‘‘வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்’’

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.


முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E.Mail. Malar.sethu@gmail.com
தமிழ்த்தாய்க்குத் தொண்டாற்றிய தலைமக்கள் பலர் தமிழுலகில் காணப்படுகின்றனர். அவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆவார். கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் இணைத்து ஆய்வு செய்து இலக்கிய வரலாறு, நாட்டு வரலாறு, சமுதாய வரலாறு ஆகியவற்றை எழுதியவர் பண்டாரத்தார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு வடக்கே மண்ணியாற்றின் வடகரையில் அமைந்துள்ள திருப்புறம்பயம் எனும் ஊரில் 1892-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் நாள் அன்று வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும், மீனாட்சியம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். அதனால்தான் அவரது பெயருக்கு முன்னர் திருப்புறம்பயம் வைத்தியலிங்கப் பண்டாரத்தார் மகன் சதாசிவப் பண்டாரத்தார் என்பதைச் சுருக்கியே தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் என வைத்துக் கொண்டார்.
இவர் தமது பள்ளிப் படிப்பை திருப்புறம்பயத்தில் தொடங்கி பின்னர் புளியஞ்சேரி உயர்தர தொடக்கப்பள்ளியிலும் நான்காம் படிவத்தினை கும்பகோணம்(குடந்தை) உயர்நிலைப் பள்ளியிலும் பயின்று 1910-ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தார். நற்றிணைக்கு உரை கண்ட பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் தஞ்சை வலம்புரி அ. பாலசுப்பிரமணியபிள்ளை ஆகியோரிடம் தமிழ் கற்றார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் கல்வெட்டுக்களின் வரலாறு பற்றியும், அவற்றை ஆராய்வதன் பயன்களைப் பற்றியும் வகுப்புகளில் அடிக்கடி கூறி வந்ததைக் கேட்டதே சதாசிவ பண்டாரத்தாரை கல்வெட்டாராய்ச்சியில் ஈடுபாடுகொள்ளச் செய்தது. அதனால் இவர் தமது ஈடுபாட்டிற்குக் காரணமான இந்த ஆசிரியரை தமது இறுதிக் காலம்வரை நன்றியோடு நினைவு கூர்ந்து வந்தார்.
பண்டாரத்தார் அவர;கள் பள்ளியில் பயின்றபோது வரலாற்றறிஞர் து.அ.கோபிநாதராயர் எழுதிய சோழவம்ச சரித்திரச்சுருக்கம் என்ற நூலைக் கண்ணுற்றுப் படிக்கும் வாய்ப்பிணைப் பெற்றார். அந்த நூலைப் பயின்றபோது சோழர் வரலாற்றை விரித்தெழுத வேண்டும் என்ற எண்ணம் இவர் மனத்தில் ஏற்பட்டது. தமது தொடக்க கால கல்வெட்டு ஆராய்ச்சியில் இவர் தெளிவு பெறுவதற்கு அந்தச் சோழவம்ச சரித்திரச் சுருக்கம் இவருக்குப் பெரிதும் உதவியாய் இருந்தது எனலாம்.
1914-ல் பண்டாரத்தார் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள குறுக்கை என்ற ஊரைச் சேர்ந்த ஆத்மலிங்கராயரின் மகள் தையல்முத்து அம்மையாரை மணந்தார். திருமணம் நடந்த பின்னர் வாழ்க்கைக்கு ஒரு வேலை தேட வேண்டும் என்ற நிலை பண்டாரத்தார் அவர்களுக்கு ஏற்பட்டது. இவரது நண்பர் ஒருவர் திருச்சியில் இருந்த ந.மு.வேங்கடசாமி நாட்டாரைச் சென்று காணுமாறு கூறவே, பண்டாரத்தார் நாட்டார் அவர்களைச் சென்று சந்தித்தார்.
