கனடாவில் நாகம்மா

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

மணி வேலுப்பிள்ளை


இடம்: கனடாவில் ஒரு நீதிமன்றம்.

காலம்: 1985 நவம்பர் 7, மு.ப. 10 மணி.

(நீதிமன்றக் கூடத்தினுள் பதிவாளர், அரச வழக்குத் தொடுநர், அறிக்கையாளர், மொழிபெயர்ப்பாளர்கள், காவலர்கள், குற்றம் சாட்டப்பட்டவர், அவருடைய சட்டத்தரணி, பார்வையாளர்கள் காணப்படுகிறார்கள். பதிவாளர் எழுந்து உள்ளே போய் நீதிபதியை அழைத்து வருகிறார்).

பதிவாளர்: எல்லோரும் எழுந்து நில்லுங்கள். (நீதிபதியைப் பணிந்து) கனம் நீதிபதி அவர்களே, வணக்கம். (அவையோரைப் பார்த்து) எல்லோரும் அமர்ந்து கொள்ளுங்கள்.

நீதிபதி: வணக்கம். (அரச வழக்குத் தொடுநரைக் கேள்விக்குறியுடன் பார்க்கிறார்).

அரச வழக்குத் தொடுநர்: வணக்கம், கனம் நீதிபதி அவர்களே. எனது பெயர் மைக்கேல் கானலி. நான் சட்ட மா அதிபரின் பிரதிநிதியாய் வந்திருக்கிறேன்.

நீ: வணக்கம், திரு. கானலி.

அ.வ.தொ: இன்றைய தினம் ஒரே ஒரு வழக்கிற்காகவே ஒதுக்கப்படுள்ளது, கனம் நீதிபதி அவர்களே.

நீ: ஆம், அதை விசார்ிக்க ஆயத்தமாய் இருக்கிறேன்.

அ.வ.தொ: அரச தரப்பும் விளக்கத்துக்குத் தயராய் இருக்கிறது, கனம் நீதிபதி அவர்களே. இது முழுநாள் விசாரணை என்றபடியால், இரண்டு தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

நீ: நல்லது. குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பும் தயாரா ?

சட்டத்தரணி: கனம் நீதிபதி அவர்களே, வணக்கம். எனது பெயர் மொஹான் ஜொனேதன். நான் குற்றம் சாட்டப்பட்டவரின் சட்டத்தரணியாக வந்திருக்கிறேன். நானும் என்னைச் சார்ந்த திரு.ஏரம்பு பொன்னுத்துரையும் விசாரணைக்குத் தயாராய் இருக்கிறோம்.

நீ: வணக்கம், திரு.ஜொனேதன்.

அ.வ.தொ: கனம் நீதிபதி அவர்களே, உங்கள் விளக்க நேரங்களை அறிய விரும்புகிறோம்.

நீ: நான் பொதுவாக மு.ப.11.30 மணிக்கு காலை இடைவேளை விட்டு, மீண்டும் 11.45 தொடக்கம் பி.ப. 1 மணி வரை விளங்கி, பகல் இடைவேளை விட்டு, பி.ப. 2 முதல் 3.45 வரை விளங்கி, மீண்டும் 4 மணி முதல் 5 மணி வரை விளங்குவது வழக்கம்.

அ.வ.தொ: நன்றி, கனம் நீதிபதி அவர்களே. திரு.ஏரம்பு பொன்னுத்துரை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வாசிப்பதற்கு ஆணையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நீ: (பதிவாளரிடம்) குற்றச்சாட்டை வாசிக்கவும்.

ப: திரு.ஏரம்பு பொன்னுத்துரை…

ஏ.பொ: (எழுந்து முன்னே வந்து நிற்கிறார்).

ச.த: (குற்றம் சாட்டப்பட்டவருடன் நெருங்கி நிற்கிறார்).

