சேவல் கூவிய நாட்கள் – 4 (குறுநாவல்)

This entry is part [part not set] of 25 in the series 20010924_Issue

வி ஐ ச ஜெயபாலன்


4

லாம் மாஸ்டரும் லாம் ரீச்சரும் நெடுந்தீவு நடுநிலைப் பள்ளிக்கு வந்தபோது நானும்கூட புதிய மாணவன்தான். அம்மாவின் பிறந்த ஊரான உடுவிலில்தான் எனக்கும் தங்கைக்கும் ஏடு தொடங்கினார்கள். பாதங்களிலும் கற்சட்டை விழிம்புகளிலும் தங்கையின் பாவாடை ஓரங்களிலும் செம்மண் புழுதி கவிதை எழுதுகிற அந்த ஊரில்தான் பாலர் வகுப்பெல்லாம் படித்தேன். அடிக்கடி சண்டை போடுகிற அப்பாவினாலும் அம்மாவினாலும் மகிழ்ச்சியான அந்த பாலப் பருவ நாட்களை முற்றாக எங்களிடமிருந்து பறித்துவிட முடியவில்லை. இன்றும்கூட சிவப்பு மண், சிவப்புக் காற்று, சிவப்பு மழை வெள்ளம், சிவப்புச் சேறு என உடுவிலில் வாழ்ந்த சிவப்பு நாட்கள் அழியாத மனச் சுவர் ஓவியமாக என்னுள் உறைகிறது.

செக்கச் சிவந்த அந்த நாட்களில் ‘பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே ‘ என்கிற கவிதையை முழங்கியபடியே அப்பா அம்மாவை அடித்துத் துவைப்பார். ‘வெளிக்கிடடி நெடுந்தீவுக்கு ‘ என்கிற அவரது கூச்சலில் வீடு கிழியும். ‘எனக்குப் பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் உடுவில்தான் ‘ என்றபடி அம்மா ஒலமிடுவாள். இரவெல்லாம் கொட்டக் கொட்ட விழித்திருந்து அழுவாள். திடாரென விழித்தெழுந்து கோபத்தோடு உறுதியாக ‘எனது பிணம்தான் உடுவிலை விட்டு நெடுந்தீவுக்கு வரும் ‘ என அம்மா கூச்சலிடுவாள். அப்போதெல்லாம் அவளது முகம் உப்பி விழி சிவந்து பிதுங்கி அச்சம் தரும். அப்பா செத்துப் போகவேணும் என்று நானும் தங்கையும் வயிரவசாமிக்கு நேத்தி வைத்தபடி சத்தமில்லாமல் அழுவோம். அதைவிட வேறு மர்க்கம் தெரியாமல் நடுங்கிக் கிடப்போம். அந்த நாட்களில் இருந்தே தங்கையும் நானும் அப்பாவை வெறுக்கத் தொடங்கினோம். அதன்பின் எனது வாழ்வில் அவரைச் சில சமயங்கள் அப்பாவை வியந்திருக்கிறேன். வேறு சில தரணங்களில் நன்றியுடன் நினைந்திருக்கிறேன். ஆனால் ஒரு போதுமே அவரை நேசித்ததாக எனக்கு ஞாபகமில்லை. அவரும் ‘நான் முதுமை அடைந்ததும் திருப்பித் தந்தால் போதும் ‘ என்றபடி நமக்குக் கடன் தருகிற ஒரு கடை முதலாளிபோலவே எப்போதும் இருந்தார்.

உண்மையிலேயே அவர் கடை முதலாளிதான். மத்துகம என்கிற சிங்கள ஊரில் அவருக்கு புகையிலை, சுருட்டு மொத்த வியாபாரமும் சாய்ப்புச் சாமான்கள் சில்லறை வியாபாரமும் செய்கிற கடை இருந்தது. . ‘சொப் ‘ என்கிற ஆங்கிலச் சொல்லைத்தான் சாய்ப்பு என தமிழில் சொல்கிறார்கள் என பெரிய சித்தப்பா ஒருமுறை சொன்னார்.

