ஜெயமோகன்
[இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும் தமிழ்த் தொடர்கதை * ]
அத்தியாயம் : ஒன்று
கோவளத்தில் தனியார் கடற்கரையில் தென்னையோலை வேய்ந்த குடிலின் கீழ் குட்டை ஈசி சேரில் படுத்து கணேஷ் இந்தமுறையாவது போரும் அமைதியும் வாசித்து முடிக்க முடியுமா என்று முயற்சி செய்து கொண்டிருந்தபோது தனக்கு அளிக்கப்பட்ட குணாதிசயத்தை நிறைவேற்றும் பொறுப்பை சிரமேற்கொண்ட வசந்த் ‘ பாஸ் , குட்டி சும்மா குளோனிங் ஆடு மாதிரி கும்முன்னு இருக்கா. ஜெர்மன் ஹைப்ரீடுன்ன்னு நெனைக்கிறேன். என்ன சொல்றீங்க ? ‘ என்றான் .
‘ஏய் ,அவள் உடம்பை பாத்தியா , ரெஸ்லிங் பொண்ணு மாதிரி . கைமா போட்டுரப்போறா ‘ ‘ என்றான் கணேஷ் .
‘அட , நீங்க அதெல்லாம்கூட பாக்கிறது உண்டா ? ‘ ‘
‘சும்மா துப்பறியறதுக்குடா ‘
‘ நான் இந்த ஊட்டச்சத்து மாமியை கொஞ்சம் துப்பறிஞ்சுக்கிட்டு வரேன் பாஸ் . அதுவரைக்கும் ,… அதென்ன புஸ்தகம் … ‘
‘ வார் அண்ட் பீஸ் ‘
‘சரியாப்போச்சு , இதை அந்தாளே அம்பது பக்கம் தாண்டலை . அப்ப நீங்க எப்படி முடிக்க முடியும் ? உடுங்க . ஜோரா ஒரு பாத்திரம் தென்னங்கள்ளு குடிச்சுட்டு அந்த தென்னைகீழேயே சின்னதுக்கு போய்ப் பாருங்க , சொற்கம் ! ‘ வசந்த் அந்த வளமான சேச்சியை காதலாகப் பார்த்து ‘ கேரளா தெய்வங்களோட சொந்த நாடு பாஸ் . அம்மே ,நாராயணீ ,பரதேவதே, ரட்சிக்கணே! ‘ என்றான்.
கோர்ட் ஞாபகமில்லாமல் பத்துநாள் என்று வசந்த் தான் கூட்டிவந்தான் . ஏழு கேஸ் வாய்தாவிலேயே ஓடிக் கொண்டிருந்தது . ரங்காச்சாரி சவடால் இல்லாமல் கமுக்கமாக இருந்தது வேறு கணேஷை தொந்தரவு செய்தது .பழைய ஒரு தொடர்கதையில் அவரை ஒரு கேஸில் எக்கச்சக்கமாக குழப்பி ஜெயித்திருந்தான்.
‘ ஆயுர்வேதிக் சென்டர்லே சேச்சிகளே தைலம் தேச்சு உருவி விடறாங்களாம் பாஸ். வீக்லே ஒரு கவர் ஸ்டோரி பாத்தேன் ‘
‘ ‘ ரகசிய மருத்துவமலர் ‘லே தானே ? உன் டேபிள்லே பாத்தேன் ‘
‘ பாஸ் என்னையே துப்பறியறீங்களா ? தொழில் தர்மம்னு ஒண்ணு இருக்கு .. ‘ ‘
‘ அதென்னடாது , அதில தாந்தீரிக மருத்துவம்னு ஒண்ணு போட்டிருக்கு ? ‘
வசந்த் உற்சாகமாகி ‘ அதுவா , பூர்ண பீஜ ஸ்தம்பனம்னு ஒண்ணு பாஸ் .நாப்பத்தெட்டு நாள் நினைப்போ ஸ்பரிசமோ இல்லாம இருந்து மெதுவா ……. ‘
‘ அதானா , சரி விடு ! ‘ ‘
‘ நீங்கள்லாம் சும்மாவே வாக் இன் செலக்ஷன் கேஸ் பாஸ் . இப்ப உங்க பிராண சக்தியாகப்பட்டது ஸ்வஸ்த குண்டலினியிலே நாகப்பாம்பு ரூபத்திலே … ‘
‘விடுரா . ஏற்கனவே வெயில் கொளுத்துது ‘
