-ஆகேஷ்
‘டேய் ! காலை தூக்கி மேல வச்சிக்கடா. பெறுக்கிட்டு இருக்கேன்னில்லை ! ‘ என்றபடி துடைப்பத்தை காலடியில் குனிந்து பெருக்க ஆரம்பித்தாள் தீபா.
‘உனக்கு இதே வேலையா போச்சு ! நான் உட்கார்ந்து படிக்கும் போதுதான் பெருக்க வருவ நீ!!!! ‘ என்றபடி காலை கஷ்டப்பட்டு தூக்குவது போல் தூக்கி நாற்காலியில் வைத்துக் கொண்டேன்.
‘ஆமாம்டா ! எனக்கு வேண்டுதல் பாரு, நீ தண்டமா புஸ்தகத்தை வைச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கும் போதுதான் பெருக்கணும்னு. ‘ என்று முனகியபடி என் காலடியே பெருக்கிவிட்டு சென்றாள்.
‘சே!! இந்த வீட்டில நிம்மதியா எதுவுமே செய்ய முடியாம போச்சு. ஒரே பிடுங்கல்பா !! ‘. என் வாய்தான் எந்த விவாதத்தையும் மொட்டோடு விட்டதில்லையே.
என் சொற்கள் காதில் விழுந்ததும், கையில் இருந்த விளக்குமாறை அதன் இடத்தில் மிகுந்த சப்தத்தில் வைத்து தன் கோபத்தை காண்பித்தாள் தீபா. என்னை நோக்கி வந்தபடி,
‘என்ன இப்ப உன் நிம்மதி போச்சு ? நீ காப்பி குடிக்கும் போது உடைத்த பாரு கண்ணாடி டம்ளர், அதோட தூள்கள் கால்ல குத்திடக்கூடாதுன்னு பெருக்கினேன் பாரு , என்னைச் சொல்லணும் !! ‘ வார்த்தைகளில் அனல் பறந்தது.
‘ஆமாம். ஆமாம். இவங்க பெரிய மதர் தெரசா. சமூக சேவை செய்ய வந்திட்டாங்க ! ‘. நையாண்டித்தனமாக பேசியபடி, காற்றில் அவள் காலைத் தொட்டு கும்பிட்டு கொள்வது போல் சைகை செய்தேன்.
எங்களுக்குள் வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்தவுடனே, எப்பொழுதும் போல் எப்படித்தான் மூக்கு வியர்க்குமோ, சமையலறையில் இருந்து வெளியே வந்தாள் எங்கள் அம்மா.
‘ஆரம்பிச்சிட்டாங்களா இரண்டு பேரும். என்னடா இன்னிக்கும் இன்னும் குருசேத்திரம் ஆரம்பிக்கலைன்னு நினைச்சேன். ‘, என்றபடி கண்ணாடி ஓரத்தில் ஒட்டியிருந்த நேற்றைய பொட்டை எடுத்து ஒட்டிக் கொண்டு வேலைக்கு கிளம்ப ஆயுத்தமானாள்.
என்னை பார்த்துக் கொண்டே வந்தவள், என் அருகே மேஜை மேல் இருந்த தன் கைப்பையை எடுத்து மாட்டிக் கொண்டு, ‘டேய் ! உனக்குத் தான் இன்னிக்கு காலேஜ் இல்லேல்லே ? வெயில்ல சுத்தாம வீட்டிலேயே இரு. கொஞ்ச நேரம் கழித்து பாங்கில்லிருந்து பணம் எடுத்துக் கிட்டு வந்துடு. அப்பா போகும் போது உன்னை எடுத்து வைக்கச் சொல்லிட்டுப் போனார் ! ‘.
காலை பத்து மணிக்கு இருக்கும் கிரிக்கெட் ஆட்டம் நியாபகத்துக்கு வந்து மறுக்க வாய் திறக்க எத்தனித்த நான், அப்பா என்று பிரம்மாஸ்தரத்தின் பெயரில் அடங்கிப் போனேன்.
‘தீபா ! சாப்பாடுக்கு ஏதாவது பண்ணிடும்மா. எனக்கு நேரமாயிடுச்சு! ‘ என்றபடி செருப்பை மாட்ட ஆரம்பித்தாள் அம்மா.
