கொலையும் செய்யலாம் பத்தினி!!!

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

லக்கிலுக்



“உங்கள் மகன் நிறைய பாவங்களை செய்திருந்தார். அவர் பாவங்களைப் போக்கவே அவரை அக்னியில் குளிப்பாட்டினேன். அவரை குளிப்பாட்டிய பாவத்துக்காக இப்போது சிறையில் வாடுகிறேன்” – பஞ்சாபி மொழியில் எழுதப்பட்ட இந்த கடிதம் ஒரு வயதுமுதிர்ந்த தாய்க்கு அவரது மருமகள் 18 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது.

கிரண்ஜித்துக்கு அப்போது பருவம் பூத்து குலுங்கிய பதினாறு வயது. பெற்றோர் இல்லாத பெண் என்பதால் சகோதரர்களுக்கு ரொம்பவும் செல்லம். தங்கள் தங்கையை பெரிய இடத்தில் மணமுடித்து கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். லண்டனில் வசித்த பஞ்சாபியான தீபக் அலுவாலியாவுக்கு கிரண்ஜித்தை மணமுடித்தார்கள்.

அயல்நாட்டில் தொடங்கிய மணவாழ்க்கை கிரண்ஜித்துக்கு அதிர்ச்சியாகவே தொடங்கியது. தீபக் ஒரு சைக்கோவைப் போல கிரண்ஜித்திடம் நடந்துகொள்ள தொடங்கினார். மிளகாயை பச்சையாக கடித்து திங்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. எட்டி உதைப்பார். முகத்தில் குத்துவார். பெல்ட்டால் விளாசுவார். ஷூவால் அறைவார். சூடான இஸ்திரி பெட்டியை வைத்து முதுகில் தேய்ப்பார். இரவானால் பாலியல் வண்புணர்வு. வகை தொகையில்லாத எண்ணற்ற சித்திரவதைகளை அனுபவிக்கத் தொடங்கினார் கிரண். சித்திரவதைகளுக்கு இடையிலும் இரு மகன்களை பெற்றெடுத்தார்.

சித்திரவதை தாங்காமல் தாய்வீட்டுக்கு சென்றார் கிரண். இந்தியப் பண்பாட்டில் ஊறிய குடும்பம் ஆயிற்றே? கல்லானாலும் கணவன். புல்லானாலும் புருஷன். கொஞ்சம் சகித்துக் கொண்டு குடும்பம் நடத்து என்று மீண்டும் கணவனிடமே திருப்பி அனுப்பினார்கள். வீட்டை விட்டு ஓடிப் பார்த்தார். கண்டுபிடித்து திரும்பவும் கூட்டி வந்தார்கள். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தீபக்கின் சித்திரவதை விதம் விதமாக தொடர்ந்து கொண்டிருந்தது.

தன் வாழ்க்கை பாழானதை நினைத்து கண்ணீர் வடித்த கிரணுக்கு இரவுகள் தூக்கமில்லாமல் கழிந்துகொண்டிருந்தது. கிரணின் வாழ்க்கையில் விதி விளையாடிய இரவு அது. வழக்கம்போல வெகுநேரம் கழித்து குடித்துவிட்டு வந்த தீபக் எதுவும் பேசாமல் படுக்கையில் படுத்தார். தூங்கிக் கொண்டிருந்த கணவனின் கொடூர முகத்தை கண்ட கிரணுக்கு வெறுப்பு படரத் தொடங்கியது. வீட்டு உபயோகத்துக்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தீபக் மீது ஊற்றி தீக்குச்சியை கிழித்து பற்றவைத்தார். துடிதுடித்து மரணித்த தீபக்கை கண்டதுமே, திருமணமான பத்து ஆண்டுகளில் சிரிக்க மறந்திருந்த கிரண் பைத்தியம் போல சிரிக்க ஆரம்பித்தார்.

1989ல் நடந்த இந்த கொலைக்காக லண்டன் போலிசாரால் கைது செய்யப்பட்டார் கிரண். கொலை வழக்கு தொடரப்பட்டது. இயல்பிலேயே மென்மையான குணம் கொண்டவராக இருந்த கிரண் சிறையில் தன் மன உறுதியை வளர்த்துக் கொண்டார். அழகியல் சம்பந்தமான படிப்பினை படிக்கத் தொடங்கினார். கிரணின் பரிதாப நிலையை கண்ட ஆசிய பெண்கள் உரிமைகளுக்காக போராடும் அமைப்பு ஒன்று அவரது வழக்கினை எடுத்து நடத்தத் தொடங்கியது. கிரண் தரப்பு நியாயங்களை உணர்ந்த நீதிமன்றமும் தற்காப்புக்காகவே அவர் அந்த முடிவை எடுக்க நேர்ந்தது என்று கூறி 1992ல் விடுதலையும் செய்தது. குடும்ப வன்முறைக்கு சாவுமணி அடித்த தீர்ப்பல்லவா அது? வரலாற்று சிறப்புமிக்க அந்த தீர்ப்பு இன்றளவும் உலகம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், சித்திரவதைகளையும் “சர்க்கிள் ஆப் லைட்” என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் கிரண். இப்புத்தகத்தை தழுவி சமீபத்தில் “ப்ரவோக்ட்” என்ற பெயரில் ஐஸ்வர்யா ராய் நடித்த ஆங்கிலத் திரைப்படம் ஒன்றும் திரைக்கு வந்தது.