நாட்டாரவர்கள் அறிஞர் பண்டாரத்தார் செந்தமிழ் இதழில் எழுதிய கட்டுரைகளைப் படித்து இன்புற்றவர் அதனால் அவருடைய பிறந்த நாட்குறிப்பினைப் பார்த்து பண்டாரத்தாருக்குத் தமிழால்தான் வாழ்க்கைச் சிறப்புறும் என்றும், தற்காலிகமாக ஓர் அலுவலைப் பார்க்கலாம் என்றும் கூறித் தஞ்சையில் உள்ள கரந்தைத் தமிழ்ச்சங்கத் தலைவர் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை அவர்களுக்குக் கடிதம் தர அதனைக் கொண்டுவந்து உமாமகேசுவரம் பிள்ளையிடம் காண்பித்து அவரது நட்பினைப் பெற்றார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில், ‘‘கல்லாடமும் அதன் காலமும்’’ என்ற தலைப்பில் பண்டாரத்தார் உரையாற்றினார். இவ்வுரை அறிஞரிடையே பண்டாரத்தாருக்குப் பெரும்புகழை ஈட்டித் தந்தது.
அறிஞர் பண்டாரத்தார் முதன் முதலாகத் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகததில் எழுத்தராக ஒன்றரை ஆண்டுகாலம் பணியாற்றினார். பின்னர் குடந்தை நகர உயர்நிலைப்பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்த இவரது ஆசிரியர் வலம்புரி பால சுப்பிரமணியப்பிள்ளை பிடுமுறையில் இருந்தபோது அப்பள்ளியில் ஒருமாத காலம் தலைமைத் தமிழாசிரியராகவும் 1917முதல் 1942-ஆம் ஆண்டு வரையில் 25 ஆண்டுகாலம் குடந்தையிலுள்ள வாணதுறை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகவும் தலைமைத் தமிழாசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
பண்டாரத்தார் அவர்கள் குடந்தையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்பொழுது 1921 -ஆம் ஆண்டில் அவரது மனைவியார் காலமானார். எனவே 1922 -ஆம் ஆண்டில் எலத்தூரில் வாழ்ந்த சைவப்பெரியார் சதாசிவக் குருக்கள் என்பவரது மகளார் சின்னம்மாள் என்பவரை இரண்டாம் திருமணம செய்து கொண்டார். அதன் பின்னரே இவரது வாழ்க்கை செழிப்படைந்தது. குடந்தையில் அவர் இருந்தபோது அவரது ஆய்விற்குக் குடந்தை அசினர் கல்லூரி நூலகம் பெரிதும் பயன்பட்டது. தமக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள பல ஊர்களுக்கும் சென்று கோயில்களிலுள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து வந்து ஆய்வு செய்;து அந்த ஆய்வில் கண்ட முடிவுகளை அவ்வப்போது இதழ்களில் எழுதிவரும் பணியை அவர் மேற்கொண்டார். 1914-ஆம் ஆண்டில் செந்தமிழில் இவரெழுதிய ‘சோழன் கரிகாலன்’ என்னும் கட்டுரையே இவரது முதல் கட்டுரையாகும். ஆரம்பத்தில் செந்தமிழ் இதழில் எழுதத் தொடங்கிய அறிஞர் பண்டாரத்தார் தொடர்ந்து தமிழ்ப்பொழில் செந்தமிழ்ச்செல்வி ஆகிய இலக்கிய இதழ்களில் இடைவிடாது கட்டுரைகள் எழுதிவந்தார்.
தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளையவர்கள் பண்டாரத்தார் அவர்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதித் தமிழ்ப்பொழிலுக்குக் கட்டுரை எழுதுமாறு கூறி, பண்டாரத்தாரின் எழுத்துப் பணிக்குத் தூண்டுகோலாக விளங்கினார். அதனால்தான் தம்மை ஆதரித்த உமாமகேசுவரம் பிள்ளையவர்கள் காலமானபோது,
‘‘ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானகத்தே யிருப்போ ரெல்லாம்
சாவாத புலவரெனச் சார்ந்தனையோ மற்றவர்க்குத் தமிழன்பு உண்டோ
ஓவாது பணிபுரிந்தாய் உமாமகே சுவரப்பேர் உற்றார் நின்னை
ஆவாவின் நிழந்தனமால் ஐயகோ விக்கொடுமை அறையற் பாற்றோ?’’
