திலீப் குமார்
அந்த மூலையில், அந்த நகராட்சி மரம் நிழலை நிறையவே கொட்டி நின்றது.
பழனியம்மாள், துவைக்கிற சோப்பால் ஜெகதீஸ்வரியைக் குளிப்பாட்டிவிட்டு மரத்தின் நிழலுக்குக் கூட்டி வந்தாள். ஜெகதீஸ்வரியின் தலை முழுதும் நன்றாகச் சிரைக்கப்பட்டிருந்தது. பழனியம்மாள், அருகிலிருந்த பெட்டியிலிருந்து ஒரு மூட்டையை எடுத்து அதிலிருந்த ஒருகிழிந்த கவுனைக் குழந்தைக்கு மாட்டினாள். காலை நேரத்து இதமான வெயிலில் குழந்தை சுகித்துச் சிரித்தது.
மரத்தைச் சுற்றி அரைவட்டமாகப் படுத்திருந்த மாரியப்பனுக்கு அப்போதுதான் விழிப்புத் தட்டியது. மூட்டையை முடிந்து வைத்தபடியே பழனியம்மாள் அவனைப் பார்த்தாள். அவன் மெளனமாக எழுந்து உட்கார்ந்தான். பழனியம்மாளுக்கு ரொம்பவும் பசித்தது. நேற்று காலை சாப்பிட்டதுதான். அதன் பின்பு ஒன்றுமே இல்லை. தன் கிழிந்து போன போர்வையை விலக்கி வைத்துவிட்டு, அவசரமில்லாமல் சட்டைப்பையிலிருந்து ஒரு பீடியைத் துழாவி எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான் மாரியப்பன்.
புகையை உள்ளே இழுத்து ஊதியபோது அடுத்த கட்டு பீடிக்குத் தன்னிடம் சில்லரையில்ல என்கிற நினைப்பு அவனுள் அவசரமாய் வந்து போனது. இன்னும் ஒரே ஒரு பீடி மட்டும்தான் மீதி இருந்தது. என்றாலும், அவன் மனத்தில் ஒரு சன்னமான தெம்பு இருக்கத்தான் செய்தது. முதல் நாள் இரவு பழனியம்மாள் தனது சேலைத் தலைப்பில் பத்திரமாக முடிந்து வைத்த 25 காசு நாணயத்தை அவன் ஞாபகம் வைத்திருந்தான்.
தெரு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தெருவை மிக உற்சாகத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது குழந்தை. அது விரைவில் பசித்து உணவுக்காக அழும் என்று எதிர்பார்த்துப் பயந்து கொண்டிருந்தாள், பழனியம்மாள்.
மாரியப்பன் பீடியை கடைசியாகத் தாபத்தோடு இழுத்து வீசிவிட்டு இருமினான். தொடர்ந்து, வாய் நிறைய எச்சிலையும் கோழையையும் திரட்டித் தூர உமிழ்ந்துவிட்டு எழுந்தான்.
பழனியம்மாள் தனக்குள் ஆழ்ந்து எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள்.
மாரியப்பன் தன் முகத்தை நன்றாகக் கழுவி, தனது அழுக்கு வேட்டியின் தலைப்பால் துடைத்தபடி மரத்தடிக்கு வந்தான். பெருக்கி முடித்துவிட்டுப் பழனியம்மாள் அமைதியாகக் கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தாள். மரத்தைச் சுற்றியிருந்த இடம் இப்போது சுத்தமாகக் காட்சியளித்தது. சுவரோரம் இரண்டு பெரிய ஜாதிக்காய்ப் பெட்டிகள் இருந்தன. முதல் பெட்டியின் மேல் மூன்று மண்சட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரண்டாவது பெட்டி, மேல்பலகையே இல்லாமல் இருந்தது. அதனுள், இரண்டு மூன்று சிறியதும் பெரியதுமான துணி மூட்டைகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தன. சற்றுத் தள்ளி, கழுத்துடைந்த ஒரு கருப்புப் பானை இருந்தது. அதனருகில் பெரிய தகரப் பீப்பாய் ஒன்றும் இருந்தது. பீப்பாயில் முக்கால்வாசிக்கு மேல் தண்ணீர் சலனமற்று இருந்தது. நீரின் மேல், மரத்திலிருந்த விழுந்த சின்ன இலை ஒன்று அசையாமல் மிதந்து கொண்டிருந்தது.
