மழை ஓய்ந்தது

This entry is part [part not set] of 10 in the series 20000730_Issue

இரா. சோமசுந்தரம் .


மழைப் பெய்கிறது.

ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது.

தமிழ்மக்கள், எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே உட்காருகிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள், ஈரத்திலேயே படுக்கிறார்கள்; ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு.

மனிதர்கள் இன்னமும் அப்படியேதான் வாழ்கிறார்கள். ஆரணி பஜார் முழுவதும் சேறாகக் கிடக்கிறது. அண்ணாசிலை துவக்கத்திலிருந்து பேருந்து நிலையம் வரையிலும் கால் வைக்க முடிவதில்லை. மக்கள் ஈரத்திலேயே நடக்கிறார்கள், வியாபாரம் செய்கிறார்கள், செருப்பால் பின்வருபவர்மேல் சேறடிக்கிறார்கள்…

கடையில் நின்றபடி மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். மீண்டும் தூறல் போட ஆரம்பித்ததும் ஜனங்கள் அங்கங்கே ஒதுங்கினார்கள். கூறுகட்டி வைத்திருந்த மாங்காய் மழையில் நனைகிறது. பெருத்த இடியோசை தலைக்குமேல் இடித்து பின் எங்கோ தொலைவில் சென்று விழுந்தது.

இடியோசை இனிமையானது; அது சில பயங்கரங்களை விளைவிக்கிறது என்பதாலேயே அதை வெறுத்துவிட முடிவதில்லை; வானமே ஒருமுறை அதிர்ந்து அடங்கிய பின், எங்கோ மீண்டும் எழுந்து அடங்குகிறது; பயமுள்ளவர்களும் பலவீனர்களும் நடுங்கிச் சாகிறார்கள்; ஆனாலும் மழைக்குரல் ஒரு நல்லோசைதான்;

மேசையை நகர்த்தி உள்ளுக்குத் தள்ளினேன்; இனி மேல் பைனான்ஸஉக்குப் பணம் கட்ட யாரும் வரமாட்டார்கள்; நாளைக்கு, ‘ஏன் பணம் கட்டவில்லை ‘ என்றால் மழையை காரணம் காட்டுவார்கள்.

கடையின் உள்மேசையை சாரல் நனைக்கிறது; கடையின் முன்பிருக்கும் போர்டு மீது தூறல் சடசடத்துத் தெறிக்கிறது; பலமாக அடித்த காற்றில் ஒருபக்க ஆணி தளர்ந்து போய், போர்டு சாய்ந்துவிட்டது.

கனத்த மழையில் எதிர்ப் புறக் கடைகள் மறைந்து விட்டன; சீரான லயத்துடன் ஓசை ‘ அந்த ஓசையை கேட்டுக்கொண்டே யிருப்பதில் மனசு ஒருமுகப்படுகிறது;

அந்த நேரத்தில்தான் அவன் வந்தான்; உடல் நனைந்திருக்கவில்லை; அநேகமாய் அவன் ஏற்கெனவே வந்து பக்கத்துக் கடைகளில் கொஞ்ச நேரம் நின்றிருக்ககூடும்; கொடுத்த பணத்துக்குப் பில் போட்டுக் கொடுத்தேன். பணத்தைக் கல்லாவில் வைத்துப் பூட்டிக் கொண்டு வெளியில் வந்து நின்றேன்.

வராந்தா முழுவதும் ஜனக்கூட்டம்.

‘என்னடா ? ‘ -யாரோ.

‘ஒண்ணுமில்ல, பணம் கட்ட வந்தேன் ‘ – அவன்.

‘பைனான்ஸ்ல பணம் வாங்கற அளவுக்கு ஏழைகளா நீங்க/ ஏண்டா இப்படி ஏமாத்துறீங்க ? ‘

‘ஏழைங்கதான் வாங்கணுமா… ‘

‘உன் தலையெழுத்து போ… அப்பங்குறியா இருந்தா ராஜா மாதிரி இருக்க வேண்டியவன். ‘

பலமாகச் சாரல் அடித்தது; காற்றின் வேகத்தில் அலையலையாய் நீர்த்திவலைகள் எல்லாரையும் நனைக்கிறது.

