இன்னுமொரு உலகம்…….

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

சந்ர.ஆகாயி.


லண்டனில் குளிர் கரைந்து வெயில் சற்று அதிகமாய் இருக்கிற ஒரு கோடை காலமது! அவசரமாய் வீடு மாற வேண்டிய சூழ்நிலை! உடனே மாறினால் வீடு சொந்தமாக வாங்குவதற்காக council தரவிருக்கும் ஒருசில ஆயிரம் பவுண்கள் நமக்குக் கிடைத்துவிடும் , இல்லையேல் அந்த ஆயிரங்களைக் கோட்டை விட்டுவிடுவோம்…..அதுமட்டுமில்லை சொந்த வீடு வாங்குவதற்குாிய அருமையான சந்தர்ப்பத்தையும் கோட்டைவிட்டு விடுவோம் என்பது மனவருத்தத்திற்குாிய உண்மை நிலையாக இருந்தது.

வீட்டில் பூனைக்குட்டிகள் மாதிாி ஒரே size ல் மூன்று குட்டிகள்! – என் குட்டிகள்.! ஒவ்வொரு வயது வித்தியாசம் உண்டு, ஆனாலும் ஒரே size மாதிாித்தான்! மூத்ததும் இரண்டாவதும் ஆண்குட்டி என்றால் மூன்றாவது பெண்குட்டி. இந்த இரண்டாவது ஆண்குட்டி இருக்கிறதே…..வாலில்லாத குறை என்று தான் நான் நினைப்பதுண்டு…அத்தனை…அது..! பாய்ச்சல், வீச்சல் எல்லாம் சிந்தனையிலும் சாி செயலிலும் சாி கொஞ்சம் அதிகம் தான்! போகட்டும்!

சில நலன்களைக் கருத்தில் கொண்டு அவசரமாய் வீடு மாறுவதால் வேறு பல கஷ்ட நஷ்டங்களையெல்லாம் கவனிக்க நேரமிருக்கவில்லை. ஒருமாதிாி வீடு மாறியாகிவிட்டது! சாமான்களெல்லாம் கொண்டு வந்து முன் hall ல் குவித்தாகி விட்டது. என் கணவருக்கு ஆறுதலாக சற்று நிதானத்துடன் அடுக்கி வைப்பதிலெல்லாம் பொறுமையோ அக்கறையோ கிடையாது என்பது வேறுவிடயம்! நான் என் குழந்தைக்குட்டிகளைக் கவனிப்பதா அல்லது துருக்கிக்காாி வளர்த்த நாயின் உரோமங்கள் எங்கெங்கு ஒளிந்து கிடக்கிறது என்று தேடித்தேடி நிலத்தில் விாிக்கப்பட்டிருக்கும் carpet ஐ துப்புரவு செய்வதா அல்லது பசிக்கொதியில் இருக்கும் கணவரைச் சமாதானப் படுத்துவதா அல்லது குவிக்கப்பட்டிருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக அடுக்கத் தொடங்குவதா என்று…..எண்ணுக்கணக்கற்ற சிக்கல்களோடு திக்குமுக்காடிக் கொண்டிருந்த வேளை, ஒருத்தி வந்தாள். வாயில் கதவு திறந்திருந்ததால் கேட்டுக் கேள்வியில்லாமல் சிாித்த முகத்துடன் உாிமையான தோரணையில் வந்தாள். கோணல் மாணலாய் இறக்கப்பட்டுக் கிடந்த எமது சோபாக்களில் ஒன்றில் தானாகவே அமர்ந்தாள். இருபத்தைந்து வயது இருக்கும் . அவளோடு கூடவே ஒரு சின்ன மகளும்-அவளும் நல்ல நிறமாக அழகாக இருந்தாள். என் மூத்த குட்டியைப் போலவே வயதும் உயரமும் இருப்பதாய் தோன்றியது. நான் கணவரைப் பார்த்தேன்..கணவர் என்னைப் பார்த்தார். அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க முன்னரே ~நான் பக்கத்து வீடு ….நானும் Asian நீங்களும் Asian எணடதில எனக்கு நல்ல சந்தோசமாய் இருக்கு ‘ என்று கொச்சை ஆங்கிலத்தில் சொன்னாள். ~ இவள் பங்களாதேசத்தைச் சேர்ந்தவள் ‘ என்றார் என் கணவர். பின் என் கணவர் பங்காளிப் பாஷையிலேயே கதைக்கத் தொடங்கிவிட்டார். என் கணவருக்கு தன் மொழி தொிகிறதே என்பதில் அவளுக்கு ஒரே குஷி யாகிவிட்டது என்பது நன்றாகத் தொிந்தது. அவளின் குழந்தை கொஞ்சம் முசுடு போலும், என் குழந்தைகளுடன் விளையாடவோ பேசவோ தயாாில்லைப் போல நின்றுகொண்டிருந்தது.