என்று இரங்கற்பா பாடி அறிஞர் பண்டாரத்தார் ஏங்கித் தவித்தார்.
கும்பகோணத்தில் அறிஞர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது 1933 முதல்; 1938 வரை யதார்த்த வசனி என்ற இதழின் துணை ஆசிரியராக இருந்து எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவர் தமது ஆசிரியர் வலம்புரி பாலசுப்பிரமணியபிள்ளையுடன் சேர்ந்து எழுதிய ‘சைவசமய சிகமாணிகள் இருவர்’ என்னும் நூலும், கும்பகோணத்தில் இருந்தபோது எழுதிய கருணாகரத் தொண்டைமான் பற்றி இவர் எழுதிய நூலும் வெளிவரவில்லை. இவர் எழுதிய முதல்குலோத்துங்க சோழன் என்ற நூல் 1930-ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நூலை கல்வெட்டாய்வாளர் வி.ரெங்காச்சாரியார், உ.வே.சா., திரு.வி.க. முதலிய அறிஞர் பெருமக்களாலும், செந்தமிழ், நவசக்தி முதலான இதழ்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
இந்நூல் பாடநூலாக்கப்பட்டபோது தமது வறுமைநிலை நீங்கியதை, ‘‘முதற்குலோத்துங்கன் கலிங்கத்தை வெற்றி கொண்டபோது ஆசிரியர் சயங்கொண்டார் அவன்மீது கலிங்கத்துப்பரணி பாடி மகிழ்வித்தார். மன்னர் பெருமானும் அந்நூல் அரங்கேற்றப்பெற்றபோது ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பொன் தேங்காய் ஒன்றை உருட்டித் தந்து புலவர் பெருமானை மகிழ்வித்தான் என்பர். யான் அப்பேரரசனது வரலாற்றை எழுதினேன். அதுமுதல் எனது வாழ்க்கையில் பொருள் முட்டுப்பாடு நீங்கியது கடன் வாங்கவேண்டிய நிலையும் ஒழிந்தது’’ என்றுகுறிப்பிடுகின்றார். 1940-ஆம்; ஆண்டில் பாண்டியர் வரலாறு என்ற நூலை எழுதி வெளியிட்டார். இவ்விரு நூல்களும் தமிழ்ப்பொழில் இதழில் வெளிவந்து பின்னர் நூல் வடிவம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றறிஞரான பண்டாரத்தார் நீதிக்கட்சியின் கருத்துக்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அக்கட்சி நடத்திய ஒவ்வொரு மாநாட்டிலும் தவறாமல் கலந்து கொண்டார். தந்தைப் பெரியார் அவர;கள் கும்பகோணத்திற்கு வந்தபோதெல்லாம் அவர்மீது அறிஞர் பண்டாரத்தார் வாழ்த்துப்பாக்கள் பாடி அவரிடம் வழங்கியிருக்கிறார். பெரியாரும் இவர்மீது மிகுந்த அன்புகொண்டிருந்தார். அறிஞர் பண்டாரத்தாரின் உடையார்குடிக் கல்வெட்டு ஆய்வு குறிந்து அறிந்த தந்தை பெரியார் சிதம்பரம் வந்தபோது இவரை அழைத்துப் பாராட்டியதோடு இவரை மேலும் ஆய்வுகள் செய்யுமாறு ஊக்கப்படுத்தினார்.