ப: திரு.ஏரம்பு பொன்னுத்துரை ஆகிய நீர் 1984 ஜூன் 22ம் திகதி பி.ப. 6 மணி அளவில் நீர் வாடகைக்குக் குடியிருக்கும் தொடர்மாடி வீட்டு யன்னலுக்குப் பாரிய சேதம் விளைவித்த குற்றத்தைப் புரிந்திருக்கிறீர். அத்துடன் அயலவர்கள் அச்சம் கொள்ளும் வண்ணம் சத்தம் போட்டு அமைதிக்குப் பங்கம் விளைவித்த குற்றத்தையும் புரிந்திருக்கிறீர். அத்துடன் உமது வீட்டு யன்னலூடாக ஒரு கரடுமுரடான பொருளை வெளியே வீசி, கீழே நின்ற ஒரு காருக்குப் பலத்த சேதம் விளைவித்த குற்றத்தையும் புரிந்திருக்கிறீர். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் உமது மறுமொழி என்ன ? நீர் குற்றவாளியா, அல்லவா ?

ச.த: கனம் நீதிபதி அவர்களே, என்னைச் சார்ந்த திரு.ஏரம்பு பொன்னுத்துரை குற்றவாளி அல்ல என்று, அவர் சார்பாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.

நீ: சரி. (அ.வ.தொ.விடம்) திரு.கானலி, உங்களுடைய முதலாவது சாட்சியைக் கூப்பிடுங்கள். (குற்றம் சாட்டப்பட்டவரிடம்) திரு.பொன்னுத்துரை, நீங்கள் அமர்ந்து கொள்ளலாம்.

அ.வ.தொ: அரச தரப்பில் முதலாவது சாட்சி தம்பிராசா நாகம்மா.

ப: (ஒலிபெருக்கியில்) தம்பிராசா நாகம்மா, தம்பிராசா நாகம்மா, தம்பிராசா நாகம்மா, 409ம் இலக்க நீதிமன்றக் கூடத்துக்கு வரவும்.

நாகம்மா: (காவலர் பின்தொடர முன்னே வருகிறார்).

நீ: அம்மா, இப்படி வந்து சாட்சிக் கூண்டில் ஏறுங்கள். உஙளுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா ?

நா: ஆமாம், ஐயா.

நீ: நீங்கள் பகவத் கீதையிலா, வேதாகமத்திலா, குறானிலா சத்தியம் செய்யப் போகிறீர்கள் ?

நா: திருக்குறள் இருந்தால், தாருங்கள்.

நீ: அம்மா, நீதிமன்றத்தில் கீதை, வேதாகமம், குறான்… ஒரு மறை நூலில் சத்தியம் செய்வதுதான் முறை.

நா: ஐயா சொன்னால் சரி. இருந்தாலும் திருக்குறளைத் தமிழ் மறை என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள், ஐயா.

நீ: அம்மா, எனக்கு அதைப் பற்றி எல்லாம் தெரியாது. மூன்றில் ஒரு புத்தகத்தில் சத்தியம் செய்ய வேண்டும். அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் போல உறுதிமொழி தரவேண்டும்.

நா: உறுதிமொழி தருகிறேன், ஐயா.

நீ: நன்றி, அம்மா. பதிவாளர் உங்கள் உறுதிமொழியைப் பெற்றுக்கொள்வார்.

ப: (சாட்சியிடம்) வலது கையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, உங்கள் முழுப் பெயரைச் சொல்லுங்கள், அம்மா.

நா: எனது தகப்பனார் பெயர் தம்பிரசா. எனது பெயர் நாகம்மா.

அ.வ.தொ: கனம் நீதிபதி அவர்களே, சாட்சியின் முழுப் பெயர் தம்பிராசா நாகம்மா.

நீ: நன்றி, திரு.கானலி.