பேச்சுத் தொடர, நான் என் வேலைகளைத் தொடர்நது கொண்டிருந்தேன். அவள் இடையிடையே எழுந்து வந்து எங்கள் வீட்டைச் சுற்றிப் பார்ப்பதும் பின் குவிக்கப்பட்டிருந்த எமது சாமான்களை நோட்டம் விடுவதுமாய் என் கணவருடன் தன் கணவரைப் பற்றிக் கொஞ்சமாகவும் எமது சொந்த விடயங்களை ஆராய்வதில் அதிக கவனத்துடனும் உரையாடிக் கொண்டிருந்தாள். உரையாடல் ஆங்கிலம் கிந்தி என்றும் உருண்டு பிரண்டுகொண்டிருந்தது!

கடைசியாக என்னிடம் வந்தாள்…..என் kitchenஐ மிக நன்றாக இரசித்தாள். நான் அதிர்ஷ்டக்காாி என்றாள். kitchen க்குள் இருந்த ஜன்னலை செளகாியமாக திறந்து வைத்து விட்டு சமைக்கும்படியும் சமையல் மணத்தால் தானேதும் குறைப்படுவேனென்று நினைத்து யோசிக்கவேண்டாமென்றும் சொன்னாள்.

எனக்கு அது கொஞ்சம் touchingஆகத்தான் போய்விட்டது! பிறகு அவள் நிறைவான ஒரு விடைபெறுதலுடன் போய்விட்டாள். அவளின் வீட்டிற்கும் எமது வீட்டிற்குமிடையில் இருப்பது ஒரு சுவர் மட்டும் தான். அங்கு வீட்டிற்குள் நிகழும் சத்தங்களெல்லாம் அனேகமாக வஞ்சகமில்லாமல் இங்கு எமக்குக் கேட்கும். அது போலவே எமதுமாயிருக்கும்.

இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. ஓரளவு சாமான்கள் அடுக்கி விட்டேனாயினும் ஒழுங்கு படுத்துவதற்கு இன்னும் நிறைய வேலைகள் இருந்தன. எமது வீட்டின் பின் வளவின் வேலியால் அதே அவள் கூப்பிட்டுக் கேட்டது. ஓடினேன். சிநேகத்துடன் குசலம் விசாாித்தேன். இதமாகக் கதைத்துவிட்டு…மெதுவாக……

~ இருவாின் வீட்டையும் பிாித்து நிற்கும் இந்தக் குறுக்கு வேலியில் ஒரு வாசல் அமைத்து விடு …அடிக்கடி நாம் வந்து போக உரையாட வசதியாகஇருக்கும் ‘ என்றாள்.

~ சாி நான் கணவருடன் கதைத்து விட்டு சொல்கிறேன் ‘ என்றேன் நான்.

~ உந்தப் புல் வெட்டுகிற மெஷினை இண்டைக்குத் தாறியா….நான் வெட்டிவிட்டு பின்னேரம் தாறன் ‘ என்றாள்.

அட, இப்படித் திடுமென்று கேட்டு விட்டாளே என்று நானும் சிநேகத்தனத்துடன் உடனேயே கொடுத்து விட்டேன்……அன்றிலிருந்து ஆரம்பித்த பிரச்சனை எனக்கும் கணவருக்குள்ளும் இன்னும் தீர்ந்தபாடில்லை என்பது ஒரு அலுப்பான விடயம்! ஏனெனில் அந்த புல் வெட்டுகிற மெஷினைப் பழுதாக்கிவிட்டு திருப்பி அவள் தந்தது 6ம் நாள் தான்! அதன் பின் 2 முட்டை……பிறகு 4 உருளைக்கிழங்கு…….அதற்குப் பிறகு கொஞ்சம் புளி……பின்பு பல தடவை தேசிக்காய்…..பிறகு பலதடவை வெங்காயம்…….அதன் பிறகு பல தடவை நெருப்புக்குச்சி…….பிறகு சமையல் எண்ணெய்….பிறகு shampoo கொஞ்சம்……பின்பொருதடவை அர்த்தஜாமத்தில் கதவு தட்டிக் கொஞ்சம் பால்(தன் பிள்ளைக்கு)……..பிறகு சீனி பலதடவை………மைசூர்பருப்பு…..இப்படியே …..வேலியால் வேண்டும் பொருட்களின் வேகம் கூடத்தொடங்கும் போதே…..வேலியில் வாசல் வைப்பதில்லை என்று என் கணவர் என்னிடம் தீர்மானமாகச் சொல்லி விட்டார்!

