(66) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

வெங்கட் சாமிநாதன்



ரொம்ப நாட்களாக அவ்வப்போது சில நாட்களாவது எங்களுடன் தங்கி சின்னப் பையன்களோடு தானும் ஒரு சின்னப் பையனாக ஊர் சுற்றுவதும் சினிமா பார்ப்பதுமாகக் கழித்த அந்த பெரியவர், வயதில் எங்களுக்கெல்லாம் தந்தை வயதுள்ளவர், கொஞ்ச நாட்களாகக் காணவில்லை. அவர் என்னிடமிருந்து வாங்கிச் செல்லும் ஃபில்ம் இண்டியா பத்திரிகையும் சேர ஆரம்பித்து விட்டது. மாதங்கள் கடந்தன. பின்னர் தான் யாரோ அவர் டிவிஷனல் அலுவலகம் இருந்த சிப்ளிமாவிலிருந்தோ பர்கரிலிருந்தோ வந்த ஆள் மூலம் தெரிந்தது. அவர் ஹிராகுட் அணைக்கட்டில் வேலையில் இல்லை என்று. காரணம், அவர் கொள்ளையாகத் தன் பாசத்தைப் பொழிந்த அவர் மகள், கல்யாணத்துக்கு இருந்த மகள் மிகக் கொடூரமான நிலையில் அவள் உயிரிழந்தாள் எனச் சொன்னார்கள்.. எரிந்து கொண்டிருந்த ஸ்டவ் புடவையில் பற்ற அந்த இளம் பெண் கருகிவிட்டாள். செய்தி கேட்ட எங்களுக்கு உடல் பதறியது. அந்தப் பெண்ணை நாங்கள் பார்த்ததில்லை. அந்தப் பெண்ணின் மேல் பாசத்தைப் பொழிந்த, அவள் நினைவாகவே எப்போதும் இருந்த அந்தப் பெரியவரின் பாசத்தைத் தான் நாங்கள் அறிவோம். கிட்டத்தட்ட அறுபது வருஷங்களாகிவிட்டன. இப்போதும் கூட இதை எழுதும்போது கூட மனம் கலங்கிவிடுகிறது. எழுதிவிட்டேன். ஆனால் வாயால் சொல்ல நேர்ந்தால் தொண்டை அடைத்துக் கொள்ளும். எங்கள் பட்டாளம் அவர் வரும்போதெல்லாம் அடிக்கும் கொட்டத்தைப் பொறுக்காத சிலர் ”எப்படியெல்லாம் சம்பாதித்தார்? அது இப்படித்தான் போகும்” என்று சொன்ன தாகவும் செய்தி கிடைத்தது. அரக்கர்களும் மனித ரூபத்தில் தானே இருப்பார்கள். எந்த குற்றத்துக்கு என்ன தண்டனை? யார் செய்த குற்றத்துக்கு யாருக்கு தண்டனை? எது குற்றம்.? தானாக் வந்ததை எல்லோருக்கும் பங்கு பிரித்துக்கொடுத்ததா? எப்படியெல்லாம் ஒரு குரூர மனம் தனக்குப் பிடிக்காதவரை பழிச்சொல்லுக்கு இரையாக்குகிறது?
இப்போது அதையெல்லாம் நினைத்தாலும் மனம் தாளவில்லை.

இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வந்தது. மகா நதியின் குறுக்கே முதலில் ஒரு பாலம் கட்டப்பட்டது. அணை கட்ட நிர்ணயிக்கப்பட்ட இடத்திலிருந்து மூன்று மைல் தள்ளி லச்சுமி டுங்ரி என்னும் ஒரு கரையின் அருகில் இருந்த கரட்டின் அடிவாரத்திலிருந்து எதிர்கரைக்கு. மிக நீண்ட பாலம். இந்திய பொறியாளர்களே கட்டிய பாலம் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளப்பட்டது. வீடுகள் கட்டுவதோடு அந்த பாலம் கட்டுவதுதான் முதலில் நடந்த காரியங்கள். அது ரயில் பாதையும் கொண்ட பாலம். கட்டி முடித்த பிறகு பாலம் சரியாகக் கட்டப்பட வில்லை என்று ரயில்வே நிர்வாகம் தன் பங்கு செலவைத் தர மறுத்தது. பாலம் பலமற்றது என்பது விசாரணையில் தெரிந்தது. பிறகு இன்னொன்றும் தெரியவந்தது. பாலம் கட்டியவர்கள் நிறைய சாப்பிட்டிருக்கிறார்கள். என்று. இதற்கு பொறுப்பாக இருந்த என்சினீயர் தனக்குக் கீழ் இருந்த ஜூனியர் என்சினியர் சூப்பர்வைசர்களை, “குற்றத்தை நீங்கள் ஒப்புக்கொள்ளுங்கள், சிறையிலிருந்து மீளும் வரை உஙகள் குடும்பத்தை நான் காப்பாற்றுகிறேன். வேலையும் தருகிறேன். என்னை மாட்டிவிட்டால் எல்லோருமே கம்பி எண்ணவேண்டியிருக்கும். . உங்கள் குடும்பம் கதியற்றுப் போகும்”, என்று சொல்லி தான் தப்பித்துவிட்டதாக ஹிராகுட்டில் எல்லோரும் பேசிக்கொண்டார் கள். இந்த சூப்பிரண்டெண்டிங் என்சினியர், ஏ.ஆர். செல்லானி என்று பெயர் என்று நினைவு. அவர் தொடர்ந்து கொஞ்ச நாள் தான் இருந்தார். தன் பதவியில். இது ஒரு க்ளாசிக் பாட்டெர்ன். இந்த மாதிரி பெரிய முதலைகள் தப்பித்து விடும். அவர்களுக்கு பழி சுமக்க எப்போது ஒரு fall guy என்பார்கள். பலிஆடு என்று தமிழில் சொல்லலாமா? இது போன்றே இன்று வரை நடந்து வருவது நமக்குத் தெரியும். இன்றைய பேப்பரைப் பார்த்தாலும் விழுங்கிப் பெருத்திருக்கும் முதலைகள் தெரியும். பலி ஆடுகளும் தெரியும்.

ஆனால் இந்த முதலைகளை ஏன் பகவான் தண்டிப்பதில்லை. ஒரு பாவமும் அறியாத பெண் கருகிச் செத்தால் அதை எப்படி எல்லாம் கருகிய மனங்கள் விமர்சிக்கின்றன. இன்றைய முதலைகள் நாட்டுக்குத் தலைமை வேடம் வெகு வெற்றிகரமாகப் போடுகின்றன. புராணகாலத்திலிருந்தே ஹிரண்யகசிபுகளும், மகாபலிகளும் இருந்திருக்கிறார்கள். எது கிருத யுகம், எது கலி யுகம்.

இன்று அவர்கள் எல்லோருமே மறைந்து விட்டார்கள். எத்தனை ஒரு குற்றமும் செய்யாத பலிஆடுகள் இருந்திருக்கின்றன. மறைந்தும் விட்டன, காலம் காலமாக. இன்று அவர்கள் தியாகத் தீயில் வெந்தது கூட நினைக்குப்பார்க்க அவர்கள் நினைவும் இல்லை. சோகங்கள் கால கதியில் நினைவுகளாகக் கூட எஞ்சுவதில்லை.

இப்படித்தான் இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. வெயில் காலத்தில் இரவிலும் கூட வீட்டினுள் படுக்கமுடியாது கயிற்றுக்கட்டிலை எடுத்து வீட்டுக்கு முன் உள்ள புல் தரையில் போட்டு படுத்துவிடுவோம். எல்லோர் வீட்டின் முன்னும் இரவில் கட்டில்களில் படுத்துறங்கும் காட்சியைப் பார்க்கலாம். இந்தக் காட்சி தில்லி வந்தபிறகும் தொடர்ந்தது. ராமகிருஷ்ணபுரம், வினைய் நகர் பகுதிகளில் வீடுகள் முன் கதவு ஒப்புக்கு சாத்தி இருக்கும் சில இடங்களில். எங்கள் வீடு அப்படித்தான். களவு போக ஒன்றுமில்லை என்ற தைரியம். என்னோடு தான் எப்போதும் ஏழெட்டு பேரிலிருந்து பத்துப் பேர் வரை உடன் இருந்தார்களே. அனேகமாக யாராவது ஒருவர் வீட்டில் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் வீட்டிப் பூட்டுவது கிடையாது. இரண்டு மூன்று பேர் இருந்த போது இரண்டு பூட்டுக்களை கோர்த்து பூட்டிச் செல்வோம். ஆனால் எண்ணிக்கை அதிகமானதும் எவ்வளவு பூட்டுக்களை சங்கிலியாகக் கோர்க்க முடியும்? ஆதலால் பூட்டுவதே இல்லை. என்னேரமும் பூட்டு இல்லாமல் கதவு சார்த்தியே இருக்கும். ஒரு நாள் சாயந்திரம் வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த எல்லா பெட்டிகளும் திறந்திருந்தன. துணிகள் புத்தகங்கள் அறையெங்கும் வீசி எறியப்பட்டிருந்தன. திருடனுக்கு உபயோகமாக எதுவும் கிடைக்கவில்லை. எங்களுக்கும் எதுவும் திருட்டுப் போகவில்லை. ஆனால் திருட்டுப் பயம் என்னவோ சுற்றியிருந்தவர்களுக்கு இருந்தது.