‘சரிம்மா ‘ என்ற தீபாவை பார்த்து எரிந்தது எனக்கு. என்ன நல்லபிள்ளையாக நடிக்கிறாள், கள்ளி!!!.
‘என்ன சாப்பாடு இவ செய்யப் போறாளா ? ? ? என்ன விளையாடறீங்களா. விடுமுறை நாள் அதுவுமா பார்த்து இவ சமையலா ? ? ‘ என் வயிறு எரிந்தது.
‘அவ சமையலுக்கு என்னடா ? இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் ஆகிப் போகப் போறவ. பொண்ணு பார்க்க வந்த போது இவ பண்ணியிருந்த டிபனை பத்தித்தான் இன்னும் மாப்பிள்ளை வீட்டில பேசிக்கிட்டு இருக்காங்களாம் ! ‘ அப்பாவித்தனமாய் சொல்லியபடி வெளிக்கதவை திறந்தாள் அம்மா.
‘ஆமாம் ! நீங்கதான் மெச்சிக்கணும். போனவாரம் சனிக்கிழமை இப்படித்தான், பொங்கல் பண்றேன்னு ஆரம்பிச்சா. தண்ணி அதிகமா, கடைசியில பொங்கலும் இல்லாமல் பாயசமும் இல்லாமல் ஒரு புது வஸ்துவா இருந்தது அது. எனக்கு ஒண்ணும் இவ சமையல் வேணாம். நான் ஹோட்டல்ல சாப்பிடுக்கறேன்! ‘ என்றபடி கையில் இருந்த புஸ்தகத்தை ஓங்கி மேஜையில் எரிந்தேன். அது என் கோபத்தை பிரதிபலித்தபடி தவ்வி தரையில் விழுந்தது.
‘எக்கேடோ கெட்டு ஒழி ! ‘ என்று சபித்தபடி தன் அவசரத்தில் வேகமாய் மறைந்து போனாள் என் அம்மா.
என் அருகில் இருந்த ரிமோட்டை எடுத்து, கிரிக்கெட் ஆட்டத்தை மாற்றி அன்றைய ராசி பலனை கேட்க ஆரம்பித்தாள்.
‘ஏய்ய்ய்ய்ய்ய் !! ‘ என்றபடி அவள் தோளில் அடிக்க முன்னால் குனிந்த நான், எங்கள் அப்பா போனவாரம் செய்து இருந்த எச்சரிக்கை ஞயாபகம் வர, அப்படியே நின்றேன்.
இதே மாதிரி எதற்கோ கோபத்தில் இவளை அடிக்கப் போய், சரியாக அப்பா அங்கே பிரசன்னமாகி, ‘டேய் ! என்னடா இது பழக்கம், பெண்பிள்ளை, அதுவும் உனக்கு பெரியவ , அவ மேல கை ஓங்கிட்டு. இனிமே பார்த்தேன், ராஸ்கல் கையை ஒடிச்சிடுவேன் ! ‘
அசீரிரியாக காதில் இப்பொழுதும் கேட்டது அந்தக் குரல். ராட்சசி, எல்லோரும் இவள் பக்கம் இந்த வீட்டில். அப்பா செல்லம் வேறு, எது என்றாலும் அவர் வந்தவுடனே கோள் மூட்டி விடுவாள்.
நாசமாக போகட்டும் என்று சபித்தபடி, குளிக்க துண்டை தேடிய போது, ‘அம்மா ! ‘ என்று வாசலில் ஒரு குரல் கேட்டது.
‘யாரு ? ? ‘ என்றபடி கதவை திறக்கப் போன தீபாவை பின் தொடர்ந்தேன்.
யாரோ கிழவி நின்றதை பார்த்து விட்டு உள்ளே வந்து, மீண்டும் கிரிக்கெட் ஆட்டத்தில் ஐக்கியமானேன்.
‘டேய் ! யாரோ பாட்டிடா. பாவம்டா. திண்டுக்கல்லிருந்து நேத்திக்கு நம்மூருக்கு வந்தாங்களாம். வந்த இடத்தில அவங்க பை தொலைஞ்சிடுத்தாம். பாவம், நேத்திலிருந்து ஒண்ணுமே சாப்பிடலையாம். இப்ப ஊருக்கு போகவும் கைல காசில்லையாம் ! ‘.