மாரியப்பனுக்கும் ரொம்பப் பசித்தது. தன் மனைவியின் அருகில் வந்து அவனும் உட்கார்ந்துகொண்டான். பின், நயமாகப் பேச்சை ஆரம்பித்தான்.
‘டாத்தண்ணிக்கு ஏதாவது வளி பண்ணுவியா ? ‘
‘நா என்னத்தெ வளி பண்றது ‘ நீயே பண்ணு. ‘
ஒரு சில கணங்கள் அமைதியாக இருந்தபின் மீண்டும் மாரியப்பனே பேசினான்.
‘செரி, போச்சாது போ, காசு எதனாச்சும் குடு புள்ளே. ‘
‘ஏது காசு ‘ ‘
‘சும்மா யாரெ ஏமாத்தறே. நேத்து ராத்திரி முடிஞ்சுவைச்சு நாலணா மறந்து போச்சா ? ‘
‘ஓ அதுவா ‘ அது தீந்தது எப்போ ‘ காலைலெயே கொழந்தைக்கு டா வாங்கிக் குடுத்தாச்சு. மிச்சம் அஞ்சு காசு. அதுக்குப் பொகைலெ வாங்கியாச்சு. ‘
‘நெசமாலுமா ? ‘
‘நெசமாத்தான். ‘
மாரியப்பன் அவளை நம்பாதவனாக, ‘இல்லே பொய்யீ… இ…இ ‘ என்று நீட்டி இளித்தான். மாரியப்பனுக்கு மேல் வரிசையில் நடுப்பல் விழுந்துவிட்டது. தன் கணவனைப் பார்த்தபோது பழனியம்மாளுக்குப் பரிதாபமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. மறுகணம், இவளது பசியும் எரிச்சலும் கோபமுமாய் வெளிப் பட்டன.
‘ஆமா ‘ பொய்யீ….இ..இ…இ ‘ எப்பப் பார்த்தாலும் இப்படியே இளி,பல்லுப் போன கொரங்கு மாதிரி. உருப்படியா ஒண்ணும் செய்யாதே ‘ ஆம்பிளையெப்….. பாரு, ஆம்பிளையெ. ‘
இதைச் சற்றும் எதிர்பார்க்காத மாரியப்பன் சிரிப்பதை உடனே நிறுத்திக் கொண்டான். அடுத்த கணம் ஆவேசம் வந்தவனாய், பாய்ந்து எழுந்து ஆக்ரோஷமான குரலில் ஒரு கொச்சையான வசையைக் கூவிக்கொண்டே பழனியம்மாளின் மார்பில் எட்டி உதைத்தான். ‘ஐயோ ஐயோ ‘ என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டே தனது நீட்டிய கால்களுக்கிடையே கவிந்து கொண்டாள் பழனியம்மாள். அவன் அவளை முதுகில் மிதித்தான். இம்முறை பழனியம்மாளின் அலறல் முன்பைவிட உரக்கக்கேட்டது. இவனை அது என்னவோ செய்திருக்கவேண்டும். ஆவேசம் கூடியவனாய் அவளருகில் மண்டியிட்டு அவள் முதுகில் ஒரு குத்துவிட்டான். பழனியம்மாள் மீண்டும் கதறினாள். இவன் மீண்டும் அவளைக் குத்தினான். பழனியம்மாள் அவனை அசிங்கமாகத் திட்டிக்கொண்டே கதறினாள். இவன் மறுபடியும் குத்தினான். பிறகு, தொடர்ந்து வெறியுடன் அவளைக் குத்திக் கொண்டேயிருந்தான்.
பயத்தில் குழந்தை வாயைப் பிளந்து அழ ஆரம்பித்துவிட்டிருந்தது. மாரியப்பன் ஒருவாறாக அடித்துக் களைத்தான். அவனுக்கு முகமெல்லாம் வியர்த்துவிட்டது. முகத்தைத் துடைத்துக் கொண்டான். தனது கடைசி பீடியைப் பற்றவைத்தான். கண்களையும் நெற்றியையும் சுருக்கி, புகையை நிறையவே இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
இவர்களை வேடிக்கை பார்த்த கூட்டம் மெல்லக் கலையத் துவங்கியது.
மணி இரண்டைத் தாண்டிவிட்டது. தெரு அமைதியாகக் காய்ந்து கொண்டிருந்தது. பழனியம்மாள் அடிவாங்கிய களைப்பில் உறங்கிப் போயிருந்தாள். மாரியப்பனும் சற்றுத்தள்ளி உறங்கிக் கொண்டிருந்தான். குழந்தை பசியாலும் பயத்தாலும் குழம்பிப் போயிருந்தது.
சிறிது நேரம் கழித்து, குழந்தை பழனியம்மாளின் தோளை உலுக்கி எழுப்பியது. விழித்து எழுந்த பழனியம்மாள் ஒரு கணம் குழம்பினாள். எதிரில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்ததும் அவளுக்கு விஷயம் புரிந்தது என்றாலும், நிதானமாகத் தனது கொண்டையை அவிழ்த்து உதறினாள். பழனியம்மாளின் தலைமுடி மிக நீளமாய் இருந்தது. பின், கைகளை உயர்த்தித் தலையை நன்றாக அழுந்த வருடி, முடியை இறுக்கி இணைத்து, கொண்டையை மீண்டும் முடிந்து கொண்டாள். இவள் கொண்டை முடிகிறவரை பொறுமையாகக் காத்திருந்த அந்தச் சிவப்பான பிராமணப் பெண் இவளைப் பார்த்து ‘ஏம்மா, கொஞ்சம் பாத்திரமெல்லாம் ஈயம் பூசணும், பூசித் தர்றயா ? ‘ என்று கேட்டாள். அந்தப் பெண் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தாள். பழனியம்மாளின் நீளமான கேசத்தை அவள் ஏக்கத்தோடு பார்த்தாள்.
‘ஓ ‘ பூசித் தர்றேனுங்க ‘ எவ்வளவு பாத்திரமுங்க ? ‘
‘என்ன ஒரு இருபது, இருபத்தஞ்சு இருக்கும். ‘
‘செரி, கொண்டுவாங்க. ‘
‘கொண்டுவர எல்லாம் முடியாது. நீதான் வந்து எடுத்துக்கணும். எடுத்துட்டு வர ஆளில்லை, அதனாலேதான். ‘
‘செரி, நம்ம வூடெங்கங்க ? ‘
‘கிட்டக்கத்தான் ‘ அடுத்த தெருதான். ‘
‘செரி, இருங்க. நானே உங்களோட வர்ரேன். ‘
பழனியம்மாள் அந்தப் பெண்ணோடு அடுத்த தெருவிற்கு நடந்தாள். தெரு, மிகவும் களைத்துப் போய் உறங்கத் துவங்கியிருந்தது. வழியில் இவர்கள் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. அந்தப் பெண் பழனியம்மாளைவிட ஒரு கஜம் முன்னால் தள்ளியே நடந்தாள்.
அந்தப் பெண்ணின் வீடு, நிறைய பேர்களடங்கிய குடும்பம் வசிக்கிற ஒரு சாதாரணமான, ஆனால் பெரிய வீடு. பழனியம்மாளை வீட்டின் சந்து வழியாக வரச் சொல்லிவிட்டு, அந்தப் பெண் முன் கதவு வழியாக உள்ளே சென்றாள். இவள் அந்த நீண்ட சந்தைக் கடக்க ஆரம்பித்தாள்.