ப: தம்பிராசா நாகம்மா, உங்களால் இந்த நீதிமன்றத்துக்கு அளிக்கப்படும் சாட்சியம் உண்மையே என்றும், அது முற்றிலும் உண்மையே என்றும், அது உண்மையே அன்றி வேறொன்று அல்ல என்றும் உறுதிமொழி அளிக்கின்றீர்களா ?

நா: திருவள்ளுவராணை உறுதி அளிக்கிறேன்.

நீ: இல்லை, ஆம் அல்லது இல்லை என்று மாத்திரம்தான் சொல்ல வேண்டும்.

நா: ஆம்.

நீ: நன்றி, அம்மா. அமர்ந்து கொள்ளுங்கள். தயவுசெய்து உரத்து, ஆறுதலாகப் பேசுங்கள். கேள்விகள் விளங்கவில்லை என்றால், விளங்கவில்லை என்று சொல்லலாம். கேட்கவில்லை என்றால், கேட்கவில்லை என்று சொல்லலாம். மறந்துவிட்டால், மறந்துவிட்டதாகச் சொல்லலாம். விளங்காமல், கேட்காமல், நினைவில்லாமல் ஊகித்து மறுமொழி சொல்லத் தேவையில்லை. கேட்ட கேள்விக்கு மறுமொழி சொன்னால் போதும். கேட்காத கதை பேசத் தேவையில்லை… நான் சொல்வது புரிகிறதா, அம்மா ?

நா: ஆமாம், ஐயா.

நீ: சின்னசின்ன வசனங்களில் மறுமொழி சொல்ல வேண்டும். தாகம் எடுத்தால், இதோ தண்ணீர் இருக்கிறது. நீங்களே வார்த்துக் குடிக்கலாம். ஏதாவது தேவைப்பட்டால், தயங்காது கேட்கலாம். இடைவேளை தேவை என்றால் கேட்கலாம். சரிதானே, அம்மா ?

நா: சரி, ஐயா. ஏதும் தேவைப்பட்டால், கேட்கிறேன்.

நீ: நீங்கள் நிற்கத் தேவையில்லை. இருந்துகொண்டே மறுமொழி சொல்லலாம்.

நா: நன்றி, ஐயா (அமர்கிறார்).

நீ: (அ.வ.தொ.விடம்) திரு.கானலி, உங்கள் நேர் விசாரணையை ஆரம்பிக்கலாம்.

அ.வ.தொ: நன்றி, கனம் நீதிபதி அவர்களே. (சாட்சியிடம்) தம்பிராசா நாகம்மா, நீங்கள் வேறு பெயர் எதுவும் பாவிப்பதில்லையா ?

நா: இல்லை.

அ.வ.தொ: பொதுவாகத் திருமணம் முடித்த பெண்கள் தங்கள் கணவன்மாரின் பெயர்களையே குடும்பப் பெயராகப் பாவிப்பார்கள்.

நா: உண்மைதான். ஆனால் எனது கணவர்தான் தனது பெயரைப் பாவிக்க வேண்டாமென்று சொன்னார். ஏன் என்று எனக்குத் தெரியாது. அவரிடமே கேட்கலாமே!

அ.வ.தொ: சரி, அம்மா. அதை விட்டுவிடுவோம். உங்கள் விலாசம் என்ன என்று அறியலாமா ?

நா: நாவலர் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.

அ.வ.தொ: கனடாவில் உங்கள் விலாசம் என்ன என்று கேட்டேன்.

நா: கட்டிடத்து இலக்கம் 123, மாடி இலக்கம் 1601, மார்க்கம் வீதி, ரொறன்ரோ.

அ.வ.தொ: அந்த விலாசத்தில் எவ்வளவு காலமாக வசிக்கிறீர்கள் ?

நா: ஆறேழு மாதங்களாக.

அ.வ.தொ: வேலைக்குப் போவதுண்டோ, அம்மா ?

நா: இல்லை.

அ.வ.தொ: 1984 யூன் 22 பி.ப.6 மணி அளவில் உங்கள் வசிப்பிடத்தில் நடந்த சம்பவம் நினைவில் இருக்கிறதா ?