வசந்த் அந்த பெண்ைணை பின்தொடர்ந்து ‘ ஹாய் ‘ என்று சொல்ல அவள் ‘ கிரீப் ! ‘ என்றாள். ‘தாங்க்யூ ‘ சொல்லி பின் வாங்கி விட்டான். ‘பெயரை கேக்கவேயில்லை பாஸ் , அவளா சொல்றா ‘
‘வழியாதே ‘
‘வழியறதா ? சாயந்தரத்துக்குள்ள ஒரு ப்ரிட்னி ஸ்பியர்ஸ் 2002 மாடலை மடக்கி யோகா கத்துத்தரலை அப்புறம் அக்கினிசிறகுகள்னு கலாம் எழுதினதுக்கு என்ன பாஸ் அர்த்தம் ? ஹாய் , யூ ஆர் ஃப்ரம் ? ‘ என்று கூடப்போய்விட்டான்
கணேஷ் மீண்டும் படிக்க ஆரம்பித்தான் . டால்ஸ்டாயின் பிரபுகுல உறவுமுறைகளை தீவிரமாக புரிந்துகொள்ள முற்பட்டதில் பிரின்ஸ் ஆன்ட்ரூவுக்கு அவன் மனைவி என்ன உறவு என்று குழம்பிப்போய், சிக்கலாக யோசித்துக் கொண்டிருந்தபோது செல்போன அடித்தது .
‘ லாயர் கணேஷ் ? ‘ என்ற மலையாள குரல் கேட்டது . ‘ என் பெயர் ராமசாமி . உங்களை நான் பாக்கணும் . ‘
‘ உங்களுக்கு என்னை எப்படி தெரியும் ? ‘
‘தெரியாம என்ன , பார்த்தாலே தெரியுதே .ஜெயராஜ் ஓவியம்தான் சார் பொருத்தம் . இப்ப விகடன்லே சியாம் சரியில்ல .உங்களுக்கு கொஞ்சம் வினோத்மெஹ்ரா சாயல்னு ‘அனிதா இளம் மனைவி ‘ யிலே ஒருபொண்ணு மோனிக்காவோ என்னவோ சொல்லியிருக்கு . அது ஆச்சு முப்பது வருஷம்.வினோத் மெஹ்ரா கூட பல்லுபோயி தாத்தா ஆயிருப்பார். என்ன நான் சொல்றது ? நான் உங்களை அவசியமா ,அவசரமா, பாத்தாகணும் ‘
‘ஸாரி , இங்க நாங்க பிஸினஸ் விஷயமா பேச விரும்பலை ‘
‘இது பிசினஸ் விஷயமில்லை . சொந்த விஷயம் ‘
‘உங்க சொந்த விஷயம்தான் எங்க பிசினஸ் , ஸாரி ‘ என்று மடக்கப்போனான் .
‘ஒரு நிமிஷம் கணேஷ். இது உங்க சொந்த விஷயம் , அதாவது என் பிசினஸ் ‘
கணேஷ் தன் நீண்டகால தொடர்கதை அனுபவத்தில் விஷயத்தை புரிந்து கொண்டு அத்தியாயத்தின் கடைசியில் அந்த ஆள் சாவதற்குள் அவருடன் பேசி கதையின் முதல் முடிச்சை தெரிந்து கொள்ள அவசரமாக கிளம்பினான். செல் போனின் படி அவர் ஒரு கேரள ஜோசியர் . பெரிய அரசியல் தலைகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் மணிக்கு பல்லாயிரம் ஃபீஸ் பெற்று அடுத்த கட்டச் சதி வகுத்து தருபவர் .
கணேஷ் வசந்தை பாதிவழியில் ஒரு பிக்கினியின் நிழலில் இருந்து பிக்கப் செய்துகொண்டு, [ ‘டிராப்பிக்கல் நாடுகளிலே பல்தேய்க்கவேண்டிய அவசியமே இல்லைண்ணு எந்த பஞ்சமாபாபாவியோ அவகிட்டே சொல்லியிருக்கான் பாஸ் ‘ ] அந்த மூன்று விண்மீன் ஓட்டலின் பிரம்மாண்டமான கான்கிரீட் வாசலில் நுழைந்து , பூதம் போன்ற கதகளி சிற்பங்களையும் தென்னைமர ஓவியத்தையும் சிரியன் கிறிஸ்தவ வரவேற்பினிகளையும் தாண்டி உள்ளே போனான்.