முகத்திகள் சோக உணர்ச்சிகள் தெறிக்க பேசிக் கொண்டிருந்தவளை நோக்கி கண்களை திருப்பினேன்.
‘உன் பர்ஸில் ஒரு இருபது ரூபாய் இருக்குமாடா. பாவம்டா ! ‘ என்றபடி தன் கண்களை என் பர்ஸை தேடுவதில் ஆட்படுத்தினாள்.
கெஞ்சுகிறாளா, கொஞ்சுகிறாளா என்று புரியாமல் நான், ‘யேய் ! என்ன விளையாடறியா நீ ? ரோட்டில வர பிச்சைக்காரங்களுக்கெல்லாம் அள்ளிக் கொடுக்க வந்துட்ட, ஆளை பாரு! ‘ என்றபடி , டிவியை பார்க்கத் தொடங்கினேன்.
சிறிது நேரம் அங்கேயே நின்றவள், நான் அவள் இருப்பதையே கண்டுகொள்ளாமல் இருந்ததை கண்டு, வெறுப்புடன் திறும்பி சாமி படத்துக்கு கீழே அம்மா கோயிலுக்காக வைத்து இருந்த இரண்டு பத்து ருபாய் நோட்டுக்களை எடுத்துக் கொண்டாள்.
என் முதுகுக்கு பின்னால், சமையலறையில் சத்தம் கேட்க, என்னதான் செய்கிறாள் இவள் என்ற ஆர்வத்தில் லேசாக் தலையை திருப்பினேன். சட்டென்று ஒரு தட்டோடு வெளியே சென்றாள் தீபா. தட்டில் நான்கு பிரட்டு துண்டுகளும், ஒரு டம்பளரில் பாலும் அந்த தட்டில் இருந்தது தெரிந்தது.
வெளியே சென்று , சாப்பிட கொடுத்து விட்டு உள்ளே வந்தவளை கவனியாது போல், டிவியை பார்த்த படி,
‘யப்பா ! பிச்சைக்காரங்களுக்கு பிரட்டும் பாலும் கொடுக்கற பாரி வள்ளலை
இன்னிக்குத்தான் பார்க்கிறேன். ஏம்மா தீபா, ஜாம் வைத்துக் கொடுக்கலை ? ‘
என்று நக்கலுடன் கேட்டேன்.
‘அவங்க ஒண்ணும் பிச்சைக்காரங்க இல்லை. பாவம், நாதியில்லாம பசின்னு கேட்டாங்க. நான் தான் இன்னும் சமைக்கலையே, அதான் இருக்கறதை கொடுத்தேன். இதில என்ன குறைஞ்சிருச்சு நம்மளுக்கு ? ? ‘
உதட்டோரமாக நக்கல் புன்னகையை விட்டுக் கொண்டே, ‘ஆமா ! ஆமா !உ ள்ளே கூப்பிட்டு விருந்தே வைச்சு இருக்கலாம். அய்யோ பாவம் உன்னை கட்டிக்கப் போறவன். சீக்கிரமே அவன் போண்டிதான் ! ‘.
‘ஏண்டா இப்படியெல்லாம் பேசற நீ ? பசியாக இருக்கறவங்களுக்கு சோறு போடற மாதிரி புண்ணியம் வேற எதுவும் கிடையாதுடா ! ‘
வெளியே சென்று அந்தக் கிழவி விட்டுச் சென்ற காலி தட்டையும், டம்ளரையும் எடுத்து வந்தவள்,
‘நீ நல்லா இருக்கணும்மா ன்னு சொல்லிட்டு போனாங்க பாரு, நம்ம மனசுக்கு அதில கிடைக்கிற நிம்மதியும் சந்தோஷமும் வேற எதிலயும் கிடைக்காதுடா. இப்ப, வயிறும் மனசும் நிறைஞ்சு அவங்க ஊருக்கு போவாங்க ! ‘
சே ! இவளுடன் என்ன பேச்சு என்று முகத்தில் ஒரு நக்கல் புன்னகையை போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்து வெறுப்புடன் உள்ளே போக எத்தனித்த தீபா , மெல்ல திரும்பி,
‘அடுத்தவங்களுக்கு உதவி செய்யற மாதிரி நம்மளை ஆண்டவன் வெச்சிருக்கி றது நாம செஞ்ச புண்ணியம். இருக்கறவங்க இல்லாதவங்களுக்கு கொடுக்கணும்கிறது அவன் எழுதி வைக்காத வாழ்கை தத்துவத்தின் வளையம். ஊம்ம்ம், அன்பு பாசத்தை பத்தி உனக்கு எங்கே புரியப் போவுது!! ? ? ‘ என்றபடி உள்ளே சென்றாள்.
