2008-ம் ஆண்டுக்கான சங்கீத நாடக் அகாடமி விருது பெறும் செ. ராமானுஜம்

This entry is part [part not set] of 21 in the series 20090122_Issue

வெங்கட் சாமிநாதன்



2008-ம் ஆண்டுக்கான சங்கீத நாடக் அகாடமி விருது பெறும் செ. ராமானுஜம்

மத்திய சங்கீத நாடக் அகாடமி சங்கீதம், நாடகம், போன்ற கலைத் துறைகளில் சிறப்பான பங்களித்துள்ள கலைஞர்களுக்கு ஒவ்வொரு வருடமும் விருது அளித்து கௌரவித்து வருகிறது. நாடகத்துறைக்கான 2008-ம் ஆண்டுக்கான விருது பெறுபவர் செ. ராமானுஜம்.
73 வயதாகும் ராமானுஜம் 1935-ல் பிறந்தவர். அவர் அறுபதுகளில் புது தில்லியில் உள்ள National School of Drama வில் இப்ராஹீம் அல்காஷியின் கீழ் நாடகம் பயின்றவர். அவர் கல்வி பயின்றது குழந்தைகள் நாடகத் தயாரிப்புக்கு.

பயிற்சி முடிந்ததும் சென்னையில் உள்ள பிரபல நாடக சபாக்களின் அழைப்பை ஏற்காது தான் முன்னர் பணி செய்துகொண்டிருந்த காந்தி கிராம திறந்த பல்கலைக் கழகத்திலேயே திரும்ப பணியில் சேர்ந்து நாடகப் பணிகளில் ஈடுபட்டார். அப்போது தான் காந்தி கிராமத்திலேயே, National School of Drama வோடு இணைந்து அதன் ஆதரவில் 1977 அல்லது 1978-ல் நடந்த நாடகப் பயிற்சிப் பட்டறைக்கு பொறுப்பேற்றார். அந்த பட்டறையிலிருந்து வெளிவந்தவர்கள்தான் பின்னர் தமிழ் நாட்டில் புதிய நாடக முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்கள் அனைவரும். பின்னர் திருச்சூரில் ஜி.சங்கர குரூப்பினால் தொடங்கப்பட்ட நாடகப் பள்ளியில் ஆசிரியர் ஆனார். அப்போது அவர் சங்கர குரூப்பின் பல நாடகங்களை மலையாளத்திலும், தமிழிலும் மேடையேற்றியிருக்கிறார். அப்போது அவரிடம் பயின்ற மாணவர்கள் இன்று மலையாள நாடகத் துறையில் சாதனை நிகழ்த்தியுள்ளவர்கள், ராமானுஜத்தை இன்றும் தம் குருவாக பாவிப்பவர்கள்.

பின்னர் தஞ்சாவுரில் தொடங்கப்பட்ட தமிழ் பல்கலைக் கழகத்தில் நாடகத் துறைக்குப் பேராசிரியரானார். இப்பல்கலைக்கழகம் ஒரு Post-graduate research institution. ராமானுஜம் இக்காலங்களில் தமிழ் நாட்டிலும் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் காணப்படும் கிராமிய, மரபார்ந்த நாட்டிய, நாடக வடிவங்களை பல்கலைக்கழகத்திற்கு அறிமுகப்படுத்தி அது பற்றிய கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து அவற்றில் அக்கலைஞர்களையும் பங்கேற்கச் செய்தார். தமிழ் நாட்டில் ஒரு பல்கலைக் கழகம் இத்துறையில் பார்வை செலுத்தி பணியாற்றியது இதுவே முதல் முயற்சியாகும். குறிப்பாக, தேவராட்டம், தப்பாட்டம் போன்றவை இப்போது பிரபலமடைந்துள்ளது மட்டுமல்லாமல், சிலர் தம் நாடக முயற்சிகளில் பலர் இவற்றை புதுமைக்காக பயன்படுத்தியுமுள்ளனர்.

அவர் யூரிபிடிஸின் Trogen Women-ஐ தமிழில் வெறியாட்டம் என்ற பெயரில் மேடையேற்றியது தமிழ் நாடக மேடை யேற்றத்தில் ஒரு மைல்கல் என்றும் அதன் புது அத்தியாயத் தொடக்கம் என்றும் சொல்லவேண்டும். தமிழ் நாட்டின் வழங்கும் ஒப்பாரி வடிவில் அந்நாடகத்தை தமிழ் படுத்தி மிக எளிய ஆனால் மிக effective ஆன வடிவில் மேடையேற்றினார்.

அதன் பிறகு அவர் பல ஸ்தாபனங்களுக்காக அநேக நாடகங்களை, மலையாள, ஐரோப்பிய மொழிகளிலிருந்து மொழிபெயர்த்தும், முத்துசாமி, இந்திரா பார்த்த சாரதி நாடகங்களையும், தான் எழுதிய நாடகங்களையும் அவர் மேடையேற்றியுள்ளார். இவை தில்லி தேசீய நாடகப் பள்ளியின் நாடகப் பட்டறைகளுக்காகவும், புதுச் சேரி சங்கரதாஸ் நாடகப் பள்ளிக்காகவும், சென்னையில் உள்ள தூதரகங்களின் ஆதரவிலும், ந.முத்துசாமியின் கூத்துப் பட்டறைக்காகவும் பயிற்சி கொடுத்து மேடையேற்றியவை. இது காறும் அவர் மேடையேற்றியவை நாற்பதுக்கும் மேலிருக்கும். The most important aspect about his handling of any play and his approach to its stage production is that he never repeated himself in any of them. Each play demanded a different style of production and acting techniques and he evolved that style himself. That is his most important contribution to Tamil theatre and it is his signal achievement, not to be seen in any one else in contemporary Tamil theatre.