‘உள்ள வந்து நில்லுப்பா ‘ என்றேன்.

அவன் மட்டும் உள்ளே வந்தான்; உட்கார்ந்தான்; உள்ளே இருண்டு கிடக்கிறது; கொஞ்ச நேரத்துக்கு முன்பு பில் போட்டபோது இத்தனை இருட்டு இல்லை; விளக்கைப் போட்டுவிட்டு உட்கார்ந்தேன்; அந்த உரையாடல் அவனை அதிகமாகவே பாதித்திருக்கிறது; அதைப்பற்றி அவன் யோசித்திருக்க வேண்டும்.

அவன் பேசினான்.

‘எல்லாரும் இதையே கேட்கறாங்க. என்ன பண்ண முடியும் சொல்லுங்க. நம்ம விதி அப்படின்னு ஆயிடுச்சி. ரெண்டாந்தாரத்து பசங்க உக்காந்தபடியே சொத்தை அழிக்குதுங்க. நமக்கு இப்படியான நெலை. ‘

பழகினவனிடம் பேசுவதுபோல ஆரம்பித்து விட்டான். அவன் அப்பா யார் ? இதைக் கேட்பது உசிதமல்ல. சொல்ல வேண்டும், தன் சுமைகளை கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்ற துடிப்புடன்தான் என்னிடம் பேச ஆரம்பித்திருக்கிறான். நிச்சயம் மேலும் மேலும் விளக்கமாக சொல்வான் என்று பட்டது.

‘உங்களுகே தெரிஞ்சிருக்கும். தெரியாதா ? கே.டி.ஆர்.தான் என் அப்பா. யாரும் நம்பமாட்டாங்க. ‘

‘கதிர்வேலு தம்பின்னு நெனச்சேன். ‘

‘ஆமா. அவர் எங்க பெரியப்பா பிள்ள. அதனால அவர் எனக்கு அண்ணன் தம்பியானதுனாலே கலெக்ஷனுக்கு அனுப்பறாங்க. இல்லன்னா அவரே போவாரு. மொதல்ல நா சாமளா மெடிக்கல்ஸ்லே வேல பண்ணினேங்க. இவரு தான் எங்கிட்ட வந்து இருடான்னு கட்டாயமா கூட்டியாந்துட்டாரு.

‘நாம எங்கயோ நல்லபடியா நல்ல பேரோட வேலை செய்யறதாக் கேட்டு இவ்வளவு உரிமையோட கூட்டி வந்துட்டாரு. எப்பவுமே நம்மகிட்ட திறமை நாணயம் இருக்குதுன்னு தெரியும்போதுதான் சொந்தம் வருதுங்க. உங்ககிட்ட சொல்றதுல என்ன, நா படிக்கிறப்பவும் சரி இப்பவும் சரி அனாவசியமா எங்கேயும் போனதில்லை. எஸ்.எஸ்.எல்.சி பெயில் ஆயிட்டு வேலை தேடி அலையறேன். அந்த நேரத்துலகூட எங்கப்பா எந்த உதவியும் செய்யல. அவர விடுங்க, சொந்தகாரனுங்க ஒருத்தன்கூட ‘நா இத செய்து வைக்கறேன் வாடா ‘ ன்னு ஒரு வேலைக்கு வழிகாட்டலிங்க. மெடிக்கல்ஸ் ஸ்டோர்லே ஆள் தேவைன்னு கேள்விப்பட்டு நானே போனேன். வேலைல சேர்ந்தேன். ஐம்பது ரூபா சம்பளம். ஆறு மாசத்துக்கு அப்புறம் பத்து ரூபா உசந்தது. தீபாவளிக்கு பேண்ட் துணி, ஒரு மாச சம்பளம் குடுத்து, அடுத்த மாசத்துலேயிருந்து நூறு ரூபா தரேன்னு சொன்னார். அப்புறம் கதிர்வேலு அந்த மாசமே எங்க முதலாளிகிட்ட பேசி என்னை அவர் கடைக்குக் கூட்டியாந்துட்டாரு. எதுக்கு சொல்றேன்னா அத்தனை நாளா என்னை யாரும் கண்டுக்கவே இல்லிங்க.

‘எங்க அம்மா செத்துப் போனதுக்கு அப்புறம்தான் வேற கல்யாணம் கட்டிக்கிட்டார் எங்க அப்பா. இத்தனைக்கும் நா எங்கேயோ அவர் எங்கயோ இல்ல. பக்கத்து பக்கத்து தெருவுல இருக்கறோம். அப்படியாத்தான் தினம் போறேன் வரேன். ‘

மழை மேலும் கனமாகப் பெய்ய ஆரம்பித்துவிட்டது. அவன் பேசும் வார்த்தைகளைக்கூட கேட்க முடியாதபடி போர்டு தடதடக்கிறது. அவன் சொல்வதை உன்னிப்பாகக் கேட்கவேண்டியிருந்தது.

‘எனக்கும் இந்த ஏப்ரல் வந்தா இருபத்தியொண்ணு முடியுது. எனக்கென்னன்னா, நீ என்னை மகன்னு சொல்லாம போனா ஒழியுது; அதப்பத்தின கவலை எனக்கில்ல; இதுவரையிலும் இல்லாத உறவு இனிமேலும் வாணாம் ‘ எனக்கு சொத்துல பங்கு குடு; தாத்தா சொத்துதானே ‘ நீயா சம்பாதிச்சே… ? என்னங்க சொல்றீங்க ‘ நா கேட்கறது தப்பா சரியா ? எதுக்கும் வழி விடாம குறுக்க நிக்கறான். என்ன பண்றது. அண்ணங்கிட்ட சொல்லி அனுப்பினேன். அவரு போய்வந்து சொல்றாரு, ‘நா என்னடா பண்ணட்டும்; அதிகமாப் பேசினா எனக்கும் அவருக்கும் மனஸ்தாபம் வரும் ‘ எப்படிங்க ‘ வேற ஒன்னுமில்லிங்க, நா போய்ட்டா அவருக்குத் தோதா ஆளு கிடையாது. சும்மாங்க… சொந்தம் பந்தம்னு நம்பி எதிலயும் கால வைக்கக்கூடாது. சிகரெட் பிடிக்கலாமா ? ‘

‘கூடாது யாராவது பார்ட்னர் வருவாங்க போவாங்க… ‘

‘அது சரி, நா எப்பவுமே யாருக்கும் தொல்லையா இருக்க மாட்டேங்க. ‘

வெளியில் போய் நின்று சிகரெட் எடுத்துக் கொண்டான். ‘ஏப்ரல் வந்தா இருபத்தியொன்று முடியுது ‘ என்று அவன் சொன்னது நினைவுக்கு வந்தது. நின்ற இடத்திலிருந்தபடி கை நீட்டி யாரிடமோ தீப்பெட்டி வாங்கினான். புகைத்தான். குழுமையான காற்று வந்து முகத்தில் மோதியது. புகை நெடி மெல்லக் கடைக்குள் வர ஆரம்பித்ததும் லேசாக இருமினேன். சற்று நகர்ந்துகொண்டு புகையை வெளியே ஊதினான். மழை நின்றிருந்தது. அவன் போக வேண்டியவன்தான், ஆனாலும் போகவில்லை. அவன் இன்னமும் பேச விரும்புகிறான். மொத்தமும் கொட்டி விடாமல் அவன் போக மாட்டான்.

சிகரெட்டைத் தூக்கி எறிந்தான். சாலையில் தேங்கும் தண்ணீரில் போய் விழுந்து மிதந்தது. அவன் வந்து உட்கார்ந்தான்.

‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம் தர்றாங்க ? ‘

‘நூற்றி ஐம்பது. ‘

‘குறைச்சலுங்க. இவங்களுக்குக் குடுக்க மனசு வராது. கொஞ்சமான வட்டியா வாங்குறாங்க ‘ ‘

