“கிளை தாவி வரும் மின்னல்”

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

உஷாதீபன்


விரட்டி விடுவேனோ என்ற

அச்சம்

பார்வையில் படபடக்க-வால்

உதறி உதறிப்

பருக்கைகளைப்

பொறுக்குகிறது அது!

ஓடி விடுமோ என்ற ஐயம்

என்னுள் ஊற்றெடுக்க

தயக்கமாய் ஒதுங்கிச்

சிலையாய்ச் சமைகிறேன் நான்

என்னின்

சிறு அசைவும்

அதன் நிம்மதியைக் குலைக்கும்

உணவுக்காக – இந்தப்

போராட்டம் நிகழலாமா?

அணிலே, பயப்படாதே!

உன்னை

இன்று காலையில்

பார்க்கலாம் என்ற நினைப்பில்தான்

நேற்றிரவு

படுக்கைக்குப் போனேன் நான்!

இரவு முழுக்க

உன் நினைப்பில்தான்

பொழுதை

உதைத்து விரட்டினேன்!

என்னைப் போலத்தான்

நீயும்

இருந்திருக்க வேண்டும்!

இல்லையென்றால்

புலர் காலையில்

கணம் தப்பாமல்

கிளை தாவி இப்படி

ஓடி வருவாயா?

பருக்கையையாய்ப் பிரித்து

பரவலாய்த் தூவியுள்ளேன்

பரபரப்பின்றி பக்குவமாய்ப் பசி போக்கு !

உனக்கு நான்

எனக்கு நீ

பரஸ்பர நேயத்தில்தான்

வாழ்க்கையே நகர்கிறது!!

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்