‘க்ரியா’ வின் அகராதி முயற்சியில் ஈழத்தவரின் பங்களிப்புப் பற்றிய இரண்டு குறிப்புகள்

This entry is part [part not set] of 32 in the series 20081225_Issue

பா. இரகுவரன்


சு. குணேஸ்வரன்
25.12.2008

மதிப்புக்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்,

நான் அனுப்பி வைத்த கவிதையை (மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும் ..துவாரகன்) திண்ணையில் பிரசுரித்தமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்துடன் மதிப்புக்குரிய து. குலசிங்கம் அவர்கள் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதிக்கு பங்களி;ப்புச் செய்தது தொடர்பாக ஈழத்துச் சஞ்சிகைகளில் இரண்டு குறிப்புக்கள் வெளிவந்தன. அவை இணைய வாசகர்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன். முடிந்தால் திண்ணையில் பிரசுரிப்பதற்கு ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

இங்ஙனம்
சு. குணேஸ்வரன்
அளமறயசயn@லயாழழ.உழஅ

‘க்ரியா’ வின் அகராதி முயற்சியில் ஈழத்தவரின் பங்களிப்புப் பற்றிய இரண்டு குறிப்புகள்

1.
தமிழ் அகராதிகள் வரிசையில் ‘க்ரியா’ வி;ன் தற்காலத் தமிழ் அகராதியில் திரு து. குலசிங்கம் அவர்களின் பங்களிப்பு

-பா. இரகுவரன்-

சென்னை ‘க்ரியா’ நிறுவனத்தின் வெளியீடான ‘க்ரியா’ வின் தற்காலத் தமிழ் அகராதி விரிவாக்கிய, திருத்திய பதிப்பாக மே – 2008 ல் வெளிவந்துள்ளது. இதன் முதற் பதிப்பு 1992 ல் வெளியாகி பலதரப்பட்ட மக்களின் கணிப்பைப் பெற்றிருந்தது. 2 வது பதிப்பில் இலங்கையில் புழக்கத்தில் இருக்கும் 1700 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றைச் சேகரித்து பொருள் விளக்கம் மற்றும் விளக்க வாக்கியங்கள் என்பனவற்றுடன் தொகுக்க உதவியவர் பருத்தித்துறையைச் சேர்ந்த இலக்கியச் சோலை திரு து. குலசிங்கம் அவர்கள் ஆவார்.

இந்த அகராதியின் முதலாவது பதிப்பில் இலங்கையில் பாவிக்கப்படும் 436 சொற்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு பேரா. நுஃமான் உதவியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்த அகராதியிலும் இலங்கையில் பாவிக்கப்படும் சொற்கள் சேர்க்கப்பட்டதில்லை. இலங்கையில் பாவிக்கப்படும் சொற்களை இனங்காண அடைப்புக் குறிக்குள் (இல) எனக் குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் உரித்தானதொன்றல்ல. இலங்கை மற்றும் பிற நாடுகளி;ல் வாழும் தமிழருக்கும் உரித்தானது என்ற வகையில் சொற்கள் சேர்க்கப்பட்டிருப்பது மிகவும் பயன்தரத்தக்க முயற்சியாகும்.

அகராதி என்பது ஒரு மொழியில் உள்ள சொற்களுக்கு பொருள் அறியும் நோக்குடன் அகர வரிசையில் உருவாக்கப்பட்ட நூலாகும். அகராதியின் ஊடாக பொருள் விளக்கம் சொல்லுக்குரிய அதே மொழியிலோ அல்லது வேறு மொழியிலோ அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

தமிழில் சொற்களுக்குப் பொருள் அறியும் நூலாக முற்காலத்தில் நிகண்டு நூல்கள் காணப்பட்டன. திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு, என்பன குறிப்பிடப்படுகின்றன. நிகண்டு நூல்கள் செய்யுள் வடிவத்தில் அமைந்த சூத்திரங்கள் மூலமாகவே சொற்களுக்கான பொருளை வெளிப்படுத்தின.

