கே. ஆர். அய்யங்கார்
விபத்து:
சுந்தரமூர்த்தி சுசுகியின் வேகத்தை அதிகப் படுத்தினான். இந்த சாமினாதனால் லேட்டாகிவிட்டது. பாவி. சேர்ந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. ஒழுங்காய் ஒரு ஸ்டேட்மெண்ட் ப்ாிபேர் செய்யத்தொியவில்லை. xyz கம்பெனி நம் கம்பெனிக்கு மொத்த விற்பனையில் 40% வியாபாரம் தரும் கம்பெனி. அதில் போய் தப்பு செய்து அனுப்பி விட்டான். எதேச்சயாய்ப் பார்த்து சாி பண்ணி, சாமினாதனைத் திட்டி விட்டு வருவதற்கு நேரமாகிவிட்டது. நாளை மறுபடி xyz கம்பெனிக்குப் போன் பண்ணி எம்.டியிடம் பேச வேண்டும். அவர் ஒரு முசுடு.ஜென்னி என்ன பண்ணிக்கொண்டிருப்பாள். பாவம் வாசலுக்கும் பின்பக்கமும் நடந்து கொண்டிருப்பாள். ஆர்த்தி என்ன செய்து கொண்டிருக்கும்….
சாலை வளைந்து மெயின் ரோட்டில் சங்கமிக்க, மெயின் ரோட்டில் மேலும் வேகத்தை அதிகப் படுத்தினான். அவன் கவனிக்காதது சாலையின் பாதி வழியில் ராபணா என்று பள்ளம் நடுவிலிருந்து ஓரம் வரை தோண்டப்பட்டு நடுவாக ஒரு டிரம் வைக்கப் பட்டு ஒரு கொடி சோகையாய் வைக்கப் பட்டிருப்பதை. கடைசி நிமிஷத்தில் கவனித்த போது, சொல்லி வைத்தாற்போல் சாலை விளக்குகள் அணைந்து போக, சுந்தரமூர்த்தி டிரம்மில் மோதி பேலன்ஸ் தவறி அந்தப்பக்கம் போக, அங்கு வந்து கொண்டிருந்த போக்குவரத்துக் கழக பஸ் அவன் மீது மோதி தூக்கி எறியப்பட்டு தலை அடிபட்டு ரத்தம் வழிய தரையில் விழுந்த நிமிடங்களில் அவன் நினைவில், சாமினாதன் ‘நான் இனிமே சாியா செய்யறேன் சார் ‘ என, ஜெனிபர் ‘சுந்தரா, உங்கள் வழக்கப்படி பொட்டு வைத்துக் கொள்ளட்டுமா ‘ எனக்கேட்க ஆர்த்தி ‘அப்பா kubbai ‘ என சுந்தரா மெல்ல மெல்ல நினைவிழந்தான். அவன் உயிர் அவனிடமிருந்து விருப்பமில்லாமலேயே விலகியது
சாலை விளக்குகள் உயிர்பெற்று எாிய ஆரம்பித்தன.