இது காறும் தமிழ் நாடு அரசோ, அதன் நாடகத் துறை வளாகங்களோ, அல்லது தில்லியின் அரசின் கலாச்சார ஸ்தாபனங்களோ ராமானுஜத்திற்கு எந்த பட்டமோ விருதோ அங்கீகாரமோ தந்ததில்லை. கேரள நாடக உலகம் அவரை பெரிது கௌரவித்துள்ளது. அவருக்கு குரு ஸ்தானம் கொடுத்துள்ளது. மத்திய அரசின் சங்கீத நாடக் அகாடமி ராமானுஜத்தின் பங்களிப்பை அங்கீகரித்து கௌரவிப்பது இதுவே முதல் முறை.

ஆனால், தேசீய நாடகப் பள்ளியின் பல காரியங்களுக்கு ஆலோசகராக அவர் இருந்துள்ளார்.

ராமானுஜத்தின் நாடக மேடையேற்றங்களில் மிக முக்கியமானவை, என்று வெறியாட்டம் (Trogen women of Euripides) அண்டோரா (of Max Frish) பின் அவரே எழுதியுள்ள செம்பவளக் காளி என்பவற்றைச் சொல்ல வேண்டும். மறந்து விட்டேன். நிரபராதிகளின் காலம் என்னும் ஜெர்மானிய நாடகத்தின் தமிழாக்கத்தியும் சொல்லவேண்டும்.

சமீப வருடங்களில் அவர் திருக்குறுங்குடி (நம்மாழ்வார் பிறந்த ஊர்) யில் வெகுகாலமாக தடை பட்டிருந்த கைசிகி நாடகத்திற்கு அவர் புத்துயிர் தந்துள்ளார். இந்த நாடகம் ஒரு குறிப்பிட்ட நாளில் கோவிலுக்குள் கோவில் தாசிகளால் நடிக்கப்பட்டு வந்தது.) அது ஒரு காலத்தில். பின் அதன் இன்றைய மறைவிற்கு முன் அது வெற்று சடங்காக, பாட்டும் நடனமும் அற்று, வெற்று வாசிப்பாக சீரழிந்தது. ராமானுஜம் பழைய சுவடிகளைத் தேடி, ஆடிவந்த பழைய தாசிகளை அண்டி, பழைய நாடக வடிவம் என்னவாக இருந்திருக்கும் என்று ஒருவாறாக கணித்து மேடையேற்றி வருகிறார். ஒவ்வொரு வருஷமும் மேடையேற்றத்தில் இது திருத்தப்பட்டு வருகிறது.

ராமானுஜத்தின் நாடகங்களும், கட்டுரைகளும், பேச்சுக்களும் புத்தகங்களாக வந்துள்ளன. செ.ராமானுஜம் நாடகங்கள், செ.ராமானுஜம் நாடகக் கட்டுரைகள் என்று. இவை தவிர அவருடைய ஒரு புத்தகம் நாடகப் பயிற்சி முறையைப் பற்றி விரிவாகப் பேசும் பெரிய புத்தகமாகும்.

முடிவாக, ராமானுஜத்தின் நாடகப் பங்களிப்பு பற்றி மூன்று முக்கிய விஷயங்கள்: தமிழில் புதிய நாடக மேடையேற்றம் என்பது அவருடைய வெறியாட்டம் என்ற நாடகத்தோடு தொடங்குகிறது. பின் அவரது ஒவ்வொரு மேடையேற்றமும் ஒவ்வொரு வித்தியாசமான பாணியில், கையாளலில் தரப்படுகிறது. தமிழ் நாடகத்தின் இன்றைய முயற்சிகளிடையே, ராமானுஜத்தின் ஆளுமை நடுநாயகமானதும், உத்வேகம் தரும் ஒன்றாகவும்(pivotal and inspirational) இருந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள தமிழ் அன்பர்களின் விளக்கு பரிசு அவருக்கு 2004லோ 2005லோ தரப்பட்டது. ராமானுஜம் முதலில் நாடகப் பேராசிரியராக பணியாற்றிய திருச்சூர் நாடகப் பள்ளியின் ஸ்தாபகரும் நாடகாசிரியருமான ஜி. சங்கரப்பிள்ளையின் பெயரில் வழங்கப்படும் சங்கரப் பிள்ளை விருது இன்று வரை இருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அந்த இருவர் செ.ராமானுஜமும், கபிலா வாத்ஸ்யாயனும் ஆவர். கபிலா வாத்ஸ்யாயன் பல கலைகளில் ஆழ்ந்த அறிஞர். அவற்றில் ஒரு ஒருங்கிணந்த பார்வையும் தத்துவார்த்த நோக்கும் கொண்டவர். ஒரு தாகூரைப் போல. ஆனந்த குமாரஸ்வாமி போல. தனக்கும் கபிலா வாத்ஸ்யாயனுக்கும் மாத்திரமே இதுகாறும் வழங்கப்பட்டுள்ள ஜி.சங்கரப்பிள்ளை விருது தன்க்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய கௌரவம் என ராமானுஜம் மிக மனமகிழ்வுடன் சொல்லுகிறார். 40 வருடங்களுக்கும் மேலாக இடைவிடாது, பிரதி பலன் பாராது தொடர்ந்து பணியாற்றி வருகிறார் ராமானுஜம்.


Series Navigation