(4)
கு. அழகிரிசாமி
அப்புறம் சரியாக ஒரு வாரம் கழியவில்லை. ஒரு இளைஞன் புரோக்கருடன் மாடியறையை வந்து பார்த்தான். அவன் ஒரு கம்பெனியில் ஸ்டெனோவாக வேலை பார்ப்பவன். விநாயகத்துடன் அறையைப் பகிர்ந்து வசிக்க முப்பது ரூபாய் வாடகை தர இசைந்து, புதன்கிழமை நல்ல நாள் என்றும், அன்று பெட்டி படுக்கைகளோடு வருவதாகவும் சொல்லி மூன்று மாத வாடகையை அட்வான்ஸாகவும் கொடுத்தான். பிறகு புரோக்கரோடு வெளியே போனான்.
புதன்கிழமைக்கு நடுவே இரண்டு நாட்கள்தான் இருந்தன – திங்கட்கிழமை; செவ்வாய்க்கிழமை.
திங்கட்கிழமை மாலையில் கேரம் ஆட்டத்தின்போது, ‘அஷோக், உங்கம்மா கிட்டே போய்ச்சொல்லு; இன்னிக்குக் காலையிலே நான் ஆபீசுக்குப் போறப்போ உங்க அம்மா எதிரிலே வந்தாங்க. அவங்க எப்போ எதிரே வந்தாலும் அன்னிக்குக் கட்டாயம் ஒரு நல்ல காரியம் நடக்கும். இன்னிக்கும் அப்படியே நடந்தது. நான் மூணு வருஷத்துக்கு முன்னாலே ஒரு ஆதாரமும் இல்லாமே ஒருத்தருக்கு முந்நூறு ரூபா கடன் குடுத்தேன். அவரும் வெளியூருக்குப் போயிட்டார். நான் எத்தனையோ லெட்டர் போட்டும் அவர் பதில் எழுதலே. பணத்தை மோசம் பண்ணிப்பிட்டார்; இனிமே அது திரும்பாதுன்னு நான் முடிவு பண்ணிட்டுப் பேசாம இருந்தேன். ஆனால், இன்னிக்கு என்ன நடந்தது தெரியுமா ? ரிஜிஸ்தர் தபாலிலே அவர் அசலும் வட்டியுமாச் சேர்த்து ரூபா நானூத்தி எட்டுக்கு ஒரு ‘செக் ‘ அனுப்பிட்டார். என்னாலே நம்பவே முடியல்லே. உங்க அம்மாவைப் பார்க்கறது மகாலஷ்மியைப் பார்க்கறமாதிரி. அவங்க முகத்திலே அஷ்டலஷ்மியும் தாண்டவமாடுது. அஷோக் ‘ என்று சிரிக்காமல் சொன்னான் விநாயகம்.
அவன் அன்றிரவே தன் தந்தையின் முன்னிலையில் தாயாரிடம் சொன்னான். அன்றிரவு அந்த அம்மாளுக்குச் சந்தோஷத்தை எப்படித் தாங்குவது என்றே தெரியவில்லை.
‘நான் அப்படி இல்லேன்னா உங்க அப்பா என்னை கண்ணாலம் பண்ணியிருப்பாரா, அஷோக்கு ? ‘ என்றாள் தேவகியம்மாள். உடனே கணவனைப் பார்த்து, ‘அவருக்கு ஒருநாள் கட்டாயம் சாப்பாடு போடணும் ‘ என்றாள்.
‘கட்டாயம் ‘ என்றார் அவர்.
தம்முடைய மனைவியின் முகத்தை மற்றொருவன் மெச்சுவதை அறிந்து அவருக்கும் உடம்பு பூரித்தது. அவளை வேறு வழியில்லாமல் கல்யாணம் செய்து கொண்டதாக அப்போது நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று சொல்லிக்கொண்டார்.
செவ்வாய்க்கிழமை மாலை. அஷோக்க்கும் ரவியும் மொட்டை மாடியில் காற்றாடி பறக்கவிட்டுக் கொண்டிருந்தார்கள். அறையில் கிடந்த ‘கேரம் ‘ போர்டுக்கு இரண்டுபக்கமும் விநாயகமும் லல்லுவும் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது இரண்டு பேருடைய கைகளும் ‘கேரம் ‘ போர்டில் இல்லை. கண்கள் அடிக்கொரு தடவை வெளியே திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தன.