*****
தினத்தந்தி
4ம் பக்கம் 3ம் பத்தி
சாலை விபத்து – வாலிபர் மரணம்
மார்ச் 20: நேற்று இந்த —– சாலையில் ஏற்பட்ட விபத்தில் வாலிபர் பாிதாபமாய்ச் செத்தார். சுந்தரமூர்த்தி இறந்தவர் பெயர் சுந்தரமூர்த்தி(32). இவர் PQRஎன்னும் தனியார் கம்பெனியில் அக்கெளண்ட்ஸ் மேனேஜர் ஆக வேலை செய்து கொண்டிருந்தார் (தொடர்ச்சி 5ம் பத்தி பார்க்க)
5ம் பத்தி (3ம் பத்தி தொடர்ச்சி) நேற்று சுஸூகி ஓட்டி அங்குவருகையில் அவர் அந்த சாலையில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்திற்கான அறிவிப்பு டிரம்மில் மோதி அந்தப்பக்கம் போய் விழுந்தார். அப்பொழுது அங்கு வந்து கொண்டிருந்த போக்குவரத்துக் கழக பஸ் அவர்மீது மோதியது. சாவு: அவர் தலையில் அடிபட்டு துடிதுடித்துச் செத்தார்
கோவென்று அழுதார்:
விஷயத்தைக் கேள்விப்பட்ட அவர் மனைவி ஜெனிபர் கோவென்று அழுதார். சுந்தரமூர்த்திக்கு ஒன்றரை வயதுக் குழந்தை ஆர்த்தி இருக்கிறாள்
விசாரணை:
B-6 காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாாித்து வருகிறார்
******************
ஆனந்த விகடன்
அனு, அக்கா, ஆண்ட்டியிலிருந்து ஒரு பகுதி:
‘எங்க போயிட்டு வரே அனு, ஏன் இவ்வளவு நேரம். ‘
‘அதை ஏன் கேக்கறீங்க ஆண்ட்டி, சாலை அழகு படுத்தறோம்னு சொல்லிக்கிட்டு அங்கங்கே தோண்டி வச்சுருக்காங்க. சுத்து வழியில சுத்திச் சுத்தி வர்றதுக்குள்ள உங்க பாடு என்பாடுன்னு ஆயிடுது. இதனால நிறைய accidentம் ஆகுதாம் இப்போல்லாம் ‘
‘ஆமா. அனு. ரொம்பக் கஷ்டமாத் தான் இருக்கு. ஆமா நேத்து ஹேராம் 100 டே பங்ஷனுக்கு போனயா ‘
‘ஆமா ஆண்ட்டி, என்ன ஆச்சுன்னாக்க…. ‘
**************
குமுதம்:
சாலையை அங்கங்கே தோண்டி வைத்திருப்பதால் இப்போது நகரத்தில் விபத்துக்கள் அதிகாித்து விட்டன. இது பற்றி பொதுமக்கள் சிலாிடம் கருத்துக் கேட்டதில்:
ரத்தினம் (டாக்கடைக் காரர்): என்ன சார் செய்யறது. என் கடைக்கு இந்தப்பக்கம் கம்ப்யூட்டர் ஸ்கூல், எதிர்ல பேங்க். இப்படி தோண்டி வச்சுருந்தாங்கன்னா கொஞ்சம் வியாபாரமும் பாதிக்கப் பட்டிருச்சு. தாண்டித் தாண்டி வர்றதுக்குச் சோம்பல் பட்டுக்கிட்டு அப்படியே நேர போயிடறாங்க.
டாக்டர் ஏ. ஜானகி: ஆக்சுவலா பார்த்தா நகரை அழகு படுத்தறதுங்கறது சந்தோஷமான ஒண்ணு தான். அதே சமயத்திலே பொது மக்கள் (தொடர்ச்சி 45ம் பக்கம்)
………………………………………………………………………………
இந்தப் பக்கத்தில் முக்கால் பக்கம் நீச்சலுடையில் கைகளினால் முகம்மறைத்து கண்களை மட்டும் காட்டுகின்ற இந்த மீன் நடிகை யாரென்று தொிகிறதா. தொியாதவர்கள்56ம் பக்கத்துக்குச் செல்லவும்
**************
கல்கி:
தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா
தலையங்கம்: ஆவன செய்வார்களா
நகரை அழகு படுத்தும் முயற்சியில் நகராட்சி இறங்கியிருப்பது மகிழ்ச்சியே. அதே சமயத்தில் பொதுமக்களுக்கும் இடையூறு வரா வண்ணம் அந்த வேலைகளைச் செய்ய வேண்டும். பாதியில் வேலை செய்து விட்டு நாட்கணக்காக கிடப்பில் போட்டுவிடுவது தவிர்க்கப்பட வேண்டும். இதனால் பல விபத்துக்களும் நிகழ்கின்றன. நகராட்சியும் அரசும் இதை கவனித்து உடனே ஆவன செய்ய வேண்டும்.