அது மற்றவர்களுக்குத் தான். “இனி நம்ம வூட்டுக்கு ஒரு திருடன் வரமாட்டான் பாத்துக்க. இங்கே ஒரு மண்ணும் கிடைக்காதுன்னு செய்தி போயிருக்கும் அந்த வட்டாரம் முழுதுக்கும்” என்று அறி நண்பர் திருநெல்வேலிக்காரர் ஜோக் அடித்தார். ஜோக் இல்லை அது உண்மையும் கூட. ஆனால் கிலி என்னமோ அக்கம் பக்கத்தில் மற்றவர்களுக்கு தொடர்ந்து இருந்து கொண்டிருந்தது. ஒரு நாள் இரவு நாங்கள் தூக்கக்த்தில் இருந்த போது, “சோர் சோர்” என்ற கூச்சல் கேட்டு எல்லோரும் திடுக்கிட்டு விழித்து எழுந்து பார்த்தால், பள்ளத்தில் விழுந்த ஒருவனைப் பிடித்திழுத்து அடிப்பது தெரிந்தது. உடனே எல்லோரும் அங்கு குவிந்து தாங்களும் சேர்ந்து ஆளாளுக்கு அவனை மொத்த ஆரம்பித் தார்கள்.”மாரோ சாலே கோ, மாரோ” என்ற கூச்சல். அடிபடு கிறவன் அடியும் பட்டுக்கொள்கிறான். பலஹீனமாக அலறவும் செய்தான். அடித்துக்கொண்டே அவனைப் பிடித்து இழுத்து வந்தார்கள். கடைசியில் பார்த்தால் அவன் திருடனும் இல்லை. குடித்துவிட்டு தள்ளாடித் தள்ளாடி வந்தவன் பள்ளத்தில் விழுந்து விட்டான். யாருக்கும் கொஞ்சம் கூட வருத்தம் இல்லை. அநியாயமாக ஒரு குடித்துத் தள்ளாடிக்கொண்டிருந்த அப்பாவியை அடித்து விட்டோமே என்று. கொஞ்ச நாளா திருட்டு பயம் ஆகையினால் தான் இருட்டில் வந்தவனை சந்தேகத்தில் அடித்து விட்டோம் என்று, “இனி நீ இந்தப் பக்கம் வராதே” என்று பயமுறுத்தி அனுப்பிவிட்டார்கள் எவனையாவது நம்மாள் . ஒருத்தன் மொத்துகிறான் என்றால் எல்லோரும் சேர்ந்து அவனை மொத்த வேண்டும். என்ன ஏது என்று விசாரித்துக் கொண் டிருப்பதெல்லாம் அனாவசியம்.. பஞ்சாபிகளிடம் காணப்பட்ட இந்த சமூக கட்டுப் பாட்டு உணர்வு என்னை ஆச்சரியப்பட வைத்தது. இதில் நியாயம் பற்றிய விசாரணையெல்லாம் பிறகு தான் அவசியப் பட்டால் வைத்துக்கொள்ளலாம் இப்போது நம் முன் இருக்கும் அவசியமான முதல் பணி மொத்துவது.. அலுவலகத்தில், என்னுடைய வாதங்களையெல்லாம் ஒரே அடியாக, “போடா போ பெரிசா வந்துட்டான் இங்கிலிஷ்காரன் பெத்தவன் மாதிரி” என்ற ஒரு வார்த்தையில் என் வாதங்கள் ஒன்றுமில்லாமல், அவனுக்கு வெற்றி வாகை சூட்டியது நினைவுக்கு வந்தது. அவர்களின் கொம்மாளத்தில் நானும் சிரித்துக் கலந்து கொண்டேன் என்பது வேறு விஷயம்.