இரண்டு வருடங்கள் வேலியால் கொடுத்துக் கொடுத்தே அநியாயமாக ஓடிவிட்டது! என் மூன்று குட்டிகளும் சற்று வளர்ந்து விட்டார்கள். என் இரண்டாவது குட்டிக்கும் எப்பவும் வேலிக்கடன்காாியின் பிள்ளையுடன் போட்டியாகத்தான் இருந்தது! அந்தப் பிள்ளைககு என் மூத்த பையனின் வயது தான் ஆனாலும் எப்பவும் என் சின்னப்பையனுடன் தான் போட்டியாக இருந்தது. அதற்குக் காரணம், என் மூத்த பையன் வலும் அமைதி…..அதுமட்டுமல்ல அவனுக்கு ஆட்களைப் புண்படுத்துவதும் பிடிக்காத விடயம். அதனால் அவனை யாரும் தூற்றினாலும் கூட சில வேளைகளில் சிாித்துவிட்டு சாமியார் போலப் பேசமல் வந்து விடுவான்! ஆனால் இதற்கு எதிர்மாறு என் இரண்டாவது குட்டி!

என் குட்டிகள், மற்றும் அவளின் குட்டி எல்லாம் ஒரே பாடசாலையில் படிப்பதால் போட்டி வலுப்பதற்கும் பல சந்தர்ப்பங்கள் தாமாக வந்து சேர்ந்து கொண்டிருந்தன. அவர்கள் வேலியால் எண்ணுக்கணக்கற்ற பொருட்களை எம்மிடம் கேட்டு வாங்கிக்கொண்டிருப்பது என்னை விட என் சின்னப் பையனை அதிகம் அருட்டிக்கொண்டிருந்திருப்பதுவும் இந்தப் போட்டிபூசல்ககளின் போது தான் எனக்கும் தொியவந்தது. பக்கத்து வீட்டுக்காாியின் மகள் பல தடவை முன்வாயிலால் வந்து எம்மிடம் தாய் சொல்லியனுப்பிய பொருட்களை கேட்டு வாங்கிப்போனாலும் அந்தக் குழந்தைத் திமிர் குறையாமல் தான் எப்பவும் பாடசாலையில் என் குழந்தைகளோடு பழகுகிறாள் என்று என் சின்னப்பையன் பல தடவை சொல்லி முறையிட்டிருக்கிறான். ஆனாலும் அதையெல்லாம் நான் அதிகம் பொருட்படுத்தவில்லை. எங்கள் car இலிருந்து நாம் பாவிக்கும சகல பொருட்களையும் ஒரு பொறாமைத்தனத்துடன் கேலி செய்வதாகவும் என் சின்னப் பையன் பல தடவைகள் சொல்லியிருக்கிறான். அப்பவும் நான் அதிகம் பொருட்படுத்தவில்லை. ~நீ ஏடாகூடமாய் எதுவும் கதைத்து யாரையும் புண்படுத்தாதே ‘ என்று தான் நான் எப்பவும் புத்தி சொல்லி விடுவேன்.

ஒரு நாள் …..பாடசாலையிலிருந்து என் பிள்ளைகளைக் கூட்டி வர முடியாமல் நான் வேறொரு மரணச்சடங்கில் நின்றிருந்தேன். அதனால் அந்தப் பக்கத்து வீட்டுக் காாிக்குphoneல் என் நிலைமையைக் கூறி என் பிள்ளைகளை அழைத்து வர ஏற்பாடு செய்தேன். அவளும் மறுக்கவில்லை….ஏனெனில் அவளின் பிள்ளையை நான் பல தடவைகள் எனது car இலேயே பள்ளிக்கு அழைத்துச் சென்று அழைத்து வந்திருக்கிறேன். ஆனால் என் பிள்ளைகளோ அன்று தான் அவர்களது carல் ஏறி வருகிற சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதுவும் அவளின் கணவர் தான் அன்று அழைத்துவந்திருக்கிறார். என் பிள்ளைகளிற்கு அந்தக் உயச ற்குள் அடித்த நாற்றம் தாங்க முடியாமல் மூக்கைப் பொத்தியபடி வந்திருக்கிறார்கள். சின்னவன் பொறுக்காமல் ~ ஏன் இதற்குள் இப்படி நாற்றம் அடிக்கிறது ‘ என்றும் கேட்டுவிட்டான். அதற்கு யாரும் எந்தப் பதிலும் சொல்லவில்லையானாலும் அந்த மனிதர் குடிக்கிற சிகரெட்டும் கஞ்சாவும் துப்பரவின்னையும் தான் காரணமென்ற உண்மையை என் சின்னப்பையனிலிருந்து நாமனைவரும் கண்டு பிடித்துவிட்டோம். சின்னவனின் இந்தக் குசும்புக் கதைகளெல்லாம் என் மூத்த பையன் தான் வந்து எம்மிடம் சொல்வதுண்டு என்பது சின்னவனுக்கு அவ்வளவாகத் தொியாது என்பதுவும் ஒரு விதத்தில் வசதியாகவிருந்தது வேறுவிடயம்!