‘பாஸ் ஜோசியர்களுக்கெல்லாம் நம்மகிட்டே என்ன வேலை ? வேண்ணா மாயவரம்கேஸ் பத்தி ஒரு ஜோசியம் நாம கேட்டு பாக்கலாம்… ‘
‘ அத ஜட்ஜ் செய்வாருடா ‘ என்றான் கணேஷ் .
அவர்கள் சொல்லப்பட்ட 639 வது சூட் வாசலுக்கு வந்தபோது அந்தக்கதவு திறந்து கிடந்தது கணேஷை குழப்பியது ‘பாஸ் கூட்டுத்தொகை பாத்தீங்களா ? ரொம்பப் பெரிய கைன்னு நெனைக்கிறேன் ‘
அத்தியாயத்தின் வார்த்தை எண்ணிக்கை ஐநூறுக்குப் போய்விட்டமையால் கணேஷுடன் உரையாடலுக்கு அவகாசம் தரப்படாமல் அந்த ஆள் அவசரமாகக் கொல்லப்பட்டு அறைக்குள் பாதி சோபாவிலும் மீதி கார்ப்பெட்டிலுமாக சரிந்து கிடந்தார் .
‘மைகாட் , பாஸ் மாட்டிக் கிட்டோம் ! மறுபடியும் தொடர்கதை ! ‘ என்றான் வசந்த் .
‘ அத நாம நிம்மதியா கோவளம் பீச்சில உக்காந்திருக்கிற முதல் வரியிலேயே நீ ஊகிச்சிருக்கணும் ‘ என்றான் கணேஷ் ‘ போலீஸை கூப்பிடு . அதுக்கு முன்னால ஓட்டல் மானேஜரை ‘
‘ மிஸ் ‘ என்று வசந்த் அந்த பணியழகியிடம் அணுக, ‘ நான் தங்களுக்கு எவ்வகையில் உதவ முடியுமென தயை கூர்ந்து சொல்ல முடியுமா ? ‘ என்று அவள் சங்ஙனாச்சேரி ஆங்கிலத்தில் கேட்டாள் .
‘ மிக்க நன்றி . ஒரு கொலை நடந்திருக்கிறது ‘ என்றான் வசந்த்.
‘ ஓ , நைஸ் ‘ என்று அவள் புருவத்தை தூக்கி வசீகரமாகப் புன்னகைத்தாள் ‘ இதெல்லாம் கால்குலேட்டர் கேஸ் பாஸ். உள்ளார ஒரே ஒரு புரோக்ராம் , வெளிய எட்டு கீ . அதில ஒண்ணு … ‘
‘டேய் ,பாத்துடா ‘
‘மிஸ் .நிங்கள் மானேஜர் அடுக்கல் ஞான் சம்சாரிக்குன்னு .. ‘
‘ஓ நைஸ் ‘ புன்னகை மாறாமல் அவள் இடையசைத்து நடந்து முன்னால் போக வசந்த் பின்னால் போனான் . சற்று நேரத்தில் பணியாட்கள் கூடி எட்டிப்பர்த்து கிசுகிசுக்க, ஒரு ஆங்கிலோ சாக்சன் பாட்டி தலை தட தடவென்று நடுங்க உபயவேதாந்த முகபாவத்துடன் நீச்சலுடையில் சந்தேகாஸ்பதமான இளைஞனால் கைத்தாங்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டாள் .
மானேஜர் கறுப்பு ஃபுல்சூட்டில் வியர்த்து வழிய வந்து , கைக்குட்டையால் வழுக்கையே நெற்றியாகியிருந்த பிராந்தியத்தை மீண்டும் மீண்டும் துடைத்து விட்டபடி , ‘ எங்களுடையது மிக நம்பகமான நிறுவனம் ‘ என்று சொல்லிக் கொண்டிருந்தார் .
கொல்லப்பட்டவர் பஞ்சக்கச்சம் அணிந்து சந்தனக்குறி போட்டு பலவிதமான மாலைகள் தாயத்துகள் கலைந்துகிடக்க மலையாள அப்பா நடிகர் சாயலில் சிவப்பாக கனமாக இருந்தார் — அதாவது இருந்திருந்தார் . ‘இதெல்லாம் என்ன பெரிய கொலை ‘ என்பது போல வாய் கோணலாக திற ந்திருக்க கார்ப்பெட்டில் ரத்தம் இன்னும் அமில வீச்சம் அடித்தது .
