வலை. (குறுநாவல்)

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

ஜெயானந்தன்.


‘பச்சண்ணா…, பச்சண்ணா….,லெட்சுமி வருது, எழுந்து மரத்த போடச்சொல்லு ‘, என்று கூறிக்கொண்டே கோவாலும்,செங்கண்ணாவும் கடலை நோக்கி ஓடிக்கொண்டே வலையை எடுத்துச் சென்றார்கள்.

இந்தக் கடலும்,படகும் மட்டும்தான் அவர்களது வாழ்க்கை. அவர்களது சுக- துக்கங்களை நிர்ணயிக்கின்ற அளவுக்கோல் அன்றன்று பிடிபடும் மிீன்களும்,இரால்களும் எடையைப் பொறுத்தே மாறும்.

காசிமேடு கடலோரத்தில் எந்நேரமும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்தக்கடற்கரையின் உப்புக்காற்றில் ஒரு தடவையாவது சுவாசிக்கவில்லையென்றால் அவர்களுக்கு தூக்கமே வராது. கருக்கலில் படகுடன் போன மீனவர்கள், மாலை சூரிய அஸ்தமணத்தில் கரையை நெருங்குவர். பிறகு இரவு மீன்பிடித் தொழிலுக்கு செல்கின்ற கூட்டமும், படகில் டாசலையும், ஐஸ் கட்டியும் ஏற்றிக் கொண்டு தொழிலுக்கு போகத் தயாராக நிற்கும். காலை தொழிலுக்கு சென்று வருபவர்களிடம் மீன்படும் இடங்களை கேட்டு தெரிந்துக்கொண்டு , அந்தத் திக்கையே நோக்கி இரவு தொழிலுக்கு செல்வர். சில சமயங்களில் தொழில் சென்று வர இரண்டுமூன்று நாட்கள் கூட ஆகும். அந்த சமயங்களில் சமையல் பாத்திரங்களோடு கொஞ்சம் அரிசி, ஸ்டவ், மளிகைச்சாமான் களோடும் கடல்மேல் செல்வர்.

பச்சண்ணாவின் மூன்று தலைமுறைகளும் இந்தக்கடற்கரைக்குப்பக்கத்திலேயே பிறந்து,வளர்ந்து, வாழ்ந்து, கடலோடு விளையாடி, கடலை ஆராதித்து பின் இதே கடலன்னையின் மடியில் மாண்டும் போனவர்கள்.

பச்சண்ணாவின் தாத்தாவிற்கு தாத்தா , ‘கட்டுமரம் ‘ வைத்து வாழ்க்கைப்படகை ஓட்டியவர்.

பச்சண்ணாவின் தாத்தா ‘ துடுப்புப்படகு ‘ போட்டு வாழ்க்கையை வாழ்ந்தவர்.

இன்று பச்சண்ணா ‘ டாசல் படகு ‘ வைத்து மீன்பிடி தொழில் செய்கின்றார். பச்சண்ணாவிற்கு குடும்பம் ரொம்ப பெரிசு. ரெண்டு பெண்டாட்டி, பத்துப் பிள்ளைகள்.

வாழ்க்கையின் ரேகைகள் மாறிக்கொண்டே போனாலும், இவர்களது அடி மனதில், ‘கடலும்,அதன் ரகசியங்களும்தான் ‘. இந்த கடலோர மீனவர்களுக்கு பெரிய ஆசைகள் என்றால், அது அன்றன்று படகில் ஈரால் வரவேண்டும், அடுத்த நாள் சாப்பாட்டிற்கு மீன் கிடைக்க வேண்டும். கொஞ்சம் டிவி சினிமா பார்க்க வேண்டும். புருசன் தன்னோடே வாழ்ந்து, நிறையப்பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் கடல் அம்மா அதிகமாக சீறி, வெள்ளம் கரைகளை மீறி வந்து, குடிசைகளை அழித்து விடாமல் இருக்க வேண்டும். கரையெங்கும் கவுச்சிவாடை. மக்கள் அவரவர் சந்தோசங்களோடுதான் வாழ்ந்து வருகின்றனர்.

லெட்சுமி, பச்சண்ணாவின் வாழ்க்கையில் இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு, மூன்று வருடங்களுக்கு முன் பூவும்-பொட்டுமாக சிவலோகம் போய் சேர்ந்தாள்.

பச்சண்ணா, அவள் மீது உயிரையே வைத்திருந்தார். அவள், நினைவாக இன்று கடல்மீது, ‘லெட்சுமி ‘ என்ற டாசல் படகு தொழில் செய்கின்றது. லெட்சுமியின், ஒவ்வொரு மரப்பலகையிலும், தன் மனைவியின்சதை இருப்பதாகவும், அதனது ஓட்டத்தில் அவளது உயிர் இருப்பதாகவும்,பச்சண்ணா கற்பனை செய்து கொண்டு சில நேரங்களில் கடலோரம் பாடுவார். லெட்சுமி ஒவ்வொரு நாளும் தொழில் முடிந்து வரும்போது, தன் மனைவியே பூவும் பொட்டுமாக கரையேறி வருவதாக கூறுவார்.

பச்சண்ணா, கடலின் ரகசியம் தெரிந்த மனிதர். எப்பொழுது காற்று திசை மாறி வீசும். கடலின் நிறம் மாறும்,வானத்தில் கோடுகள் விழும், நட்சத்திரங்கள் திசை மாறும், எங்கு மீன் விழும் என்ற கடலின் ரகசியங்கள் அறிந்த காசிமேட்டு மீனவர்களில் இவரும் ஒருவர். இதனாலேயே பச்சண்ணாவிற்கு கடலோரம் மதிப்பு அதிகம்.