பிறகும் சில மாதங்கள் ஓடிவிட்டன. என் சின்னக்குட்டி இப்போ சின்னப் பையனல்லவா…..இதனால் எம்மை மீறியும் சில சுட்டித்தனங்கள் செய்யத் தொடங்கிவிட்டிருந்தான். ஆனால் யாவற்றையும் ஆராய்ந்து பார்த்தால் எல்லாம் சாிபோலத்தான் எனக்குத் தோன்றும். அதனால் நான் அவனுக்கு கண்டித்து அடி போட்டாலும் அடுத்த நிமிடமே என் கோபமும் மாறிவிடும்.

ஒருநாள்…..என் மூத்த பையனுக்கு secondary school exam நடைபெற்றபோது 3 புள்ளிகளால் அவன் ஒரு நல்ல school admission ஐத் தவற விட்டு விட்டான். அதே பரீட்சையில் முதலாம் இருப்பில் பக்கத்து வீட்டுக் காாியின் மகள் தேறிவிட்டாள். இது அவளின் பொறாமையைத் தீர்ப்பதற்கு ஒரு வடிகாலாய் அமைந்து விட்டிருந்தது. இதை வைத்து பாடசாலையில் இடைவேளை நேரத்தில் மாணவர்கள் ஒன்றாக விளையாடிக்கொண்டிருக்கும் நேரம் பார்த்து ~உன் மூத்தசகோதரன் மொக்கு ….நான் சித்தியடைந்த பரீட்சையில் அவன் பெயிலாகி விட்டான் ‘ என்று நெளிப்புச் சுளிப்புகளோடு என் சின்னப்பையனைக் கிண்டலடித்திருக்கிறாள். இவனுக்கு அழுகை வந்திருக்கிறது. வீட்டிற்கு வந்ததும் வெம்பிப வெதும்பி விசயத்தைச் சொன்னான். நானோ மூத்தவன் பரீட்சையில் தவறியதில் நொந்து போயிருந்ததால் அப்பவும் அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகக் கவனிக்கவில்லை!

பின்பு இரண்டாம் அமர்வில் பக்கத்து வீட்டுக்காாியின் மகளும் பெயிலாகியது வேறு பிரச்சனை. சில நாட்கள் கழிய பக்கத்து வீட்டுக்காாி பின் வேலியால் என்னை அழைத்தாள். ~உன் வீட்டில் எலி நிற்கி றதா ‘ என்று கேட்டாள். நான் ~இல்லையே ‘ என்றேன்.

~என் வீட்டில் நிறைய எலிகள் வந்து விட்டன…என் சோபாக்களைப் பிய்த்துவிட்டன….என் சமையலறையில் தானியங்களைக் கொட்டிச் சிந்துகின்றன…என்ன செய்யலாம் ? ‘ என்று என்னிடம் அழாத குறையாகக் கேட்டாள். நானும்~ council க்கு அறிவித்து உடனே ஆவன செய் ‘ என்று சொன்னேன்.

ஒரு பாடசாலை விடுமுறை வந்து போனது……பின்பு பாடசாலை தொடங்கியதும் யார் யார் எந்தெந்தப் பாடசாலைகளிற்கு எடுபட்டிருக்கிறார்கள்(செக்கன்டாிக்காக) என்ற ஆராய்ச்சிகள் எல்லாம் பாடசாலையில் பாிமாறப்பட்டுக்கொண்டிருந்திருக்கிறது. பக்கத்து வீட்டுக்காாியின் மகள் திரும்பவும் என் சின்னப்பையனுக்குக் கேட்கும்படியாக ~இருந்தாலும் முதலாம் இருப்பில் கூட உன் மூத்தசகோதரன் சித்தியாகவில்லை….நான் அதிலாவது தேறினேன். உன் சகோதரன் மொக்கு…. ‘ என்று ஏதேதோ வம்பிற்கிழுத்திருக்கிறாள். அவ்வளவு தான் ~என் அண்ணாவுக்கு அந்தப் பாடசாலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை….அதைப்போலவே இன்னுமொரு நல்ல பாடசாலை கிடைத்திருக்கிறது….அதனால் நாம் அதைப்பற்றி கவலைப் படவில்லை. நீ வாயைப்பொத்து…. ‘ என்று பொாிந்து தள்ளியிருக்கிறான் என் சின்னப் பையன்! பிரச்சனை நீண்டிருக்கிறது!