நவீன முறையிலான உலகின் முதல் அகராதி 1612ல் இத்தாலியில் உருவாக்கப்பட்டது. தமிழில் நவீன முறையிலான அகராதியை இத்தாலி நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவப் பாதிரியாரான வீரமாமுனிவரால் (ஊழளெவயவiநெ துழளநிh டீநளஉhi) 1732ல் உருவாக்கப்பட்டது. இது சதுர் அகராதி என அழைக்கப்படுகிறது. தமிழ்ச் சொற்களுக்கு, தமிழ் மூலமான பொருளை அறிந்து கொள்ளக்கூடிய முறையிலான தமிழ் – தமிழ் அகராதியாக இது உருவாக்கம் பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக பல தமிழ் – தமிழ் அகராதிகளும், தமிழ் – தமிழ் – ஆங்கில அகராதிகளும் பின்னாளில் வெளிவந்துள்ளன.

யாழ்ப்பாண அகராதி (வணபிதா நைற் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு பின் சந்திரசேகரப் பண்டிதரால் 1842 ல் பூர்த்தி செய்யப்பட்டு வெளியாகியது.)

வின்ஸ்லோவின் (றுiளெடழற) தமிழ் – ஆங்கில அகராதி (1862 ல் வின்ஸ்லோ என்பவரால் விரிவாகத் தொகுக்கப்பட்டது.)

தமிழ்மொழி அகராதி (1899 ல் சதாவதானி கதிரவேற்பிள்ளையவர்களால் ஆக்கப்பட்டது. 1911 ல் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இது தமிழ்ப் பேரகராதி என்றும் அழைக்கப்படுகிறது)

அபிதான சிந்தாமணி (1910 ல் வெளியிடப்பட்டது.)

மதுரைத் தமிழ்ப்; பேரகராதி (1937 ல் கோபால கிருஷ்ண கோணார் என்பவரால் தொகுக்கப்பட்டது.)

மெட்ராஸ் தமிழ் லெக்சிக்கன் பேரகராதி (1939 ல் மெட்ராஸ் (சென்னை) பல்கலைக் கழகத்தால் தொகுத்து வெளியிடப்பட்டது. 06 தொகுதிகளும், 01 உதவி நூலும் கொண்ட மிகப் பெரிய அகராதியாகும்.)

கழகத் தமிழ் அகராதி (1964 ல் வெளியிடப்பட்டது.)

நர்மதாவின் தமிழ் அகராதி (தமிழ் – தமிழ் – ஆங்கில அகராதியாகும். 2002 ல் வெளிவந்தது.)

இவற்றைவிட அறத்தமிழ் அகராதி போன்ற பல அகராதிகள் பெரியதும், சிறியதுமாக வெளிவந்துள்ளன. ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ப்; பொருளறிய லிப்கோ அகராதி 1950 களில் வெளியானது.

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி திருத்திய பதிப்புக்காய் பொருத்தமான எழுத்தமைப்பு (குழவெ) புதிதாக வடிவமைக்கப்பட்டு, கட்புல ரீதியான உடன் தெளிவு ஏற்படத்தக்கதாக உள்ளமை சிறப்பம்சமாகும்.

‘க்ரியா’ ராமகிருஷ்ணன் குழுவினர் பல ஆண்டுகளாக முயன்று கடின உழைப்பால் இவ்வகராதியை வெளிக் கொணர்ந்துள்ளனர். 75 இலட்சம் தமிழ்ச்சொற்களைக் கொண்ட சொல் வங்கியின் உதவியுடன் இந்தப் புதிய பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 21,000 கலைச்சொற்கள், 38,000 எடுத்துக்காட்டு வாக்கியங்கள், 342 சொற்களுக்கான சித்திரங்கள் என்பனவற்றை உள்ளடக்கியுள்ளது.

இதில் து. குலசிங்கம் அவர்களால் தொகுத்து அனுப்பப்பட்ட 2000 ற்கும் மேற்பட்ட இலங்கைச் சொற்களில் 1700 சொற்கள் இடம்பெற்றுள்ளன. சமகால வாழ்வில் இருந்தும்@ சிறுகதைகள், நாவல்களில் இருந்தும் இச்சொற்கள் தொகுக்கப்பட்டு குறிப்பிட்ட புனைகதை இலக்கிய ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு இலங்கையின் வௌ;வேறு பிரதேசத்திற்குரிய சொற்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. திரு து. குலசிங்கம் அவர்களின் 05 வருட அகராதி முயற்சி மிகப் பயனுடையதாக அமைந்துள்ளது.