நா: இருக்கிறது.

அ.வ.தொ: அன்று உங்கள் மாடி வீட்டுக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டதா ?

நா: யன்னல் கண்ணாடி உடைந்துவிட்டது.

அ.வ.தொ: எப்படி உடைந்தது ?

நா: எனது கணவரால்தான் உடைந்தது.

அ.வ.தொ: உங்கள் கணவரால் யன்னல் கண்ணாடி எப்படி உடைந்தது ?

நா: ரேடியோவை எறிந்து உடைத்தார்.

அ.வ.தொ: யார் ?

நா: எனது கணவர்.

அ.வ.தொ: அவர் நீதிமன்றத்தில் இருக்கிறாரா ?

நா: அதோ இருக்கிறார்.

அ.வ.தொ: (நீதிபதியிடம்) கனம் நீதிபதி அவர்களே, சாட்சி குற்றம் சாட்டப்பட்டவரை இனம் காட்டியிருக்கிறார்.

நீ: ஆம், அவ்வாறே பதியப்படும்.

அ.வ.தொ: (சாட்சியிடம்) நன்றி, அம்மா.

நா: எனது கணவருக்குத் தானே வழக்கு ? எனக்கொரு வழக்கும் இல்லைத் தானே, ஐயா ?

அ.வ.தொ: உங்கள் கணவருக்குத் தான் வழக்கு. நீங்கள் சாட்சி. வேறு சேதம் ஏதாவது ஏற்பட்டதா ?

நா: இல்லை, ஐயா. தேவை என்றால், கட்டிடத்து ஆட்களைக் கேட்டுப் பாருங்கள். வேறு சேதம் இல்லை.

அ.வ.தொ: உங்கள் கணவர் வீசிய வானொலிப் பெட்டியைக் காட்டினால், அடையாளம் காட்டுவீர்களா ?

நா: காட்டுவேன்.

அ.வ.தொ: (பதிவாளரிடம் வானொலிப் பெட்டியைப் பெற்று, சாட்சியிடம் காட்டி) அந்த வானொலிப் பெட்டி இது தானே, அம்மா ?

நா: (வானொலிப் பெட்டியை உற்று நோக்கி) இது தான். சில்ல பல்லமாய் நொருங்கி இருக்கிறது.

அ.வ.தொ: (நீதிபதியிடம்) கனம் நீதிபதி அவர்களே, இந்த வானொலிப் பெட்டியை ஒரு தடயமாக முன்வைக்கிறேன்.

நீ: (பதிவாளரிடம்) தடயம்-1.

அ.வ.தொ: (சாட்சியிடம்) யன்னல் கண்ணாடியை உடைத்த வானொலிப் பெட்டி எங்கே போய் விழுந்தது, அம்மா ?

நா: கீழே.

அ.வ.தொ: நிலத்திலா ?

நா: கீழே நின்ற காருக்கு மேலே போய் விழுந்தது.

அ.வ.தொ: காரின் எந்தப் பாகத்தில் விழுந்தது ?

நா: முகப்புக் கண்ணாடியில்.

அ.வ.தொ: கண்ணாடிக்கு ஏதாவது நேர்ந்ததா ?

நா: கண்ணாடி தகர்ந்தது.

அ.வ.தொ: வானொலிப் பெட்டியைக் கீழே நின்ற காரின் மேல் எறிந்து, அதன் முகப்புக் கண்ணாடியை உடைத்தவர் யார் ?

நா: எனது கணவர்.

அ.வ.தொ: அப்பொழுது அவர் ஏதாவது பேசினாரா ?

நா: பேச்சா அது ? ஒரே கத்தல்!

அ.வ.தொ: பதிலுக்கு நீங்களும் கத்தினீர்களா ?

நா: இல்லை. நான் கத்தவில்லை.

அ.வ.தொ: கணவர் மட்டும் தான் கத்தினார் ?