நான் லேசாகச் சிரித்தேன்

‘மழை போதாதுங்க. இன்னும் நெறைய பெய்யனும். ஆனாலும் இதுக்கே எங்க பாட்டிக்கு மூச்சிறைக்கும். எங்க அம்மா செத்துப் போனதுக்கு அப்புறம் எங்க பாட்டிதான் எல்லாமும். அம்மாவப் பெத்த பாட்டிதான் ‘ ஆமா எனக்கு தாய்போல எல்லாமும் செய்யுங்க; இது வரையிலும் ஒரு சின்ன வேலையைக்கூட என்ன செய்யவிட்டது கிடையாது. ‘டேய் நா செத்தபின்னாலே நீ என்னன்னா பண்ணு ‘ அப்படின்னு சொல்லுங்க. கடையிலேந்து வேலைய முடிச்சிட்டு போவ எப்படியும் பத்தாயிடும். அந்த நேரத்துலயும் எனக்காக சுடுத்தண்ணி வச்சுக் குடுக்கும்; அதுக்கு எம் மேலே கொஞ்ச நஞ்ச பாசம் கிடையாது… அத என்னன்னு சொல்றது ? நானுன்னா உயிருங்க. ஆச்சி, அறுபத்தி எட்டுக்கு மேலே வயசாவுது.

‘எங்க பாட்டி மேலே ஒரே ஒரு விஷய்த்துலேதான் எனக்கு கோவம். அவங்க பண்ண தப்புதான் எல்லாத்துக்கும் காரணம். ரெண்டாவது கல்யாணம் ஆன பின்னாடி என்னைத் தனியா கூட்டியாந்து வளர்த்திருக்கக்கூடாது. அட, சின்னம்மா அடிக்கிறா, உதைக்கறா ஆனாலும் அப்பாவுக்கு ஒரு நாள் இல்லன்னாலும் ஒரு நாள் பாசம் வராதா ? கூடவே வளர்ந்திருந்தா எனக்கும் அவர் நிர்வாகத்துல பொறுப்பு கிடைச்சிருக்குமில்ல. தனியா கொண்டுபோய் வளர்த்ததுனாலே உலகத்துக்கு என் அப்பா அவர்தான்னு தெரியாமலேயே போயிடுச்சே இல்லிங்களா, அதனாலதான் நா இன்னொருத்தன் கிட்ட வேலை செய்து கஷ்டப்படறேன். ‘

நான் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தேன். அவன் மிகவும் சங்கடப்பட்டான்.

‘இந்த மாதிரியான எண்ணம் எம் மனசுல வந்துட்ட பிறகு, எம் பாட்டி மேலே சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபம் வருது. அந்த மாதிரி சமயத்துல நான் அவமானத்துல கூனிக் குறுகி போறேங்க. நீங்க நம்ப மாட்டாங்க. சொத்து கிடைக்காம போச்சேன்கிற ஒரே எண்ணத்துனாலே எம்மேலே உயிரையே வச்சிருக்கிற பாட்டிய கோவிச்சுக்கறது நியாயமா ? மனசு என்ன வேதனைப்படுது தெரியுதுங்களா…… என்னையும் மீறி எப்படியோ கோவம் வந்துடுதுங்க; ரொம்ப அவமானமா இருக்கு. ‘

வார்த்தைகள் சரியாக வராமல் திணறினான். மனசுக்குள் அழுகிறான் என்பது தெரிந்தது.

‘எனக்கு சொத்து மேல ஆசையில்லிங்க இப்ப. அவனை அவமானப்படுத்தனும். அதுதான் ஆசை. பெத்த பிள்ளைய இப்படிப் படுத்தறியேன்னு நாலு பேரு காறிதுப்பணும் நீங்க வேணும்னா பாருங்க. கடைக்கு மேல்பூட்டு போட்டுட்டு வரேன். நம்மகிட்ட வரட்டும். நாலு பேர் இதப்பத்தி பேசட்டும். கலகம் பண்ணினாத்தான் நியாயம் பொறக்கும். என்ன சொல்றீங்க ? ‘

நான் எதையும் சொல்லவில்லை. செய் என்பதுபோல தலையசைத்தேன். அந்த தலையசைப்பு ‘போதும் போய் வா ‘ என்பதுபோல இருந்ததையும் உணர்ந்தேன். அவன் முகம் தெளிவடைந்திருந்தது. மனசை வருத்திக்கொண்டிருந்த சிக்கலான பிரச்சனை தானே தீர்வு கண்டதை அவன் கண்டு கொண்டான். அவன் விரும்பியதும் அதைத்தான்.

Series Navigation

இரா. சோமசுந்தரம் .

இரா. சோமசுந்தரம் .