தன்மையின் முன்னால் நான் கூனிக்குறுகி நிற்கிறேன். ஞானவானே! கசப்பான துண்டொன்று வந்துவிட்டது என்பதற்காக நான் தங்கள் கரங்களை அவமதிக்க முடியுமா ? என் உடம்பின் உப்பு ஒவ்வொன்றும் தங்கள் தாராளத்தினால் வளர்ந்ததுதானே ? ஒரேயொரு கசப்பான பொருளுக்காக நான் முறையிட்டால் அது முறையாகுமா ? பழம் கசப்பானதாக இருந்தாலும் கொடுத்த கை இனிப்பானதாயிற்றே! ‘ என்றார்கள் லுக்மான்.

கசப்பானவற்றையெல்லாம் இனிப்பாக்குகிறது அன்பு. செம்பை தங்கமாக மாற்றுகிறது. வலிகள் நிவாரணமடைகின்றன. இறந்தவை உயிர் பெறுகின்றன. அரசனும் அடிமையாகிறான் அன்பினால்.

கடலலை நுரையின்மீது குதிரைச் சவாரி செய்ய நினைப்பதும், மின்னல் ஒளியில் கடிதம் படிக்க நினைப்பதும் நோக்கம் நிறைவேற்றும் பாதையல்ல. மின்னல் ஒளி தற்காலிகமானது. தன்மீது நம்பிக்கை வைப்பவர்களைப் பார்த்து அது நகைக்கிறது. உடம்பு தற்காலிகமானது. அது முடிவையோ முடிவானதையோ அறியாது. நம்பிக்கை இறையச்சம் ஆகிய இரண்டு சிறகுகளின் மூலம்தான் பறக்க முடியும்.

சுவர்க்கத்தையும் அதன் அரண்மனைகளையும் நெருப்பில் காணவேண்டுமெனில் அதற்கு இப்ராஹீமுடைய மனது வேண்டும்.

****

தாவூது(டேவிட்) — ஒரு இறைத்தூதர். இரும்பை உருக்கும் கலையை அவருக்குக் கற்றுக்கொடுத்திருந்தான் இறைவன்.

இப்ராஹீம் (ஆப்ரஹாம்) — ஒரு இறைத்தூதர். இறைவன் ஒருவன், அவன் உருவமற்றவன் என்ற உண்மை சொன்னதற்காக அவரை நெருப்புக் குண்டத்தினுள் எறிந்தான் நிம்ரூது என்ற அரசன். ‘யா நாரு, கூனி பர்தன் ‘ (ஓ நெருப்பே, குளிர்வாயாக!) என்று இறைவன் இட்ட கட்டளைக்கு இணங்க அக்கினி குளிர்ந்தது. நெருப்புக் குண்டம் அவருக்கு சுவர்க்கப் பூங்காவானது.

— தொடரும்

****

ruminagore@yahoo.com

ruminagore@hotmail.com

http://abedheen.tripod.com/nagorerumi.html

http://nagorerumi.blogspot.com/

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி