அப்பாவின் படம்

This entry is part [part not set] of 23 in the series 20021102_Issue

பாரதிராமன்


அப்பாவின் காரியங்கள் சோகம் இழையோட சிரத்தையுடன் நடந்துகொண்டிருந்தன.டில்லியிலிருந்து அண்ணாவும்,துபாயிலிருந்து சின்ன அக்காவும், யு.எஸ்ஸிலிருந்து பெரிய அக்காவும் வந்துவிட்டார்கள். தினமும் பிதிர் காரியங்கள் முடிந்து சாப்பாடு ஆனதும் நாங்கள் அப்பாவுடன் கழித்த நாட்களின் அனுபவங்களைப் பரிமாறிக்கொண்டு அவரை நினைவு கூர்ந்துவந்தோம். நாளைக்கு அவரது காரியங்கள் பூர்த்தியாகிவிடும் அதற்கடுத்தநாளே ஊரிலிருந்துவந்த எல்லோரும் அவரவர் இடங்களுக்குத் திரும்பிவிடுவார்கள். நானும் அம்மாவும் இங்கே தனித்துவிடப்படுவோம்.

அம்மா கொள்ளைகாலம் வாழ்ந்துவிட்டார் அப்பாவோடு. தன்னைவிட்டுத் தனித்திருக்கமுடியாதபடி அப்பாவைத் தன்னிடத்தில் ஐக்கியப் படுத்திக்கொண்டிருந்தார் அம்மா. அதனால்தானோ என்னவோ அவர் உடல் கடைசியாக வீட்டைவிட்டுச் சென்றபோதுகூட அம்மா அலறி ஒப்பாரி வைக்கவில்லை. மாறாக தன் துக்கத்தையெல்லாம் அடக்கிகொண்டு, ‘ நான் இருக்கேனே, உங்களையெல்லாம் பாத்துக்க! ‘ என்று சொல்லி எங்களுக்குத் தைரியமூட்டினார்

அம்மாவிடம் இருந்த இந்த தைரியத்தைக் கண்டுதான் என் சகோதர சகோதரியர் உடனே கிளம்பத் தயாராகிவிட்டார்கள். எல்லோருமே அவரவர் ஊர்களில் வசதியாக இருந்ததால் அப்பாவின் சொத்துபத்துகள் பற்றி யாரும் பேச்சே எடுக்கவில்லை. ஆனால் அவர்கள் மூன்றுபேருமே நல்ல அமைப்புடன்கூடிய அப்பாவின் பெரிதுபடுத்தப்பட்ட போட்டோ ஒன்றைத் தங்களுடன் எடுத்துச் செல்ல ஆசைப்பட்டார்கள். இதற்காக பழைய ஆல்பங்களையும் நெகடிவ்களையும் தேடி எடுப்பதில் முனைந்தேன் நான்.

அப்பாவுக்கு அலுவலகம் மூலமாகவும் தனிப்பட்ட முறையிலும் நிறைய ஊர்களைப் பார்த்திருந்தவகையிலும் ஏராளமான நண்பர்களும் விசுவாசிகளும் உண்டு. அவர்களுடன் சேர்ந்து மிக நிறையவே போட்டோக்களும் எடுத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் ‘மிக அதிகமாக போட்டோ பிடிக்கப்பட்ட நபர் ‘ என்ற பட்டத்தை சமீபத்தில்தான் இளவரசி டயானா அவரிடமிருந்து தட்டிச் சென்றிருக்கிறார் எனலாம். இருந்தாலும் அந்தப் படங்கள் எல்லாம் பெரிது செய்து வீட்டில்வைத்து அவர் ஞாபகத்தைப் போற்றக்கூடியதாக அமைந்திருக்கவில்லை. எனவே குடும்பம் சம்பந்தப்பட்ட வேறு படங்களைத் துருவ ஆரம்பித்தேன்.

அப்பாவின் கல்யாண போட்டோ ஒன்று கிடைத்தது. அப்பாவும் அம்மாவும் சேர்ந்து ‘வாமன் பிரதர்ஸ் ‘ ஸ்டூடியோவில் எடுத்துக்கொண்டது. இதுதான் அந்த நாளைய ‘இல்லஸ்ட்ரேடட் வீக்லி ‘ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட போட்டோ. அந்தக் காலத்தில் பிரபலஸ்தர்கள் வீட்டு கல்யாண ஜோடிகளின் போட்டோக்களை உலகப்ரக்யாதிபெற்ற ஆங்கில வாரப் பத்திரிகையான ‘இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இண்டியா ‘ தேர்வு செய்து வெளியிட்டுவந்தது. தங்கள் திருமணபோட்டோ அதில் வெளியாவதை ஒரு பெரும் சிறப்பாக புதுமணத் தம்பதிகள் கருதிவந்த காலம் அது. அவர்களுடைய பெற்றோரும் உறவினர்களும்கூட அதைப் பெரும் கெளரவமாக நினைப்பார்கள். அப்பா-அம்மா ஜோடியின் போட்டோ வெளியான இதழைப் பார்த்துவிட்டு அப்பாவின் மாமி அந்த இதழில் காணப்பட்ட எல்லா ஜோடிகளிலும் அப்ப ‘-அம்மா ஜோடிதான் மிக அழகான, பொருத்தமான ஜோடி என்று கூறிவிட்டு உடனே அப்பா-அம்மாவுக்கு திருஷ்டி கழித்தாளாம். அதேபோல அப்பாவின் மாமனார் வீட்டில் மாட்டியிருந்த இந்தப் போட்டோவைப் பார்த்துவிட்டு தாத்தாவின் நண்பர்கள் ‘உங்கள் மாப்பிள்ளை இங்கிலாந்து நாட்டு இளவரசர்போல் இருக்கிறார் ‘ என்று பாராட்டுவார்களாம். இதெல்லாம் அப்பா சாப்பாட்டு மேசை முன் கூடியிருக்கும்போது பலதடவை சொன்னதுதான்.

எங்கள் வீட்டுச் சாப்பாட்டுமேசைக் கூட்டம் மிக முக்கியமானது; கலகலப்பானதும்கூட. பகல் உணவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரமாக இருந்தாலும் இரவிலும் விடுமுறை நாட்களிலும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்தே சாப்பிடுவோம். அப்போதுதான் குடும்ப விஷயங்கள்அத்தனையும் அலசப்படும். வயது வித்தியாசமின்றி கருத்துகள் பரிமாறிக்கொள்ள எல்லோருக்கும் சம உரிமை உண்டு. யார் அசடு வழிந்தாலும் கேலிக்குள்ளாவார்கள். ஆனால் யாருமே அதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். அப்பா ஆஃபீஸ் மாறின விவகாரம், அண்ணாவை என்ஜினீயரிங்கில் சேர்ப்பது, பெரிய அக்கா திருமண ஏற்பாடுகள், சின்ன அக்காவை வேலைக்கு அனுப்புவது, வீடுகட்டுவது, கடனை அடைக்க சில சிக்கனங்களை மேற்கொள்வது என்று இப்படி எல்லா விஷயங்களுமே சாப்பாட்டுமேசையில் எடுக்கப்படும் முடிவுகள்தான். இதுவரை எடுக்கப்பட்ட முடிவுகள் எதுவும் சோடை போனதில்லை. நாங்கள் வளர்ந்து பெரியவர்களாகி ஒவ்வொரு இடமாகப் பிரிந்திருப்பதில் எங்கள் வீட்டுச் சாப்பாட்டுமேசை தனிப்பட்டுவிட்டதே என்பதுதான் குறை.

அடுத்து பெரிய அக்கா கல்யாண ஆல்பத்திலிருந்து ஒரு சில படங்களைத் தேர்ந்தெடுத்தேன். முகூர்த்த நேரப் போட்டோக்களில் அப்பா பனியன்கூட அணியாமல் மேலே வெறும் அங்கவஸ்திரம் மட்டுமே தரித்திருந்தார். வரவேற்பு நிகழ்ச்சிப் படங்களில் எல்லாம் அப்பா செயற்கையான சிரிப்புடன் இருப்பதாகப்பட்டது. கண்கள் காமிராவைப் பார்க்காமல் விருந்தாளிகளின் கைப் பொட்டலங்களைப் பார்ப்பதுபோல இருந்தன. மற்றப் படங்களில் கல்யாண அலைச்சலின் எதிரொலியும் கடன்சுமையின் பிரதிபலிப்பும் முகத்தில் வட்டமிட்டிருந்தன. எனவே தேர்வில் பூஜ்யம்தான். தன் கல்யாண ஆல்பத்திலிருந்து ஒன்றுமே தேறவில்லை என்பதில் பெரிய அக்காவுக்கு வருத்தம் எதுவும் இல்லை அவள் சுபாவமே அப்படித்தான். எதிலும் ‘டோன்ட் கேர் ‘.

தன் முதலாவது வேலையை ராஜினாமா செய்தபோது எடுக்கப்பட்ட பிரிவுபசாரப் படத்தில் அப்பா கோட்டு சூட்டுடன் கம்பீரமாக இருந்தார். அதிக சம்பளத்தில் சேரப்போகும் அடுத்த வேலையைப் பற்றிய மகிழ்ச்சிகூட அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அந்தப் படம் பெரிய ‘குரூப் ‘ போட்டோ என்பதால் ‘கசமுச ‘ என்றிருந்தது. பெரிதாக்கினால் சரியாக வருமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக அப்பாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஆங்கிலோஇந்திய ரிசப்ஷனிஸ்டின் தொடை அப்பாவை இடித்துக்கொண்டிருந்தது. இது போதாதா அப்படத்தைத் தவிர்க்க ?

அப்பாவும் தாத்தாவும் எடுத்துக்கொண்ட படம் ஒன்று அடுத்ததாகப் பார்வைக்கு வந்தது. குளிர் சீஸனில் எடுக்கப்பட்ட படம் போலும், இருவருமே கோட் அணிந்திருந்தார்கள். அப்பா தாத்தாவைவிட நல்ல உயரம் என்பதால் இரண்டுபேர் உருவமும் ‘குளோஸ்-அப் ‘பில் முழுவதுமாக விழவேண்டி அப்பா சற்று தலையை முன்புறமாகக் குனிவது மாதிரி வைத்திருந்தார். கல்யாணத்தின்போது தைத்த கோட்டு வேறு உடலை இறுகப் பிடித்திருந்தது. பித்தான்கள் தெறித்து விழுவனபோலத் தென்பட்டன. இந்தப் போட்டோவும் தேறவில்லை.

இலக்கியக் கூட்டமொன்றில் அப்பா முன் வரிசையில் உட்கார்ந்திருக்கும் போட்டோ ஒன்று கிடைத்தது. இந்த நிகழ்ச்சி நடைபெற்றபோது தொலைக்காட்சிச் செய்தியில்கூட அது ஒளிபரப்பானது. அப்பா தொலைக்காட்சியில் தோன்றியதற்காக அப்போது குடும்பமே திமிலோகப்பட்டது. அடுத்த நாள் ‘நேற்று உங்களை டி.வியில் பார்த்தேனே ‘ என்று அவருக்குப் பல போன்கால்கள் தெரிந்தவர்களிடமிருந்து வந்தன. ஆனந்தித்துப்போன அப்பா அந்நிகழ்ச்சியை போட்டோ பிடித்த ‘ஸ்டில் ‘காரரை நிகழ்ச்சி அமைப்பாளர் மூலம் பிடித்து தான் அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்றைப் பெற்றுக்கொண்டு ஆல்பத்தில் சேர்த்துவிட்டார். கூட்டத்துக்குப் போகும்போது அணியும் வழக்கமான உடையான நான்கு முழக் கதர் வேட்டி,ஜிப்பாவில் அப்பா இருந்தார். காலர் இல்லாத ஜிப்பாவில் கழுத்து மெலிந்து நீண்டு தெரிந்தது. அந்தப் படமும் நிராகரிக்கப்பட்டது.

இனி வேறெங்கே தேடுவது என்று எண்ணியிருக்கையில் கிட்டு மாமாவின் சிங்கப்பூர் ஆல்பம் ஞாபகத்துக்கு வந்தது. கிட்டு மாமா சிங்கப்பூர் போய்த் திரும்பியபோது சில நாட்கள் எங்களுடன் தங்கியிருந்தார். சிங்கப்பூரிலிருந்து வாங்கிவந்த காமிராவை எப்போதும் தோளில் மாட்டிக்கொண்டு கண்டதையும் படம் பிடித்தவாறு இருப்பார். எங்களுடன் இருந்தபோது சதாசர்வகாலமும் சிங்கப்பூரைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். ஏவிஎம் படமொன்றில் ‘அந்தக் காலத்திலே நான் காலேஜ்லே படிக்கறச்சே ‘ என்று நடிகர் சாரங்கபாணி பேசுவதுபோல நொடிக்கொருதரம் சிங்கப்பூர் புராணம்தான். ஒரு நாள் சாப்பிடும்போது அப்பா அவரைப் பார்த்து ‘ஏண்டா கிட்டு! நாம்பல்லாம் ரசத்துக்கப்பறமா மோர் சாப்பிடறமே, சிங்கப்பூர்காராளும் அப்படித்தானா ? ‘ என்று மாமாவைக் கேலி செய்யும் எண்ணத்தில் கேட்க, கிட்டு மாமாவோ அதைக் கண்டுகொள்ளாமல் ‘அதானில்லே அத்திம்பேர்! ரசத்துக்கு அப்பறமா அவங்க மோர் சாப்பிடமாட்டாங்க, தயிர்தான் சாப்பிடுவாங்க; அவங்களுக்கு அங்க இல்லாத வசதியா ? ‘ என்று அழுத்தலாக பதில் சொன்னார். இந்த போட்டியில் ஜெயித்தது யார் என்று தெரியாமல் எல்லோருமே ‘கொல் ‘லென்று சிரித்துவிட்டோம் அப்பா உள்பட. அப்போது கிட்டு மாமா ‘க்ளிக் ‘கிய படத்தில் அப்பாவின் முகத்தில் சிரிப்போடுகூட சில சோற்றுப் பருக்கைகளும் ஒட்டிக்கொண்டிருந்தன.இன்னொரு படத்தில் மேசையில் அப்பாவுக்கு எதிர்ப்புறமிருந்த நாற்காலியின் மேல்பக்கக் குறுக்குக் கட்டை அப்பாவின் முகவாய் அருகே விழுந்திருந்தது. மற்றொரு படத்தில் அப்பாவின் முகமே தெரியாமல் வெறும் முகப் பரப்பு மட்டுமே கறுப்பாகத் தெரிந்தது, நிழலைப் படம் பிடித்தமாதிரி. இப்படியாகக் கிட்டு மாமாவின் ஆல்பமும் இந்த விஷயத்தில் பயனற்றுப்போனது.

நிழலைப் படம் பிடித்த மாதிரி என்றதும் அம்மாவிடமிருந்த படம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அப்பா ஒருமுறை கல்கத்தா சென்றிருந்தபோது நடைபாதை ஓவியர் ஒருவரைச் சந்தித்தார். அப்பாவை சித்திரமாக வரைந்து தருவதாகக்கூறி அந்த ஓவியர் ஒரு கறுப்புத் தாளில் தன் நகங்களைக்கொண்டு அப்பாவின் முகத்தின் பக்கவாட்டுத் தோற்றத்தை சில நொடிகளில் பதிவுச் சித்திரமாகக் கீறிக்கொடுத்துவிட்டார். அது அற்புதமாக அமைந்திருந்தது. அப்பாவின் வலது முகவெட்டு இடதுபுறத்தைவிட அழகாக இருக்கும். முன்பக்கம் சற்றுத் தூக்கிவிட்டுப் படியவாரப்பட்ட கிராப்பும், விரிவான நெற்றியும், நீண்ட எடுப்பான நாசியும், வடிவான உதடுகளும் நிழலில் தெரிவதுமாதிரியான வலதுபக்க முகத்தோற்றத்தை ‘சில்ஹவுட் ‘ முறையில் அந்த ஓவியர் வடித்திருந்தார். சில சமயங்களில் இரவில் அப்பா மேசை விளக்கின் அருகில் உட்கார்ந்து படிக்கின்றபோது எதிர்ப்புற சுவரில் அவரது நிழல் கூர்மையாக விழுமே அதைச் சுருக்கியது போல இருந்தது அந்த ஓவியம்.கண், காது, மூக்கு,வாய் என்று தனித்தனியாக நேரடியாகத் தெரியாவிட்டாலும் அது அப்பாதான் என்று எங்களால் எப்போதுமே அடையாளம் காட்ட முடியும். அம்மாவுக்கு அதை மிகவும் பிடித்திருந்தது. அதை அப்பாவிடமிருந்து வாங்கித் தன்னிடமே வைத்திருந்தார். நீண்ட நாட்களாக அது அம்மாவின் பீரோவில் புடைவை அடுக்குகளின் அடியில் இருந்ததை நானே பார்த்திருக்கிறேன். கொஞ்ச நாட்களாக அதைக் காணோம். ‘எங்கேயோ மறதியாக வைத்துவிட்டேனோ, தொலைத்துவிட்டேனோ தெரியவில்லையே ‘ என்று அம்மா வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். அப்பா போனதிலிருந்து அந்த வருத்தம் அதிகமாயிற்று. இருந்தாலும் தன் இயல்புக்கேற்ப அம்மா தன் வருத்தத்தை வெளிக்காட்டாமல் அதை மறந்துவிட முயற்சித்தது எல்லோருக்கும் தெரிந்தது.

அப்பாவின் நிழலுருவப்படம் என் குப்பைகளில் கலந்துவிட்டதா என்றுகூடத் தேடிப் பார்த்துவிட்டேன். எங்கும் கிடைக்கவில்லை. எனவே தற்காலிகமாக போட்டோக்களை அலசுவதை நிறுத்திவிட்டு அடுத்தமுறை எல்லோரும் அப்பாவின் வருடாந்திரத் திதியின்போது கூடுவதற்குள் அம்மாவின் ஒப்புதலோடு ஒரு நல்ல போட்டோவைத் தேர்ந்தெடுத்து அதை இரண்டுக்கு ஒன்றரை அடி அளவில் பெரியதாக்கி இரண்டங்குல பொன்னிறச் சட்டம் போட்டுத் தயாராக வைத்திருக்கும் பொறுப்பை என்னிடம் விட்டுவிட்டு எல்லோரும்

அவரவர் ஊர் திரும்பினார்கள்.

போட்டோவைத் தேர்ந்தெடுப்பதில் அம்மாவின் ஒப்புதல் முக்கியம் என்று எல்லோரும் சொல்லாமல் சொல்லிவிட்டுப் போனார்கள். இது ஒன்றும் புதிதல்ல. எங்கள்வீட்டுச் சாப்பாட்டுமேசையில் எடுக்கப்படும் எல்லா முடிவுகளும் அப்படித்தான். அம்மாவைத்தவிர எல்லோருமே காரசாரமாக விவாதங்களில் ஈடுபடுவார்கள் அம்மா வாய் திறவாமல் எல்லாவற்றையும் சும்மா பார்த்துக்கொண்டிருப்பது போலத்தான் வெளியில் தெரியும்.என்றாலும் கடைசியாக அப்பா எடுக்கும் முடிவு அம்மாவின் முடிவுடன் ஒத்துப்போவதாகத்தான் இருக்கும்.அம்மாவின் நிசப்தமான பலம் அப்படி. ஒருவேளை அம்மா தன் முடிவை முன்கூட்டியே அப்பாவிடம் அறிவித்துவிட்டிருப்பாரோ என்றும், அப்பா அதற்கேற்பவே தானும் முடிவு செய்கிறாரோ என்றும் நாங்கள் சந்தேகப்படுவது உண்டு. அப்பா-அம்மாவின் பரஸ்பர ஐக்கியம்தான் எங்களின் நிறைவான சொத்தாக விளங்கிவந்தது எங்கள் குடும்பத்தின் தனிச் சிறப்பு.

ஊருக்குத் திரும்பியதும் என் சகோதர சகோதரியர் தாம் எழுதிய கடிதங்களிலும் ,போனில் பேசியபோதும் போட்டோவைப் பற்றி நினைவுறுத்தினார்கள். நான்தான் இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றனவே என்று சமாதானம் சொல்லி வந்தேன். இரண்டொரு நினைவுறுத்தல்களுக்குப் பிறகு அதைப்பற்றி யாரும் பேசவில்லை.

அடுத்துவந்த பொங்கல் விடுமுறையின்போது வீட்டில் பண்டிகை இல்லை என்பதால் சாவதானமாக அப்பா போட்டோவுக்கான தேடலில் இறங்கினேன். அப்பாவின் அலுவலக வெள்ளிவிழா சம்பந்தப்பட்ட சில போட்டோக்கள் கிடைத்தன. அவற்றில் வெள்ளிவிழா குடும்ப மலரில் அப்பாவைப் பற்றிய கட்டுரைக்காக பிரத்யேகமாக எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று இருந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கரிநாள் கழித்து அம்மாவிடம் அதைக் காட்டி சம்மதம் பெறலாம் என்றும் கருதி அதை எடுத்துப் பத்திரப்படுத்திவைத்தேன்.

மறுநாள் காலை அம்மா பூசை அறையிலிருந்து அவசரம் அவசரமாக எழுந்துவந்தார். ‘டேய் ராமு! அப்பா படம் கெடச்சூட்டுதுடா, சுந்தர காண்டம் புஸ்தகத்தை எடுக்கும்போது கீழே விழுந்துதுடா,இதோ பாரு ‘ என்று குதூகலத்துடன் கூறிக்கொண்டே வந்தார் அம்மா. அப்பா கடைசியாக சுந்தரகாண்டம் முப்பத்தாறாவது சர்க்கம்(விட்டுப்பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரவேண்டி படிக்கப்படும் பகுதி இது) படித்துக்கொண்டிருக்கையில் பக்க அடையாளத்திற்காக இந்த ஓவியத் தாளை வைத்திருக்கக்கூடும். நெடுநாட்களாக அம்மா பூசை அறைக்குள் செல்லாததால் அவர் கண்களில் இது இதுவரை படாமல் போயிருக்கலாம். திடாரென்று கிடைத்ததில் ஒரு இன்ப அதிர்ச்சி அம்மாவுக்கு. பூசை அறையிலிருந்து வெளிப்பட்ட அம்மாவின் இடது கையில் சுந்தரகாண்டமும் வலது கையில் அப்பாவின் நிழலுருவப் படமும் இருந்தன ஆனால் அதற்குள் ஓர் அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தது. விளக்குத் திரியை நிமிண்டிவிட்டு அதே விரலால் படத்தை எடுத்ததில் அப்பாவின் முகத்தில்எண்ணெய் ஊறிப் படர்ந்திருந்தது. ‘ என்னம்மா இப்படி அவசரப்பட்டுவிட்டார்களே ? ‘ என்றேன் நான் அம்மாவிடம்.

‘படம் கிடைச்ச சந்தோஷத்திலே எனக்கு ஒண்ணுமே புரியலேப்பா! போனாப்போகட்டும். அவரே போயாச்சு. இனி எதுக்கு போட்டோவும் கீட்டோவும் ? ‘

அம்மா இப்படிச் சொல்லவும் மேற்கொண்டு அவரிடம் நான் எடுத்துவைத்திருக்கும் போட்டோவை எப்படிக் காட்டுவது என்று தயக்கமாக இருந்தது.

தன் விரக்திக் குரலை மாற்றிக்கொண்டு அம்மா தொடர்ந்தார்.

‘நீ கூட ஏன் போட்டோவைத் தேடிண்டு கஷ்டப்படறே இப்போ!

அப்பாவோட ஒவ்வொரு அம்சமும்தான் உங்க எல்லார்கிட்டயும் அப்படியே குடிகொண்டிருக்கே! அப்படி இருக்கச்சே தனியா அவரை ஞாபகப்படுத்தணும்னு அவரோட படம் எதுக்கு ?

‘அப்பாவோட சோம்பேறித்தனத்தை அப்படியே ஸ்வீகரிச்சிருக்கே நீ! எந்தக் காரியத்தைப் பத்தியும் ஒருதரம் சொன்னாப்போதாது உனக்கு. இன்னிக்கு ஒரு காரியம் ஆகணும்னா இரண்டு நாள் முன்னாடிலேர்ந்தே சொல்லணும் ஆனா எடுத்த காரியத்தை முடிக்காம விடமாட்டே, அப்பாவைப்போலவே வேலைய வெற்றிகரமாக முடிக்கறதுலே ஒரு மூர்க்கத்தனம் உனக்கு. எல்லாம்

நல்லதுக்குத்தான்.

‘அண்ணாவுக்கோ வீட்டு விவகாரமே ஒண்ணுந்தெரியாது. இன்னிவரைக்கும் உப்பு புளி விலையை அவன் அறிஞ்சதில்லே. ஆபீஸ்,ஆபீஸ்,ஆபீஸ்தான் சதாகாலமும். அவனோட பசங்கள் என்ன கிளாஸ் படிக்கிறான்னுகூட அவனுக்கு சில சமயம் தெரியறதில்லே. நல்ல வேளையா உன் மன்னி எல்லாத்தையும் கட்டி மேய்க்கத் தெரிஞ்சுண்டிருக்காளோ பொழச்சிதோ! எல்லாம் இந்த வீட்டைப்போலத்தான். அவன் பொழப்பும் குறையில்லாம சந்தோஷமா நடந்திண்டிருக்கு. அப்பாவோட நட்சத்திரம்தானே அவனோடதும்!

‘ பெரிய அக்காவோ சகலத்தையும் ஒரு ரிஷி மாதிரி எடுத்துக்கிறவ. எந்த சந்தர்ப்பத்திலேயும் அவ கலங்கினது கிடையாது. தன்னை மீறி ஒண்ணும் நடக்க முடியாதுன்னு அவளுக்கு ஓர் அசாத்திய நம்பிக்கை. அசட்டு நம்பிக்கைன்னு கூட சொல்லலாம். ஆனா அவ நம்பிக்கைக்கேத்தமாதிரி இதுவரைக்கும் ஓர் அசம்பாவிதமும் நடக்கலே. அப்பா சொல்லிண்டிருந்தமாதிரி நம்ப நல்லதே நினைச்சம்னா நமக்கும் நிச்சயமா நல்லதுதான் நடக்கும். அவ வாழ்க்கையிலே இது நிதர்சனம். இல்லேன்னா அவ்வளவு தூரதேசத்துலே இருந்துண்டு பசங்களையும் ஆளாக்கிண்டு எல்லார்கிட்டயும் நல்ல பேர் எடுத்திண்டிருக்க முடியுமோ ? அப்பா மாதிரி ஒரு ராசி அவளுக்கு, எல்லாத்துலேயும் ஜெயிப்புதான்!

‘ உன் சின்ன அக்கா நிறத்துக்கு மாத்திரம் அவ அப்பாவைக் கொண்டுவரல்லே, அவரோட சாமர்த்தியமும் புத்திசாதுர்யமும் அவளண்டே இருக்கு. எந்தப் பிரச்னை வந்தாலும் அப்பா மாதிரி எல்லாக் கோணத்திலேர்ந்தும் அலசிப் பார்த்து முடிவெடுக்கறா. பாரபட்சமில்லாதபடி புக்காத்து விஷயமானாலும் பொறந்தாத்து விஷயமானாலும் நியாயத்தையே எடுத்துப் பேசறா. அப்பா மாதிரி அவளுக்கும் யார் சொல்றாங்கறது முக்கியமில்லே, என்ன சொல்றாங்கறதுதான் முக்கியம். எப்பவாவது அவளுக்குக் கோபம் வரும்போது அப்பா மாதிரியே முகத்தை தூக்கி வச்சுப்பா. கொஞ்ச நேரத்துலே சரியாயிடும்.

‘ இதையெல்லாம் நெனச்சுப் பார்த்துத்தான் சொல்றேன். உங்களுக்கு யார் வந்து எதிர்லே நின்னுண்டு அப்பாவை ஞாபகப் படுத்திண்டு இருக்கணும் ? உங்கள்லேயேதான் அவர் இருக்கிறாரே, இயங்கறாரே ?அப்ப எதுக்குத் தனியா அவரோட படம் ? இப்ப ஒண்ணும் வேண்டாம். எல்லார்கிட்டையும் நான் சொல்லிக்கிறேன். நீ போய் வேற வேலையப் பாரு! ‘- என்று தன் பேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்தார் அம்மா.

நான் மேற்கொண்டு பேச எதுவும் இருக்கவில்லை.

அப்பாவை நன்றாகவே படம் பிடித்து வைத்திருக்கிறார் அம்மா!

——கணையாழி- டிசம்பர், 1997.

kalyanar@md3.vsnl.net.in

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.