ஆனால் இந்த திருட்டு என்பது ஒரிசாவில் இருந்த ஆரம்ப வருஷங்களில் நாங்கள் கேள்விப்படாத ஒன்று. பழங்குடிகள். சூது வாது தெரியாதவர்கள். முன்னேயே சொல்லியிருக்கிறேனோ என்னவோ, தெருவில் காய்கறி விற்கும் ஸ்திரீகள் கூட “இப்போ சில்லரை இல்லாவிட்டால் பரவாயில்லை அப்புறம் வரும்போது கொடுங்கள்” என்று சொல்லும் பண்பாட்டினர். நம்மைப் பார்த்துப் பழக்கம் என்றில்லை. சக மனிதரிடம் அத்தனை நம்பிக்கை. எப்போதாவது எங்கள் திருட்டுப் போகும். திருட்டுப் போவது ஏதாவது சில்லரையாகத் தான் இருக்கும். எட்டணா பத்தணா என்று. தனக்கு அப்போதைய தேவை என்னவோ அவ்வளவே எடுத்துப் போகும் குணம். மற்றப் பணம் எல்லாம் எவ்வளவாக இருந்தாலும் அப்படியே இருக்கும். நிறைய நிலம் இருக்கும். ஆனால் காசு வேணும் என்பதற்காக அலுவலகத்தில் பியூன் வேலைக்கு வந்து சேர்பவரகளை நான் அங்கு கண்டிருக்கிறேன். நமக்கு வேலையாளாக வந்து சேர்கிறவன் நம்மைவிட சொத்து அதிகம் உள்ளவனாக இருப்பான். நாம் இடைவேளையில் இட்லி, தோசை வடை என்று அலைவோம். அவர்களோ வெறும் பொரியைத் தான் கொரித்துக்கொண்டிருப்பார்கள். எவ்வளவு எளிய வாழ்க்கை. எவ்வளவு உயரிய பண்புகள் என்று வியக்கத் தோணும். “இன்னும் அவன் இங்கிலீஷ் கத்துக்கலையில்லையா, படிப்பறிவில்லாத சனங்கள். இன்னும் நாகரீகம் அவர்களை வந்தடையவில்லை. கொஞ்சம் இங்கிலீஷ் படித்து அவனுக்கு நாகரீகம் வந்துடட்டும். பின்னே பார் கூத்தை.” என்பார் சீனிவாசன் என்ற என் அக்காலத்திய நண்பர்.

இதற்கும் தமிழ் நாட்டில் கட்சிகளின் செயல்பாட்டிற்கும் அதிக வித்தியாசம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. தலைவர் சொன்னால் சர்த்தான் என்பது தாரக மந்திரம். வந்து விழும் வசைகள் தான் வித்தியாசப்படும் கட்சிக்குக் கட்சி. கம்யூனிஸ்ட் கட்சியானால் அது சிஐஏ ஏஜெண்ட் என்றிருக்கும். கழகங்கள் ஆனால், “பார்ப்பனத் திமிர்” என்று வசைகள் வந்து விழும்

அதே சமயம் தனி ஒருவனாக ஒருவன் ஒரு கஷ்டத்தில் இருக்கிறான் என்றால் அவனுக்கு உதவுவதும் இந்த பஞ்சாபிகள் தான்.அவர்கள் திருக்குறள் படித்தவரகள் இல்லை. அவர்கள் பஸ்களில் திருக்குறள் எழுதப்பட்டிராது தான். திருக்குறள் என்றால் என்னவென்றே தெரியாத மக்கள் அவர்கள். ஹிராகுட் போன காலத்தில் யார் வீட்டுக்குப் போனாலும், தெரிந்தவர்கள் என்று இல்லை. யாரானாலும், “க்யா பீயோகே, லஸ்ஸி(கெட்டியாகக் கரைத்த இனிப்பு மோர்) யா தூத்(பால்)” என்று உபசரிப்பார்கள். இரண்டு மூன்று வருடங்கள் கழித்தி டீஅங்கு அறிமுகமான பின் “டீ சாப்பிடறயா என்று தான் கேட்பார்க> சாப்பிடும் நேரமாக இருந்தால் நாமும் அவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டே ஆகவேண்டும். கொஞ்சம் அப்படி திண்ணியிலே உட்கார்ந்திருக்கேங்களா, . சாப்பிட்டு வந்துடறேன்” என்று ஒரு நாளும் அவர்கள் சொல்ல மாட்டார்கள். இது நமக்கே உரிய, நம் முத்திரை தாங்கிய பண்பாடு. நாமெல்லாம் திருக்குறளில் விருந்தோம்பல் பல உரைகளில் படித்தவர்கள். பரிமேலழக ரிலிருந்து மு.வ. உரை வரை..

.

Series Navigation