வீட்டின் உள்பக்கத்திலிருந்து ஒரு அறை சந்தைப் பார்த்த மாதிரி இருந்தது. திறந்திருந்த அதில் பெரிய நிலைக்கண்ணாடி பதித்த பீரோ ஒன்றும் இருந்தது. பழனியம்மாள் அதைக் கடந்த போது இவள் பிம்பம் அதில் விழுந்தது. இவள் சட்டென்று, கண்ணாடியில் முழுதாய் விழுந்த தனது உருவத்தைக் காண நின்றாள். இவள் இதுவரை தன்னை முழுதாகப் பார்த்துக் கொண்டதே இல்லை.
பழனியம்மாளுக்குப் பகீரென்றது. அந்த உருவம் ஒல்லியாய்க் களைத்து காணப்பட்டது. அதன் இடது கண்ணுக்குக் கீழே இருந்த மச்சம் அதை இன்னும் கோரமாக்கியது. கண்கள் எதையோ, எப்போதும் தேடிக்கொண்டிருப்பவையாகக் காட்சி அளித்தன. இரக்கமற்ற காலம் உடலை தின்றுவிட்டிருந்ததோடு, மனத்தின் யெளவனத்தையும் திருடிச் சென்றுவிட்டிருந்தது. அந்த ஒரு கணத்தில், வாழ்க்கையே தன்முன் சுருண்டு, விரிவதாய் இவள் உணர்ந்தாள். அந்நிமிஷத்தின் சிந்தனையற்ற மெளனம் அவளை வதைத்தது. என்றாலும், பழனியம்மாள் அதில் லயித்துத்தான் போனாள். ஓரிரு கணங்களுக்குப் பின் அவள் நகர்ந்து சந்தைக் கடந்தாள். அந்தப் பெண் இவளுக்காகக் காத்திருந்தாள். இப்போது அவள் கண்ணாடி அணிந்திருக்கவில்லை.
சிறிது நேரத்தில் பாத்திரங்களைச் சுமந்தபடி மரத்தடிக்கு வந்து சேர்ந்தாள் பழனியம்மாள். அந்தப் பெண்ணிடம் கூலிபேசி, இரண்டு ரூபாயை முன்பணமாகவும் பெற்று வந்திருந்தாள்.
முதலில் எதிர் சாரியிலிருந்த டாக்கடையிலிருந்து குழந்தைக்கு இரண்டு பன்னையும் ஒரு டாயையும் வாங்கிக் கொடுத்தாள். தானும் ஒரு டாயை வாங்கிக் குடித்தாள். வெற்றிலை, பாக்கு, புகையிலை போட்டுக்கொண்டாள். மறக்காமல் மாரியப்பனுக்காக ஒரு கட்டு பீடியை வாங்கி வைத்தாள். ‘நாடார் மளிகை ‘ யிலிருந்து அரிசி வாங்கிவரக் குழந்தையை அனுப்பியபின் உற்சாகமாக வேலை செய்ய ஆரம்பித்தாள்.
வழக்கமாகப் பறிக்கிற இடத்தில் குழியைப் பறித்தாள். குழி நிறையக் கரியை அடுக்கி நெருப்பு மூட்டினாள். பின் பெட்டியிலிருந்து, ஊதுகுழல், ஈயம், நவசாரம், இடுக்கி ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொண்டாள். திரும்பிவந்த குழந்தையிடம், நெருப்பை ஊதச் சொன்னாள். பிறகு பாத்திரங்களை ஒவ்வொன்றாக மெதுவாகக் கழுவ ஆரம்பித்தாள். மாரியப்பன் ஒரு குழந்தையைப் போல் உறங்கிக்கொண்டிருந்தான். அவனையே இவள் வெறித்துக் கொண்டிருந்தாள். இவள் கோபம் தணிந்துகொண்டிருந்தது.
மணி நான்கானபோது, மாரியப்பன் விழித்தான். நெருப்பு நன்றாகக் கனிந்து, சிவப்புப் புள்ளிகளாய் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது. பழனியம்மாள் பாத்திரங்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். மாரியப்பன் ஒரு முறை எல்லாவற்றையும் கண்களைச் சுழற்றிப் பார்த்தான். பின், எழுந்து சென்று முகத்தைக் கழுவி விட்டு வந்து நெருப்பின் அருகில் உட்கார்ந்துகொண்டான். துடைத்து வைத்த பாத்திரத்திலிருந்து ஒரு பெரிய குண்டானை இடுக்கியால் பிடித்து நெருப்பின் மீது வைத்தான். பாத்திரத்தைச் சுழலவிட்டு, அது முழுதும் சூடேறியபின், ஒரு துணியால் நவசாரத்தைத் தொட்டுப் பாத்திரத்தின் உள்பாகமெங்கும் துடைத்தான். நெருப்பின் சூட்டால் நவசாரத்தின் துவர்ப்பான நெடியும் ஆவியும் அந்த இடமெங்கும் பரவியது.
பழனியம்மாள், பீடிக்கட்டை இவன் பக்கம் நகர்த்தினாள். இவன் அவளைப் பார்க்கக் கூசி முகத்தைத் திருப்பி ஒரு பீடியை உருவிப் பற்றவைத்துக் கொண்டான். ‘ஏய் ‘ ஜெகதீஸ்உ ‘ போய் ஒங்கப்பனுக்கு ஒரு டா வாங்கிட்டு வந்து குடுடி ‘ என்றாள் அவள். குழந்தை உற்சாகமாகக் குதித்து ஓடியது. சுமார் ஏழு மணி வரை இவர்கள் ஒன்றுமே பேசாமல் வேலையை முடித்தார்கள். இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு, எரிந்துகொண்டிருந்த நெருப்பின்மீது சோற்றுக்கு உலை வைத்தாள் பழனியம்மாள். பின், தலைப்பைச் சுருட்டி தலையில் பொருத்தி அதன் மேல் பாத்திரங்களை எடுத்து வைக்க ஆயத்தமானாள். அதற்குள் மாரியப்பன் எழுந்து பாத்திரங்களை எடுத்து அவள் தலைமேல் ஏற்றிவைத்தான். பழனியம்மாள் குதப்பிக்கொண்டிருந்த வெற்றிலையைச் சத்தத்தோடு உமிழ்ந்து விட்டு நடக்க ஆரம்பித்தாள்.
பழனியம்மாள் திரும்பி வந்தபோது மாரியப்பன் ஜெகதீஸ்வரிக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான்.
நகராட்சிக் குழாயில் வழக்கமாக அந்த நேரத்தில் மட்டும் வருகிற தண்ணீர் வந்ததும், மாரியப்பன் குளிக்கச் சென்றான். பழனியம்மாள் அவனுக்கு முதுகு தேய்த்துவிடப் போனாள். அவனுடைய முதுகுத்தண்டில் அழுக்கு நிறையவே சேர்ந்திருந்தது. சதையே இல்லாமல் இருந்த, அவன் முதுகைத் தேய்த்துவிடும் போது அவனது விலா எலும்புகள் இவள் கையைக் குத்தின. இவள் அவனுக்காகப் பரிதாபப்பட்டாள். தானும் குளித்துவிட்டு வந்த பின்பு, ‘ஜெகதீஸ்உ ஒங்கப்பனே கூட்டிட்டுச் சாப்பிட உக்காருடி ‘ என்று அவனைப் பூடகமாக அழைத்தாள் பழனியம்மாள். மூவரும் சாப்பிட அமர்ந்ததும், குழந்தை மட்டும் ஆர்வமாய்ச் சாப்பிட்டது. இவர்கள் மெளனமாகவே சாப்பிட்டு முடித்தார்கள்.