கீழேயிருந்து தேவகியம்மாள் தன் மக்களைக் குரல் கொடுத்து அழைத்தாள். விளையாட்டு சுவாரஸ்யத்தில் பையன்கள் காதில் அவள் அழைப்பு விழவேயில்லை. ஆனால் அறைக்குள் அவளுடைய குரல் கேட்டது. சிறுவர்கள் கீழே இறங்குவதற்குத் திரும்பும்வரையில் தங்கள் விளையாட்டை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்று இந்த இருவரும் கருதிவிட்டார்கள்.
தேவகியம்மாள் ஐந்தாறு தடவை கூவியும் பிரயோஜனமில்லாமல் போகவே கோபாவேசத்தோடு மாடிக்கு ஓடிவந்தாள். அறையின் வாசலை அவள் திரும்பிப் பார்த்தாள். விநாயகமும் லல்லுவும் தங்கள் வலது கைகளை உடனே பின்னுக்கு இழுத்து ‘கேரம் ‘ போர்டில் வைத்ததை அந்த அம்மாள் பார்த்துக் கொண்டாள். இருவர் வாயிலும் ஒவ்வொரு மிட்டாய் இருந்தது. இருவரும் வாயை மூடிக்கொண்டு கண்களை மட்டும் அகலத் திறந்து பேச்சு மூச்சற்று விழித்தார்கள்.
தேவகியம்மாள் கோபப்படபடப்பில் ‘ஒருத்தருக்கொருத்தர் சோறு ஊட்டுறீங்களா ? ‘ என்று கேட்டாள். பிறகு உடம்பெல்லாம் நடுங்கப் பயங்கரமாகக் கூச்சல் போட்டாள். ‘திருடா! சோமாறி! பேமானி! கம்மனாட்டி! பொறுக்கி! … ‘ என்று விநாயகத்தைத் திட்டிக் கொண்டே மகளின் கூந்தலைப் பிடித்து இழுத்துக் கீழே கொண்டுவந்தாள்.
‘என்ன, ஏது ? ‘ என்று விசாலாக்ஷி ஓடி வந்தாள்.
‘உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லே, நீங்க உள்ளே போங்க ‘ என்று விசாலாக்ஷியை விரட்டிவிட்டு, மகளின் இரண்டு கன்னங்களிலும் ‘பளார், பளார் ‘ என்ரு வாங்கிக் கொண்டே இருந்தாள்.
சிறுவர்கள் ஓடிவந்து பயத்தினால் அழுது கொண்டே அம்மாவைத் தடுத்தார்கள். அவர்களை ஆளுக்கு ஒரு மிதி கொடுத்து அப்பால் தள்ளினாள் தேவகியம்மாள். அப்பொழுதும் அவள் ‘பாழாப் போறவன்! மோசக்காரன்! பொறுக்கி! திருடன்!… ‘ என்று உரக்கத் திட்டிக்கொண்டிருந்தாள்.
மாணிக்கம் ஆபீசிலிருந்து திரும்பி வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்தார். ஒன்றும் புரியாமல் அவர் திகைத்து நின்ற போது, உள்ளே நின்ற விக்ஷாலாக்ஷி அவரைக் கை ஜாடை செய்து அழைத்தாள். விஷயத்தையும் ரகசியக் குரலில் சொல்லிவிட்டாள்.
‘மாடியிலேருந்து மகளை இழுத்துக் கொண்டாந்து உதைக்கிறா, மாடியிலே அவன் இருக்கான் என்ன நடந்ததுன்னு இன்னும் சொல்லணுமா ? ‘
‘அப்படியா கதை! விசாலம்,கதை எப்படியோ திரும்பிட்டதேடி! ‘ என்று சொல்லிக்கொண்டே மாணிக்கம் உள்ளே கும்மாளம் போட்டார்.
இதற்குள் மகளுக்குச் சூடு போடுவதற்காக இரும்புக் கரண்டியை எடுத்து அடுப்பில் காய வைத்தாள் தேவகியம்மாள். அஷோக் பயந்து மார்வாடிக் கடைக்கு ஓடி அப்பாவை அழைத்துக் கொண்டுவந்தான். அவர் உள்ளே வந்ததும், மாணிக்கமும் வேண்டுமென்றே அங்கே வந்து நின்றார்.