அன்று பின்னேரம்……பாடசாலை முடிவடைந்த பின் …..பக்கத்து வீட்டுக்காாி…வேலியால் என்னை அவசரமாக அழைத்தாள்…….நானும் ஓடினேன்.

~உன் சின்னப்பையன்….பாடசாலையில் எல்லோருக்கும் முன்னால் வைத்து என் மகளைக் காட்டி …..இவர்களின் வீட்டில் நிறைய எலிகள் நிக்கிறது என்று பகிடி பண்ணியிருக்கிறான்…..எல்லோரும் சிாித்திருக்கிறார்கள்…அது மட்டுமில்லை…..எங்கள் வீட்டு முட்டை…உப்பு……வெண்காயம் எல்லாம் சாப்பிட்டுத்தான் இவளுக்கு இப்படி வாய் கொழுத்திருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறான். இப்போ என் மகள் வந்ததிலிருந்து அழுதுகொண்டேயிருக்கிறாள் ‘ என்று சோகமாகச் சொன்னாள்.

நானும் ~அப்படியா சாி நான் என் மகனைக் கேட்கிறேன். நீ அதுபற்றிக் கவலைப் படாதே ‘ என்று சொல்லி ஒரு மாதிாி அவளைச் சமாதானப்படுத்தி விட்டு வந்து விட்டேன்.

என் சின்னப்பையன் விளையாடிக்கொண்டிருந்தான். நான் அவனைக் கூப்பிட்டு நடந்தவற்றைக் கேட்டேன்.

அவன் சொன்னான்…~ அம்மா…அவள் என் அண்ணாவை எந்த நேரமும் மொக்கு என்று எல்லோர் முன்னிலையிலும் நக்கலடித்து என்னை மட்டம் தட்டுகிறாள்…இண்டைக்கும் அது போலவே சொன்னாள்…..அதனால் தான் நான் அப்படிச் சொன்னேன்…….. ‘ என்றான்

நான் சிறு தடியைத் தூக்கினேன்….~அதற்காக வீட்டுக்கதைகளை இப்படிப் பாடசாலையில் சொல்லுவதா… ‘ என்று வெருட்டினேன். அவன் உடனே விம்மி அழத்தொடங்கிவிட்டான்..~அம்மா…நான் அவர்களின் வீடு ஊத்தை என்றோ….அவர்களின் carற்குள் நாற்றம் என்றோ…..அவர்களின் அப்பா கஞ்சா குடிக்கிறவர் என்றோ..சிகரெட் புகைக்கிறவர் என்றோ….அதுமட்டுமில்லையம்மா….முட்டை, வெண்காயம், உப்பு ….இவற்றைத்தவிர உருளைக்கிழங்கு….மிளகாய்…பால்…..எண்ணெய்…..தீக்குச்சி…..புளி…தேசிப்புளி….இதுகளெல்லாம் வேண்டிறதைப்பற்றிச் சொல்லேல்லை………உங்கட கையிலையிருந்த காப்பை ஒருக்கால் கலியாண வீட்டுக்குப் போடுறதுக்கு கேட்டுவாங்கினதைப் பற்றியும் சொல்லேல்லை…… ‘ அவன் விம்மி விம்மி அழுதவாறே சொல்லிக் கொண்டிருந்தான். இன்னுமின்னும் ஏதேதோ சொல்ல வாயெடுத்தான்…..நான் விடவில்லை….அப்படியே கட்டியணைத்துக் கொண்டேன். அடக்க முடியாத சிாிப்பு என்னுள் பிரவாகமெடுக்க……உள்ளே வந்து கொண்டிருந்த என் கணவரும் விசயத்தைக் கேட்டுச் சிாிக்கத்தொடங்கிவிட்டார்…..மொத்தத்தில் வீடே சிாித்துக் குலுங்கிக்கொண்டிருந்தது!!!!!

***

eravi@onetel.net.uk

Series Navigation

சந்ர.ஆகாயி.

சந்ர.ஆகாயி.