1942 -ஆம் ஆண்டில் சர். கே. வி. ரெட்டிநாயுடு என்பவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தபொழுது அப்பல்கலைக் கழகத்தின் தமிழாராய்ச்சித் துறையானது விரிவுபடுத்தப்பட்டது. அப்போது உமாமகேசுவரம்பிள்ளை, புதுக்கோட்டை வழக்கறிஞர் நாகராசஐயர் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக அறிஞர் பண்டாரத்தார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். மிக உயர்ந்த பதவியில் இருந்திருக்க வேண்டிய அறிஞர் பண்டாரத்தார் தமக்குக் கிடைத்த பதவியைச் சிறந்ததாகக் கருதி மகிழ்வுடன் வாழ்ந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிஞர் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, பேராசிரியர் கோ.சுப்பிரமணியபிள்ளை, அறிஞர் க.வெள்ளைவரணனார் முதலிய நல்ல நண்பர்கள் அவருக்குக் கிடைத்தனர்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்ததும் பல்கலைக்கழக நிர்வாகம் அவருக்குப் பிற்காலச் சோழர் வரலாற்றை எழுதுவதற்கு அனுமதி வழங்கியது. அவர் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள கல்வெட்டாய்வு நூல்களைப் பயன்படுத்தி பிற்காலச் சோழர் சரித்திரத்தின் முதல் பாகம் 1949-ஆம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 1951-ஆம் ஆண்டிலும் பல்கலைக்கழக வெளியீடுகளாக வெளிவந்தன.
இதனைத் தொடர்ந்து சோழர் சரித்திரத்தின் மூன்றாம் பாகத்தையும், தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600), தமிழ் இலக்கிய வரலாறு (13,14,15-ஆம் நூற்றாண்டுகள்) ஆகிய நூல்கள் 1955 -ஆம் ஆண்டு பல்கலைக்கழக வெளியீடுகளாக வெளிவந்தன. 1953-ஆம் ஆண்டு வயதின் காரணமாக பண்டாரத்தார் பல்கலைக் கழகப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பண்டாரத்தின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணிய பல்கலைக்கழகம் மீண்டும் அவரை 1955-ஆம் ஆண்டு மீண்டும் பணியில் அமர்த்தியது. அவர் மீண்டும் பல்கலைக் கழகத்தில் பணியில் சேருவதற்குப் பயணவியல் அறிஞர் சோமலெ போன்றவர்கள் பேருதவியாக இருந்தனர். இதனைப் பற்றி, ‘‘பண்ணடாரத்தார் அவர்களைப் பற்றித் துணைவேந்தர் திரு. நாராயணசாமிபிள்ளை அவர்களிடம் தெரிவித்தேன். உடனே அப்பெருமகனார் பண்டாரத்தார் அவர்கள் வீட்டிற்கு என்னை அனுப்பித் தமது காரிலேயே ஓய்வு பெற்றிருந்த புலவர் பெருமானை அழைத்துவரச் செய்து, அவரை மீண்டும் வேலையில் நியமித்தார்கள்’’ என அமுதசுரபி இதழில் சதாசிவ பண்டாரத்தார் குறித்து எழுதிய கட்டுரையில் சோமலெ குறிப்பிடுகின்றார்.
அறிஞர் பண்டாரத்தார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பணியில் சேர்ந்தபொழுது சோழர் சரித்திரத்தின் மூன்றாம் பாகம் அவரால் எழுதப்பெற்று 1961-ஆம் ஆண்டில் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்தது. அறிஞரின் பிற்காலச் சோழர் வரலாறு தமிழில் முறையாக எழுதப்பட்ட முதல்நூல் என்ற சிறப்பிற்குரியதாகும். இந்நூல் வெளிவந்த பின்னர்தான் பிற்காலச் சோழர்களின் பெருமைகளைத் தமிழுலகம் அறியத் தொடங்கியது எனலாம். பண்டாரத்தார் அவர்களின் சோழர் சரித்திரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் பயின்ற மாணவர்களுக்குப் பாடநூலாகவும் வைக்கப்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பகத் தன்மையோடு அறிஞர் பண்டாரத்தார் தமது நூல்களை எழுதிய காரணத்தாலேயே அவரது பிற்காலச் சோழர் சரித்திரம் என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு கல்கி, சாண்டில்யன், போன்றோர் தங்களது வரலாற்று நாவல்களைப் படைத்தனர். இத்தகைய அரிய நூலினைப் படைத்த காரணத்திற்காகப் பண்டாரத்தாருக்குத் தாமும் தமிழ் கூறும் நல்லுகமும் பெரிதும் கடமைப்பட்டிருப்பதாகக் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி நன்றியுடன் தமது சோழர் கால சரித்திர ஆதாரங்கள் என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.