மத்துகம இரப்பர் தோட்டங்களால் ஆசீர் வதிக்கப் பட்ட அல்லது சபிக்கப் பட்ட ஊர். வானத்தை மறைக்கும் பசிய குன்றுகளின் பின்னணியில் பிலாச்சுளைகள் தேடித் தின்னும் மந்திகளின் காடுகளும் மீன்கள் துழும் துழுமென ஓயாமல் துள்ளி விழும் மரகத நெல் வயல்களும் நீர் நிலைகளில் காலையில் சிவப்பும் மாலையில் வெண்மையாகவும் பூத்துக் கமளும் கமழும் தாமரை அல்லி கொடிகளும் வீடுகளைச் சூழ்ந்த வாழைத் தோட்டங்களுமாக எழில் கொஞ்சும் அந்த அழகிய ஊர்களை நினைக்கிற போதெல்லாம் புகழ் பூத்த சிங்களக் கிராமியக் கவிஞர்கள் அதனை எப்படிப் பாடி யிருக்கிறார்கள் என்று அறிகிற ஆர்வம் மனசில் நிறையும். நானும் எனது சிங்கழத் தோழர்களும் பச்சை நீர்ச் செடிகளை ஒதுக்கி ஓடைகளில் மீன்குஞ்சுகளை பிடிக்க முயன்று தோற்றுப்பொவதில் மகிழ்வோம். ‘கவனம் குழந்தைகளே மீன்களைக் கொல்லிப்

போடாதீர்கள் ‘ என்று சொன்னபடி மண்வெட்டிகளோடோ கறிப் பல்லாக்காய்களோடோ சிங்களக் கிராம வாசிகள் எங்களைக் கடந்து போவார்கள். எப்பொழுதுமே வயல்களில் வேலை செய்து, அல்லது ஓடைகளில், மலை அருவிகளில், கிணறுகளில் ஓயாமல் நீராடியும் மகிழ்வது என வாழும் சிங்களக் கிராமத்துத் தேவதைகள் தமரைப் பூக்களோடு வருவார்கள். வழியில் சந்தித்தால் கேளாமலே எனக்கு ‘ஆயு போவன் ‘ என சிங்கள நல் வாழ்த்துக்கூறி ஒரு தாமரை மலராவது பரிசாகத் தருவார்கள். தொலைதூரத்தில் இருந்து வந்திருக்கும் தமிழ் சிறுவன் என்பதால் அவர்கள் என்மீது விசேட அன்பு காட்டினார்கள். ஒருமுறை நாங்கள் ஆமைக் குட்டி ஒன்றைப் பிடித்தோம். கைபட்டதுமே ஆமை கழுத்தையும் கால்களையும் உளே இழுத்து விடும். பின்னர் அதனைச் சேறில் எறிவதும் அது தலையையும் கால்களையும் வெளிப்படுத்தி ஓட முனைகிறபோது திரும்பப் பிடிப்பதுமாக விழையாடிக் கொண்டிருந்தோம். திடாரென நாலு புறங்களிலும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் பார்த்தால் அந்த ஆமையை மீட்பதற்க்காக ஊர்ப் பெண்டுகள் ‘ஐயோ பாவம் விட்டு விடுங்கள் விட்டுவிடுங்கள் ‘ என்றபடி பலர் எங்களை நோக்கி ஓடிவந்தார்கள். மத்துகம கிராமப் புறங்களில் நிமிர்ந்து பார்த்தால் வான் மறைய நிமிர்ந்த வரைகள் பச்சை. மலைக்காடுகளும் ரப்பர்த் தோடங்களும் பச்சை. தாமரை அல்லி இலைகள் போர்த்த ஏரிகளும் பச்சை. வயல் வெளிகள் பச்சை. வாழையும் மாவும் பலாவும் சூழ்ந்த வீட்டு வளவுகளும் பச்சை. மத்துகமவை நினைக்கும் போதெல்லாம் என் நினைவுகளில் அழியாத அந்த பச்சைக் காலத்துக்காக மனசு மீண்டும் ஏங்கும்.