‘ பாஸ் , ஏதாவது இட்சிணி அடிச்சிருக்குமோ ‘ என்றான் வசந்த் . ‘ ஒண்ணுமே இடம் மாறலை . ரூம் நீட்டா இருக்கு . யாரோ ரொம்பத் தெரிஞ்சவங்கதான் செஞ்சிருக்கணும் . பேசிட்டே இருக்கிறப்ப .. ‘
‘ பார்டா , முன்பக்கம் குண்டு பாய்ஞ்ச தடமே இல்லை .துப்பாக்கியால சுட்டா சத்தம் கேட்டிருக்கும் . சைலன்ஸர் உள்ள துப்பாக்கின்னாகூட ஆசாமி கத்தியிருக்கணும் . அதை யாருமே கேட்டதா தெரியலை. ‘
போலீஸ் வந்தது . கிழட்டு போலீஸ்காரர் கூட்டத்தை ‘ மாறி நில்கினெடே ‘ என்று அன்பாக சொல்ல உள்ளே வந்த சப் இன்ஸ்பெக்டர் ‘ கெ .ஃபல்குனன் பிள்ள ‘ சுத்தமாக ஷேவ் செய்யப்பட்ட கொழுத்த முகத்தில் கவலையுடன் பல்பல்லாக துல்லியப்படுத்தப்பட்ட ஆங்கிலத்தில் ‘ யார் முதலில் பார்த்தது ? ‘ என்று கேட்க கணேஷ் ‘நான் தான் .. ‘ என்றான்
‘ நீங்கள் யார் ? ‘ என்றார் இன்ஸ்பெக்டர் தொப்பியை தூக்கி கைக்குட்டையை தலையிலிருந்து எடுத்தபடி . ஃபாரன்சிக் ஆட்கள் வந்து வேலையை ஆரம்பிக்க சடலம் உறைதன்மை பெறத் துவங்கியது .
‘லாயர் . இது என் ஜூனியர் வசந்த் ‘
‘நீங்களா ? ‘
‘ ஆமா, நாங்களேதான் . ‘
அவர் மலையாளத்தில் குழம்பி ‘ உண்மையாகவா ? ‘ என்றார் ‘ அப்படியானால் இது தொடர்கதைதானா ? அதுதானே பார்த்தேன் ‘ என்று ஆறுதலாகி ஃபாரன்சிக் கெட்டிமீசையிடம் ‘ ராகவன் சேட்டா எல்லாம் ஒரு மிதமாயிட்டு மதி கேட்டொ .சங்கதி துடர்கதயாணு ‘ என்றார் ‘ எதில் வரும் ? கேரள குங்குமத்தில தானே ? ‘
‘அதெல்லாம் எங்களிடம் கேட்பதில்லை .டிவி சீரியலாகக் கூட வரலாம் . இல்லை அப்படியே நிலம் தொடாமல் நேராகவே திரைக்கதையாகக்கூட ஆகிவிடலாம். ‘
‘அப்ப ஜோடி , டூயட்டெல்லாம் இருக்குமே , ஏன் பாஸ் ‘. என்ற வசந்த் திடாரென்று கவனமாகி ‘பாஸ் அங்க பாருங்க … அந்தாளை எங்கோ பாத்தது மாதிரி இல்ல ? ‘
அந்த கிழவர் கறுப்பு கோட் அணிந்து , பஞ்சக் கச்சமும் குடையுமாக அசட்டு முழியுடன் கூட்டத்தில் நின்று வேடிக்கை பார்த்தார் . ‘ ஆர். கெ. லட்சுமணனோட திருவாளர் பொதுஜனம் மாதிரி இருக்கார் ,பாஸ் ‘
‘ அந்தாள் மூக்கப் பாருடா ….என்னமோ தப்பு நடக்குது . ‘
‘பாஸ் , துப்பறியும் சாம்பு ! ‘ வசந்த் அலறிவிட்டான் . ‘ என்ன குளறுபடி இது ? இந்தாள் இங்க எங்க வந்தார் ? கதை எங்கியோ போகுது ‘ ‘
‘ அதான் எனக்கும் புரியலை. ‘ கணேஷ் சொன்னான் ‘இது வழக்கமான நாப்பதுவாரத்தொடர் இல்லை, என்னமோ போஸ்ட் மாடர்ன் உடாலக்கடின்னு தோணுது.. ‘
‘என்ன ஆச்சு நம்மாளுக்கு , எட்டு தொடர்கதை ஏககாலத்தில எழுதின கை …. ‘
