பாருக்குட்டி

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

இரா.முருகன்


நான் மலையாளம் மற்றும் கிரிப்டாலஜி படிக்கப் போயிருக்காவிட்டால், போன மாதம் ஊருக்குப் போயிருக்காவிட்டால், இதை எழுதியே ருக்க மாட்டேன்.

இந்த நரை பாய ஆரம்பித்த மீசை, கண்ணாடி, கிருதா எல்லாவற்றையும் எடுத்து விட்டு, வயதிலும் கிட்டத்தட்ட நாற்பதைக் கழித்துக் கடாசி விட்டு, ஐந்தாம் கிளாஸ் படிக்கிற சின்னப் பையனாக என்னைப் பாருங்கள். பைஜாமாவாகத் தைக்க எடுத்து பாதியில் நிறுத்திய மாதிரி ஒரு டிராயர், மிட்டாய்க் கலரில் சட்டை, சிலேட், குச்சி சகிதம் குண்டு குண்டாக சுழித்துத் சுழித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். மலையாளத்தில். பக்கத்தில் குலசேகர பாண்டியன். அவன் இன்னும் இரண்டு பக்கம் போனதும் அறை வாங்கப் போகிறான்.

கரண்டிக் காம்பு உத்தியோக நிமித்தம் எப்போதோ அம்பலப்புழையிலிருந்து புறப்பட்டு வந்த குடும்பம் எங்களுடையது. அவியலும் எரிசேரியும் மெழுக்குப்புரட்டுமாக ஆரம்பித்த மலையாளச் சாப்பாட்டுக் கடை ருந்ததாக என் தாத்தா காட்டிய டத்தில் தான் குலசேகர பாண்டியன் பேன்ஸி ஷாப் வைத்திருந்தான்.

சிவப்பும் பச்சையுமாக பிளாஸ்டிக் குடம், மந்தித்தோப்பு மணிகட்டி சுவாமிகள் சந்தனாதி தைலம். ரப்பர் பந்து, ரெமி பவுடர், ஸ்னோ, மான் மார்க் குடை, நஞ்சன்கூடு பல்பொடி, ஒண்டிப்பிலி சர்பத் பாட்டில், அஞ்சால் அலுப்பு மருந்து, சந்திரிகா சோப், நாற்பது வாட்ஸ் பல்ப், சைபால், குணேகா செண்ட் என்று எந்த ஒரு தர்க்க ரீதியான தொகுப்புக்கும் உட்படாத பலதும் குலசேகர பாண்டியன் கடையில் நயமாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும்.

‘நாம மலையாளக்கரையை விட்டு வந்து நூறு வருஷத்துக்கு மேலே ஆச்சு.. உங்கப்பன் உள்ளூர் சிரஸ்தார் பொண்ணுதான் வேணும்னு சுத்த தமிழச்சியா உங்கம்மாவைக் கொண்டு வந்துட்டான் .. உங்க பாட்டிக்கு மலையாளம் எழுதத் தெரியும்.. எனக்கு பேச மட்டும் தான் வரும் ..உங்கப்பன் அரைகுறை.. .. இந்த லீவுக்காவது உனக்கு மலையாளம் சொல்லித் தர ஏற்பாடு செய்யணும்.. ராமுண்ணி நாயர் கிட்டேச் சொல்றேன் ‘

ராமுண்ணி நாயர் ராமுண்ணி நாயர் என்று ஒரு வழுக்கைத் தலைப் பேர்வழி தக்கலை, பத்மநாபபுரம், திசையன்விளை என்று ஏகப்பட்ட தாலுக்கா ஆப்பீஸ்களில் டவாலி சேவகம் பண்ணி எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்து இன்னும் கொஞ்சம் காகிதக் குப்பை கொட்டி ரிடையர் ஆனவர்.

இந்த ஊரில் என்னமோ பிடித்துப் போய் அவர் பென்ஷன் பணத்தோடு மலையாளக் கரைப் பக்கம் ஒதுங்காமல், இங்கேயே காந்தி வீதியில் ஒரு ஓட்டு வீட்டு வாசலில் கீற்றுக் கொட்டகை அடைத்து சாயாக்கடையும் வெற்றிலை பாக்குக் கடையுமாகப் போட்டுவிட்டார்.