திரு. து. குலசிங்கம் அவர்கள் எடுத்துக்காட்டு வாக்கியங்களை அமைக்கும்போது அதனூடாக பயனுள்ள அறிவைப் பெறும் வண்ணம் உருவாக்கியுள்ளார்.

உñம் :-

அடிகொடி – ஒருவரின் குடும்பம், பரம்பரை அந்தஸ்து பற்றிய தகவல் விபரம் –
வெளிநாட்டிற்கு போய் தங்கிவிட்டவர்களும் அடிகொடி பார்த்துத்தான்
சம்பந்தம் செய்கிறார்கள்.

அப்பத்தட்டி – காலை நேரத்தில் அப்பம், தோசை என்பன சுட்டு விற்கும் வீடு.
எந்த நாளும் அப்பத்தட்டியில் வாங்கினால் குடும்பம் உருப்பட்டாப்
போலைதான்.

கருப்பனீர்க்கஞ்சி – பதநீரில் அரிசி, பாசிப்பயறு, தேங்காய்ப்பால் ஆகியன சேர்த்து
தயாரிக்கும் கஞ்சி. (பதநீர் எப்படித் தயாரிப்பது என்ற விளக்கம்
இதனூடு தெரியவருகிறது.)

1990 களுக்குப் பிறகு சமுகத்தில் ஏற்பட்ட மாற்றங்களைத் தமிழ் உள்வாங்கிக் கொள்ளும் முயற்சியில் மொழியின் இறுக்கம் குறைந்து: அதன் எல்லைகளும் விரிவடைந்தது. சமுகத்தில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள் தமிழ்மொழியில் புதிய கருத்தாக்கங்களையும், அவற்றிற்கான சொற்களையும் உருவாக்கியிருக்கின்றன. பழைய சொற்களுக்குப் புதிய கருத்துக்களையும் சேர்த்திருக்கின்றன.

இவற்றையெல்லாம் கவனத்திற்கொண்டு இந்த அகராதி சிறப்பான முறையில் தொகுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

திரு து. குலசிங்கம் அவர்களைப் பற்றி அகராதி முன்னுரையில் விதந்துரைக்கப்பட்டுள்ளது. இத்துடன் நின்று விடாது தனது பரந்த வாசிப்பு அனுபவத்தினூடாக மேலும் பல இலக்கியச் சேவைகளைத் தொடர்ந்தும் செய்ய வேண்டும் என்ற இவர் தம் நண்பர்களின் விருப்பினை நிறைவேற்றுவார் என நம்புகிறோம்.

நன்றி :- மல்லிகை, நவம்பர் 2008

2.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில்
இலங்கைத் தமிழை பிரகாசமாக ஒளிரச் செய்தவர்

பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த துரைராசா குலசிங்கம் எண்பதுகளிலிருந்து உதயன் புத்தக நிலையத்தை நடத்தி தமிழக மற்றும் ஈழத்துச் சிற்றிதழ்கள் மற்றும் இலக்கிய நூல்களைப் பரவலாக்கியவர். ‘அறிவோர் கூடல்’ என்னும் நிகழ்வினைத் தொடங்கி கலை, இலக்கிய, சமூக, அறிவியல், பொருளாதார, அரசியல் கருத்தரங்குகளை நிகழ்த்தி இலக்கிய ஆர்வலர் மத்தியில் பயன்தரு விவாதங்களுக்கு வழிவகுத்தவர். இவர் அண்மையில் வெளிவந்துள்ள ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ யின் விரிவாக்கி;த் திருத்திய புதிய பதிப்புக்கு: ஈழத்தின் வட்டார வழக்கிலுள்ள 1700 சொற்களைச் சேகரித்துக் கொடுத்து பங்களிப்புச் செய்துள்ளார். இது பற்றி க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் க்ரியாவின் திருத்திய பதிப்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“….. இலங்கைத் தமிழ், தமிழின் சிறப்பான வெளிப்பாடு, இலங்கைத் தமிழின் தனித்துவம் அகராதியில் முழு வீச்சுடன் வெளிப்பட வேண்டும் என்று விரும்பினோம். ஆகவே தொடக்கத்திலிருந்தே இலங்கைத் தமிழ் எழுத்துக்களிலிருந்து விரிவாகத் தரவுகளையும் எடுத்துக்காட்டு வாக்கியங்களையும் தொகுத்து வைத்திருந்தோம். இருந்தாலும், அவற்றைப் பதிவுகளாக மாற்றும்போது எழுந்த கேள்விகள் ஏராளம். எங்களுடன் இணைந்து உதவி செய்வதற்குத் தகுந்த நபரைத் தேடிக் களைத்திருந்த சமயத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த இ. து. குலசிங்கம் பெரும் அதிர்ஷ்டம் போல் எங்களுக்குக் கிடைத்தார். குலசிங்கத்துக்கும் க்ரியாவுக்கும் சுமார் 30 ஆண்டுகள் உறவு உண்டு. சொந்த அலுவலை முன்னிட்டுச் சென்னைக்கு வந்திருந்த அவர், எங்கள் தேவையைப் புரிந்து கொண்டு. மிகுந்த உற்சாகத்துடன் சுமார் இரண்டு மாதங்கள் கிட்டத்தட்ட தினமும் காலையிலிருந்து மாலைவரை எங்களுடன் இருந்து இலங்கைத் தமிழுக்குள் எங்களை அழைத்துச் சென்றார். அவருடைய ஈடுபாடும் அர்ப்பணிப்பும் இந்த இரண்டாம் பதிப்புக்குக் கிடைத்த பெரும்பேறு. புத்தகங்களுடன் ஆழ்ந்த தொடர்பு கொண்டிருக்கும் குலசிங்கம் நாங்கள் தொகுத்து வைத்திருந்ததற்கு அப்பால், மொழியில் அவருக்கு இருக்கும் இயல்பான பிடிப்பின் காரணமாக எங்களுக்குத் தரவுகளும் சொற்களும் நிறையக் கிடைப்பதற்கு உதவி செய்தார். இந்தப் பதிப்பில் இலங்கைத் தமிழ் பிரகாசமாக ஒளிர்கிறது என்றால் அதற்குக் குலசிங்கம்தான் காரணம். அவருடைய தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்டு வேலை செய்யும்போது எழுந்து மொழியியல் சார்ந்த சந்தேகங்களுக்கு எங்களுக்கு விரிவாக விளக்கங்கள் அளித்து உதவியிருப்பவர் ஞா. ஜெயசீலன், சென்னையில் ஆராய்ச்சி மாணவராக வந்திருக்கும் ஜெயசீலன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பிக்கிறார். சி.டி. இந்திரா அவரை இந்த அகராதித் திட்டத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரும் நாங்கள் கேட்டுகொண்ட போதெல்லாம் வந்து எங்களுடன் இருந்து தொடர்ந்து எங்களுடைய கேள்விகளுக்குச் சளைக்காமல் பதில் தந்து உதவியிருக்கிறார். தேவைப்படும் சமயங்களில் தன் நண்பர்களுக்கு எழுதியும், அவர்களைக் கேட்டும் தகவல்களை உறுதிசெய்திருக்கிறார்…”

இதையிட்டு ஈழத்தவர் என்ற வகையில் இப்பணியில் ஈடுபட்ட திரு. குலசிங்கம் அவர்களுக்கும், ஜெயசீலன் அவர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

க்ரியா நிறுவனம் 1999 இல் ஆரம்பித்;து 2006 வரையிலான எட்டாண்டுகால கடும் உழைப்பில் அகராதியின் இத் திருத்திய பதிப்பை இவ்வாண்டில் வெளியிட்டுள்ளது.

நன்றி :- கலைமுகம், ஜுலை செப்ரெம்பர் 2008

—————

திண்ணைக்காக அனுப்பியவர் :- சு. குணேஸ்வரன் அளமறயசயn@லயாழழ.உழஅ

Series Navigation

பா. இரகுவரன்

பா. இரகுவரன்