அந்த நாட்களில் சிங்கள தேசிய வாதம் இனவாதமாகப் பலப்பட ஆரம்பித்திருந்தது. மத்துகம பிரதேசத்துச் சிங்கள கிராமங்களில் நான் எப்பவுமே கண்டிராத கோபக் காரச் சிங்களவர்கள் மத்துகம நகரத்தில் நாளும் பொழுதும் முழைத்துக் கொண்டிருந்தார்கள். சிங்கள மக்களின் இயல்புகளுக்கு மாறான எங்கிருந்தோ புதிதாக வந்து பெருகிய இந்த மனிதர்கள் என்னையும் அச்சுறுத்தினார்கள். சிங்கள ஆசிரியர்கள் சிலரே நெல் வயல்கள் சூழ்ந்த தங்கள் அழகிய கிராமங்களுக்கு மத்தியில் இருந்த குன்றுகளை வெள்ளையர்கள் பறித்து இரப்பர் தோட்டமாக்கி அங்கு இந்திய வம்சாவளித் தமிழர்களைத் தொழிலாளர்களாகக் குடி வைத்திருப்பதையும் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் தங்கள் ஊர்களில் பெரிய வர்தகர்களாக இருப்பதையும் எதிர்த்துப் வகுப்புகளில்கூடப் பேசினார்கள். தமிழருக்கு இந்தியா இருக்கு சிங்களவருக்கு இலங்கையை விட வேறு புகலிடம் இல்லை என்றார்கள்.

அப்பாவுக்கும் ஜினதாச மாமாவுக்கும் மோதல் ஆரம்பித்த பின்னரும்கூட ஜெயசூரியாவும் நானும் நன்பர்களாக இருந்தோம். எனினும் பள்ளிக்கூட மதிய உணவு இடைவேளைகளில் ஜெயசூரியாவும் அவனது சிங்கள நண்பர்களும் ஒரு தடிக்கு சோழ மன்னனன் எல்லாளன் என பெயர் சூட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்று பின் நிலத்தில் போட்டு கால்களால் மிதிப்பாபார்கள். பதிலுக்கு அதே போன்ற ஒரு சடங்கை நானும் எனது தமிழ்த் தோழர்களும் செய்வோம். நாம் ஊர்வலமாக எடுத்துச் சென்று கால்களில் போட்டு மிதிக்கும் தடிக்கு துஸ்டகைமுனு என்ற சிங்கள அரசனின் பெயர் சூட்டி யிருந்தோம். சடங்குகள் போல தினசரி இடம்பெற்ற இந்த துஸ்ட கைமுனு எல்லாளன் யுத்தத்தின் பின்னர் நாங்கள் ஒன்றாகக் கூடி விழையாடினோம் என்பது சுவாரஸ்சியமான விடயமாகும். எல்லாளன் தர்ம நெறி தவறாதவன் என மகாவம்சத்தில் எழுதியிருக்கிறதாம். இடம்பெற்ற கடும் போரில் எல்லாளனைச் சதியாகவே துஸ்ட கைமுனு கொன்றானாம். அப்படித்தான் எனது தமிழ் ஆசிரியர்கள் சொல்லியிருந்தார்கள். சிங்கள ஆசிரியர்களது விளக்கமோ நேர் எதிராக இருந்தது. துஸ்ட கைமுனுவை சிங்கள இனத்தின் காவல் தெய்வமாகவே அவர்கள் கொண்டாடினார்கள்.

(தொடரும்)

Series Navigation

வி ஐ ச ஜெயபாலன்

வி ஐ ச ஜெயபாலன்