தாத்தா மலையாளத்தில் பொடி போடவும், மலையாளத்தில் தும்மவும், மலையாளத்தில் சாயா குடிக்கவும் நாயர் கடைக்கு அவ்வப்போது போய் வந்து நாயர் அவருக்கு நேயர் ஆனார். அந்தத் தோழமையை நிலைநிறுத்தவும், நாயருக்கு நாலு காசு கிடைக்கவும், முழுப் பரீட்சை விடுமுறை சமயத்தில் எனக்கு மலையாள டியூஷன் ஏற்பாடு செய்து விட்டார் தாத்தா.

சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேன்ஸி ஸ்டோர் குலசேகர பாண்டியனும் என்னோடு மலையாள டியூஷனுக்கு வரக் காரணம் தாத்தா இல்லை. பாரு. ராமுண்ணி நாயரின் மகள். வர்ணிக்கச் சொல்லண்டா. டென்ஷனாகி விடுவேனாக்கும். ஒரு ஐந்தாம் கிளாஸ் பையனாக என்னைப் பார்க்கச் சொன்னேனே .. அந்த வயது வார்த்தைகளின் வரம்பில் – பாரு ஒரு தடிச்சி. சும்மா சதா சர்வ காலமும் பொரிகடலை மென்று கொண்டு கெக்கே என்று சிரித்துக் கொண்டு, தரையில் உட்கார்ந்து மலையாளத்தில் முறுக்குப் பிழிந்த மாதிரி வளைத்து நெளித்து எழுத முழி பிதுங்கிக் கொண்டிருக்கும் என் தலையில் குட்டிக் கொண்டு.

டா மாஸ்டர் ராமுண்ணி நாயர், வாத்தியார் அவதாரம் எடுத்தது கொஞ்சம் விசித்திரமானது. அறைக்கோடியில் அவர் எங்கள் பள்ளிக்கூடத்தில் ஏலத்தில் எடுத்த பழைய பிளாக் போர்ட். போர்டுக்கு அந்தப் பக்கம் டாக்கடை பாய்லர் உஸ்ஸ்ஸ்ஸ் என்று நீராவி மூச்சு விடும். போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் அழகுசுந்தரம் – இவர் ஸ்ரீராமஜெயம் எழுதிக்கூட நான் பார்த்ததில்லை – வீட்டு எருமை மாடுகள் கறந்த பால், பாரு அதில் கலந்த பச்சை வெள்ளத்தோடு ஒரு குட்டி அண்டாவில் காய்ந்து கொண்டிருக்கும்.

நாயர் பாலைக் கரண்டி பிடித்து ஒரு காய்ச்சுக் காய்ச்சி விட்டு ‘அவன் சாயா குடிச்சு ‘, ‘அவள் பரிப்பு வட தின்னு ‘ என்று டாக்கடை சமாசாரங்களையே பாடமாக்கி எங்களை எழுதச் சொல்லி விட்டு, ‘பொடி மோளே ‘ என்று கூப்பிட தடி மோளான பாரு பொரிகடலை வாயோடு வெளியே வருவாள். குலசேகர பாண்டியன் அப்படியே முகம் மலர்ந்து உட்கார்ந்து இருக்க, நான் எப்படா இந்த ராட்சசி போவாள் என்று விதியை நொந்து கொண்டு சாயாக் குடித்த, பருப்பு வடை தின்ற பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய விஷயங்களை சிலேட்டில் கிறுக்குவேன். குலசேகரபாண்டியன் ஒரு பைண்ட் நோட்புக்கில் அந்தக் கண்றாவியை எல்லாம் எழுதியபடி பாருவைப் பார்ப்பான். அவள் லட்சியமே செய்யாமல் என்னை மிரட்டிக் கொண்டிருப்பாள்.