தேவகியம்மாள் உடம்பெல்லாம் வாயாக கத்தி ஓலமிட்டாள். பாண்டுரங்கம் விஷயத்தை அறிந்து உள்ளே போனார். உடனே மனைவியைக் கீழே இழுத்துப் போட்டு உதைத்தார்.
‘இத்தினி நாள் நீ இன்னாடி பண்ணிக்கினு இருந்தே, வூட்டிலே ? கதையை இவ்வளவு முத்த விட்டுட்டுக் கூச்சல் வேறெ போடுறியா, கூச்சல்! பொண்ணை ஊர்மேலே வுட்டுட்டு நீ வெக்கப்பட்டு ஓடி ஒளிஞ்சியேடி, பெரிய ரம்பை மாதிரி! அத்தோட பலன்டி இது!… ‘ என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் காலால் உதைத்துக் கொண்டிருந்தார்.
மாணிக்கம் இனியும் சும்மா இருக்கக்கூடாது என்று ஓடிப்போய் தடுத்து அவரை இந்தப் பக்கம் இழுத்துக் கொண்டுவந்தார்.
‘பாருங்க, ஸார், கூச்சல் வேறே போடுறா! மானம் கெட்டவ! இவ ஏன் கூச்சல் போடுறா தெரியுமா, ஸார், அவன் இவ கையைப் புடிச்சு இஸ்க்க்காமல், பொண்ணு கையைப் புடிச்சிட்டானேன்னு இவளுக்கு ஆத்திரம்! ஸார்!… ‘
‘ஸார்! என்ன பேச்சுப் பேசுறீங்க. ஸார் ? போதும். சும்மா இருங்க ‘ என்று தடுத்தார் மாணிக்கம். இவ்வளவு ரசாபாசத்துக்கும் மூலகாரணம் அவர் மனைவியைத் தூக்கிச் சுமந்ததுதான் என்று எண்ணிய மாணிக்கம், ‘யாரோ செஞ்ச தப்புக்கு அம்மாளை ஏன் ஸார் திட்டுறீங்க ? சும்மா இருங்க ‘ என்றார்.
ஆனால் பாண்டுரங்கம் சும்மா இருக்கவில்லை. சொன்னதையே வாய் ஓயுமட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டுதான் இருந்தார்.
மேலே மாடிஅறையில் இருந்த விநாயகமோ, எந்த நிமிஷத்திலும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் கையை முஷ்டி பிடித்தவண்ணம் நின்று கொண்டிருந்தான். கடைசி வரையிலும் பாண்டுரங்கம் மாடிக்குப் போகவே இல்லை. மாணிக்கம்தான் போனார்.
5
மாணிக்கத்தின் அபார முயற்சியால் விநாயகத்துக்கும் லல்லுவுக்கும் கல்யாணமே நிச்சயமாகிவிட்டது. அவன் மாதம் முந்நூற்றைம்பதுக்குமேல் சம்பளம் வாங்குகிறவன், சுயஜாதி, சொந்த ஊராகிய விழுப்புரத்தில் கொஞ்சம் சொத்து சுகங்களும் உடையவன் என்பது தெரிந்ததாலும், அவனும் லல்லுவும் உயிருக்குயிராக காதலித்ததாலும், அவனுடைய பெற்றோரின் ஆட்சேபத்தையும் மீறிக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது.
தேவகியம்மாள் நூறு ரூபாய் சம்பளத்தில் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை கிடைப்பானா என்று சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தபோது, இவ்வளவு பெரிய இடத்திலிருந்து ஒருவன் கிடைத்தும் கூட அவளால் சந்தோஷப்படமுடியவில்லை.
மகளுக்கு கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடந்தது. ஆனால் தேவகியம்மாளுக்கோ வாழ்க்கையே இருண்டுவிட்டது. அவள் அலங்காரத்தையும் கைவிட்டாள். வெட்கப்பட்டு ஓடி ஒளிவதையும் கைவிட்டாள். உலகத்தையே வெறுத்தவளாக வீட்டுக்கும் வாசலுக்கும் நடமாடிக்கொண்டிருந்தாள்.
–
சுதேசமித்திரன்- 1969 –