‘இல்லடா . இது வேற எவனோ செய்ற வேலை .இரு ‘ என்றான் கணேஷ் ‘ கதை எங்க ஆரம்பிக்குது பார். கோவளம் . அப்புறம் மலையாளத்தை தமிழ்லே யார் எழுதினாலும் தப்புதப்பாத்தான் வரும் . இரா. முருகன் கொஞ்சம் பரவாயில்லை. நம்மாள்னா சொதப்புவார் . இதில பார் , பக்காவா இருக்கு .. ‘
‘ அப்ப ? ‘ என்று கேட்ட வசந்த் உடனே ஊகித்து ‘ அவனா ? திமிர் பிடிச்ச ஆளுன்னு அன்னிக்கு திருவல்லிக்கேணியிலே பதினாலுபேர் கூட்டம் போட்டு திட்டிக்கிட்டு இருந்தாங்க. இவங்கள்லாம் தலைக்காணி , அதுக்கு உறைன்னு எழுதித் தள்ற டைப் . அவன் இதில எங்க பூந்தான் ? ‘
‘ காலம் மாறிப்போச்சுடா .சுந்தர ராமசாமியேக்கூட கிளுகிளு தொடர்கதை எழுதப் போறதா பூந்தமல்லிப்பக்கமா பேச்சு அடிபடுது ‘
‘ பாஸ் இந்தாள்தானே தெவச மந்திரத்தையெல்லாம் நடு நடுவிலே போட்டு விசிப்பலகை சைசுக்கு ஒண்ணு எழுதினான் ? ‘
‘விஷ்ணுபுரம் . இன்னும் படிக்கலை . சிறுகதைதொகுப்பா கட்டுரையான்னு கண்டுபிடிக்கிறதுக்குள்ள பாதி ஓடிடுதுங்கிறாங்க ‘
‘ ‘ பாஸ் துப்பறியும் சாம்பு பத்தி வெளிநாடுகள்லே கவிதைகள்லாம் எழுதறாங்க. ‘என்றான் வசந்த்.
துப்பறியும் சாம்பு தன் குடைமிளகாய் மூக்கை வாஞ்சையாக தடவியபடி , கணேஷைப் பார்த்து புன்னகை புரிந்து ‘ எஸ்பராண்டோ படிச்சிருக்கேளா ? ‘ என்று கேட்டார்.
[தொடரும்]
***
* சட்டபூர்வமான எச்சரிக்கை . விளம்பர வாசகங்களை நம்புவது உடல் மன நலங்களுக்கு தீங்கானது .
- நிழல் பூசிய முகங்கள்
- திண்ணை அட்டவணை
- திண்ணை என்ன சொல்கிறது ?
- புதிரின் திசையில் – எனக்குப் பிடித்த கதைகள் – 21 (வண்ணநிலவனின் ‘அழைக்கிறவர்கள் ‘ )
- திலீப் குமாருக்கு விருது
- அவனியைப் பல்லாண்டு சுற்றிவரும் அண்டவெளி நிலையங்கள்
- அறிவியல் மேதைகள் கலிலியோ (Galileo)
- பெண்தெய்வம்
- எல்லாவற்றுக்குமாய்…
- அரசியல்வாதி ஆவி
- வெற்றிட பயணம்
- உலக நண்பர்கள் தினம் (ஆகஸ்ட் 4ம் திகதி)
- நான்காவது கொலை !!! (அத்தியாயம் : ஒன்று)
- அச்சம்
- மாதுரி, பிரகாஷை உடனே விடுதலை செய்யவேண்டும்
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 4 2002
- உலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை – 2
- சகிப்புத்தன்மையில்லாத திராவிடர் கழகம்
- இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 7 (அத்தியாயம் 7 – இந்துத்துவ அணுகுண்டு)
- இதயத்தின் எளிமை (Simplicity of the heart)
- நெஞ்சு பொறுக்குதில்லையே..
- வீசும் வரை……
- போதி நிலா
- கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்