அறிஞர் பண்டாரத்தார் திருப்புறம்பயத் தல வரலாறு, செம்பியன் மாதேவித் தலவரலாறு, காவிரிப்பூம்பட்டினம், திருக்கோவலூர் புராணம், தொல்காப்பியப் பாயிரவுரை ஆகிய பல நூல்களையும் எழுதித் தமிழன்னைக்கு அணிசெய்துள்ளார். மறைமலையடிகள், நாவலர; ச.சோமசுந்தரபாரதியார், திரு.வி.க, தமிழ்த்தாத்தா உ.வே.சா, கவிமணி, ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீ., வையாபுரிப்பிள்ளை உள்ளிட்ட பல தமிழறிஞர்கள் இவரது நெருங்கிய நண்பர்களாக விளங்கினர்.
சிறந்த சிவபக்தி உடையவராகவும் பண்டாரத்தார் விளங்கினார். இவர் 1928 முதல் தாம் இறக்கும் வரை தமது பிறந்த ஊரான திருப்புறம்பயத்திலுள்ள கோயிலில் சைவ சமய நால்வருக்கும் ஆண்டுதோறும் குருபூசை நடத்தி வந்துள்ளார். அது நடப்பதற்கு இவர் ஏற்பாடுகள் செய்திருந்தபோதும் இப்பொழுது அது நின்றுவிட்டது என்பது நோக்கத்தக்கது. 1953-ஆம் ஆண்டில் திருப்புறம்பயக் கோயில் குடமுழுக்கு நடந்தபொழுது அறிஞர் பண்டாரத்தார் தமது சொந்தச் செலவில் முதற் பிரகாரத்தில் நடராசர் சந்நிதிக்கு நேர் எதிரே சைவ சமயக் குரவர்கள் நல்வருக்கு மண்டபம் கட்டித் தந்து சிறந்த சைவசமயப் பற்றாளராகத் திகழ்ந்தார்.
அறிஞர் பண்டாரத்தார் தமிழ் வளர;ச்சிக்கழகம் வெளியிட்ட தமிழ்க்கலைக்களஞ்சியப் பதிப்பாசிரியர் குழுவிலும், தமிழ்ப்பொழில் இதழாசிரியர் குழுவிலும் உறுப்பினராக இருந்து சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.
இவருடைய ஆய்வுத் திறமையைக் கண்ட மதுரைத் திருவள்ளுவர் கழகம் 1956-ஆம் ஆண்டு மாரச் 29-ஆம் நாள், ஆராய்ச்சிப் பேரறிஞர் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை எழுத்தாளர் சங்கம் தனது நான்காம் ஆண்டுவிழாவில் அப்போதைய கல்வி அமைச்சர் திரு.சி.சுப்பிரமணியம் அவர்களைக் கொண்டு பண்டாரத்தாருக்குக் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது. இப்பாராட்டுக்களுக்குப் பிறகுதான் பண்டாரத்தார் அவர்களின் பெருமை வெளியுலகிற்குத் தெரிய ஆராம்பித்தது என்பதனை,‘‘இந்த விழாக்களுக்குப் பின்னர்தான் தமிழ்நாட்டிலுள்ள சாராரண மக்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் முற்றிலும் ஈடுபட்டுள்ள செல்வர்களும் பண்டாரத்தார் என்ற ஒருவர் இருப்பதை அறியலாயினர். ஏனெனில் பண்டாரத்தார் ஒதுங்கி வாழ்ந்தவர். கூட்டங்களில் கலந்து கொள்ளாதவர் அரசியல் சார்பில்லாதவர் சிபாரிசுக்கு ஆள் பிடிக்காதவர் பல்கலைக்கழகத்து மேலாரை(மேல்பதவிகளில் உள்ளவர்களை) இடையிடையே போய்ப் பார்த்து வைக்கும் பழக்கமின்றிப் பல்லாண்டுகள் கழித்த போதிலும் பண்டாரத்தார் தமக்குரிய பணிகளை மிகத் திறமையாகவும் முழு மனத்தோடும் செய்து அரிய நூல்களைத் தந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குப் பெரும்புகழ் ஈட்டித் தந்தார்’’ என்று அறிஞர் சோமலெ அமுத சுரபியில் எழுதிய சதாசிவ பண்டாரத்தார் என்ற கட்டுரையில் நயமுறக் குறிப்பிடுகின்றார்.