*****************
தயாளன் அனிச்சையாக இண்டர்காமை அழுத்தி செகரட்டாியிடம், ‘அந்த சுந்தரமூர்த்தியை வரச்சொல்லு ‘ என்றார். செகரட்டாி அதிர்ச்சியாய் ‘சார் ‘ என்றதும் தான் நினைவுக்கு வந்தது. சாாிம்மா என்று சொல்லி போனை வைத்தார். ஓகாட் சுந்தரமூர்த்தி இறந்து இரண்டு நாட்கள் ஆகி விட்டன. சுந்தரா எங்கிருந்து வந்தான். இப்படி என் அக்கெளண்ட்ஸ் எல்லாம் அம்போன்னு விட்டுட்டுப் போய் விட்டான். a very nice effiecient person. அடுத்து யாரைப் போடுவது. சாமினாதனைப் போடலாம் என்றால் சாமினாதன் சாியில்லை என்றிருந்தான் சுந்தரமூர்த்தி ஒரு தரம். ஆடிட்டாிடம் வேறு சொல்லியிருக்கிறேன் நம்பகமான ஆள் வேண்டும் என்று. பாவம் அந்தப் பெண் ஜென்னிபர். சுந்தர மூர்த்தியின் இன்ஸ்யூரன்ஸ் எல்லாம் முடித்து அவளிடம் தரவேண்டும் .
சிந்தனையில் இருந்தவரை இண்டர்காம் மறுபடி கூப்பிட்டது.
‘சார். சாமினாதன் உங்களைப் பார்க்க வேண்டுமாம் ‘
‘send him in ‘
உள்ளே நுழைந்த சாமினாதன் சில பைல்களை அவாிடம் கொடுத்தான். ‘கொஞ்சம் என்னாலான வேலைகளை முடித்திருக்கிறேன் சார். பாருங்கள். எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாய் இருந்தார் போய் விட்டார் ‘ கண்ணைத் துடைத்துக் கொண்டான்.
‘சாி வேறு என்ன ‘
‘அவர் ஏதோ அவசரத்தில் xyz கம்பெனிக்கு தப்பாக ஸ்டேட்மெண்ட் போட்டு அனுப்பி விட்டார் சார். நான் அதை சாி பண்ணி XYZ கம்பெனியிலும் பேசிவிட்டேன்! ‘
‘ஸ்டேட்மெண்ட் எல்லாம் நீங்கள் தானே செய்வீர்கள் ? ‘
‘இந்தக் கம்பெனி நம் bread என்பதால் அவரே வைத்துக் கொண்டிருந்தார் சார் ‘ என்ற சாமினாதன்
‘சார் மே கடைசியில் எனக்கு பத்து நாட்கள் லீவ் வேண்டும் ‘
‘எதற்கு ‘
‘ICWA final எழுதுகிறேன் சார் ‘
‘நீ ICWA படிக்கிறாயா. சுந்தரா சொல்லவே இல்லையே ‘
‘முடித்ததும் உங்களிடம் கூறுகிறேன் என்று சொல்லியிருந்தார் சார் ‘
‘சாி. நீ போ. அப்புறம் நான் கூப்பிடுகிறேன் ‘ என்று சாமினாதனை அனுப்பிய தயாளன்
‘ஆடிட்டாிடம் ஆள் வேண்டாமென்று சொல்ல வேண்டும் ‘ என நினைத்துக் கொண்டார்.
****************
ஜெனிபர் முகம் கழுவினாள். கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். கன்னம் ஒட்டி, கண்கள் கலங்கி வேறு ஜென்னியாக இருந்தாள். சுந்தரா இருந்தால் துடித்துப் போய் விடுவான்…. ‘சுந்தரா போய் இன்றுடன் பத்து நாட்களாகி விட்டது. என்ன அருமையான மனுஷன்.ா சுந்தரா நீ போகவில்லை. நீ நிகழ்வித்த மாற்றங்கள் இன்னும் என் உடலில், உணர்வுகளில் இருக்கின்றன. உன் சாயலில் நம் பெண் ஆர்த்தியும் இருக்கிறது. ‘
ஊாிலிருந்து வந்திருந்த சுந்தராவின் மாமா மாமியை நினைத்துக் கொண்டாள். எப்படி உதடு ஒட்டாமல் பேசினார்கள். ஆரம்பத்திலிருந்தே அவனுக்கு எவ்வளவு வரும் ஆபிசிலிருந்து, இன்ஸ்யூரன்ஸாலிருந்து என்று கேட்டுக்கொண்டு இவள் தொியவில்லை என்றதும் பட்டும் படாமல் நாங்க கிளம்பறோம். உன்னையும் கூட வச்சுக்க ஆசை தான் உனக்குத் தொியும் எங்கள் குடும்ப நிலை என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார்கள். உறவுகள்…..