குலசேகர பாண்டியன் ஒழுங்காகப் படித்திருந்தால் எஸ்.எஸ்.எல்.சி எழுதியிருப்பான். எட்டாம் கிளாஸோடு முடித்து அவன் அப்பா பேன்ஸி ஸ்டோர் வைத்துக் கொடுத்து உட்காரச் சொல்லி விட்டார். தினசரி கடைத் தெருவழியாக ஊருணியில் தண்ணீர் எடுக்கப் போன பாருக்குட்டி அவனுக்கு என்ன மாதிரியான தேவதையாகத் தோன்றினாளோ.. தானாக வந்து மாட்டிக் கொண்டான்.

‘என்னடா லீவு நாள்ளே சிலேட்டும் பலப்பமுமா எங்கடா போறே ? ‘ என்று அவன் கடையில் பலப்பமும் சாக்பீஸும் வாங்கும் போது கேட்டான். நான் இந்த சித்திரவதையைப் பற்றிப் போட்டு உடைக்க, எதிர்பார்த்தபடி அனுதாபப் படாமல் நேரே தாத்தாவிடம் வந்து விட்டான்.

‘தாத்தய்யா .. நானும் மலையாளம் படிக்கறேனே .. நாயர் கிட்டே சொல்லுங்க ‘

தாத்தா வெகுளியாக நாயரிடம் தூது போக, பதினெட்டு வயசு குலசேகரபாண்டியனுக்கு பதினாறு வயசு பாருக்குட்டி இரண்டாம் வாத்தியாரம்மாவாக இருப்பதின் சாதக பாதகங்களைச் சீர்தூக்கிப்பார்த்து, ‘படிப்பு சரஸ்வதி .. படிக்க வர்றவனை வேண்டாம்னு சொல்லக் கூடாது .. நம்ம கண்காணிப்பில் தானே நடக்கப் போகுது ‘ என்ற சமாதானத்தோடும் இன்னும் பத்து ரூபாய் மாதம் அதிகம் டியூஷன் பீஸ் கிடைக்கும் எதிர்பார்ப்பிலும் நாயர் சரி என்று சொல்லி விட்டார்.

‘எழுதுங்க .. ஞான் பந்திரண்டு ரூபா அறுபது காசு கடம் மேடிச்சு ‘ நாயர் வெளியில் யாருக்கோ சக்கரை ஜாஸ்தியாக சாயாவும் பொறை பிஸ்கட்டும் எடுத்துக் கொடுத்துவிட்டு உள்ளே வந்து தான் அல்பமாகப் பனிரெண்டு ரூபாய் அறுபது பைசா கடன் வாங்கிய வரலாற்றை எங்களை எழுதச் சொன்னார்.

‘நாயர் பால்காசு கொடுங்க ‘

ரைட்டர் பெண்டாட்டி வாசலில் நின்று இரைய நாயர் வாசலுக்குப் போனார்.

‘கடமா, கடனா ? ‘

பாண்டியன் பாருவை விசாரிக்க அவள் எங்கேயோ பார்த்துக் கொண்டு ‘காது சரியாக் கேட்கலியா ? ‘ என்றாள். பாண்டியன் எழுந்து ‘கொஞ்சம் என் காது பக்கத்திலே வந்து சொல்லு ‘ என்று அவள் முகத்துக்கு வெகு சமீபமாகத் தலையைத் திருப்ப, ராட்சசி விட்டாளே ஒரு அறை.

பயத்தில் எழுந்த நான் போர்ட் வைத்த பலகையில் மோத, அது விழுந்து உடைந்த சத்தத்தில் மற்றதெல்லாம் ஒடுங்கிப் போக நாயர் குருவாயூரப்பனைக் கூப்பிட்டபடி உள்ளே வர பாண்டியன் கன்னத்தைத் தடவிக் கொண்டு நடந்தான்.

அடுத்த நாளில் இருந்து அவன் மலையாளம் படிக்க வரவில்லை. ஆனால் பாரு தண்ணீர் பிடிக்க ஊருணி போகும்போது அவனுக்குத் தெரிந்த ஒரே மலையாள சினிமாப் பாட்டான ‘கடலின் அக்கர போனோரே ‘ பாட்டை அவனுக்குத் தெரிந்த விதத்தில் ‘கடலின் அக்கர கோனாரே ‘ என்று பாட ஆரம்பித்தான்.