‘ ஹா! ஹா ! ‘ என்று ஏதோ பெரிய நகைச்சுவையை கேட்ட மாதிரி சிரித்துக் கொண்டே குளிக்கக் கிளம்பினேன்.
தயாராகி, வெளியே வந்தவன் என் அருமை வாகனமான சைக்கிளை எடுத்துக் கொண்டு, பாங்க்கை நோக் செலுத்தத் தொடங்கினேன்.
அடுத்த தெருவில் , மூணாவது வீட்டின் மாடி போர்ஷனில் தோன்றும் மின்னல், இன்றும் தென்படுமோ என்ற ஆவலில் விசிலடித்துக் கொண்டே சைக்கிளை திருப்பி அந்தத் தெருவில் செலுத்தத் தொடங்கினேன். இரண்டாவது வீட்டை கடக்கும் போது, தீபாவிடம் இருபது ரூபாயும் சாப்பாடும் வாங் க் கொண்டு அவளுக்கு அளவில்லா நிம்மதியை கொடுத்த அதே பாட்டி நின்று கத்திக் கொண்டு இருந்தது தெரிந்தது.
‘அம்மா ! நான் திண்டுக்கல்லிருந்து வந்தேன். இங்கே பை தொலைஞ்சு போயிடுச்சு தா‘யி. நேத்திலிருந்து ஒண்ணுமே சாப்பிடலை. ஊருக்கு வேற போகணும். ஒரு இருபது ரூபாய் கொடுத்தீங்கன்னா… …… ‘
அதற்கு மேல் அவள் பாட்டத்தை கேட்க பிடிக்காமல் சைக்கிளை செலுத்தத் தொடங்கினேன்.
இந்தக் கிழவி என் அக்கா கண்ணில் பட்டு, அவளின் நம்பிக்கைகளையும் சந்தோஷத்தையும் தொலைத்து விடக் கூடாதே என்று வேண்டிக் கொண்டே சைக்கிளை வேகமாக மிதிக்கத் தொடங்கினேன்.
- மாற்றம்
- தேவகோட்டை – சிவகங்கை
- சீரணி அரங்கத்தில் பேரணி
- பயணம்
- மெளனம்
- இந்திய இளவரசர்களே!
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- Mahakavi’s Puthirathoru Veedu and Ionesco’s The Chairs to be plays at Manaveli’s Ninth Festival
- எனக்குப்பிடித்த கதைகள் – 4 – ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ ஆசை என்னும் வேர்
- கோயிலுக்கு
- அமெரிக்க ஆக்க மேதை – தாமஸ் ஆல்வா எடிசன்
- நான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது ?
- எதிர்காலத்துப் பணம் உண்மையிலேயே பேசலாம்
- நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்
- ஈழத்தில் சமாதானம்
- இழந்த யோகம்
- சின்னப் பூக்கள்
- தீ தித்திப்பதில்லை…
- காவல்
- குழந்தை யேசு
- தலைப்பாரம்…..
- உதிரும் சிறகு
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- விருந்துக்கு வந்த இடத்தில்
- என் தந்தையார் பற்றி சிறு விளக்கம்
- மதக்கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது
- ஞாநிக்கு மீண்டும்
- இந்த வாரம் இப்படி – மார்ச் 3 2002. (எரியும் குஜராத், தன்னார்வக் குழுக்களின் கொடூர முகம், குருமூர்த்தியும் சிவகாசியும்)
- என் அக்கா
- பால்யகாலத்து நண்பன்!