1959-ஆம் ஆண்டு ஜுலை மாதம் அறிஞர; பண்டாரத்தார் நோய்வாய்ப்பட்டார். தமது உடல் நோயுற்ற காலத்திலலும் கல்வெட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடும் நினைவாற்றலும் கொண்டவராக அறிஞர் காணப்பட்டார். தமது இறுதிக் காலத்திலும் தொடர்ந்து ஆய்வுப் பணி செய்துவந்தார். ‘‘தமிழ் நாட்டிற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் நான் செய்யவேண்டுவன நிறைய இருப்பதாகவே நினைக்கிறேன். அந்தத் தொண்டு என்னை மகிழ்வித்தும், அதுவே பெருந்துணையாகவும் நிற்பதால் அதினின்றும் விலக விரும்பவில்லை’’ என்று அவர் தமது இறுதிக் காலத்தில் குறிப்பிட்டுள்ளது போற்றுதற்குரியது.
தமிழோடு தொடர்புடைய பல மாநாடுகளிலும் அறிஞர் பண்டாரத்தார் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தமிழகப் புலவர் குழுவானது முதன் முதலாகத் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் கூடியபொழுது அதன் முதல் கூட்டத்திற்கு இவர் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். தஞ்சாவூரில் ஜே.எம்.சோமசுந்தரம்பிள்ளை இராசராசன் விழாவை முதன் முதலாக ஆரம்பித்தபொழுது அறிஞர; பண்டாரத்தார் அக்கூட்டத்தில் முதற் சொற்பொழிவினை நிகழ்த்திச் சிறப்பித்தார்.
இவ்வாறு ஆய்வுலகில் பலராலும் ஏற்கத்தக்க வகையில் தமக்கென்று ஓர் ஆராய்ச்சி நெறிமுறையை வகுத்துக்கொண்டு நடுநிலையுடன் செயல்பட்ட அறிஞர் பண்டாரத்தார் 1960-ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் நாள் உடல்நலக் குறைவின் காரணமாக இவ்வுலக வாழ்வை நீத்தார். அவரது இழப்பு தமிழத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது இழப்பால் தவித்த அறிஞர் பெருமக்களான கி.ஆ.பெ.விசுவநாதம், கரு.முத்துத்தியாகராயர், தந்தைப் பெரியார், முதறிஞர் வ.சுப.மாணிக்கனார் உள்ளிட்டோர் இரங்கல் செய்திவிடுத்தனர். டாக்கடர் மா.இராசமாணிக்கனார் விடுத்த, ‘‘கல்வெட்டு ஆராய்ச்சி அதன் முதல்வரை இழந்துவிட்டது. ஆராய்ச்சி அறிஞர் தங்கள் அண்ணாவை இழந்து விட்டனர். தமிழ் ஆராய்ச்சி என்னும் தாய் தம் செல்வ மகனை இழந்துவிடடாள். உலகம் எதைக் கேட்டாலும் சொல்லவல்ல பேரறிஞரை இழந்துவிட்டது’’ என்ற இரங்கல் செய்தி அனைவரது நெஞ்சையும் உருக்கும் வகையில் அமைந்தது.
சிற்றூரில் பிறந்து, தமது ஆசிரியர்களின் தூண்டுதலால் ஆர்வம் பெற்றுத் தமது சொந்த முயற்சியில் கல்வெட்டுக்களை ஆராய்ந்து, மறைந்து கிடந்த வரலாற்று உண்மைகள் பலவற்றை வெளிப்படுத்தி, பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்த அறிஞர் சதாசிவ பண்டாரத்தாரின் தமிழ்ப்பணி தமிழ்கூறும் நல்லுலகில் என்றும் நிலைத்திருக்கும்.

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.