அனாதை ஆசிரமத்துத் தலைவி ரஞ்சிதம் தான் இவளுக்குத் தேறுதல் சொன்னாள். கவலைப்படாதே ஜென்னி, நீ வாழ வேண்டும் உன் குழந்தைக்காக. உன்னிடம் நீ படித்த ஆசிாியப் படிப்பு இருக்கிறது. நீ வேலைபார்த்தாயே முன்னால் ஒரு ஸ்கூலில். அந்த தலைமையாசிாியை வயலட்டிடம் நானும் பேசுகிறேன். எப்போ கொஞ்சம் துக்கத்திலிருந்து தேறுகிறாயோ அப்போ அவளைப் போய்ப் பார். கட்டாயம் உன்னை டாச்சராய் மறுபடி எடுத்துக் கொள்வாள்ா என்று சொல்லியிருந்தாள். மனதில் சுந்தராவை மறுபடியும் நினைத்துக் கொண்டாள். சுந்தரா, இன்னிக்கு நான் போற இண்டர்வியூவிற்கு என்னை வாழ்த்து.ா
பாத்ரூமை விட்டு வெளியே வந்தால் தாயம்மா வந்திருந்தாள். ‘தாயம்மா. ஆர்த்தி உள்ளேதூங்குது. சாதம் பிசைந்து வச்சுருக்கேன். பன்னிரண்டு மணிவாக்கில கொடு. நான் இரண்டு மணிக்குள்ள வந்துடுவேன் ‘
‘சாிம்மா. ஜாக்கிரதையாய்ப் போயிட்டு வா. குழந்தையை நான் பார்த்துக்கறேன் ‘ என்றாள் தாயம்மா.
***************
ஆர்த்தி எழுந்தது. சுற்றும்முற்றும் பார்த்தது. அம்மா எங்கே. அப்பா தான் கொஞ்ச நாளாய் காணோம். நேத்திக்கு அம்மாவிடம் ‘அப்பா ஆ போச்சு ‘ என்று சொன்னதற்கு எதற்கு அழுதாள். கொஞ்ச நாளாய் அழுதுண்டே இருக்கா அம்மா.
தரையில் கிடந்த காகிதத் துண்டைப் பார்த்தது. kubbai என்றது. அப்பா இருந்தால் கொஞ்சுவார்,பாரேன் பட்டுக்குட்டிக்கு ப வரமாட்டேங்கறது. baன்னு சொல்றதுன்னு.
ததக்கா பிதக்கா என நடந்து ஹாலிற்கு வந்தது. சோபாவில் அமர்ந்து தாயம்மா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
பின் பக்கம் பார்த்துஅம்மா தானாக்கும் என நினைத்து ‘வாழை ‘ என்றது. அம்மா சந்தோஷப் படுவாள். குட்டி எவ்ளோஅழகா ழ சொல்றதுன்னு.
தாயம்மா ஆர்த்தியைப்பார்த்தாள். ‘என்ன கண்ணு வாழைப்பயம் வேணுமா ‘ என்றாள்
இது அம்மா இல்லையே. வேலைக்காாி..அம்மா எங்கே. நான் சூச்சூ போணுமே. எனக்குத் தொப்பை வலிக்குதோ என்றெல்லாம் சொல்லத் தொியாமல் ‘பே ‘ என அழ ஆரம்பித்தது ஆர்த்தி.
****************
- முகக்களை
- தாய்மொழிக் கல்வி மனித உரிமை மீறலாம்:
சொல்கிறது உச்ச நீதி மன்றம் - கடந்த காலக் கனவு
- முட்டை சப்பாத்தி சுருள்
- மணிரத்னத்தின்
- ஒரு விபத்தும் சில விளைவுகளும்…..