இன்றும் கூட இதுபோன்ற குடும்ப வன்முறைகள் இந்தியப் பெண்கள் மீது பாய்ந்துக் கொண்டிருப்பதை நாம் தினம் தினம் செய்தித்தாள்களில் காணலாம். கணவன், தந்தை, அண்ணன், உறவினர்கள் என்று பலரால் ஏதோ ஒரு முறையில் உளவியல் ரீதியாகவோ, உடல்ரீதியாகவோ வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு அவதிப்படும் பெண்கள் பற்றிய பரிதாப நிலையினை நம் சமுதாயத்தில் உணரமுடிகிறது.

கிரணுக்கு சம்பவித்தது போன்ற சித்திரவதைகள் எந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஏற்படலாம். அதுபோன்ற சூழ்நிலையில் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது செய்து, வாழ்க்கையை தொலைப்பதை விட எளிய வழிகளில் பிரச்சினையைக் கையாளலாம். அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால்….

– உதவி கேளுங்கள். உங்கள் குடும்பத்தினரிடமோ அல்லது உங்கள் கணவரின் குடும்பத்தினரிடமோ, அக்கம்பக்கத்தவரிடமோ உங்கள் நிலையை மனம் விட்டு பேசுங்கள். உங்கள் பிரச்சினைக்கு எந்தவகையிலாவது உதவவேண்டும் என்று கவுரவம் பார்க்காமல் சொல்லிவிடுங்கள். மனம் விட்டு பேசுவதாலேயே பாதி பிரச்சினைகள் குறைந்துவிடும் என்று உளவியலாளர்கள் சொல்லுகிறார்கள்.

– உங்கள் கணவரை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். ஆணாதிக்க (Sadist) மனப்பான்மை கொண்டவர்கள் ஏதோ ஒரு மனநோயால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். முறையான சிகிச்சை மற்றும் ஆலோசனை நிச்சயம் அவர்களை மாற்றும்.

– மனநல சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் ஒரேநாளில் பலன் தரும் என்று எதிர்பார்க்காதீர்கள். கொஞ்ச கொஞ்சமாகவே அவர்கள் மாறிவிடுவார்கள். அதுவரை உங்களுக்கு பொறுமை அவசியம்.

– எனினும் நிலைமை கையை மீறிவிட்டதாக உணர்ந்தீர்களேயானால், அருகில் இருக்கும் காவல் நிலையத்தின் உதவியை நாடுங்கள். மகளிருக்கென பிரத்யேக மகளிர் காவல் நிலையங்கள் ஏராளமாக இருக்கிறது.

– இந்த வழிமுறைகள் எதுவுமே உங்களுக்கு ஒத்துவரவில்லையென்றால் நல்ல வழக்கறிஞரை பார்த்து விவாகரத்துக்கு விண்ணப்பிப்பது தான் ஒரே வழி. வழக்கறிஞர் மூலமாக தகுந்த ஆலோசனைகளையும் பெறலாம்.

பாவப்பட்ட கிரண்ஜித் அலுவாலியா இந்த எல்லா வழிமுறைகளையுமே முயற்சித்து பார்த்து தோல்வியடைந்தார். சொந்த குடும்பத்திலும் அவருக்கு உதவி கிடைக்கவில்லை. கணவர் குடும்பத்திலும் அவருக்கு உதவி கிடைக்கவில்லை. “என் கணவரின் வன்முறையை தடுக்க எனக்கு வேறு வழியே தெரியவில்லை. அவரை கொல்லவேண்டும் என்று நான் நினைத்ததே இல்லை. ஆயினும் அவரது வன்முறையையும், சித்திரவதைகளையும் தடுக்க நினைத்தேன்” என்கிறார் கிரண்.

2001ம் ஆண்டு கிரண்ஜித்துக்கு குடும்ப வன்முறைகளுக்கு எதிராக போராடும் பெண்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது வழங்கப்பட்டது. இங்கிலாந்து பிரதமரின் மனைவி கையால் இந்த விருதினை வாங்கினார் கிரண்ஜித்.

சிறை வாழ்க்கைக்கு பிறகு கிரண் தன் மகன்களை நல்லவிதமாக வளர்ப்பதில் கவனம் செலுத்த தொடங்கினார். சமூகசேவை மற்றும் போராட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார். பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்து வருகிறார். வாழ்வாதாரத்துக்காக பணிக்கும் சென்றுகொண்டிருக்கிறார். மூத்த மகன் ரஞ்சித், இளையமகன் சஞ்சய் இருவரும் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள். ஐம்பது வயதை கடந்த அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் இப்போது தான் உண்மையாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

“கணவனால் வஞ்சிக்கப்படும் பெண்கள் வலுவில்லாதவர்கள் என்பதை பொய்ப்பிக்க விரும்பினேன். பெண்களும் கடின உழைப்பாளிகள் தான். வலுவானவர்கள் தான். பெண்களால் எதையும் செய்யமுடியும். ஆண்கள் இல்லாமலேயே வாழ்ந்து காட்டமுடியும் என்பதற்கு என் வாழ்க்கையாவது உதாரணமாக இருக்கட்டும்” என்கிறார் கிரண்ஜித் அலுவாலியா.


luckylook32@gmail.com

Series Navigation

லக்கிலுக்

லக்கிலுக்