கடலும், கடல் ஜீவராசிகளும் எந்த பருவத்தில் கூடிக்குலாவும், கடலன்னை என்று கருப்பை திறப்பாள். நண்டும், மீன்களும், இராலும் எந்த நேரத்தில் வம்ச விருத்தி செய்யும், எந்த பருவத்தில் சினையாகி, எந்த பருவத்தில் பல்கிப் பெருகும் என்பவை பச்சண்ணாவிற்கு தெரிந்த வம்சாவளி ரகசியங்கள்.

வடக்கே, பதினான்கு பாகத்தில் போனால் இரால் விழும் என்பார். அப்படியே அன்று நடக்கும். மேற்கே இருவது பாகத்திலே போனா நண்டும், மீனும் அள்ளும் என்பார், அப்படியே கிடைக்கும். ஆனா, கிழக்கே மட்டும் பார்த்து வலை வீசணும், இல்லாட்டி, கறுப்புத்தான் படும், வலையும் போயி அன்னிக்கு பொளப்பும் போயி, வவுத்துல ஈரத்துணிதான் என்பார் பச்சண்ணா.

சில நேரங்களில் இப்படித்தான், மீனவர்கள் அறுந்த வலையோடு, மீனும் கிடைக்காமல் கரை திரும்புவர். சோகத்தில் கடல்சப்பியைக்குடித்துவிட்டு, மனைவியுடன் தகராறும் செய்வர். இரவு பாயில் மனைவியோடு சல்லாப்பித்து, அடுத்த நாள் காலை, புதிய மனிதனாக கடல்மேல், தொழிலுக்கு செல்வர்.

‘ஏலே குப்பா! ஒரு காலத்லே, வெள்ளக்காரனும் வெள்ளக்காரியும் எம் படுகுலே வந்தாங்க. அவங்கள ஏத்திக்கிட்டு, கல்பாக்கமா போனேன். பெரியபெரிய மீனாக்கிடைக்கும். அத அப்பிடுயே வருத்து கொடுத்திடுிவேன். ஆகா ஒகோன்னு, அவுங்க சீமசரக்க ஊத்திக்கிட்டு,மீனையும் தின்னுக்கிட்டு ஒரே டான்ஸ்தான் போ, வெள்ளக்காரியோட தொட சும்மா தங்கப்பாளம்மாரி மின்னும் போ! கரைக்கு வந்தவுடன் நூருஎரநூருக்கிடைக்கும். மிச்சிப்போன பிராந்தியும் கிடைக்கும்…. ‘ என்ற அவரது பழையக்கதயை சில நேரங்களில் அவுத்து விடுவார் பச்சண்ணா.

‘..ம்…இப்பத்தான் காலமே மாறிபோச்சே, கடலுக்கே எல்லைய வச்சிட்டானுங்க. அதத்தாண்டிப்போனா, கத்தியக்காட்டி மிரட்டி, சரக்கையே பிடுங்கிக்கிரானுங்க….இல்லாட்டி வெட்டுக்குத்துதான் மிஞ்சுது ‘ என்று அலுத்துக்கொண்டார் பச்சாண்ணா

ஏலே, சின்னபய்யா..கயித்தப்போடு லெட்சுமி வருது, மரத்த(கட்டுமரம்) கொண்டு வா…என்றுக்கூறிக்கொண்டே பச்சண்ணா, லெட்சிமியை வரவேற்க தயாரானார்.

லெட்சுமி, அன்று மீன்களையும், நண்டுகளையும் மட்டுமே சுமந்து வந்தது. ஈரால் படவில்லை.

எல்லோர் முகத்திலும் சோகம். ஏரா வந்தா, கையில கொஞ்சம் காசு புரளும். நண்டும்,மீனும் வித்தா டாசல் ரொப்பவும், ஐஸ் வாங்கவும்தான் சரியாப்போகும். பேட்டா கொடுக்கவே கைய கடிக்கும்.

பல பெரிய ஈரால் ஏற்றுமதிக் கம்பெனிகளின் லாரிகள், கையில் பணப்பையோடு நிற்கும். ஒவ்வொரு படகாக ஈரால் வந்தவுடன், தலையை உரித்து எடைப்போட்டவுடன் , பணம் கைமாறும். காசிமேட்டு கடலோரம் ராவும்-பகலுமாக மீன் லாரிகள் வந்து போய் கொண்டிருக்கும். பகல்- இரவெல்லாம் அங்கு ஒன்றுதான். அதுவும் பெரியகவுண்டு ஏராலுக்கு நல்ல காசுக்கிடைக்கும்.

பச்சண்ணாவின் முகத்தில் சந்தோச ரேகை படரவில்லை. ஆட்கள் மரத்தில் சரக்கை ஏற்றிக்கொண்டு ஏலப்பகுதிக்கு சென்றார்கள்.

லெட்சுமியை நம்பி ஆறு மீனவக்குடும்பங்கள் கரைமேல் காத்து நிற்கும். அவர்களின் சுகதுக்கமெல்லாம் லெட்சிமியின் மீன் பிடிப்பால்தான் மலரும். ஆனாலும், யாரையுமே கடலன்னை கவிழ்த்து விடமாட்டாள் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்த மிகப்பெரிய பலம். காலம்காலமாக இவர்கள் இந்த கடலைத்தான் நம்பி வாழ்ந்துவருகின்றனர்.

மனிதர்கள் ஏமாற்றலாம், ஆனால் கடல் ஏமாற்றியதாக இவர்கள் சொல்வதில்லை.

மீன் கூடைகள் ஏலப்பகுதிக்கு வந்து சேர்ந்தது. காசி மேடு ஏலப்பகுதி எப்போதுமே மனிதக்கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கும்.

மீன் வாடை காற்றில் கலந்து வீசீக்கொண்டிருக்கும். மனிதர்கள் அங்கு மீன்வாடை உடல்களோடு திரிந்துக்கொண்டிருப்பர். ஏராலும், மீன்களும், நண்டுகளும்,இன்னும் பலவித மீன் களும் ஏலப்பகுதியில் கிடந்தன. லெட்சுமியின் கூடைகளும் வந்திறங்கின. மீன் காரிகள் மோதிக்கொண்டு கூடைகளை நோட்டமிட்டனர். அவர்களது திரண்ட மார்பகங்கள் ஆடை விலகி விம்மி வெளியே விழுந்தன. இளவட்டங்களின் கண்களும், சில பெரிசுகளின் கண்களும் அந்த திரண்ட மார்ப கங்களையே திருட்டுத்தனமாக ருசிப்பார்த்துக்கொண்டிருந்தன. மீன்வாடயைக்கூட பொருட்படுத்தாமல், சிலர்,மீன் காரிகளை உரசியப்படியே நின்றனர். ஒரு சிலப்படகின் கணக்குப்பிள்ளைகள் ஏலப்பகுதியில் விடப்படும் அவர்களது படகின் கணக்குகளை சரிப்பார்த்து, லாரிக்கார்களிடம் பணத்தை வசூலித்துக்கொண்டிருந்தனர். ஒரு சில சினிமாக்கார்களின் படகும், சில கறுப்பு பணமுதலைகளின் படகுகளும் அதே கடலில் மீன் பிடித்தொழிலுக்கு சென்றுக்கொண்டிருந்தன.

இவர்களின் படகுமட்டும் எப்போதும் நஷ்டத்தேயே காட்டிக்கொண்டிருக்கும். வருமான வரி கணக்குகளுக்காகத்தான் இவர்களின் படகுகள் கடலில் தொழில் செய்வதாக சில மீனவர்கள் கூறுவது உண்மையாகக்கூட இருக்கலாம்.

‘ ஏல பட்டு ஆத்தா, லெட்சுமி கூடையைக்கூவு………. ‘ குரல் வந்தது..

ஏலக்காரி குரல் கொடுக்க ஆரம்பித்தாள். அந்த ஏலம் முடிந்ததும் அவளுக்கு ஏலக்கூலியாக கொஞ்சம் மீனை தந்து விடுவார்கள்.

லெட்சுமி படகின் மீன்கள் ஏலத்திற்கு போய், பணத்தை பச்சண்ணா கையில் கொடுத்தார்கள்.

பச்சண்ணா நாளை தொழிலுக்கு டாசல் போட, பணத்தை எடுத்துக்கொண்டு , மீதியை பிரித்து ஆட்களுக்கு கொடுத்தார்.

ஆட்களுக்கு, டிபன் மீனையும் போட்டு அனுப்பினார். அடுத்தநாள் தொழிலுக்கு எந்தத்திசை போகவேண்டும் என்ற சூட்சுமத்தையும் சொல்லி, ஆட்களை வீட்டிற்கு அனுப்பினார்.

பச்சண்ணா கையில், கொஞ்சம் காசு மிஞ்சியது. ஒரு பிராந்திப்பாட்டிலையும், கொஞ்சம் வறுத்தக்கடலையும் வாங்கிக்கொண்டு, கடலோரம் வந்து சேர்ந்தார். லெட்சுமி, கடல் அலை போடும் ஆட்டத்தில் ஆடிக்கொண்டிருந்தது. அவர், தனது மனைவி லெட்சிமியுடன் வாழ்ந்த நாட்களுக்கு சென்றுவிட்டார். பிராந்தி மெல்ல இறங்கிக்கொண்டிருந்தது. வாழ்க்கை, கடல்மேல் ஆடுவது போன்று உணர ஆரம்பித்தார். தானும், தன் மனைவியும் கடல்மேல் ஆடுவது போன்ற உணர்வு அவர் தலைக்கு ஏறியது. கடல் அலையில் மாட்டிக்கொண்டு ,மேலும் கீழும் விழுந்து உள்ளே போய், வெளியே வந்து, மீண்டும் உள்ளே போய், வெளியே வருவது போன்ற உணர்வு நிலையில், பச்சண்ணாவுக்கு போதை தலைக்கேறி, அப்படியே கடலோரம் சாய்ந்தார். இரவு மேலே போய்கொண்டிருந்தது. நிலா வெளிச்சமும், குளிரும் கடலோரம் பெய்துக் கொண்டிருந்தது. நடுச்சாமத்திற்குப்பிறகு, பச்சண்ணாவிற்கு முழிப்பு வந்தது. வீட்டை நோக்கி போனார்.

கவிழ்ந்துக் கிடந்த படகில் பேச்சு சத்தம் கேட்டது.

‘யாருப் பிள்ளை, இந்த நடுச்சாமத்திலே…………. ‘ பச்சண்ணா.

‘நாந்தாங்கோ………….. ‘.தொழில் செய்யும் பார்வதியின் குரல் கேட்டது.

சீக்கிரம் முடிச்சிக்கே… தீக்கூச்சிங்க வர்ற நேரம்……… எச்சரிக்கை செய்துவிட்டு சென்றார் பச்சண்ணா.

இரண்டு, மிலிடரிக்காரனுங்கத்தான்…இன்னிக்கு பார்வதியின் உடலை தின்றுக்கொண்டிருந்தார்கள்.

தீடிரென்று, கடலோர விளக்குகள் எல்லாம் அணைந்தன. பார்வதிக்கு பயம் வந்து விட்டது. கிழிந்தப்போனப்பாயையும், நாற்றம் பிடித்த தலையணையும் எடுத்துக்கொண்டு, வாடிக்கையார்களிடம் காசையையும் வாங்கிக்கொண்டால் பார்வதி.

இனி அங்கிருந்தால் ஆபத்து. அந்த நடுச்சாமத்தில் கடலோர விளக்கு அணைந்தால், அந்தப்பக்கம் சுங்க இலாக்காவிற்கு தெரியாமல், வெளிநாட்டுச் சரக்குகள், கரை வந்திருக்கும் கப்பலிலிருந்து, படகில் ஏற்றிக்கொண்டு, பர்மா பஜார் வியாபாரிகளுக்கு விற்பதற்க்காக, கொள்ளை கும்பல் அந்த பக்கம்தான் செல்லும். இது அந்த பக்கத்து மனிதர்களுக்கு மட்டும்தான் தெரியும். இதில் அந்த வட்டாரத்து அரசியல் புள்ளிகள், பேட்டை தாதாக்கள், போலீஸீக்கும் பங்குண்டு.

பச்சண்ணா நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.

ராசாத்தியின் அழுகை குரல் கேட்டது. ராஜாதான், போதையில் ராசாத்தியை புரட்டி எடுத்தான். இன்று வருமானம் முழுதும், சாராயக்கடைக்கு போயிருக்கும், மிஞ்சியது ராசாத்திக்கு அடியும் உதையும்தான். கடலோரம், தினமும் இந்த அழுகைக்குரல், யாரோ ஒரு குடிசையில் கேட்டுக்கொண்டுதான் இருக்கும். ஆனால், அடுத்த நாள், பொழப்பில் நல்ல வருமானம் வரும். அந்தக்குடிசயில் ஒரே கும்மாளம்தான். கடலோர மக்களுக்கு, வருடம் ஒரு குழந்தை தவறாமல் பிறந்துவிடும். குழந்தை பட்டாளம், கடலோரம் ஒரே குடும்பத்துப்பிள்ளைகள்போல், எல்லாக்குழந்தைகளும் விளையாடிகொண்டிருக்கும். ஒரு பக்கம் கருவாடு காய்ந்துக்கொண்டிருக்கும், மற்றொருப்பக்கம் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்கும். பிள்ளைகள் அங்கு பள்ளிக்கு செல்வது அபூர்வமான விசயம். எட்டாவது தாண்டி விட்டாலே அவன் அங்கு படிச்சவன். அவன் கூடவே எல்லா கெட்டப்பழக்கமும் சேர்ந்து விடும். பாதி நாள் பள்ளி , அடுத்த பாதி சினிமா, தண்ணிதான்.

காலைவிடியும் முன்னரே, போலீஸ்வேன் ராவுத்தர் அரிசிக்கிணருக்கிட்டே வந்து நின்றது. ராசாத்திஉடலையும் மூன்றுக்குழந்தைகளின்சடலங்களையும் வெளியே எடுத்தனர். ராஜாவைத்தேடினர். கிடைக்கவில்லை. பச்சண்ணாவீட்டிற்கு போலீஸ் வந்து செய்தியைசொல்லி, அவர் உதவியை நாடியது. பச்சண்ணா உதவி செய்வதாக சொல்லி அனுப்பினார். புருசனின் அடி உதைத்தாங்காமல் உயிர்விட்டாள்

ராசாத்தி. கூடவே பிள்ளைகள் அனாதையாக நிற்கக் கூடாது என்று அதுகளையும் கிணற்றுக்குள் இறக்கிவிட்டாள். காசிமேட்டு மலையாள மந்திரவாதிக்கு எப்போதும் ஒரு மரியாதை. அவர் நெற்றியில் திகழும் பெரிய குங்குமப் பொட்டும், வளர்ந்த மீசையும், அவர் அருகே எப்போதும் படுத்துக்கொண்டிருக்கும் மண்டை ஓடும், இரண்டு எலும்புத் துண்டுகளும் அவரை ஒரு பெரிய மந்திரவாதியாக்காட்டியது.

அவர் கையில் வேப்பிலை எடுத்துவிட்டால், ஒடாத பேயும் ஒடிவிடும், வராத காட்டேரியும் வந்துவிடும்.

மலையாள மந்திரவாதிக்கு அன்றுக்காலையிலேயே ஒரு கிராக்கி மாட்டிக்கொண்டது. ஒரு மண்டை ஒடும், இரண்டு எலும்புத்துண்டுகளும்தான், மலையாள மந்தரவாதிி, காசிமேட்டுக்கு வரும்போது கொண்டுவந்த சொத்து. பில்லி, சூன்யம், காத்து, கறுப்பு, இவைகளை மலையாள பகவதி ஆசியுடன், காட்டேரி- மூனிஸ்வரன் துணையோடு,சூடுக்காட்டு காளி பலத்துடன் ஓட்டப்படும் என்ற சிகப்பு எழுத்து போர்டு, குடிசைக்கு வெளியே நின்றது.

மலையாள மந்திரவாதி, கடந்த மூன்று வருடத்தில். காசிமேட்டு பகுதியில் ஒரு வீடு வாங்கிவிட்டான். ஆழப்புலையில் ஒரு தாலிக்கட்டிய மனைவியும், காசிமேட்டில் ஒரு சின்னவீடும் வைத்துக்கொண்டு மண்டைஓடு,எலும்புகளுடன் சுகமாக வாழ்ந்து வருகின்றான்.

குப்பம்மாவுக்குத்தான் அடிக்கடி பேய்பிடிக்கும். அவள் கணவண் யாரோ ஒரு கள்ளக்காதலியுடன் வாழ்ந்து வருவதாகவும், அதற்கு முன் அவனது மூத்த சம்சாரம் மூட்டைபூச்சி மருந்துக்குடித்து உயிரைவிட்டு, தற்போது ஆவியாய் அலைவதாகவும் குப்பம்மா நினைத்துக்கொண்டு, மலையாள மந்திரவாதியின், காட்டேரி மந்திரத்திற்கு காத்திருப்பாள்.

கருப்புக்கோழியும், ஐம்பது ரூபாய் தட்சணையும் தட்டில் விழுந்தவுடன் தான், மந்திரவாதியின் கண்மூடி வாய்திறக்கும்.

இந்த மந்திரவாதிக்கு, கருக்கலைப்பு தொழிலும் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. வறுமையில் வாடும், மீனவக்கன்னிப் பெண்களின், கற்பும் சில நேரங்களில் , சூறையாடப்படுவதும் அங்கு நடக்கும். அப்பகுதி பணக்கார வீடுகளில் வேலை செய்துக்கொண்டிருக்கும் குப்பம்மாவின் மகள், தேவிக்கு நாட்கள் தள்ளிச் சென்றதை அவள் வீட்டில் சொல்லக்கூட தெரியவில்லை. அவள் வாந்தி எடுக்கும்போதுதான், குப்பம்மா கேட்டாள். தேவி அப்போது ஒத்துக்கொண்டாள். பெட்ரோல் பங்கு முதலாளி பையன் ,மூன்று மாதங்களுக்குமுன், குடிப்பதற்கு ஏதோ குளிர்பானம் கொடுத்து, கெடுத்து விட்டதாக கூறினாள். கையில் இருநூறு ரூபாய் பணம் கொடுத்தான் என்றும், வெளியில் யாராவது கேட்டால், அவளுக்குப்பிடித்த கனவுக்கதாநாயகன் போஸ்டர் மீது , தூங்கியதால்தான் தான் கர்ப்பம் அடைந்து விட்டதாக சொல்லுமாறும், அவனைக்காட்டிக்கொடுத்தால், கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகாவும்அவன் சொன்னான் என்று தேவி அழுதுக்கொண்டே சொன்னாள்.

மந்திரவாதி அந்தக்கருவை, கட்டேரி துணையோடு கலைத்து விடுவதாகவும் சொன்னான். தேவியை ஈரத்துணியோடு உட்கார வைத்தான். தலைமீது, மஞ்சள் நீரை தெளித்து, வீபூதி அடித்தான். அவள் வாயில் ஏதோ ஒரு திரவத்தை ஊற்றினான். அங்கு யாரும் இருக்கக்கூடாது என்று எச்சரிக்கை கொடுத்தான். காட்டேரி வருங்கின்ற நேரமிது என்று கத்தினான். மூன்று அரிசி மாவுப்பிண்டங்களைப்பிடித்தான், அவைகளுக்கு மூன்று நிறத்தில் துணிகளைக்கட்டினான். உடுக்கை எடுத்து அடித்துப் பாட ஆரம்பித்து விட்டான். பாடல் எல்லாம் மலையாளத்தில்தான் இருந்தது. அவனும், ஏதோ ஒரு திரவத்தை வாயில் ஊற்றிக்கொண்டான், பிறகு தான் அவன் குரல் உசர ஆரம்பித்தது. அங்கிருந்த எல்லோரும் பயந்து வெளியே போய்விட்டார்கள். கொஞ்ச நேரத்தில் தேவி மயங்கி தரையில் சாய்ந்தாள். கூர்மையான குச்சியில் ஏதோ ஒரு பாலைத்தடவி, தேவியின் பெண்ணுருப்பில் விட்டு, கருக்குழாய்குள் செலுத்தினான். கொஞ்ச நேரத்தில் தேவியின் பாவாடை முழுதும் ரத்தவாடை வீசியது. கதவைத்திறந்து, குப்பம்மாவை மட்டும் அழைத்தான். காட்டேரி கருவைத் தின்று விட்டதாகவும் , அதனால்தான் தேவியின் பாவாடையில் ரத்தவாடை என்றும் கூறிினான். தேவியை வீட்டுக்கு அழைத்துப்போய், கறிச்சாப்பாடு போடச்சொன்னான்.

குப்பம்மா, மந்திரவாதிக்கு கொடுக்கவேண்டிய , தட்சணையை தாம்பாளத்தட்டில் வைத்து வெற்றிலைப்பாக்கோடுக் கொடுத்தாள்.

வீட்டுக்கு வந்த தேவி ஒரு வாரம் படுத்தப்படுக்கையாக, ஏதேதோ உளறினாள். பிறகு ஜன்னிக்கண்டு இறந்துப்போனாள்.

கடலின் வடக்குப்பகுதியில் கழுகுகள் வட்டமடித்துக்கொண்டிருந்தன. இது நல்ல சகுனம் இல்லையென்று பொன்னம்மா அக்காவும், ரோசாக்கிழவியும் பேசிக்கொண்டே நெத்திலிக்கருவாட்டின் பாகத்தை கிண்டிவிட்டுக்கொண்டிருந்தனர்.

வாயில் ஒதுக்கிய புகையிலை எச்சிலை ஒரமாக துப்பிவிட்டு, வடக்கு நோக்கியே பார்த்துக்கொண்டிருந்தனர்.

தூரத்தில் வடுகன் படகும், திரிசூலம் படகும் மிதந்து வருவது தெரிந்தது. ஆனால் அவைகள் ஏன் அப்படி மிதந்து வரவேண்டும் என்றுதான் யாருக்கும் புரியவில்லை. கடலோரம் கூட்டம் சேர்ந்துவிட்டது. மூன்று நாட்களுக்குமுன், தொழிலுக்குப் போன வடுகன் படகும், திரிசூலம் படகும் கரைக்கு மூன்று நாட்களாக வரவில்லை. அவர்களது குடும்பங்கள் மட்டும் கரையில் காத்திருந்தன. பச்சண்ணாதான் தினமும் கொஞ்சம் மீன் கொடுத்து அனுப்புவார். சூறாவளியில் எங்காவது மாட்டிக்கொண்டதா என்றும் விசாரித்தார்கள். ஒரு செய்தியும் தெரியவில்லை. காணாமல் போனத்தகவலை ரேடியோவில் கூட ஒலிப்பரப்பினார்கள்.

நான் காவது நாள் அந்தப் படகுகள் தூரத்தில், காற்றில் மிதந்து வந்துக்கொண்டிருந்தன. கட்டுமரத்தை போட்டு இழுத்துவர ராசாவும்,சின்ன பையனும் மரம் போட்டார்கள்.

படகுகள் கரையை நெருங்க நெருங்க ஒருவித துர்வாடை வீசத்தொடங்கியது. கரைக்கு வந்த படகுகளில் இரண்டுக்கூடைகள் மூடிக்கிடந்தன. அதைச்சுற்றி கடல் ஈக்கள் மொய்க்கத்தொடங்கின. கூடையை பிரட்டிபோட்டார்கள்.உள்ளே இரண்டு வெட்டப்பட்டத் தலைகள் மட்டும் கிடந்தன. கண்கள் வெளியே பிதுங்கி வழிந்தன.

காசிமேட்டில் ஒரே கூச்சலும், அழுகையும் சோகத்தை நிரப்பின. பாஞ்சாயத்தைக்கூட்ட தலைவர் வீட்டிற்கும், பச்சண்ணா வீட்டிற்கும் ஆட்கள் பறந்தன. அதற்குள் இது மஞ்சக்குப்பம் ஆட்கள் வேலைதான். அவர்கள் தலையை சீவாமல் விடமாட்டோம் என ஒரு கும்பல் அரிவாளுடன் குதித்தன. சாராயாக்கடையில் ஏகப்பட்டக்கூட்டம். சரக்கை உள்ளே ஏற்றிக்கொண்டு, போதையில் தள்ளாடியது.

கணவன் களை இழந்த மேரியும், பவானியும் மயக்கம் போட்டு விழுந்தார்கள். மற்ற உறவுக்காரப் பெண்கள் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

பகுதி செயலாளரும், வட்டத்தலைவரும், மீன்பிடிச்சங்கத்தலைவரும் கூடினர்.

ஒரு லாரியில், ஆயுதங்களுடன் , காசிமேட்டு மீனவனர்கள் ஏறிக்கொண்டிருந்தனர். போன் மூலம் செய்தி போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. காசிமேட்டுப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. அவ்வழியே போகும் பேருந்து மீது கற்கள் வீசப்பட்டன, மஞசக்குப்பத்திற்கும் செய்திப் பரவியது. அங்கும் வன்முறைக்கு தயாரானார்கள். இரண்டு குப்பங்களும் மோதிக்கொண்டன. இரண்டு குப்பத்துக்காரர்களையும் போலீஸார் கைது செய்து,வேனில் ஏற்றினார்கள்.

பஞ்சாயத்துக்கூட்டப்பட்டது. இரண்டு குப்பத்துத்தலைவர்களும் கலந்துக் கொண்டார்கள். அந்த வட்டத்து அரசியல் தலைவரும் கலந்துக் கொண்டனர். மேற்கொண்டு வன்முறைகள் நடக்காமல் இருக்க, பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த கிளர்ச்சிக்கான காரணம், ‘ எல்லை மீறிய மீன் பிடிப்பு ‘ என்ற முடிவிற்கு வந்தனர்.

இரண்டு குப்பத்திற்கான எல்லைகள் வகுக்கப்பட்டன. கணவனை இழந்த குடும்பங்களுக்கு நஷ்ட ஈடும் கொடுக்கப்பட்டது. இந்த பஞ்சாயத்தில் எடுத்த முடிவு ஒரு சிலருக்கு பிடிக்காமல், மெரினா உழைப்பாளர் சிலை அருகே உண்ணாவிரதம் இருந்தனர். இச்செய்தி சட்டச்சபைக்குள் சென்றது. எதிர்கட்சிகள் கடுமையாக பேசியது. மந்திரியின், தலையீட்டால், கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்தனர். அரசாங்கத்திலிருந்தும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டது.

கணவனை இழந்த மேரியும், பவானியும் கடலோரம் மீன்விற்க வந்து விட்டார்கள். சில நாட்களில் பச்சண்ணா படகில் விழும், மீன் களையும் குறைந்த விலைக்கு அவர்களுக்கு கொடுத்து உதவி புரிந்தார். கொஞ்ச நாட்களில், இந்த உதவிக்கு கால்கை வைத்து , பச்சண்ணாவிற்கும்,மேரிக்கும் தொடர்பு இருப்பதாக கடலோரம் பேச்சு அடிப்பட்டது. மேரியின் கண்ணீருக்கு பதில் சொல்லமுடியாத இந்த கடலோர மக்கள் , சுவையாக கதைக்கட்டி விடுவதில் சமர்த்தராக இருந்தனர். இது மாதிரியான கதைகளை கட்டிவிடுவதில் , மன்னாரும்-சோமனும் கைத்தேர்ந்தவர்கள். அவர்களையே நேரே சென்றுக் கேட்டுவிட்டாள் மேரி. ஆனால் அவர்கள் கூரிய பதில்தான் மேரீயை சங்கடப்படுத்தி , கடலில் வீழ்ந்து மாய்ந்து போகுமளவுக்கு செய்துவிட்டது. கடலில் விழுந்த மேரீயை, சில மீனவர்கள் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டுவந்தனர். மேரிக்கு, பேச்சு வந்தப்பிறகு, அவளின் இந்த பரிதாப முடிவிற்கு காரணமென்ன என சிலர் கேட்டனர். மேரி சொன்னப்பதில் எல்லோரையும் கலங்க வைத்தது.

‘மேரீ, நி அந்த கிழவனை வைச்சிருக்க, அது தெரியும், அது உன் வயித்தக் காப்பாத்திக்க……

ஆனா, உனக்கு உடல் தினவு எடுக்கும்போது, நாங்க வர்றோம் ‘ இந்த சுடுச்சொல்தான், மேரியை, தற்கொலை செய்துகொள்ளுமளவிற்கு தள்ளியது.

பச்சண்ணாவின், பிள்ளைகள் இனிமேல் மேரிக்கு, நண்டுகளையும்,மீன்களையும் தரக்கூடாது என்று பச்சண்ணாவிடம் சொல்லிவிட்டனர்.

கோடை ஆரம்பிக்க தொடங்கியது. இப்பருவத்தில், கிழங்கானும் , சுறும்பும், நண்டும் அதிகமாக கிடைக்கும்.

இந்த பருவத்தில், எரால் குஞ்சுகள் வளரும் காலம் என்று பச்சண்ணா கூறினார். ஆகவே மீன் பிடித்தொழிலும் கொஞ்சம் மந்தமாக இருக்கும். இந்த காலத்தில்தான், பழுதான படகுகளை கரைக்கு ஏற்றி பழுதுப்பார்த்து, புதுமரம் கொடுத்து சரிசெய்வர். கரைமேல் அமர்ந்து, மீனவர்கள் வலையை சரிசெய்வர். அப்பகுதி மார்வாடிக்கடையில், அண்டாவும்குண்டானும் அடகுக்குச் செல்லும். காதில் மூக்கில் கிடக்கும் எண்ணெய் பிடித்த தோடும் மூக்கூத்தியும் கூட,அடகுக்கடைக்கு கால் முளைத்துச் செல்லும். சாராயக்கடையில், கடன் பாக்கி ஏறும். ஊர்வம்பு, சில அதிகமாகி நேரங்களில்

கைகலுப்பு நடக்கும். எங்காவது நடக்கும் பேட்டைச்சண்டைகளுக்கு அடியாட்கள் தேவையென்றால், காசிமேட்டு மீனவர்களை, கூலிக்கு அமர்த்தி, லாரிகளில் ஏற்றிசெல்வர். இந்த மீனவர்களின் பஞ்சக்காலங்களை, நன்றாக பயன்படுத்திக்கொள்வர் அரசியல்வாதிகளும், சாராயக்கடை முதலாளிகளும்.

கையில் ஐம்பது ரூபாயும், ஒரு பாட்டில் சாராயமும், அரைபிளேட்டு மாட்டுக்கறி பிரியாணியும், ஒரு மீனவனின் தினக்கூலி என்றே அந்த வட்டாரத்து அரசியல்வாதிக்கும், சாராயக்கடை முதலாளிகளுக்கும் தெரியும். அந்த எலும்புத்துண்டை போட்டுவிட்டால், அந்த மீனவர்கள் தங்கள் உயிரையும் தந்து பேட்டைச்சண்டைக்குத் தயாராகிவிடுவர்.

இதுபோல் பல சமயங்களில், இந்த மீனவப்படைகள், சில சமூக விரோத செயலுக்கும் பயன்படுத்தப்பட்டு, சிறைக்குப்சென்ற அநுபவங்களும், சில மீனவர்களுக்கு ஏற்படுவதுண்டு, அந்த சமயங்களில் அவர்களைப்பயன் படுத்திய, சமூகவிரோத தலைவர்களே ஜாமினில் வெளியேயும் எடுத்து வந்துவிடுவர்.

பச்சண்ணாவிற்கு ஒரு வாரமாக உடல்நலம் சரியில்லை. டாக்டர் கொடுத்த மருந்துகளுடன், பிராந்தி பாட்டிலும் மருந்தாக பச்சண்ணா குடித்துக்கொண்டிருந்தார்.

லெட்சுமி படகையும், கரையேற்றி, பழுதுப்பார்க்க, பச்சண்ணா முடிவு செய்தார். அடுத்த பத்து நாட்களுக்கு, தொழிலுக்கு போக முடியாது என்பதை அறிந்த மீனவர்கள் சோகத்தில் ஆழ்ந்து போனார்கள். கரையில் சுண்டக்கஞ்சியை குடித்து விட்டு, லெட்சுமியை கரையேற்றின்னார்கள்.

லெட்சுமி கரையேறியது. பச்சண்ணா கண் இமைக்காமல் லெட்சுமியைப்பார்த்துக்கொண்டே நின்றார். தன் மனைவிக்கு வயதாகியிருந்தால் கூட இப்படித்தான் இருந்திருப்பாள் என எண்ணிக்கொண்டார்.

புதுமரங்களும், அலுமினியத்தகடுகளும், பித்தளை ஆணிிகளும் வந்திறங்கின. லெட்சுமிய பிரித்துப்போட்டு, போன மரங்கள் அகற்றப்பட்டன. புதுமரங்கள் சேர்க்கப்பட்டன. ஆணிகள் அடித்து அலுமினியத்தடுகள் சேர்க்கப்பட்டு, ஆட்கள் இரவு-பகலாக வேலை செய்துக்கொண்டிருந்தனர். பச்சண்ணா, படகை சுற்றிச்சுற்றி வந்துக்கொண்டிருந்தார். மெழுகைத் தடவி சுத்தம் செய்தார்கள். மரவேலைகள் முடிந்து, அலுமினிய வேலைகள் ஆரம்பமாகின.

தற்போது, லெட்சுமிக்கு, பெயிண்டிங் வேலை ஆரம்பமாகின. மஞ்சளும், சிகப்புதான், லெட்சுமிக்கு அடிக்கவேண்டுமென பச்சண்ணா கூறிிவிட்டார்.

அதோ, லெட்சுமி அலங்கார லெட்சுமியாய், பச்சண்ணாவின் கண் முன்னால், நின்றாள். எலெ, எம்பொஞ்சாதியே நிக்கற மாதிரி இருக்கடா….என்று ஆனந்தக்கண்ணீர் வடித்தார். கடலோர மக்கள் , பச்சண்ணாவின் உணர்விற்கு மரியாதை கொடுத்து, அவரை வீட்டிற்கு அழைத்துப்போயினர்.

தச்சர்களுக்கு, அவர்கள் கேட்டத்தொகையைவிட, அதிகமாகக்கொடுத்து அனுப்பினார் பச்சண்ணா.

யாரும் எதிர்பார்க்காத அந்த நடுராத்திரியில் அது நடந்தது. சில நேரங்களில் இங்கு இப்படித்தான் நடக்கும்.