அப்புறம் தான் அவன் கடையில் விற்கிற பொருளில் எல்லாம் விலைச் சீட்டில் விலைக்குப் பக்கத்தில் ஏதோ எழுத ஆரம்பித்தது. சோப்பு விலை ரெண்டு ரூபா முப்பது பைசா என்றால் 2.30 எழுதி பக்கத்தில் ‘ருரிமா ‘. பல்பொடி ஒரு ரூபாய் என்றால் நம்பரில் எழுதிப் பக்கத்தில் ‘பாபா.பெபா ‘ இப்படி.

‘நம்பரிலே இருக்கறது உனக்கு விக்கற விலை ..எழுத்தில் இருக்கறது நான் வாங்கிய விலை..சங்கேத பாஷையிலே .. ரெண்டுக்கும் வித்தியாசம் எனக்கு வர லாபம் ‘

‘அதென்ன சந்தேக பாஷை ‘ என்று புரியாமல் விழித்தபோது அவன் போனால் போகிறது என்று விளக்கினான் –

‘ஏதாவது வாக்கியத்தில் பத்து எழுத்து வருவது போல எடுத்துக்கிட்டு ஒவ்வொரு எழுத்துக்கு ஒண்ணா சைபர்லேருந்து ஒன்பது வரை நம்பர் கொடுத்திடணும்..அம்புட்டுத்தான் ‘

குலசேகரபாண்டியனின் சங்கீத மொழி புரியாமல் நானும் ‘கடலின் அக்கர கோனாரே ‘ என்று பாடிக் கொண்டு பருப்பு வடை ட்யூஷனுக்குப் போய் உட்கார, பாரு ‘ப்ராந்தோ ‘ என்றாள்.

சாங்கோபாங்கமாகக் கதை எழுதினால் யாருக்கு அச்சடிக்க, படிக்க நேரம் இருக்கிறது ? கட் பண்ணி கடைசி சீனுக்கு வருகிறேன்.

நரைக்க ஆரம்பித்த என் மீசைக்குச் சாயம் போட்டுக் கொண்டு மூக்குக் கண்ணாடியும் நாற்பத்தாறு வயதுமாகப் போன வாரம் ஊருக்குப் போயிருந்தேன். வீட்டை விற்கத்தான்.

குலசேகர பாண்டியன் கடை சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் இன்னமும் பிளாஸ்டிக் குடம் விற்றுக் கொண்டிருந்தது. ஆணுறை விளம்பரம் அங்கங்கே அழகு சேர்த்தது. என்ன மொழி என்று தெரியாமல் குட்டி டிவியில் கூட்டமாக ஆடிக் கொண்டிருந்தார்கள்.

‘என்னடா பண்றே ? ‘ அரையே அரைக்கால் கிழவனாக பாண்டியன் முக்காலியில் உட்கார்ந்தபடி கேட்டான்.

சொன்னேன். கிரிப்டாலஜி பற்றி அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து பட்டம் வாங்கி விட்டு, அதை இங்கே சென்னைக் கடற்கரையோரக் கட்டடத்தில் சாவகாசமாகப் பறக்க விட்டுக் கொண்டிருப்பது பற்றி.

‘நான் கூட போன மாதம் பாருவோட மெட்றாஸ் வந்திருந்தேன்.. ஆப்பரேஷனுக்கு ‘

ஆமாம், அதே பாருதான். கடலின் அக்கர போன தடிச்சி. கல்யாணம் கட்டியவள். எப்பவோ தெரியலை..

‘அவளுக்கு பிரஸ்ட் கான்சர்.. ரெண்டு ரெண்டு.. ‘ அவன் திடாரென்று மெளனமானான்.

அவனுடைய பழைய சங்கேத மொழி நினைவு வந்தது. அமெரிக்காவில் பழைய நினைவுக் குப்பையை வேடிக்கையாகக் கிளறிக் கொண்டிருந்த ஒரு தூக்கம் வராத ராத்திரியில் அதைக் கண்டு பிடித்திருந்தேன்.

‘பாருகுட்டி – – பெரிசு ‘

நடுவிலே விட்டுப் போன இரண்டையும் போன மாதம் ஆப்பரேஷன் செய்து நீக்கியிருந்தார்கள்.

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்