எச்சில் பாத்திரங்களைக் கழுவிவிட்டு வந்தபோது மணி பத்துக்குமேல் இருக்கும். குழந்தை அப்படியே உறங்கிப்போயிருந்தது. பழனியம்மாள் படுப்பதற்காக மரத்தடியைச் சுத்தம் செய்து, தரையெங்கும் நீரைத் தெளித்தாள். மண்ணுக்குள் ரகசியமாய்ப் புதைந்திருந்த தகிப்பு, நீரை ஆர்வமாய் உறிஞ்சிக் கொண்டது. திடாரென்று காற்றில் வெப்பம் படர்ந்து, பின் மெல்லக் குளுமை பரவியது. பழனியம்மாள் வழக்கம்போல், அதிகம் கிழிபடாத சேலையை எடுத்து மரத்தைச் சுற்றி ஒரு மறைப்பை ஏற்படுத்தினாள். நைந்துபோன பாயில் குழந்தையைக் கிடத்திவிட்டு மற்றொரு சேலையைத் தனக்கு விரித்துக் கொண்டாள். பிறகு, துணி மூட்டைகளில் ஒன்றை எடுத்து, தலைக்கு வைத்துக் கொண்டு ஒருக்களித்துப் படுக்க ஆரம்பித்தாள்.
சுவரோரமாகச் சாய்ந்திருந்த மாரியப்பன் பீடியைத் தூர எறிந்துவிட்டு, மெல்ல பழனியம்மாளை நெருங்கினான். அவள் இவனுக்கு முதுகைக் காண்பித்துப் படுத்துக்கொண்டிருந்தாள். ஒரு சில கணங்களுக்குப்பின் மாரியப்பன் ஆரம்பித்தான்.
‘எம்மேலே கோவமா புள்ளே ? ‘
‘ம்…ஹ்உ…ம் ‘
‘பின்னே ? ‘
‘….. ‘
‘தூக்கமா ? ‘
‘ம்…ஹ்உ…ம் ‘
‘பின்னே ? ‘
‘……. ‘
பழனியம்மாள் பேச மறுத்தாள். மாரியப்பன் மெல்ல அவளுடைய கைகளை வருடினான்.பின் மெதுவாக அவளைத் தழுவித் தன் பக்கம் திருப்பி அவளது உதடுகளில் முத்தமிட்டான். பழனியம்மாள் சலனமற்றுக் கிடந்தாள். கண்ணாடியில் முழுதாய்த் தெரிந்த தன் உருவத்தை நினைத்துக் கொண்டாள். திடாரென்று, இரண்டாவது முறை பாத்திரங்களைத் திரும்பக் கொடுக்கச் சென்றபோது அந்த நிலைக்கண்ணாடியிருந்த அறை மூடப்பட்டிருந்தது என்பது ஞாபகம் வந்தது.
அவள் விலகிப் படுத்தாள்.
- பாத்திரம்…
- அலங்காரங்கள்
- ஒற்றை பறவை
- (1) சிட்டுக் குருவி! சிட்டுக் குருவி!(2) பாரதி ‘யாய்ப் படைத்திடுவீர்!(3) ஞாபகமிருக்கிறதா பெண்ணே!
- புதுமைப்பித்தன் செம்பதிப்பு பற்றிய கேள்விகளுக்கு என் பதில்கள்
- புதுமைப்பித்தன் – கோபால் ராஜாராமின் கேள்விகளுக்கான பதிலும் இன்னும் பிற குறிப்புகளும்
- விக்ரமாதித்தனின் ‘கவிமூலம் ‘
- ஷேப்டு சாலன்
- பாம்பே டோஸ்ட்
- ஏன் போர்கள் நடக்கின்றன ? (முதல் பகுதி)
- அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்!
- கற்றுக்கொடேன்……..
- நான் தான் W T C பேசுகிறேன்….
- கண்ணாடி
- முன்னுக்குப் பின்
- உயிர்த்தெழும் மனிதம்
- போர்க்காலக் கனவு
- பலகாரம் பல ஆகாரம் !
- ‘பிதாவே ! இவர்களை……. ‘
- பாிமாணங்களை மீறுவதெப்போ ? (அல்லது இருப்பு பற்றியதொரு விசாரம்)
- உலக வர்த்தக மையம் தாக்குதல் – கருத்துக் குருடர்களின் ராஜ பார்வையும் அறிவுஜீவி நேர்மையின்மையும்
- ஏன் போர்கள் நடக்கின்றன ? (முதல் பகுதி)
- உறவும் சிதைவும்
- சேவல் கூவிய நாட்கள் – 4 (குறுநாவல்)
- கரிய முகம்