மாரிமுத்தும், மாயாண்டியும்தான் முதலில் அதைப்பார்த்தார்கள். மற்றும் சிலர், தலைதெறிக்க பச்சண்ணா வீட்டிற்கு ஓடினார்கள்.

‘அண்ணே…. பச்சண்ணா ..அண்ணே….. லெட்சுமி தீ பிடித்து எறியுது..ஓடி வா, ஓடி வா………! ‘

பாதி துக்கத்திலும் பாதி போதியிலும் இருந்த பச்சண்ணா வாரி சுருட்டிக்கொண்டு கடலோரம் ஓடினார். அவருடைய பிள்ளைகளும், பேரன் களும், பேத்திகளும், அக்கம்பக்கமிருந்த மீனவர்களும் கடலோரம் ஓடினார்கள்.

லெட்சுமி தீக்குளித்துக்கொண்டிருந்தாள். மஞ்சள் தேவதை தீக்குளித்துக்கொண்டிருந்தாள். சுவாலை பத்தடி உயரத்திற்கு மேலே போய்க்கொண்டிருந்தது. அய்யோ ….! அய்யோ…..! என்று கதறியப்படி, பச்சண்ணா லெட்சுமியை நோக்கி ஓடினார். சுற்றியிருந்த வர்கள் பச்சண்ணாவை பிடித்துக்கொண்டார்கள். தீயணைப்பு வண்டிகள், எல்லாம் முடிந்தப்பிறகு வந்தன.

பச்சண்ணாவின் கண்களிலிருந்தும், உடலிலிருந்தும் உஷ்ணம் வெளியேறிக்கொண்டிந்தது. காசிமேட்டு மீனவர்கள் அத்தனை குடும்பங்களும் கரியாய் நின்ற லெட்சுமியைப்பார்த்துக்கதறினர். பச்சண்ணாவைப்பிடித்துக்கொண்டும் சிலர் ஒப்பாரி வைக்க தொடங்கிவிட்டனர்.

பச்சண்ணா படக்கென்று மண்ணில் சாய்ந்தார். கையும் காலும் இழுத்துக்கொண்டு காக்காவலிப்பால் துடித்தார்.சாவிகொத்தைக் கொடுத்தார்கள். வலிப்பு நின்ற பாடில்லை. கொஞ்ச நேரத்தில் வாயில் நுரைத்தள்ளி மயக்கத்துடன் சாய்ந்து விழுந்தார்.

அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள் உறவுக்காரர்கள்.

மகன் களும், மருமகள்களும், பேரன்-பேத்திகளும், தொழில் செய்கின்ற குடும்பங்களும் அழுதுக்கொண்டேயிருந்தார்கள்.

பச்சண்ணாவிற்கு, குளுக்கோஸ் ஏற்றினார்கள். அவரைச்சுற்றியிருந்த கும்பலை, ஆஸ்பத்திரி ஆயாக்கள் போகச் சொன்னார்கள். அந்த கும்பல் வெளியே காத்துக்கிடந்தது.

தீடிரென்று , ‘ லெட்சுமீ…..லெட்சுமீ…என்னைவிட்டு நீயும் போய்டியா…போய்டியா….. ‘ என்று கதறிக்கொண்டே பச்சண்ணா அந்த ஆஸ்பத்திரியை விட்டு வெளியே ஓடினார். அவருடைய கூட்டமும் அவரைப்பிடிக்க ஓடியது.

‘டேய் ஒன்ன கொல்லம விடமாட்டேன்…..கொல்லாம விடமாட்டேன் ‘ என்று கத்தியப்படியே பச்சண்ணா,வீதியில்கிடந்தக்கற்களை பொறுக்கி எடுத்து வீச ஆரம்பித்தார். வரும்போகும் வாகனங்கள் கல்லெறிப்பட்டது. சாலையில் நடந்து செல்வோர் மீதும் கற்கள் விழுந்தன. அந்தப்பகுதியே பதட்டமாக காணப்பட்டது.

எல்லோரும் பச்சண்ணாவை அமுக்கிப்பிடித்தார்கள். நேரே ஆஸ்பத்திக்குள் கொண்டுச் சென்று படுக்கவைத்தார்கள். ஆனால் பச்சண்ணா கத்திக்கொண்டே யிருந்தார். யாரையோ கொலைச்செய்யப்போவதாகக் கத்திக்கொண்டே இருந்தார். ஆஸ்பத்திரியில் கூட்டம் சேர்ந்து விட்டது. அது தனியார் ஆஸ்பத்திரி, உடனே, பெரிய டாக்டரை போனில் அழைத்தார்கள்.

அவர் வந்து, பச்சண்ணாவை சோதித்துப்பார்த்துவிட்டு, பச்சண்ணா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சொன்னார். உடனே அவரை, அரசு மனநல ஆஸ்பத்திரிக்கு அழைத்துப்போக சீட்டுக் கொடுத்தார்.

கீழ்ப்பாக்கம் மனநல ஆஸ்பத்திரியில் , பச்சண்ணாவை சேர்த்து விட்டார்கள்.

யாரைப் பார்த்தாலும், கொன்று விடுவேன் என்றே கத்திக்கொண்டிருந்தார். சின்னபையனும், அவரது பேரன், முத்துவும் நிறையஅழுதார்கள். பச்சண்ணாவை தனி அறையில் அடைத்து வைத்து, வைத்தியம் கொடுத்தார்கள்.

ஒரு வாரம் சென்றது. வரும் போகும் உறவினர்களெல்லாம் அவரைப்பார்த்து அழுதனர். ஆனால், பச்சண்ணா மட்டும் வானத்தையே பார்த்துக்கெண்டிருந்தார். பிறகு அவர் யாரிடமும் பேசவில்லை.

***

jayans_ranee@sify.com

Series Navigation

ஜெயானந்தன்

ஜெயானந்தன்