நா: கணவர் மட்டும் தான் கத்தினார்.

அ.வ.தொ: அக்கம் பக்கத்து ஆட்கள் எல்லாரும் பயந்து நடுங்கியிருப்பார்களே ?

நா: ஆமாம், ஐயா. மேல் வீட்டுச் சனம், கீழ் வீட்டுச் சனம், அயல் வீட்டுச் சனம் எல்லாரும் எட்டிப் பார்க்கிறதும், விட்டுட்டு ஓடுகிறதுமாய் நின்று, அப்புறம் பொலீசுக்கும் அறிவித்திருக்கிறார்கள்.

அ.வ.தொ: நீங்கள் பொலீசுக்கு அறிவிக்கவில்லையா ?

நா: எனது கணவரை நானே பொலீசிடம் பிடித்துக் கொடுப்பது சரியில்லை, ஐயா.

அ.வ.தொ: கணவரைப் பாதுகாப்பதற்காக பொலீசுக்கு அறிவிக்கவில்லை ?

நா: பொலீசுக்கு அறிவியாதது குற்றம் இல்லையே ?

அ.வ.தொ: உங்கள் மீது நான் குற்றம் கூறவில்லை, அம்மா.

நா: கணவரையும் எச்சரிக்கை செய்து விட்டுவிடுங்கள், ஐயா.

அ.வ.தொ: நான் நீதிபதி இல்லை, அம்மா!

நா: (நீதிபதியிடம்) ஐயா, என்னையும் கணவரையும் மன்னித்து விடுதலை செய்துவிடுங்கள். உங்களுக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும்.

நீ: அம்மா, உங்கள் மீது வழக்கு இல்லை. உங்கள் கணவர் மீது மாத்திரம் தான் வழக்கு. விசாரணை முடிவில் அவர் குற்றவாளியா அல்லவா என்று நான் தீர்ப்பளிப்பேன். அவரை நான் குற்றவாளியாகக் கண்டால், அதற்குரிய தண்டனை கொடுப்பேன். குற்றவாளியாகக் காணாவிட்டால், விடுதலை செய்வேன். சரி தானே, அம்மா.

நா: சரி, ஐயா.

நீ: (அ.வ.தொ.விடம்) நேர் விசாரணை தொடரட்டும்.

அ.வ.தொ: நன்றி, கனம் நீதிபதி அவர்களே. (சாட்சியிடம்) அந்த வானொலிப் பெட்டியின் பெறுமதி எவ்வளவு, அம்மா ?

நா: 54 டாலர், ஐயா.

அ.வ.தொ: நன்றி, அம்மா. (நீதிபதியிடம்) கனம் நீதிபதி அவர்களே, இத்துடன் எனது நேர் விசாரணையை முடித்துக் கொள்கிறேன்.

நீ: நன்றி, திரு.கானலி. (பதிவாளரிடம்) இப்பொழுது இடைவேளை விடுவது நல்லது என்று நினைக்கிறேன் (எழுகின்றார்).

ப: (அவையோரிடம்) எல்லோரும் எழுந்து நில்லுங்கள்.

அவையோர்: (எழுந்து நிற்கிறார்கள்).

ப: 15 நிமிட இடைவேளை.

அவையோர்: (வெளியேறுகிறார்கள்).

அ.வ.தொ: (சாட்சியை இடைமறித்து) அம்மா, நாகம்மா! உங்கள் சாட்சியம் இன்னும் முடிவடையவில்லை. இடைவேளையை அடுத்து உங்கள் குறுக்கு விசாரணை நடக்கும்.

நா: சரி, ஐயா. என்னையும் கணவரையும் சீக்கிரமே விட்டுவிடுங்கள் (வெளியேறுகிறார்).

காலை இடைவேளை

11:30 – 11:45

manivel7@hotmail.com

Series Navigation

மணி வேலுப்பிள்ளை

மணி வேலுப்பிள்ளை